Tuesday, 22 July 2025

நசீபு


 

#நூல்_விமர்சனம்


தன்னைச் சுத்திகரிக்கும் சமூகக் கதைகள்


 சிறுகதைகள் என்பவை சிற்சில சம்பவங்களின் தொகுப்பு. அது வாசிப்பவனை கதைக்குள் ஒன்றச் செய்யவேண்டும். கதைக்குள் நிகழும் சம்பவங்கள் வாயிலாக ஏதேனும் ஒரு பாடத்தை உணர்த்தவேண்டும். அப்படிச் செய்யும் எந்தவொரு தொகுப்பும் வெற்றிக்கான முத்திரையைப் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நசீபு சிறுகதைத் தொகுப்பு அப்படிபட்ட தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள். அனைத்தையும் தான் சார்ந்திருக்கும் இஸ்லாமியப் பின்புலத்திலிருந்து எழுதியிருக்கிறார். பழைமைவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கவும், பெண்களின் இருப்பு இஸ்லாமிய சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தவும், அங்கிருக்கும் ஆணாதிக்க சூழலை வெளிக்கொணரவும், அங்கும் வறுமையில் இருக்கும் குடும்பம் பசி போக்கத் திண்டாடும் சூழலையையும் தன்னுடைய தொகுப்பின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர் மு.அராபத் உமர். 


ஷஜ்தா

பானுவின் அப்பா ஒப்புக்கொண்டபடி வரதட்சணைப் பணத்தைக் கொடுக்காததால் அவள் அனுபவிக்கும் இன்னல் எங்குவரைக்கும் போகிறது என்பதை கதை சொல்கிறது. இப்படிக் கதைகள் அனைத்துச் சமூகத்திலும் இருக்கிறது. நஜீம் கணவனாக இருந்தாலும் வீட்டில் தன்னுடைய அம்மா, மற்றும் அக்காவின் சொல் கேட்டு நடப்பவனாக இருக்கிறான். தனக்கு நல்லது நடந்தால் அக்காவால் நடப்பதாகவும் கெட்டது நடந்தால் மாமனார் வீட்டால் நடப்பதாகவும் எண்ணுகிறான். அதனாலேயே மனைவி என்றும் பாராமல் மிகவும் கீழாக நடத்துகிறான். வீட்டில் பானுவின் கொழுந்தன் பானுவிற்காகப் பேசினாலும் அவனுடைய பேச்சு எடுபடவில்லை. தன்னுடைய இரு பெண் குழந்தைகளை வளர்க்க நஜீமின் துணை அவசியம் என்பதால் மாமனார் வீட்டை எதிர்த்து தன்னுடைய தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்லாமல் மனதால் புழுங்கும் பாத்திரம் பானுவிற்கு. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பானுவின் வலிகள் கடத்தப்படுவது அவளின் பாத்திரப் படைப்பை சிறப்பாக்குகிறது. பானுவின் அம்மா, பானு திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில் உனக்கு எதுவும் மனக்குறைகள் இருந்தால் அதனை அல்லாவிடம் தொழு செய்துகொள். அவர் தீர்த்து வைப்பார் என்கிறார். அதையே கடைசி வரை தொடர்கிறார் பானு. இதன் மூலம் ஒரு பெண் என்பவள் தனக்குத் தீங்கு செய்பவர்களை எதிர்த்து நிற்க, கேள்விக்கு உள்ளாக்க வைக்கப்படாமல் இருப்பதற்கு கடவுள் என்பதையும், அவள் ஒரு பெண் என்பதையும் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் தொடர்ந்து பெண்களுக்கு மட்டும் கற்பித்துக்கொண்டே வரப்படுவதைச் சுட்டுகிறது. வரதட்சணை என்பதை தன்னுடைய அண்ணனின் மகள் என்றாலும் கேட்கும் காலம் என்பதை மாமியார் கதாபாத்திரத்தின் மூலமாகக் காட்டுகிறார். இக்கொடுமை இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமல்ல பல சமூகத்திலும் இருக்கிறது. இதனை உணரச் செய்யும் வேலையைக் கதை செய்கிறது. 


கியாமத்

பதினைந்து வயதே ஆன ஆயிஷா என்ற பெண்ணிற்கும் முப்பத்து இரண்டு வயது ஆணுக்கும் திருமணம் முடிகிறது. இவர்களுக்கு ரேஷ்மா என்ற பன்னிரண்டு வயது பெண் குழந்தை. திருமணம் முடிந்த காலத்திலிருந்தே ஆயிஷா மேல் சந்தேகம் கணவனுக்கு. குடும்பம் அவளை எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அவளின் அழகும், தன்னை விட மிக இளையவள் என்பதும் கணவனுக்கு அவள் மீது சந்தேகத்தை வரவழைக்கிறது. அது தன் மேல் உள்ள நம்பிக்கையின்மை. தன் அன்பின் மேல் வரவேண்டிய நம்பிக்கையின்மை. பழமையில் ஊறிப்போன குடும்பம் என்பதால் வயல் வேலைக்கு வரும் நபர்களுக்கு உணவளித்தல் கூட சந்தேகத்தைக் கிளறுகிறது. இந்த சமயத்தில் வீட்டின் பக்கமாக வரும் பாத்திமா என்ற பெண்ணோடு நட்பு. அந்த நட்பில் அவ்வளவு ஆத்மார்த்தம். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் பற்றி, தன்னுடைய வலியைப் பற்றி ஆயிஷா பாத்திமாவிடம் பகிர்கிறாள். வீட்டில் படுத்தும்பாட்டினால் தான் இறந்துகூட போய்விடுவேன் என்று ஆயிஷா கூறுகிறாள். ஆனால் பாத்திமாவின் பேச்சைக் கேட்டபின் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன். என் பிள்ளையை காலேஜ் வரைக்குமாவது படிக்க வச்சுட்டு ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுக்கும் வரை சாகமாட்டேங்க்கா என்று நம்பிக்கையுடன் செல்பவள் இறந்துவிட்டாள் என்பது எவ்வளவு துயரம். இறப்பின் பின்னர் மாமியார், கணவன், நாத்தனார், உறவுகள் என ஒவ்வொருவர் நடவடிக்கையும் சந்தேகம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இது ஆணாதிக்க சமூகம். இங்கு பெண்களின் பேச்சு எடுபடாது. ஆனால் உண்மையாக இரக்கம், அன்பு, கருணையால் நிரம்பிய ஒரு பெண் எப்படி இறக்கலாம்? அவளிடம் வலி இருந்தது. ஆனால் கோழைத்தனம் இல்லை. அவளை இப்படி யார் செய்திருப்பார்கள்? யார் யார் கொலையாளிகள்? அவள் என்ன தவறிழைத்தாள்? அவளைக் கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நல்லவர்களாகலாம்? என்ற கேள்வியை பாத்திமா, சையதலி மூலமாக எடுத்தாண்டுள்ள விதம் அருமையாக இருக்கிறது. தன்னைப்போல தன்னுடைய மகளும் இருந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் மகளை கல்லூரிப் படிப்பை முடித்து வைத்த பின்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற ஆயிசாவின் எண்ணம் கல்வியின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் இள வயது திருமணத்திற்குள் அவளைத் தள்ளிவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காட்சிப்படுத்துவதாகப் பார்க்கலாம். கதையின் இறுதிப் பத்தியில் சொன்னவாறு யாராச்சும் காப்பாத்துங்க என்ற துயர் நிறைந்த வார்த்தைகளுக்கு முன்னால், முன்கூட்டியே அவளின் வலி அறிந்தும் தூர நின்று கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் குற்றவாளிகளாக கைகட்டியே நிற்கிறோம்.


வெம்மை

ஃபஹீமாவின் மாமனார் இறந்துவிடுகிறார். வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவன் திரும்பும் வரை ஃபஹீமாதான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவள் சித்த மருத்துவம் படித்தவள். அவளுக்கு மாமனார் இறக்கும் வேளை வந்துவிட்டது. நடக்கும் ஒருசில சம்பவங்களும் அதை உணர்த்தியது. எனவே, கூட இருங்க என்று கணவனிடம் கூறியும் கட்டாயம் போகவேண்டிய சூழல் என்பதால் சென்றுவிடுகிறான். இறப்பு செய்து கூறியபோதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லுகிறான். ஃபஹீமாவின் வற்புறுத்தல் காரணமாக வருகிறான். வந்தவன் அத்தாவைப் பார்த்தபோதும், அம்மாவைப் பார்த்தபோதும் அழவில்லை. ஃபஹீமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அடக்கம் செய்துவிட்டு வந்த இரவில் அப்பா இறந்ததற்கு உங்களுக்கு கண்ணீர் வரவில்லையா, ஏன்? என்ற கேள்விக்கு பணம் பணம் என்று ஓடி ஓடி அப்பாவைக்கூட கவனிக்கவில்லை. அவர் கூட நான் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியாக அவர் உயிரோடு இருக்கும்போது கூட பார்க்கவில்லை என்று கூறி கண்ணீர் விடுகிறான். வாழ்க்கைக்காக பணம் என்று ஓடி உறவுகளை மறந்துவிடுகிறோம் என்பதை கதையை வாசிக்கும்போது உணரமுடிகிறது. கணவன் இறந்தாலும் அருகே சென்று அமர்ந்து பார்த்து அழுவதற்குக் கூட அருகே ஆண்கள் யாரும் இல்லை, அவர்கள் இனி காலையில்தான் வருவார்கள். இப்போது சென்று பார்க்கலாம் அழலாம் என்ற நிலையில் மாமியார் பாத்திரம் மூலமாக குறிப்பால் உணர்த்துகிறார் கதாசிரியர். எல்லா உணர்வுகளையும் இப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எவ்வளவு வலி? இந்த நேரம் சிரிப்பதற்கு, இந்த நேரம் அழுவதற்கு? என்று பிரித்து வைப்பது எவ்வளவு பெரிய வன்மம் என்பதை மாமியாரின் கதாபாத்திரம் மூலமாக உணர முடிகிறது. ஃபஹீமாவால் குடும்பத்தை, அப்பாவை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இயலும் என்ற கணவனின் எண்ணப்படி அவள் சிறப்புற வழிநடத்துகிறாள். கணவனும் அவளின் வார்த்தைகளை காதுகொடுத்துக் கேட்கிறான். அதற்கு முறையான பதில் சொல்கிறான். ஃபஹீமாவின் பாத்திரப் படைப்பு சிறப்பாக உள்ளது. இயல்பான ஒரு குடும்ப வாழ்வைக் கண்முன்னே நிறுத்தியதும் பணம் மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதால் தன்னுடைய தந்தையைக்கூட இறுதியில் பார்க்க இயலவில்லை என்று தவறை உணரும் மகனின் இயல்புத் தன்மையும் கதையில் சிறப்பாக அமைந்துள்ளது.


இத்தா

அரசுக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் காஜா திடீரென்று இறந்து விடுகிறார். அவருடைய மனைவி ரோஜாவுக்கு அணிவிக்கும் வெள்ளை நிறப் புடவையைக் கண்டு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெனி கதறுகிறாள். ஆனால் அங்கு நிலவும் சூழல் அதனை மாற்றுவதாக இல்லை. பெரிய மாமியார் பழைமையைச் சுமந்து நிற்கும் நபர். அவர் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லி வளர்க்கமாட்டாயா என்று திட்டுகிறார். அடக்கம் எல்லாம் முடிந்த பின்னர் தன்னுடைய அம்மா ரோஜா இருக்கும் அறைக்குச் சென்று அவள் கேட்கும் கேள்வி, கணவன் இறந்தால் மனைவி வெள்ளை உடை உடுத்தினால்தான் கணவனுக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும் என்னும்போது மனைவி இறந்துவிட்டால் கணவன் வாழ்நாள் முழுக்க வெள்ளை உடை அணிந்தால் தானே மனைவிக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும். அதை ஏன் கணவன்மார்கள் பின்பற்றுவதில்லை என்ற கேள்வியை ஜெனி கேட்கிறாள். பழைமைவாதம் பதில் தெரியாமல் விழிக்கும் இடம் இது. ஹெச்.ஜி.ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தோடு ஒப்புமைப்படுத்திப் பார்க்கவேண்டிய வினா இது. கதை வாயிலாக இளைய தலைமுறையின் இதுபோன்ற கேள்விகள் வெளிப்படல் கதாசிரியர் கையாண்டுள்ள நல்ல உத்தியும் கூட.  


