Saturday 24 December 2022

கீழ் வெண்மணி தியாகிகள் தினம்

 







#கீழ்வெண்மணி


கீழ் வெண்மணி

வானம் பார்த்த பூமியல்ல

வளம் பார்க்கும் பூமி


நிலம் யாவும் பண்ணையார்களிடம்...

உழைப்பு யாவும் தொழிலாளர்களிடம்...


உழைப்பை உறிஞ்சிக்குடிக்கும்

ஆதிக்கக்கூட்டம்

உழைத்தே ஒடுங்கிக்கிடக்கும்

ஏழ்மைக்கூட்டம்...


கட்டளைக்கு கீழ்ப்படிந்தால்

வாழ்வதற்கு உயிர் இருக்கும்

எதிர்த்துப் பேசினால்

கூலிக்காரனுக்கு

சாணிப்பால் சவுக்கடி கிடைக்கும்...


உலகப் பொதுப் பிரச்சனை பசி.

இங்கும் தலை விரித்தாடியது.

பசித்தவனெல்லாம் 

ஒன்று கூடுகிறான்

செங்கொடியின் கீழ்

தொழிலாளர் வர்க்கம் என்ற பெயரில்.


சும்மாயிருக்குமா முதலாளி வர்க்கம்

நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்

என்ற பெயரில்

ஒன்று கூடுகிறார்கள்

மஞ்சள் கொடியின் கீழ்.


அதிகமில்லை கேட்டது...

அரைப்படி நெல் தான்

கூடுதலாக கேட்டது

தொழிலாளர் வர்க்கம்.

எதிரில் நின்று

கைகட்டி நிற்பவன்

எதிர்த்துக் கேள்வி கேட்பதா

ஆடித்தான் போனது

அதிகாரக்கூட்டம்...


நீயில்லையென்றால்

அடிமைகள் கிடைக்காமல்

போய்விடுவார்களா என்ன?

கொக்கரித்துக்கொண்டே

வெளியூரில் இருந்து

ஆட்களை அழைத்து

விவசாயத்தில் ஈடுபடுத்த

முயற்சி செய்தது

மேல்மட்டம்.

போராட்டம் என்பது

புதிதா என்ன

நித்தம் நித்தம்

பசியோடு போராடுபவர்களுக்கு...

வயலில் இறங்கி

வெளியூர் ஆட்களை

மறுத்து நின்றது, விரட்டி நின்றது

தொழிலாளர் கூட்டம்...


எங்கும் எதிர்ப்பு

பண்ணையார்களுக்கு.

சமரசம் பேசினார்கள்

தொழிலாளர்களிடம்.

செங்கொடி இறக்கு

மஞ்சள்கொடி ஏற்று

அரைப்படி நெல் கூலி

அதிகம் தருகிறோம்

என்று விலைசொல்லி

வலை போட்டனர் பண்ணையார்கள்...


செங்கொடி எமது மூச்சு

செங்கொடி எமது வாழ்வு

செங்கொடி எமது உயிர்.

செங்கொடி இறங்காது.

வேண்டுமானால்

மஞ்சள் கொடியை நீயிறக்கிக்கொள்.

உழைக்கும் வர்க்கம்

உறுதியாய் நின்றது.

பண்ணையார் கூட்டம்

பதை பதைத்துப் போனது...


ஒன்றிரண்டு பண்ணையார்கள்

ஊரை ஆள

உழைக்கும் மக்களின் வீட்டை

செங்கொடி ஆண்டது...


அடங்கமறுத்த மக்களை

அழித்தொழிக்க

பண்ணையார் தரப்பு

கோபாலகிருஷ்ண நாயுடு

தலைமையின் கீழ்

வெறிகொண்ட கழுகாய்

வேட்டையாடும் நாயாய்

வீடு வீடாக அடியாட்களுடன்

விரட்டியது...


உயிரைக் கையில் பிடித்து

ஓடியது உழைக்கும் கூட்டம்.

ஒற்றை இலக்காக

கண்முன் நின்றது

ராமய்யாவின் குடிசை.

அக்குடிசை தான்

கூலிக்காரன் 

சொந்தமாக வைத்திருந்த

ஒற்றை நிலம்...


விரட்டிய ஆதிக்கம்

பெரும்பாலான பெண்கள் குழந்தைகள்

குடிசையின் உள்ளிருக்க

வெளியே தாழ் போட்டது.

வேய்ந்த குடிசை 

உயிர்கள் குடித்து கொல்ல

பெட்ரோல் ஊற்றியது

உயிர்கள் வெந்து எரிவதை

வேடிக்கைபார்த்தது...

எங்களை எதிர்த்தால் இதுதான் கதி 

என்று எச்சரித்தது...


அது மரண ஓலமல்ல

உழைக்கும் மக்களின் கலகக் குரல்...


அக்கொடூரம் நிகழ்ந்து

50வைத்து ஆண்டுகளுக்கு

மேலாகிவிட்டது


அன்று பண்ணையார்கள்

மட்டும்தான்...

இன்று ஆட்சியதிகாரமே

பண்ணையார்கள் மனநிலையில்

இருக்கிறது...


முதலாளி தொழிலாளி

வேறுபாடு கலைய

ராமய்யாவின் குடிசைபோல 

சொந்தக்குடிசை அடைய

வீட்டில் எரியும் தீ

நம் வயிற்றுப் பசியை அணைக்க...

அநீதிகளின் கும்மாளம் குடை சாய...

சாதி சமய இன்னல்கள் மறைய

பொதுவுடைமைச் சித்தாந்தம்

எங்கும் பரவ...


மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்

செங்கொடியை வீடுதோறும்

ஏற்றி வளர்வோம்...


யாழ் தண்விகா

Friday 23 December 2022

புளிக்கும் வெயில் #ராம்போ_குமார்


புளிக்கும் வெயில்

ராம்போ குமார்

Rambo Kumar 

வேரல் புக்ஸ்

96 பக்கங்கள் 

100 ரூபாய்


ஒரு நாயகன் உருவாகிறான்...

(சிஸ்டம் சரியாகிவிட்டது தல)

எந்த உலகத்தில் என்றும் தொக்கி நிற்கும் கேள்விக்கு கவிதை உலகத்தில் என்று பதில் அளிக்கலாம். தோழர் ராம்போ குமார் தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பால், பேச்சால் மனம் கவர்ந்தவர். இப்போது கவிதையிலும். தொகுப்பின் முதல் கவிதையை அதற்கு அச்சாரமாகக் கூறலாம்.

“என்னிடம் ஒரு ஆழ்ந்த கல்லறைக்குண்டான

சிறு அமைதி இருந்தது

காற்றின் காமம் பசி தீர்க்கும்

புல்லாங்குழலின் சில துளைகள்

பருக முடியா ஆதி நிலத்தின் வழிந்த ஈரத்தின் மிச்சம் 

பழைய சொற்களின் புழுக்கம் கொஞ்சம்

குகை இருட்டின் முகம் 

ஒன்றுகூட இருந்ததாய் ஞாபகம்

அத்தனையும் நழுவிக்கொண்டிருக்கிறது

முதல் மாத சம்பளம் எண்ணிக்கொண்டிருக்கும்

எனது விரல்களின் வழியே..” எனத் தொடங்கும் கவிதையின் சொற்களில் கருவைக் காண்பதா... இவ்வளவு நாள் கண்ட கவியின் புதிய முகத்தைக் காண்பதா... சந்தோஷ மிரட்சி. 


ஒரு கவிதையில் 

“பசி ஒன்றும் பெரிய வலியில்லை

அதனூடே தோன்றும்

கவிதைதான்...” கொஞ்சம் நீள்கிறது முற்றுப்பெறாமல். கவிஞனின் பசியா? பசியை எழுதப் போகும் கவிதையின் தீவிரமா? என்ற கேள்வியின் முன்னாள் எனக்கென்னமோ பசியை எழுதும் கவிதையின் ஆத்திரம் மிகு சொற்களின் தீச்சுவாலை அதிகமாக இருக்கும்போல் உணரமுடிகிறது. இன்னொரு கவிதையில்

“முன்னிரவு காமத்தைப் 

பின்னிரவுக்கு 

ஒத்தி வைக்கிறது

ஒரு நல்ல கவிதை” என்னும்போது கவிதை என்ன செய்யும் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடுகிறது. மேலும் கவிதை காமத்தை ஒத்தி வைக்கிறதாகக் கூறும் தன்மையிலிருந்து கவிதை எதையும் செய்யும் என்பதையும் அழகாகக் கூறிவிடுகிறது.


“அப்பத்தாவுக்குத் தங்கமுத்து மாரியம்மன்

தாத்தாவுக்குச் சுடலைசாமி

எங்க ஆச்சிக்கு முப்பிடாதி அம்மன்...

மேலத்தெரு மாமாவுக்குக் கருப்பண்ணசாமி

அத்தைக்குக்கூடச் செல்லத்தம்மன்னு கேள்வி...

கொடைக்குக்கொடை

கூட்டத்திற்குள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும்

சாமி கொண்டாடிகள்,

இதுவரை 

சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்”

கிராமத்துச் சாமிகளின் அருளேறி ஆடும் மனிதர்கள் கண்முன்னே வருகிறார்கள். அவர்களின் ஆங்காரக் கூச்சல் காதுகளில் ஒலிக்கத் தொடங்குகிறது. திருவிழாக்கூட்டம் கிறங்க வைக்கிறது. ஊரே அருள் வந்து நிற்க, நாக்கைக் கடித்து அரிவாள் ஏறும் ஆண்கள், இருக்கும் இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண்கள் மேல் அருள் வந்து ஆடும் சாமிகள் குறித்து திருவிழா கடந்தபின் நினைக்க என்ன இருக்கும்? அதனைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் கவிஞர். “இதுவரை சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்...” சாமி கொண்டாடிகளிடம் கேட்கவேண்டும்தான்.


கொஞ்சம் கொஞ்சம் அன்பைக் கொஞ்சும் கவிதைகள் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன. யாரந்த யாழினி என்ற கேள்விக்குப் பின்னால் ஓடத் தொடங்குகிறது வாசிக்கும் பார்வை.

“உன்னை அகம் தள்ளியபின்

புறவெளியில் 

எதைத்தேடப்போகிறேன் யாழினி”

“வலது ஆரிக்களிலும்

இடது ஆரிக்களிலும்

சமமாக நின்றுதொலை 

யாழினி

அவ்வப்போது சரிந்து விடுகிறதென்

இதயம்” 

“இன்னும் வேகமாக

வீசியெறி உன் சொற்களை

நான் இன்னுமொரு 

கவிதை செய்யவேண்டும்”

கவிதை ஊரில் காதல் வழிச் சாலையிலும் சிறப்பானதொரு பயணம் மேற்கொள்ள வாழ்த்துகள்...


“ஒரு பச்சிலையின் 

கணம் தாங்கும் கிளைகளுக்கு

ஒரு சருகின் கணம் 

தாங்க முடிவதில்லை”

வாசிக்க வாசிக்க தந்த காட்சி முடியவில்லை. சருகு என்பது அத்தனை சாதாரணமானதாக இருக்க முடியாது. அதன் கணம் குறித்து எழுந்த கேள்விகளுக்குள் பச்சிலை வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் அபாரமான வெளிப்பாடு.


எல்லாவற்றிலும் நேரம் காலம் பார்த்து செயல்படும் அச்சம்பத்து என்னும் ஊரைச் சேர்ந்த மாமா பற்றிய கவிதை...

...

“அச்சம்பத்து விபத்தில்

மாமா இறந்துபோன அன்று,

நாட்காட்டியில் அவரின்

விருச்சிக ராசிக்கு

நம்பிக்கை என்றுதான் இருந்தது...” காலம் என்னென்ன மாய வித்தைகள் செய்யும் என்பதை காலம் மட்டுமே அறியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஈடுபாடு, ஒரு வழி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடமிட்டுத் திரிக்கிறோம். ஆனால் அந்திமக் காலமாகட்டும், உயிர் போகும் தருணமாகட்டும், மனிதன் மகிழ்வோடு இந்த உலகைத் துறக்கத் தயாராகிவிடுகிறானா என்றாள் இல்லை. காலம் நமது அபிலாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறதா என்றால் இல்லை. அக்கணம், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் மட்டுமே என்பதை உணர்த்தும் கவிதை.


“இரு நீலங்களுக்கு மத்தியில் 

பறந்துவந்த பறவையொன்று

என் ஜன்னலில் வந்தமர்கிறது

அதன்மேனியில்

தாய்மண் வாசத்தை

நுகரத் தெரிந்த 

அந்தப் பெயர் தெரியா பறவை 

மிச்சமிருக்கும் தன் நிலத்தை

எனக்குக் கடத்துகிறது

தன் கண்களின் வழி”

கவிஞன் என்பவனின் பார்வை உன்னதப்படும் இடம் என்பது உலகின் எல்லாவுயிர்களிடத்தில் காட்டும் இடம் மட்டுமே. அவனின் ஆக்ரோசமும் மனிதம் சார்ந்திருக்கும். மௌனமும் மனிதம் சார்ந்திருக்கும். அன்பு அவன் இயல்பாகயிருக்கும். பெயர் தெரியாத அந்தப் பறவையின் வலியைக் கண்கள் வழியாகக் காணும் ராம்போ குமார் என்னும் தோழர்-கவிஞர் இயல்பாகவே சமூகப் பார்வையுடன் பயணிப்பவர். அதனை அச்சு வடிவில், கவிதை உருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். சொல்ல இன்னும் பல கவிதைகளுண்டு. வாசியுங்கள். பன்முகத் திறன் கொண்ட தோழர் ராம்போ குமார் இன்னும் பல உயரங்கள் கவிதை உலகிலும் தொட வாழ்த்துகிறேன்.


யாழ் தண்விகா

 

Sunday 4 December 2022

ரோலக்ஸ் வாட்ச்


ரோலக்ஸ் வாட்ச்

நாவல்

சரவணன் சந்திரன்

உயிர்மை பதிப்பகம்

பக்கம் 160

விலை 150

மார்ச் 2016 பதிப்பு


நட்பு காதல் கொலை குரூரம் இயல்புத்தனம் துரோகம் என எல்லாம் உண்டு இந்நாவலில். கதாசிரியர் தான் நாயகன். வலிந்து திணிக்கப்படாத பாதை வழியே கதை நகர்கிறது. என்ன கதை என்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைதான். எங்கிருந்தும் தொடங்கலாம். சரவணன் மற்றும் கதை கூறுபவன், அவன் தோழி, தோழியின் தோழி, ஜோதிடர் சுந்தர் எனச் சில பாத்திரங்கள் முக்கியமானவை. பிற எல்லாம் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சரவணன், கதை சொல்பவனுக்கு வாழ்வில் பல உதவிகள் செய்பவன். செய்தவன். ஆனால் கதை சொல்பவனுக்கு ஒரு தனி உலகம். காலமெல்லாம் சரவணனின் கையைப் பிடித்து நடக்க தன்னால் இயலாது என்னும் உறுதி கொண்டவன். அவனிடம் அதனை நேராகச் சொல்லும் தைரியம் அற்றவன். கோழை என்றில்லை. அது கதாசிரியன் சுபாவம். இவர்களுக்கு ஒரு நண்பர் குழாம். அதில் ஒருத்தி திவ்யா. அவளோடு அன்பு காதல் காமம் எல்லாம். அவள் திருமணம் முடித்தவள். அவளோடு ஒரு வாழ்க்கை. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் செல்ல சில தகிடுதத்தங்கள் செய்து கதை சொல்பவன் மேலே வருகிறான். வெளிநாடு செல்கிறான். தனியாக அறை எடுக்கிறான். அங்கு பெண்களோடு உல்லாசித்துத் திரிகிறான். பணம் சேர்க்கிறான். ஒரு மனிதனுக்கான கூறுகள் இப்படி இருப்பதில்லையே என நினைக்கும்போது மனிதன் என்பவன் இப்படியும் இருக்கிறான் எனச் சொல்ல, இப்படித்தான் இருக்கிறான் எனச் சொல்ல பல பாதைகளை கதை வழியே சொல்கிறார் நாவலாசிரியர். கதை சொல்லுதலில் இப்படியும் ஓர் உத்தி எனக் காண்பித்து உள்ளார். டயரி எழுதுவது போலுள்ளது என்று கூறி ஒதுக்கி விடாத வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. பிடித்தது எனச் சொல்ல நான் கண்ட மனிதரில் கதாசிரியன் போன்ற நபர்களைக் கண்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். மனிதன் செய்யும் பண அரசியல் எப்படியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் ஆங்காங்கே வருகிறது. கதையும் முடிச்சும் இதுதான் எனச் சொல்ல வாய்ப்பில்லை. வாசித்தால் தான் அதை உணர முடியும் எனச் சொல்லும் நாவல். வாசிக்கலாம் தாராளமாக.


யாழ் தண்விகா 


#நூல்_வாசிப்பனுபவம்_2022


❣️