Wednesday, 16 July 2025

அடைமழையில் வெப்பம்



அடைமழையில் வெப்பம்

கவிதைத் தொகுப்பு

மகி தமிழ்


பன்முகம் வெளியீடு


      தமிழ்ச் சமூகம் பல காலங்களில் பல காரணங்களுக்காக பல தடைகளைத் தனக்குத்தானே வகுத்துக்கொண்டு அதைக் கடைபிடிக்க ரொம்பவே தடுமாறித்தான் போகிறது.  


     முத்தம் அப்படியான ஒன்றுதான்

ஒரு தாய் தனது குழந்தைக்கு

ஒரு சகோதரி சகோதரனுக்கு

காதலர்கள் தங்களுக்கு இடையே

கணவன் மனைவிக்கு

போருக்குச் செல்லும்போது வாளுக்கு முத்தமிட்டு 

நெற்றியில் முத்தமிட்டு

என கால காலமாகத் தொடர்கிறது முத்தம்.


      தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் போல நாம் முத்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் 


      ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு காதலன் காதலிக்கு முத்தமிடும்போது ஒரு பூ இன்னொரு பூவை உரசுவது போல, இரு பறவைகளின் அலகுகள் உரசிக்கொள்வதைப் போல காண்பித்து முத்தத்தின் மகிமையை அறியாமல் செய்துவிட்டனர். அந்த மகிமைக்கு எந்தப் பங்கமும் வராத அளவுக்கு மகிதமிழ் முத்தத்தைக் கொண்டாடி இருக்கிறார் தன்னுடைய கவிதைகளில்...


       முத்தம் என்பது தொடக்கம். முத்தம் என்பது வாழ்தல். முத்தம் என்பது நிறைவு. அது ஒரு மகோன்னத நிலை. அதற்கு வஞ்சகம் செய்யக்கூடாது. அதைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தால் அதை தப்பித் தவறியும் கவிஞரிடம் சொல்லிவிட்டால் சண்டைக்கு வந்துவிடுவார்போல.

 

பாரதி கூறுகிறார் 

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானம் உண்டாம் சிற்ப முதல் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்

காதலினால் சாகாமலிருத்தல்கூடும்

கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்


       சாகாமலிருக்கக் காதலிக்க வேண்டும் என்கிறார் பாரதி.

அதைத்தான் கவிஞரும் சொல்கிறார்

சகலமும் நான் செய்கிறேன்

காதலை மட்டும் நீ செய் என்று. 


        அணு அணுவாகச் சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் என்பது சரியான வழி தான் என்பார் கவிஞர் அறிவுமதி. ஆனால் கவிஞர் அணு அணுவாக வாழவும் காதல் என்பது சரியான முடிவு என்பதை தன்னுடைய வரிகளால் நிரூபித்திருக்கிறார்.


"நான் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறேன்

நீ எதுவும் சொல்லாமல் 

என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்


நீ பேசும் அத்தனை வார்த்தைகளும்

என் வார்த்தைதான் அன்பே"


      வாழ வேண்டிய வாழ்க்கை இது. வீட்டுக்குள் அமர்ந்து என்னதான் காரண காரியம் இல்லாமல் பேசிப் பொழுதைக் கழித்தாலும் எப்படியாவது சண்டை வந்துவிடுகிறது. காதலைப் பேசிப் பொழுதைக் கழித்தால் மனமும் நிம்மதியாகும். வாழ்வும் மகிழ்வாகும்.


"இரவு பற்றியும் சொல்கிறேன்

கொஞ்சம் இதழ் பற்றியும் 

இரவு கொஞ்சம் இறுக்கமானது..."

வார்த்தைகளில் விளையாடி இருக்கிறார் கவிஞர். சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் லதா பாடும் பாடல். கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் என எம்ஜிஆர் பாட லதா கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் என அந்த வரிகள் வரும். டி ராஜேந்தர் ஒரு பாடலில் முதலில் கதாநாயகன் லைட்ட அணைக்கட்டுமா லைட்டா அணைக்கட்டுமா எனக் கேட்க லைட்ட அணைக்காதீங்க லைட்டா அணைக்காதீங்க என கதாநாயகி பாடுவது போல பாடலை எழுதியிருப்பார். இரவைப் பற்றிக்கொண்டும் இதழைப் பற்றிக்கொண்டும் இருந்தால் தனிமை இறுக்கமாகாதா... 


      ஒரு ஆணின் மூர்க்கம் காதலிலும் காமத்திலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் இருப்பாள் என்ற கற்பிதத்தை உடைக்கும் கவிதை.

இரவுகளில் 

கருணை விரும்பாத

ஆகச்சிறந்த கடவுள் அவள்.

மூர்க்கம் எதிர்பார்க்கும் சாத்தான் அல்ல. கடவுள் என்கிறார். காதல் உள்ள இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள், அவளாகவும் இருப்பாள் என்ற பொருளில். 


"உந்தன் வார்த்தைகளை

மொழிகொண்டு சொல்ல முடியவில்லையென்றால்

முத்தத்தில் சொல்லலாம்

அந்த பாஷை 

எனக்கு நன்றாகவே தெரியும்"


"நல்வார்த்தையில் காதல் செய்யச் சொல்கிறாய்

முத்தங்களைத் தவிர வேறென்ன செய்ய"


"இன்னும் புரியவில்லையென்றால் உறங்கிவிடு

நாளை முத்தங்களுடன் தொடங்கிக்கொள்ளலாம்"

சூரி போட்டிக்குப் பரோட்டா சாப்பிடும் நகைச்சுவை நினைவுக்கு வந்தது. விளையாடுவதை எல்லாம் விளையாடுவராம். புரியவில்லை என்றால் இங்கு விட்டுவிடுவதில்லை

வா நாளை

முத்தங்களுடன் தொடங்கிக்கொள்ளலாம்... அருமையான யோசனை...


