Monday 15 April 2024

ஆடு ஜீவிதம் - நாவல்

 


ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில் விலாசினி
எதிர் வெளியீடு
216 பக்கங்கள்
300 ரூபாய்

வெளிநாட்டிற்கு /கல்ஃப்/ வேலைக்குச் செல்லும் நஜீப், ஹக்கீம் இருவரின் துயரங்களும் தான் நாவல்.   வாழ்வின் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் வெளிநாடு செல்ல பணம் திரட்டி கிளம்புகிறான் நஜீப். உடன் ஹக்கீம். வெளிநாட்டில் இறங்கிய பின் அவர்களை அழைத்துச் செல்ல யாருமில்லை. நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின்னர் ஒருவன் வந்து பாடாவதியான ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறான். கனவுகள் உடையும் வண்ணம் செல்லும் பாதை. பாலைவனத்தில் முதலில் ஓரிடத்தில் இறக்கி விடப்படுகிறான் ஹக்கீம். அடுத்து நஜீப். அவ்விடங்களில் ஆடு மேய்ப்பது இவர்கள் வேலை. அந்த வேலை எப்படி அவர்களின் வாழ்வை பாடாய்ப் படுத்தியது என்பதை வாசிக்கும்போது நேரடியாக அனுபவிப்பது போல உணர முடிகிறது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் தப்பித்தார்களா? அதற்கான பாதை எளிதில் அமைந்ததா என்பதை நாவல் பேசுகிறது. உண்மையில் இப்படிப் பயணம் சென்ற ஒருவரின் கதை கேட்டு பென்யாமின், ஒரு சுயசரிதையைப் போல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நாவல் என்பது ஒரு அயற்ச்சியையும் உண்டுபண்ணவில்லை. சிறப்பாகவே இருந்தது. வெளிநாட்டு வேலை என்பது இப்படியும் இருக்கும் என்ற அச்சத்தைத் தருகிற வகையில் நாவல். நஜீப் அனுபவித்த கொடுமைகள், வெளிநாட்டு வேலை என்றாலே யோசிக்க வைக்கும். இனி இதுதான் வாழ்வு. இதனை இப்படித்தான் கடந்தாக வேண்டும் என்ற சூழலில் அந்த வாழ்க்கைக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு சகித்தும் கடந்தும் வாழும் நஜீப் எல்லாவற்றிற்கும் அல்லாவை துணைக்கு வைத்துக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் நாவல் இஸ்லாமியப் பிரச்சாரம் போலவும் எனக்குத் தோன்றிவிட்டது. ஹக்கீம் உடன் வந்த இப்ராஹிம் கதிரி பாலைவனம் கடக்க உதவிய பின்னர் மறைந்து விடுகிறான். அவனை அல்லா என்கிறான் நஜீப். அடுத்து ஒரு வாகனப் பயணம். வாகனத்தை நிறுத்தியவரை அல்லா உருவில் காண்கிறான் நஜீப். தான் படும் அவஸ்தைகள் யாவற்றிற்கும் அல்லா காரணம் என்கிறான். கிடைக்கும் ஒருசில நல்லவற்றிற்கும் அல்லா காரணம் என நம்புகிறான். இப்ராஹிம் கதிரி அல்லா என்றால் ஹக்கீம் பாவம் எனத் தோன்றவில்லையா? எனக் கேள்வி எழாமல் இல்லை. ஆட்டுக் கொட்டம், பாலைவனம், முரட்டு மனிதன், அர்பாப், காவல் நிலையம் எல்லாம் ஒரு புதிய காட்சியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. உறவுகளைத் துறந்த ஒரு வாழ்வை வாழ பணிக்கப்பட்ட மனிதனின் கதை இது. வாசிக்கலாம். 

யாழ் தண்விகா 

❣️


Sunday 31 March 2024

எழுத்துலகம் – அகமும் புறமும் அ.ம.அங்கவை யாழிசை


எழுத்துலகம் – அகமும் புறமும்

அ.ம.அங்கவை யாழிசை

யாப்பு வெளியீடு

72 பக்கங்கள்

70 ரூபாய்


 ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவை யாழிசை. கொடியசைத்துத் தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஏர் மகாராசன் . தோழர், ஏற்கனவே எழுதி இணைய இதழ்களில் வெளிவந்துள்ள வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி உள்ளார். அச்சு உலகில் முதல் பயணம். பேரன்பு வாழ்த்துகள். 


