Wednesday 12 August 2020

#சிலேட்டுக்குச்சி_சக. முத்துக்ண்ணன்

 #சிலேட்டுக்குச்சி 

கட்டுரைத்தொகுப்பு 

#சக_முத்துக்கண்ணன் 


பாரதி புத்தகாலயம் வெளியீடு

விலை ரூ 110/-


Muthukannan Muthukannan


பள்ளியில் பயின்ற காலத்திலிருந்து பள்ளியில் பணியாற்றும் காலம் வரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் பல பக்கங்களை நம் கண்முன் படர்த்தி வைத்திருக்கிறார் ஆசிரியர். அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே இளக்காரம் தான். ஆனால் அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் என்ன மனநிலையில் வருவார்கள்? அவர்களின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கும்? அவர்களுக்கான கல்வி எத்தகையதாக நாம் அளிக்க வேண்டும்? அக்குழந்தைகளின் பெற்றோர்கள் இடத்தில் நாம் என்ன வகையான உறவு நிலையைப் பேண வேண்டும்? அக்குழந்தைகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? அக்குழந்தைகளுக்கு என்ன விதமான கல்வி பிடிக்கும்? என்பதையெல்லாம் தன்னுடைய கட்டுரையில் கதைகளை கூறுவதைப் போல அழகாக எடுத்து வைத்திருக்கிறார் ஆசிரியர். கட்டுரைகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒரு இடத்தில் மனதைக் காயம் செய்கிறது. அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறுவதுபோல பல அனுபவங்கள் எழுத்துக்களில் கொட்டிக்கிடக்கிறது. எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை அழகு.


ஆசிரியர் அடித்ததால் மனோஜ் என்ற மாணவனுக்கு சொல்லக் கூடாத இடத்தில் வலி அதிகரித்ததாக கூறுகிறான். படிக்கவில்லை என்பதற்காக அடித்தது இப்படி ஆகும் என்று ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். பள்ளியில் நடந்த சம்பவம் வீட்டில், மறுநாள் பயிற்சிக்கு செல்லும் இடத்தில் மனதின் நிம்மதியைக் கலைத்த படியே இருக்க,  சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவன் எப்படி இருக்கிறான் எனக் கேட்கும் ஆசிரியரின் மனநிலையில் அவர் அடித்தது தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அந்தக் காயம் அந்த மாணவனை விட்டுச்செல்லும் வரை ஒரு தாயாக தந்தையாக ஆசிரியர் காட்டும் கரிசனம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டும். பள்ளியில் ஓடி விளையாடும் ஒரு சிறுவன் தவறி விழுந்தான் என்றாலும் அதனை வீட்டிற்குத் தெரியப்படுத்தும் பொழுது அதைக் கேள்விப்பட்டு ஓடிவரும் பெற்றோர் தன்னுடைய கோபத்தை முதலில் காட்டுமிடம் ஆசிரியர்தான். ஆனால் காயம் பட்ட குழந்தையிடம் அந்த நேரத்தில் ரத்தம் வழியும் இடம் எதுவானாலும் அவ்விடத்தைக் கழுவி மேலும் ரத்தம் வடிந்துகொண்டிருப்பின் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காயத்தின் மேல் கட்டுப் போட வைத்து ஊசியினை போடச்செய்து மாத்திரையை வாங்கிக் கொடுத்து தேநீரின் உதவியுடன் அதை குடிக்கச் செய்து பெற்றோர்கள் வந்தவுடன் அவர்களிடம் நிலவரத்தைச் சொல்லி அந்தக் குழந்தையை ஒப்படைக்கும் வரை  ஓர் ஆசிரியர் அனுபவிக்கும் அவஸ்தை ஒரு தந்தைக்கும் மேலானது தாய்க்கும் மேலானது. ஆனால் இங்கு மனோஜ் வேறுபட்டு வேறு மாதிரி பயமுறுத்துகிறான். பாவம்டா வாத்தியார்...


ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் பட்டப்பெயர்கள் மாணவர்கள் சூட்டி இருப்பார்கள். அரசனுக்கு பட்டங்களை சூடுவதைப் போல இது இல்லை. ஒவ்வொரு ஆசிரியரின் உருவத்தைப் பொறுத்து, அவருடைய பாடம் நடத்தும் தன்மையைப் பொறுத்து, அவரின் குணத்தைப் பொறுத்து, அவர் அளிக்கும் தண்டனையைப் பொறுத்து இந்த பட்டப்பெயர்கள் ஆசிரியர்களுக்கு மாறுபடும். அதனைக் குறித்தும் ஒரு கட்டுரை இருக்கிறது அதற்குள் தேடிப் பாருங்கள். உங்களுக்கான பட்டப் பெயரும் கூட ஒளிந்திருக்கலாம்.


பன்னீர் சார் கொஞ்சம் நாசூக்கானவர். ராமரய்யா குழந்தையாக மனநிலையில் வகுப்பு எடுப்பவர். அவரிடம் அன்பு காட்டும் குழந்தைகளாக நாம் மாறுவதா அல்லது ராமரய்யாவாக மாறுவதா... ராமரய்யாவின் நண்பராக, சக ஆசிரியராக முருகன் சார். இருவருக்கும் இடையில் உள்ள நட்பு - அந்த நட்பு வகுப்பறைக்குள் எப்படி இருக்கிறது, அந்த நட்பால் அந்த வகுப்பு எப்படி கலகலப்பாக மாறுகிறது, அவர்கள் குழந்தைகளிடம் எப்படிப் பழகுகிறார்கள் அந்த அன்னியோன்யம் எத்தனை குழந்தைகளுக்குக் கிடைத்துவிடும்... 


டீச்சர் ஒண்ணுக்கு என்ற கட்டுரையில் வரும் "அந்த வகுப்பில் இருந்து டீச்சர்ஸ் பாத்ரூம் வரையிலான தூரம் என்பது தேச அவமானத்தின் நீளம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது அரசுப்பள்ளியில், தனியார் பள்ளிகளில் இந்தக் காலமும் பல இடங்களில் நடந்து வரும் கழிப்பறை இல்லாத அவலம் சுட்டப்படும் இடம்.


டியூசன் எடுக்கும் சாந்தி அக்கா ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் மாணவர்கள் காட்டும் அன்பு இன்னும் கொஞ்சம் நெருக்கமானது. ஆசிரியரின் வாசிப்பு அனுபவம் எந்த அளவிற்கு அதிகம் இருந்தால் ஒரு வகுப்பறையை அழகாகக் கொண்டு செல்லலாம் என்பதற்கு நூலாசிரியர் அவர்களின் பிரபஞ்சன், வண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளின் கதைகளை வாசித்து அவற்றை மாணவர்களிடமும் கொண்டு செல்லுதலும் சிறப்பான ஒரு வழிகாட்டலாகக் கொள்ளலாம். 


ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குழந்தைப் பருவத்தில், உள்ள ஆசை என்பது பெற்றோர்களால் திணிக்கப்படாத பொழுது உள்ள ஆசை நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் கூறுவதைக் காட்டிலும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். அதை ஒரு கட்டுரை அலசுகிறது. 


யானை என்ற கட்டுரையில் முற்போக்கு இருக்கிறது, பக்தி இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக மத நல்லிணக்கம் இருக்கிறது. முடிப்பு அருமை பல கட்டுரைகள் போல இதிலும்.

வீட்டுப்பாடம் என்ற தண்டனை யதார்த்த கட்டுரை. குடிகாரத் தந்தைகளால் சீரழியும் குழந்தைகள் பாடு பரிதாபம்.


முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு காலத்தில் அதனை ஒரு கொண்டாட்ட காலமாக வாழ்ந்திருப்பான். நேரத்திற்கு உணவு இல்லை என்ற போதிலும், வீட்டில் அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் சென்ற பொழுதிலும், வெயில் வாட்டி எடுக்கும் பொழுதிலும், பக்கத்து வீட்டு நண்பர்கள் ஊருக்குச் சென்ற பொழுதிலும், திருவிழாக்கள் வரும் அந்த காலகட்டத்தில் கடன் வாங்கித் துணிகளை உடுத்தும் பொழுதிலும் இருந்த சந்தோசம் இன்று கோடை விடுமுறைகளில் தனித் திறனை வளர்ப்பதற்காக வகுப்புகளை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் குழந்தைகளை தள்ளிவிடும் மனப்போக்கு வளர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் உயிர் குறித்த பயம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பணம் பறிக்கும் வேலையும், குழந்தைகளை அலைபேசியின் முன்னால் அமர வைக்கும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு. கடைசிக் கட்டுரையான அவன விட்ருங்க பாஸ் என்ற கட்டுரையில் கடைசிப்பத்தி "கோடை அழகாகத் தெரியும். ஏனெனில் அவர்களைப் பொறுத்த மட்டிலும் இதுதான் நிழல் மாதம்" இதுதான் மாணவன். ஆயிரம் பொருள் பொதிந்த வார்த்தைகள்.


உளவியல் ரீதியாக மாணவனை அணுகும் வித்தையைக் கட்டுரைத் தொகுப்பு என்ற பெயரில் சிறு சிறு சம்பவங்களைச் சிறுகதை போல அழகாக, உயிரில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் சக.முத்துக்கண்ணன். வாசியுங்கள் நான் சொன்னதை விட பலப்பல வாசிப்பனுபவம் கிட்டும் உங்களுக்கும்.


நானும் ஓர் ஆசிரியர் என்ற முறையில், தேனி மாவட்டம் என்ற முறையிலும் தோள்களில் கை போட்டு மகிழ்வைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன் நிறைய நிறைய...


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா