Monday 17 February 2020

பறவையின் நிழல் _ கவிஞர் பிருந்தா சாரதி

#பறவையின்_நிழல்
#கவிதைத்தொகுப்பு
#கவிஞர் Brindha Sarathy

தன்னிலை மறந்து பேரின்பத்தை உணர்ந்து கொண்டிருக்கும் உன்னத நிலையே காதல். என்னிலை வந்தாலும் அவளேதான் வேண்டும் அவள் மடியில் உயிர்மடிய வேண்டுமென உச்சநிலைக்குச் சென்று ஒப்படைப்பது காதல்.
வெயிலின் வெம்மை குளிரும்.. குளிரைக் கூட மழையில் நனைவதைப்போல சிலாகிக்கும் மனதை உண்டு பண்ணக் கூடியது காதல். உயிரின் கடைசி அணுவைக் கூட அசைய வைத்து ஆதியின் அந்தத்தைத் தேட வைக்கும். ஏகாந்தத்தைச் சுமந்து கொண்டு பேரண்டப் பெருவெளியில் மிதக்கும் உணர்வில் வாழ்பவர்களே காதலர்கள். அவர்களுக்கு கவிதை என்பது உறைக் கிணறு போன்றது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போன்றது. வானத்தில் எப்போதோ தோன்றும் வானவில்லும் காதலிக்குப் போட்டியாக வந்துவிடும். இப்படி பிரபஞ்சத்தின் முதல் மொழியான காதலைப் பற்றிய நூறு கவிதைகளை கவிஞரும், தித்திக்குதே திரைப்படத்தின் இயக்குனரும், ஆனந்தம், பையா, வேட்டை, அஞ்சான் போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான தோழர் Brindha Sarathy எழுதியிருப்பது அவரின் காதல் உணர்வைப் படம்பிடிப்பதாக இருக்கிறது

"அதுவரை
போட்டியே இல்லாமல்
ஜெயித்துக் கொண்டிருந்த வானவில்
நீ பிறந்த பிறகு
பொறாமைப்படத் தொடங்கியது"
என்ற கவிதையில் இயற்கையை விட என்னவள் பேரழகியே என்கிறார் கவிஞர்.

"என் உள்ளங்கை நெல்மணிகளை
நீ கொத்திக் கொத்தித் தின்றபோது
உன் கூரிய அலகுகள் தந்த வலி சுகமாயிருந்தது
இன்று கைநிறைய தானியங்கள்
நீ வராத வெறுமைதான்
வலிக்கிறது"
இந்தக் கவிதையில் கூரிய அலகுகள் கொடுத்த வலியின் சுகத்தையும், பிரிவின் வலியில் துடிக்கும் அவலத்தையும் ஒரே நேர்கோட்டில் காணமுடிகிறது. பறவையையும் காதலையும் ஒருங்கிணைத்து வரிகளைப் படைத்திருக்கிறார்.

பிற உயிரினங்களின் மீது பரிவைக் காட்டும் காதலி அதனோடு கொஞ்சி விளையாடும் குழந்தைத் தனத்தை காதலன் தன்னை அங்கு முன்னிறுத்தி அந்த உயிரினமாக மாறிவிடும் நேரத்தை
"உன் வீட்டுத் தொட்டி மீன்களிடம்
நீ காட்டும் கரிசனத்தைப் பார்த்தபோது
அந்தக் குட்டி மீன்களில்
ஒன்றாகி விட்டேன் நான்" என்கிறார்.

இன்னொரு இடத்தில் உயிரற்ற பொருளின்மீது அவளிட்ட முத்தத்தைச் சொல்கிறார்
"நிலைவாசல் கதவுக்கு
நீ தந்த முத்தம்
இன்னமும்
அங்கேயேதான் இருக்கிறது"

இன்னுமொரு கவிதையில் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. அலைந்து அவதியுறும் அலாதியான இன்பமும் துன்பமும் சுகந்த மனநிலையுமே காதலின் பித்து நிலை. தன்னிலை மறந்து தானாக அவளுள் வாழ்வது அப்படி வாழ்வதற்கான சாத்தியங்களை காதல் உருவாக்கும் அல்லது காதலர்கள் கொள்வார்கள் என்கிறார்.
"வார்த்தைகளை
இறைத்து இறைத்துத்
தோற்றுக் கொண்டிருக்கிறேன் நான்
மௌனத்தை
நீட்டித்து நீட்டித்து
ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் நீ"
என்ற கவிதையின் மூலம் அதனை நிறுவுகிறார்.

கொடூரத்தின் சொற்களை விட பன்மடங்கு வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் மௌனம். காலமும் நேரமும் காதலை காவு வாங்கும். வெறுமையை உண்டு பண்ணும். மௌனமும் வெறுமையும் காதலை ஓட ஓட விரட்டிக் கொல்லும். காதலர்கள் இறப்பார்கள் தவிர காதலும் அதன் நினைவும் அழியாமல் தொடரும். சுவடைப் போல படிந்திருக்கும்.

இப்படிப் பறவையின் நிழல் தொகுப்பைப் படிக்கும்போது
காதல் உலகில் பறந்து கொண்டே இருக்கலாம். நிழல் தேடி ஒதுங்கிக் கொள்வது போலவே காதலில் மூழ்கி அவ்வப்போது இளைப்பாற மட்டுமல்லாது நினைவில் ஊறித் திளைக்க கவிதை பேரின்ப உலகம். கவிஞர் பிருந்தா சாரதியின் கவிதைத் தொகுப்பும் அப்படியே. காதலின் பேரின்பம்,உச்சநிலை,பிரிவு,கோவம், போன்றவற்றை பேசும் இத்தொகுப்பின் கவிதைகள் எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த காதல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. கடந்த காதல்களை மீட்டுணரும் அதே சமயம் அதன்மேல் சுவாரசியங்களை அள்ளித் தெளிப்பதாகவும் உள்ளது.

வாழ்த்துகள் தோழர் Brindha Sarathy.