 6 நூல் குறித்த 6 கட்டுரைகள். வறீதையா, தமிழ்மகன், தீபச்செல்வன், ஜெயமோகன், சோ.தர்மன் மற்றும் முத்துநாகு ஆகியோரின் நூல்கள் குறித்தவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறு நதி நூல் மனப்பிறழ்வு அடைந்த மகளுக்கும் தந்தைக்குமிடையே உள்ள அரவணைப்பு குறித்துப் பேசுகிறது. மனப்பிறழ்வு அடைந்த பெண்ணாக தன்னை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நூல் தனக்குள் உண்டாக்கிய பாதிப்புகள் குறித்து வாசிப்பு அனுபவத்தை முன்வைத்துள்ளார். நிறைவைத் தரும் எழுத்து. இன்னும் கொஞ்சம் நூல் குறித்து எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கிறது. “மனம் மாயம் செய்யும் கருவி. நம்மால் செய்ய முடிந்தவையும் செய்ய முடியாதவையும் நம் மனம் நிர்ணயிப்பது தான். மனதை ஆளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளவியலாளர் போல எழுத்தைப் பேச வைத்திருக்கிறார் நூலாசிரியர். 


 தமிழ்மகன் எழுதிய படைவீடு நூல் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடைசி தமிழ்ப் பேரரசன் சம்புவராயன், மகன் ஏகாம்பரநாதன், அவரது மகன் மல்லிநாதர் ராசா நாராயணர் ஆட்சிக் காலம் பற்றிப் பேசுகிறது. விஜயநகரப் பேரரசு தமிழ் மண்ணில் காலூன்ற காஞ்சி பிராமணர்களின் போதிப்பான சாதிக்கொரு புராணம் எந்தளவுக்கு எடுபட்டு தமிழ்ப் பேரரசைத் தூக்கி எறிய உதவியது என்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போதுதான் பிறந்த சிக்கல் என்று எண்ணிக்கொண்டிருந்ததாக தோழர் குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் இங்கு எப்போது வந்தது என்பதைக் கணக்கிட்டாலே அதற்கு விடை கிடைத்துவிடும். நூலாசிரியரின் தந்தையும் தோழருமான ஏர் மகாராசன் மாணவர்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை நூலில் சொன்னவாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதி என்ற சொல்லை தாழ்ந்த சாதி, உயர்த்த சாதி என்று சொல்ல வைத்ததன் பின்னணியில் இருந்தும் சாதியின் ஆதியைத் தேடிக் கண்டடையலாம்.


 தீபச்செல்வன் எழுதிய நடுகல் குறித்த வாசிப்பனுபவம் ஈழத்தை, அதன் வலிகளை, கண்ணீர்க் கதையை, வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, பல்வேறு நாடுகளின் துரோகங்களை கண்முன் கொண்டு வந்துவிட்டது. ஒரு துயர் கனவு போல நினைவைவிட்டு அகற்றிவிட்டு இன்று அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மீளாய்வு செய்வதற்குக் கூட அவசியமற்ற ஒரு நிகழ்வாக ஈழப்போர் பெரும்பான்மையோருக்கு அமைந்துவிட்டது ஒருபுறம். அதை மறக்கடிக்கும் ஊடகம் ஒருபுறம். மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க நிகழ்ந்த போரை அசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பணியை, நடுகல் செய்கிறது. வீர மரணம் அடைந்துவிட்ட மகனின் புகைப்படம் கூட கையில் இல்லாமல் அவனின் நினைவுகளை மட்டுமே நடுகல்லாகச் சுமக்கும் தாய் பற்றிய நூல் என்கிறார் நூலாசிரியர். நூலை வாசிக்கத் தூண்டும் கட்டுரை.


 ஜெயமோகனின் புறப்பாடு குறித்த கட்டுரை. அவருடைய எழுத்தைச் சிலாகித்துப் பேசுகிறார் நூலாசிரியர். அவர் குறிப்பிடும் ஒப்புமைகள் சிலவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஓரிடத்தில், “இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில் கூட, ஒரு பொருளின்மீது கூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக்கொண்டார் போலும்” என்பது உட்பட. சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும்போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன என்று கூறியுள்ள நூலாசிரியர், இதை இப்படியே வைத்திருக்கும் அதிகார மையம் குறித்து ஜெயமோகன் போன்றவர்கள் பேசாமலிருப்பதையும் சக மனிதன் குறித்து, எழுத்தாளர்கள் குறித்து, சமூகம் குறித்து இவ்வுலகின் அனைவருக்கும் மேலான ஓரிடத்தில் நின்று பேசும் அவருடைய வார்த்தைகளை கூர்ந்து நோக்கத் தொடங்கினால் அவர் யாரெனப் புரியும். புறப்பாடு வாசிக்கும்போது ஜெயமோகனின் பிம்பம் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறது. இதற்கு நூலாசிரியர் என்ன செய்ய முடியும்...


 சோ.தர்மனின் சூல், விவசாயம், அது சார்ந்த மக்கள், யாரிடம் அது இருந்தது, அது எப்படியெல்லாம் அதிகாரத்தின் கைகளில் சென்று சேர்ந்தது என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும், ஊர்க் கண்மாயை விரோதம் காரணமாக உடைப்பவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும் இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். நல்ல விசயத்தைப் பாதுகாக்க, எதையாவது சொல்லிப் பயம்காட்டி வைத்திருப்பது என்பது நடந்திருக்கும். அதற்காக எல்லாவற்றையும் நல்லது என்பதை நம்புவதும் தவறு. பயம் காட்டுவதும் தவறு. மாட்டுக்கறி தின்ன இறந்த மாடுகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போல உள்ளது நூலாசிரியர் கருத்து. மாடுகளைக் கொன்று சாப்பிடுபவன் ஒரு கால்நடையைப் போலவே நடப்பான் என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. கண்மாய் வைத்து அரசியலாடும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாருமிங்கே ஊமையாகப் பிறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும். இதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகாரம் அற்றவர்கள் மட்டுமே. இது சமகாலத்தில் அரசியல்வாதியைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய உத்திபோல இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம் உரியவர்களிடம் போய் சேராததால் இங்கு உழைப்பவனிடம் ஒன்றுமில்லாமலும், பண்ணையிடம் எல்லாம் கூடுதலாக நிறைந்திருப்பதையும் இன்றும் காண்கிறோம். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இங்கு விவசாயத்தினை துச்சமாக நினைத்துத்தான் தொடங்குகிறது. அதன்பலனை வருங்காலம் எப்படித் தாங்குமோ தெரியவில்லை. சூல் வாசிக்க வேண்டிய நூல்.


 முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் குறித்த வாசிப்பனுபவம், தனது துறை சார்ந்திருப்பதால் நூலாசிரியர் பேரார்வத்துடன் எழுதியது போலிருக்கிறது. கதைச் சுருக்கத்தையும் அருமையாகக் கூறித் தொடங்குகிறார். எவ்விதம் தனது துறையில் இந்நூல் உதவுகிறது என்பதையும் கூறுகிறார். தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதை என்ற தலைப்பு பொருத்தமே. சித்த மருத்துவத் துறையில் பயின்று வரும் நூலாசிரியருக்கு தகுந்த சமயத்தில் இந்நூல் கிடைத்ததை சித்தர்கள் அருளால் தான் கிடைத்தது என்று நூலாசிரியர் கூறுவதை எப்படி ஏற்பது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுளுந்தீ என்பது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.


 நூலின் பக்கங்கள் மற்றும் விலையையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிநடை அருமையாகக் கூடி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அரசியல், முற்போக்கு இரண்டின் போதாமை பல இடங்களில் தெரிகிறது. இதைக் குற்றமாகக் கருதாமல் ஆலோசனை என்ற அளவில் எடுத்துக்கொள்ள தோழரிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தோடு எந்நேரமும் உறவாடிக் களித்திருக்கும் தந்தையின் கரம் பற்றுங்கள். அதேசமயம் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள். சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

என் காட்டில் அடைமழை - ராஜிலா ரிஜ்வான்


என் காட்டில் அடைமழை

ராஜிலா ரிஜ்வான் 

வேரல் பதிப்பகம்

90 பக்கங்கள்

120 ரூபாய்


 உலகில் சலிக்காதது எது என்று கேட்டால் அது காதல் மட்டும்தான் என்பேன். அதுதான் மழையின் ஒவ்வொரு துளியையும் ரசிக்க வைக்கும். அதுதான் பூவின் ஒவ்வொரு இதழ்களையும் தொட்டு ரசிக்க வைக்கும். நட்சத்திரங்களை எண்ணி வானத்திடமே சொல்லி சரியா எனக் கேட்க வைக்கும். உறங்கும் நேரம் விழிக்க வைக்கும். விழிக்கும் நேரம் உறங்க வைக்கும். கனவு காண வைக்கும். முட்டாள்தனத்தில் மூழ்கவைக்கும். கற்பனையைக் கவிதையாக்கும். இருவருக்கு மட்டுமான உலகம் உருவாக்க வைக்கும். ஓரிணை இறக்கையில் இருவரையும் பறக்கவைக்கும். என் காட்டில் அடைமழை தொகுப்பை வாசிக்கும்போது இவை அத்தனையையும் உயரலாம்.. ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள தோழர் ராஜிலா காதல் கவிதைத் தொகுப்பை எழுதி அதனை ரிஜ்வான் தோழருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தொகுப்பு, ஒட்டுமொத்த காதலர்களும் தங்களுக்கு எழுதியது என நினைத்துக்கொள்வதையும் சமர்ப்பணம் என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்... எடுத்துக்கொள்ளட்டும். அது காதலின் வெற்றி. தொகுப்பின் வெற்றி. வாழ்த்துகள் தோழர்.


 திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் அணிந்துரை வழங்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் டைட்டில் சாங் கதையை சுருக்கமாகச் சொல்லி படத்திற்கு உள்ளே இழுத்துச் செல்வது போல அணிந்துரையும் அழகாக நம்மை தொகுப்பின் உள்ளே இழுத்துச் செல்கிறது. 

“வீடு முழுவதும் தனிமை

நீயில்லாத வீட்டில் 

எதைச் சாப்பிடுவது

எப்பொழுது தூங்குவது

எப்படிச் சிரிப்பது


இதை எழுதிக் கொண்டிருக்கும் 

இந்நேரத்தில் தோளில் ஆறுதலாய்

கை போடுகிறது


சுவரில் தொங்கும் உன் சட்டை”

கண்ணுறங்கும் நேரத்தில் திடீரென விழித்துப் பார்க்கும் குழந்தை அருகில் தாய் இல்லையென்றால் என்ன அழுகை அழும்... எதையெதையோ காட்டி ஏமாற்றினாலும் அதற்கு தாயின் தேவை, அவளின் அருகாமை எது குறித்தும் எந்தப் புரிதலும் இல்லாத வயதிலும் அந்த இடத்திலிருந்து பூக்கும் அழுகைக்கு என்ன பதில் இருக்கும் ஆறுதல் சொல்பவர்களுக்கு... குழந்தையைப் பொறுத்தமட்டில் தாய் இல்லாத அந்த இடத்தின் தனிமை போலான உணர்வு மட்டுமே. இக்கவிதையில் காதலன் இல்லாத இடத்தின் தனிமை என்பது காதலிக்கு. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் காதலன் (அருகில் இல்லையென்றாலே அது தொலை தூரம் தானே) அவளின் தனிமையைப் போக்க வேண்டும். என்ன செய்வது இத்துயரைக் களைய... அவன் உடுத்திய சுவரில் தொங்கும் சட்டை ஆறுதலாகத் தோளில் கைபோடுகிறது என்ற சித்திரம் கற்பனை என்றபோதிலும் நம் தோளில் விழும்\விழுந்த கையை நாம் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள எத்தனிக்கிறோமே அதுதான் காதல். அதுவும் தனிமையின்போது வந்து விழும் கைகள் எத்தனை தேவை என்பதை வரிகள் உணர்த்துகின்றன. 


“முன்பைவிட என் கவிதைகளில்

அதிகம் காதல்ரசம் சொட்டுவதாகக்

கூறிக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது

நாம் தற்சமயம் பிரிந்திருப்பது”

பிரிவென்பது காதல் கூட்டும். இக்கவிதையும் அதைத்தான் சொல்கிறது. காதலின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கற்ற ஒருவனுக்கு பிரிவின் ஒவ்வொரு நொடியின் வலியும் புரியும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைக் கொண்டாடும் நாம் நம்மைச் சுற்றிப் பூத்திருக்கும் எத்தனை மரங்களை பார்த்துக் கொண்டாடியிருக்கிறோம்... காதல் என்பது நொடிதோறும் பூத்துக்கொண்டிருக்கும் ஒரு ரகசியம். அதன் சூட்சுமம் உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் சேர்தல் பிரிதல் இரண்டின் வலியும் புரியும்.


 வாங்கியதை மீண்டும் கொடுத்து ஈடு கட்டிக் கொள்ளுதல் என்பது ஒரு காதலின் வேலையல்ல. கொடுப்பதும் வாங்குவதும் இயல்பாக அதனதன் போக்கில் நடக்கும் ஒரு வித்தை. 

“கொடுத்தது 

திரும்பக் கிடைத்துவிடுகிறது

வட்டியுடன்

உன்னிடமிருந்து மட்டும்.

முத்தமில்லை என்று சொன்னால்

நம்பவா போகிறீர்கள்...”

காதலைப் பொறுத்தவரை சேமிப்புக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கி போலத்தான். வட்டியுடன் திரும்பக் கிடப்பது முத்தம் மட்டுமில்லை என்பதும் வாழ்ந்த, வாழும் காதலர்களுக்குப் புரியும். காதலில் வாழ்பவர்களுக்கும் புரியும். 


 தனது இணையரை சிறப்பாகக் கவனிக்க நினைத்து மொக்கைச் செயல்களைச் செய்யும் பலர் இருக்கிறார்கள். அதற்காக அதனைப் புறம் தள்ளிவிடுமா மனம்... அதற்குள்ளும் ஆனந்தம் கண்டு ஆர்ப்பரிக்கும் காதல். சிறப்பான கவனிப்பு உள்ளபடியே சிறப்பாக அமைந்தால் அப்போது நமக்கு நாமே “நான் கொடுத்து வைத்தவள் / ன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொள்வோமே... அப்பேரதிசயம் பூக்கும். மிக மிக இயல்பான கவிதைதான். மிக மிக எளிய சூழல் தான். மல்லிகைப்பூ காலம் காலமாக வெள்ளை நிறத்தில்தான் பூக்கிறது. அதற்கு வண்ணமடித்துப் பார்ப்பதில்லை நாம். அதன் இயல்பில் வைத்தே நாம் மணம் நுகர்கிறோம்.. அதுவும் நிறம் மாற்றாமல் நம்மை ஈர்க்கிறது. இக்கவிதையும் அப்படித்தான்.

“வழக்கத்தைவிட

சுவை கொஞ்சம் கூடுதலாக உள்ளதாக

வீட்டில் சொல்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது

இன்று உனக்காகச் சமைத்தேன்”


 கவிப் பேரரசு வைரமுத்து சொல்லும் காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும். உலகம் அர்த்தப்படும். உனக்கும் கவிதை வரும்... என நீளும் வரும் வரிகளை மூன்று வரிகளில் ஹைக்கூவாக மாற்றித் தந்திருக்கிறார் தோழர் ராஜிலா. தன்னுடைய இணையர் ஊடலுக்காகவோ பகடிக்காகவோ அல்லது சோதிப்பதற்காகவோ “காதல் என்ன செய்யும்” எனக் கேட்கிறார். காதல் மனம் படைத்தவர்கள், அதில் மூழ்கித் திளைத்தவர்கள் என்ன இப்படிக் கேட்டுட்டீங்க என்பதை தோழர், “ஐயோ” எனச் சுருக்கி, அது ஒரு மாயம் செய்யும் செயல். அதன் வீரியம் அதனை உணர்பவர்களுக்கு விளங்கும். வெறுமனே அதனைப் பார்த்துவிட்டு நீங்குபவர்களுக்கு அதன் முழு சக்தி புரியாது, தெரியாது. அதனை அறிய காதலித்துப்பார் என்பதை, “எல்லாமே செய்யும்ப்பா. காதலித்துப்பார்” என்னும்போது அதன்மீது ஒரு தெய்வாம்சத்தன்மை வந்துவிடுகிறது. காதல் எதைத்தான் செய்யாமல் விடுகிறது... எல்லாம் செய்யும். அக்கவிதை,

“காதல் என்ன செய்யும்


ஐயோ

எல்லாமே செய்யும்ப்பா

காதலித்துப்பார்”.


 காதலில் தன்னைக் கரைத்தல், ஒப்புக் கொடுத்தல், சரணாகதி அடைதலைப்போல் பூரணத்துவம் எதுவும் இருப்பதில்லை. அதற்கு சண்டையும் ஒன்றுதான். சமாதானமும் ஒன்றுதான். இதோ இந்தக் கவிதையை வாசிக்கும்போது காதலை யாசிக்கும் வனம், மழையில் மட்டுமல்ல, வெயிலிலும் தன் பச்சையத்தால் தன்னைச் சுற்றிய பிரபஞ்சத்தை அழக்கூட்டவே செய்யும் என்பதைக் காட்டுகிறது.

“அத்தனைப் பூக்களையும்

நீயே எடுத்துக்கொள்


நான் பூரிக்க

உன்னிடமிருந்து 

ஒரு முள் போதும்”


 வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தில் பரோட்டா உண்ணும் போட்டியில் கலந்துகொள்ளும் திரைக் கலைஞர் சூரி, போட்டி நடத்துபவனின் கள்ள ஆட்டத்தில் கலங்கியும், தனது நேர்மையான உண்ணுதலுக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்றும் நடத்தும் நேர்மைப் போராட்டம் இங்கு முத்தத்திற்காக நடக்கிறது. 

“எல்லாக் கோட்டையும் 

அழித்துவிட்டு 

முதலிலிருந்து வா


முதல் முத்தத்தில் துவங்கி

மீண்டும் காதலித்துத் தொலைவோம்”

முத்தமோ, காதலோ காதலர்களுக்கு இடையில் நிகழும்போது அதற்கு எல்லைக்கோடு வைத்துக்கொண்டா இயங்குகிறது... இவையெல்லாம் காதல் வளர்வதற்கான காற்றல்லவா...! 


 யெம்மா ஏய் கேட்டுச்சா... நீயும்தான் இருக்கியே, ஒருநாள் ஒருபொழுதாவது இப்படியெல்லாம் சொல்லிருக்கியா... என தன்னோட காதலிகிட்ட கேட்டுப் பெறவேண்டிய நிலையில்தான் ஆண்கள் இருக்கிறார்கள், “நீ என் ஆண் தேவதை” என்பது போலான வார்த்தையை. காதல் பற்றாக்குறையா... கவிதை பற்றாக்குறையா... “இதெல்லாம் மனசுக்குள் இருக்கு. சொல்லித்தான் தெரியணுமா” என்ற மன நிலையா... ஆண்களின் குணம் கண்டு வெதும்பிப்போய் “சொல்லிட்டாலும் கிளுகிளுன்னு இருக்கும்” என்ற நினைப்பா... தெரியவில்லை. ஆண்களும் மனுசாள் தானே. அவர்களும் தனதிணையர் புகழ்தலை விரும்புவார்கள் தானே...

“தேவதை எனும் சொல்லின்

அத்தனை அம்சமும்

உனக்கும் பொருந்திப் போகிறது


நீ என் ஆண் தேவதை”


 காதல் குறித்து எழுதுவதென்றால், பேசுவதென்றால் அது முடிவிலியாக நீண்டுகொண்டே செல்லும். காதலின் ஆயுள் என்பது பூமி பிறந்த காலம் முதல் தொடங்குகிறது. காதலைப்போல் இப்பூமியை வாழவைக்கும் ஆகச்சிறந்த செயல் ஏதுமில்லை. 

“நீ முறைக்கிறாய்

நானும் முறைக்கிறேன்


நீ சிரிக்கிறாய்

நானும் சிரிக்கிறேன்


நீ அழுகிறாய்

நான் உன்னை அணைக்கிறேன்”

முதல் நான்கு வரிகள் உலகப் பொது உணர்வு. கடைசி இருவரிகள் காதல் பொது. முன்னது ஊடல். பின்னது ஆறுதல். தேற்றுதல். காப்பாற்றுதல். அரவணைத்தல். எல்லாவற்றுக்கும் மேலாக நானிருக்கிறேன் என்று சொல்லும் அணைத்தலின் மூலம் ஆசீர்வதித்தல்.


 தொகுப்பெங்கும் காதல். இவை மட்டும் தான் பிடித்த நட்சத்திரம் என்று நிலவோ வானமோ என்றாவது சொல்லியிருக்கிறதா... எல்லாம் காதல் பேசுபவை. எல்லாம் காதலர்கள் பேசுபவை. எல்லாம் காதலுக்காகப் பேசுபவை. காதலைக் கொண்டாட வாய்த்த மனம் உலகை நேசிக்கத் தொடங்கும். இவை உலகை நேசிப்பதற்கான சொற்கள். வார்த்தைகள். இன்னும் பல தொகுப்புகள் காதல் / Mohamed Rizwan தோழர்/ புகழ் பாடவும் கவிஞர் தோழரின் மனம் உதிர்க்கட்டும். காதல் சிறக்கட்டும். 

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️