Thursday 21 September 2023

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து - ஏர் மகாராசன்


மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து

கட்டுரை நூல்

மகாராசன்

ஆதி பதிப்பகம்

விலை: ரூ 90

பக்கங்கள் : 72


எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்...? என்ன செய்யப் போகிறோம் நாம்?


இரண்டு முக்கியச் செய்திகள் என்று கூறுவதை விட இரண்டு அதிர்ச்சிச் செய்திகள் என்று கூறிவிடலாம் இரு கட்டுரைகளை. கல்வித்துறை, மாணவர்கள், சமூகம் மற்றும் ஆசிரியர்களிடையே மலிந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களையும், அச்சீர்கேடுகளைக் களைவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகளையும் கூறும் கட்டுரைகள் இவை. இரண்டும் கல்வித்துறையோடு நேரடித் தொடர்பு உடையவை என்ற வகையில் கல்வி கற்ற அனைவரும் அல்லது சமூகம் உருப்பட நினைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் புத்தகம். 


முதல் கட்டுரை 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அது எதனால் என்பது குறித்துப் பேசுகிறது. முதல் பத்தியிலேயே இத்தகவல் சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாக இருந்தது என்றிருக்கிறது. ஆம். இருந்தது. கடந்தகாலத்தில் நடந்த ஒன்று, அதிலிருந்து பாடம் கற்று அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க என்னென்ன திட்டங்கள் கல்வித்துறையில் உருவாக்கப்படவேண்டும் என்பது குறித்து அலசுகிறது. மெல்லக் கற்போர், சராசரியாகக் கற்போர், மீத்திறன் வாய்ந்த கற்போர் இவர்கள் அனைவருக்குமான பாடத்திட்டமாக இருக்கவேண்டிய கல்வி, மீத்திறன் பெற்றவர்களுக்கான பாடத்திட்டமாகவே இருக்கிறது. அதையும் முழுமையாக சொல்லிவிட முடியவில்லை. மீத்திறன் பெற்றவர்களே பாடத்திட்டத்தைப் பார்த்து மலைக்குமாறு இருக்கிறது. அப்படியானால் சராசரியாகக் கற்போர் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டாம். தொடர்ந்து மூன்று வருட பொதுத் தேர்வு முறை. 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் உள்ள பொதுத் தேர்வு முறையால் என்ன சிக்கல் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. மாணவர்களை அடிமாட்டுத்தனமாக, பாடம் தவிர்த்த செயல்பாடுகள் எதுவுமற்ற இயந்திரத் தன்மையுடன் வார்த்து இக்கல்விமுறை எதைச் சாதிக்கப் போகிறது என்று பார்த்தால் மெல்லக் கற்கும் மாணவர்கள் இத்துயரிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறார்கள். அதுதான் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றனவற்றிற்குக் காரணமாக அமைகிறது. இதனைக் களைய மேற்கண்ட மூன்று பிரிவினருக்கான பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், ஆசிரியர்களிடம் கல்வித்துறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறித்துப் பேசி தீர்வுகாண மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் பேசுகிறது முதல் கட்டுரை. 


இரண்டாம் கட்டுரை, சமீபத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைப் பற்றியும், பகுத்தறிவு வாய்ந்த மனித சமூகம் செல்லும் இழிபாதை எப்படி படிப்படியாக பரிமாணம் பெற்று இன்று வன்முறையின் உச்சத்தில் நிற்கிறது என்பதையும், அதற்குக் காரணமாகத் திகழும் கூறுகள் எவையெவை என்பது பற்றியும், அதனை மாற்றியமைக்கும் வழிமுறைகளையும் முன்வைக்கிறது. மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் தோற்றுவிக்கும் களங்களாக அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாறி வருகின்றன என்பது கண்கூடான உண்மை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடந்து வந்திருந்தாலும் அவை பல்வேறு சமூகக் காரணிகளால் திசை திருப்பப்பட்டுவிட்டன என்கிறார் கட்டுரையாளர். அதே சமயம் நாங்குநேரியில் நடந்த கொலைவெறிச் சம்பவம் சமூகத்தால் பேசப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன்னரே, நாங்குநேரி சம்பவத்தின் இரத்தம் காயும் முன்னரே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதும் சமூகத்தின் முன்னால் தான் என்பது வருத்தம்தரும் ஒன்றாகவே பார்க்க நேரிடுகிறது. 


சின்னத்துரை மற்றும் சந்திராசெல்வி இருவரும் பள்ளி மாணவர்கள். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தாக்கியவர்களும் மாணவர்கள். தாக்கியவர்கள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தத்து. இது வெறுமனே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்த ஒன்றல்ல. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல காலங்களாக ஊறிக் கிடந்த சாதியானது, சமூகங்களால் பல்வேறு விழாக்கள் மூலமாக வெளிப்படையாகவே இன்று தனது முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், பெரியவர்கள் அரசியல் கட்சிகளில் இருப்பதைவிட சாதிச் சங்கங்களில்தான் திரண்டிருக்கிறார்களோ என்கிற அளவுக்கு சாதியக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றது. இவற்றிற்கு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. அனைவரும் பங்கேற்கிறார்கள். இதனை அவ்வவரின் குடும்பத்தினரே சாதிப் பெருமிதமாக நினைக்கிறார்கள். இதனை பல்வேறு தரவுகளின்மூலமாக கட்டுரையாளர் கூறும்பொழுது சாதியானது சமூகத்தில் உண்டாக்கும் தாக்கம், இனி உண்டாக்கப்போகும் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தை உருவாக்குகிறது. சாதி மற்றும் மதத்தால் உண்டாகும் வன்முறைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட சாதிகள் என இருபுறம் வாயிலாகவும் நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களிடம் இன்று பரவலாகி வரும் அடாவடித் தாட்டியங்கள், வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் வன்முறைச் சீண்டல்கள் என நீளும் பட்டியலை கட்டுரையாளர் கூறுகிறார். இவை ஆங்காங்கே நாம் கண்ட, கேட்ட பட்டியலின் தொகுப்புதானே ஒழிய மிகையல்ல. இவற்றை மாற்ற சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம். கல்வித்துறை, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம் சார் வகுப்புகளை நடத்தவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள சாதிய மனப்பான்மை மாற வேண்டும். இட ஒதுக்கீட்டைக் கூட தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஆசிரியர்களால் அம்பேத்கரைப் பற்றி எப்படி உயர்வாகப் பேசிவிடமுடியும் என தனது ஆதங்கங்களையும் கட்டுரையாளர் கூறியுள்ளார். இன்னும் பல தகவல்கள். வெறும் தரவாக மட்டுமல்லாமல் தவறான பாதையில் செல்லும் இந்தச் சமூகத்தின், மாணவர்களின், ஆசிரியர்களின், கல்வித்துறையின் குறுக்கு வெட்டுச் சித்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. சமூக உதிரிகளாக மாணவர்கள் மாறுவதற்கு முன்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உண்டு. அவற்றை அறிந்து களைய சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதரும், கல்வித்துறை தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. வாசியுங்கள். சமூகத்தின் மீது விழும் நல்ல வெளிச்சத்திற்கு திறப்பாக இந்த நூல் அமையும் என்பதில் மாற்றமில்லை.


வாழ்த்துகள் தோழர் ஏர் மகாராசன் 


யாழ் தண்விகா

Wednesday 6 September 2023

ரவிக்கைச் சுகந்தம் - ஜான் சுந்தர்


ரவிக்கைச் சுகந்தம்

ஜான் சுந்தர்

கவிதைத் தொகுப்பு

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ 90


பாரதியைக் கொண்டாட வேண்டும் என்றால் பல அபத்தங்களை நாம் சகித்தே ஆகவேண்டும். பாரதியின் வரிகளில் தோய்ந்துபோய்க் கிடக்கும் மனம் அவரின் வாழ்வோடு அந்த வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏனிந்த முரண் என்று கேள்வி கேட்கவே செய்யும். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர் என்ற சொலவடை உண்டு. தனக்கே வாழ, உண்ண திராணியில்லாதபோது கூட காக்கை குருவி எங்கள் சாதி என்று கூற கவிதைத் திராணி வேண்டும் தான். ஆனால் அது வாழ்விற்கான கதவுகளைத் திறந்து வைத்ததா என்றால் அவர் காலத்தில் இல்லை என்றே சொல்லலாம். இறப்பதற்கு முன்னர் கூட எட்டையபுர அரசரிடம் எட்டப்பனின் வரலாறை எழுதித் தருகிறேன் என்று இறைஞ்சி நின்ற வரலாறு பாரதிக்கு உண்டு. என்ன தான் இரக்கம் காட்டினாலும் விலங்குகளிடம் எச்சரிக்கை உணர்வோடுதான் இருக்கவேண்டும். அந்தக் கவனம் இல்லாததால் யானையிடம் தோற்றது கவி வாழ்வு. தொகுப்பில் ஒரு கவிதை சாதாபாரதியின் சகி. வாசிக்க வாசிக்க பாரதியின்மேல் உண்டான கோபம் சொல்லிலடங்காது. வாசிப்போருக்கும் அந்தக் கோபம் உண்டானால் நாம் செல்லம்மாவின் வலியை உணர்ந்த மனிதராக இருக்கிறோம் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

@

சிலிண்டர்க்காரனுக்குக் கொடுக்க

உரூவா இல்லாமல்

செல்லம்மா அல்லாடிக்கொண்டிருக்க 

புலவர் பெருஞ்சபையில்

அயலகத் திரைப்படங்கள் குறித்த

விவாதத்திலிருந்தான் சாதாபாரதி.

@

அவள் மளிகைக் கடையிலிருந்து

அழைத்தபோது மாலிலும்

ரேஷன் புழுக்கத்தில் நெளிந்தபோது

ஏசி பாரிலுமிருந்து

பண்டிதருடன் சொற்சமரஞ் செய்துவந்தான்


.... இப்படியாக நீளும் கவிதைகள் எட்டாம் கவிதையில் உயிரை அரற்றிவிடுகிறது. 

@

வால்விட்ட தலைப்பாகையினை

அவன் சூடிப் பார்த்த முகூர்த்தத்தில்

கூறைப்புடவையினைக் கீறி

தூமைத் துணியாக்கிக் கொண்டாள் சகி.


கவிஞனாக இருப்பவன் குடும்பத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும், குடும்பத்தை எப்படிப் பார்த்திருக்கவேண்டும் என்பதை அவனின் செயல்கள் வாயிலாகவே கவிதையாக வடித்து அவனுக்குப் பாடம் எடுத்திருக்கிறது என்று இக்கவிதை வரிகளை வாசிக்கும்போது உணர முடிந்தது. 


அரண்மனைக் கிளி என்ற திரைப்படத்தில் புத்திமதி சொல்லயிலே தட்டிச்சென்ற பாவியடி, விட்டுவிட்டுப் போனபின்னே வேகுது என் ஆவியடி... என்ற வரிகளை ராஜாவின் குரலில் கேட்கும்போது உண்டாகும் தாயின் மீதான மதிப்பும் கரிசனையும் நேரம் கடக்கக் கடக்க மாறிவிடுகிறது. அதனை கவிதையாக்கி வைத்திருக்கிறார் ஜான் சுந்தர் தோழர்.

@

சைக்கிள் காணாமல் போனபின்

கவனமாய் பூட்டுகிறேன்.

அம்மா படத்துக்கு

பூ வைப்பதும் அப்படித்தான்...


அருமை தோழர்.


ஊரே ஞாயிறைக் கொண்டாடும் பணியை செவ்வனே செய்கிறது. பக்கத்து வீட்டில் கோழிக்கறி. இன்னொரு பக்கம் ஆடு. இவற்றிற்கு வாய்ப்பில்லாத எளியவன் என்ன செய்வான்...

@

எனது கிழமையின் எளிய உடலில்

மீனை வரைய ஆயத்தமானபோது

மாதக் கடைசி என்றதென் சட்டைப்பை


ஐம்பது ரூபாய்த்தாளுக்குள்

அரைக்கிலோ மீன்களையாகிலும்

வரைந்துவிட முடியாதா...


வீட்டுக்குப் போனதும் மனைவியிடம்

பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலொன்றை

கழுவித்தரக் கேட்டேன்.

வாழும்நாள் வரையில்

என் வீட்டின் அலங்காரமாயிருக்குமிந்த ஜோடி மீன்கள்...


வருத்தங்களையும், இயலாமையையும் தூக்கி எறிந்து அங்கே மகிழ்வை உட்காரவைக்கும்வழியாய் இந்தக் கவிதை எனக்குள் ஊடுருவியது. இது போல இன்னும் பல கவிதைகள். வாய்ப்பு உள்ளோர் வாசியுங்கள். ரவிக்கைச் சுகந்தம் உணருங்கள். 


வாழ்த்துகள் தோழர் John Sundar.


யாழ் தண்விகா