Monday 13 December 2021

இரவாக நீ... நிலவாக நான்....

 #இது_என்ன_மாயம்!



#இரவாக_நீ 

#நிலவாக_நான்...என்ற பாடல்


மழை மனதிற்குள் மெல்ல மெல்ல இறங்கி உயிரின் வேர்கள் பரவும் திசை அனைத்தையும் தொட்டு தொட்டு தொட்டு மெல்ல நிலமெங்கும் படர... பரவ... உயிர்ப்பிக்கிறதா அல்லது மயக்கமடையச் செய்கிறதா என எண்ணக் கூடிய அளவிற்கு ஒரு சுகந்தம் அளிப்பதுபோல்...


எப்பொழுதெல்லாம் மழையில் நனைய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நான் இரவாக நீ நிலவாக நான் என்று பாடலுக்குள் குடிபுகுந்து கொள்கிறேன். வேறு மாதிரியாக கூறுவது என்றால் இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் இந்தப் பாடல் தரும் மழையில் நனைந்து கொண்டு தான் இருக்கிறேன் ஒரு நூறு முறைக்கு மேல் இந்தப் பாடலை கேட்டிருப்பேன்... நனைந்திருப்பேன்...


சாரலுக்கு அடுத்த நிலை. மழைக்கு முந்தைய நிலை... அப்படிப்பட்ட ஒரு பதத்தில்தான் பாடல் தொடங்குகிறது...

உள்ளிருந்து வரும் பெண் குரலில்


"இரவாக நீ 

நிலவாக நான்..."

என ஒலிக்கத் தொடங்கும் பாடல் வரிகளை அடுத்து அப்பெண் குரலை கொஞ்சமும் இம்சை செய்யாமல் ஆண்குரல் அடுத்து தொடங்குகிறது 


"தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி... 

கரை நீ பெண்ணே 

உன்னைத் தீண்டும் அலையாய் நானே ஓ... நுரையாகி நெஞ்சம் துடிக்க..."

விளிம்பில் நின்று வாழ்வைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பரிசு கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை பாடல் வரிகளைப் பாடி பார்த்தால் மட்டுமே உணர முடியும்...


கொஞ்சம் இசை கசிகிறது வரிகள் ஏதுமில்லாமல். மீண்டும் பல்லவி வரிகள்.

தொடரும் இசை முதல் சரணத்தின் பாடல் வரிகளைக் கொண்டு வருகிறது....


காதலன் பாடுகிறான்...

"விழி தொட்டதா 

விரல் தொட்டதா 

எனது ஆண்மை தீண்டி 

பெண்மை பூ பூத்ததா..."

ஒரு பார்வை 

பார்த்தவுடன் காதல் 

அந்த காதலைத் தாண்டி கூடல் என்பதை மிகவும் நளினமாக இந்த மூன்று வரிகளுக்குள் அடக்கி இருக்கிற வித்தையை என்னவென்று சொல்வது...

அடடா...


காதலி பாடுகிறாள்...

"அனல் சுட்டதா 

குளிர் விட்டதா 

அடடா என் நாணம் 

இன்று விடை பெற்றதா..."

இந்த மூன்று வரிகளையும் மேற்சொன்ன மூன்று வரிகளையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வைத்துப் பார்த்தால் இன்னும் ஒரு கவித்துவத்தை உணர முடியும்.


விழி தொட்டதா அனல் சுட்டதா 

விழி தொட்டதால் அந்தப்பார்வை அனல் போல் சுட்டதா 


விரல் தொட்டதா

குளிர் விட்டதா

விரல் தொட்டதால் உடம்பில் படர்ந்திருந்த குளிர் விட்டு விட்டதா

என்று பொருள் கொள்ளலாம்..


எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா 

அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா 

ஒரு பெண்மையை பெண்மை நிலையிலிருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு தருணமாக ஒரு ஆகச்சிறந்த காமம் அமையும். அந்தச் சூழலை இந்த வரிகளில் பார்க்கமுடியும் எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா என்ற அவனின் கேள்விக்கு அடடா என் நாணம் இன்று விடை பெற்றது என்று இவள் கூறுவதாக பொருத்திப் பார்க்கலாம்...


காதலன் பாடுகிறான் 

"நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே..."

பல பாடல்களில் நாம் கேட்டிருப்போம் ஒரு தனி உலகம் அதில் நாம் மட்டும் சுதந்திரமாக காதலை வாழ்வை அனுபவிப்போம் என்று பொருள்படக்கூடிய வரிகள் இருக்கும். ஆனால் இந்த வரிகளில் காதலன் என்ன கூறுகிறான் என்று உற்று நோக்கினால் உனக்கும் எனக்குமான ஒரு தனி உலகம் என்பது முதல்வரி 

ஆனால் அடுத்த வரியில் உன் தோள் சாயும் இடம் போதுமே...

ஒரு உலகம் முழுவதையும் வாங்கிக் கொண்டாலும் உன் தோள் சாயும் இடம் போதுமே என்று கூறும்பொழுது அந்தத் தோள் தரக்கூடிய ஒரு சுகந்தம் வேறு எங்கும் கிடையாது. அந்த உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு சுகம் அவளின் தோளில் இருக்கிறது. ஆக அது காமத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காதல். அந்தக் காதல் மட்டுமே இந்த வரிகளை தரமுடியும்.


காதலி பாடுகிறாள் 

"உன் பேர் சொல்லி 

சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்... ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என்னுயிரே காதோரம் காதல் உரைக்க..."

இந்த வரிகளை ஒரு பெண் பாடுவது போல் பாடலில் வருகிறது. ஆனால் இந்த வரியைக் கேட்கும் பொழுது ஒரு ஆணாக நானும் அந்த வரிகளை உச்சரித்து பார்க்கிறேன். உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் என்னும் பொழுது அவரவர் மனதில் நிறைந்து இருக்கக்கூடிய அந்தக் காதலியின் பெயரை உச்சரிக்கக் கூடிய ஒரு கட்டளையை இந்த வரிகள் பிறப்பிக்கிறது என்று நான் உணர்ந்தேன். நானும் அவள் பெயரை உச்சரித்து பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக அந்த வரிகள் இருபாலினருக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. 

பெயர் உச்சரிக்கும் அந்த சுகந்தம் என்பது இறந்தாலும் மீண்டும் பிழைப்பதற்கான ஒரு அசாத்தியத்தை சாத்தியப்படுத்துவதாக ஒரு மெட்டு இந்த வரிகளில் காணக்கிடைக்கும். முக்கியமாக இந்தப் பாடலில் வரக்கூடிய என்னுயிரே என்ற ஒரு  சொல் மீண்டும் மீண்டும் மீண்டும் உயிரை ஒரு பாடு படுத்தவே செய்யும். அத்தனை அற்புதமாக அத்தனை இலாவகமாக உயிரை தாலாட்டக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய சொல்லாக அது அமைந்திருக்கிறது.


சரணம் இரண்டில் அவன் பாடுகிறான் "மழை என்பதா 

வெயில் என்பதா 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா..."

 ஒரு பெண்ணின் காதலை எதனுடன் ஒப்பிடுவது 

அதனை கொட்டும் மழை என்று சொல்வதா 

நனைக்கும் மழை என்று சொல்வதா

நனையத் தூண்டும் மழை என்று சொல்வதா 


சுடும் வெயில் என்று சொல்வதா 

இதமாக இருக்கும்  வெயில் என்று சொல்வதா 

ஒரு பயிருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வெயில் என்று சொல்வதா 


இத்தனையையும் கேட்டு விட்டு கடைசியாக மீண்டும் ஒரு கேள்வியை முன் வைக்கிறான் 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா 

இந்த மழைக்கும் வெயிலுக்கும் அப்பாற்பட்ட ஒரு பார்வையாக பேரன்பை புயல் என்று நான் கூறி கொள்ளட்டுமா அப்படி புயல் என்றால் அது சாத்தியப்படுமா... 

சில புயல்கள் மண்ணிற்கு மழையைத் தருவிக்கும் 

அந்த மழை மண்ணை வாழவைக்கும்

மண்ணிற்கு தேவையான ஒரு புயலாக இருக்கும் ஆதலால் அந்தப் பேரன்பை புயலோடு ஒப்பிட்டு கேட்கிறான் என்று நாம் நினைத்துக் கொள்வோம்


அடுத்து காதலி பாடுகிறாள் 

"மெய் என்பதா 

பொய் என்பதா 

மெய்யான பொய் தான் இங்கே 

மெய் ஆனதா..."

இந்தக்காதல் என்பது சாத்தியப்படும் பொழுது எல்லாம் வசந்தம் பெறும். எல்லாம் இனிதே நிறைவேறிவிட்டது என்ற எண்ணத்தில் அந்த கனவு வாழ்க்கையை வாழ தொடங்கியதால் இதனை மெய் என்று கூறுவதா 

அல்லது ஒரு கனவு கண்ட வாழ்க்கையை நனவில் அடையத் தொடங்கி விட்டால் அந்த நனவு வாழ்க்கையின் கனவு போலத் தோன்றும் என்பதால் பொய் என்பதா என்று கேள்வியை முன்வைக்கிறான் காதலன்.  இது மெய்யும் இல்லை பொய்யும் இல்லை இரண்டுக்கும் நடுவில் ஆனது என்பதை மனதில் கொண்டு இவள் மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா என்கிறாள். நன்றாக யோசித்து பார்த்தோமென்றால் ஒரு காதலை அனுபவிக்க மட்டுமே முடியும்.  அது நினைவெனினும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.  ஆக மெய்யான பொய் ஆம் நினைவு என்பதைப்போல இந்த காதலும் மெய்யான பொய் போல நனவு போன்ற கனவு போல கனவு போன்ற நனவு போல அத்தனை அழகானது.


காதலன் பாடுகிறான் 

"அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா..."  என்று.

சரணம் ஒன்றில் 

நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே

என்றவன் தான் இங்கு 

அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா... 

என்கிறான்.


ஒரு தாய் தன்னுடைய தோளில் தன்னுடைய இடுப்பில் தன்னுடைய மடியில் போட்டு தன் குழந்தையைத் தாங்கிக் கொள்வதைப் போல காதலன் தன்னுடைய காதலியை, தாய் போல் என்னை நீ தாங்க வா என்று அழைக்கிறான். வரிகளோடு நாம் பயணிக்க இந்த மெட்டு இன்பத்துடன் கூடிய எளிமையைக் கொண்டுள்ளது. 


காதலன் கேட்டுவிட்டால் காதலி செய்து தராமல் போய் விடுவாளா... ஆகையால் அவனுடைய ஆசையை அவளும் நிறைவேற்றுவதற்கு தயாராகிறாள்... பின்வரும் வரிகள் வாயிலாக...

"மடி மேல் அன்பே 

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்..."

இந்த வரிகள் ஒவ்வொன்றும் கற்பனைக்கு எட்டாத ஒரு உலகத்தை கண் முன்னே நிறுத்தும். கற்பனையான வரிகள். ஆனால் அந்த கற்பனையில் வாழ்ந்து பார்க்க தூண்டும் வரிகள்.


தொடர்ந்து 

"ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என் உயிரே 

காதோரம் காதல் உரைக்க...

இரவாக நீ  இரவாக நீ

நிலவாக நான் நிலவாக நான்...

உறவாடும் நேரம் சுகம் தானடா..."

என பாடல் நிறைவு பெறுகிறது.


மறைந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள். இசை ஜி வி பிரகாஷ் குமார்.

இறப்பிற்கு முன்னான உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று அமைந்தால் 

என் முதல் ஆசையாக என்னுடைய காதலியின் மடியில் அவளைப் பார்த்துக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும். அல்லது இப்படி பாடலொன்றில் அவளோடு வாழ்ந்து கொண்டு இந்த உயிர் மறைய வேண்டும் என்றுதான் வேண்டுவேன். 


நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பாடலை நூறு முறை அளவிற்கு கேட்டு இருக்கிறேன் என்றால் அது இந்தப்பாடல் தான். வாய்ப்பு இருந்தால் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நீங்களும் கேளுங்கள். மன்னிக்க நீங்களும் வாழுங்கள் உங்களுக்கு பிடித்தமான காதலியோடு அந்த கற்பனை உலகத்தில் நீங்கள் வாழலாம். அதி அற்புதம் காணலாம்.




யாழ் தண்விகா

Saturday 23 October 2021

கடவுளைத் தோற்றுவித்தவன்

 சிறார் கதை 2


கடவுளைத் தோற்றுவித்தவன்

பெ.விஜயராஜ் காந்தி

 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தும் வராததுமாக பையைத் தூக்கி எறிந்துவிட்டு “அம்மா உனக்கு எதுக்கும்மா நாகம்மான்னு பேரு வச்சாங்க” என்றான் நவீன். “ஏன்டாப்பா இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? நாகம்மா மகனுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு உங்க பள்ளிக்கூடத்துல சொல்லிட்டாங்களா” என்றாள் நாகம்மா. 


 “கிண்டல் பண்ணாதம்மா. என்னோட வகுப்புல படிக்குற கண்ணன், உங்கம்மா பேரு நாகம்மா தான. நாகப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுமான்னு கேக்குறான். எனக்குக் கோவம் கோவமா வருது. ஒரு நா இல்லைன்னாலும் ஒருநா என்கிட்ட செமக்க அடி வாங்கப் போறையான்” நவீன் கோவமாகப் பேசினான். 


 “நாகம்மாங்குறது சாமிப் பேருன்னு அவங்கிட்ட சொல்லவேண்டியது தானடா. இல்லன்னா சாருகிட்ட சொல்லவேண்டியது தானடா. சாரு கண்டிச்சு வப்பாருல்ல. இவ்வளவு கோவம் ஆகாதுடா நவீன்” அவனைச் சாந்தப்படுத்தும் விதமாக நாகம்மா பேசினாள்.


 “சரிம்மா. நாளைக்கு நான் சார்கிட்ட சொல்றேன் அவனை. அதுக்கப்புறமும் ஏதாவது சொன்னான்னா அவனுக்கு இருக்கு” என்ற நவீனை முறைத்துப் பார்த்த நாகம்மா சட்டென யோசனை வந்தவளாக சிரித்துக்கொண்டே “ சரிடா. எம்பேருக்கே அவன் கிண்டல் பண்ணுனதுக்கு இவ்வளவு கோவப்படுறயே. ஒன் தாத்தா பாட்டி பேரு உனக்குத் தெரியும்ல. காத்தவராயன். இருளாயி. இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா இன்னும் கிண்டல் பண்ணுவான்ல. அப்ப என்னடா பண்ணுவ” என எதிர்க் கேள்வியைக் கேட்டாள். “அது தெரிஞ்சாத்தான. அப்படியே தெரிஞ்சாலும் அதையும் சாமிப்பேருன்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்ற அவனை “என்னது சமாளிச்சிடுவியா? உண்மையிலேயே அது சாமிப் பேர் தான்டா” என்ற நாகம்மாளை நிமிர்ந்து பார்த்து “என்னம்மா சொல்ற? நெசமாவா?” என்றான் நவீன் ஆச்சரியத்துடன்.


 “ஆமா. இதெல்லாம் சாமிப் பேர் தான். உன் பாட்டி பேர் இருளாயி. அந்தக் காலத்துல ஆதி மனுசன் இருட்டைப் பார்த்து மிகவும் பயப்படுவான். நெருப்பைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னரும் பின்னரும் இருட்டின் மேலிருந்த பயம் அவனுக்குப் போகவே இல்லை. இரவு நேரங்களில் எதையாவது பார்த்து பயந்து அதிர்ச்சியில் இறந்து போவது அடிக்கடி நடந்தது. அவங்களைப் பேய் அடிச்சு செத்ததாக நெனச்சாங்க. அதனால இதையெல்லாம் கோரக் கடவுள்களாக நெனச்சு அதைத் திருப்திப்படுத்த தம்மோட குழந்தைகளுக்கு கருப்பன், கருப்பாயி, இருளன், இருளாயின்னு பேர் வச்சாங்க. அப்படி வந்த பேர் தான் இருளாயி. புரியுதாடா?” என்றாள் நாகம்மா.


 “புரியுதும்மா. அப்ப தாத்தாவுக்கு எதுக்கு காத்தவராயன்னு பேரு?” என்று கேட்டான் நவீன். “ஆதி காலத்தில் இந்த மண்ணு உழுதுபோடாம அப்படியே கிடந்துச்சு. பெரும் சூறாவளிக் காத்து அப்பப்போ அடிக்கும். அந்தச் சூறாவளி மேல் மண்ணை அள்ளிப் பறக்கும்போது அதிலிருக்க பாஸ்பரஸ் காத்தோட சேர்ந்து தீப்பிடிக்கும். அதைப் பார்த்த ஆதிமனுசன் அதை கொள்ளிவாய்ப் பேய் என நெனச்சான். அந்தப் பயத்திலிருந்து விடுபட காற்றை வழிபட ஆரம்பிச்சான். அப்படி காற்றைத் திருப்திப் படுத்த உண்டான பேர் தான் உன் தாத்தா பேரு, காத்தாயி, காத்தப்பன், காத்தவீரி, காத்துக்கருப்பு இப்படிப் பேரெல்லாம்” என்ற நாகம்மாவை வச்ச கண் மாறாமப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். 


 “எவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்கம்மா. சூப்பர்ம்மா. அப்படியே உன் பேருக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிடும்மா. யார் கேட்டாலும் இனி நல்லா பதில் சொல்லிக்கிறேன்” என்றான் நவீன். “பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியைக் கேட்டருக்கிறயா?” என்றாள் நாகம்மா. “ம்‌ம்‌ம் கேட்ருக்கேன்” என்றான் நவீன். “ஆதி மனுசன் நல்லா பலசாலியா இருந்தான். வேட்டைக்குப் போற வழில ஏதாவது பாம்பு கடிச்சாக்கூட அதுக்குப் பசிக்கும்போல. அதான் கடிக்குதுன்னு நெனச்சிட்டே நடந்து போவான். கொஞ்ச தூரம் போன பின்னாடி விஷம் தலைக்கேறி உயிர் போயிரும் கடிச்சவனுக்கு. கூடப் போற மத்த ஆளுங்க எல்லாம் அவன் தூங்குறான்னு நெனச்சு விட்டுட்டுப் போயிடுவாங்க. கொஞ்சநா கழிச்சு அந்த உடம்பு கழுகு கொத்தி புழு ஏறி கெட்ட வாடை அடிக்கும். அந்தச் சமயத்திலதான் பொதைக்குற வழக்கமே வந்திருக்கும்னு சொல்றாங்க. சரி. விசயத்துக்கு வாரேன். பாம்புக்குப் பிடிச்ச உணவு கறையான் தான். கறையான் புத்துக்குள்ள போயி கறையானை நல்லாத் தின்னுட்டு, புத்தை விட்டு வெளில வர நினைக்குறப்ப பாம்புக்கு வயிறு முழுக்க இரை இருக்குற தன்னோட உடம்பைத் தூக்கிட்டு வர முடியாம தத்தளிக்கும். அப்போ படமெடுத்து ஆடும். அதைப் பார்த்து பயந்த ஆதி மனுசன் புத்துக்கு முன்னால இறைச்சி, பால் இதெல்லாம் வச்சு “ஏய் பாம்பு, இதெல்லாம் உனக்குத்தான். நல்லாச் சாப்பிடு. எங்க பக்கத்துக்கு வராத”ன்னு சொல்லி வேண்டிக்குவாங்க. அப்படிப் பாம்புக்குப் பயந்த மக்கள், பாம்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட குழந்தைகளுக்கு வச்ச பேரு தான் நாகம்மா, நாகப்பன், பாம்புலம்மா, பாம்புலய்யா இதெல்லாம். இனிமே கண்ணன் கிண்டலா சொன்னா என்னோட அம்மா பேருக்கு இதுதான்டா விளக்கம்னு சொல்லுடா. கேட்டுக்குவான். கிண்டலடிக்கமாட்டான்” என விளக்கம் சொன்னாள் நாகம்மா. “இனிமேல் அவன் நக்கலடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்ம்மா” எனச் சொல்லிக்கொண்டே கிளம்பினான் நவீன். கிளம்பியவனிடம் “லேய், உங்கப்பா பேருக்கு என்ன விளக்கம் தெரிஞ்சுக்க. இங்க வா” என்றாள். “எனக்குத் தெரியும்மா. எங்க சார் சொன்னார்” என்றவுடன் அவள் “என்ன சொன்னார் உங்க சார்? எங்க சொல்லு பார்ப்போம். அவர் சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்” என்றாள் நாகம்மா.

 “ஆதி காலத்தில் வாழ்ந்த மனுசங்க எல்லாம் குழுவாக வாழத் தொடங்கியபின்னர் அவர்களுக்குள் எழும் சச்சரவுகளைத் தீர்க்க, பிற குழுவுடன் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்க்க தங்கள் குழுவில் தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் அனைவரும் அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். சில சமயங்களில் தனது குழுவைக் காக்க, பிற குழுவோடு சண்டையிட்டு இறந்தும் போயிருக்கிறான். தம்மை வழிநடத்தியவன் என்பதாலும் தம்மை ஆண்ட, காத்த தலைவன் என்பதாலும் தான் தம்மில் வாழ்ந்த அவனுக்கு ஆண்டவன் என்று பெயர் வந்ததாம். சார் சொன்னார். நம்ம குடும்பத்தைக் காப்பவராக அப்பா இருப்பதால் அப்பாவுக்கும் ஆண்டவன் என்ற பேர் பொருத்தம் தானம்மா?” என்றான் நவீன். 

 “அப்பா மட்டும் தான் வீட்டைக் காப்பாத்துறார். நானெல்லாம் காப்பாத்தலயாடா?” என்றாள் நாகம்மா. “எனக்கு எப்பவும் அப்பா, ஆண் ஆண்டவர். அம்மா, பெண் ஆண்டவர்” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தாள் நாகம்மா.

 விரைந்து கிளம்பியவன் சட்டென நின்று “எல்லாருக்கும் சாமிப் பேர் இருக்கு. எனக்கு ஏன்ம்மா நவீன் என்ற பெயர்?” என்றவுடன் நாகம்மா சொல்லத் தொடங்கினாள் “என்னோட அப்பா, அம்மா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு. வச்சாங்க. நான் உனக்கு கொஞ்சம் நவீனமா பேர் வைக்கணும்னு தோணுச்சு. அதான் நவீன் என்று பேர் வச்சிட்டேன்” என்று சொல்லியதைக் கேட்டபடி விளையாடச் சென்றான். சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த நாகம்மா ஆண்டவர் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பெரியார் புகைப்படத்தில் ஒரு கம்பீரம் தோன்றி மறைந்தது அப்போது.



Friday 22 October 2021

வீட்டின் வேர்கள்



வீட்டின் வேர்கள்

 

   வீட்டிற்குச் செல்வதற்கான மணிச் சத்தம் “டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்” என்று அடிக்கத் தொடங்கியதும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் பைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சந்தோசமாகக் கிளம்பத் தொடங்கினர்.  கவின் ஐந்தாம் வகுப்பும், தனு இரண்டாம் வகுப்பும் அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். இருவரும் வகுப்பறையிலிருந்து வெளியேறி ஒன்றாகச் சேர்ந்த பின்னர் வீடு நோக்கிக் கிளம்பினர். தெருவின் ஒரு ஓரமாக, இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தனர்.


 வீட்டிற்குச் சென்று புத்தகப் பைகளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு கைகளைக், கால்களைக் கழுவிவிட்டு வந்தனர் கவினும் தனுவும். சற்று நேரத்தில் அவர்களுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாக பால் கொழுக்கட்டையைச் செய்து பாட்டி எடுத்து வந்து தந்தார். வாரத்தில் இப்படி இரண்டு மூன்று நாட்கள் அதிரசம், முறுக்கு, புட்டு, கொழுக்கட்டை இப்படி ஏதாவது ஒன்றை பாட்டி செய்து தருவார். அதை மகிழ்வோடு உண்டபின்னால் வீட்டின் முன்புறம் சென்று விளையாடத் தொடங்கினர். அப்போது தான் எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணன், அமுதாவின் பிள்ளைகளான வாசனும் ஜோதியும் பள்ளியிலிருந்து வந்தனர். இருவரும் கவினும் தனுவும் படிக்கும் அதே வகுப்பு தான் படிக்கின்றனர். அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆனாலும் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் என்ன?


 கண்ணனும் அமுதாவும் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப மாலை 7 மணி ஆகிவிடும். அது வரை வீட்டில் வாசனும் ஜோதியும் தான். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் காயம் ஆகும் அளவுக்குக் கூட சண்டை போடுவார்கள். பெரிய காயம் என்றால்  வேலை முடித்து வந்தவுடன் அம்மாவோ அப்பாவோ அவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். சண்டை போட்டுக்கொண்டாலும் அம்மா அப்பா வந்தவுடன் அவர்கள் முன்னால் எதுவுமே தெரியாதது போல இருப்பார்கள். அம்மா காலையில் சமைத்த பாத்திரங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் கழுவி எடுத்துவைப்பாள். இரவுச் சமையலை செய்யத் தொடங்குவாள். அப்பா கடைக்குச் சென்று வருவார். அம்மாவிற்கு சமைக்கும்போது உதவிடுவார். இருவரும்  கொஞ்ச நேரம் பிள்ளைகளிடம் பள்ளியில் என்ன நடத்தினார்கள் என்பதைக் கேட்டுவிட்டு உறங்கிவிட்டு மீண்டும் அதிகாலையில் எழுந்து சமையலை முடித்து, பிள்ளைகளைச் சாப்பிட வைத்துவிட்டுக் கிளம்புவார்கள். சில நேரங்களில் கொஞ்சம் தாமதமானால் வாசனையும் ஜோதியையும் சாப்பிட்டுப் பள்ளிக்குச் செல்லச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். பரபரப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.  இது ஒரு தொடர்வேலை போல தினந்தோறும் நடந்துகொண்டே இருக்கும்.  இந்த வேலைகளில் எதுவாவது ஒன்று தடைபட்டாலும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே சண்டை வந்துவிடும். 


 ஆனால் கவின், தனு வீட்டில் இது போன்ற பிரச்சனையில்லை. மாலை நேரங்களில் தன்னால் இயன்றவரை பாட்டி, வீடு வாசலைச் சுத்தம் செய்து வைப்பார். தாத்தா, தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத் தருவார். ஒயில், தேவராட்டம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தருவார். காலாற இருவரையும் அழைத்துக்கொண்டு வயல்பக்கம் அழைத்துச் சென்று வருவார். அவர்களை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி அருகில் இருந்து கவனித்துக்கொள்வார். மில்லில் இருந்து பணி முடித்து பெரும்பாலும் எட்டு மணிக்கு மேல் தான் கவின், தனுவின் பெற்றோர் வீட்டுக்கு வருவார்கள். வந்தவுடன் விரைவாக சமையலை முடிப்பாள் அம்மா. பிள்ளைகளின் படிப்பைக் கவனிப்பார் அப்பா. ஒருவேளை அவர்கள் வரத் தாமதமானாலும் பாட்டி சமையலை முடித்து வைத்துவிடுவாள். ஆனால் ஒரு சில நாட்களில் வாசன், ஜோதியின் அம்மாவும் அப்பாவும் தாமதமாக வீட்டுக்கு வரும்போது சாப்பிடாமல் கூட அவர்கள் உறங்கியிருப்பார்கள். கவினுக்கும் தனுவுக்கும் அதுபோல பட்டினியால் உறங்கும் சூழல் இதுவரை வாய்த்ததில்லை.


 கவினும் தனுவும் இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் பாட்டி அருகில்தான் பெரும்பாலும் படுப்பது வழக்கம். இருவரின் படிக்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்குமாறு தூங்கும்வரை பாட்டி அவர்களுக்குக் கதைகள் கூறுவாள். பழமொழிகள் கூறுவாள். திருவிழாக்கள், கோவில், குளம் போன்ற தகவல்களைக் கூறுவாள். மூலிகைச் செடிகள் பற்றிக் கூறுவாள்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் கவினும் தனுவும் தினந்தோறும் உறங்குவார்கள்.  


