காதலின் பின் கதவு
Palani Bharathi
கவிதைத் தொகுப்பு...
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்தேன். தலைப்பே ஒரு வசீகரத்திற்குள் அழைத்துச் சென்றது முதல் காரணம். கவிக்கோ அப்துல் ரகுமான் முன் கதவு வழியாக அணிந்துரை அளித்திருக்கிறார்.
காதல் கவிதைகள் தொகுப்பு என்றெண்ணி ஆர்வம் மேலிடப்புகுந்தேன் தொகுப்பிற்குள். அதற்கேற்ப உற்சாகம் தூண்ட முதல் கவிதையும்...
"தண்டவாளத்தில்
தலை சாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப்பூ
என் காதல்
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?"
எப்போதோ காதல் படிக்கட்டுகள் என்ற நூலில் படித்த கவிதை. இதயத்தை விட்டு இன்றளவும் மறையாதிருந்த கவிதை . ஒரு மனிதனின் காதல் ஏற்கப்படுமா ஏற்கப்படாதா என்பதை உணர்தல் நிமித்தமாக எழுதப்பட்ட கவிதை. சிறப்பு. தொகுப்பின் உள் செல்கிறேன்.
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் மிளிர்கிறது . மலையேற்றம் கவிதை வர்ணனை அழகு.
"உடைந்த
வளையல் துண்டுகளையாவது
கொடுத்துவிட்டுப்
போ
கலைடாஸ்கோப்பில்
உன்னைப்
பார்த்துக்கொண்டிருப்பேன்"
முதல் கவிதை போலவே இதுவும் காதலில் மூழ்கிக் கிடக்கும் மனதின் கவிதை...
மழைக் குரல் கவிதையில் காதல் மழை. அவள் இல்லாத நேரத்தில் பொழியும் மழை. அது உண்டுபண்ணும் வலியை ஒப்பிட்ட விதம் அத்தனை அழகு அதே நேரத்தில் வலியும் ...
இன்று
நீ இல்லாமல்
விட்டு விட்டு
விடாமல் பொழியும்
இந்த மழையில்
ஒரு மண் குடிசைவாசியாக
மறுகிக் கொண்டிருக்கிறது
காதல்
அதைக் கடக்கும் அடுத்த பத்தியில்
அரசியல் நுழைக்கிறார் கவிஞர் ... ஆனால் அந்த ரசனை வேறொரு உச்சத்தில் ..
"வெள்ளப் பிரதேசத்தை
ஹெலிகாப்டரில் பார்வையிடும்
பிரதமர் மாதிரி
கண்ணாடி ஜன்னலுக்குப்
பின்னாலிருந்தாவது
கை நீட்டித் தொடு
இந்த மழையை"
என்கிறார் கவிஞர். ஒரு காட்சியை கண்முன் வர வைத்து ஏங்குதலை நிகழ்த்தும் அற்புதம் இது.
உறைந்த நதி என்னும் கவிதையில்
"எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை" என்ற வரிகள் உரைக்கும் தலைப்பிற்கான நியாயத்தை .
நீ இல்லாத போது தலைப்பில் 3 கவிதைகள்.
ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு ரசனைக்கான கூறுகள்...
"நீ வராத வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறியது
எத்தனை உறுத்தலானது"
ஒருமுறை காதலிக்காக பூ வாங்கிச் செல்கிறேன். அவள் வரவியலா சூழல் திடீரென. சந்திக்கும் நட்பு அத்தனையிடமும் மெளனம் மட்டுமே பேச்சாக எனக்கு. கவிதையில் உள்ளது போலென்றால் காவலர் போல் எத்தனை மனங்களுக்கு நான் அந்நியமாக இருந்திருப்பேன் என்ற உறுத்தல் தோன்றுகிறது இப்போது...
இப்படிக் கடக்கும் காதல் கவிதைகள் சட்டென வேறு பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.
உலகம் பயணிக்கும் பாதை, பெண் குறித்த கவிதைகள், நடிகைக்கு, நகைக்கு, தாத்தாவுக்கு ஒரு கவிதை என நீள்கிறது.
செடி மகள் என்ற கவிதையில்
"செடியை வளர்ப்பது
சுலபமாக இருக்கிறது
பூக்களைப்
பத்திரப்படுத்துவதுதான்
எப்படியென்று தெரியவில்லை" ...
வன்புணர்வு குறித்த வலி உயிரெங்கும் பரவுகிறது வரிகள் வாயிலாக ...
இரத்தத்தின் நிறம் பச்சை என்ற கவிதையில்
தாயாக, மனைவியாக, குழந்தையாக என உயிர் உறவுகளை ஒப்பிட்டு மரத்தின் உச்ச குணத்தினை அழகுறக் கூறியுள்ளார்.
ரயிலில் வந்த 3 வது கவிதை.
"எங்கு இறங்குவாள்
என்று தெரியாது
எதிரில் உட்கார்ந்திருந்தாள்
அவளிடம் கொஞ்சம்
தண்ணீர் கேட்க நினைத்து
கேட்காமலேயே
கண்ணயர்ந்துவிட்டேன்
விழித்தபோது
அவள் இல்லை
இருந்தது
ஒரு தண்ணீர் பாட்டில்"
எத்தனை பரவசம் அளித்திருக்கும் அந்த கணம். தாகம் தோற்றுவிக்கிறது ரயிலில் கிடக்கும் அந்தத் தண்ணீர் பாட்டில் ...
"நான் யோசித்துக் கொண்டிருப்பேன்
தடயங்களற்றுப்
பறக்கும் சுகத்தை" என்கிறார் கவிஞர் ...
தொகுப்பானது உலகில் தடம் பதித்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் சம காலத்திற்கும் பொருந்தும் பொருண்மையால் இது கவிஞர் பழநி பாரதி அவர்களின் தடயம் என இன்னும் பறைசாற்றிக் கொண்டிருப்பதே போதும் கவிதைக்கான வெற்றியெனக் கூற...
வாழ்த்துகள் கவியே...
யாழ் தண்விகா

















