சூப்பர் ஸ்டார் பாரதிதாசன்
பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்பதில் புரட்சிக்கவிஞர் என்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தேன். அவரோட முழுப்பெயர் சார் அது என்றனர். எது முழுப் பேரா? அடேய் சூப்பர் ஸ்டார் என்று சொல்லுவாங்கல்ல. அது யாரு என்று கேட்டேன். சார் ரஜினிகாந்த் பெயர் சார் அது என்று கூறினர். அடுத்து தளபதி என்று யாரடா சொல்லுவீங்க என்று கேட்டவுடன் உடனே விஜய் என்று பதில் வந்தது. அடுத்து அவர்கள் சார், தல நம்ம அஜித் சார் என்றனர். என்னடா பாடத்துல வர்றவங்க பேரு தெரிய மாட்டேங்குது. நடிகர்கள் என்றவுடன் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். சார் இவங்க எல்லாம் பெரிய ஆளுங்க சார் என்று கூற திகைத்துப் போய், இது வில்லங்கமாவுல்ல இருக்கு. நடிகர்கள பத்தி சொன்னா இவ்வளவு தீவிரமா இருக்காங்க. பாடத்தில் உள்ள தலைவர்களைப் பற்றிக் கேட்டால் இப்படி சொல்றாங்களே.... சரி. நேருவுக்கு மனிதருள் மாணிக்கம் என்ற பட்டம் இருக்கு. காமராஜருக்கு கர்மவீரர் என்ற பட்டம் இருக்கு. பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டம் இருக்கு. பாரதிதாசனுக்கு புரட்சி கவிஞர் என்ற பட்டம் உண்டு. இதுபோல தலைவர்களுக்கு என்று சில பட்டங்கள் இருக்கு. நாம் பட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். சார் இதை நீங்க முன்னாடியே சொல்லக் கூடாதா, போங்க சார் என்றனர் மாணவர்கள்.
அதுக்கடுத்து ஒரு இடி. பாரதிதாசன் அப்படின்னா யாருன்னு கேட்டேன். கேட்டவுடன், அவரு தான் பாரதியார்ன்னு சொன்னாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. டேய் பாரதிதாசன் அப்படின்றவர் வேற. பாரதியார் அப்படின்றவர் வேற. பாரதியார் மேல அளவுகடந்த பாசம் வச்சிருந்ததனால் கனகசுப்புரத்தினம் அப்படின்ற இவரு பேர பாரதிதாசன் என்று வச்சிக்கிட்டாரு. பாரதியார் மீசையை முறுக்கி வைத்திருப்பார் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார். ஆனால் பாரதிதாசன் அப்படி அல்ல. இப்பொழுது பாரதிதாசனை பாருங்கள் என்று படத்தைக் காட்டினேன்.
மாணவர்கள் மத்தியில், ஒரு சூப்பர் ஸ்டாராக பாரதிதாசன் என்ற நிலை வரவேண்டும்.
பெ.விஜயராஜ் காந்தி
No comments:
Post a Comment