நோ சொல்லுங்க
(மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்)
சக.முத்துக்கண்ணன்
ச.முத்துக்குமாரி
மேஜிக் லாம்ப் வெளியீடு ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
72 பக்கங்கள்
199 ரூபாய்
நோ சொல்வது ஒரு திறன்
நோ சொல்வது ஒரு கலை
நோ சொல்வது ன்னம்பிக்கை
நோ என்பது சிறந்த பதில்
நோ சொல்பவர் கெட்டவர் இல்லை
நோ சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்
இதுதான் இந்த நூலின் சாராம்சம். இன்று குழந்தைகளிடம் மறுத்து பேசும் திறன் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆசிரியர் சொன்னால் அப்படியே கேட்பது. பெற்றோர்கள் சொன்னால் அப்படியே கேட்பது. அவர்களை ஒரு பொம்மையைப் போல வளர்த்துக் கொண்டு வரும் சூழல் உள்ளது. அல்லது விட்டேத்தியாக வளரும் சூழல் உள்ளது.
அம்மா எடுத்து வந்த சுடிதார் வேண்டாம் என்றால் கூட திட்டி விடுவாரோ என்ற எண்ணத்தில் மகள் இருப்பார். ஆனால் அந்த நோ சொல்ல வேண்டியதை மாற்று மொழியில் கூறலாம். அம்மா, இந்த கலர் சுடிதார் என்னிடம் இருக்கிறது / அடுத்த முறை என்னையும் துணிக்கடைக்கு கூட்டிட்டு போங்க / என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் அம்மா என்பது போன்று எல்லாம் சொன்னால் அம்மா தடுக்க முடியாது. அதை அணுகும் முறை வேறுபடும் என்று ஆலோசனை வழங்குகின்றனர் நூல் ஆசிரியர்கள்.
நோ சொல்லி பழகுவது எப்படி என்பதற்கு கதைகள் மூலம் விளக்குகிறார்கள்.
ஒருவன் ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து சாட் செய்கிறான். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சாட் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பின் திசை மாறிப் போகிறது. இதனை அந்தப் பெண் விரும்பவில்லை. பின் அவள் சாட் செய்வதை தொடர்கிறாள். இது சரியா தவறா? புதியதாக நம் வீட்டுக்கு அருகில் ஒரு குடி வருகிறார். கணவன் மனைவி இருக்கிறார்கள். ஒரு நாள் மனைவி ஊருக்கு செல்ல அவர் மட்டும் இருக்கிறார். அங்கு பக்கத்து வீட்டுப் பெண் செல்வது சரியா தவறா? இப்படிப்பட்ட விவாதங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. புதியவர் வந்தால் அந்த வீட்டிற்கு நாம் பெண் பிள்ளைகளை கவனத்துடன் அனுப்ப வேண்டும். புதியவர் வந்தால் என்று இல்லை பழையவர்களாக இருந்தாலும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து பள்ளிகளில் பாடம் எடுக்கும் சூழல் உள்ளது. அந்த பாடம் குறித்த தகவலும் நூலில் உண்டு.
வீட்டில் அம்மாவோ அப்பாவோ மொபைல் போன் பயன்படுத்தும் பொழுது கண்டித்து வாங்கி விடுகிறார். திரும்பவும் மல்லுக்கட்டி அந்த மொபைல் போனை வாங்கி விடுவோம். அம்மா சொல்லும் நோ நியாயமானதா இல்லையா என்பதை விவாதிக்கச் சொல்லி ஒரு பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்று செல்போன் வாங்கித் தரவில்லை என்றால் மாணவர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள். பைக் வாங்கி தரவில்லை என்றால் தவறான முடிவு எடுக்கிறார்கள். எது சரி எது தவறு இது இந்த வயதிற்கு தேவையா என்பதை புரிந்து கொள்ளும் மனப்பான்மை மாணவர்களுக்கு வருவதில்லை. இந்த வயதிற்கு ஏற்றதுதானா என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வீட்டின் பொருளாதாரம் இதற்கெல்லாம் கட்டுபடியாகுமா? என்று மாணவர்கள் யோசிப்பதில்லை. நோ சொல்லிவிட்டால் தலைகீழாக குதிக்கிறார்கள். இதையெல்லாம் விவாதம் தொடர்பான பக்கங்கள் ஒதுக்கி மாணவர்களை பேச வைக்கிறார்கள்.
நோ சொன்னதால் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்று விளக்குகிறார்கள் நூல் ஆசிரியர்கள். சித்தார்த்தன் நோ சொன்னதால் ஒரு போர் நிறுத்தப்பட்டது. ரோசா பார்க்ஸ் என்பவர் பேருந்தில் எழுந்து நிற்க மறுத்துவிட்டார். வெள்ளைக்காரர் வந்து நின்றால் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை. அதை மீற வேண்டும். தனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் நடத்துனரிடம் பயணம் செய்வதற்கு காசு கொடுத்து இருக்கிறேன். நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு மறுப்பின் வெளிப்பாடு தான் நோ சொல்லுதல். 381 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் ரோசா பார்க்ஸ் சொன்ன ஒரு நோ"வால் நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கும் சட்டத்தையே மாற்ற வைத்தது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய பொழுது வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வரமாட்டோம் என வழக்கறிஞர்கள் நோ சொன்னார்கள். ஆங்கிலேயர்களின் துணியை உடுத்த மாட்டோம் என மக்கள் நோ சொன்னார்கள். கதர் ஆடையை மட்டுமே உடுத்த ஆரம்பித்தார்கள். ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுக்க நோ சொன்னார்கள். ஒத்துழையாமை இயக்கத்திற்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் நோ சொல்லியதுதான். "பொம்பள புள்ளன்னா கல்யாணம் பண்ணனும், சமைக்கணும், குழந்தை பெத்துக்கணும், எதுக்கு படிப்பு?" என சுற்றி இருந்த எல்லாரும் சொன்ன போது சாவித்திரிபாய் பூலே அதை மறுத்து நோ சொன்னார். அவர் இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். முதன்முதலாக தொடங்கிய அந்த பள்ளி 3 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்தது. இதற்கு காரணம் நோ சொன்னது தான்.
ஆனால் நாம் எத்தனை விஷயங்களில் நோ சொல்லி இருப்போம். அதுவும் துணிச்சலாக சொல்லி இருப்போம் என்பது கேள்விக்குறிதான். ஒரு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது குறித்த மேற்பார்வை செய்ய அதிகாரிகள் வருவார்கள். அந்த திட்டம் சரியில்லை என்ற மனப்பான்மையுடன் நாம் இருப்போம். ஆனால் அந்த பதிலை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இது தொடர்பாக பாசிட்டிவான பதிலை எதிர்பார்ப்பார்கள். ஆதலால் நெகட்டிவ் ஆக எதுவும் கூறிவிட வேண்டாம் என்று நாம் அறிவுறுத்தப்படுவோம். அதற்காக ஆமாம் சாமி போடும் கூட்டம் பல இடங்களில் உண்டு. ஆக இந்த நூல் மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல் மட்டுமல்ல. கொஞ்சம் நமக்கும் சேர்த்துத்தான்.
நோ சொல்லுங்க என்று மனம் சொல்லுகிறது காரணம் 199 ரூபாய். வெறும் 72 பக்கங்கள். ஆனாலும் வாங்கியாச்சு. படிச்சாச்சு.
பள்ளியில் உயர் கல்வி படிக்கக்கூடிய குழந்தைகள் அனைவரும் இந்த நூலை படிக்கலாம். சிறுவர்களும் இந்த நூலை படிக்கலாம். விழிப்புணர்வைத் தரக்கூடிய நூல்.
வாசிக்க வேண்டிய நூல்.
பெ. விஜயராஜ் காந்தி
No comments:
Post a Comment