நசீபு

பெண்களின்மீது காலம்காலமாக திணிக்கப்படும் வன்முறை என்பது அவர்கள் கேள்வி எதையும் கேட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான். சுபைதா என்பவள் காரணமே இல்லாமல் கணவன் இறப்பிற்கு முன்னர் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறாள். அவளும் சம்மதித்து தான் எதுவும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கோருகிறாள். இறக்கும் தருவாயில் கூட அன்பாக எதையும் பேசாமல் உதாசீனப் படுத்தப்படுகிறாள். இது பேரன் வரை நீள்கிறது. அவளுக்குள் ஆயிரம் வருத்தங்கள். ஆனால் அதைக் கேட்க யாரும் இல்லை. பெண்கள் தமக்குள் கூடி தமக்குள் வருத்தங்கள் பகிர்ந்து, தமக்குள் ஆறுதல் வார்த்தைகள் பெற்று வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும்படியான கடமைக்கான வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து தீர்க்கிறார்கள். அவர்கள் ஆண்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யும் பணியாளர்களாகவே உள்ளனர். அவர்களின் ஆசாபாசங்கள் கேட்க யாருமில்லை. சொன்னால் அதற்கும் ஆயிரம் தடைக்கற்கள். வேளாவேளைக்குச் சோறு, வருசத்துக்கு இரண்டு உடை என்பதுதான் அவர்களின் வாழ்க்கை என்று ஆண்கள் நிர்ணயம் செய்துவிடுகிறார்கள். அந்த உடையும் ஆண்களின் விருப்பப்படிதான். ஒரு நோன்பிற்கு பாவாடை, தாவணி கேட்கும் விருப்பத்தைக்கூட நிறைவேற்றித்தராமல் வேறு உடையை எடுத்துத் தருவதோடு அதனை உடுத்தாதற்காக அம்மாவைக் கோபத்தில் அறைந்து பயமுறுத்தும் அப்பா என்பது மகளுக்கு சாபம்தான். சுபைதாவின் காலம் முதல் பேரனின் கேள்வி வரை பல தலைமுறைகளாக பெண்களின் எதிர்பார்ப்பையும் அதற்கு கிடைத்த எதிர்வினையையும் கடந்து வாழும் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அது மீறப்படும் நாள் பயங்கரகரமானதாக இருக்கும் என்பதை கதையின் இறுதியில் வரும் சுபைதா வெத்தலை இடிக்கும் சத்தம் வழக்கத்தி விட வலிமையானதாக இருந்தது என்ற வார்த்தையால் கதாசிரியர் உணர்த்தியுள்ள விதம் மிகச் சிறப்பு.


