Sunday, 8 February 2026

விருட்சங்களாகும் விதைகள் #பாமா

 விருட்சங்களாகும் விதைகள் 

பாமா

என் சி பி எச் வெளியீடு

198 பக்கங்கள் 

இருநூற்று ஐம்பது ரூபாய்


பணிக்கு வந்த பின் கூறப்படும் மலர்விழியின் (பாமா) ஒரு சுயசரிதை நூல் எனக் கொள்ளலாம். நர்சரி ஸ்கூல், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பல்வேறு இடங்களில் பணியாற்றிய பின் தொடக்கப்பள்ளியில் சேர்ந்து 20 வருடம் பணி செய்கிறார் பாமா தோழர். தன்னுடைய பணியில் செய்த சாதனைகள், பணியின் போது ஏற்பட்ட மனத்தாங்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த நூலில் கூறியுள்ளார். நேதாஜி துவக்கப்பள்ளியில் சேர்ந்த பின் கிடைத்த அனுபவங்கள் தான் இந்த புத்தகம். அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தால் அது ஒரு தனி சாம்ராஜ்யம். அங்கு தான் அவர்கள் பணி காலம் முழுக்க பணி செய்ய வேண்டும். தாளாளருக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். தன்னுடைய பிரச்சனைகளை எங்கு கொண்டு சென்றாலும் மீண்டும் பள்ளிக்குத் தான் திரும்பும். ஒவ்வொரு ஆசிரியரும் தாளாளருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆசிரியரும் சில ஆயிரங்களை தாளாளருக்கு கொடுத்து விட வேண்டும். அதில் மாணவர்களை அழைத்து வருதல், வேன் ஃபீஸ், ஆட்டோ ஃபீஸ் முதலியவற்றிற்கு பார்த்துக் கொள்ளுதல் என்பது எழுதப்படாத சட்டம். இது போன்ற பணிகளை செய்தாலும் நிம்மதியான பணி என்பது தாய்மை மனப்பான்மையுடன் கூடிய தாளாளர், சக ஆசிரியருடன் புரிந்துணர்வு, மாணவர்களின் நல்லொழுக்கம், மாணவர்களின் தேவை, மாணவர்களின் கல்வி முதலானவை சிறப்பாக அமைய வேண்டும். இது எதுவுமே அமையவில்லை என்றால் சிரமம்தான். போராட்டம் போராட்டம் போராட்டம் இதற்குள்ளாகவே இந்த ஆசிரிய பணியை சிறப்பாக செய்ய வேண்டிய காலகட்டம். தன்னிடம் படித்த குழந்தைகள் மேற்படிப்பு படிக்க வெளியில் கல்லூரி செல்லும் பொழுது அதுவும் அந்த வளாகத்தில் நம்மை அடையாளம் கண்டு கொண்டால் அதற்கு இணையான ஒரு சந்தோஷம் வராது. அது போன்றதொரு சந்தோசங்களை பாமா தோழர் அடைந்திருக்கிறார். ஒருவேளை உணவாவது குழந்தைகளுக்கு கிடைக்கிறதே என்ற திருப்தியில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். இன்று இரண்டு வேளை உணவு அளிக்கப்படுகிறது. ஆனால் அன்றைய சூழலில் ஒருவேளை உணவுக்காக பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு செல்லும் அந்த சூழலை நினைத்துப் பார்த்து அவர்களை பசியாற்ற பள்ளியில் என்னென்ன முயற்சி எடுக்கிறார்கள் என்பதெல்லாம் அருமையாக விளக்குகிறார் தோழர். காலையில் பட்டினியோடு வரும் குழந்தைகளுக்கு என ஹேண்ட் பேக்கில் எப்பொழுதும் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் வருவதை பதிவு செய்திருக்கிறார். சக ஆசிரியர் வகுப்பறையில் சதா சர்வ காலமும் ஒன்றும் சொல்லித் தராமல் இருக்கும் அவல நிலையை சுட்டிக் காட்டுகிறார் தோழர். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் ஒரு வருடம் இருந்து மறு வருடம் ஒரு வகுப்பிற்கு செல்லும் குழந்தை வாழ்க்கை என்னாகும் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பயந்து அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ தாளாளர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். என்ன செய்வது...


ஒருமுறை கல்வி ஆய்வாளர் ஒருவர் பள்ளியில் ஆய்வு நடத்த வந்திருக்கிறார். வந்தவர் திருவள்ளுவர் குறித்து கேள்வி எழுப்புகிறார். ஒருமுறை திருவள்ளுவரின் மனைவி கிணற்றில் நீர் இறைத்து கொண்டு இருக்கும் பொழுது திருவள்ளுவர் அழைத்தவுடன் நீர் இறைத்த வாளியை அப்படியே விட்டுவிட்டு திருவள்ளுவரிடம் வருகிறார். அந்த வாளி அப்படியே நிற்கிறது. அது ஏன் நிற்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். பதில் தெரிந்தவர்கள் யாராவது கையை உயர்த்துங்கள் என்றவுடன் ஒரு சிறுவன் மட்டும் கையை உயர்த்துகிறான். அதெல்லாம் வாளி நிற்காது சார். கிணற்றுக்குள் விழுந்துவிடும் சார் என்று கூறுகிறான். மற்ற மாணவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். உடனே கோபித்துக் கொண்டு அவர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று விடுகிறார். மாலை ஆய்வாளர் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதைப் போன்ற கதைகளை கூறாமல் விட்டது உங்கள் தவறு என்று கூறுகிறார் அதற்கு அந்த ஆசிரியர் அந்த வாளி அப்படியே நிற்கிறது என்றால் அதற்கு காரணம் கற்பின் மகிமை என்று சொன்னால் அவனுக்கு புரியாது என்பதனால் நான் கூறாமல் விட்டுவிட்டேன் சார் என்று கூறுகிறார். அந்த ஆசிரியரிடம் ரொம்ப அதிக பிரசிங்கித்தனமா நடக்க வேண்டாம் என்று கூறுகிறார் ஆய்வாளர். ஆசிரியர் அமைதியாக நின்று விட்டு அமர்நதுவிடுகிறார். 


ஆசிரியர்கள் தமக்குள் உள்ள காழ்ப்புணர்ச்சி என்பது வெறும் பொருளாதார ரீதியிலோ திறமையிலோ மட்டும் வருவது அல்ல அது ஜாதியை வைத்தும் வரலாம். ஒரு வகுப்பில் ஆங்கிலம் கற்பிப்பது தொடர்பாக கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் வராமல் போக பாமா தோழரிடம் அந்தப் பணியை ஒப்படைக்கிறார். இதன் காரணமாக உண்டாகும் பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறும் செயலாக ஜாதியை வைத்து உண்டாகும் பிரச்சனைகள் நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள்ளே பல ஆசிரியர்களிடம் கனன்று கொண்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். "அந்த ஏகலைவன் ஒரு வேட்டுவப்பயல் தான். அவ்வளவு குரு பக்தி. ஆனா இப்ப இங்க எஸ் சி பசங்க இருக்காங்களே இவங்களுக்கு படிப்பும் ஏறாது மண்ணும் ஏறாது. ஆனால் இதுங்கள வச்சுக்கிட்டு நாம தான் மாரடிக்கணும். அவனுங்கள லேசா தொட்டுட்டா போதும். அம்புட்டு பேரும் காக்கா கூட்டங்கணக்கா சண்டைக்கு வந்துருவானுங்க. அதனால அவனுடைய படிச்சா என்ன, பாழாப் போனா என்னன்னு உட்டுறது பெட்டர்" என்று ஒரு ஆசிரியர் பேசுகிறார். இவருக்கு வரலாறும் தெரியவில்லை. ஜாதி உரித்த புரிதலும் இல்லை. எல்லாம் மாணவர்கள் என்ற எண்ணம் இருந்தால் இந்த எண்ணம் வரவும் வராது. இதற்கு எதிர்த்து கேள்வி கேட்ட பாமா தோழர் மனம் நொந்து விடுகிறார். காரணம் எல்லா ஆசிரியர்களும் இவர் பக்கம் எதிர்த்து நிற்கிறார்கள். சில ஆசிரியர்கள் "இப்படித்தான் டீச்சர் எங்க ஸ்கூலிலும் இருக்கு" என்ற வார்த்தையை தனியாக வந்து கூறுகிறார்கள். ஆனால் பொதுவெளியில் அவர்கள் ஆதரிக்க கூட முன்வருவதில்லை. இது போன்ற பல பிரச்சனைகள். எல்லா பிரச்சனைகளையும் கடந்து ஆசிரியர் பணியில் தம்மால் இயன்ற அளவு சொல்லித்தந்தது மாணவர்களின் மத்தியில் தனக்கு திருப்தி அளித்ததாக கூறுகிறார் பாமா தோழர். 


வாழ்த்துக்கள் தோழர். ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.


யாழ் தண்விகா

நானொரு காடோடி #சக்தி மீனாட்சி

 நானொரு காடோடி

கவிதைகள்

Shakthi Meenakshi  

சக்தி மீனாட்சி 

சுதைமண் பதிப்பகம்

86 பக்கங்கள்

120 ரூபாய்


காய்ந்த சருகு, வறண்ட நிலம், கானல் நீர் பாய்ந்து ஓடும் சாலை இப்படி வெறுப்பு பூக்கும் எதன் மேலும் ஆசை வர வைக்க கவிதை தேவை. அப்படியானால் ஆசை பூக்க வைக்கும் எதன் மேலும் காதல் வரவைக்க கவிதை இன்னமுமே தேவை. சராசரியாக அவற்றை கூறிச் செல்ல முடியாது. சக்தி மீனாட்சியின் கவிதைகள் இரண்டையும் செய்கின்றது.


தொகுப்பின் முதல் கவிதை கண்ணீர் என்ன செய்யும் என்ற கேள்விக்கு பதிலாகவும் பிரியமான ஒருவரின் அன்பை கொடுத்து பதிலாக எதையுமே பெற்றுக் கொள்ளாத ஒரு ஜீவனின் காதலை பேசுகிறது. கவிதையின் இறுதியில் வரும் "உன் விரல்களில் ஒட்டி இருக்கும் என் வண்ணம் உன் மீதி வாழ்வுக்கானது" என்பதில் இந்த கவிதை சிறப்பாக நிறைவு பெறுகிறது.

"உன்னைப் பிடித்திருக்கத் தேவையில்லை 

நமக்கிடையே பிரியமொன்றும்

இருந்திட வேண்டியது இல்லை 

நீ எதிர்பாலினம் என்பதும் என் பிரச்சனை இல்லை 

நீ கதறியழுவதை நான் பார்த்திட நேர்ந்தால் 

இறுக்கியணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டு 

சற்றே இளைப்பாறத் தோளில் சாய்த்து 

நீ ஆசுவாசமான பிறகு 

யாதென்றும் நிகழாதது போல 

ஒரு பட்டாம்பூச்சி என 

விட்டுப் பறந்திடத் தெரியும் எனக்கு

உன் விரல்களில் ஒட்டி இருக்கும் 

என் வண்ணம் உன் மீதி வாழ்வுக்கானது".


கவிதையில் கதைகளைச் சொல்கிறார் சக்தி மீனாட்சி. சந்துரு அண்ணன் போல ஒரு அண்ணன் யாருக்கும் அமைந்தாலும் அவர் பேயாக இருந்தால் என்ன பிசாசாக இருந்தால் என்ன என்று ஏங்க வைத்து விடுகிறார் 

"என்னைப் போல தான்டா இருக்கும் என புன்னகைத்துப் பதில் சொன்னான். அன்றிலிருந்து நான் பேய்களை நேசிக்கிறேன்" என்பதாக முடியும் கவிதையில்.


பால்ய காலத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சில விஷயங்கள் எப்பொழுதும் மனதை விட்டு அகலாது. காலங்கள் பல கடந்தாலும் அந்த சம்பவங்கள் பசுமரத்தாணி போல பதிந்து விடும். அதைப் போல ஒன்று,

"கணக்கு டீச்சரின் 

மேசைக்குள் போட 

பாம்புக் குட்டி கேட்ட நாளில் தான் 

என் மீதான காதலை நீ 

கைவிட்டிருக்க வேண்டும்". பள்ளியில் டீச்சரிடம் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டுமிடத்தில் கைவிட்டுப் போன காதல் நினைவில் வந்து நிற்கிறது.