 வாசன், ஜோடியின் குடும்பத்தை விட ஏழ்மைக் குடும்பம்தான் கவின், தனுவின் குடும்பம். அவர்களின் பெற்றோரை விட கவின், தனுவின் பெற்றோர்களின் படிப்பும் கம்மி தான். ஆனால் முறையான வளர்த்தலால், கண்காணிப்பால், திட்டமிடலால் கவினும், தனுவும் படிப்பில் முதலாக வந்தனர். படிப்பு என்பது வாசனுக்கும் ஜோதிக்கும் பெரிய ஒரு விசயமாகத் தெரியவில்லை. இதை மாற்றக்கூட வாசன், ஜோதியின் அம்மா, அப்பாவிற்கு நேரமில்லை. ஒருநாள் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டு கவினும் தனுவும் முதல் இடத்தைப் பிடித்தபோது பள்ளியே அவர்களை வாழ்த்தியது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அவர்களைக் கொண்டாடினர். அதை தற்செயலாகத் தெரிந்துகொண்ட வாசனின் அப்பா, வாசனையும், ஜோதியையும் திட்டினார். “அவர்களைப் பாருங்கள். எப்படி படிக்கிறார்கள்? எவ்வளவு திறமையாக விளையாடுகிறார்கள்? அவர்களின் வகுப்பு தானே நீங்களும். உங்களால் ஏன் முடியவில்லை” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திட்டினார். பதில் சொல்லத் தெரியாமல் இருவரும் திருதிருவென்று அமர்ந்திருந்தனர். 


 மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை உணவை முடித்துவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள் வாசன், ஜோதி, கவின் மற்றும் தனு. அப்போது எதிர்பாராமல் தனு கீழே விழுந்துவிட்டாள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி சட்டென வீட்டிற்குள் சென்று மஞ்சளை எடுத்துவந்து காயம் பட்ட இடத்தைத் துடைத்துவிட்டு அவ்விடத்தில் வைத்துவிட்டாள். இரண்டு நாட்களில் காயம் ஆறிவிட்டது. வாசனுக்கும் ஜோதிக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இதெல்லாம் பாட்டிக்குத் தெரிந்தது? பாட்டி மருத்துவரா? நமது வீட்டைப் போலவேதான்  இங்கும் இருக்கிறார்கள். ஆனால் எப்படி கவினும் தனுவும் சிறப்பாகப் படிக்கிறார்கள். புத்திக் கூர்மையுடன் இருக்கிறார்கள், எப்படி சிறப்பாக விளையாடுகிறார்கள் அவர்கள் தாத்தாவுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கலைகள் தெரிகிறது? என்றெல்லாம் சந்தேகம் வந்துவிட்டது. அந்தக் கேள்வியை நேரடியாக கவினிடமே கேட்டுவிட்டான் வாசன்.

 அதற்கு கவின், “என்னுடைய அம்மா, அப்பாவின் பல வேலைகளில் எங்கள் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் இருக்கும்போதும் இல்லாதபோதும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் பெற்றோருக்கும் வழிகாட்டுகிறார்கள். அம்மா அப்பா வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதாவது ஏதாவது சண்டை வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்த்துவைக்கிறார்கள்.  எங்களுக்கு நன்னெறிக் கதைகள் சொல்கிறார்கள். படிப்பதன் அவசியம் சொல்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் வாழ்வில் தாங்கள் கற்ற அனுபவங்களை எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் எங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருபவர்கள். ஒரு வார்த்தையில் சொல்வதானால் எங்களுடைய தாத்தாவும் பாட்டியும் எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா. அவர்கள் இல்லாமல் எங்கள் படிப்போ விளையாட்டோ இவ்வளவு சிறக்க வாய்ப்பில்லை” என்று சொல்கிறான். எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தான் வாசன்.


 அன்று இரவு வாசனும் ஜோதியும் அவர்களின் அம்மா, அப்பாவிடம் சரியாகப் பேசவில்லை. சாப்பிடவும் இல்லை. “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா வேண்டும் எனச் சொல்கிறார்கள். “என்ன இது முட்டாள் தனமான விருப்பம்?” அது எப்படி முடியும்? என வாசனின் அப்பா கோபப்படுகிறார். அப்போது “அந்த இன்னொரு அப்பா அம்மா வேறு யாருமில்லை. ஏன் எங்க தாத்தா பாட்டியாக இருக்கக்கூடாது... கவின், தனுவின் தாத்தா பாட்டியைப் போல” என ஒரே குரலில் சொல்கிறார்கள். இதைக் கேட்டவுடன் இவ்வளவு நாள் தாத்தா பாட்டியை, பேரக் குழந்தைகளோடு இருக்கவிடாமல் ஊரில் தனியாக விட்டு வந்துவிட்டோமே என்ற உண்மையைப் புரிந்துகொண்டும், குற்ற உணர்வோடும் “சரி, கவலைப் படாதீர்கள், நாளை எல்லோரும் தாத்தா பாட்டியைக் கூப்பிட ஊருக்குப் போகலாம், இப்போ சாப்பிடுங்க” என்று கூறுகிறார் வாசனின் அப்பா மகிழ்வோடு. 


Thursday 14 October 2021

அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கை...!

 அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கை


#சிறுகதை


யாழ் தண்விகா


 பெரு மழை பொழிந்து கொண்டிருந்தது. தட்டுப்படும் எல்லா வீடுகளின் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. காற்றின்றிப் பெய்யும் மழையாதலால் ஜன்னல்கள் திறந்திருந்தன. யாரும் எட்டிப் பார்க்கவில்லை எனினும் ஜன்னல் வழியாக வீட்டில் உள்ள அனைவரையும் மழை பார்த்துக்கொண்டிருந்தது. யார் நனைந்தாலும் மழைக்குக் குளிர் அடிக்கப் போவதில்லை. குளிர் வேண்டாம் என்ற மனநிலை ஒருபுறம் இருந்தாலும் காய்ச்சல் வரும் என்ற பயமே மனிதர்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருந்தது. நின்று ஆடிக்கொண்டிருந்த மழைக்குள் குடையோடு ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். மழைக்கு முன்னால் நெய்த ஒப்பனை மழையால் இன்னும் மிளிரத் தொடங்கியிருந்தது அவளில்.


 வலது கையில் அவள் பிடித்திருந்த வண்ண நிற குடையையும் அவளையும் பார்க்கும்போது பட்டாம்பூச்சி ஒன்று  பூவை வாயால் கவ்விச் செல்வது போலிருந்தது.. இடது கை விரல்களால் மடிப்பு வைத்துக் கட்டியிருந்த அப்புடவையை கரை நனைந்து விடாமல் மையமாகப் பிடித்து தூக்கிப் பிடித்தபடி வந்தாள். பூனை தன்னுடைய குட்டியைக் கவ்விக்கொண்டு செல்வது போல என்று இதைச் சொல்லிக் சொல்லலாம் இதுவரைதான் நினைவில் இருக்கும்படியான காட்சிகள்.  இதனைத் தொடர்ந்து வருவதை அவனின் கண்கள் பார்க்கப் பார்க்க மழைக்காமத்தில் பூத்த மனசு மீண்டும் மீண்டும் பிரதிகளாக எடுத்து உயிரின் சுவர்கள் அனைத்திலும் ஆணியடித்து மாட்டிக்கொண்டே இருந்தது.  


 மழைக்கு எவ்வளவு இரக்கம் இருக்கும் என்பது அவளை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்றெண்ணும் மழையின் விருப்பத்தின் பக்கமிருந்தே அறியலாம். ஒரு தேவதைக்கான பாதை என்று அந்தத் தெருவில் இருந்திருந்தால் இதோ இவன் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க முடியாது. வெறுமனே அதனை வேடிக்கை என்று எப்படிச் சொல்வது? தரிசனம் தான் அது.


 முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை மட்டுமே புடவை மறைத்திருந்தது. மீதப் பக்கங்களில் அவள் ஒளிர்ந்தாள். மென் மஞ்சள் பூசிய அக்கால்களில் மழைத்துளி ஒவ்வொன்றும் நட்சத்திரப்பூக்களாக மாறி தன்னுடைய அர்ச்சனையை தூவலாகப் பதிவுசெய்துகொண்டிருந்தது. வழுவழுவென்ற அக்கால்களில் வழிந்தோடிய நீரில் குளிக்கும் மீன்கள் பாக்கியம் பெற்றவை. மெல்லக் கூடும் நீரில் அடிக்கும் அவளின் அலை எப்படியும் இந்நீரை கடலில் சேர்த்துவிடும்.


 கால்களின் கூச்சம் சட்டெனக் கூடு பாய்ந்து மூளைக்குள் மின்னலைப் பாய்ச்சுகிறது. யாரோ தன்னைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் சமிக்ஞை அது. தலை சாய்ந்து தலையில் ஈரம் பட்டுவிடாமலிருக்க வந்த குடை மெல்லத் தலை நிமிர்கிறது. கண்களை மழைக்கண்களின் ஊடே நனைந்துவிடாமல் அவளின் கால்களில் ஊடுருவவிட்ட அவனுக்கு அவளின் முகம் மெல்ல மெல்லத் தெரிகிறது. விதையிலிருந்து முட்டி மோதி வெளிவந்து தனக்கான காற்றைச் சுவாசிக்கும் தளிரின் மென்னிலைகள் இமைகளாகி காற்றைக் கண்ணடிக்கிறது. மழை தாண்டி ஓடும் கண்கள் இதோ இங்கிருந்து பார்க்கிறானே இவனின் கண்களை கண்விலங்கிட்டுக் கைப்பற்றுகிறது. குற்றம் தாளாமல் கண்களைத் தரை நோக்கித் தாழ்த்திக்கொள்வதா? இவளைக் காண எனக்காக  நேர்ந்துவிடப்பட்டிருக்கும் இந்த மழை நாளை இவள் என்ன செய்தால் என்ன என நேரடியாகப் பார்த்துக் கொள்வதா? என்றெல்லாம் குழப்பம் இல்லை. நேர் பார்வைதான். மின்னல் மோதிக் கொள்வது மழைக்குள் சாத்தியம் தானே. 


  “இப்படி மழைக்குள்ள நடக்குற பொம்பளைய உத்துப் பார்க்குறயே, அசிங்கமாத் தெரியலையா?” தேவதை உதிர்த்த முதல் வார்த்தை அதுதான். 

 “ம்ஹூம் அழகாத்தான் தெரிஞ்சது” என்ற பதில் மனசுக்குள்ளிருந்து ஓடி வந்து நாக்கின் நுனியில் சிரிப்பாய் மாறிவிட்டது.

 “ஏய், உன்னைத்தாண்டா என்னடா சிரிப்பு? பிஞ்சிடும்” என்றபோது இன்னும் கொஞ்சம் இவனை நெருங்கிவிட்டிருந்தாள். 


 யார்டா இவள்? இவ்வளவு துணிச்சல் இவளுக்கு எப்படி? எந்த வெண்ணையாக இருந்தால் என்ன? என்றபடி கொஞ்சம் நன்றாகவே அவளைப் பார்த்தான். வாயில் கைகளை வைத்துக்கொண்டான். கண்களில் ஒரு ஆச்சர்யத் தேர் ஓடத் தொடங்கியது. இவளா? சின்ன வயதில் தலை முடியை ஒழுங்காக் கட்டத் தெரியாமல் தெருவே ஓடித் திரிவாளே. மூக்கு வழியுறத சரியாத் தொடைக்காம அதுக்காகப் பார்க்கும் பலரிடமும் முகச்சுழிப்பைச் சம்பாதிப்பாளே இவளா. சரியாகக் குளிக்காமல் கரேரென கை காலில் தொன்னி தொன்னியா வந்திருக்கும். அதுக்காகவே இவளைச் சொறிச்சி என்று பட்டப்பெயர் வைத்தோமே இவளா இவ்வளவு பேசுகிறாள்?


 “அடியே நதியா! நல்லாருக்கியா?” நினைவிலிருந்து அவனாகவே வெளியில் வந்து கேள்வியையும் கேட்டுவிட்டான் அவளிடம்.

 “டேய், என்னடா பண்ற? இப்போ வரைக்கும் இந்த மாதிரி பழக்கத்தை நீ விடலையா? எப்படிப் பார்க்குற? எருமை மாடே. அதும் கல்யாணம் முடிஞ்சவளை” என்றாள் நதியா.

 “கல்யாணம் முடிஞ்சதா? எப்ப முடிஞ்சுச்சு? நான் கொஞ்சநாள் ஊரில் இல்ல. இப்போதான் கொஞ்ச நாளுக்கு முன்னால ஊருக்கு வந்தேன். உன்னை விசாரிக்குற அளவுக்கு நீ இல்ல. அட்டு பிகரு. கோவிச்சுக்காத. எதுக்கு விசாரிச்சுட்டு? அதனால விசாரிக்கல. நானும் கார் எடுத்துட்டு எவன்டா வாடகைக்குக் கூப்பிடுவான்னு பாத்துட்டே திரியுறேன். உன்னை இன்னைக்கு பார்ப்பேன்னு நெனைக்கவே இல்ல. எப்படிடி இவ்வளவு அழகா மாறுன? கொஞ்ச நேரத்துல என்னென்னமோ உள்ளுக்குள்ள ஆகிடுச்சு” பேசிக்கொண்டே போனான்.


 நதியா, வாயைப் பொத்து என்பதுபோல கையை வைத்துக் காண்பித்துவிட்டு, “இப்போ நல்லாருக்கேன்ல. போதும். அந்தாளு வந்துதான் வீட்டில் விட்டுட்டுப் போச்சு. பிசினஸ் பண்றார் சென்னைல. இன்னும் மூணு நாள் இங்கதான் இருப்பேன். நாளை பேசுறேன். சரி என்னோட நம்பரைக் குறிச்சுக்க. என் செல் வீட்டுல கிடக்கு. வாரேன்” என்றபடி கிளம்பினாள்.


 வெற்றசைவாகத் தெரியவில்லை அவளின் புறப்பாடு. ஒவ்வொன்றும் அழகு என்பதை பார்க்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் பணியைச் செய்தால் என்னதான் பண்ணுவது? பின்னழகும் ஆட்டிவைத்தது புத்தியை. நீர் தெளிக்கப்படும் ஆடாகத் தலையை ஆட்டி கண்ணை மூடிப் பெருமூச்சும் விட்டுக்கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தான் ராஜா.


 மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை. தினமும் நதியா அழைப்பாள். பேசுவான். வாட்சப்பில் மெசேஜ் பரிமாற்றம் ஓடியது. காலை வணக்கம் தொடங்கி குட் நைட் என்பது வரை நாளெல்லாம் தமதாக்கிக் கொண்டார்கள். நினைவுகளைப் பரிமாறும் புகைப்படங்கள் பகிர்ந்துகொண்டார்கள். மெருகேறிப் போய் இதற்குமேலும் கூடுவதற்கு அழகு இல்லை என்ற பூரணத்துவத்தில் இருந்தாள் நதியா. கழுத்தில் கைகளில் விரல்களில் தங்கம் ஜொலித்தது. யாரிடமும் பகை வளர்க்காமல் புன்னகைத்து அன்பை மட்டுமே தனக்கான சொத்தாகச் சேர்த்து வைத்திருந்தான் ராஜா. அதனால் என்ன பிரயோஜனம்? ஒன்றுமில்லை என்று தெரிந்தாலும் கார் ஓட்டி தன் பிழைப்பைப் பார்த்துவந்தான் அவன்.


 நான்காம் நாள் காலை நதியா அழைத்தாள். வழக்கம் போல பேச்சில்லை ராஜாவிடம். கொஞ்சம் மந்தமாக “ம்ம் சொல்லுடி” என்றான். “கார் எடுத்திட்டு வா. திண்டுக்கல் வரை. அந்தாளு என்னை ட்ரைன்ல வரச்சொல்றான். ரயில்வே ஸ்டேஷன் போகணும்” என்றாள் நதியா. எதையும் ராஜாவால் நம்ப முடியவில்லை. உடனே கார் எடுத்துச் சென்றான் நதியாவை அழைக்க. அவள் கிளம்பி தயாராகாவே இருந்தாள். “நம்ம ராஜா தம்பியா? சரியா. வண்டிய வெரட்டாம மெதுவாப் போய் ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வாயா” என்றாள் நதியாவின் அம்மா. “அதெல்லாம் பொறுமையாத்தான் போவேன் அத்த. கவலைப் படாதீங்க” என்று புன்னகைத்தபடி பொருட்களை எடுத்து வைத்தான். நதியா பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள். கார் கிளம்பியது.


 ஓரிடத்தில் காரை நிறுத்தி தேநீர் அருந்தினார்கள். “அப்பப்போ பேசுடி. மறந்துடாத. உன்னை தொந்தரவு தார மாதிரி ஒண்ணும் பண்ணமாட்டேன். உன்னை ஏன்டா பார்த்தேன்னு இருக்கு. தப்பு தான். ஆனாலும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது. என்ன பண்ண. ஒண்ணும் புரியல” என்றான் ராஜா. 

 மீண்டும் பின்னால் சீட்டில் அமரப் போனவள் “வெறும் டயலாக் மட்டும்தான் போல. முன்னால வந்து உக்காருடி சொல்லணும் எரும” என்று சொல்லிக் கொண்டே முன்னால் வந்து அமர்ந்துகொண்டாள் நதியா. அவன் பேசப் பேச அவன் முகத்தையே பார்த்துக்கொண்டே வந்தாள். ட்ரைன் எப்போ எனக் கேட்க அவள் “நைட் எட்டரைக்கு” என்றாள். “அப்போ அதுவரை என்ன பண்ண?” என்றான் ராஜா. 

 “வா சொல்லித்தாரேன். ஆளைப் பாரு ஒன்னொன்னாக் கேட்டுக்கிட்டே இருக்குறத” என்றவளைப் பார்த்து “எதுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு வீட்டில் கேட்கலையாடி” என்றான் ராஜா. “திண்டுக்கல்லில் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டுப் போகணும் சொல்லிட்டேன்’ என்றாள் சிரித்தபடியும் கொஞ்சம் அர்த்தம் பொதிந்தபடியும்.


 ட்ரைனில் அனுப்பிவிட்டுத் திரும்பும்பொழுது சிலமணி நேரங்கள் அவளோடு மகிழ்ந்திருந்த விடுதி கண்ணை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னே சென்று கொண்டிருந்தது. எவ்வளவு சாமர்த்தியமாகப் பேசுகிறாள். நடந்துகொள்கிறாள். சிரிக்கிறாள். ஆளே முழுவதுமாக மாறிவிட்டாள்.  அவளோடு ஒப்பிடும்போது இப்போது தான்தான் அட்டு பிகராக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.  அவ்வளவும் அவனுக்கு இப்போதும் நம்பமுடியவில்லை. ‘”வாடகையா நெனைக்காத” எனச் சொல்லி சில பல ஆயிரங்களை அவனின் பாக்கெட்டில் வைத்து அவன் நெற்றியில், இதழில் முத்தமிட்டபின் திறந்த அறை மீண்டு அவன் கண்ணெதிரே வந்து போனது. அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டான் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில். வருத்தமில்லை. அத்தனையும் அவள் தந்தது. அதை இப்படியும் சொல்லலாம். திருவிழா முடிந்தது. இனி மீண்டும் திருவிழா எப்போது வரும்?



Thursday 1 July 2021

மழைக்கு இதமாய் ஒரு மழை

 மழைக்கு இதமாய் ஒரு மழை


கவிதைத் தொகுப்பு


துஷ்யந்த் சரவணராஜ்

Dushyanthsaravanaraj


வெற்றிமொழி வெளியீட்டகம்

Vetrimozhi Veliyeetagam


பக்கங்கள் 64, விலை ரூ.60


கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.

“புத்தகங்களே புத்தகங்களே

தயவுசெய்து குழந்தைகளைக்

கிழித்துவிடாதீர்கள்”


மழையை குடை வைத்து ரசிப்பவர்கள் தானே நாம். அப்படியானால் நாம் குழந்தைகளை குழந்தையாக வளர விடுவதற்கு தயாராக இல்லாதவர்கள்தானே. 