பரக்கத்

கணவன் இல்லாத நிலையில் தன்னுடைய மகன் நிஜாமை வளர்க்கிறாள் ஜன்னத். லாரி ஓட்டுனரான அவன் வரும்பொழுதே பரக்கத் பெண்ணை அழைத்து வருகிறான். வேறு மதமாக இருப்பாளோ என்று எண்ணிக் கோபப்பட்ட ஜன்னத் தன்னுடைய மதம் என்பதால் சமாதானமாகி திருமணம் செய்து வைக்கிறாள். அவர்களின் திருமண வாழ்க்கையின் பயனாக ஒரு மகன் பிறக்கிறான். மகனின் பிறந்தநாளுக்கு வருவதாகக் கூறிச் சென்ற நிஜாம் இறந்துவிடுகிறான். ஒரு மாதத்தில் கையில் வைத்திருந்த பணம் யாவும் தீர்ந்துவிட்டது. துக்ககாலம் முடியும் முன்னர் இட்லிக்கடை எப்படிப் போடமுடியும் என்ற பரக்கத்தின் கேள்விக்கு ஜன்னத் அளிக்கும் பதில் அல்லாவிற்கு எல்லாம் தெரியும். நாம் நம் வாழ்க்கைக்காக இந்த வேலையைத் தொடங்குகிறோம். அதனால் அல்லா நம்மைத் தண்டிக்கமாட்டார் என்று பதில் கூறுகிறார். தெருவும் பரக்கத் கடை இட்லி ருசியில் துக்ககாலம் குறித்து எதுவும் பேசவில்லை என்பதாகக் கதை முடிகிறது. கதையில் முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை அவர்களே தீர்மானிக்கின்றனர். அவர்களுக்குள் பிணக்கு இல்லை. ஆதலால் வெற்றி அவர்கள் கைவசம் வருகிறது. பெண்களால் சுயமாக உழைத்து ஆண் துணையில்லாமல் வாழ இயலும் என்னும் உத்வேகத்தைக் கொடுக்கும் கதை இது. 


ஈமான்

வறிய நிலையில் உள்ள இஸ்லாமியக் குடும்பம் கொரோனோ காலத்தில் வேலைக்கு எப்படி அல்லாடுகிறது என்பதையும் பசியையும், நோன்பையும் ஒரே காலத்தில் எப்படிச் சமாளித்தார்கள் என்று கதை பேசுகிறது. தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்றால் பசி உள்ள இடத்தில் குடும்பத்தில் இணக்கம் என்பது இருக்கிறது. அங்கு பழமைவாதம் என்பது இல்லாமல் இருக்கிறது. கதையில் வரும் பக்கத்துவீட்டு அக்கா, கடைக்கார ராணி அக்கா போன்றோர் மதத்திற்கு அப்பாற்பட்டு உதவும் கதாபாத்திரங்கள். சிங்கிள் சோர்ஸ் என்ற பதத்தின்மூலம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின்மீது குற்றம் வாசித்த அரசியல், அவர்களின் வறுமை குறித்து எந்த இடத்திலாவது பேசியிருக்கிறதா என்றால் இல்லை. அதனை இந்தக்கதை உணர்த்துகிறது. 


 ஆம் என்பதை ஆம் என்பதற்கும் இல்லை என்பதை இல்லை என்று சொல்வதற்கும் கூட இங்கு எத்தனையோ தடைகள். மேல்பூச்சுடன் சொல்லி புதியதொன்றைக் கட்டமைக்க விரும்பி சொல்ல வந்ததன் சாயல் எதுவுமற்றுக் கடந்துபோய்விடும் அபத்தம் நிறைந்த உலகம் இது. ஆனால் நசீபு சிறுகதைத் தொகுப்பு இதையெல்லாம் உடைத்து எறிந்து நம்மை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இக்கதைகள் சொல்லும் மனிதர்கள் மேல் நாம் கொள்ளும் வாஞ்சையையும் வெறுப்பையும் வைத்து எவ்வளவு தூரம் அவர்களுள் நாமும் ஒருவராக மாறிப்போகிறோம் என்பதை ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது உணர முடிகிறது. மொத்தம் ஏழு கதைகள். இஸ்லாம் மக்கள் உபயோகிக்கும் சொற்கள் தான் தலைப்பு. வெம்மை ஒன்றைத் தவிர்த்து. இன்னொன்று, கடைசிக் கதை ஒன்றைத் தவிர்த்து பிற கதைகளில் இறப்பும் அதனைச் சுற்றிய களமும் தான் கதையின் மையமாக இருக்கின்றன. பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முதல் சிறுகதைத் தொகுப்பு என்று தோன்றாதவாறு எழுத்து அமைந்திருப்பது சிறப்பு.


நூல் பற்றி:

நசீபு

மு.அராபத் உமர்

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

பக்கம் எண்: 104

விலை: ரூ 120/=


யாழ் தண்விகா 


❣️

No comments:

Post a Comment