வாத்ஸாயனர் தன்னுடைய காமசூத்ராவில் முத்தமிடுதல் பற்றி சும்பண விகல்பம் பகுதியில் ஆறாவது சூத்திரத்தில் குறிப்பிடுகிறார். நெற்றி, நெற்றியின் சுருள்முடி, கண்கள், கன்னங்கள் இப்படிமுத்தமிட ஏற்ற இடங்களாக எட்டு இடங்களைக் கூறுகிறார். ஏழாவது சூத்திரத்தில் நான்கு இடங்களைக் குறிப்பிடுகிறார்.


சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்று சொல்லியே பல கலைகளை அறியாமல் போய்விட்டது இந்த சமூகம். சொல்லித் தெரிந்துகொள்வதுதான் மன்மதக்கலை என்பதை உணர வைக்க ஒரு உதாரணமாக மகி தமிழின் அடைமழையில் வெப்பம் என்ற இந்த கவிதை நூலைக் கூறலாம்.


தமிழறிஞர் வசுப மாணிக்கம் எழுதிய வள்ளுவம் என்ற நூலில் ஆறாம் பொருள் ஆகிய இரண்டு பால்களைக் காட்டிலும் இன்பத்துப்பால்தான் அழுத்தமான நடையாட்சியைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால் அவர் இதற்காக இந்நூலில் பத்துப் பக்கங்கள் கூட ஒதுக்கவில்லை

. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராஜாஜி காமத்துப்பாலைத் தொடவே இல்லை

வீரமாமுனிவர் உரை எழுத காமத்துப்பாலைத் தொடவே இல்லை

குன்றக்குடி அடிகளாரும் அப்படியே.

கலைஞர் காமத்துப்பாலுக்கான உரையில் விளையாடி இருப்பார்.


இங்கு மகிதமிழ் முத்தத்துக்கான இடங்களை, முக்திக்கான நிலைகளை கவிதையாக்கிக் காண்பித்திருக்கிறார்


"கடக்கவியலா நீள்துயரம் நீ"

அவ்வளவுதான் கவிதை. இந்தக் கவிதையை வாசிக்கும்போது

கவிஞர் கருவாச்சி கனகம் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.

"அதிர்வேதுமற்று

உன் பெயரைக் கடக்க முடிகிற நாளில் 

கைவிடக்கூடும் இந்த வாழ்வையும்".

காதல் என்பது வெறும் உடல் சார்ந்ததா... நிச்சயமாக இல்லை என்னும் வரி இது. கடக்கவியலா நீள் துயரம் நீ.

காதலுக்காக எதையும் இழக்கத் துணியும் மனம். 


"நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான் ஒவ்வொரு முறையும் கடவுளிடம் வேண்டுகிறேன். ஏனென்றால்

என் பிரார்த்தனைகள் ஒருபோதும் நிறைவேறுவதில்லை" என்பது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை. கடவுளும் கைவிட்ட நிலையில் கடவுளிடம் என்ன வேண்டுவது... சேர்த்துவை என்றால் சேர்த்துவைக்க மறுக்கிறாய்... சேரக்கூடாது என்று வேண்டினாலாவது கடவுள் சேர்த்து வைப்பார் என்ற எண்ணம். அதுதான் காதல். 


அதைத்தான் கவிஞர் இப்படி வெளிப்படுத்துகிறார்

"எதனைக்கொண்டு பிரித்தெடுக்க

உந்தன் நினைவுகளையும்

அதில் இரண்டறக் கலந்த எந்தன் காதலையும்..."


மேலும்


"கொலை பசியில் இருக்கிறேன்’’

முத்தங்களைச் சமைத்துக்கொடு"


"இரவல் தந்ததாகவே நினைத்துக்கொள்கிறேன்

இம்முத்தங்களை"


"எந்தன் தேகம் கிழித்த அவள் விரல் நகத்தில் எத்தனை காயங்களோ"


இதுபோல் இன்னும் பல கவிதைகள். இது தீவிரமா மிதவாதமா எனத் தெரியாத அளவுக்கு ரசனையாக தன்னை வெளிக்கொணர்ந்துள்ளார் கவிஞர். 


விடை தந்து விலகியபின்

கைகளையசைத்து முத்தமிடுகிறாய்

உள்ளம் குளிர்கிறது

உதடுகள் மட்டும் நெருப்பைச் சுமந்தபடி... என்று வலி சுமந்திருக்கும் கவிதையும் இருக்கிறது.


நீ காதலிக்காவிட்டால் என்ன

ஒரு பக்கம் பற்றினாலும் அது நெருப்பு தான் என்பார்

அப்துல் ரகுமான். இங்கு இருபக்கக் காதல். வலி சுடாதா என்ன...


அடைமழையில் வெப்பம்

முத்தங்களை நிறுத்தாதே...

தொகுப்பின் தலைப்பில் உள்ள கவிதை...

காதல் காலத்து வெப்பம்

இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது

பேரன்பாக காமமாக

கவிதைகளை நிறுத்தாதே...

மகிதமிழ்... கவிதைகளை நிறுத்தாதே...


வாழ்த்துகள்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment