Thursday 1 July 2021

மழைக்கு இதமாய் ஒரு மழை

 மழைக்கு இதமாய் ஒரு மழை


கவிதைத் தொகுப்பு


துஷ்யந்த் சரவணராஜ்

Dushyanthsaravanaraj


வெற்றிமொழி வெளியீட்டகம்

Vetrimozhi Veliyeetagam


பக்கங்கள் 64, விலை ரூ.60


கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.

“புத்தகங்களே புத்தகங்களே

தயவுசெய்து குழந்தைகளைக்

கிழித்துவிடாதீர்கள்”


மழையை குடை வைத்து ரசிப்பவர்கள் தானே நாம். அப்படியானால் நாம் குழந்தைகளை குழந்தையாக வளர விடுவதற்கு தயாராக இல்லாதவர்கள்தானே. 


மழைக்கு இதமாய் ஒரு மழை. மழை நேரம் எதை விரும்பும் உடலும் உயிரும்? ஒரு தேநீர்? ஒரு கவிதை? ஒரு முத்தம்? கொஞ்சம் நெருப்பு வாசம்? கொஞ்சம் கட்டியணைப்பு? காதல் ஜீவனின் ஸ்பரிசம்? கைகள் இரண்டையும் உரசி கன்னங்களில் தனக்குத் தானே வைத்து மென் சூடினை ரசிக்கும் தருணம்? எது வேண்டும் மழைக்கு இதமாக...? எதுவும் வேண்டாம் மழைக்கு இதமாய் இன்னுமொரு மழை. கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதையாக. மழைக்கு இதமாக அந்த இன்னொரு மழை இத்தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது குழந்தைமை கொண்டாடும் கவிதைகளாக.


ஒரு குடும்பத்தின் பேரன்பு மிளிரக் காண்கிறேன் இத்தொகுப்பில். மகன் துஷ்யந்த், மகள் சம்யுக்தா, மனைவி ராஜலட்சுமி மற்றும் கவிஞர், இன்னும் சில குழந்தைகள் உலாவும் அன்புத் தோட்டம் இத்தொகுப்பு. 

“நின்னைப் பிரிந்திருக்கும் 

நீளமான இரவை 

என்ன செய்வது மகளே?

உருட்டித் தருகிறேன் 

உதைத்து விளையாடு”


“வார விடுமுறையில் 

வந்து போகிற

அப்பனுக்கு மட்டுமே தெரியும்

ஒரு முத்தத்தின் எடை”

தந்தையோ தாயோ குழந்தைகளை விட்டு பணி நிமித்தம் வெளியூரில் தங்கி, வார விடுமுறைக்கு வீடு வரும் சூழலில் பூத்த கவிதைகள் இவை. ஒரு குழந்தையாக என் தந்தை இந்த வலிகளை, பூரிப்பை அனுபவித்திருக்கிறார். ஒரு தந்தையாக நானும் இதே உணர்வுகளை அனுபவித்திருக்கிறேன். நீளமான இரவு என்னும் சொல்லும் முத்தத்தின் எடை என்னும் சொல்லும் காதலுக்கு மட்டுமா சொந்தம்... குழந்தைகள் இருக்கிறார்கள் கவிதையில். ஆனால் உணர்வைச் சுமந்து கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது பெற்ற பாசம். அருமை கவிஞரே.


“பணத்தைக் கட்டிப் 

பள்ளியில் சேர்த்துவிட்டு

அடைக்கப்பட்ட

கதவுகளுக்குப் பின்னே

காத்துக்கிடக்கிறோம்

பிணை எடுக்க வந்தவர் போல...” 


“கம்பி ஜன்னலிட்ட

பேருந்தின் உள்ளிருந்து

கைகாட்டும் 

குழந்தையின் முகத்தில்

சிறைவாசியின் சோகம்”

முழு நேரமும் எந்தத் தகப்பனும் தன்னுடைய குழந்தையை அருகிலிருந்தே பராமரித்திருக்கப் போவதில்லை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால். ஆனால் தன்னுடைய குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு முதன்முதலாக வீடு திரும்பும் / பணிக்குச் செல்லும் தந்தை முகங்களைப் பார்த்தால் தெரியும் தாய்மையின் முழுச் சாயலை. எதையோ பறிகொடுத்ததைப் போல முகம், கண்ணோரமாகச் சிறிது கண்ணீருடன். இங்கு இந்தக் கவிதை வேறொரு ஏக்கத்தைச் சொல்லி மனம் கனக்க வைக்கிறது.


குழந்தைகள் உள்ள வீடு கிறுக்கல்கள் நிறைந்திருக்க வேண்டும். வைத்தது வைத்த இடத்தில், கிறுக்கல்கள் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருப்பது குழந்தைமையைத் தொலைத்ததன் அடையாளம் அன்றி வேறில்லை. இப்படிப்பட்ட அடையாள அழிப்பை வகுப்பறைகள் கச்சிதமாக நிறைவேற்றி வைக்கின்றன. அதனைக் கவிஞர் பின்வருமாறு சாடுகிறார்.

பார்க்காதே 

என்கிறீர்!

பேசாதே

என்கிறீர்! 

திரும்பாதே 

என்கிறீர்!

தூங்காதே 

என்கிறீர்! 

நிற்காதே

என்கிறீர்! 

நிமிராதே

என்கிறீர்!


அய்யோ அய்யோ


வைத்தது 

வைத்தபடி இருக்கக்

கொலுமண்டபமா

வகுப்பறை?

கவிதையின் இடையில் வரும் அய்யோ அய்யோ என்ற சொல்லானது குழந்தையின் மேலுள்ள நேசம் என்றும் கொள்ளலாம். குழந்தைகளை எதற்காக இப்படி வதைக்கிறீர் என்றும் கொள்ளலாம். குழந்தைகளே நடப்பதைப் பார்த்துக் கொந்தளித்துச் சொல்லும் சொல் எனவும் கொள்ளலாம். 


விடுமுறை என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு சனி, ஞாயிறு தான். அவை அவர்களுக்குத் திருவிழா நாட்கள் தான். இதை சம்பளம் பெரும் மனிதனோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் கவிஞர் இப்படி.

“சனிக்கிழமையைச்

சம்பள நாளாகவும்

ஞாயிற்றுக் கிழமையை

மாதக் கடைசியாகவும்

செலவழிக்கிறார்கள் 

குழந்தைகள்”


“வெள்ளிக்கிழமை

பள்ளி சென்று திரும்பும்

பிள்ளைகளின் முகத்தில்

பளபளக்கிறது

சனி ஞாயிறு வாங்கி வரும் 

சந்தோசம்”

முதல் நாள் கொண்டாட்டம். இரண்டாம் நாள் வேதனை. காரணம் மறுநாள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படியெல்லாம் குழந்தைகளைப் பாடுபடுத்துகிறது. அந்த நாட்களில் தான் ஓய்வில்லாத அளவிற்கு பள்ளிக்கூடம் வீட்டுப்பாடங்களை மிகக் கூடுதலாக வழங்கி குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காவு வாங்குகிறது. 


குழந்தைப் பேறு இல்லாததன் வலியைச் சில கவிதைகள் சுட்டுகின்றன. சில கவிதைகள். குழந்தைகளைக் கொஞ்சும் கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவியின் காதலைச் சில கவிதைகள் சொல்கின்றன. சில குழந்தைகளின் பேரன்பில் மகிழும் தந்தையின் பெருமிதத்தைக் காட்டுகின்றன. சில கவிதைகள் இள வயது வறுமையைப் பேசுகின்றன. சில அவர்களின் செல்லச் சேட்டைகளைக் கண்டு ரசிக்கின்றன. 


“மாற்றி யோசிப்போம்...


திருவிளையாடல் என்பது

தெய்வங்களின் குறும்பு!


குறும்பென்பது

குழந்தைகளின் திருவிளையாடல்!”


மழைக்கு இதமாய் ஒரு மழை

ஒரு தந்தை கவிஞனாகி வடித்த

கவிதை விளையாடல்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா