Saturday 24 December 2022

கீழ் வெண்மணி தியாகிகள் தினம்

 







#கீழ்வெண்மணி


கீழ் வெண்மணி

வானம் பார்த்த பூமியல்ல

வளம் பார்க்கும் பூமி


நிலம் யாவும் பண்ணையார்களிடம்...

உழைப்பு யாவும் தொழிலாளர்களிடம்...


உழைப்பை உறிஞ்சிக்குடிக்கும்

ஆதிக்கக்கூட்டம்

உழைத்தே ஒடுங்கிக்கிடக்கும்

ஏழ்மைக்கூட்டம்...


கட்டளைக்கு கீழ்ப்படிந்தால்

வாழ்வதற்கு உயிர் இருக்கும்

எதிர்த்துப் பேசினால்

கூலிக்காரனுக்கு

சாணிப்பால் சவுக்கடி கிடைக்கும்...


உலகப் பொதுப் பிரச்சனை பசி.

இங்கும் தலை விரித்தாடியது.

பசித்தவனெல்லாம் 

ஒன்று கூடுகிறான்

செங்கொடியின் கீழ்

தொழிலாளர் வர்க்கம் என்ற பெயரில்.


சும்மாயிருக்குமா முதலாளி வர்க்கம்

நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்

என்ற பெயரில்

ஒன்று கூடுகிறார்கள்

மஞ்சள் கொடியின் கீழ்.


அதிகமில்லை கேட்டது...

அரைப்படி நெல் தான்

கூடுதலாக கேட்டது

தொழிலாளர் வர்க்கம்.

எதிரில் நின்று

கைகட்டி நிற்பவன்

எதிர்த்துக் கேள்வி கேட்பதா

ஆடித்தான் போனது

அதிகாரக்கூட்டம்...


நீயில்லையென்றால்

அடிமைகள் கிடைக்காமல்

போய்விடுவார்களா என்ன?

கொக்கரித்துக்கொண்டே

வெளியூரில் இருந்து

ஆட்களை அழைத்து

விவசாயத்தில் ஈடுபடுத்த

முயற்சி செய்தது

மேல்மட்டம்.

போராட்டம் என்பது

புதிதா என்ன

நித்தம் நித்தம்

பசியோடு போராடுபவர்களுக்கு...

வயலில் இறங்கி

வெளியூர் ஆட்களை

மறுத்து நின்றது, விரட்டி நின்றது

தொழிலாளர் கூட்டம்...


எங்கும் எதிர்ப்பு

பண்ணையார்களுக்கு.

சமரசம் பேசினார்கள்

தொழிலாளர்களிடம்.

செங்கொடி இறக்கு

மஞ்சள்கொடி ஏற்று

அரைப்படி நெல் கூலி

அதிகம் தருகிறோம்

என்று விலைசொல்லி

வலை போட்டனர் பண்ணையார்கள்...


செங்கொடி எமது மூச்சு

செங்கொடி எமது வாழ்வு

செங்கொடி எமது உயிர்.

செங்கொடி இறங்காது.

வேண்டுமானால்

மஞ்சள் கொடியை நீயிறக்கிக்கொள்.

உழைக்கும் வர்க்கம்

உறுதியாய் நின்றது.

பண்ணையார் கூட்டம்

பதை பதைத்துப் போனது...


ஒன்றிரண்டு பண்ணையார்கள்

ஊரை ஆள

உழைக்கும் மக்களின் வீட்டை

செங்கொடி ஆண்டது...


அடங்கமறுத்த மக்களை

அழித்தொழிக்க

பண்ணையார் தரப்பு

கோபாலகிருஷ்ண நாயுடு

தலைமையின் கீழ்

வெறிகொண்ட கழுகாய்

வேட்டையாடும் நாயாய்

வீடு வீடாக அடியாட்களுடன்

விரட்டியது...


உயிரைக் கையில் பிடித்து

ஓடியது உழைக்கும் கூட்டம்.

ஒற்றை இலக்காக

கண்முன் நின்றது

ராமய்யாவின் குடிசை.

அக்குடிசை தான்

கூலிக்காரன் 

சொந்தமாக வைத்திருந்த

ஒற்றை நிலம்...


விரட்டிய ஆதிக்கம்

பெரும்பாலான பெண்கள் குழந்தைகள்

குடிசையின் உள்ளிருக்க

வெளியே தாழ் போட்டது.

வேய்ந்த குடிசை 

உயிர்கள் குடித்து கொல்ல

பெட்ரோல் ஊற்றியது

உயிர்கள் வெந்து எரிவதை

வேடிக்கைபார்த்தது...

எங்களை எதிர்த்தால் இதுதான் கதி 

என்று எச்சரித்தது...


அது மரண ஓலமல்ல

உழைக்கும் மக்களின் கலகக் குரல்...


அக்கொடூரம் நிகழ்ந்து

50வைத்து ஆண்டுகளுக்கு

மேலாகிவிட்டது


அன்று பண்ணையார்கள்

மட்டும்தான்...

இன்று ஆட்சியதிகாரமே

பண்ணையார்கள் மனநிலையில்

இருக்கிறது...


முதலாளி தொழிலாளி

வேறுபாடு கலைய

ராமய்யாவின் குடிசைபோல 

சொந்தக்குடிசை அடைய

வீட்டில் எரியும் தீ

நம் வயிற்றுப் பசியை அணைக்க...

அநீதிகளின் கும்மாளம் குடை சாய...

சாதி சமய இன்னல்கள் மறைய

பொதுவுடைமைச் சித்தாந்தம்

எங்கும் பரவ...


மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்

செங்கொடியை வீடுதோறும்

ஏற்றி வளர்வோம்...


யாழ் தண்விகா

Friday 23 December 2022

புளிக்கும் வெயில் #ராம்போ_குமார்


புளிக்கும் வெயில்

ராம்போ குமார்

Rambo Kumar 

வேரல் புக்ஸ்

96 பக்கங்கள் 

100 ரூபாய்


ஒரு நாயகன் உருவாகிறான்...

(சிஸ்டம் சரியாகிவிட்டது தல)

எந்த உலகத்தில் என்றும் தொக்கி நிற்கும் கேள்விக்கு கவிதை உலகத்தில் என்று பதில் அளிக்கலாம். தோழர் ராம்போ குமார் தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பால், பேச்சால் மனம் கவர்ந்தவர். இப்போது கவிதையிலும். தொகுப்பின் முதல் கவிதையை அதற்கு அச்சாரமாகக் கூறலாம்.

“என்னிடம் ஒரு ஆழ்ந்த கல்லறைக்குண்டான

சிறு அமைதி இருந்தது

காற்றின் காமம் பசி தீர்க்கும்

புல்லாங்குழலின் சில துளைகள்

பருக முடியா ஆதி நிலத்தின் வழிந்த ஈரத்தின் மிச்சம் 

பழைய சொற்களின் புழுக்கம் கொஞ்சம்

குகை இருட்டின் முகம் 

ஒன்றுகூட இருந்ததாய் ஞாபகம்

அத்தனையும் நழுவிக்கொண்டிருக்கிறது

முதல் மாத சம்பளம் எண்ணிக்கொண்டிருக்கும்

எனது விரல்களின் வழியே..” எனத் தொடங்கும் கவிதையின் சொற்களில் கருவைக் காண்பதா... இவ்வளவு நாள் கண்ட கவியின் புதிய முகத்தைக் காண்பதா... சந்தோஷ மிரட்சி. 


ஒரு கவிதையில் 

“பசி ஒன்றும் பெரிய வலியில்லை

அதனூடே தோன்றும்

கவிதைதான்...” கொஞ்சம் நீள்கிறது முற்றுப்பெறாமல். கவிஞனின் பசியா? பசியை எழுதப் போகும் கவிதையின் தீவிரமா? என்ற கேள்வியின் முன்னாள் எனக்கென்னமோ பசியை எழுதும் கவிதையின் ஆத்திரம் மிகு சொற்களின் தீச்சுவாலை அதிகமாக இருக்கும்போல் உணரமுடிகிறது. இன்னொரு கவிதையில்

“முன்னிரவு காமத்தைப் 

பின்னிரவுக்கு 

ஒத்தி வைக்கிறது

ஒரு நல்ல கவிதை” என்னும்போது கவிதை என்ன செய்யும் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடுகிறது. மேலும் கவிதை காமத்தை ஒத்தி வைக்கிறதாகக் கூறும் தன்மையிலிருந்து கவிதை எதையும் செய்யும் என்பதையும் அழகாகக் கூறிவிடுகிறது.


“அப்பத்தாவுக்குத் தங்கமுத்து மாரியம்மன்

தாத்தாவுக்குச் சுடலைசாமி

எங்க ஆச்சிக்கு முப்பிடாதி அம்மன்...

மேலத்தெரு மாமாவுக்குக் கருப்பண்ணசாமி

அத்தைக்குக்கூடச் செல்லத்தம்மன்னு கேள்வி...

கொடைக்குக்கொடை

கூட்டத்திற்குள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும்

சாமி கொண்டாடிகள்,

இதுவரை 

சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்”

கிராமத்துச் சாமிகளின் அருளேறி ஆடும் மனிதர்கள் கண்முன்னே வருகிறார்கள். அவர்களின் ஆங்காரக் கூச்சல் காதுகளில் ஒலிக்கத் தொடங்குகிறது. திருவிழாக்கூட்டம் கிறங்க வைக்கிறது. ஊரே அருள் வந்து நிற்க, நாக்கைக் கடித்து அரிவாள் ஏறும் ஆண்கள், இருக்கும் இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண்கள் மேல் அருள் வந்து ஆடும் சாமிகள் குறித்து திருவிழா கடந்தபின் நினைக்க என்ன இருக்கும்? அதனைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் கவிஞர். “இதுவரை சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்...” சாமி கொண்டாடிகளிடம் கேட்கவேண்டும்தான்.


கொஞ்சம் கொஞ்சம் அன்பைக் கொஞ்சும் கவிதைகள் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன. யாரந்த யாழினி என்ற கேள்விக்குப் பின்னால் ஓடத் தொடங்குகிறது வாசிக்கும் பார்வை.

“உன்னை அகம் தள்ளியபின்

புறவெளியில் 

எதைத்தேடப்போகிறேன் யாழினி”

“வலது ஆரிக்களிலும்

இடது ஆரிக்களிலும்

சமமாக நின்றுதொலை 

யாழினி

அவ்வப்போது சரிந்து விடுகிறதென்

இதயம்” 

“இன்னும் வேகமாக

வீசியெறி உன் சொற்களை

நான் இன்னுமொரு 

கவிதை செய்யவேண்டும்”

கவிதை ஊரில் காதல் வழிச் சாலையிலும் சிறப்பானதொரு பயணம் மேற்கொள்ள வாழ்த்துகள்...


“ஒரு பச்சிலையின் 

கணம் தாங்கும் கிளைகளுக்கு

ஒரு சருகின் கணம் 

தாங்க முடிவதில்லை”

வாசிக்க வாசிக்க தந்த காட்சி முடியவில்லை. சருகு என்பது அத்தனை சாதாரணமானதாக இருக்க முடியாது. அதன் கணம் குறித்து எழுந்த கேள்விகளுக்குள் பச்சிலை வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் அபாரமான வெளிப்பாடு.


எல்லாவற்றிலும் நேரம் காலம் பார்த்து செயல்படும் அச்சம்பத்து என்னும் ஊரைச் சேர்ந்த மாமா பற்றிய கவிதை...

...

“அச்சம்பத்து விபத்தில்

மாமா இறந்துபோன அன்று,

நாட்காட்டியில் அவரின்

விருச்சிக ராசிக்கு

நம்பிக்கை என்றுதான் இருந்தது...” காலம் என்னென்ன மாய வித்தைகள் செய்யும் என்பதை காலம் மட்டுமே அறியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஈடுபாடு, ஒரு வழி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடமிட்டுத் திரிக்கிறோம். ஆனால் அந்திமக் காலமாகட்டும், உயிர் போகும் தருணமாகட்டும், மனிதன் மகிழ்வோடு இந்த உலகைத் துறக்கத் தயாராகிவிடுகிறானா என்றாள் இல்லை. காலம் நமது அபிலாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறதா என்றால் இல்லை. அக்கணம், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் மட்டுமே என்பதை உணர்த்தும் கவிதை.


“இரு நீலங்களுக்கு மத்தியில் 

பறந்துவந்த பறவையொன்று

என் ஜன்னலில் வந்தமர்கிறது

அதன்மேனியில்

தாய்மண் வாசத்தை

நுகரத் தெரிந்த 

அந்தப் பெயர் தெரியா பறவை 

மிச்சமிருக்கும் தன் நிலத்தை

எனக்குக் கடத்துகிறது

தன் கண்களின் வழி”

கவிஞன் என்பவனின் பார்வை உன்னதப்படும் இடம் என்பது உலகின் எல்லாவுயிர்களிடத்தில் காட்டும் இடம் மட்டுமே. அவனின் ஆக்ரோசமும் மனிதம் சார்ந்திருக்கும். மௌனமும் மனிதம் சார்ந்திருக்கும். அன்பு அவன் இயல்பாகயிருக்கும். பெயர் தெரியாத அந்தப் பறவையின் வலியைக் கண்கள் வழியாகக் காணும் ராம்போ குமார் என்னும் தோழர்-கவிஞர் இயல்பாகவே சமூகப் பார்வையுடன் பயணிப்பவர். அதனை அச்சு வடிவில், கவிதை உருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். சொல்ல இன்னும் பல கவிதைகளுண்டு. வாசியுங்கள். பன்முகத் திறன் கொண்ட தோழர் ராம்போ குமார் இன்னும் பல உயரங்கள் கவிதை உலகிலும் தொட வாழ்த்துகிறேன்.


யாழ் தண்விகா

 

Sunday 4 December 2022

ரோலக்ஸ் வாட்ச்


ரோலக்ஸ் வாட்ச்

நாவல்

சரவணன் சந்திரன்

உயிர்மை பதிப்பகம்

பக்கம் 160

விலை 150

மார்ச் 2016 பதிப்பு


நட்பு காதல் கொலை குரூரம் இயல்புத்தனம் துரோகம் என எல்லாம் உண்டு இந்நாவலில். கதாசிரியர் தான் நாயகன். வலிந்து திணிக்கப்படாத பாதை வழியே கதை நகர்கிறது. என்ன கதை என்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைதான். எங்கிருந்தும் தொடங்கலாம். சரவணன் மற்றும் கதை கூறுபவன், அவன் தோழி, தோழியின் தோழி, ஜோதிடர் சுந்தர் எனச் சில பாத்திரங்கள் முக்கியமானவை. பிற எல்லாம் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சரவணன், கதை சொல்பவனுக்கு வாழ்வில் பல உதவிகள் செய்பவன். செய்தவன். ஆனால் கதை சொல்பவனுக்கு ஒரு தனி உலகம். காலமெல்லாம் சரவணனின் கையைப் பிடித்து நடக்க தன்னால் இயலாது என்னும் உறுதி கொண்டவன். அவனிடம் அதனை நேராகச் சொல்லும் தைரியம் அற்றவன். கோழை என்றில்லை. அது கதாசிரியன் சுபாவம். இவர்களுக்கு ஒரு நண்பர் குழாம். அதில் ஒருத்தி திவ்யா. அவளோடு அன்பு காதல் காமம் எல்லாம். அவள் திருமணம் முடித்தவள். அவளோடு ஒரு வாழ்க்கை. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் செல்ல சில தகிடுதத்தங்கள் செய்து கதை சொல்பவன் மேலே வருகிறான். வெளிநாடு செல்கிறான். தனியாக அறை எடுக்கிறான். அங்கு பெண்களோடு உல்லாசித்துத் திரிகிறான். பணம் சேர்க்கிறான். ஒரு மனிதனுக்கான கூறுகள் இப்படி இருப்பதில்லையே என நினைக்கும்போது மனிதன் என்பவன் இப்படியும் இருக்கிறான் எனச் சொல்ல, இப்படித்தான் இருக்கிறான் எனச் சொல்ல பல பாதைகளை கதை வழியே சொல்கிறார் நாவலாசிரியர். கதை சொல்லுதலில் இப்படியும் ஓர் உத்தி எனக் காண்பித்து உள்ளார். டயரி எழுதுவது போலுள்ளது என்று கூறி ஒதுக்கி விடாத வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. பிடித்தது எனச் சொல்ல நான் கண்ட மனிதரில் கதாசிரியன் போன்ற நபர்களைக் கண்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். மனிதன் செய்யும் பண அரசியல் எப்படியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் ஆங்காங்கே வருகிறது. கதையும் முடிச்சும் இதுதான் எனச் சொல்ல வாய்ப்பில்லை. வாசித்தால் தான் அதை உணர முடியும் எனச் சொல்லும் நாவல். வாசிக்கலாம் தாராளமாக.


யாழ் தண்விகா 


#நூல்_வாசிப்பனுபவம்_2022


❣️

 

Wednesday 23 November 2022

கமலி #சி_மோகன்

 


கமலி
நாவல்
சி.மோகன்
பக்கம் 144
விலை ரூ.150/=

ரகு கமலி இருவரும் கணவன் மனைவி. கமலியின் அப்பா, கமலியின் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து கண்டறிந்த மாப்பிள்ளை ரகு. இவர்களுக்கு நந்திதா என்ற பெண். இவர்களின் வாழ்வில் புதிதாக நுழைகிறார் கண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக கமலியின் மனதில் பதியத் தொடங்குகிறார் நல்ல மனிதராக, ரசனைக்குரியவராக, படிப்பாளியாக, வார்த்தைகளில் வசியம் செய்பவராக, கமலியின் மனம் கவர்ந்தவராக... கமலியின் எண்ணத்தில் உண்டான மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறான் ரகு. ஒரு சில கட்டத்திற்குப் பின்னர் கண்ணனுடன் உள்ள தொடர்பு முற்றிலுமாக தடைபடுகிறது ரகுவின் கட்டளையின் பேரில். ஆனாலும் கமலி கண்ணன் இடையே உள்ள காதலுக்கும் காமத்திற்கும் முற்றுப்புள்ளி இல்லாமல் தங்கு தடையின்றி அது தொடர்கிறது. இடையில் கமலியின் அப்பா இறந்துபோகிறார். அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. அம்மாவைக் கவனிக்க சென்னைக்கு கமலி புறப்படுகிறாள். செல்லும் வழியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கண்ணனும் கமலியும் ஒரே பேருந்தில், படுக்கும் வசதியுள்ள இருக்கையில். கமலி எப்படி கண்ணனுடன் இந்த வாழ்வை வாழ்கிறாள்? ரகு கண்ணனுடன் பேசினானா, நந்திதாவுக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கச்சிப் பாப்பாவோ கிடைத்ததா என்பதை அறிய வாசிக்கவேண்டும் இந்த நாவலை. சரியோ தவறோ என்ற ஊசலாட்டம் கமலியின் எண்ணத்தில் புகவில்லை. அவள் மெல்ல கண்ணனின் வசியத்திற்குள் சிக்குகிறாள். கண்ணனும் நல்ல மனிதர். ஒரு இடத்திலும் கமலியின் பாத்திரமோ கண்ணனின் பாத்திரமோ குற்ற உணர்ச்சி என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தில் சிக்குவதாகக் கதையில் சொல்லாமல், ரகுவிடம் தோன்றும் மனக் கிலேசத்தை எப்படி கச்சிதமாக கமலி தீர்க்கிறாள், கமலியும் கண்ணனும் இந்த வாழ்க்கையை எவ்வளவு கவனமாகக் கடத்துகிறார்கள் என்பதை கிளர்ச்சியைத் தூண்டும் மொழிநடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். முக்கியமாக கதையின் இறுதி.

சம காலத்தில் பரவலாக காணக் கிடைக்கும் கதை
 இன்றைய உலகில் இல்லாத ஒன்றினை நாவல் எடுத்துரைப்பதாக கூறிவிட இயலாது. பரவலாக தினம்தோறும் பத்திரிக்கைகளில், ஊடகங்களில் இடம்பெறும் ஒரு செய்தியாக இந்த முறை மீறிய, முறை தவறிய காதலைச் சொல்லலாம். கூடுதலாக ஒரு தகவலாகச் சொல்ல வேண்டுமெனில் ஊர் அறிய, உலகம் அறிய முடித்த திருமணத்தைக் காட்டிலும் இது போன்ற காதலும், காமமும் வீரியமாக, கொலைக்கும் அஞ்சாத ஒன்றாக மாறிக் கொண்டிருப்பதை நடக்கும் சம்பவங்கள் மூலம் அறியலாம். குன்றத்தூர் என்ற ஊரில் பிரியாணி கொண்டு வந்து கொடுக்கும் உணவகப் பணியாளர் மீது அபிராமி என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட ஈர்ப்பு, தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவத்தை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 
 திடீர் என்று உள்ளுக்குள் உண்டாகும் மனமாற்றம் தான் இது போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கூறிவிட இயலாது. ஒவ்வொரு பெண்ணின் மனதின் உள்ளே இருக்கும் அபிலாசைகளைப் புரிந்து, அதற்கேற்ப இங்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதில்லை. சொத்துக்களைப் பாதுகாக்க, சமூகம், சாதி, மதம் இவற்றைக் காக்கும் எண்ணம் இவையெல்லாம் அகமணத் திருமண ஏற்பாட்டில் இருக்கிறது. அதற்காக இவற்றில் எல்லா திருமணங்களும் மகிழ்வில்லாமல் இருப்பதாகக் கூறல் தவறாகிவிடும். மனதின் அடி ஆழத்தில் கிடக்கும் ஆசைகள் மேலெழும்போது தவறுக்கான காரணங்கள் பூக்கிறது. சந்தர்ப்பம் அமையும்போது தவறுகள் செயல் வடிவம் பெறுகிறது. தவறுகளை மறைக்க இயலா வண்ணம் போகும்போது குற்றம் வெளிப்படுகிறது. எல்லாம் புரிந்து, காதல் மணம் புரியும் தம்பதியர் கூட இதுபோன்ற சல்லாபங்களில் ஈடுபடும்போது மனித மனதின் ஆசை தான் என்ன என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடிவதில்லை.

கமலி – கண்ணன் – ரகு
 ரசனையின் மறுவடிவம் கமலி. படிப்பு ஆர்வம் மிக்கவள். மந்திரங்கள், ஸ்லோகங்கள், பக்திப் பாடல்கள் அறிந்தவள். ஆங்கில இலக்கியம் முதுகலையில் முடித்தவள். அயல் நாட்டு வர்த்தக நிறுவனத்தில் ரிசப்சனிஸ்டாக பணி புரிந்தவள். ரகுவை பெற்றோர் பார்த்து மணம் முடித்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து ஆறாம் வருடம் நந்திதா பிறக்கிறாள். கமலி தன்னுடைய 37வது வயதில் கண்ணனுடன் காதல் வயப்படுகிறாள். எதற்காகவும் கண்ணனை இழந்துவிடக்கூடாது என்று என்னும் அளவு காதல். இத்தனைக்கும் ஆரம்ப கட்டத்தில் அதிகமாக தொலைபேசியில் மட்டுமே வளர்ந்த காதல். ரகு மீது எந்தப் புகாரும் இல்லாத ஒருத்திதான் கமலி. ஆனாலும் அவளால் கண்ணனைத் தவிர்க்க இயலவில்லை. ரகுவிற்கும் கண்ணனுக்கும் மனக் கசப்பு வந்தபோதும் அவனுடனான உறவை கமலி முறித்துக்கொள்ளவே இல்லை. வீட்டிற்குள் சந்தேகம் பூத்த போதும் ரகுவை காமத்தால், அன்பால், ஸ்பரிசம் தீண்டும் பேச்சால் கட்டிப் போட்டு கவனித்துக்கொண்டாள் கமலி. அதே சமயம் இதுபோன்ற சூழலை கண்ணனிடம் பகிர்ந்துகொள்கிறாள் கமலி. கண்ணனோடு ரகு மீண்டும் பேசும் சூழல் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கிறாள் கமலி. அந்தச் சூழல் அமைகிறது. தனக்கு கண்ணனால் ஒரு குழந்தை வேண்டும் என்ற அதீத ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசைக்காக கமலியும் கண்ணனும் தீட்டிய திட்டங்கள் எல்லாம் அறிவியல். அந்த ஆசை நிறைவேறுகிறதா? ரகுவின் நிலை என்ன? ஒரு முக்கோணக் கதை தான். ஆபாசம் பூத்தூவிக் கிடக்கிறது தான் நாவலில். ஆனாலும் கத்தி மேல் நடக்கும் பயணத்தை, முறையாக இல்லாத ஒன்றை வாசிக்க வைத்து வெற்றிப் பயணமாக்கிவிடுகிறார் நாவலாசிரியர்.

நாவலிலிருந்து...
கண்ணன், காதலை மிகச் சாதாரணமாக எவ்விதத் தயக்கமுமின்றிச்  சொன்னபோது, கமலி விதிர்விதிர்த்துத்தான் போனாள். அவள் உடலும் மனமும் படபடத்து நடுங்கியது. ஆனால் அந்தப் படபடப்பில் பயமில்லை. மாறாக, பரவசமிருந்தது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் மனம் ஏதோ ஒரு கிறக்கத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.

பதிப்பக விபரம்:
புலம் வெளியீடு
178, F, அனுதீப் அபார்ட்மெண்ட்ஸ்,
3வது பிரதான சாலை,
நடேசன் நகர், 
சென்னை – 600092
தொலைபேசி : 9840603499
Email: pulam2017@gmail.com

யாழ் தண்விகா


கோடிக்கால் பூதம் #அ_உமர்_பாரூக்

 


கோடிக்கால் பூதம்

நாவல்

அ. உமர் பாரூக் 
தோழர் Acu Healer Umar Farook 

பக்கம்: 128
விலை: 150

தீ நுண்மிக்காலமும் உயிர்க் கொள்ளையும்
 
 அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு ஆளான ஒரு காலம் என்றால் சமகாலத்தில் காணும் கொரோனோ காலம் தான். இப்போது வரை உலக நாடுகள், மக்களை ஊரடங்கு, முகக் கவசம், சமூக இடைவெளி மட்டுமே காக்க முடியும் என்பதைக் கூறி வருகிறது. இதற்கிடையில் முதல் அலை, இரண்டாம் அலை கடந்துவிட்டது. மூன்றாம் அலை மற்றும் அடுத்து வரக்கூடிய கொரோனோவின் பாதிப்பு இதற்கு முன்பு வந்த அலையை விட மிகத் தீவிரமாக இருக்கும் என்ற கணிப்பையும் கூறி மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கிறது. கொரோனோவை விட பெரிய நோயாக அரசின் அறிவிப்பும் அச்சுறுத்தலும் இருக்கிறது. அதற்குச் சாதகமாக நோயிலிருந்து குணமாகும் அதிகமான மனிதர்களை விட நோய்க்கு ஆளாகும் குறைவான நபர்களை மட்டுமே பெரிதுபடுத்தியும், இறப்புகளைக் கூறி பதட்டத்தையும் உண்டுபண்ணும் வண்ணம் ஊடகங்களில் செய்திகளை வெளியிட வைத்து வருகிறது. எளிதில் குணமாக்கும் நோய் என்று யாராவது சொன்னால்கூட அவர்களுக்கு எதிராக அதிகார பலத்தைப் பயன்படுத்தும் வன்மமும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்வதைக் காண முடிகிறது. மருத்துவத்தில் சிறப்பான கட்டமைப்பை ஏற்படுத்தி அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துவ வசதியால் மிக எளிதாகக் கடக்க வேண்டிய நோயை, வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் எனக் கூறும் வண்ணம் நகர்த்தி வருகிறது அரசு வல்லாதிக்கம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இக்கொடும் காலம் குறித்த சிறு துளி தான் கோடிக்கால் பூதம் என்னும் இந்த நாவல்.

கதைச் சுருக்கம்.

 டேவிட் சர்ச்சில் மதபோதகர். மைக்கேல் அவன் நண்பன். கொரோனோ கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் உள்ள சர்ச்சுக்குச் செல்ல மைக்கேலின் உதவியை நாடுகிறான். தன்னுடைய இ-சேவை மையத்திலிருந்து பாஸ் தயார் செய்து கொடுக்கிறான் மைக்கேல். ஆனால் அங்கு நிலைமை சரியில்லை என்பதால் டேவிட் கேரளா செல்ல இயலாமல் போய் விடுகிறது. குமார் தற்காலிக ஊழியராக மருத்துவமனையில் பணிபுரிபவன். டேவிட் மற்றும் மைக்கேலுக்கு நண்பன். இவர்களின் ஆசிரியர் தங்கம். அவர் தன்னுடைய பணிக் காலத்தை முடித்துவிட்டு தனிமனிதனாக மேன்சன் ஒன்றில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து வசித்து வருகிறார். அவரிடம் அவ்வப்போது சென்று உரையாடிவிட்டு வருவது மைக்கேலின் வழக்கம். டேவிட்டிற்கு வீடு, எப்போதாவது மைக்கேலின் கடை அல்லது சர்ச். குமாருக்கு தன்னுடைய மருத்துவமனை லேப்பில் பரிசோதனை செய்யும் பணி. கொரோனோ காலத்தின் பரிசோதனை அவலங்களை, மருத்துவ அவலங்களை குமார் கண்டு வேதனைப்படுகிறான். தன்னுடைய அப்பாவின் டைப் ரைட்டிங் நிலையத்தை இ சேவை மையமாக மாற்றி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை மிக எளிமையான முறையில் நடத்தி வருபவன் மைக்கேல். மனைவி மற்றும் ஒரு குழந்தை. இந்தச் சூழலில் மைக்கேலுக்கு காய்ச்சல் வருகிறது. குணமாக வேண்டிய காய்ச்சல். ஆனால் அவன் கேட்ட தகவல்கள், பார்த்த தகவல்களால் மிகவும் பயப்படுகிறான். அரசு மருத்துவமனை, ஆக்ஸிஜன் சிலிண்டர், தனியார் மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவு என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னைத்தானே பலிகடா ஆக்கத் துணியும் வண்ணம் அவன் மனநிலை மாறுகிறது. கொரோனோ காலத்தை அவன் எப்படியாக எதிர்கொண்டான், அவனைச் சுற்றியிருந்த சூழல் அவன் மீண்டெழ உதவியதா என்பது தான் கதை.

கதை மாந்தர்கள்

 மிகக் குறைந்த அளவிலான பாத்திரங்களே நாவலில். மைக்கேல், அவனுடைய தந்தை ஆசீர்வாதம், மைக்கேலின் மனைவி ஜான்சி, மகன் ரியோ, சர்ச் போதகர் டேவிட், மருத்துவமனை ஆய்வுக்கூட பரிசோதகர் குமார், குட்டை வாத்தியார் என்ற தங்கம் வாத்தியார், மைக்கேலின் மாமனார் பீட்டர், டாக்டர்கள் சுந்தரம், ராஜா. இவர்கள்தான் பிரதான பாத்திரங்களாக நாவலில் வருகிறார்கள். ஒவ்வொருவர் குறித்தும் உள்ள தகவல்கள் மிகைப்படுத்தப்படாதவையாகவும் கதையோடு சேர்ந்து போவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது நாவலை வாசிப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

மைக்கேலின் மன மாற்றமும் பயத்தில் வீழ்ந்த தைரியமும்...
 ஆசீர்வாதம் காலம் டைப் ரைட்டர் காலம், அவரை நோக்கி வரும் வாடிக்கையாளர்கள் காலத்தை பின்னோக்கி பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து வரும் கால மாறுதல்கள் பிரவுசிங் சென்டர் என்ற நிலையைக் கொண்டு வருகிறது. அதுவும் காலப் போக்கில் இ சேவை மையம் என்ற நிலையை எட்டுகிறது. அந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் எளிய மனிதன் மைக்கேல். எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசுபவன். அவனின் சொற்கள் யாரையும் காயம் செய்யாதவை. இணைய சேவைகளுக்காக அரசுத் துறைகள் சார்ந்த பலர் வந்து செல்லும் இடமாக அவன் மையம் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் கொரோனோ இரண்டாம் அலை வருகிறது. இயல்பாக அரசின் அறிவுறுத்தல் காரணமாக மாஸ்க், கைகளை சானிடைசர் மூலமாக கழுவுதல், சமூக இடைவெளி இவற்றைக் கடைபிடிக்கிறான் மைக்கேல். கொரோனோ தீவிரமாகப் பரவத் தொடங்கியபின்னர் தன்னுடைய மனைவியான ஜான்சியைக் கூட கடைகளுக்கு வெளியில் அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறான். குமார் மூலமாக மருத்துவம் தொடர்பான தகவல்களைக் கேட்டும் வைத்திருப்பவன். சாதாரணமாக அவனுக்கு வந்த தலைவலி மனச் சஞ்சலங்களை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு நாளும் தலைவலி, அடுத்து காய்ச்சல் எனத் தொடர்ந்தாலும் மருத்துவ நண்பர்கள் மூலமாக அதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்கிறான். காய்ச்சலும் சரியாகிறது. ஆனாலும் ஊடகங்கள் தரும் தகவல்களால் தனது உடல்நிலை குறித்த சந்தேகத்தால் மருத்துவமனையில் மூக்கின் வழியாக சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். நெகட்டிவ் வருகிறது. அடுத்து தொண்டையில் சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். அதுவும் நெகட்டிவ் வருகிறது. ஆனாலும் அரசின் கொரோனோ குறித்த அச்சுறுத்தல் காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளியாக சேர்கிறான். உறக்கத்தின்போது எந்தவித மூச்சுத் திணறல் இல்லாமல் உறங்குபவன் விழிக்கும்போது பல எண்ணங்கள் அலைபாய மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாக உணர்கிறான். நர்சிடம் வலிய ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு தனக்கு பயன்படுத்துகிறான். சுகர் பரிசோதனை செய்துகொள்கிறான். கை விரல்களில் ஆக்ஸி மீட்டர் மாட்டி ஆக்ஸிஜன் லெவலை அடிக்கடி பரிசோதித்துக் கொள்கிறான். அவன் வீடு வந்த பின்னரும் அவனுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. தனக்கு அருகில் இருந்த பெட்டில் அவன் வயதொத்த மனிதன், புகை மற்றும் சிகரெட் பழக்கம் உள்ளவன் சேர்க்கப்பட்டு இறந்து விடுகிறான். நெருங்கிய உறவுகளில், நட்பு வட்டத்தில் உள்ள யாரும் பாதிக்கப்படக்கூடாது என எண்ணினாலும் பாளையத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவன் இறந்து விடுகிறான். இவையெல்லாம் மனதை அலைக்கழிக்கச் செய்கிறது மைக்கேலை. கூடவே இருந்து மனைவி ஜான்சி பார்த்துக்கொண்டாலும் மைக்கேலுக்கு தனக்கு கொரோனோ இருக்கிறது என்ற எண்ணமே முழுவதுமாக இருப்பதால் மதுரைக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்து அங்கும் செல்கிறான் மனைவியோடு. உடல்நலத்திற்கு ஒன்றுமில்லை என்ற சூழலிலும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்தாலும் திடீரென்று மூச்சுத் திணறல் வந்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் விடுதியில் மனைவியுடன் தங்குகிறான். மீண்டும் மூச்சுத் திணறல். அதே தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு அனுமதியில்லாமல் வேறு மருத்துவமனை. அங்கு சிகிச்சை. கடைசியில் அவனை பீட்டர், மற்றும் ஜான்சி காப்பாற்றினார்களா... தங்கம் வாத்தியார் செய்த உதவி என்ன... குமார் என்ன செய்தான்... என நிறைவடைகிறது நாவல். 

 மொத்தம் 15 பாகங்களாக நாவல். 10வது பாகத்திலிருந்து நாவல் வேகமெடுக்கத் தொடங்குகிறது. கொரோனோ கால கவனம் என்பதை வீட்டில் உள்ள ஜான்சி, ரியோ எளிதாக எடுத்துக்கொள்ள, மைக்கேல் மிகக் கவனமாகவே இருக்க விழைகிறான். மரணம் பற்றிய பயம் அவனுக்குள் வெளியுலகம் பற்றிய ஊடக தகவல்களால் மெல்ல மெல்ல ஊடுருவுகிறது. கொரோனோவால் இறந்த நோயாளிகளை புதைக்கும் விதம் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. “மரணம் பற்றிய அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் கடவுள் மீது நம்பிக்கை கூடுவதையும், இப்படியான மனிதர்களின் இறப்பைப் பார்க்கும்போது அது தானாகவே குறைந்து விடுவதாகவும் அவனுக்குத் தோன்றியது” இப்படியாக மரண பயம் மைக்கேலுக்குள் செல்லத் தொடங்குகிறது.
 கொரோனோவால் பாதிக்கப்பட்ட பின்னர் எப்போதும் தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் ப்ரோபைலில் வைத்திருக்கும் மைக்கேல், இயேசுவின் படத்தை மாற்றுகிறான். அதைக் கண்டு மைக்கேலின் மனைவியும் அவனைப் பற்றிய சரியான எண்ணத்தைக் கணிக்கிறாள். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற வரிகள் ஜான்சிக்குள் வேறு மாதிரியாக ஓடியது. “பயத்தின் ஆரம்பமே கர்த்தரின் மேலான விசுவாசத்தின் ஆரம்பம்” என்று அவள் நினைப்பது சரியாக அமைகிறது.
 அளவுக்கு மீறிய அறிவு குழப்பத்தை உண்டுபண்ணுவது போல மைக்கேலின் பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது. புரிதலற்ற தீவிரம் மூட நம்பிக்கையை உண்டாக்கும் அதே கணம் பயத்துடன் கூடிய அறிவு என்பது எதையும் நம்பாமல் குழப்பத்தை உண்டுபண்ணி தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது போலவும் மைக்கேல் பாத்திரம் உள்ளது. மிகவும் பயந்த டேவிட் கூட கேரளாவிற்குச் சென்றுவிடுகிறான். பல ஆய்வுகளை கண்கூடாகக் காணும் குமார் இயல்பாக இருக்கிறான். ஆனால் பயம் ஊரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு மைக்கேல் பாத்திரம் ஒரு உதாரணம்.

சமகால அரசியலைப் பேசும் நாவல் 

 புனைவு, திருப்பம், மர்மம் என்றெல்லாம் இல்லாமல் சம காலத்தில் நாம் காணும் மனிதர்கள், கொரோனோ குறித்து உலக வல்லாதிக்கம் உண்டாக்கிய பீதி, அரசு அதற்கு செவி சாய்த்த அரசியல் என உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறது நாவல். ஒன்றிய அரசு தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கிவிட்டு இங்குள்ள மக்களுக்கு வழங்க வழியில்லாமல் தவித்தது, ஊட்டச்சத்தை அதிகரிக்க கொண்டைக்கடலை அனைத்துத் குடும்பதாரர்களுக்கும் வழங்கப்படும் எனச் சொன்னது, கை தட்டச் சொன்னது, விளக்கேற்றச் சொன்னது, தேர்தல் பிரச்சாரம், திடீர் ஊரடங்கு அறிவித்ததால் மக்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடக்கவைத்தது எனப் பேசுவதென்றால் பல கருத்துக்களைப் பேச வாய்ப்புள்ள ஒரு நாவல் தான். கொத்துக் கொத்தாக மனித உயிர்களை ஒரே குழிக்குள் போடுவதும், படுக்கை வசதியில்லை என்பதால் அவசர ஊர்தியினுள் அல்லாடும் நோயாளிகளும், அடுத்தடுத்த படுக்கையில் நோயாளிகள் இறப்பும், அதைக் கண்டு உயிர்வாழப் படபடக்கும் நோயாளிகளும் என இந்த தீ நுண்மிக்காலம் அளித்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் பயத்தை உண்டுபண்ணச் செய்பவை. ஆனாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்வைச் சூறையாடும் அச்சுறுத்தலும் அதற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் சூழலையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது நாவல் என்பதை மனதார ஒப்புக்கொள்ளலாம்.

பதிப்பக விபரம்:

Discovery Publications
No.9, Plot, 1080 A,
Rohini Flats,
Munusamy Salai,
K.K. Nagar West,
Chennai -600 078
Mobile: +91 99404 46650

யாழ் தண்விகா


ரூஹ் #லஷ்மி சரவணக்குமார்

 

#ரூஹ் 

ஏழையிடமிருந்து அவனுடைய ரட்சகனுக்கு...


நாவல்


லஷ்மி சரவணகுமார்


 வாழ்வின் பாதை யாராலும் நிர்ணயிக்க முடியாத ஒன்று. பூரணத்துவம் நோக்கியே இங்கு பெரும்பான்மை பயணம். ஆனால் நினைப்பது நடக்கிறதா என்பது அவரவர் மனத்தை அறிந்தால் மட்டுமே உணர இயலும். ரூஹ் என்பதற்கு ஆன்மா அல்லது உயிர் என்று பொருள். ஆன்மா எந்தக் கணம் எதை நோக்கிப் பிரயாணிக்கும்? ஆன்மா என்பதை உணரும் கணம் எது? ஆன்மாவைத் தேட வலிகள் முக்கியமா? அதீத இன்பம் முக்கியமா? விடையை சிற்சில பாத்திரங்கள் மூலம் தன்னுடைய நாவலில் கூறியிருக்கிறார் நாவலாசிரியர் லஷ்மி சரவணகுமார்.


 முன்னூறு வருடங்களுக்கு முந்தைய காலத்து ரகசிய மரப்பேழை 

காலச் சுழற்சியின் விளைமாக பேரையூரில் வாழும் ஜோதிலிங்கத்தின் தந்தை விட்டல் ராவ் கைகளில் கிடைக்கிறது. விட்டல் ராவ் தோல்பாவை கூத்துக் கலைஞர். ஐம்பதுகளைத் தொட்ட வயது. தன்னைத் தொடர்ந்து தன்னுடைய மகன் ஜோதிலிங்கம் அந்த கலையைத் தொடர்வான் என நினைத்தால் அவனுக்கு பெண் நளினம் வாய்த்திருக்கிறது. பெண் குரல். பலராலும் இகழ்ச்சிக்கு உள்ளாகிறான். நண்பர்களுடன் கிட்டிப்புல் விளையாடும்போது கில்லி கண்ணில் தாக்கி வீக்கமும் வலியும் உண்டாகிறது. மருத்துவமனை சென்றும் சரியாகாத நிலையில் ராபியா என்ற பெண் பள்ளிவாசல் பக்கம் மந்திரிப்பதாகக் கேள்விப்பட்டு ஜோதிலிங்கத்தை அழைத்துச் செல்கிறாள் அவள் தாய் ரத்னா. ஒரு சில நாட்களில் கண்கள் குணமாகிறது. அக்கா என்று அன்பைப் பொழியும் ஜோதிலிங்கத்தை ராபியாவிற்கும் பிடித்துப் போகிறது. ராபியா திருமானமானவள். கணவன் அன்வர். இரு குழந்தைகள். பால்ய வயதின் தடுமாற்றத்தால் ராபியாவை தவறான கண்ணோட்டத்துடன் ஜோதிலிங்கம் பார்க்கிறான். குற்ற உணர்வால் தவிக்கவும் செய்கிறான். தனது உடன்பிறந்த தங்கை தேவியையும் அதே எண்ணத்தில் பார்க்க, தேவி ராபியாவிடம் சென்று முறையிடுகிறாள். ராபியா அவனைக் கண்டிப்பதற்காக வரச் சொன்ன தருணத்திலும் மனநிலை பாதித்த ஒரு பெண்ணை காமத்துடன் பார்க்க, வெறுத்து ஒதுக்குகிறாள் ராபியா. தனது தவறுணர்ந்து, குற்ற உணர்வால் வெறுத்து வெளியூருக்கு வேலைக்குச் சென்று விடுகிறான் ஜோதிலிங்கம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் ராபியா கடிதம் கண்ட பின்னர் ஊருக்கு வருகிறான். ராபியாவைச் சந்தித்து அவளுக்கும் குழந்தைகளுக்கும் தான் வாங்கி வந்த பொருட்களைக் கொடுத்துவிட்டுப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ராபியாவின் வீட்டிற்கு கடன்காரன் வந்து சத்தம் போடுகிறான். யார் நன்றாக இருக்கவேண்டும் என வாழ்நாள் முழுதும் கனவு கண்டானோ அந்த உறவின் வீட்டிற்கு இப்படி ஒரு நிலையா என நிலைகுலைந்து போகிறான் ஜோதிலிங்கம். இந்தச் சூழலில் திருப்பூருக்கு வேலைக்குச் சென்ற ஜோதிலிங்கத்தின் தங்கை தேவி அங்கேயே நைஜீரியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வருகிறாள். தந்தைக்கு முதுமை காரணமாக இயலாத சூழலில் உள்ளூரில் வேலை செய்யத் தொடங்குகிறான். மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுக்கிறான். குழப்பங்கள் பலவற்றிலிருந்து  தன்னை மாற்றிக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்கிறான். தன்னால் ராபியாவின் குடும்பத்திற்கு என்ன செய்ய இயலும் என்றெல்லாம் யோசிக்கிறான். கடனால் குடிக்கு அடிமையான ராபியாவின் கணவர்  அன்வர் ஒரு கட்டத்தில் திருந்தி கடன்காரர்களை நேராகச் சந்தித்து வெகு விரைவில் தன்னுடைய கடன்களை திருப்பி அளிப்பதாக உறுதி அளிக்கிறான். 

 ஜோதிலிங்கம் பல தலைமுறைகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் மரப்பேழையை எடுத்து அதில் உள்ள பொருள் மூலமாக அன்வரின் கடன்களை முடிப்பதற்கு அன்வரோடு இணைந்து முயற்சிக்கிறான். அந்த முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைந்ததா? அன்வர் ராபியா வாழ்க்கை அடுத்த கட்டம் வளர்ச்சிப் பாதையை எட்டியதா? அதன் பின் ஜோதிலிங்கம் என்னவானான்? எனபதே  நாவலின் கதை.


நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார்

 தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட தோல்விகளால் தற்கொலை எண்ணங்களில் உழன்று, மாதக்கணக்கில் உறங்க முடியாமல் தவித்து, கடுமையான மன உளைச்சல்களால் மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட சமயம் சில நண்பர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த  நிலையில் இயக்குனர் வசந்தபாலன் கடப்பாவிலிலுள்ள அமீன் பீர் தர்காவுக்கு லஷ்மி சரவணகுமாரை அழைத்துச் செல்கிறார். அங்கும், அஜ்மீரிலும், ஏர்வாடியிலும் கேட்ட, பார்த்த, உணர்ந்த பலவும் தான் ரூஹ் எழுதுவதற்கான துவக்கப்புள்ளி என்கிறார் நாவலாசிரியர்.


பாத்திரப் படைப்பு:

தேவதையின் குணம் ராபியாவிற்கு.

 தீமை செய்பவனுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் படைத்தவள். பத்து வயதிலேயே குர்ரானை முழுவதும் ஓதும் திறன் பெற்றவள். தன்னுடைய திருமணம் ஆடம்பரமாக நடத்த அன்வர் குடும்பம் முற்படும் சமயம் கூட எதற்காக இவ்வளவு செலவு செய்யவேண்டும் என ஆதங்கப் படும் எண்ணம். மனிதர்களின் காயங்களை தனது வேண்டுதலால் குணம் செய்பவள். ஜோதிலிங்கம் கண்ணில் காயத்துடன் வரும்போது தம்பி என்று அன்பைப் பொழிந்தவள். அவனின் தவறான பார்வையைத் திருத்திவிட முயற்சித்தவள். அன்வரின் ஹோட்டல் தொடங்கவேண்டும் என்ற ஆசையால் கடனாளி ஆன போதும் எல்லையில்லா அன்பைத் தனது கணவனுக்குப் பரிசளித்தவள். எல்லையில்லா, நிபந்தனையற்ற அன்பை தனக்குள் எப்போதும் கொண்டிருப்பவள்


உணர்ச்சிகளின் நீரில் மிதப்பவன் ஜோதிலிங்கம்

 தனக்குள் எழும் பெண் தன்மையை கட்டுப்படுத்திக்கொண்டு சராசரி ஆணாக வாழ எத்தனித்தாலும் அதனை வாழ இயலாமல் வாழும் பாத்திரம் ஜோதிலிங்கம். கண்ணில் காயம் என்ற சூழலில் சந்திக்கும் ராபியாவை அன்போடு அக்கா என்று விளித்தவன். காலப்போக்கில் உள்ளூரக் கிடக்கும் உணர்வுகள் மேலெழ ராபியாவை, தேவியை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து குற்ற உணர்ச்சிக்கு ஆளானவன். தன்னுடைய தவறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டே இருப்பவன். அன்வரின் கடன்களை அடைக்கவேண்டும். ராபியாவின் வாழ்க்கை சிறக்கவேண்டும் என்ற எண்ணத்தை கடைசிவரை கொண்டிருப்பவன். காலத்தின் கைகளில் தன்னை ஒப்படைத்து ஜோதிலிங்கம் என்ற மனிதனைத் தூக்கித் தூர எறிந்தவன்.


தவறுகளில் இருந்து பாடம் கற்பவன் அன்வர்

 ஹோட்டல் பணியை உடன் பிறந்த ஒரு அண்ணனிடம், இரும்புத் தொழிலை இன்னொரு அண்ணனிடம் இருந்து கற்றவன். அதிக பாரம் இல்லாமல் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவன். சிறப்பாக இண்டீரியர் பணியைச் செய்துகொண்டிருக்கும் காலத்தில் கூடுதலாக ஹோட்டல் தொழிலையும் பார்க்க ஆசைப்பட்டு கடன் வாங்குகிறான் அன்வர். அந்த பணத்தை தொழில் பங்குதாரரிடம் கொடுக்க அவன் ஏமாற்றிவிடுகிறான். கடனிலிருந்து மீள படாத பாடு படுகிறான். மாறாத சூழலால் குடிக்கிறான். தீராத மது மயக்கத்திலும் தன்னுடைய மனைவியை ஒருவன் தரக்குறைவாக பேசும்போது அவனிடம் சண்டையிடுபவன். திருந்தி வாழ முற்படுபவன்.


மதம் சார்ந்த நாவலா? மனிதம் சார்ந்த நாவலா?

 இரண்டும் இருந்தாலும் இந்நாவல் பேசும் தன்மையிலிருந்து வாழ்வின் அதீதத்தை யாராலும் யூகிக்க முடியாது என்பதை உணர்த்தும் நாவல் என்று கூறலாம். அன்வரின் தந்தை காலம் முதல், அவர்களின் வீடு, தெருக்கள், அவர்கள் பார்க்கும் தொழில்கள், இஸ்லாம் மக்களது விழாக்கால  நடைமுறைகள் என விரிவாக நாவலில் கதையையொட்டியே கூறப்பட்டுள்ளது. ஜோதிலிங்கத்தின் உடல் ரீதியிலான பிரச்சனைகள், அவனின் பாலுணர்வு, தோல்பாவைத் தொழில், விட்டல் ராவ் பரம்பரையின் கூத்து வரலாறு இன்னொருபுறம் கூறப்பட்டுள்ளது.  இயல்பான மனிதர்களின் பாடுகள் சொல்லில் அடங்காது. அவர்களின் உணர்ச்சிகளில் போலித்தனம் இருக்காது. எந்த உணர்ச்சியையும் கட்டி வைக்கத் தெரியாதவர்கள். அதனை பாசாங்கு அற்ற மொழியில் காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். 

வாழ்வற்ற வாழ்வை இறையிடம் பொருத்திக் கொள்பவர்களின் துயர் நிலம்

 முன்னூறு வருடங்களுக்கு முன்னர் அரேபியாவில் இருந்து பயணத்தைத் தொடங்கும் கப்பல், அது கொள்ளையடிக்கப்படும் இடம், அதன் கடலோடி அகமது ஒரு கண்ணியில். ராபியா அன்வர் தம்பதியரின் வாழ்க்கை ஒரு கண்ணியில். ஜோதிலிங்கத்தின் வாழ்க்கை வேறொரு கண்ணியில். இம்மூன்றும் முற்றுப்பெறும் இடம் ஏர்வாடி. நல்லவர்களின் வாழ்வைத் தீர்மானிக்க என எதுவும் இருக்கிறதா என்ன? கடலோடி அகமது தன்னுடைய பணியை நிறைவு செய்துவிட்டு வாழும் சூழலில்தான் இந்துஸ்தானப் பகுதிகளுக்கு ஞானிகளையும், துறவிகளையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு பயணிக்கிறான். அதனை அல்லாவின் கட்டளையாக ஏற்றுக்கொள்கிறான். அந்தக் கப்பல் கொள்ளையடிக்கப்படுகிறது. கனோஜி ஆங்ரே தலைமையிலான மராத்தியப் படை கொள்ளையடிக்கிறது. கொள்ளையடித்த பொருட்களில் ஒரு பொருளை மட்டும் தந்துவிடக் கேட்டும் ஆங்ரே மறுத்துவிடுகிறான். அந்தப் பொருளால் அமைதியை நாடும் ஞானி மனநிலைக்கு ஆங்ரே மாறிவிடுகிறான். அந்தப் பொருளைத் தேடி அலையும் அகமது கடலில் மறைகிறான். அன்வரின் துயர் போக்க உதவட்டும் என்று நினைக்கிறான் ஜோதிலிங்கம். அன்வரின் வாழ்வு சூன்யமாகிறது. அன்வரை ஏமாற்றியவன் நல்வாழ்க்கைக்குள் தன்னை திணித்துக் கொள்கிறான். தேவதையின் அன்பைப் பரிசளிக்கும் நிலையில் உள்ளவள் சாபமிடுகிறாள். நல்லது நடக்கட்டும் என்று நினைப்பவன் தன் இல்லின்பம் துறந்து கடவுளுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான். இங்கு வாழ்வென்பது என்ன? நல்லவர்களுக்கு இங்கு எதுவும் யாராலும் நடப்பதல்ல. அவரவர் மனத்தை எதற்காவது ஒப்புக் கொடுத்துவிட்டு அதில் மட்டும் கவனக் குவிப்பைச் செலுத்திக்கொள்ளவேண்டும். அதனால் பூக்கும் நல்லது கெட்டதுக்கு அவரவரை பொறுப்பாக்கும் சாபம் தான் வாழ்க்கை. சராசரி மனிதர்களின்  வாழ்வின் மையத்தின் வழியாக  பயணிக்கும் இக்கதை மீள் வாசிப்பில் துயர் கூட்டவே செய்கிறது. கண்ணெதிரே துயர் மிகு வாழ்வைக் கண்டும் உதவுவதற்குக் கையாலாகாத மனநிலையில் நாம்  தவிப்பதுபோன்றதான உணர்வைத் தோற்றுவிக்கிறது நாவல்.


ரூஹ் நாவல்

முதல் பதிப்பு 2020

எழுத்து

Zero Degree Publishing

No.55(7), R Block, 6 th Avenue,

Anna Nagar,

Chennai 600 040.

Website: www.zerodegreepublishing.com

E Mail : zerodegreepublishing@gmail.com

Phone : 98400 65000


யாழ் தண்விகா

Friday 21 October 2022

ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்

 

ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்


சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதான தோரணை

வாயில் எப்போதும் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும்

இரவு பகல் 

மழை வெயில் பனி

எல்லாக் காலமும் வேலைக் காலம்

நோகாமல் நொங்கு தின்பது போலில்லை

நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்

முக்கியமாக வீட்டார் ஒத்துக்கொள்ளவேண்டும்

சொந்த வீட்டை ஒதுக்கித் தள்ளுங்கள்

பக்கத்துவீட்டுக்காரன் ஒத்துக்கொள்ளவேண்டும்

பகையாளியாக என்றும் மாறிவிடக்கூடாது

இதயத்திற்கு தான் பிணமில்லை என்றுணர்த்த

மெயின் வீதிக்குச் செல்லாமல் 

கொஞ்சநேர நடை வீடுகளுக்கு இடையேயே நடப்பார்

முத்துச் சந்தின் பக்கத்திலேயே வீடு

போலீஸ் அது இது என்றால் தப்பித்து ஓடவேண்டும்

பெரும்பாலும் அதற்கு வாய்ப்பு வந்ததே இல்லை

ஒருநாளும் சத்தம் அதிகம் வந்ததேயில்லை அவ்வீட்டில்

கஸ்டமர்கள் கேட்கும் சரக்கு இருக்கும்

இல்லையென்றாலும் வேறொன்றை வாங்கிக்கொள்ளும்

கஸ்டமர்கள் வரம்தானே.

போதை தான் அங்கு கதாநாயகன்.

எதிலிருந்து வந்தால் என்ன?

எப்படிச் சரக்கு வருகிறது என்பது

தெரியவே தெரியாது

தீர்வது பற்றிச் சொல்லிவிடலாம்

பெரும்பாலும் நாற்பது கடந்தவர்கள்தான் 

நிரந்தர கஸ்டமர்கள்

அதிலும் பலர் நடந்தும் சைக்கிளிலும் வருவார்கள்

சரக்கை வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்கள்

கிளம்பி விடுவார்கள்

விற்பவரின் சொந்தமென யாரையும் வீட்டிற்குள் பார்த்ததில்லை

எம்ஜியார் பாடல்கள் மிகப்பிடித்தம் விற்பவருக்கு.

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...

அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்... போன்ற பாடல்கள்

சுற்று வீட்டின் காதுகளை அடைக்குமாறு மாலை ஏழு மணிக்கு மேல் ஒலிக்கத் தொடங்கும். 

விக்கிறது சாராயம். இதுல தத்துவப் பாட்டு வேற 

என்ற முணுமுணுப்பு எழுந்து அடங்கும்.

ஆனாலும் நேரடியாக யாரும் கேட்டு சண்டை பிடிப்பதில்லை.

அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

விடிந்தும் திறக்காத கதவைத் தட்டி 

எட்டிப்பார்த்த முதல் குடிகாரன்தான்

கிழவன் இறந்துகிடந்ததை முதலில் பார்த்தவன்.

பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டும்

யாரும் வீட்டிற்குள் வரவில்லை

குடிகாரன்தான் கிழவன் பக்கத்தில் சென்று

மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கிடந்த கிழவனின் 

கைலியைச் சரி செய்தான்

பாயில் நேராகப் படுக்க வைத்தான்

தலையணையைத் தலைக்கு அண்டக் கொடுத்தான்

கிழவன் எப்போதும் சரக்கெடுத்துத் தரும் இடத்தில்

தனக்கான சரக்கை முதன்முதலாக 

அவனே எடுத்துக்கொண்டான்

கிழவனின் தலைமாட்டில் சரக்குக்கான பணத்தை

எண்ணி வைத்தான்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டான்

வீட்டின் வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களிடம்

ஏழு மணிக்கெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா 

எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் கொடுத்திடும்

செத்துடலாம்போல இருக்கும்

போனவுடனே வந்துடுறேன் 

ஏதும் உதவின்னா பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்

கிழவனின் ரெகுலர் கஸ்டமர் 

எவனோ ஒருவனிடமிருந்து ரோஜாப்பூ மாலையொன்று 

பாடையில் போகும்போது

நிச்சயமாகக் கிழவனின் கழுத்தில் கிடக்குமென்று 

நம்பிக்கை பிறந்துவிட்டது இப்போது.

யாருக்கு?

கிழவனுக்கு.

எப்படி இறந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்?

இறந்தவனுக்கு உள்ளே போய்ப் பார். தெரியும்…


யாழ் தண்விகா

Friday 16 September 2022

சமூக நீதி நாள் விழா 17.09.2022


அன்பிற்கினிய தோழமைகளுக்கு, 
வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம் கிளை முன்னெடுத்த சமூக நீதி நாள் கவிதைப் போட்டி, மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பேரன்பு. சனாதனம் துளிர்க்கும்போதெல்லாம் அதனை தீவிரமாக எதிர்த்து எப்போதும் களமாடும் மண் தமிழகம். அதற்காக பல தலைவர்கள் நம் மண்ணிலிருந்து போராடி வந்திருக்கிறார்கள். அத்தலைவர்களில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு சிறப்பிடம் உண்டு. அத்தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்ட போட்டிக்கு கவிதைப் பிரிவுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும், ஓவியப் பிரிவுக்கு எண்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களும் வந்திருந்தன. எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவுதான் என்றாலும் இவ்விழா மிகக் குறுகிய காலத் திட்டமிடல் என்பதையும் கருத்தில் கொள்வோமாயின் இந்த எண்ணிக்கை என்பது மிகப் பெரியது. மிகச் சிறப்பாக தங்களது படைப்புகளை ஒவ்வொருவரும் அனுப்பியிருந்தாலும், போட்டி என்பதன் காரணமாக ஒவ்வொரு கவிதையையும், ஒவ்வொரு ஓவியத்தையும் மிகக் கவனமாகப் பரிசீலித்து பெரியகுளம் கிளை தேர்வுக் குழுவினரால் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பெரியகுளம் கிளையின் சார்பாக வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு 17.09.2022, சனிக்கிழமை காலை 10 மணிக்கு பெரியகுளம் வடகரை, அரண்மனைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் கூடத்தில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் பெரியாரின் வழி செல்லும் முற்போக்குச் சான்றோர்களை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்வில் இந்த வருடத்திற்கான பகுத்தறிவுச் சுடர் விருது தோழர் மு.அன்புக்கரசன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. தந்தை பெரியாரை கொண்டாடும் விதமாக, பகுத்தறிவுச் சுடர் விருது பெறும் தோழரைப் பெருமைப்படுத்தும் விதமாக, போட்டிகளில் வெற்றிபெற்ற, பங்கேற்ற அனைவரையும் பாராட்டும் விதமாகவும் அனைவரும் நிகழ்வில் குறிப்பிட்ட நேரத்திற்குக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்புறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து இன்னும் பல நிகழ்வுகளில் இணைந்து செயல்படுவோம். வெற்றி பெற்றோர் விபரம் கீழ்வருமாறு.

#கவிதைப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
லக்சனா
இரண்டாம் பரிசு 
உமேஷ்
மூன்றாம் பரிசு
பாவனா ஸ்ரீ

சிறப்புப் பரிசுகள்
அனுஸ்ரீ
கனிஷ்கா
தீபதர்ஷினி
கோ.அருணா
க.அக்சயா
N.தர்ஷினி
ரா.கோகிலா ஸ்ரீ
நவ குமாரன்
 
#கவிதைப் போட்டி
#18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
ராஜிலா ரிஜ்வான்
இரண்டாம் பரிசு
கம்பம் பிரபஞ்சன்
மூன்றாம் பரிசு
ஹேமலதா, நாக நந்தினி

#சிறப்புப் பரிசுகள்
துர்கா தேவி
அமிர்தா தமிழரசன்
பூர்ணிமா கணநாதன்
வைகை சுரேஷ்
கோ. பாலகிருஷ்ணன்
வசந்ததீபன்
முத்துச் செல்வம்
பாலமுரளி
உதயா
நாக பிரபு
லட்சுமி குமரேசன்
செல்ல முருகேசன்
அஞ்சு மகி
வைகை மகன்
க.போ. சுருளியாண்டவர்

#ஓவியப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு
முதல் பரிசு
கௌசல்யா 
இரண்டாம் பரிசு
வசந்த வேல்
மூன்றாம் பரிசு
யுவராஜா

சிறப்புப் பரிசுகள்
நதியா
கிஷோர்
அமிழ்தினி
பாண்டீஸ்வரபிரசாத்
ஹரீஷ்
அர்ச்சனா
சிவக்கார்த்திகா
வர்ஷா
தர்ஷினி
ச.சூர்யா

#ஓவியப் போட்டி
#18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு
மு.தமிழ்மணி
இரண்டாம் பரிசு
பிரவீன்குமார்
ஜா.மேக்டலீன்
மூன்றாம் பரிசு
முத்துப்பாண்டி

சிறப்புப் பரிசுகள்
த.புனிதா 
தேனி கண்ஸ்
தாழை அரசன்
போஜனா
ஜெகதீஸ்வரன்
கீர்த்தனா

விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் அனைத்துத் தோழர்களுக்கும் வாழ்த்துகள். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முற்போக்கு உணர்வாளர்களே, கலைஞர்களே, கவிஞர்களே, வாருங்கள். நிகழ்வில் சந்திப்போம்.

தோழமையுடன்
கு.தினேஷ் பாபு
கிளைச் செயலாளர்
யாழ் தண்விகா
கிளைத் தலைவர்
இரா.சுந்தர்ராஜன்
கிளைப் பொருளாளர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
பெரியகுளம் கிளை

Sunday 31 July 2022

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்


 

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்...


எண்ணும் எழுத்தும் என்ற அரசின் திட்டத்தை இதற்கு முன்னர் நடந்த பயிற்சியின்போது கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றும் மேற்பார்வை செய்யச் செல்லும் வட்டார வள மைய பயிற்றுனர்களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு 27, 28, 29.07.2022 ஆகிய மூன்று நாட்கள் கிடைத்தது. இடம் உத்தமபாளையம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தேனி மாவட்டம். இதில் முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு. பேருவகையாக அமைந்த அந்த வாய்ப்பின்போது அவர்கள் முன்னிலையில் வாசித்த என்னுள்ளக் கருத்துகளை முன்வைக்கிறேன். அவர்களிடம் சொல்லிவிட்டேன் கொஞ்சம் மொக்கையாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று. போலவே வாசிக்கும் தங்களிடமும்.


எண்ணும் எழுத்தும்...


@

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

ஔவையார் சொன்னது...

எஸ்எஸ்ஏ ஆபீசும் பிஇஓ ஆபீசும் உயிரெனத் தகும்

பி.வி.யார் சொல்வது... (P.VijayaRaj)


@

எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து 

அறிமுகம் செய்வது

எனக்கிடப்பட்ட பணி.

அதற்கு அதற்கு முன்னால்

என் பேச்சைக் கேட்கவிருக்கும் 

உங்களுக்கு thank பண்ணிவிட்டு

வழங்கப்போகிறேன்

சொற்கோர்வைகளால் ஆன

வாழ்த்துக்கனி...!


@

எங்கள் பணி என்ன?

மேற்பார்வை செய்பவர்களுக்கு

எண்ணும் எழுத்தும் திட்டத்தை

பள்ளிகளில் எப்படி மேற்பார்வை செய்வது

என்று பயிற்சி தரவேண்டும்...


இது கொடுப்பினையா...

கொடும் வினையா... தெரியவில்லை...


@

ஒரு கவிதையில்

“ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்

நீ இல்லையென்றால் இடுகாடு பக்கம்” 

என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.


அரசின் திட்டங்கள் எதைத்தான்

நீங்கள் முடியாதென்று சொன்னீர்கள்...

எண்ணும் எழுத்தும் மட்டுமல்ல

எப்போதும் எதற்கும் முடியும்

முடியும் முடியும் என்றே

சொல்லச் சொல்லி ஆசிரியர்களைச் 

செயலுக்குப் பழக்கப்படுத்தியவர்கள்

நீங்கள்.


ஆக மேலிடத்தின் 

கட்டளையை கச்சிதமாகக் கல்வித்துறைக்குள்புகுத்தும்

போர்க்களப் பணியாளர்கள் நீங்கள்.

ஆம்.

கககபோ வேறு யாருமில்லை 

நீங்கள் தான்.


@

கண் சிமிட்டுவதற்குக் கூட நேரமில்லை

பார்த்திருக்கிறேன் உங்கள் பணியை.

இந்தக் கல்வியாண்டின் குறுகிய காலத்திலேயே

ஒருபுறம் எஸ் எம் சி

ஒருபுறம் ஐ டி கே

ஒருபுறம் எண்ணும் எழுத்தும்

ஒருபுறம் கிட்பாக்ஸ் வழங்கல்

ஒருபுறம் ஆசிரியர் கையேடு வழங்கல்

மாணவர் பயிற்சி நூல் வழங்கல்

இப்படி எத்தனை எத்தனை…


திடீரென்று அழைப்பு வரும்

உடனே ஆன்லைன் மீட்டிங்

நிகழ்வு முடிந்த அடுத்த சில  நொடிகளில்

கையோடு அவரவர் சீட்டை எடுத்துவந்து

முன்னாடி அமருங்கள் என்று சொல்லி

சூப்பர்வைசர் நடத்தும்

அலர்ட் பண்ணுவதற்கான

ஆஃப்லைன் மீட்டிங்...


ஓடிக்கொண்டிருந்தால்தான் நதி

நின்றுவிட்டால் அது குட்டை...


பல பணிகளில்

பல பள்ளிகளில்

ஆசிரியர்களை இழுத்துச் செல்லும் நதி நீங்கள்.

பணிகளை பள்ளிகளை

தேங்கிவிடாமல் 

இழுத்துச் செல்லும் நதி நீங்கள்...


@

தேன், தேனீ, தேன்கூட்டைப் பற்றித் 

தெரியாதவர்களுக்கு

தேடித் தேடி விளக்கம் தரத் தேவையில்லை.

நீங்கள்தான் தேனீக்கள்

ஒவ்வொரு பள்ளியிலும், அதன் வளர்ச்சியிலும்

நீங்கள் காட்டும் அக்கறை, டேட்டா தான் 

தேன்.

கொண்டு வந்து ஒப்படைக்கும் 

வட்டார வள மையம் தான்

தேன்கூடு.


அவ்வளவு எளிதாகத் தேன் கிடைத்துவிடுகிறதா?

எத்தனை எத்தனை வலிகளுடன்தான் 

உங்கள் ஓட்டம்?


எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம்

என ஒவ்வொரு பள்ளியும் புலம்பும்போது

பல பள்ளிகளைத் தாங்கி நிற்கும்

உங்களை எப்படிப் பாராட்டுவது?


@

பூ ஒன்று புயலாவதைக் காணத்தான்

அவ்வப்போது பயிற்சி நாட்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்

என்பது போல

பெரியகுளம் ஒன்றியமே அதற்குச் சாட்சி...

ஒருவர் புத்தகத்தோடு இருப்பார்

ஒருவர் புத்தகமாகவே இருப்பார்

ஒருவர் அலட்டிக்கொள்ளவே மாட்டார்

ஆனால் மணிக்கணக்கில் அசரடிப்பார்

ஒருவர் சிரித்தபடி உரையாற்றுவார்

ஒருவர் சிந்தித்தபடி செயலாற்றுவார்

இப்படி ஆண் பயிற்றுநர்கள்


பெண் பயிற்றுநர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்

களம் எதுவென்றாலும்

சிகர இலக்கு நோக்கிப் பயணிக்க 

சிரத்தையுடன் சிரித்த முகத்துடன்

ஆசிரியர்களை அழைத்துச் செல்லும் 

சிங்கப்பெண்கள் அவர்கள்.


@

எங்கள் பள்ளிக்குக் கிடைத்த பயிற்றுநர்களின் 

கோபம் அறிவேன்.

வலிக்காமல் அடிப்பது போன்ற 

தாய்மை நிரம்பியவர்கள்.


அடுத்த முறை நான் வரும்போது

இதைச் சரிசெய்து வைத்திருக்கவேண்டும்

இதை எழுதி வைத்திருக்கவேண்டும்

இக்குழந்தைகள் இன்னும் முன்னேற்றம் கண்டிருக்கவேண்டும்

எனச் சற்றே குரல் உயர்த்திச் சொல்லுதல்தான்

அவர்களின் அதிகபட்சக் கோபம்.

அது மட்டுமா

பார்வையாளர் பதிவேட்டில்

நிறைகள் எழுதி குறைகளை லாவகமாக 

மறைத்தெழுதும் பண்பு.

எத்தனை எத்தனை உணர்வுகள் அதில்...

வருத்தம், எதிர்பார்ப்பு, ஆதங்கம், 

தனக்கு ஒதுக்கப்பட பள்ளியின் மீதான அக்கறை...

இன்னும் இன்னும்.


@

5 நாட்கள் பயிற்சி

எண்ணும் எழுத்தும்

இதற்கு முன்னும் நடந்தது.

உங்களால்தான் சாத்தியமானது 

சத்தியமானது அன்று.


வேளாவேளைக்குச் சிற்றுண்டி

தேநீர்

நேரக் கண்காணிப்பு

வகுப்பறைக் கண்காணிப்பு

ஒழுங்குக் கண்காணிப்பு

வருகைக் கண்காணிப்பு...

ஆயிரம் செய்தும்

இன்று காடு, மலை தாண்டி

ஒன்றியம் விட்டு ஒன்றியம்

அதே பயிற்சிக்கு

பாளையத்தில் பாவமாக அமர்ந்திருக்கும்

“உங்களைப் பார்த்தா பாவமாக இருக்கு”

இருக்கட்டும் இருக்கட்டும்

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...


@

பாலுமகேந்திராவுக்குப் 

பாலா பயிற்சியளிப்பதா...

பாரதிராஜாவுக்கு

பாக்யராஜ் சொல்லிக்கொடுப்பதா…

அமீருக்கு

சசிக்குமார் வகுப்பெடுப்பதா...

மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

சூரியன் திரும்பும் திசையெல்லாம்

சூரியகாந்தி திரும்புதல் தானே 

உலக வழக்கம்...

ஆதலினால் சூரியன்களுக்கு

நான் பயிற்சியளிக்கப்போவதில்லை...

சொல்லிக்கொடுக்கப்போவதில்லை...

வகுப்பெடுக்கப்போவதில்லை...

தெரிந்தவை பகிர்கிறேன்.


வாய்ப்பிற்கு நன்றி...


யாழ் தண்விகா

Sunday 24 July 2022

பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

 



பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

புலியூர் முருகேசன்
தோழர் புலியூர்

சிறுகதைத் தொகுப்பு

ஆம்பிரம் பதிப்பகம்

விலை ரூ 150/= பக்கங்கள் 206

மொத்தம் 13 சிறுகதைகள். வாழ்க்கையிலிருந்தே இந்தக் கதைகள். கதைகள் என்பதை விட வலிகளை உண்டுபண்ணும் காட்சிகள் ஒவ்வொரு கதையிலும். பல கதைகளில் என்னைப் பொருத்திக்கொண்டு வாசித்தேன். கண்ணீர் மல்கச் செய்தன, துரோகங்களைக் காட்சிப்படுத்தின, அரசியல் கதை சொல்லியது, திருநங்கை குறித்த கதை என ஒவ்வொன்றும் சிறப்பு.

சங்கர் சங்கர் சங்கர் சங்கர் சங்கர் மற்றும் இன்னுமொரு சங்கர் முதல் கதை. கடன் கேட்டுச் செல்லும் ஒருவனை இந்தச் சமூகம் எப்படி எல்லாம் வதைக்கிறது, அவனை தனக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறது என்பதைக் கூறுகிறது. நானும் பல சங்கர் பார்த்திருக்கிறேன். சங்கர் என்ற பெயரைப் பொருத்தித் திரியும் பலர் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். சொல்லி வைத்தாற்போல் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறுவார்கள். தன்மானத்தை, மானம், ரோஷத்தை அடகு வைத்து அவர்களிடம் கூனிக் குறுகி நிற்கும்போது அவர்களின் பதில் எவ்வளவுக்கெவ்வளவு விட்டேத்தியாக இருக்கும் என்பதை இவ்வளவு தெளிவாக இதற்கு முன்னர் நான் வாசித்த கதைகளில் கண்டதில்லை. கடன் கேட்பவர்களை விட கடன் கொடுப்பவர்கள், கடன் கொடுக்க இழுத்த்டிப்பவர்கள் தங்கள் முகத்தைக் காண இந்தக் கதையை அவசியம் வாசிக்கலாம். 

செவப்புக்காய் வாயூறும் கதை தனித்துவம். ஊரே பெரும் களவாணித்தனம் செய்யும் சூழலில்,  அன்றாடங்காய்ச்சிக்கு மட்டும் பசி பூக்க அவர்கள் செய்யும் சிறு தவறுக்கும் பெறும் தண்டனை அளிக்கும் இந்த சமூகத்தின் மேல் காறித் துப்புகிறது கதை. கேரளா மது அடித்துக் கொல்லப்பட்டது நினைவுக்கு வந்துபோனது.

வட்டாரத்துக் கோடி கதை கண்ணீர் வரவழைத்தது. அன்பிற்காக இந்த உலகம் இயங்குதலை அழகாக, வலியோடு காட்சிப்படுத்தியுள்ளது. நாடார், பள்ளர் இரு சமூகத்தைச் சார்ந்த நண்பர்கள், அவர்கள் நட்பாக மாறிய கதை. அய்யாவுக்கும் ஆண்டிக்கும் பூத்த நட்பு இறப்பு வரை நீடிக்கிறது. அய்யாவு வீட்டில் அய்யாவு சாப்பிட்ட கும்பாவில் ஆண்டி உண்ணுவதும் ஆண்டி வீட்டில் பன்றிக்கறியை அய்யாவு உண்ணுவதும், தனது சமூகத்தால் ஆண்டி தூண்டிவிடப்பட்டு சிலம்பாட்டத்தில் அய்யாவுவை வெறி கொண்டு தாக்கும்போது அதை நட்பிற்காக நாசூக்காகக் கையாண்டு இறுதியில் இருவரும் கட்டி அணைத்துக்கொள்வது என்று கதை நட்பு பேசுகிறது. வறுமை அவர்களின் குடும்பத்தைச் சினம் கொண்டு தாக்கியபோதும் நீளும் நட்புக் காட்சிப்படுத்தல் அருமை.

வெயிற்கால மழைப்பூச்சி, பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு ஆகிய கதைகள் சங்கர மட கொலை, புலி பிரபாகரனின் இளவல் பாலச்சந்திரன் கொலை  குறித்துப் புனைவாகப் பேசுவது போல அதன் பின்னால் உள்ள அரசியல் பேசுகிறது.

சிங்கம் புராஜெக்ட் கதை பணம் வாங்கி கல்வியை விற்கும் நிறுவனங்களைச் சாடுகிறது. பகடியாகவும் அதே சமயம் மக்களை ஏமாற்றும் மாய வித்தைக்காரன் போலவும் இந்த நிறுவனங்கள் செயல்படுகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

பாதி எரியூட்டப்பட்ட பாடலை மதுக்கோப்பையில் பருகுபவன் ஸ்வர்ணலதா பாடல்களை வியக்கும் தருணங்களைக் கூறிச் செல்கிறது ஒருபக்கம். மறுபக்கம் ஒரு எல் ஐ சி பாலிசி எடுக்க ஏஜெண்ட் படும் அவஸ்தையைப் பற்றிப் பேசுகிறது. கதையில் சொல்வது போல நிறுவனத்தில் உள்ளவர்கள் தனக்குப் பிடித்தவர்களிடம் சொல்லி தெரிந்தவர்களை தொடர்புகொள்ளச் செய்வது, தனக்குப் பிடித்த உறவுக்காரர்கள், சாதிக்காரர்களுக்கு கமிஷன் கிடைக்க வழி செய்வது, அரசுப்பணி செய்யும் ஒருவர் தன்னுடைய இணையரை ஏஜெண்ட் ஆக்கி அவர்களுக்கு உழைப்பது, முழுநேரப் பணியாக குடும்பத்தில் ஒருவர் ஏஜெண்ட் ஆகப் பணி செய்யும்போது அவர்களின் வாழ்வில் மண்ணள்ளிக் கொட்ட மேற்சொன்னவர்கள் போதாதா... 

ஐ சி ஐ சி ஐ வங்கிக்கு தினமும் வந்து திரும்புபவள் கதை ஊரில் மறக்கப்பட்ட நீலவேணி அக்காக்கள் பற்றிய கதை. பைத்தியம் என்று ஏறக்கட்டும் சமூகம் அவர்களின் பின்னால் உள்ள வலியை என்றாவது தேடியிருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும். இக்கதை அதைத் தேடியிருக்கிறது. கட்டிக்கொடுத்த இடத்தில் நிகழும் பாலியல் வன்முறை, அதனால் தீக்குளிக்கும் பெண், மாமனாரின் பாலியல் வக்கிரம் எனப் பேசுகிறது. கடைசியாக, கால மாற்றத்தில் பேருந்து நிலையம் இருந்த இடம் வங்கியாக மாற்றப்படும்போது இந்தச் சமூகத்தால் பைத்தியம் என்று கூறப்படுபவள் மேலும் எப்படி வஞ்சிக்கப் படுகிறாள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் கதை திருநங்கையாக உருமாறிய ஒருத்தியின் குடும்பத்தில் தந்தையானவன் சுப்பிரமணி என்ற பெயருடைய அவளுக்குச் செய்யும் பாலியல் கொடுமை பற்றியும், மூக்குத்தி காசி கதை திருநங்கை சந்திக்கும் பாலியல் வன்கொடுமை, அவற்றிற்கான எட்டப்படாத தீர்வு, எள்ளி நகையாடும் சமூகம் பற்றிப் பேசுகிறது.

குறிச் சிலம்பாட்டம் கதை நவீன உலகின் இயந்திரத் தனமான அலுவலக வேலைகள் அதற்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் குறித்துப் பேசுகிறது. யாகக் குண்டத்தில் பால் ஊற்றி எரிக்கப்பட்ட நைலான் கொசுவலை கதையும், நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற இரு கதைகளும் நட்புத் துரோகம் குறித்துப் பேசுகிறது. அதிலும் நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற கதை துரோகத்தின் உச்சம். எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை அறிய இக்கதை உதவும்.

ஒவ்வொரு கதை குறித்த சிறு குறிப்பாக வேண்டுமானால் இவை இருக்கலாம். ஆனால் கதை வாசிக்கும்போது அந்த வலியை நாம் அனுபவிப்பதுபோல மொழி நடை அமைந்திருக்கிறது. வாழ்க்கையைப் பதிவு செய்யும் கலையை நூலாசிரியர் அறிந்திருக்கிறார் என்று கூறுவதைவிட வறுமையை, மனிதம் விரும்பாத இந்த உலகின் முகத்தை, திருநங்கைகள் சந்திக்கும் பாடுகளை, ஒவ்வொரு மனிதனின் மறுமுகத்தை அதன் அதன் வலியை அவரவர் சொற்களில் பதிவுசெய்திருக்கிறார் தோழர். 

வாசிக்கவேண்டிய தொகுப்பு.
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா


Thursday 21 July 2022

ஒரு சகலகலா சவரக்காரன் பராக்... பராக்...


ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...

ப.நடராஜன் பாரதிதாஸ்

ஆதி பதிப்பகம்

பக்கங்கள் 96

விலை: ரூ 100


பேரக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல என்பது போல் தொகுப்பின் தலைப்பே ஒரு கதாநாயகத் தன்மை அளித்துவிடுகிறது. கவிஞருக்கு வாழ்த்துகள்.

கவிஞர் EMS கலைவாணன் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிற்குப் பின்னர் நாவிதர்களின் வாழ்க்கைப்பாட்டைக் கூறும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு. சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு கவிதையிலும் பூடகமாக சில விஷயங்களை உள்ளே வைத்து இருப்பார்கள் என நினைத்து அதை வாசித்து பொருளைப் புரிந்துகொள்ளும் முன்னர் தாவு தீர்ந்துவிடும் நவீன காலச் சூழலில் இதுதான் கவிதை. இதுதான் அது வெளிப்படுத்தும் கருத்து என்பதை வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


பொதுவாக தொகுப்பை விமர்சனம் செய்யவோ மதிப்புரை செய்யவோ தொகுப்பிலிருந்து ஓரிரு கவிதைகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். இத்தொகுப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மைக் கவிதைகள் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட வேண்டியதாக அமைந்திருப்பது சிறப்பு. ஊரின் வரலாற்றைக் கூறி வளர்த்த பாட்டியிடம் நாவிதர்களுக்கான வரலாறை அறிய நினைக்கும்போது செத்துப் போனதால் அந்தப் பணியை தான் மேற்கொண்டிருப்பதாகக் கூறி தன்னுடைய முதல் கவிதையைத் தொடங்குகிறார். மனிதனை மனிதன் எப்போது மதிக்கவில்லையோ அப்போதே இங்கு பிளவுகளும் உண்டாகிவிட்டது. அதற்கு இனக்குழு, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. இருக்கிற எல்லாச் சாதியிலும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாடகத்தில் துரியோதனன் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர் 

“அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க

கஜபலம் புஜபலம் பொருந்திய 

என்னைப் பார்க்கின்ற தருணத்திலே

என் நாமதேயம் என்னவென்று தெரியுமாடா

அடேய்! காவலா” என்கிறார். 

அதற்கு கட்டியக்காரன் வேடம் தரித்த உள்ளூர் கோபால்,

“ஏன் தெரியாது

ஊடு ஊதா போயி செரச்சி

ஊருசோறு எடுத்துத் திங்கற

எங்க ஊரு அம்பட்டன்னு 

நல்லாவே தெரியுமுங்க” என்றவுடன் 

கூட்டமே கொள்ளென்று சிரித்தது.

“அன்றிலிருந்து வேசம் கட்டுவதே இல்லை அய்யா” என்று கவிதையை முடிக்கிறார் கவிஞர். சாதியின் எகத்தாளத்தை இவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்வது அரிது. ஆனால் அதனைச் செய்திருக்கிறார் கவிஞர்.


சுயசாதிப் பகடி பல கவிதைகளில் நர்த்தனம் ஆடுகிறது. ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் ஊர் பண்டிதர் பழனி சாங்கியம் செய்தால் செத்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என நினைக்கும் ஊரில் 

“அவர் செத்த அன்னிக்கு

நாலு ஊரு நாவிதனும்

கோமணம் போறது தெரியாம குடிச்சிட்டு

நாலு ஊரு சாங்கியம் சடங்குகளையும் செய்து

நாசகோசம் செய்தார்கள்.

அய்யா கடைசில

சொர்க்கம் போனாரா

நரகம் போனாரான்னு தெரியல’’ என முடிகிறது கவிதை. நாங்க ஆண்ட சாதி, அப்படி இப்படி என்று பறைசாற்றும் வேளையில் (மருத்துவர் என்றும் நாவிதர் என்றும் அழைக்கப்படும் சமூகம் அப்படிச் சொல்லுவதற்கும் உண்மைக் காரணங்களை அடுக்கும் கவிதைகளும் உண்டு) ஒரு இறப்பின் வாயிலாக இன்றைய தலைமுறை குடிக்குள் சிக்கிக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


காலமெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒருவனின் தலைமுறை அவனைப்போலவே இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன? அப்படி அடிமைப்படுத்தி வைக்க அவன்மேல் வைக்கப்பட்ட புனித பிம்பங்கள்தான் எத்தனை எத்தனை? தொடர்ச்சியாக பல பாராட்டுகளைச் சொல்லிக்கொண்டு வரும் கவிஞர் இறுதியாக 

“அடிச்சாலும் வாங்கிக்குவான்

புடிச்சாலும் தாங்கிக்குவான்

ஆந்தாந்து பேசிக்கொண்டார்கள்


அய்யாவின் சாவிற்குப் பிறகு

இப்படிப்பட்ட நாவிதனைத்தான்

தேடிக்கொண்டிருக்கிறது

எங்க ஊர்”

எப்படிய்யா கிடப்பான் இக்காலத்தில். கிடைக்கமாட்டான். கிடைக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்றுணர்த்துகிறது வரிகள்.


எல்லா ஊரிலும் சுடுகாட்டில் குழி தோண்டுவது, கொள்ளிச் சட்டி உடைச்சு விடுவது, இறந்தவனின் வாரிசுக்கு மொட்டை எடுப்பது போன்ற பலரை நடத்தும் விதமும் அவர்களுக்கு கேட்கும் பணத்தைக் கொடுக்காமல் மிகச் சொற்பமான தொகையைக் கொடுப்பதும் சுடுகாடு வரை போய்வரும் நபர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை 

“கட்டளைக்காசு ஏத்திக் கொடுங்கன்னா

கட்டளைக்காசுக்கு கள்ளநோட்டுதான்டா அடிக்கணும்

என்றார்கள் ஊர்க்காரர்கள்.


பதினோராம்நாள் 

கல்தொரையில்

அய்யர் கேட்கும்போதெல்லாம்

கேட்டா கேட்ட காசு

அம்பது நூறுயென அவுத்து அவுத்து கொடுத்தார்கள்.

ஊர்ல கள்ளநோட்டு

அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கபோல” என்கிறார். ஆள் பார்த்து பட்டுவாடா செய்யப்படும் பணத்தைப் பற்றியும் அங்கு நாவிதர்களைப் படுத்தும்பாட்டையும் உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் கவிஞர்.


ஊர்க்காரங்களுக்கு முடிவெட்ட ஆள் வேணும் என்பதற்காக சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பக்கூடாது என்பதை மகனுக்குக் கூறுகிறார் ஒரு தந்தை  இப்படியாக.

“நீதான் வெட்டணும்

நீயேதான் மீசை வைக்கணும்

உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னு

பிஞ்சு மனசுல நஞ்ச விதைப்பார்கள்

நம்பிடாதே மகனே


பதினைந்து வயதில்

என்னை படிப்பை இழக்கச் செய்தது

இதே உசுப்புதான்

இதே பசப்புதான்...”


32வது கவிதையில் முதல் பத்தியில் சனாதன நபர்களைப் பற்றிக் கூறுவது போலவும் இரண்டாம் பத்தியில் கம்யூனிஸ்ட் நபர்களைப் பற்றிக் கூறுவது முரணாக இருப்பதாகப் படுகிறது. ஒரு ஆறையே ஆட்டையப் போட்ட அரசியல்வாதியைப் பற்றிய கவிதை அபாரம். இப்படிப் பல கவிதைகள். சமகால அரசியலையும் உள்வாங்கிப் பேசும் கவிதைகள். 


வாழ்த்துகள் தோழர் ப.நடராஜன் பாரதிதாஸ்.

மீண்டும் ஒரு கவிதை...

“நாங்கள் பேசாத 

அரசியல் இல்லை

எங்களைப் பேசும்

அரசியல் தானில்லை


டீக்கடை வச்சா

முதல்வராக முடியுது

பிரதமராக முடியுது

சவரக்கட வச்சவனுக்கு

சாகரவரைக்கும்

ஒரு வார்டு மெம்பருக்குக் கூட

வக்கில்லையோ”

ஜனநாயகத்தின்மேல் கல்லெறியத் தேவையற்ற ஒரு சூழலை எந்தச் சமூகமும் பெறவேண்டும். அதற்கு, எல்லாம் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதுவரை தோன்றட்டும் இது போன்ற புரட்சிக் கவிதைகள்.


யாழ் தண்விகா


 

Wednesday 20 July 2022

மோர்க்காரம்மா...



4பேர். ஒவ்வொரு நபரும் மொத ரவுண்டு ஒரு டம்ளர் மோர் குடிச்சாச்சு. ரெண்டாவது ரவுண்டுக்கு ரெண்டு பேர் மட்டும் ஒவ்வொரு டம்ளர். ஊத்திக் கொடுத்த பொம்பள மொத்தம் 6 டம்ளர்னு சொல்றப்பதான் எதுக்குடா இந்தம்மா டம்ளர் கணக்கு சொல்லுதுன்னு பாத்தானுங்க. 60 ரூவா ஆச்சுய்யா. கொடுங்கனு மோர் ஊத்தித் தந்த பொம்பள சொல்லவும் குடிச்ச ஆளுக எதுக்கும்மா காசு தரணும்? நீதானம்மா போற ஆளுகளை நிப்பாட்டி ஊத்திக் கொடுத்தனு சொன்னானுங்க. மாரியாத்தா சன்னதில வம்பு வளக்காம காச கொடுப்பான்னு சொல்லுச்சு மோர்க்காரம்மா. காசுன்னு முன்னாடியே சொன்னா நாங்க எதுக்குமா வாங்கிக் குடிக்கப் போறோம் அதும் இந்த மழை நேரத்துலனு சொல்லிக்கிட்டே 50 ரூபா எடுத்துக் கொடுத்துட்டு பொலம்பிட்டே போனானுங்க. 


ஒரு சந்தேகம் வந்து ஓரமா நின்னு பார்த்தேன். ஏன்னா வீரபாண்டி மாரியம்மன் கோயில்ல இதே போல நானும் ஓசின்னு வாங்கி மடக் மடக்குன்னு குடிச்ச பின்னாடிதான் காசக் கேட்டானுங்க. அது நடு மத்தியானம். அதக் கூட ஏத்துக்கலாம். இது ராத்திரி ஒன்பதரை மணி. ஓசின்னாலும் ஒரு நேர காலம் வேணாமாடா...


இதேபோல போற வார ஆட்களை நிப்பாட்டி தின்னீர் போட்டுவிட்டு காசு கேட்க மஞ்சச் சேல கட்டி இன்னொரு அம்மா.


திருவிழாக் காலத்தில் பூக்கும் மோர்க்காரக் கும்பல்கிட்ட, தின்னீர் போடும் ஆளுங்க கிட்ட எச்சரிக்கையாக இருங்க பக்தர்களே.


#மாரியாத்தா_சார்பாக_உங்கள்_தோழர்...


யாழ் தண்விகா


🔥


 

Monday 18 July 2022

இரவின் நிழல்


 

இரவின் நிழல்


திரைப்படத்திற்கான ஒளியை அறிமுகப் பேச்சுகள் மூலம் அதிகப்படுத்தி திரைக்கதைக்கான ஒளியை இல்லாமல் செய்துள்ளது பெரும் வருத்தம். பார்த்திபன் தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களிலும் உள்ள சைக்கோத்தனமான கதாநாயகத் தன்மையை வடிகட்டி நந்து என்னும் கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் என்பதை விட மீண்டும் சொல்லியுள்ளார் எனலாம். ரகுமான் இசை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரியவில்லை. World's first non linear என்று சொல்லியதால்  படத்திற்கு ரகுமான் இசை கூடுதல் ஃபோகஸ் கிடைக்க வாய்ப்பிருக்கும் என்பதால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். Making பற்றி முதலிலேயே 30 நிமிடங்களில் சொல்லிவிட்டதால் படம்  அனைத்தும் செட்டிங்ஸ்ல் நடக்கிறது என தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒட்டாத கதையில் இது கூடுதலாக ஒட்டாமல் இருக்கிறது. கலை இயக்குனர், ஒளிப்பதிவு நல்லாருக்கு. Lyrics... வேண்டாத முயற்சி இயக்குனருக்கு. Non linear திரைப்பட முயற்சிக்கு பெரு வாழ்த்துகள். கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் உலகம் கொண்டாடும் திரைப்படமாகவும் மாறியிருக்கலாம்.


வாங்கிய கட்டணத்திற்காக 3 பேர் ஆனாலும் இந்த பகலிலும் இரவின் நிழலை அனுபவிக்க வாய்ப்பளித்த திரையரங்க உரிமையாளருக்கு பேரன்பு.


யாழ் தண்விகா


💝

Wednesday 13 July 2022

தீ நுண்மிகளின் காலம்...


தீ நுண்மிகளின் காலம்

இரா. பூபாலன் 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

பக்கங்கள் 64

ரூபாய் 70


உலகமே கொரோனா பெருந்தொற்றால் ஒடுங்கிக் கிடந்த கால கட்டத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. திரும்பிப் பார்க்கவேண்டிய வரலாறு கவிதைகளாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடும் அதனதன் அரசியல் சக்திக்கேற்ப ஜனநாயக ரீதியாகவோ, சர்வாதிகார ரீதியாகவோ தனது மக்களுக்கு எதனைக் கொடுக்க வேண்டுமோ அதனைப் பரிசளித்தது. இந்திய நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு கொண்டைக் கடலை வழங்குவதாகச் சொன்னது. வந்ததா எனத் தெரியவில்லை. வரவில்லையா எனத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்களை சொந்த ஊருக்கு அகதிகளைப் போல நடக்க வைத்தது. ஆயிரம் ரூபாய் கொடுத்தது மாநில அரசு. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் தரும் செய்திகள் பதட்டத்தைக் கூட்டுவதாகவே இருந்தன. நம்பிக்கையை விதைக்குமாறு இங்கு எதுவும் நடக்கவில்லை. அதைத்தான் தன்னுடைய கவிதைகளில் விதைத்துள்ளார் தோழர் இரா.பூபாலன்.


எழுதும்போது சின்னச் சத்தம் வந்தாலும் காகிதத்திற்கு வலிக்கும் என்பதுபோன்றதான மெல்லினச் சொற்களை தன்னுடைய கவிதைகளில் படர வைக்கும் தோழர், தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் அரசியலை அனாயசமாகப் பதியமிட்டுள்ளார். அதிகாரத்தை நோக்கிக் குரல் எழுப்பியுள்ளார். ஆதங்கம் இல்லாமல் வெறுமனே பெறுந்தொற்றுக் காலத்தைக் கடக்குமளவா இங்கு ஆட்சி நடந்தது? கடனுக்கு வட்டி இல்லை, வாங்கக் கூடாது என்று அரசு சொன்னது. ஆனால் நடந்தது என்ன என்பது சமூகம் உணரும். இப்படிச் சொல்லிக்கொண்டே போக கணக்கு வழக்கில்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட காலத்தின் மீதான அவநம்பிக்கையிலிருந்து கவிதைகள் தோன்றியுள்ளன.


பெருந்தொற்றுக் காலத்தின் காட்சிகள் கண் முன் விரிய ஒரு கவிதை இப்படி முடிகிறது

“விலங்குகளும் பறவைகளும்

புதிய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கின்றன,

இயற்கை ஆதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

மனிதன் இயல்புக்குத் திரும்பிவிடும் 

நாளை எண்ணி 

பயந்துகொண்டிருக்கிறார் கடவுள்”

இந்த பூமி இயற்கைக்குச் சொந்தமானது. மனிதன் ஒரு விருந்தாளி. அவ்வளவுதான். ஆனால் அவன் செய்யும் இயற்கை விரோதச் செயல்கள் கணக்கில் அடங்காதவை. இந்த ஊரடங்கு இப்படியே போனால் இயற்கை மகிழும். ஆனால் மனிதன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டான் எனில் மீண்டும் பூமியைக் கந்தலாக்குவான் என்று கடவுள் பயந்து கொண்டிருக்கிறார் என்று காட்சிப்படுத்துவதிலிருந்து மனிதன் எப்பேர்ப்பட்டவன் என்றுணர முடியும்.


வாகனங்கள் ஏதுமற்ற ஊரடங்குக் காலத்தில் சொந்த ஊருக்கு அகதிகளைப் போல நடந்து சென்ற காட்சிக்குள் ஆயிரமாயிரம் கிளைத் துயர்கள். சிறு குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை, வயதான முதியோர்களை நடக்க வைத்து இன்புற்றுக் கிடந்தது அரசுகள். தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு கட்டி வைத்து அடித்த சம்பவங்கள் அரங்கேறின. அதனை தீ நுண்மிக் காலம்-3 என்ற கவிதையில் வெளிக்கொணரும் கவிஞர் இப்படியே நடந்து நடந்து வலிகளில் உணர்வு மரத்துப் போய் தண்டவாளத்தில் உறங்கி ரயிலுக்கு தம்மை இரையாக்கிக் கொண்டதை தனியே தண்டவாளங்களின் குருதி என்ற கவிதையில் கூறியுள்ளார். அந்தக் கவிதை இப்படியாக தொடங்குகிறது...

“தண்டவாளங்களில் 

குருதியைப் பூசிப்பார்ப்பது

புதிதில்லை நமக்கு.


ஆணவக் கொலைகளின் 

முகமூடிகளை தண்டவாளங்களுக்கு மாட்டி

அழகு பார்ப்பவர்கள் நாம்.”


அப்பேர்பட்ட தண்டவாளத்தில் சொந்த ஊருக்குச் சென்றோர் ரயிலால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். “அதன் பெயர் பசி, அதிகாரம், அலட்சியம், சர்வாதிகாரம்” என்கிறார் கவிஞர்.


ஊரடங்குக் காலத்தில் தான் பெரும்பான்மைக் குடும்பங்கள் அவசியத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றாக பேசிக்கொண்டும் சிறு விளையாட்டுகள் ஆடிக்கொண்டும் இருந்தன. அவசியமற்று மருத்துவமனைக்குச் செல்லவில்லை. கொரோனா அறிகுறிகளைத் தவிர வேறொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. பிள்ளைகளுக்காக உழைப்பதற்கு ஓடிய தகப்பனின் வாழ்க்கை அவர்களின் மகிழ்வு எது என்பதைக் கண்டறிந்து ஆனந்தக் கூத்தாடியது. இதை

“ஒரு மகிழ்ச்சியின் குடும்பத்திற்குத் 

திரும்பியிருக்கிறோம்

தனிமைக் காலத்தில்

திசைகளெங்கும் திரிந்து பறந்த பறவைகள்

கூட்டுக்குத் திரும்புவதைப் போல” என்ற வரிகளில் பார்க்க முடிகிறது.


இந்தக் கால கட்டத்திலும் நீட் தேர்வு என்னும் கொடுமை அரங்கேறியது. உயிர் பயம் கவ்விக்கொண்டு இருந்தாலும் இணைய வழிக் கல்வி நடக்கத் தொடங்கியது. குடிச்சாலைகள் திறக்கப்பட்டன என்பனவற்றையும் கவிதைகளாக கவிஞர் வடித்துள்ளார். பெருந்தொற்றுக் காலக் கண்ணாடியாக விரியும் கவிதைகள் ஒவ்வொன்றும் மீண்டும் அக்காலத்திற்குள் நம்மைப் பயணிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட கவிதைதான் இது...

“நீண்ட நாட்களுக்குப் பின்னர்

குறுநகரப்பேருந்து ஓட்டுனர்

அதியதிகாலையிலேயே

பணிமனைக்கு வந்துவிட்டார்.

வெகுநாட்களின் பின்னர்

சந்திக்கும் காதலியைப் போல

ஆழமாகப் பார்க்கிறார்.

அந்தப் பேருந்தை

பிரகாரத்தை வலம் வருவது போல

பக்தியுடன் ஒரு சுற்று சுற்றி வருகிறார்

நீண்ட நாட்களின் பின்னர்

தனது இருக்கையில் அமர்ந்தவர் ஒருமுறை

ஸ்‌டீரியங்கைத் தொட்டுக் கும்பிட்டார்

அண்ணாந்து தலைமேல் அமர்ந்திருந்த 

இளையராஜாவுக்கு ஒரு முத்தத்தை நல்கினார்

அவர் அந்த நாளை 

இப்படித் துவங்கி வைத்தார்

“புத்தம் புது காலை”...

விடுபட்ட காலத்திலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கைக்குள் புகுவதை இவ்வளவு எளிதாக உணர்த்தமுடியுமா என்றால் ஆமாம் உணர்த்த முடியும் என்பதை இலகுவான வரிகளாலும் காட்சியினாலும் சிறப்புறச் செய்துள்ளார் கவிஞர். பெருந்தொற்று முடிவானால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படவேண்டும். மருத்துவமனை செல்லும் அத்தருணத்தில் உண்டாகும் குடும்ப உறவுகளின் மீதான பிணைப்பு காண்போரைக் கண்ணீர் வரவழைக்கும். 

“வெள்ளை நிற வாகனம்

வந்து நிற்கிற சமயம்

அவன் தன் வீட்டைத்

திரும்பித் திரும்பி பார்த்தபடிக்

கிளம்புகிறானே

எப்போது அந்த வீடு குலுங்கிய குலுங்கலை

ஒருவரும் கவனித்தாரில்லை.”

வலியை உரைக்கும் கவிதை அருமை தோழர். 108 வாகனத் தொழிலாளர்கள் அவர்களின் பங்களிப்பு குறித்த கவிதைகள் இன்னும் இருந்திருக்கலாம். காலத்தின் கண்ணாடி என்று தொகுப்பை தாராளமாக நாம் கூறலாம்.


வாழ்த்துகள் தோழர் இரா.பூபாலன்


யாழ் தண்விகா



 

Tuesday 12 July 2022

காதல் கொண்டு வா...!


பிரிவு

நீங்கலாக

ஒரு காதல் 

கொண்டு வா...


அழகைப்

பிசாசு போலாக்கி

வைத்திருக்கிறாய்

ஆட்டுகிறது என்னை


பேசவேண்டும் நான்

மௌனமாக இரேன்

கொஞ்ச நேரம்


கட்டிப் பிடித்த கணம்

உன் தோளில் சாய்ந்தேன்

மனசு சுகமாக 

அழுந்திக் கிடந்தது

உன் மனதோடு


ஆட்கள் இருக்கிறார்கள்

ஒரு முத்தம் தர பெற இடம் தேடினேன்

நீ அழைத்துப் போகிறாய்

செம ஆளுடி நீ


உன் கால்களை என் மேல் வைத்து

விரலிசைச் சொடக்கு போட

அந்த நாளில் தான் வாய்த்தது


கவிதை எழுதுவது மறந்தது எப்படி

நீ கவிதையாய் வார்த்தைகளை

உதிர்த்த பின்னால்


பின்னால் வந்து கட்டிப் பிடிக்க

அனிச்சைக் கைகள் இடை கோர்த்தன

இப்படி கைகள் கோர்ப்பது தப்பு என்று

என் கைகள் மேல்

உன் கைகள் வைத்து அழுத்திக் கட்டிக் கொண்டாய்

தவறைச் சரியாக்குதல் இதுதான் போல


செய்வதையெல்லாம் செய்தபின்

என்னைக் குற்றவாளி ஆக்குவாய்

உனக்காக என் வாழ்வையே

பகடைக் காய் ஆக்குகிறேன்

மகிழ்வாக


கோபத்தின் போதுதான்

முதல் முத்தம் கொடுத்தேன்

கண்கள் மூடினாய்

சந்தோசத்தில் திளைத்த போதும்

முத்தம் தந்தேன்

கண்கள் மூடினாய்

தாமத ஞானமாகத்தான்

இதழுக்குக் கண்கள் பூத்ததை அறிந்தேன்


கொலுசை இசையாக்கி

உன்னழகை நடனமாக்கி

என்னைக் கடக்கிறாய்

உன்னடிமை நானென 

காமம் கையெழுத்துப் போட்டுத் தத்துவிட்டது.

எடுத்துக்கொள் என்னை.


யாழ் தண்விகா 


💝
 

Sunday 10 July 2022

இன்னும் வேண்டும் மழை


 

இன்னும் வேண்டும் மழை


❤️

அவரவருக்கான வைகறை 

பொலிவாக இருந்தது 


கடையாமப்பொழுதில்

நாம் உடனிருந்தோம்  


போதாதா காரணம்...


❤️

பூமி கொஞ்ச படைக்கப்பட்ட 

உன் பாதங்களில் 

என் எச்சில் படாத முத்தங்கள் அர்ச்சனையின் உச்சம்...


❤️

உள் இருள் விலக 

ஒளியாகிக் கொண்டது உடல் 


தொடக்கம் முடிவு இரண்டும் இவ்வளவுதான் என்றாலும் 

சம்மதம்...


❤️

உடல் நழுவ நழுவ 

அருகே இழுத்தன விரல்கள் 


என்ன தவம் செய்தேன் 

கடைசியில் உன்னைத் தந்துவிட்டு

வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டாய

என்னை...


❤️

உன் அரசாட்சியில் 

நான் நன்றாகவே வாழ்ந்தேன்


❤️

மயக்கத்தின் உளறல் 

காதில் கேட்டபடியிருந்தேன் 

அத்தனை சுகமும் 

விழித்தபின் கேட்க விழைந்தேன் 

கண்கள் மூடி

பார்க்க மட்டுமே முடிந்தது


❤️

அபிநயம் யாவும் கலைந்து கிடந்த நடனத்தின் மேல் 

படிந்து கிடக்கிறது 

சொர்க்கத்தின் வாசம்...


❤️

மார்பில் தலை சாய்தலும்  

பயணத்தில் தோள் சாய்தலும் 

ஒன்றல்ல 

என்றுணர்த்துகிறது 

முறையே 

கசங்கிய மல்லிகையும் 

மலர்ந்த மல்லிகையும்...


❤️

நேர்மம் எதிர்மம் 

எப்படிக் கூடினாலும் 

எப்படி மாறினாலும் 

நாமாக நாம் இல்லை 

என்பதுதான் 

அக்கணத்தில் சுவாரஸ்யம்...


❤️

யார் கவிதை 

யார் கவிஞன் 

தேர்வு நேரம் முடிந்து எழுகிறோம் உடையும் 

வியர்வைக் கூடுகளில் இருந்து 

சரிந்து விழுந்து சிரிக்கிறது 

காமம்...


யாழ் தண்விகா

Thursday 7 July 2022

ரொம்ப நாளைக்குப் பின்னால...


ரொம்ப நாளைக்குப் பின்னால...


💜

ரொம்ப நேரம் பேசியாச்சு 

ஆனாலும் ஏதோ ஒன்னு மிஸ் ஆனது மாதிரி இருக்கு 

என்னனு தெரியலையே 

எருமை எருமை 

இன்னமும் நீ முத்தமே கொடுக்கல 

கேட்காம குடுக்க மாட்டியா

குடுடா...


💜

ஹேர் கட் பண்றது இல்ல 

தாடி சேவ் பண்றது இல்ல 

எனக்கென்னன்னு  பங்கரையா திரியுறது 

வீட்டுல நான் ஒரு பேய் இருக்கிறது பத்தாதா...


💜

காலம் முழுக்க நீ என்ன பாத்துப்பன்னு நம்பிக்கை இருக்கு 

அதுக்காக இப்படியே பாத்துட்டே இருக்காத

ஒன் அளவுக்கு எனக்கு கவிதை எழுத தெரியாது 

இப்படி கண்ணிமைக்காம பார்க்கத் தெரியாது

ஆனா நிறைய லவ் பண்ண தெரியும்...


💜

எனக்கு சேலை நல்லா இருக்கா 

சுடிதார் நல்லா இருக்கா எனக் கேட்டா ரெண்டும் தான் நல்லா இருக்கு எனச் சொல்லுவ 

எதுல கூடுதல் அழகு 

அப்படின்னு கேட்டா உன் முகத்துல தான்னு சொல்லுவ

எதுக்கு வில்லங்கம் 

மாமா நல்லா இருக்கேனா இந்த டிரஸ்ல...


💜

நிறைய நிறைய ஆசை. தியேட்டருக்கு போகணும். ஹோட்டலுக்கு போகணும். பைக்ல போனா போகணும். கைகோர்த்து  நடந்திட்டே நிலாவ ரசிக்கணும். உனக்கு சமைச்சு என் கையால் ஊட்டி விடணும். உன் கையால பூ வச்சிக்கிடணும். உன் கையால தாலி கட்டிக்கிடணும். அவ்வளவுதான்.


💜

உங்களைவிட நான்தான் நிறைய லவ் பண்றேன். நான்தான் ஃபீல் பண்றேன். நான் தான் அழறேன். நீங்க எப்பவும் போல தான் இருக்கீங்க. என்ன நீங்க என்ன மாதிரி நிறைய லவ் பண்ணா நான் ஏன் ஃபீல் பண்ணப் போறேன்? நான் ஏன் அழப் போறேன்? லவ் பண்ணு மாமா இன்னும் நிறைய...


💜

வர வர போன் போட்டா எடுக்கிறது இல்ல. நான் தான் உன் பின்னால லூசு மாதிரி திரியுறேன். ஏன்டா என்னை பைத்தியமா ஆக்குன...


💜

இங்க என்னால வாழ முடியாது. மனசே சரியில்ல.  சீக்கிரம் என்னை வந்து கூட்டிட்டுப் போ. இல்லன்னா நாளைக்கு காலைல வீட்டு வாசல்ல வந்து நிப்பேன். உனக்குத்தான் அசிங்கம். உனக்காக வாழுற இந்த தேவதைய எதுக்குடா இப்படி தனியா வரவிட்ட, போய் கூட்டிட்டு வர வேண்டியது தானடான்னு ஊரே உன்னைத்தான் கெடாவும்.


💜

தோள்ல சாஞ்சுக்கிட்டு கதை கேட்டுட்டே டிராவல் பண்ணனும். அதுக்காகவாவது கதைகள் நிறையப் படி. கவிதைகள் வேணாம். என்னைப் பத்தி தான் எதையாவது சொல்லுவ. நீ சொல்லச் சொல்ல வெட்கம் வந்து உன்னை கட்டிப் பிடிச்சுக்கும். தூக்கம் போயிடும்.


💜

உங்க கூட கூரை வீட்டில் வாழ்வதும் வரம் மாமா. என்னைப் பார்க்க எப்படி வருவீங்க. என்னை எங்கெங்க கூட்டிட்டுப் போவீங்க. எனக்கு வெயில் சேராது மாமா. கார்ல போவோம் ரொம்பத் தூரம். I'm waiting மாமா...


யாழ் தண்விகா

 

Sunday 3 July 2022

என் சில்மிசமும் உன் வெட்கமும்...


❣️

உன் கோலம்

என் வாசல்


உன் பார்வை

என் வானம்


உன் காதல்

என் பூமி


உன் தரிசனம்

என் வீதி


உன் பூரணம்

என் முத்தம்


உன் குழந்தைமை

என் பேரன்பு


உன் வெட்கம்

என் சில்மிசம்


உன் தேடல்

என் கவிதை


உன் உயிர்

என் உடல்


உன் நடனம்

என் இதயம்


உயிர்ப்போடு எப்போதும்

வாழ்ந்துவிடுவோம்

நாம்...


❣️

நீ பார்

நான் உயிர் வாழ

அது கூட போதும்...


❣️

பாராத 

பேசாத நொடியெல்லாம்

வாழாத நேரமே...


❣️

நீ ஆடிய ஊஞ்சலில்

நம் நினைவை வைத்து

ஊஞ்சலாட்டுகிறேன்

நினைவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி...


❣️

நீ பேசும்போது உயிர்பூத்து

பேசாதபோது 

உயிரணைத்து வைத்துக்கொள்ளும்

காதல் ஜீவன் நான்...


❣️

தேனுண்ட வண்டின் மயக்கக்

கண்களில் விழுந்தேன்

எழவில்லை

எழ இயலவில்லை

எழுவதற்கான அவசியமில்லை


எப்போதும் 

மயக்கம் சூடியிருக்கும்

கண்கள் உனது.


❣️

உள்ளங்கைகளைப் பார்க்கிறேன்

எப்போதோ உன் கரம் பற்றியிருந்த நினைவு

வந்து போகிறது


கன்னங்களில் வைத்துக் கொள்கிறேன் கைகளை

உன் ஸ்பரிச வாசம்...


❣️

என்னடி சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் கோவிக்குற

வரவர என்மேல் உனக்குக் காதல் என்பதே இல்லை


யோவ்

கோவப்பட்டா சமாதானம் பண்ணமுடியாதா

முத்தம் தரக்கூடாதா

கட்டிப்பிடிக்கக் கூடாதா

காதலை பிறகெப்படி வளர்ப்பதாம்...


Mmm சரி கோவிச்சுக்கோ

படிப்படியாக ஆரம்பிக்கலாம்...


❣️

உன் நினைவுச் சுழியின்

ஆழம் சென்றுவிட்டேன்...

சுழல் நிற்கும்வரை

உன் நினைவோடு சுற்றிக்கொள்கிறேன்...


❣️

உன் I Love U ஒவ்வொன்றும்

ஒரு ஜென்மத்திற்கான

சுவாசமளிக்கும்


❣️

I Love U என்பேன்

I Love U so much என்பாய்


இருவருக்கும்

I Love U என்னும் வார்த்தை முத்தமளித்து கௌரவிக்கும்


❣️

I Love U என்பதை

முதன்முறை உன்னிடம் உதிர்த்தபோதே அறிவேன்

அது எனக்கான 

வாழ்வைக் கண்டறிந்து

என்னை ஒப்படைக்கும் வழியென்று


❣️

காதல் அளித்தாய்

மிளிர்கிறது வாழ்வு.


❣️

உன் கையில்

சிறு பொம்மையென்றாலும்

சருகென்றாலும்

நானென்றாலும்

வாழ்வேன் உயிர்ப்புடன்.


❣️

தீராத காதல் நதி

என்னுள் பாய்கிறது உன்னால்.

நீயும் நானும் பயணிக்கிறோம்

வாழ்வை நீராட்டியபடி...


❣️

என் பெருமிதம்

நீ.


❣️

உன் மேலான பசி

அடங்குவதேயில்லை

நீ அருகிலிருப்பினும்

பிரிந்திருப்பினும்...


❣️

நம் சந்திப்பின் பின்

அவரவர் இருப்பிடம் திரும்புகிறோம்

என் தோளில் உன் சாயலையும்

உன் மடியில் என் சாயலையும்

சுமந்தபடி...


❣️

தேர்ச் சக்கரங்கள்

கடவுள் சென்ற பாதையை


உன் பாதணிகள்

தேவதை சென்ற வீதியை


அடையாளம் காண...


❣️

பெரு மழையொன்று

தூவானமாகப் பெய்து

தனதிருப்பை மூர்ச்சையாக்குவதற்கு

எத்தனிக்கும்.


ஒருகாலமும்

காதல் அச்சூழலை

விரும்புவதில்லை.

காதல்

காதலாக வாழும்

வீழ்ந்த போதிலும்.


❣️


பேரருள் வழங்கும்

உன் காதலால்

என் கடவுளானாய் நீ.


போதும்.

வாழ்வு சுபிட்சம்.


யாழ் தண்விகா