"திருத்திக் கட்ட 

திண்ணையை இடித்தேன் 

உறுப்பிழந்து ஊனமானது 

வீடு"

இதுபோல கவிதைகள் ஓராயிரம் வந்தாலும் இக்கவிதையில் வருவது போல உறுப்பிழந்து ஊனமானது வீடு என்பதில் கவிதை தன்மை வந்து விடுகிறது. அதே சமயம் திண்ணையை இடித்த வலி என்பதும் கண்முன் நிழலாகத் தொடர்கிறது.


ஊரில் உள்ள எல்லோருக்கும் பஞ்சாயத்து வைத்து பைசல் செய்து விடுவார். ஆனால் தன்னுடைய பிரச்சனைக்கு மட்டும் எந்த தீர்வும் இன்றி அல்லாட விடுவார். இதற்கு காரணம் அந்தப் பிரச்சனையே தன்னால்தான் என்பதை உணராத நபராக அவர் இருப்பது தான். கவிதையின் கடைசியில் வருகிற "உன் காலடியில் விம்முகிற முத்தம் குறித்து ஏதும் அறிவாயா" என்ற வரியில் தான் அந்த பிரச்சனைக்கு உரிய நபர் முக்கியத்துவம் பெறுகிறார்.

"முத்தம் குறித்து 

விதவிதமாய் விவரிக்கிறாய் 

பறக்கும் முத்தம் 

மிதக்கும் முத்தம் 

ஏங்கும் முத்தம் 

தேங்கும் முத்தம் 

எத்தனை எத்தனை 

காற்றில் கலந்து வரும் 

முத்தம் பற்றி சிலாகிக்கிறாய் 

உன் காலடியில் விம்முகிற முத்தம் குறித்து ஏதும் அறிவாயா?". 


கடல்புறத்தில் வலை நெய்து கொண்டிருந்தவளிடம் ஒரு கதை சொல் என்றேன் இப்படித்தான் அந்த கவிதை தொடங்குகிறது. அவளிடம் நதியின் கதையும் கடலின் கதையும் வேண்டும் என கேட்க அவள் கூறுகிறாள். எப்படி?

சிப்பி ஒன்றையும் கூழாங்கல் ஒன்றையும் கையில் கொடுத்து காதோடு வைத்து மௌனமாக காத்திரு. கதையொன்று கேட்பாய். அது உன் வாழ்வுக்கானது என சொல்லிவிட்டு கடக்கிறாள் அவள். அதுதான் கடல் கதை. அதுதான் நதிக்கதை. சிறப்பாக கவிதை எனவும் கதை எனவும் கூறும் வண்ணம் அழகாக அமைந்திருக்கிறது.


அன்பு வைக்கத் தொடங்கி விட்டால் அது எந்த ஜீவன் மேல் இருக்கிறது?  

இந்த வாழ்வு கசந்து விட்டது. இந்த வாழ்வு இனி வாழப்போவதில்லை. இந்த வாழ்வில் எது எது பாக்கியோ அத்தனையையும் ஒப்படைத்து விட்டு வாழ்வுமுடித்து செல்வதற்கு தயாராகிவிட்டது. ஏறக்குறைய வாழ்வின் அனைத்தையும் பூர்த்தி செய்து உயிலெழுதி வைத்தாயிற்று. கடைசியாகத்தான் பார்க்கிறாள், தன் காலடியில் இருக்கிற பூனைக்குட்டியை. இனி என்ன செய்ய பால்காரர் வரும்வரை காத்திருக்க வேண்டும். பூனை பசியாற வேண்டும் என்று கவிதையின் வழியாக தன் மனதை பதிவு செய்கிறார் சக்தி மீனாட்சி.

"கண்களில் நீர் கசிய கடிதமெழுதுகிறேன் 

வங்கிக் கடன் முதல் 

மளிகைக் கடன் வரை 

அத்தனையும் அடைத்தாயிற்று

யாரும் காரணம் இல்லை என

குறிப்பும் எழுதி ஆயிற்று உடைமைகளைப் பிரித்து 

உயில் வரைந்தாயிற்று 

வந்த லவ் யூக்களுக்கும் 

வராத மிஸ் யூக்களுக்கும் 

பதில் அனுப்பியாயிற்று 

இனி ஒரு நொடியும் வாழ முடியாது

எனக் கடிதத்தை முடித்து

முற்றுப்புள்ளி இடுகையில் தான் கவனித்தேன் 

காலடியில் உறங்கும் பூனைக்குட்டியை 

இனி பால்காரர் வரும் வரை காத்திருக்க வேண்டும்"


கோவிலில் ஆடு, சேவல் பலியிட பார்த்திருப்போம். பலியிடுபவனின் மனது எப்படி இருக்கும் என்பதனை இரு வரிகளில் ஒரு கவிதையின் நிறைவில் கூறுகிறார். 

"நீங்கள் அதன் தந்தை 

நீங்கள் தரப்போவது

கருப்பனிடம் மன்னிப்புக் கேட்டு

ஒரே ஒரு துளிக் கண்ணீர்".


குப்பை வண்டி ஓட்டி செல்லுபவனை இராஜகுமாரன் என்ற பெயரிட்டு அழைப்பதை நாமும் சேர்ந்து கைதட்டி வரவேற்கலாம். வீட்டில் சிறு பறவை பூனைக்கு அஞ்சி வளரும். ஆனால் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரியோடு சேர்ந்து வாழும் என்பதையும் ஒரு கவிதை ஆக்கி உள்ளார்.


"சிறு புன்னகை 

என்ன செய்யும்? மழைத்துளி செய்யும்

அத்தனையும்

செய்யும்"

கவிஞர் சக்தி மீனாட்சி சிறு புன்னகை என்றால் நெஞ்சுக்குள்ள முடியும் அவர் மழைத்துளி அவர் பெருமழைதரும் வல்லமை மிக்கவர். கவிதைக் காடு அவரை வரவேற்கிறது. நானொரு நாடோடி என்பதும் பொருந்தும். நானொரு காடோடி என்பதும் பொருந்தும். அத்தனை விசயங்களை இத்தொகுப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் தோழர்.

யமுனா என்றொரு வனம் #ஆண்டன் பெனி

 யமுனா என்றொரு வனம்

கவிதைத் தொகுப்பு

ஆண்டன் பெனி 

படைப்பு பதிப்பகம்

விலை : ரூ.100

பக்கங்கள் : 122


முத்தங்களால் நெய்யப்பட்ட கவிதைகள்


காதலையும் காதல் கவிதைகளையும் வெறுமனே காதல் தானே என்று கடப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை காதலில் திளைப்பவர்கள் உணர்வார்கள். காதல் என்பது பேரன்பை உணர்த்தும் உச்ச நிலை. காதல் என்பது பகுத்தறியும் உயிர்கள் கொண்டாடவேண்டிய பெருந்திருவிழா. காதல் சமூகத்தை அன்பின் பாதையில் மேலெழச் செய்யும் பெருந்தவம். அதனை செவ்வனே செய்திருக்கிறார் கவிஞர் ஆண்டன் பெனி. 


‘என் ரயில் பயணங்களிலெல்லாம்

ஜன்னலுக்கு வெளியே

உனக்கொரு இருக்கை 

கிடைத்துவிடுகிறது”

வாசிக்கும்போதே நான் ரயிலில் பயணிப்பவனாகவும் என் அன்பிற்குரியவள் நடைமேடை இருக்கையில் அமர்ந்திருப்பது போலவும் வருகின்ற எண்ணத்தை எது எனக்குள் தோற்றுவித்திருக்கும்? கவிதையின் தாக்கம் அதுவே. 


கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே... இந்த வரிகளை காதலிக்கும் நாத்திகனும் பாடித் துயரடைவான் எனில் காதல் தரும் வலி எவ்வளவு வன்மம் நிறைந்தது...? தான் காதலிக்கும் பெண்ணிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார் கவிஞர். அந்த கோரிக்கை இந்த வாழ்வை வாழ்ந்து கடக்க வைக்கும் வேண்டுதல். இதற்கு மேல் வேறென்ன வேண்டும் என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சிறு பேராசை. 

“உன் கண்படும் தொலைவில்

இருக்கிறேன்

சற்றே பார்வையால் 

என்னைத் தொட்டுக்கொள்

போதும்”

காதலின் அதிக பட்ச எதிர்பார்ப்பு. இது நிறைவேறும்பட்சத்தில் அடுத்துத் தோன்றும் கவலையை அடுத்து எப்படி சரிக்கட்டுவது என காதல் பார்த்துக்கொள்ளும்.


காடு, வனம் வேறுபாடு கூறு என்று கேள்வியை இனி யாராவது எழுப்பினால் அதற்குப் பதிலாக இந்த கவிதையை முன்வைக்கலாம்.

“சிந்தாமல் சிதறாமல்

முத்தமிடு

சிந்திய முத்தம் காடாகும்

சிதறிய முத்தம் வனமாகும்...”


முத்தம் என்பது எதைச் சாதிக்கும்? முத்தத்தின் பயன் என்ன? முத்தம் இல்லாவிட்டால் என்ன நிகழும்? என்பன போன்ற பல கேள்விகள் எழுபவர்களுக்கு இத்தொகுப்பைப் பரிசளிக்கலாம். முத்தத்தின் ஈரமா... காதலின் ஈரமா... கவிஞரின் ஈர மனதா... ஏதோ ஒன்று தொகுப்பெங்கும் விரவிக்கிடக்கிறது. முத்த முனைவர் என பட்டம் கொடுத்துவிடலாம் போல... பல்வேறு ஆராய்ச்சிகள்? அனுபவங்கள்? அல்லது கற்பனைகள்...! முத்தத்துளிகளில் மூன்று...

முத்தங்களைப் பதித்து

முத்தங்களைச் சுவைத்து

முத்தங்களைக் குடித்து

முத்தத்திலே இளைப்பாறவேண்டும்


மீசை முடி வருடியதும்

கனிந்து விடுகின்றன

இதழ்கள்


முத்தம் சிற்றின்பம்

முத்தத்தில் உதடு கடித்தல்

பேரின்பம்


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே... என்பது கவிஞருக்கு 

“மனதினுள் 

ஒற்றைப் பூவாக நுழைகிறாள் யமுனா

இனி அவளின்

மகரந்தக் கால் தடங்களிலெல்லாம்

பூப்பூக்கும்...” 

யமுனாவின் வரவு தொடங்கிய வாழ்க்கையை ஒரு பூந்தோட்டமாக மாற்றிக்கொண்டு வாழும் கவிஞரின் கவிதைகளில் வாசிப்பவரை வசீகரிக்கும் காதல் மிதக்கிறது. குஷி படத்தில் இடைவேளை வரும் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் இடைக் காட்சியால் மல்லுக்கட்டிக் கொள்வார்கள். கதாநாயகி அறியாத கணம் என்றால் பிரச்சனையல்ல. அதற்காகக் காத்திருக்கும் கவிஞர் அக்கணத்தை பதிவு செய்கிறார் இப்படியாக.

“ஆடையாகட்டும்

அருகில் வீசும் காற்றாகட்டும்

தேர்வு செய்வதில் 

நேர்த்தியானவள் யமுனா.

அவளின்

ஒரு கவனக்குறைவு நேரத்திற்காகக்

காத்திருக்கிறேன்”

அதீதக் காதலில் தேடல் அதீதமாக இருத்தல்தானே முறை...


மழையும் குடையும் இரட்டைக் குழந்தைகள். குடையின் மேல் பட்டுத் தெறிக்கும் மழைத் துளிகளை கவிஞர் காணும் பார்வையில், காதலியைக் காண மெல்லிறங்கும் கண்களை நாம் கண்டுணர முடியும். ரசனையான பார்வை.

“குடைக்குள் 

உன்னைப் பத்திரப்படுத்துவதை

வழக்கமாகக் கொண்டிருக்கிறாய்

குடையின் மேலெங்கும்

என் கண்களின் தடங்கள்”


“யமுனா ஒரு மாயநதி

என் பாத வழிகளில் மட்டுமே காணக் கிடைக்கிறாள்”

நதியின் நீளமும் பயணத்தின் நீளமும் காதலால் மிளிரட்டும். கவிதையென சிறக்கட்டும்.


நிறைவாய் ஒரு (கவிதைப்)பற்றுதல்...

“நெற்றியில் வழுக்கிய என் உதடுகள்

உன் உதடுகள் தாங்கியதால்

உயிர்பெற்றது...”


இலக்கியச் சாரல் தாஹிர் பாட்சா, முனைவர் ஸ்ரீதர் இருவரின் அணிந்துரைகளும், இயக்குனரும் எழுத்தாளருமான பிருந்தா சாரதி அவர்களின் வாழ்த்துரையும் நூலாராய்ச்சி நடத்தியிருக்கின்றன. 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

வாய்தாவில் இருக்கும் பதினைந்து இலட்சம்

 வாய்தாவிலிருக்கும் பதினைந்து இலட்சம்

கவிதைத் தொகுப்பு

கோபி சேகுவேரா 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் 84

விலை ரூ. 100


கவிதைகள் என்ன செய்துவிடும்...? சம்பவங்கள் செய்யும்.


நம்மைப் போல் ஒருவனைக் கண்டால் ஆரத் தழுவிக்கொள்ளும் மனம் எல்லோருக்கும் வாய்த்ததே. இத்தொகுப்பைப் படிக்கப்படிக்க அதே எண்ணம் தான் எனது மனதிலும் வந்து சேர்ந்தது. மக்களுக்கு எதிரான நிலையெடுக்கும் சனாதன அரசைக் கண்டிக்க எழுத்தை ஆயுதமாக்கியிருக்கிறார் கவிஞர். தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டே பொய்யையும் புரட்டையும் பேசி சாதிய மனப்பான்மையில் பெருமிதம் கொள்ளும் ஒரு கும்பலை வளர்த்தெடுக்கும் நாம் தம்பி குழுவை புரட்டி எடுத்திருக்கிறார். மக்கள், வாழ்க்கை, காதல் குறித்த கவிதைகளும் தொகுப்பில் கிடைக்கின்றன. மேலாக இசைஞானி இளையராஜாவின் பெயர் ஐந்து கவிதைகளுக்கும் மேல் இடம்பெறுகிறது. ஆக ஆரத் தழுவிக்கொள்ள ஒரு கவிஞன், கவிதைத்தொகுப்பு என்று மனதாரச் சொல்லுவேன். 


அட்டைப்படம் தொடங்கி ஆரவாரம். புரட்சியாக பூவாக நம்மை வசீகரிக்கிறது சொற்களும் கருவும் கவிதையும். அட்டைப்பட வடிவமைப்பாளர் ஜெ.கோ.புவன் அவர்களுக்கு பேரன்பு. பெரும்பாலும் அரசியல் இல்லை என என்னுரையில் சொல்லியிருக்கும் கவிஞரின் அரசியல் தொகுப்பெங்கும் மிளிர்கிறது. ஒவ்வொரு புதிய திட்டம் தொடங்கும்பொழுதும் புதிய இந்தியா தொடங்குகிறது என்ற கூச்சல். வந்தே பாரத் ரயிலுக்கும் அப்படியே. அதன் முன்பக்கம் மாடு முட்டி சேதமாகிறது. வேறொரு ரயில் எஞ்சினால் இழுத்துச் செல்லப்படுகிறது. நாம் வேடிக்கை பார்க்கிறோம் பழைய இந்தியர்களாகவே. 

“வந்தே பாரத் ரயிலோடு

ஐநூறாவது புதிய இந்தியா வந்துகொண்டிருக்கும்

இந்த ரயில் பாதையில்தான்

உயர்ந்த விலைவாசிக்காக

வழியற்ற வாழ்வுக்காக 

தலைவைத்துக் கிடக்கிறார்கள்

ஐநூறாவது புதிய இந்தியாவின்

பழைய மற்றும் புதிய இந்தியர்கள்” 

வெற்றுப் பம்மாத்துக்களை மட்டும் ரயில் போல நீளமாக மக்களிடம் காட்டிக்கொண்டிருக்கும் அரசுக்கு இந்தக் கவிதை. 


ரஃபேல் ஊழல் என்பதிலிருந்து தகிடுதத்தங்கள் செய்து தப்பித்து வந்தாலும் ரஃபேல் வாட்ச் என்பதும் அதன் பில்லும் பேசுபொருளானது மலையால். தொடர்ந்து பேசுவது அனைத்தும் பொய் என்று மாறிய சமயம் இன்னும் நேரடியாக மக்களிடம் சென்று அந்தப் பொய்களைச் சொல்ல யாத்ரா முடிவாகிறது. செல்லும் இடமெல்லாம் கூட்டப்பட்ட கூட்டம். அண்ணா மன்னிப்பு என்றொரு பொய் ஒரு இடத்தில். வீரசிவாஜி வந்து போன கோவில் என்று ஒரு பொய் ஒரு இடத்தில் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் யாத்ரா குறித்த கவிதை ஒன்று. ஊடகப் பதிவுகளில் மலை குறித்த பதிவுக்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல் என்று கமெண்ட் செய்யும் சனாதன எதிர்ப்பாளர்கள் வழியில் இந்தக் கவிதைக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தலைப்பு. மிரட்டி விட்டுருக்காப்டி மனுஷன்.

“கொஞ்ச தூரமாவது நிடந்து செல்

சொம்பு கொடுத்து கூட்டத்தைக் கூடாதே

வெறுப்புப் பிரச்சாரம் செய்

தேவைப்பட்டால் ராணுவம், ராம ராஜ்ஜியம்

இந்து, சந்து என ஏதாவது உளறி வை.

எங்கு பார்த்தாலும் 

பிரியாணி ஆண்டாவை 

கண்டுகொள்ளாமல் கடந்து போ.

இரட்டைத் தலைமையிடம்

பிடுங்கிய இலைகளை

ஆட்டுக்குட்டிக்கு உண்ணக்கொடு”

எனச் செல்லும் கவிதை சமகாலத்தின் கண்ணாடி. கோமாளித்தன அரசியலைக் கண்முன் நிறுத்தும் கவிதை, அவர்களுக்கெதிரான தீப்பந்தத்தையும் நம் கைகளில் தந்துசெல்கிறது.


எப்பொழுது என்ன மாதிரியான விலை உயர்வு, வரி உயர்வு வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை அரசின் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நூறாவது பொய்பொழிவு என்ற தலைப்பிலான கவிதையில் 

“முதலாவது மன் கி பாத் நிகழ்ந்தபோது

சமையல் எரிவாயு விலை பற்றி 

உங்களுக்கும் சொல்லத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு ரகசியம் சொல்கிறேன்

இன்று நூறாவது மன் கி பாத்

அப்போது விலை 410 ரூபாய்

இப்போது விலை 1100 ரூபாய்” சமகால அரசியலையும், அரசியல் போகும் பாதையையும், மக்கள் அதனால் படப்போகும் இன்னல்களையும் இவ்வரிகளை வாசிக்கும் யாவரும் உய்த்துணரக்கூடும்.


அணிந்துரையில் தோழர் Vijayakumar Gurusamy கவிஜி சொன்னது போல, பல கவிதைகள் வாசிக்கும்போது இதழ்களில் புன்னகை பூக்கக்கூடும். அவை அரசியல் சார்ந்து இருப்பது அவலம் தான். அந்த அரசியலைச் சுமந்துகொண்டுதான் நாமும் இந்த மண்ணில் வாழ்கிறோம். வாடுகிறோம். அரோமா பேக்கரியில் உட்கார்ந்துகொண்டு வேட்பாளர்களின் கூச்சலைக் கேட்டுப் பொங்குகிறார். அப்படி என்னதான் வேட்பாளர்கள் சொல்லிவிட்டார்கள்...

“மல்லிகை மலர்ந்தே தீரும்”

“நமது சின்னம் தேக்கு விவசாயி”

“நமது மம்மியின் சின்னம்”

“ஆக, இது டாடியின் சின்னம்”

“இது தக்காளிப்பழ சீசன், உங்கள் ஓட்டு தக்காளிக்கே”

அரசியல்வாதிகளுக்கு என்று தீரப்போகிறதோ இந்த கூச்சல் மோகம்?


ஊடகத்தினர் முன்னால், பொதுக்கூட்டத்தில், தனி நேர்காணலில் என எங்கு பார்த்தாலும் கொஞ்சம்கூட கூச்சப்படாமல் பொய்களை அவிழ்த்துவிடுவதற்குத் தனித்திறமை வேண்டும் என முதலில் நினைப்பேன். ஆனால் அதற்கு அவர்கள் அசிங்கப்படவேண்டும். நாம் அதனைக் கண்டு காறி உமிழ வேண்டும். குறைந்தபட்சம் எழுத்தாளனாக இருப்பவன் தனது கவிதைகளிலேனும். கவிஞர் பாராட்டுக்குரியவர். அவர் தன்னுடைய எழுத்தை முட்டாள்தனத்திற்கு எதிராக கொம்பு சீவி விட்டிருக்கிறார். ஆமை ஓட்டுப் படகு, ஏகே 74, ஆமைக்கறி, உடைத்த கறி இட்லி, பன்றி அடித்தல், வந்தேறி அடையாளம், சாத்தானின் பிள்ளைகள், படித்த பட்டதாரிகள் ஆடு மாடு மேய்க்க, குடிப்பெருமை பேச, இடையிடையே தமிழ்த் தேசியம், அத்தனையையும் பொங்குதமிழில் பேசி புக்காகாகா என பகடி செய்து வயிறு வளர்க்கும் தலைவனென்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை கவிதையில் பந்தாடியிருக்கிறார் கவிஞர். 


சேலம் ராஜா எழுதிய கவிதை ஒன்றில் 

“அழகான கோபுரத்தில் தொடங்கி

அம்பேத்கார் சிலையோடு முடிகிறது 

எங்கள் ஊர்” என சாதியச் சமூக ஊர்ச் சித்திரத்தை சொல்லியிருப்பார். கவிஞர் கோபி சேகுவேரா கூறும் ஊர்ச் சித்திரம் இப்படியாக இருக்கிறது...

“உடைபட்ட எலும்போடும்

அறுபட்ட கழுத்தோடும்

சேரியில் வாழும் 

காந்திக்கும்

நேருவுக்கும்

ஊர்த்தெருக்களில்

புத்தகம் ஏந்திக்கொண்டு

ஒரு அம்பேத்கர் கூட துணைக்கு இல்லை”.


புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்ததை, நம்மிடம் தொடர்பில்லாத ஒருவர் நம்மை அறிய நம் பெயர், அடுத்து ஊர்ப் பெயர், தெருப்பெயர் எல்லாம் கேட்டு நம்மை என்ன சாதி என அறிய முற்படுவதை கவிதையாக மாற்றி வைத்துள்ளார் கவிஞர். 


அறிமுகப் பிணக்கு கவிதை காதல் துயரை கண்ணீரால் எழுதியிருக்கிறது. அதிலும் அந்த கடைசி வரிகள்...

“தற்செயலின் கதவுகளை உடைத்து

நிரூபிக்க என்னிடம் என்ன இருக்கிறது

எப்போதோ கிசுகிசுக்கப்பட்ட

நம் பெயர்களைத் தவிர”


நினைவு மாதிரிகள், பண்டிகை உள்ளிட்ட சில கவிதைகள் பீஃப் பிரியாணியை, வருவலை, குழம்பை, சத்துக்களை சொல்லும் கணம் நாவினில் எச்சிலூற வைக்கிறது. நாம் தம்பியாக உயர்வது எப்படி என்பதை தமிழ்த்தேசியம் என்ற கவிதை பாடமெடுக்கிறது. இசைஞானி இளையராஜா பற்றிப் பேசும் சில கவிதைகள் அவரின் இசைபோல உள்ளுள் பரவுகிறது சுகமாக. 

வெ....கு....தூ....ர....ம் என்ற கவிதை

கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி பாடலைப் பாடி கவிதையைமனதோடு அணைத்துக்கொள்ளும் வேலையைச் செய்கிறது... ஒரு பாடலின் சொற்களை எப்படியெல்லாம் இணைத்து பிரித்து ராகமாக்கலாம் என்ற வித்தை கற்றவர் அவர்... 

“வெண்ணிலவின் ஒளி

கனலாய்

கொதிக்குதடி...

எண்ணம்

நிலை இல்லாமல்

தவிக்குதடி...

எப்போது வேண்டுமானாலும் இசைஞானி இப்படிச் சொக்கும்படி ஏதாவது செய்துகொண்டிருப்பார்....” கவிதைக்குள்ளும் ராஜாவின் இசைபோல சொற்கள்.


சொல்லித் தீரா கவிதைகள் இன்னும் பல தொகுப்பிற்குள். வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம். அரசியல், தனிமனித வாழ்க்கை, காதல் என பலரசங்கள். ரசித்து வாசிக்கலாம். ரசித்து மகிழலாம். ரசித்து மயங்கலாம். நல்லதொரு சமூக, அரசியல் கவிதைத் தொகுப்பிற்கு வாய்ப்பு நல்கிய படைப்பு குழுமம் Mohamed Ali Jinna தோழருக்கு பேரன்பு.


கவிஞரை வாழ்த்த கவிஞரின் வரியை கவிஞருக்கே சொல்லக்கூடாதா என்ன...

“என்னுடன் நீ மிஞ்சியிருக்க இந்த வாழ்வு போதாது”


வாழ்த்துகள் கவிஞரே.


யாழ் தண்விகா

சூழ்நிலை #பேரறிஞர் அண்ணா

 சூழ்நிலை


பேரறிஞர் அண்ணா


திராவிடர் கழக வெளியீடு


நன்கொடை : 15


பக்கங்கள் : 56


9.2.52 ல் சென்னையில் பள்ளியொன்றில் நடந்த முத்தமிழ் விழாவில் அண்ணா அவர்கள் பேசிய உரை. கடந்த காலம் என்பது பழங்காலம் இல்லை. புராண காலம் தான் பழங்காலம். நவீன வாழ்க்கைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் மாறுகிறது. அந்த மாற்றத்துக்கு ஏற்ப தன்னையும், தான் வாழும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளும் நபர்கள் புராணங்கள் குறித்து மட்டும் சொன்னால் அவை தரம் மிகுந்தவை. அவற்றை மாற்றினால் தரம் கெட்டுவிடும். கேடு விளைந்துவிடும் என்று பயமுறுத்துவது குறித்து பல உதாரணங்கள் மூலம் பேசியிருக்கிறார். 


காட்டுமிராண்டித்தனமான வாழ்வை வாழ்ந்த மனிதன் பிற உயிரினங்களிடம் இல்லாத பகுத்தறிவைப் பெற்றதே வாழ்வின் வளர்ச்சிக்கு காரணம். ஆனாலும் இங்கு ஏழ்மை இன்னும் நிலைத்திருக்க என்ன காரணம்? ஏதோ நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். நம்மால் ஆவது என்ன? எல்லாம் விதிப்படிதான் நடக்கும். கொடுத்து வைத்தவன் வாழ்கிறான், கொடுத்து வைக்காதவன் வறுமையில் புரண்டு வாடி நெளிகிறான். புண்ணியம் செய்தவனப்பா, நன்றாக வாழ்கிறான், அனுபவிக்கிறான் என்றெல்லாம் சொல்லி கடவுள் மேல் காரணத்தைச் சொல்லக் கற்றுக்கொடுத்த கூட்டத்தை அம்பலப்படுத்துகிறார்.


இயல், இசை, நாடகத்தை முக்கனிகளோடு ஒப்பிடும் லாவகம் அழகு. அறிவுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள், அப்பாலேயே நிற்கட்டும். மனிதனது அறிவுக்கு வேலை தரும் அறிவு இலக்கியங்களே தேவை என்ற நிலை நிச்சயம் வந்தே தீரும். உறுதி என்று அவர் ஆற்றிய போர்ப்பரணி சிறப்பு. "தரம்" குறைந்துவிடும். "தரம்" கெட்டுவிடும் என்று எதற்கெடுத்தாலும் பேசுவது, குறிப்பிடுவது ஏன்? எதற்காக இந்தப் பீதி, பயம் எல்லாம்? என்ற வினா சனாதனத்திற்கு ஆதரவாக கிளம்பும் படைகளுக்கும் பொருந்தும் வினாவாக இருக்கிறது. காரைக்காலம்மையார், கண்ணப்பர் இவர்களுக்கு ஒரு நீதி, சம்பந்தருக்கு ஒரு நீதி... இது தவறில்லையா என்று வினவுகிறார். திருவிளையாடற்புராண கதை ஒன்று என குலத்திற்கு ஒரு நீதி வழங்கும் புராணப் புரட்டுகளை அண்ணா அவர்கள் எடுத்துக்காட்டுகிறார். இன்றும் நாட்டைச் சூழ்ந்திருக்கும் மதம் குறித்த கட்டுகளை உடைக்க அன்றே குரலுயர்த்திய அண்ணா சனாதனத்தை ஆதரிக்கும் நபர்களுக்கு தீப்பிழம்புபோல இருப்பதற்குக் காரணம் இது போன்ற பேச்சும் நூல்களும் தான் பெரும்காரணம் எனலாம். 


அவசியம் வாசியுங்கள்.


யாழ் தண்விகா 


❣️

நான் உன்னைக் காதலிக்கிறேன்

 நான் உன்னைக் 

         காதலிக்கிறேன்...

-----------------------------------------


- யாழ் தண்விகா 

- கவிதை நூல்

விலை - ரூ.66


 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் பிறந்த கவிஞருக்கு இது நான்காவது நூல்.


" எத்தனை விழிகள் தின்றாலும் தீர்ந்து போகாத நிலா " என்கிற வரிகளில் பொதிந்திருக்கும் உண்மையைப் போலவே அனைவரின் அகத்தில் தோன்றும் காதல் அதீத அழகாகவே வெளி வருகிறது. வார்த்தைகளின் வழியே வாசிப்பவனுக்கும் பூச்சொரிகிறது, மழை நின்ற பின்பும் காற்று வீசுகிற போதெல்லாம் இதமாய் தூரிவிடும் மரக்கிளைகளைப் போல சில்லிடச் செய்கிறது கவிதைகள் ஒவ்வொன்றும்.


" நீ பதித்த கால் தடத்தில் 

   பூச்செடி நட்டு வைத்தேன்

   காதல் பூக்கிறது .."


-வாசிக்கும் நம் கண்களும் காதல் பூத்துக் கிடக்கும் வனத்தினில் கால் பதிக்கிறது.


" உனது ஊரில் மழை என்றாய் 

   எனது ஊருக்கு நீ வரும்போது 

   நானும் சொல்வேன் 

   எனது ஊரில் மழையென்று "


- அடடா காதலின் கர்ப்ப கிரகத்தில் தான் எத்தனை கவிதை குழந்தைகள் சூல் கொள்கின்றன. பார்வைகள் பற்றிக்கொள்கிற போதெல்லாம் கவிதைப் பிள்ளைகள் பிறந்து கொண்டே இருக்கின்றன.


 " அழகால் வதைக்காதே என்றால் 

   நீ என்ன செய்வாய் ...


   தப்பிக்கதான் 

   நான் கவிதை எழுத கற்றேன் "


-சில நொடிகள் சிறைப்படுவதும் சில நொடிகள் தப்பிப்பதுமான போராட்டம் தான் காதலில் கூட,


" என் அனைத்து கவிதைகளும் 

   உன்னை பற்றி தான் பேசுகின்றன

   என்றாலும் 

   உன்னை போல் 

   அழகாய் பேசி விடுவதில்லை அவை.."


- என்கிறது ஒரு கவிதை எத்தனை முறை தான் கைகாட்டி காட்டிக்கொடுக்கிறீர்கள் உங்கள் காதலை . ஆனாலும் சலிக்கவில்லை வாசிக்கும் எங்களுக்கும் வானவில்லின் வண்ணங்களைப் போல கண்களுக்குள் ஒட்டிக் கொள்கிறது .

 பொதுவான கற்பிதங்களை காதல்தான் உடைத்தெறிகிறது சமூகத்திலும் தனிமனித வாழ்விலும். காதல் எவ்வளவு மெல்லியது ஆனாலும் உடைக்கும் பொழுது அது பேருளி.


" தேவதை 

   வெள்ளை உடையில் மட்டுமே 

   வருவாள் என்ற கட்டமைப்பை 

   உடைத்தவள் நீ "


-என்கிறது கற்பிதமுடைத்த கவிதை ஒன்று.


" புடவை மட்டுமே எனக்கு 

   பிடித்த உடை 

   என்கிறாய்...

    

   என்னிடம் 

   சிபாரிசுக்கடிதம் கேட்கின்றன 

   பிற உடைகள் "


-இன்னும் இன்னும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்து கொண்டே இருக்கிறது இந்நூலில் இருக்கும் ஒவ்வொரு கவிதைகளும்.


" உன்னை 

  கட்டிக்கொண்டு இருப்பதை 

  நீ புடவை என்பாய் 

  நான் புண்ணியம் என்பேன் "


- ஒரே ஒரு மழைதான் அவரவர் நனைகிறபோது ஏற்படும் ஜில்லிடலைப் போல, ஒரே ஒரு காதல் தான் எத்தனை எத்தனை வர்ணஜாலங்களை மனதளவில் தோன்ற வைக்கிறது.


" நான் உன்னை 

   காதலிப்பதற்காக வாழ்கிறேன் ..


   வாழ்வதற்காக 

   உன்னை காதலிக்கிறேன் "


-காதல் மலர்ந்த இதயத்தின் ஆன்மாவிலிருந்து உதிரும் பூக்களாய் ஒவ்வொரு கவிதையும் அவரவர் மனதின் காதலை திறக்கவும் வைக்கிறது_ மரணிக்கவும் வைக்கிறது. என் கவிதைகளை வாசிக்கப் போவதாக சொல்லி பெரியகுளத்திற்கு அழைத்தீர்கள், ஆனால் கவிதையின் காதலனை பார்த்துவிட்டு கைநிறைய காதல் புத்தகங்களோடு வீடு திரும்பியிருக்கிறேன் . வாசிக்க வாய்ப்பளித்த கவிஞனுக்கு நன்றி.  


 " மரணம் என்று 

   ஒன்று உண்டெனில் ,

   அது உன்னால் வேண்டும் 

   அல்லது ,

   உன்னுடன் வேண்டும் "


-என பதின் பருவத்திலொருவன், கண்களும் இதயமும் பனிக்கச் சொன்ன வரிகளை ஞாபகப்படுத்தியதற்கு மீண்டும் ஒரு நன்றி.


-பா.மகாலட்சுமி-

Saturday, 7 February 2026

உய்யடா உய்யடா உய்... #இசை

 

உய்யடா உய்யடா உய்!


கட்டுரை நூல்


காலச்சுவடு வெளியீடு

ரூ. 125


இசை


நீண்ட நாட்களுக்குப் பின் வாசித்த கட்டுரை நூல். கட்டுரை வாசிக்க ரொம்ப பொறுமை வேணும், கொஞ்சம் அறிவாளியா இருக்கணும் அப்படி இப்படின்னு இதுக்கு முன்னால பலர் சொல்லியும் எனக்குள்ள நானா அதை உண்மைன்னு நம்பியும் இருந்திருக்கிறேன். அதுக்குத் தகுந்த மாதிரி பல கட்டுரையும் இருந்திருக்கு. ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாசிக்க வாசிக்க உய்யடா உய்யடா உய்! என்று சத்தமிட்டு விசிலடித்து உஸ்... கவனிக்கணும் எவ்வளவு முக்கியமான விசயம் இது என்று மௌனம் காத்து... இப்படி பல கோணங்களில் ரசிக்க வைத்தது.


எழுத்தாளர் சுகுமாரன்

நகலிசைக் கலைஞன் ஜான் சுந்தர்

காமத்துப்பால்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

பொன்மொழிகள்

எழுத்தாளர் வண்ணதாசன்

அன்பு செய்தல்

இயக்குநர் மிஷ்கின்

மகாகவி பாரதி

குறித்த கட்டுரைகள். ஒவ்வொன்றிலும் பிறர் பார்வை, தன் பார்வை, உள்ளது கூறல், விடுபட்டவை கூறல், பகடி எனப் பயணம் செய்யும் கட்டுரை ஓரிடத்திலும் அலுப்புத் தட்டவில்லை என்பதும் மேற்சொன்ன தலைப்புகள் அத்தனையிலும் நாம் அறியாத ஒரு புதிய செய்தியாவது இருக்கும் என்று கூறும் வண்ணம் சிறப்பான தொகுப்பாக அமைந்திருக்கிறது.


வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.


வாழ்த்துகள் தோழர்.