மழைக்கு இதமாய் ஒரு மழை. மழை நேரம் எதை விரும்பும் உடலும் உயிரும்? ஒரு தேநீர்? ஒரு கவிதை? ஒரு முத்தம்? கொஞ்சம் நெருப்பு வாசம்? கொஞ்சம் கட்டியணைப்பு? காதல் ஜீவனின் ஸ்பரிசம்? கைகள் இரண்டையும் உரசி கன்னங்களில் தனக்குத் தானே வைத்து மென் சூடினை ரசிக்கும் தருணம்? எது வேண்டும் மழைக்கு இதமாக...? எதுவும் வேண்டாம் மழைக்கு இதமாய் இன்னுமொரு மழை. கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதையாக. மழைக்கு இதமாக அந்த இன்னொரு மழை இத்தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது குழந்தைமை கொண்டாடும் கவிதைகளாக.


ஒரு குடும்பத்தின் பேரன்பு மிளிரக் காண்கிறேன் இத்தொகுப்பில். மகன் துஷ்யந்த், மகள் சம்யுக்தா, மனைவி ராஜலட்சுமி மற்றும் கவிஞர், இன்னும் சில குழந்தைகள் உலாவும் அன்புத் தோட்டம் இத்தொகுப்பு. 

“நின்னைப் பிரிந்திருக்கும் 

நீளமான இரவை 

என்ன செய்வது மகளே?

உருட்டித் தருகிறேன் 

உதைத்து விளையாடு”


“வார விடுமுறையில் 

வந்து போகிற

அப்பனுக்கு மட்டுமே தெரியும்

ஒரு முத்தத்தின் எடை”

தந்தையோ தாயோ குழந்தைகளை விட்டு பணி நிமித்தம் வெளியூரில் தங்கி, வார விடுமுறைக்கு வீடு வரும் சூழலில் பூத்த கவிதைகள் இவை. ஒரு குழந்தையாக என் தந்தை இந்த வலிகளை, பூரிப்பை அனுபவித்திருக்கிறார். ஒரு தந்தையாக நானும் இதே உணர்வுகளை அனுபவித்திருக்கிறேன். நீளமான இரவு என்னும் சொல்லும் முத்தத்தின் எடை என்னும் சொல்லும் காதலுக்கு மட்டுமா சொந்தம்... குழந்தைகள் இருக்கிறார்கள் கவிதையில். ஆனால் உணர்வைச் சுமந்து கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது பெற்ற பாசம். அருமை கவிஞரே.


“பணத்தைக் கட்டிப் 

பள்ளியில் சேர்த்துவிட்டு

அடைக்கப்பட்ட

கதவுகளுக்குப் பின்னே

காத்துக்கிடக்கிறோம்

பிணை எடுக்க வந்தவர் போல...” 


“கம்பி ஜன்னலிட்ட

பேருந்தின் உள்ளிருந்து

கைகாட்டும் 

குழந்தையின் முகத்தில்

சிறைவாசியின் சோகம்”

முழு நேரமும் எந்தத் தகப்பனும் தன்னுடைய குழந்தையை அருகிலிருந்தே பராமரித்திருக்கப் போவதில்லை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால். ஆனால் தன்னுடைய குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு முதன்முதலாக வீடு திரும்பும் / பணிக்குச் செல்லும் தந்தை முகங்களைப் பார்த்தால் தெரியும் தாய்மையின் முழுச் சாயலை. எதையோ பறிகொடுத்ததைப் போல முகம், கண்ணோரமாகச் சிறிது கண்ணீருடன். இங்கு இந்தக் கவிதை வேறொரு ஏக்கத்தைச் சொல்லி மனம் கனக்க வைக்கிறது.


குழந்தைகள் உள்ள வீடு கிறுக்கல்கள் நிறைந்திருக்க வேண்டும். வைத்தது வைத்த இடத்தில், கிறுக்கல்கள் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருப்பது குழந்தைமையைத் தொலைத்ததன் அடையாளம் அன்றி வேறில்லை. இப்படிப்பட்ட அடையாள அழிப்பை வகுப்பறைகள் கச்சிதமாக நிறைவேற்றி வைக்கின்றன. அதனைக் கவிஞர் பின்வருமாறு சாடுகிறார்.

பார்க்காதே 

என்கிறீர்!

பேசாதே

என்கிறீர்! 

திரும்பாதே 

என்கிறீர்!

தூங்காதே 

என்கிறீர்! 

நிற்காதே

என்கிறீர்! 

நிமிராதே

என்கிறீர்!


அய்யோ அய்யோ


வைத்தது 

வைத்தபடி இருக்கக்

கொலுமண்டபமா

வகுப்பறை?

கவிதையின் இடையில் வரும் அய்யோ அய்யோ என்ற சொல்லானது குழந்தையின் மேலுள்ள நேசம் என்றும் கொள்ளலாம். குழந்தைகளை எதற்காக இப்படி வதைக்கிறீர் என்றும் கொள்ளலாம். குழந்தைகளே நடப்பதைப் பார்த்துக் கொந்தளித்துச் சொல்லும் சொல் எனவும் கொள்ளலாம். 


விடுமுறை என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு சனி, ஞாயிறு தான். அவை அவர்களுக்குத் திருவிழா நாட்கள் தான். இதை சம்பளம் பெரும் மனிதனோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் கவிஞர் இப்படி.

“சனிக்கிழமையைச்

சம்பள நாளாகவும்

ஞாயிற்றுக் கிழமையை

மாதக் கடைசியாகவும்

செலவழிக்கிறார்கள் 

குழந்தைகள்”


“வெள்ளிக்கிழமை

பள்ளி சென்று திரும்பும்

பிள்ளைகளின் முகத்தில்

பளபளக்கிறது

சனி ஞாயிறு வாங்கி வரும் 

சந்தோசம்”

முதல் நாள் கொண்டாட்டம். இரண்டாம் நாள் வேதனை. காரணம் மறுநாள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படியெல்லாம் குழந்தைகளைப் பாடுபடுத்துகிறது. அந்த நாட்களில் தான் ஓய்வில்லாத அளவிற்கு பள்ளிக்கூடம் வீட்டுப்பாடங்களை மிகக் கூடுதலாக வழங்கி குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காவு வாங்குகிறது. 


குழந்தைப் பேறு இல்லாததன் வலியைச் சில கவிதைகள் சுட்டுகின்றன. சில கவிதைகள். குழந்தைகளைக் கொஞ்சும் கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவியின் காதலைச் சில கவிதைகள் சொல்கின்றன. சில குழந்தைகளின் பேரன்பில் மகிழும் தந்தையின் பெருமிதத்தைக் காட்டுகின்றன. சில கவிதைகள் இள வயது வறுமையைப் பேசுகின்றன. சில அவர்களின் செல்லச் சேட்டைகளைக் கண்டு ரசிக்கின்றன. 


“மாற்றி யோசிப்போம்...


திருவிளையாடல் என்பது

தெய்வங்களின் குறும்பு!


குறும்பென்பது

குழந்தைகளின் திருவிளையாடல்!”


மழைக்கு இதமாய் ஒரு மழை

ஒரு தந்தை கவிஞனாகி வடித்த

கவிதை விளையாடல்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா


Tuesday 29 June 2021

மெல்ல எரியும் இரவு

 மெல்ல எரியும் இரவு

--------------------------------


மெல்ல எரியும் இரவினில் யாரோ ஒருவர் உங்கள் கைபிடித்து அழைத்து செல்கிறார். நீங்களும் அவரின் பின்னால் எவ்வித பிரக்ஞையற்று உடன் செல்கிறீர். நேரம் ஆக ஆக அவரோடு உரையாடத் தொடங்குகிறீர். கட்டிப்பிடிக்கிறீர். ஒரே மேசையின் எதிரெதிரே அமர்ந்து நிதானித்து தேநீர் அருந்தத் தொடங்குகிறீர். ஒவ்வொரு மிடறு உள் செல்லும்போதும் இன்னும் நெருக்கமாகிறீர். முடிவில் முதலில் அறியவேண்டிய கேள்வியை கேட்கிறீர்... உங்கள் பெயரை அறிந்து கொள்ளலாமா...?


'''இளையபாரதி''' என்கிறார் அவர்.


இரவின் கண்களுக்குள் சிக்கியுள்ள வாதைகளை

வார்த்தைகளில் நெய்திருக்கிறார் கவிதைகளாக. இரவின் வண்ணங்களாக புது கோலமிடுகின்றன அவை. 

ஆங்காங்கே தேவதை எட்டிபார்க்கிறாள் காதல் வடிவில். அவளும் இரவின் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொள்பவளாகவே இருக்கிறாள். இருப்பினும் இளையபாரதியின் இரவுக்குள் சூரியனின்றிப் பூத்திருக்கும் மலர்கள் ஏராளம். சூரியனாக பிரகாசிக்கின்றன மலர்கள்.


மழையை இன்னும் எத்தனை காலம் எழுதுவது என்ற எண்ணத்தை இப்படியெல்லாம் எழுதலாம் என உடைத்தெறிகிறார் இளையபாரதி...,  

""ஒவ்வொன்றாய் 

  கழன்று விழுந்தன

  துளி பூமிகள்""...

என்று மரங்களில் தூளியாடும் மழைத்துளிகளை கூறும்போது மழைக்கப்பாலான மரங்களை இனி உலுக்குதல் பாவம் என்பதுபோல் அதிரவைக்கிறார்.


ஒரு குடும்பத்தின் வாசனையை உணர்வீர்கள் 

பூனையின் பாதம் கொண்டு பக்கங்களின் வழியே  மெல்ல பயணித்து செல்லும்போது...

அந்த குழந்தை 

அந்த காதல்

அந்த ஊடல்

அந்த தந்தை 

அந்த இரவு 

அந்த தனிமை

அந்த தெருவின் அழகி 

இப்படி அனைத்தையும் உணரலாம் நம் இரவின் வழியாக உணர்பவற்றை இந்த கவிதைகள் வாயிலாகவும்...


""சிலர் தலைக்குமேல் 

  சிலர் பாதங்கள்

  நடமாடும் அடுக்குகளில்


  ஒருவீட்டின்மேல் 

  இன்னொரு வீடு


  எப்படிச் சொல்ல 

  இது எங்கள் வீடு""அபார்ட்மெண்ட் வீட்டின் அவலத்தினை உள்ளூரத் தொனிக்கும் கவிதை... அத்தோடு நடுத்தர மக்களின் வாழ்க்கையின்மீது வீசப்படும் பகடியெனவும் கொள்ளலாம் இதனை...


''எழுத்தல்ல ஆயுதம்''

தன் எழுத்தின் கூர்மை

தன் பயணம் எதை நோக்கியது 

என்றும் குறிபிட்டதொரு கவிதை...

கூர்மையை எரியும் இரவினில் மட்டுமல்லாது

இன்னும் கூடுதலான பொழுதுகள் அனைத்திலும் 

செலுத்தும் வீரியம் இருக்கிறது கவிஞரிடம்...

செலுத்துவார் என்ற நம்பிக்கையிருக்கிறது...


""தம்பி சாப்பிடலாம்..."" 

கவிஞரின் தந்தை கூறுவதுபோல 

ஒரு கவிதையில்...

கவிதை ஆர்வலர்களே...

இரவினை உணர 

""மெல்ல எரியும் இரவு""

சாப்பிட்டாகவேண்டிய உணவு...


வாழ்த்துகள் 

கவிஞர் இளையபாரதி Elayabharathi Elancheran அவர்களே...!


யாழ் தண்விகா






Friday 5 March 2021

சந்தித்த வேளை

 ❤️

நினைப்பாகவே இருக்கிறது

பார்த்த நாட்கள்.

நேரில் எப்போது காண்போம்...


❤️

கைகள் கோர்த்து

அவ்வப்போது முகம் பார்த்து

புன்னகை சிந்தி

இயற்கையின் சாட்சியாக

நடந்து திரும்பிவிட்டோம்


இப்போது போய் பார்த்தாலும்

அங்கு நாம் நடந்து கொண்டிருப்போம்


❤️

உனது விருப்பத்தை நீயும்

எனது விருப்பத்தை நானும்

நிறைவேற்றித் தருதல் தான்

முதல் காதல்


❤️

கைகள் விரித்து

காற்றில் சுழன்று

சுற்றி நின்றாய்


காதல் சுழி பூத்தது

அவ்விடம்.


❤️

நீயென்

தேகம் சாய்ந்த இடமெங்கும்

பொன்னிறத் தேமல்...


❤️

முத்தம் தவறென்பாய்

முத்தம் சுகமென்பாய்

முத்தம் காதலென்பாய்

முத்தம் காமமென்பாய்

முத்தம் ஏழாம் சுவையென்பாய்


எல்லாவற்றிற்கும்

தகுதிப் படுத்தித் தன்னை வெளிக்காட்டச் செய்யும்

அவ்விதழ்கள் பார்த்தறிதல்

வரமன்றி வேறென்ன...


❤️

இப்படியே வாழ்ந்திட முடியாது

அவ்வப்போது வந்து

அருகே இருப்பதே தொலைவிலிருப்பது போலிருக்கிறது


நீ தொலைவில்தானிருக்கிறாய்

எப்படி வாழ முடியும்...


❤️

உன் இதயத்தில் நான்

இருக்கிறேனோ இல்லையோ

உனக்காக என் இதயம் துடிக்கும்

என்றாய்


நீ வரும் முன்

இதயம் எனக்கெதற்கு

இருந்திருக்கப் போகிறது


வந்த பின்

அது தனியே துடித்து

என்ன செய்யப் போகிறது


நான் உனக்குள்

நீந்திக் கொண்டிருக்கிறேன்


காதல் நீர் வற்றாது

எனக்குப் புகட்டு.

போதும்.


❤️

கவிதையாகப் பேசுவாய்

கவிதையாகப் பேசும் வாய்

கவிதை பேசும் வாய்

கவிதை வாய்


இப்போ உனக்கு என்ன வேணும்


வாயைப் பாராட்டிய கவிதை என்பதால்

வாய்தா வாங்கிக் கொள்ளாமல்

முத்தம் தரவேண்டும்

நான் வேண்டும் மட்டும்

உன் வாயில்

வாய் தா...


ம்ஹும் நீயிருக்கும் வெறிக்கு

லாக்கப் டெத் ஆக்கிடுவ வாயை.

கன்னத்தில் முத்தமிட்டுக்கோ


ஒன்னும் வேணாம் 

நல்லாருடி

என்னிக்காவது ஒருநாள்

சிக்காமலா போயிடுவ...


❤️

உன்/என் மடி உறக்கம்

உன்/என் கன்னத்தில் முத்தம்

உன்/என் பார்வை என்/உன் மேல் படிதல்

உன்/என் புன்னகை

உன்/என் பேச்சு

உன்/என் விரல் கோர்ப்பு

உன்னுடன்/என்னுடன் நடை

உன்னுடன்/என்னுடன் பயணம்

உன்னுடன்/என்னுடன் பசியாறல்

உன்னுடன்/என்னுடன் கவியாடல்

இப்படிப் பல நிகழ்வுகள்

சந்திப்பில்.

நிகழ்வுகளை சுவாரசியம் செய்ய

காதலை அடுத்த கட்டம் நோக்கி

இழுத்துச் செல்ல

வா

காத்திருக்க நேரமில்லை

அடுத்த சந்திப்பிற்குடனே...


யாழ் தண்விகா



Thursday 18 February 2021

இறுதி இரவு #சி சரவண கார்த்திகேயன்

இறுதி இரவு

Saravanakarthikeyan Chinnadurai

உயிர்மை பதிப்பகம்

நல்லிரவு 12 மணியைப் போல தற்செயலாக வாசிக்கத் தொடங்குகிறேன் இறுதி இரவு என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலினை. தலைப்புச் சிறுகதையை வாசிக்கிறேன். முதல் வரியே சுவாரசியம் பற்றிக்கொண்டது ஒவ்வொரு பத்தியும் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே செல்லுகிறது கன்னிப்பெண் பிணம் என்பது குறித்தும் அதனைப் புணர்வது குறித்தும் இலக்கியக் கூட்டமொன்றில் கேட்டிருக்கிறேன் தோழர் முத்து நாகு எழுதிய சுளுந்தீ நாவல் குறித்து நடைபெற்ற கூட்டம் என்று நினைக்கிறேன்
அந்த தரவுகளை கேள்விப்படும் பொழுது அவ்வளவு ஆச்சரியம் இருந்தது. கூட்டம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஏனோ, நானே ஒரு வெங்கம் பய என்று சொல்லி புஹா ஹா ஹா ஹா என்று சிரிக்கும் சீமான் குரல் மனதில் வந்து போனது. வெங்கம்பய என்பது ஒன்றும் அற்றவன் என்ற அர்த்தம் மட்டும்தானா? அந்த அர்த்தத்தின் பின்னுள்ள வலி எப்படியிருக்கும்?
என்பது சீமான் போன்றோருக்கு ஏன் தோன்றவில்லை. அன்று தோன்றியது. ஒரு பிணம் குளிப்பாட்டுதலும் சடங்கு சம்பிரதாயம் செய்தலும் கன்னிப்பெண் பிணம் குளிப்பாட்டி சடங்கு சம்பிரதாயம் செய்தலும் ஒன்றாக இல்லை இக்கதையில். தான் கேள்விப்பட்ட ஒன்றிலிருந்து எழுதத் தொடங்கியதாக ஆசிரியர் கூறுகிறார். அப்படித் தோன்றாத வண்ணம் சிறப்பாகப் பயணிக்கிறது கதை. கதையைப் படித்து முடிக்கும்போது அதிகாலை 1 இருக்கும். கடைசி வரி உலுக்கிப் போட்டது. கண்ணீர் விடுவதா... பயம் கொள்வதா... கன்னிப் பிணத்தின் முதல் இரவா அது... இறுதி இரவா... புணர்ந்தவன் மனநிலை, என்னவாக இருந்திருக்கும்... அவன் எடுத்த முடிவு... இடையில் வந்து செல்லும் வீடியோ கேமரா என ஒன்றொன்றின் கோர்வையில் மிளிர்கிறது கதை.

மியாவ், குஜராத் 2002 கலவரம், 96க்குப் பின்னால் வாசிக்கும் ஆசிரியரின் நூல். சுஜாதா நினைவினில் வாசித்துக்கொள்ள E=mc2, மதுமிதா - சில குறிப்புகள். மதுமிதாவில் அவளின் Facebook, twitter, mail, ஐபோன் மெசேஜ், Skype இப்படிப்பட்ட தகவல்கள் வழியே கதை சென்று post mortem ரிப்போர்ட்டில் முடிகிறது. வழக்கம்போல செமயாக கதை முடிந்திருக்கிறது.

மயிரு கதை மயிரில்லாத தலை உடையவன் வலி பற்றிப் பேசுகிறது. மயிர் வளர அவன் மெனக்கெடுதல், மயிர் இல்லாமல் தள்ளிப்போகும் திருமணம் என வளர்கிறது.  ஆசிரியருக்கு நகைச்சுவையும் அழகாகக் கைகூடி வருகிறது என்பதை இக்கதையில் உணரலாம்.

அகல்யா கதை ஹிந்தி குறும்படம் ஒன்றின் நீட்சி. அற்புதமாக நீள்கிறது. மாய உலகத்தில் பயணிக்கும் கதை. வயது முதிர்ந்த சிற்பி, இளமையான மனைவி, பிற வந்து செல்லும் பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது. கதை இறுதி ஆசிரியரின் கதைகளில் வருவது போல் கடைசியில் நாம் எதிர்பாராத ஒன்றை கதையின் முடிச்சாக வைத்திருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது. இரண்டாம் முறை வாசித்து முடித்தபோதும் அதே உணர்வுதான். ஏன் என்று தெரியவில்லை. கதையில் இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்க வேண்டுமா அல்லது எனக்கு வாசிப்புத் தன்மை பத்தாதா எனத் தெரியவில்லை. 

ஒரே இரத்தம் கதை தம்பதியினர் இருவரின் வாழ்வில் பூக்கும் திடுக் சூழல். குழந்தைக்கு உண்மையான அம்மா இவள். ஆனால் அப்பா நீ இல்லை என்பதை one line ஆக வைத்துக்கொண்டு கதகளி ஆடியிருக்கிறார் கதாசிரியர். என்னாகும் ஏதாகும் என்ற எதிர்பார்ப்போடு இன்னொரு குடும்பத்தை வேடிக்கை பார்க்க வைத்துவிடுகிறார் கதாசிரியர். செம ரொமான்டிக் scenes மற்றும் வசனங்கள். பிரச்சனைகள் எல்லாம் சுபம் பெற்ற பின் நடக்கும் கூடல் வரிகள் காதலர்கள் வாழ வேண்டிய பக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. மாய உலகத்தில் தான் நாம் ஒவ்வொருவரும் பயணிக்கிறோம். விழித்திருக்கும் நேரத்தில் மட்டும் காண்பதை உண்மை என்று நம்புகிறோம். நாம் உறங்கும் நேரத்தில் நம் வாழ்க்கையை நாம் வாழ இயலுமா. அவரவர் வாழ்க்கை, அவரவர் பக்கங்கள். சொன்னால் தான் உண்டு. தெரிந்தால் தான் உண்டு. அதுவரை எல்லோரையும் நம்புகிறோம். நம்பவைக்கப் படுகிறோம். 

வெள்ளைப் பளிங்கால் தன் காதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான் தனக்கு ஒரு கருப்பு மாளிகை கட்ட ஆசைப்படுகிறான். மகள் ஜஹனாரா உதவ நினைக்கிறாள். ஒளரங்கசீப் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறான். தாஜ்மஹாலை அருகில் நின்று தரிசித்தபடி ஷாஜஹானுக்கு கட்டிடம் எழுப்ப எதிர்க்கரை பார்த்தபடியே ஏங்க மட்டுமே முடிகிறது நம்மால். அப்படியொரு மொழி நடை. வரலாறு குரூரங்களால் கொடூரங்களால் கட்டமைக்கப்பட்டதாக பல இடங்கள் இருக்கிறது. கருப்பு மாளிகைக் கனவும் அப்படியே ஷாஜஹானுக்கு.

வெண்குடை... அமெரிக்க மனிதன், ஜப்பானிய மனிதன் இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல். எது சரி எது தவறு என்பதை உணராமல் தலைமை கட்டளையிடுகிறது செய்கிறோம் என்ற மனப்பான்மை அமெரிக்கக்காரனுக்கு. ஆனால் தன்னால் போர் தொடங்கியது எனினும் ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் அழிந்தது, அங்கு எறியப்பட்ட குண்டுகளின் கதிர்வீச்சால் இன்றும் பாதிக்கப்பட்டு அதன் வேதனைகளை அனுபவிக்கும் ஜப்பானியக்காரன், அமெரிக்கக்காரனிடம் எதிர்பார்க்கும் சிறிதளவு வருத்தம். இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டம். போரில்லாத வாழ்வைப் பேச போரைப் பற்றி பேசும் கதை. 

இன்னும் சில கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில். ஒவ்வொன்றிலும் அவ்வளவு அழுத்தம். ஏனோ தானோ கதைகளாக இல்லாமல் எல்லாவற்றோடும் நாமும் பயணிப்பது மாதிரியான கதைகள். வழக்கம்போல முடிவில் வெளிப்படும் டிவிஸ்ட்டுகள் எனக் கலக்கியிருக்கிறார் கதாசிரியர்.

வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா

Wednesday 20 January 2021

108 காதல் கவிதைகள் #ஆத்மார்த்தி

 108 காதல் கவிதைகள்

#ஆத்மார்த்தி


வதனம் வெளியீடு


குட்டிக் குட்டி கவிதைகளாக 108.

காதல் ஒரு போதும் திகட்டாது. அதற்கு தொடக்கம் மட்டுமே. முடிவு இல்லை. நீள் பயணத்துடன் அதனை ஒப்பிடலாம். இலக்கில்லாத வானம் அதற்கு. அங்கு நதி, மழை, கடல், வனம், கவிதை, நட்சத்திரம் எல்லாம் உண்டு. உங்களுக்கு என்ன தேவையோ அதை அடையலாம். கண்கள் மூடி கண்ட தேவதையை கண் திறந்து காணலாம். காதல் ஒரு தவம். வரம். தேடல். ஊற்று. நிசப்தம். எல்லாம் தான். இந்த நூல் இளையராஜாவின் how to name it இசைத் தொகுப்பிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார் தோழர். எப்படி பெயரிடுவது காதலுக்கும் இசைக்கும்... 


ஊடல், கூடல் எல்லாம் உண்டு இதனில். எதுவாக இருந்தாலும் கொண்டாடுகிறது கவிதை.

எனக்குப் பிடித்தவை எதுவும்

உனக்குப் பிடித்தவற்றுடன்

ஒத்துப்போகவே இல்லை

என்கிற ஒன்று

ஒத்துப்போகிறது

நமக்குள்...

என்பது ஊடலா கூடலா...!


ஆச்சர்யம் நிறைந்தது காதல். எதிர்பாராத ஒன்று. எப்போது எப்படி யாரால் எங்கிருந்து... இதோ பாருங்களேன்...

உன் மீது

எனக்கு

எந்த ஆச்சர்யமுமில்லை

என் 

ஆச்சர்யமெல்லாம்

உன்னைப் 

பின்தொடரும்

என் மீது தான்...


ஆலயம் புனிதம். அங்கு கடவுள் , பிரார்த்தனை மட்டும் தான். இது காதலர்களுக்குமா... காதல் எங்கும் தொடரும். கோவிலிலும்.

கோயில் பிரகாரத்தில்

வரிசையாய்

சிற்பங்களை

ரசித்துக்கொண்டே

நகர்ந்தாய்.

உன்னை

ரசிப்பதற்காக

வரிசையாய்

வந்துகொண்டிருந்தன

சிற்பங்கள்.

காதலிக்கும் அனைவருக்கும் காதலியின் அழகு பிரமாண்டம் தான். யார் தேவதையாக இருந்தாலென்ன சிற்பமாக இருந்தாலென்ன... காதலிக்குப் பின்னால் தான். 


கிராஃபிக்ஸ் என்ற கவிதை சிறுவயது குரூப் போட்டோவை அளித்து தன்னை கண்டுபிடிக்கச் சொல்லும் காதலி, அவளிடம் கண்டுபிடித்ததை கூறாமல் அவள் அருகில் அமர்ந்திருந்த ஒருவனைத் தூக்கிவிட்டு சின்ன வயதில் உள்ள தன்னை உட்கார வைக்கிறார் கவிஞர். சுயநலம் தான். அது காதலுக்கானது. காதலிக்கானது. வாழ்வுக்கானது.


காதலை தன் கோணத்தில் மட்டும் காணாமல் காதலியையும் பேசவிட்டு ரசித்திருக்கிறார் கவிஞர். பேரம் என்றொரு கவிதை. கடையில் பேரம் பேசும்போது கேட்பதைக் கொடுக்கச் சொல்கிறாள் காதலி. மறுக்கிறான் காதலன். அப்படியே கொடுக்கவா முடியும் என்கிறான். அவள் அமைதியாக சொல்கிறாள்

"நீ கேட்டதை

அப்படியே தானே 

கொடுத்தேன்" இந்த வரிகள் வாசிக்கும்போது

 அவரவர் காதலியின் முகம் கண்முன் வந்து போகும். நாம் கேட்டதும் அவள் அளித்ததும் நினைவுக்கு வந்து உயிரை சில்மிசம் செய்து சிரிக்க வைக்கும். ரசிக்க வைக்கும்.


இன்னும் பலப்பல கவிதைகள்.

முத்தக் கவிதை ஒன்று.

"முத்தமிடவா என்றேன்

கைகளை நீட்டினாய்

கையா நான் கேட்டது

என்றேன்

கண்மூடி

இதழ்கள் காட்டினாய்"


பிரிவுக் கவிதை ஒன்று.

"நீ இல்லாமல்

எப்படி வாழவேண்டும்

என்று அறிவுரைகள்

அள்ளி வழங்கிச் சென்றாய்

அதெல்லாம் இருக்கட்டுமடி

முதலில் 

தூங்குவதற்கு மட்டும்

ஒரு வழி சொல்"


இப்படி இப்படியாக 108 கவிதைகள். பாரதி கிருஷ்ணகுமார் தோழர் வழங்கிய அற்புத அணிந்துரையுடன். அதில் அவர் கூறியுள்ள "பாரதி எழுதினான், "கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாய்ப் பிற. மனிதனானால் காதல் செய்..." என்பதோடு நிறைவு செய்யலாம் இவ்வாசிப்பு அனுபவத்தை.


காதலில் வாழ

வாசிக்கலாம்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா