Monday 20 April 2020

ஆரண்யம் #கயல்

#ஆரண்யம்
கவிதைத் தொகுப்பு

Kayal S

கயல் தோழரின் ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கவிதைத் தொகுப்பிற்குப் பின் நான் வாசிக்கும் அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கயல் தோழருக்கு  மூன்றாம் கவிதை தொகுப்பு.   கவிதைத் தொகுப்பின் தலைப்பிற்கு ஏற்ப காடும் காடு சார்ந்த சொற்களும் விரவிக் கிடக்கின்றன. மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள், காடுகள், மழை, வானம், நிலம் என நாட்டைவிட்டு நாம் பார்க்க மறந்த அல்லது அழித்துத் தொலைத்த பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறது கவிதை.

கல்யாண்ஜி, என் லிங்குசாமி, இளையபாரதி ஆகிய ஆளுமைகள் நூல் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

கைகளில் ஏந்தி ரசிப்பதற்கு மலர் எவ்வளவு சுகந்தமாக இருக்குமோ அதேபோன்ற மலராக ஒவ்வொரு கவிதையும் நீளமாக இல்லாமல் கைகளில் எடுத்தது கண்களில் ஒற்றிக்கொண்டு இதயத்தில் பரவவிடும் சுகம் ஒவ்வொன்றிலும்...

முயலுக்கு உவமை சொல்லும் கவிதை ஒன்று. ஒரு வரி போதும் ஆனால் ஒவ்வொரு வரியையும் விடுகதையை கூறுவதுபோல கவித்துவம் படர அமைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒவ்வொரு வரியை வாசிக்கும் பொழுதும் முயலினை கைவிரல்களால் தடவிக் கொடுக்கும் சுகம்
"மல்லிகைப் பூப் பந்து
தரை நடக்கும் மேகக்கூட்டம்
கரைக்கு வந்த கடல் நுரை
குறுகுறுவென பார்க்கும் பஞ்சுப்பொதி
துள்ளும் பனிக்கட்டி
சீனத்து வெண்பட்டு
பெயர் சொன்னாலே மனம் பூரிக்கும்
செல்ல முயல்..."

புத்தன் மட்டும்தான் புத்தனாக முடியுமா... போதிமரம் மட்டும்தான் புத்தனுக்கான மரமா... இல்லை இல்லை...
"கொப்பும் குலையுமாகப்
பூக்கள் காய்கனிகளோடு
தாய்மை தழும்ப நிற்கும்
ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
எம் மனிதனும்
புத்தன்
எந்த மரமும்
போதி"
என்கிறார் கவிஞர்.

யானை ஒரு பெரிய விலங்கு. ஆனால் அதனை மனிதன் படுத்தும்பாடு என்பது சொல்லில் அடங்காதது. பெரிய விலங்கு எனினும் அதன் குழந்தைத் தன்மை போன்ற செயல்கள் காண்போரை பரவசப்படுத்தும். காடுகளின் வழியாக மனிதன் வசதியாக வாழ்தலின் பொருட்டு சாலைகள் அமைத்து காட்டு விலங்குகளின் வாழ்வை சுக்கு நூறாக்கிப் போட்டிருக்கிறான். சமீபத்தில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டதனால் ஏற்பட்ட காயத்தால் மெல்லமெல்ல அவ்விடத்தை காயங்களுடன் கடந்துசென்ற யானையின் முகம் ஒவ்வொரு யானை கவிதையை படிக்கும் பொழுது மனதிற்குள் வந்து செல்கிறது. இதோ யானை பற்றிய வலிமிகுந்த கவிதை ஒன்று...
"தன்னை
அண்ணாந்து பார்க்கும் சிறுமி
தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட, சுரக்கும் பால்மடி கனக்கத்
தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்
கோயில் யானை"
குட்டியைப் பிரித்து அழைத்து வரப்பட்ட யானையின் கனவு வேறு என்னவாக இருக்கும்...?

இன்னொரு யானை(வலி)க் கவிதையில்...
கோடி சுடர் என நீர் தெறிக்க
புனலாடி குளித்திருந்த யானை
புரியாமல் பார்க்கிறது,
நகர் வந்த நாளாய்ப்
பாகன் தன்னை நீராட்டும்
ஓரங்கள் நசுங்கிய வாளியை..."
கோயில் கடவுள் யானை பாகன் வாளி அத்தனையையும் பொருத்திப் பார்க்கையில் கவிதையில் ஒளிந்திருக்கும் வலியைக் கண்டடையலாம்...

காடுகள்  ஒரு தனி உலகம். அதனை விடுத்து வெகு தூரமாக வீடுகள் இருக்கும். ஆனால் இன்று காடுகளை அழித்து விட்டு வீட்டின் ஓரமாக ஓரிரு மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு அதனைக் காடுகள் என்று கூறிக்கொண்டு வாழ்கிறோம். அப்பேர்ப்பட்ட மனிதர்களைச் சாடும் கவிதை...
"அத்தியூர்
அரசம்பட்டி
ஆலங்குளம்
இலுப்பையூர்
விளாத்திகுளம்
வேப்பங்குளம்
தாண்டிக்குடி
தாழையூத்து
என மரத்தின் பெயரால்
ஊர்களை அழைத்தவர்கள் நாம்
இன்றும் ஊர்ப் பெயர்களில்
மரங்கள் இருக்கிறதுதானே"
ஊரின் பெயரில் மட்டும் வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும், அல்லது ஊரின் பெயரிலிருந்தும் அப்பெயரையும் நீக்கிவிட்டோமா என்ற கோபத்தின் வெளிப்பாடு இது...

என்னதான் சரணாலயங்கள் அமைத்து அழிந்து வரும் விலங்கினங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது தான் வாழ்ந்த ஆதிக் காடாக ஒருபோதும் விலங்குகளுக்கு அமைந்துவிடாது என்பதனை "ஆரத்தழுவி
முகமெங்கும் முத்தமிட்டு
குறுகுறுத்த கண்களில் லயித்து
மென்மையாய் காதுகள் வருடி
எவ்வளவு கொஞ்சியும்
வாழ்ந்திருந்த காட்டையே
வழிநெடுகத் தேடும்
என் முயல்குட்டி..." என்ற கவிதையின் வாயிலாக உணர்த்துகிறார் கவிஞர்.

காடு என்பது என்ன என்பதற்கு கவிஞர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள் "அழகின் உச்சம் மலர்கள்
அன்பின் உச்சம் காதல்
மொழியின் உச்சம் கவிதை
ஞானத்தின் உச்சம் மௌனம் இறைவனின் மிச்சம் காடு"
ஒவ்வொன்றிலும் சலித்தெடுத்துத் தேடிய பின் கிடைக்கும் ஒரு உச்சம் கூறிய பின் இறைவனில் சலித்தெடுத்த உச்சம் காடு என்கிறார் கவிஞர். எவ்வளவு ஆழ்ந்து யோசிக்க வேண்டிய வரி இது...

தொகுப்பிலிருந்து...

வைரப் புனலின் துகள்
விளக்கில்லா பலவண்ணக் கனல்
நிலாத்துண்டின் நகரும் அகல்
மின்னல் கொடியின் மலர்
வனமகள் மூக்குத்திச் சுடர்
இருள் எதிர்க்கும் கலகக்குரல்
கதிரிடம் களவாடிய சிறு பகல்...
மின்மினி!

மலர்
சருகு
ஒன்றே போல்
மடியேந்தும்
பூமி

எதிர்ப்பட்ட பின்
கடப்பது கடினம்
காதல்,
கடவுள்,
காடு

விற்று விட்ட மாந்தோப்புக்கு
அப்பா நள்ளிரவில் தடுமாறியபடி செல்ல
தயங்கித் தொடர்ந்த அம்மா மட்டுமே
அறிவாள்
ஒவ்வொரு மரத்தின் முன்னும்
அவர் விழுந்து மன்னிப்பு கேட்டதும்
பின் சாகும்வரை
மாம்பழத்தை உண்ணாமல்
வாழ்ந்ததும்...

இன்னும் இன்னும் பறவைகளாக, பூக்களாக, இயற்கையாக மின்னும் கவிதைகள் நிறைய நிறைய தொகுப்பில்...

வாசியுங்கள்
நாம் தொலைத்த காட்டிற்குள் பயணம் செய்யலாம்.
நாம் மீட்டெடுக்க வேண்டிய காடுகளை அடையாளம் கண்டுகொள்ளலாம்...

கவிதைப் பயணம் தொடரட்டும் சிறப்பாக...
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா

Saturday 18 April 2020

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே #இசைஞானி இளையராஜா

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

இசைஞானி இளையராஜா

குமுதம் பதிப்பகம்

இளையராஜா தனது ஆன்மீகக் கருத்துகளை கவிதை வடிவில் தந்திருக்கிறார். ஆன்மீகம் என்பது ஒரு சரணாகதி நிலை. மோன நிலை. பைத்திய நிலை. அந்நிலை உள்ளவர்கள் அசாதாரண நிலையை விரும்பும் சாதாரணன் போன்றிருப்பர். இளையராஜா அவ்வகைப்பட்டவர்.

ஆன்மீகத்திற்கும் எனக்கும் எப்போதும் ஆகாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள்.   ஆனால் நிம்மதியை, துன்பங்களை உண்டாக்குவது, நீக்குவது, இன்பம் அளிப்பது, மனம் ஒரு நிலைப்படுத்தும் சூழலை ஆன்மீகம் மட்டுமே உருவாக்குவதாக, அதை கடவுள் மட்டுமே உண்டாக்குவதாக கூறுவது ஆன்மீகத்தின் பெயரால் காலம் காலமாக கூறிவரப் படுகிறது. கடவுள் உனக்குள் தான் இருக்கிறார். அவரைத் தேடி நீ எங்கே செல்கிறாய், கடவுளை அடைய இன்பத்தை விட கண்ணீர் எளிய வழி என்று கூறுகிறார் இளையராஜா. இன்றைய உலகில் மட்டுமல்ல, ஆதி காலம் தொட்டு பசியால் அழுபவனின் கண்ணீர் கடவுளுக்கு சென்று சேர்கிறதா... தவறுகள் செய்பவன் தண்டனைக்கு எப்போதும் உள்ளாக்கப் பட்டிருக்கிறானா... கர்மம், பாவம், புண்ணியம் என்று பல கேள்விகள் ஆன்மீகம் தோற்றுவிக்கும். நம்பவியலாத பதில்களை கூறி மடை மாற்றும். இசையை உணர்ந்தவரின் வாக்கு, அவரின் இசை போல் சாந்தம் வடிய அமைந்திருக்கிறது. வாசிக்க வாசிக்க மனதினை நோக்கிய பல கேள்விகளைப் பூக்கச் செய்கிறது சொற்கள். அவரின் இயல்புத்துவம், அன்னை மூகாம்பிகை, ரமண மகரிஷி மேலான நம்பிக்கை அனைத்தும் சொற்களில் காணலாம். இசை குறித்துக் கூறும்போது
"இசை என்பது
புத்தி அல்ல
மனம் அல்ல
எண்ணம் அல்ல!
நாதம்-
நாதம் மட்டுமே!
என்கிறார்.

இளையராஜா குறித்தும் அவரின் ஆன்மீக எண்ணங்களும் பற்றி அறிந்துகொள்ள வாசிக்கலாம்.

"கர்மம் செய்கிறேன் என எண்ணாதே
உன் தேகமே அதைச் செய்கிறது
நீ அப்படியே இருக்கிறாய்!
செயலுக்கு அப்பால் நீ இருக்கிறாய்
என்ற தொடர்பினால் தான்
செயலே நடக்கிறது..."

வாழ்த்துகள் இசைஞானி இளையராஜா...

யாழ் தண்விகா

யா ஒ #சிவசங்கர் எஸ் ஜே

யா - ஒ
மறைக்கப்பட்ட மார்க்கம்

#சிவசங்கர்_எஸ்_ஜே

வெற்றிமொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்

 128பக்கங்கள்

திருச்சாணரத்து மலையின் சமணப்பள்ளி பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை தாக்குப் பிடித்து இருக்கிறது. அதில் பயின்று பின் அதனின்றும் வெளியேறிய யா ஒ ஆசான் உண்டாக்கிய மார்க்கம் பேசிய 108 உரையாடல்களை இந்நூலில் கூறியுள்ளார் ஆசிரியர். குரு சீடர் இவர்களுக்கிடையே நிகழும் உரையாடல் வாசிக்க எளிமையாக, புரிந்துகொள்ளும் விதமாக, கொஞ்சம் வாழ்வின் உள் அர்த்தங்களை உணரவும் வாய்ப்பளிக்கிறது. ஆசீவகம், பௌத்த கருத்துகள் இந்த உரையாடலில் தொக்கி நிற்பதாக ஆய்வுக் குழுவினர் கூறியதாக நூலாசிரியர் கூறுகிறார். நூலில் கடைபிடிக்க இயலாத விசயங்கள் என்று எதைக் கூறியும் வாசிப்போரை சிரமத்திற்கு மார்க்கமும், நூலாசிரியரின் உரையும் ஆளாக்கவில்லை என்பது பெரு மகிழ்வான ஒன்று.

ஒவ்வொரு உரையாடலையும் ஒவ்வொரு ஓவியத்தின் மூலமாக சிறப்பாக்கித் தந்திருக்கிறார் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழர்.

மார்க்க கடலில் ஒரு துளி:

#சுயம்

இது தனியே உங்களுக்கெனக் கொண்டு வந்திருக்கிறேன் என்றபடி மரத்தின் முதல் கள்ளை முன்னே வைத்தான் யாவா(சீடன்)

ஆஹா என்றவாறே ரசித்து ருசித்த ஆசான் (யா ஒ) யாவாவை ஏதேனும் கேட்கும்படி சைகை செய்தார்

உண்மையில் தனித்துவம் என்பதுதான் என்ன ஆசானே

அது மழையில் கரையாத சாயம் யாவா

வாழ்த்துகள் தோழர் சிவசங்கர்
தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்...

யாழ் தண்விகா

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் #பா.ஜெய்கணேஷ்

மஞ்சள் வெயிலும்
மாயச் சிறுமியும்
#கவிதைத்தொகுப்பு

 Jai Ganesh தோழர்

96பக்கங்கள்

பரிசல் வெளியீடு
சென்னை

கவிதை என்பது எழுத்து வடிவிலான குறும்படம். கவிதையை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறையை இப்போதெல்லாம் நேரடியாகக் கூறிவிட முடிவதில்லை. புதுப்புது முயற்சிகள், புதுப்புது வடிவங்கள், புதுப்புது கோணங்கள், புதுப்புது சொல்லாடல்கள் என தனது பயணத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது கவிதை இத்தொகுப்பு SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றிவரும் ஜெய்கணேஷ் தோழரின் முதல் கவிதைத் தொகுப்பு.

தான் காணும் ஒவ்வொரு உலகம் குறித்தும் பல பக்கத்தில் தன் பார்வைக் கோணத்தைச் செலுத்தும் வல்லமை இவர் தன் கவிதைகளில் காணக் கிடைக்கிறது. வெயில் என்றால் வெயிலால் காய்ந்துவிடும் கடைசி மண் துகள் வரை இவரின் சொற்களில் வந்து விடுகிறது. மழை என்றால் நனைந்து தன்னைக் குழைத்துக்கொள்ளும் ஈரம் இறங்கும் ஆழம் வரை இவரின் எழுத்து இறங்குகிறது. தொல் விளையாட்டுகள், பாரம்பரியம் குறித்துப் பேசினால் அது புழக்கத்தில் விட்டு மறைந்து போனதன் உள்ளார்ந்த வலியை இவரின் எழுத்துகள் பதியம் போடுகிறது. அதுபோல் தான் ஒவ்வொரு கூறையும் காட்சிக் கவிதையாக்கியுள்ளார். 

தனிமையின் நினைவுகள் கவிதையில்
தனிமையைக் கூறும் வித வலி இப்படியாக...
"நெடுந்தூரப் பயணத்தில்
நிராதரவற்று நிற்கும்
பயணியைப் போல

சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருந்தும்
பார்வையற்ற ஒரு பறவையைப் போல

இருண்ட வானத்தின் எல்லையற்ற ஓசையில்
கரைந்துபோன
ஒரு குருவியின் குரலைப் போலத்தான்
என் தனிமையும்..."
தனிமையையும் கவியால் வாழ வைத்துள்ளார்.

நீரற்ற நதித் தடங்கள் கவிதையில் இல்லாமல் போய்விட்ட நதிகளைக் குறித்து கூறுகையில்
"நீரற்ற நதிக்கு மேலாக
கட்டப்பட்ட பாலத்திலிருந்து
சிறுவர்கள் எச்சில் துப்பு
விளையாட்டின் வழி
நதியொன்றை ஓட விடுகின்றனர்

மழையற்ற வானம்
தன் இயலாமையினால்
வெயிலை உமிழ்ந்து தள்ளுகிறது

ஈரமற்ற நதி
மௌனத்தில் உறைந்து கிடக்கிறது"
என்பதாக முடிக்கிறார். காணாமல் போன வாழ்வை கண்ணீரோடு வாசிக்க வைக்கும் வரிகள்.

மாயச் சிறுமியும் மஞ்சள் மலர்களும்,
மஞ்சள் நிற யானை உள்ளிட்ட கவிதைகள் புனைவின் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. யாழின் இசையில் கவிதைக்குள் இலக்கணத்தின் கருப்பொருட்கள் யாவும் தஞ்சம் அடைந்துள்ளன.

நகர்தலில் உடைகிறது பொழுது கவிதை அறிவியலை பகடி செய்கிறது புதிய கோணத்தில்...
"நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.

இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.

மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.

செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.

உங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று..."
இயல்பான வரிகளில் செயற்கை உண்டாக்கிய அதிர்ச்சியை இப்படியெல்லாம் கூறலாமோ என வியக்க வைக்கிறார்.

பெரும்பாலான கவிதைகள் இயற்கையைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது. பல கவிதைகள் சுயத்தைக் குறி வைக்கின்றன. நீட்டி முழக்கும் வித்தையைத் தவிர்த்து கருவின் திசையெங்கும் தான் அறிந்த சொற்களின் நளினத்தைப் படரவிட்டிருக்கிறார் என்று தான் கூறவேண்டும். இன்னும் பல உயரங்களை கவிதை உலகம் தங்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை பெருக்கெடுக்கிறது. தொடருங்கள் தோழர். வாழ்த்துகள்.

யாழ் தண்விகா

செங்கிஸ்கான் #முகில்

செங்கிஸ்கான்

முகில்

கிழக்கு பதிப்பகம்

184 பக்கங்கள்

#மெர்கிட் என்ற மங்கோலிய இனத்தை சேர்ந்த சிலுடுவின் மனைவியான ஹோலுன் என்பவரை #போர்ஜிகின் இனக்குழுவைச் சேர்ந்த யெசுகெய் என்பவர் கவர்ந்து சென்று மணம் முடிக்கிறார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே டெமுஜின். செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின். #டட்டார் இனக் குழுவின் தலைவன் பெயர் டெமுஜின் முந்தைய நாளில் போரிட்டு வென்ற எதிரி குழுவின் தலைவன் பெயர் அது. இப்படி மங்கோலிய இனத்திற்குள் ஏகப்பட்ட இனக்குழுக்கள் பிரிந்து பிரிந்து வாழ்ந்த காலகட்டம். அவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்த பிற இனக் குழுக்களுடன் போரிட்டு அவர்கள் வைத்திருக்கக்கூடிய குதிரைகளை கால்நடைகளை பெண்களை அபகரித்துக் கொண்டு வந்து தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அல்லது அவர்களை அடிமைப் படுத்திக் கொள்ளும் வழக்கம் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

மங்கோலிய நாடோடிகளைத் தடுக்கவே சீனர்கள் தடுப்புச் சுவரைக் கட்டினார்கள். கோடை, குளிர், வசந்த காலம் என்று ஒவ்வொரு காலத்திற்கும் குடியிருக்கும் நிலத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் மங்கோலியர். ஒன்பது வயதில் டெமுஜினுக்கு பொருத்தமான பெண்ணை நிச்சயம் செய்வதற்காக தந்தையுடன் பாதுகாவலர்கள் சிலருடன் கிளம்புகிறார். போர்ட்டெ என்ற பெண்ணை நிச்சயம் செய்கிறார்கள். டெமுஜின் மணப்பெண் சேவைக்காக அங்கேயே தங்கி தந்தை தனது இருப்பிடம் நோக்கி வரும் வழியில் பிற இனக்குழு ஒன்றில் வாங்கி உண்ட விச பாலால் கொல்லப்படுகிறார்.

குடும்பத்தின் சுமை டெமுஜின் மேல் விழுகிறது. சில காலங்களுக்கு பின்னால் அவனுக்கு அறிமுகமாகும் நட்பு ஜமுக்கா. இவன் மூலம் நட்பு வளரும் அதே சூழலில் மங்கோலிய இனம் அனைத்தையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற லட்சியமும் பூக்கிறது இருவருக்கும். ஜமுக்கா #ஜடாரன் இனக்குழுவினர்.

#டாய்சூட் இனக்குழுவிடம் ஒருமுறை சிக்கிக்கொண்ட டெமுஜின் பல போராட்டத்திற்குப் பின் அங்கிருந்து தப்பித்து வருகிறான். திருடர்களால் தனது இடத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட குதிரைகளை மீட்கச் சென்று வெற்றியோடு டெமுஜின் திரும்புகிறான். 16வயதில் போர்ட்டே உடன் திருமணம். தேனிலவின் போது எதிர்பாரா தாக்குதலால் போர்ட்டே எதிரி குழுவால் கடத்தப்படுகிறாள். அவளை மீட்க #கெரியிட் குழு தலைவன் ஆங் கானிடத்தில் உதவி கேட்டு மனைவியை மீட்க செல்கிறான். சில மாதங்கள் ஆன சூழலில் அங்கு சிறு போருக்குப் பின் போர்ட்டேவைக் காண்கிறான். ஆனால் அவள் எதிரிக் குழு நபரால் கர்ப்பம் ஆன நிலையில். ஆனாலும் அழைத்து வருகிறான். ஆண் குழந்தை பிறக்கிறது.

தொடர்ந்து சிறு சிறு படையெடுப்புகள். அனைத்திலும் வெற்றி. இனக்குழுக்கள் சமரசத்தின் மூலம், போரின் மூலம் இணைக்கப்படுதல். இடையே ஜமுக்கா தான் தான் மங்கோலியப் பேரரசின் தலைவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை. ஆங் கான் ஒரு புறம். இவர்களை எவ்வாறு வென்றான், மங்கோலியப் பேரரசு செங்கிஸ்கான் அமைத்த பின்னர் உலகை வெல்லும் வாய்ப்பு எப்படி எவ்வளவு தூரம் வந்தது, இந்தியாவுக்குள் ஏன் ஊடுருவ முடியவில்லை என்பதை அருமையாக எழுத்தால் காட்சிப்படுத்தியுள்ளார் முகில்.  ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரை என்று மரபணு சோதனை சொல்கிறது. சேர சோழ பாண்டிய பரம்பரை என்று சொல்லிக்கொள்வது போல செங்கிஸ் பரம்பரையாகவும் நம்மில் ஒருவர் இருக்கலாம். வாசிக்க வாசிக்க கண்முன் ஒரு திரைப்படம் பார்க்கும் பிரமிப்பு.

வாழ்த்துகள் தோழர் #முகில்.

Wednesday 15 April 2020

முழு விடுதலைக்கான வழி # டாக்டர் அம்பேத்கர்

முழு விடுதலைக்கான வழி

டாக்டர் அம்பேத்கர்

தலித் முரசு  வெளியீடு
சென்னை.

மத மாற்றம் செய்வதற்கு முன்னால் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி அவர்களிடம் மத மாற்றத்தின் தேவை குறித்த கருத்தைக் கொண்டுசேர்க்கும் விதமாக அவர்களின் கருத்தை அறியும் முகமாக அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய மாபெரும் உரை.

தீண்டத்தகாதவன் என்பவன் மேல் பரிவு, சமத்துவம், சுதந்திரம் இப்படி எதையும் அளிக்காத இந்து மதம் அவசியமா... சாதி என்பது இல்லாத இந்து மதம் என்பது ஒரு காலமும் சாத்தியமில்லை. அப்படியிருக்க காலமெல்லாம் அடிமையாக, சாதி இந்துக்களின் ஏவலாளாக எதற்கு இருக்கவேண்டும்? இந்து மதம் பொருளாதார நன்மையை அளிக்கிறதா? சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவனுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் ஒரே வகைப்பட்டதா? மானுட சிந்தனைக்கு இந்து மதம் மதிப்பளிக்கிறதா? ஹரிஜன் என்ற சொல்  இழிவைப் போக்கிவிட்டதா? இந்து மதத்தை எதிர்த்து மகாத்மா காந்தியால் சத்தியாக்கிரகம் இருக்க முடியுமா? முன்னோர்கள் பின்பற்றிய அதே இந்து மதத்தை அப்படியே காலம் காலமாக தொடரத்தான் வேண்டுமா... எந்த மதம் என்று தீர்மானிக்க மக்களுக்கே உரிமை. ஆனால் எப்பொழுது? எத்தனை பேர் மதமாற்ற மக்கள் திரளில் பங்கேற்பது...
என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை முன்வைத்து அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை. இன்றைய காலகட்டம் வரை அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட கேள்விகள் அப்படியே தான் இருக்கின்றன. மத மாற்றம் என்றவுடன் அதைத் தடுக்கும் வண்ணம் முன் வந்து நின்று அதைத் தடுக்க நினைக்கும் இந்து மத சீர்த்திருத்தவாதிகளிடம் அம்பேத்கர் கேட்ட கேள்விகளும் அப்படியேதான் நிற்கின்றன. 85 ஆண்டுகள் கடந்துவிட்டன பதில்கள் இல்லை. மாறாக இன்னும் தீவிரத் தன்மையுடன் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய இந்து மதத்தின் கொடுங்கரங்கள் நீண்டபடிதான் இருக்கின்றன.

தலித் முரசு, பதிப்புரையில் கூறிய கடைசி வார்த்தை அம்பேத்கரின் உரையை ஒற்றை வார்த்தையில் நிறைவு செய்து வைக்கிறது
"கீழ் வெண்மணிகளை விவாதிப்பதற்குப் பதில் அவற்றைத் தடுக்கும் மீனாட்சிபுரங்களை விவாதிக்கத் தொடங்குங்கள்"

முற்போக்கு சக்திகள் வாசிக்க வேண்டிய புத்தகம். பிற்போக்கு சக்திகளிடம்  கொண்டு சேர்க்கவேண்டிய புத்தகமும் கூட.

யாழ் தண்விகா

Tuesday 14 April 2020

வயது வந்தவர்களுக்கு மட்டும் #கி.ராஜநாராயணன்

வயது வந்தவர்களுக்கு மட்டும்
(நாட்டுப்புறப் பாலியல் கதைகள்)

கி. ராஜநாராயணன்

அகரம் வெளியீடு
தஞ்சாவூர்

248 பக்கங்கள்

பாலியல் கதைகள் என்றவுடன் மேற்படி கதைகள் என்ற நினைவு வந்து போகும். காதலையும் காமத்தையும் கொண்டாடும் ஒரு சமூகம் தான் அன்பு என்ற சொல்லைக் கரம் பிடித்து அழைத்துச் செல்வதற்கு தகுதியை உடையதாயிருக்கும். பாலியல் கதைகள் என்றால் காதை மூடிக்கொண்டு கடக்கும் மனிதர்கள் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை வலிய கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பதைத் தவிர வேறொரு சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயும் தான் பொறக்க முடியுமா... என்ற வார்த்தை காதல் என்பது பொது உடைமை என்ற பாடலில் வரும். இந்த வார்த்தை வெறும் காதலால் மட்டும் நிரப்பப் பட்டிருக்குமா என்பது ஆய்ந்து உணரப்படவேண்டிய ஒன்று.

மஞ்சள் பத்திரிக்கைகள், சரோஜா தேவி கதைகள் என்று எண்ணற்றவை புழங்கிய மண் இது. அது செக்சு படங்கள் என்ற பெயரில் திரைப்படமாக வந்து மனித மனத்தை தேடலின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதில் வெறுப்புத் தட்டிய ஒரு பொழுதில் அதே திரைப்படத்தில் பிட் சீன்ஸ் வைத்து அதனால் திருப்தி காண வைத்தது. என்னதான் ஷகிலா படம் என்றாலும் பிட் இல்லாமல் படம் முழுமையடையாது என்ற கால கட்டம் கடந்த பின்னர் அதீத தொழில் நுட்பம்! முழுக்க முழுக்க ஆபாச படங்களை குறுந்தகடு, தொடர்ந்து அலைபேசியின் மூலமாக கைக்குள் கொண்டுவந்து திணித்தது. இன்று காமம் என்பது உடலின் வேலை என்பதாக மட்டும் மாறிப் போனது எதனால்... காமம் என்பது இதுதானா...

நண்பர்கள், தோழிகள், காதலர்கள், கணவன் மனைவி, முறைமைக்காரர்கள் என பலரும் பலவிடத்தில் பகிர்ந்த ஒன்று தான் பாலியல் கதைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள். அது ஆழ் மனதில் எப்பொழுதும் போல் பூத்துக் கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதத்தில் அது அர்த்தப் படுகிறது. அது எதற்காக ஒவ்வொரு மனிதனால் வெளிக்கொணரப்படுகிறது என்பதும் உணரவேண்டிய ஒன்று.

கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது கணவன் மனைவியாக உறவுக்குள் வந்த பின்னர் சமூகம் மாற்றம் பெற்றது. அந்த சுதந்திரம் ஆண் பெண் இரு பாலருக்கும் சமத்துவத்தைப் பெற்றுத் தந்து விட்டதா என்றால் நாம் வாழும் சமூகத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆண் பாலியல் குறித்து பேசினால் அவனின் தனித்திறன் என்றும் பெண்  பேசினால் அவளை வேறொரு கோணத்தில் பார்ப்பதையும் பார்க்கிறோம். பசி உணர்வு போலவே பால் உணர்வு. அது ஆணுக்கும் பெண்ணும் பொது என்பதை உணரத்தக்க பல கதைகள். இந்த நூலானது நாட்டுப்புறப்பகுதிகளில் வழங்கி வந்த பாலியல் கதைகள்.

இதில் அரசர்கள் காலம், குருகுல காலம் முதல் தற்போது வழங்கி வரும் கதைகள் வரை சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பின்னால் உள்ள அரசியலை நாம் முடிச்சிட்டு பார்ப்பதில் நமது அறிவினை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லலாம். அரச சாம்ராஜ்யம் எப்படி அழிந்தது, பாலியலில் பெண் என்பவள் எப்படி பயன்படுத்தப் படுகிறாள், ஓர் ஆண் ஒருத்தியை சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு. ஒரு பெண் ஓர் ஆணைச் சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு.  கையாலாகதவள் என்று பெண்ணைக் குற்றம் சாட்டுவது போல கையாலாகாதவன் என்று ஆணைக் குற்றம் சாட்டவும் கதைகள் உண்டு.

மாமனார் மருமகள், மாமியார் மருமகள் இவர்கள் இடையே தேவைப்படும் இடைவெளி எங்கிருந்து தொடங்கியது அதற்காக வழங்கப்பட்ட கதைகள் என்ன,
அலைகளில் ஆண் அலை, பெண் அலை என்று ஏன் வழங்கப்படுகின்றன, அந்த அலைகள் ஏன் ஒன்று சேர்வதில்லை, தந்தை மகள் உறவு என்பது என்ன, சுரைக்காய் என்பது எதன் குறியீடு இப்படி பல கதைகள். நாம் தற்போது பேசிவரும் கதைகள் அல்லாத புதிய கதைகள் பல உண்டு. நாம் பேசி வரும் கதைகளும் சில உண்டு.

கி.ரா. அவர்கள் இது போன்ற பாலியல் கதைகளை சேகரிப்பதற்கு யாரும் இல்லாததால் நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்கிறார். பேச்சு வழக்கில், ஒரு கதை சொல்லியின் இடத்தில் நின்று தன்னால் இயன்ற அளவுக்கு பாலியல் கதைகளை எழுத்தில் கொண்டு வந்துள்ளார். வயது வந்தவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கதைகள். வயது வந்தும் வயதுக்கு தேவையான முதிர்ச்சியை அடையாமல் இருப்பவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

யாழ் தண்விகா

Saturday 11 April 2020

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை #அம்பை

#சிவப்புக்_கழுத்துடன்_ஒரு_பச்சைப்_பறவை

சிறுகதைத் தொகுப்பு

 #அம்பை

காலச்சுவடு பதிப்பகம்

நீண்ட நாள் வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. 167பக்கங்கள். 13 சிறுகதைகள்.

பெண்களை மையப்படுத்திய கதைகள் அனைத்தும். கதைகளை சுவாரஸ்யப்படுத்த எதையும் செய்யாமல் அனைத்தையும் அதனதன் போக்கில் இயங்க வைத்திருப்பது இவரின் தனித்துவம் போல. முதல் கதையான தொண்டை புடைத்த காகம் ஒன்று என்பதில் வயது முதிர்ந்த தந்தையுடனான வாழ்வை, சமையலறை வழியாகக் காணும் காகம், சாலையில் பைக்கின் சக்கரங்களின் கீழ் அடிபட்டு சாகும் காகத்தின் கண்களில் இருந்து வழியும் நீர் என்பதாக நகர்த்தியிருக்கிறார். கழுத்தேறி இதயம் இறங்குகிறது வலி.

சாம்பல் மேல் எழும் நகரம் கதையானது வீடு இடம் பெயரும் வலியை அதுவும் வயதானவர்கள் உடன் வாழும்போது அவர்களைப் பராமரித்தல், அவர்களை உடனழைத்துச் செல்லுதல் என்பது உள்ளிட்ட வலிகள் எதை நோக்கி வாழ்வை இழுத்துச் செல்லும் என்பதைப் பேசுகிறது.

வீழ்தல் கதை நோயில் வீழ்ந்த தந்தைக்கு செலவழிக்க யோசிக்கும் வெளிநாட்டு வாழ் மகனின் மன நிலையையும் அதனால் தாய் எடுக்கும் முடிவையும் வலியோடு பதிவு செய்திருக்கிறது.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை   ஒரு நீள் கதை. வாழ்தல் பற்றிய எண்ணங்கள் காலப்போக்கில் எப்படி மாறுகிறது, அதற்கேற்றாற்போல் வாழ்பவர்கள் தங்களை என்ன மனநிலைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை வசந்தன் மைதிலி தேன்மொழி கதாபாத்திரங்கள் மூலமாக கதாசிரியர் கூறுகிறார்.

1984 கதை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த பொழுது உண்டான கலவரங்கள் குறித்த பின்னணியில் செல்கிறது.

வில் முறியாத சுயம்வரங்கள் கதையானது பணி ஓய்வு பெறும் காலத்தில் ஒரு பெண் தேடிக் கொள்ளும் உறவு குறித்துப் பேசுகிறது.

இன்னும் சில கதைகளும்
பயணம் 21, 22, 23 குறித்த கதைகளும்....

பொய்கை கதையும்
சிங்கத்தின் வால் கதையும் புனைவின் வழி செல்கிறது.

வாசிப்பில் ஒரு புதிய அனுபவம் அம்பையின் கதைகளை வாசிக்கும்போது அடைய முடிகிறது. மனதை ஊடுருவும் வரிகள், மனதைப் படம் பிடித்திருக்கும் வரிகள் என இரு நிலைகளையும் வாசிப்பவர் அடைவர்  என்பதில் மாற்றமில்லை...

யாழ் தண்விகா

Saturday 4 April 2020

மியாவ் # சி.சரவணகார்த்திகேயன்

#மியாவ்

சிறுகதைத் தொகுப்பு

Saravanakaryhikeyan Chinnadurai.

உயிர்மை பதிப்பகம்

#அணங்கு

மியாவ் தொகுப்பில் கடைசி. நவீன தொழில் நுட்ப கண்டுபிடிப்பு சார்ந்தே இருக்கும் என்று கடைசி வரை எதிர்பார்த்தேன். ஆனால் தொடக்கம் முதல் நீட் தேர்வின் வலிகளுடன் பயணிக்கிறது. அப்பா மகள் இருவரும் தமிழகத்திலிருந்து கேரளம் பயணித்து தேர்வெழுத வேண்டும். நீதிமன்றங்களின் கைவிரிப்பு, மாணவ மாணவிகளின் மன உளைச்சலை அருமையாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பயணத்தால் திடீரென்று ஆன மாதவிடாய், அதற்காக அப்பாவிடம் நாப்கின் வாங்கச் சொல்லுமிடம், அவர் இல்லையென்று திரும்புதல், அதனால் அவள் துணியைப் பயன்படுத்துதல், தேர்விடத்தில் நடக்கும் சோதனைகள் என ஒவ்வொன்றும் கண்முன் நடப்பதுபோல. வாசிக்க வாசிக்க கண்ணில் நீர் கட்டிக்கொண்டது. அங்கு நடக்கும் சோதனைகள் வலிகளின் உச்சம். இப்படி சொந்த நாட்டு மக்களை சோதனைக்கு உள்ளாக்கியவர்கள்தான் Corono கொண்டு வந்தவர்களை நாடு முழுக்க நடமாடவிட்டவர்கள் என்றெண்ணம் வந்துபோனது. வயதுக்கு வரும் முன்னரே சற்றே பெரிய மார்பகங்களைக் கொண்டிருத்தல், அதுவும் வறுமை தொற்றியிருக்கும் நிலையில் வாழும் ஒரு பெண்ணின் அசூயையான உணர்வு இதனை எவ்வித பூச்சும் இன்றி வடித்திருக்கிரார். கதையின் இறுதி நீட்டின் மேல் குருதியை உமிழ்வது போலிருந்தது. மேலும் தேர்வெழுதும் மாணவியின் பெயர் கதைக்கு அவ்வளவு பொருத்தம்...

#மோகினியாட்டம்

Facebook மூலமாக அறிமுகம் இருவர். நாளாக நாளாக காதலாகிறது. ஒருநாள் ரமணி தன் காதலை சுஜாவிடம் சொல்கிறான். சுஜா கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்கிறாள். ரமணியின் பிறந்தநாள் அன்று தான் ஒரு பெண் அல்ல ஆண் என்றும் fake id என்றும் கூறுகிறான் சுஜா. இதை யாரிடமும் கூறவேண்டாம் என்ற புரிதலின் படி பிரிக்கின்றனர். சுஜா ஒரு fb பிரபலம். மேலும் ரமணி மெசஞ்சரில் அனுப்பிய பல தகவல்கள் சுஜாவிடம் இருப்பதும் ஒரு காரணம். சுஜா ஆண் என்று சொன்னாலும் தான் ஒரு பெண் தான் எனச் சொல்லிவிட மாட்டாளா என ஏங்குகிறது ரமணியின் மனது. ஆனால் ரமணி யார்...? ஆணா பெண்ணா...? அது ரமணிக்குத்தானே தெரியும்... அந்த முடிச்சின் சுவாரஸ்யம் கதையைப் படித்தால் புரியும்...

#பெட்டை

சாதி மறுப்புத் திருமணம் செய்யத் துணிந்தவளின் காதலனை மிரட்டிப் பிரித்து விடுகின்றனர். அதன்பின் அவளை அதே சாதிக்காரன் ஒருவன் திருமணம் முடிக்கிறான். உடலெங்கும் விசம் அவனுக்கு. அவ்வப்போது வார்த்தைகளால் கொல்கிறான். ஆனாலும் வீட்டிலேயே இருக்க இயலாமல் கணவனிடம் அனுமதி பெற்று ஒரு அடகுக் கடையில் சேர்கிறாள். மேலாளராக இருப்பவனால் வரும் தொந்தரவு காரணமாக அங்கு செல்லவில்லை என்று கணவனிடம் கூறுகிறாள். அதற்கு அவன் என்ன பதில் அளித்திருப்பான்... அவள் வாழும் தெருவில் உள்ள ஒரு பெட்டை நாயைச் சுற்றி ஆண் நாய்க் கூட்டம். ஆனால் கணவனாக உள்ளவன் எந்த நாயைப் பலிகடா ஆக்குகிறான்... இந்த இரண்டையும் முடிச்சிட்டு முடிகிறது கதை. மாதவியின் முடிவும் பெட்டைத் தனமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா... அல்லது இவர்கள் முன் வாழ்வதற்கு இதுதான் இவர்களுக்கு அளிக்கும் தண்டனை என மாதவி முடிவெடுத்துவிட்டாளா என யோசிக்க வைக்கிறது கதை...

#நீதிக்கதை

தற்கொலை விளையாட்டான ப்ளூவேல் கேமை மையப்படுத்திய கதை. சாக விரும்புபவன் மற்றும் அவனுக்கான டாஸ்க் கொடுக்கும் நபர் இருவருக்கும் இடையே நடக்கும் அன்பு யுத்தம். ஆனால் கடைசியில் என்ன நடக்கிறது என்பதை பதட்டத்தோடு நகர்த்திக்கொண்டு சென்று சொல்கிறது கதை. நீலத் திமிங்கல விளையாட்டு என்பதன் சுருக்கம் நீதிக்கத்தை என்று வைத்துக்கொண்டாலும் விளையாட்டின் நீதியையும் காப்பாற்றுகிறது கதை. வேற லெவல்...

#அழியாக்கோலம்

டிவிட்டர்ல டி எம்மில் பகிர்ந்துகொண்ட டாப்லெஸ் செல்ஃபி திருமணத்திற்கு முன் ஒருத்தியின் வாழ்வை எப்படிப் பதம் பார்க்கிறது என்பது கதை. ஆனால் அது யாரால் எப்படி லீக் ஆனது என்பதுதான் திருப்பம்...

#மியாவ்...

ஆண் பெண்ணிடையே நிகழும் ரசவாதம்  தான் மையம். இளமையை எப்படிக் களிப்போடு வைப்பது என்பதை பெண்களுடனான சுவாரஸ்யத் தொடர்புகளுடன் கோர்த்து கோர்வையாக்கிக் காட்டியிருக்கிறது கதை. வசியம் என்பதை எல்லோரும் கைக்கொண்டுவிட்டால் வசியத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும் போல. அத்தகைய வசியம் எழுத்தாக கதாசிரியருக்கு வாய்த்திருக்கிறது...

#நியூட்டனின்_மூன்றாம்_விதி

இயந்திரத்திற்கும் பூக்கும் காதலை கிரகம் விட்டு கிரகம் கொண்டு சென்று காட்சிப்படுத்தியிருக்கிறார்...

#காமத்தாழி...

யதேச்சையாக ஒரு ticket 100000 ரூபாயில். தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் கலந்துகொள்ள முடியாது என 85000 ரூபாய்க்கு கொடுக்கிறான் ஒருவன் அந்த டிக்கெட்டை.... அது புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு தம்பதியர் வேறொரு தம்பதியரோடு குலுக்கல் முறையில் கூடுதல்,  அறைச் செலவு, மது என திளைக்க வாய்ப்பு. பார்த்திபன், சில்வியா இருவரும் அதில் கலக்க முடிவெடுக்கிறார்கள். அதற்கான சம்மதம் கோருதல், சம்மதிக்க வைத்தல் என பார்த்திபன் வேலைகள், அதன்பின் சில்வியா ஆயத்தம் அழகு நிலையம் செல்லுதல், சுயநாவிதம் என நீள்கிறது அதற்கே சில ஆயிரங்கள் செலவு என்பதாக. கொண்டாட்டத்தில் கலக்க செல்லும் நாளில் அவளை பார்த்திபன் வெகு ரசனையுடன் உற்று நோக்கல், தகுந்தாற்போல் அவளும் வசீகரத்தை அழகில் கொண்டு வருதல்... நிகழ்வு நடைபெறும் இடத்தில் பார்த்தி வேறொருத்தியுடன், சில்வியா வேறொருவனுடன்... புத்தாண்டு புதுமையாக விடிகிறது... சில்வியா பார்த்திபனுக்கு good morning மெசேஜை அனுப்புகிறாள். அப்பொழுது அவள் காணும் ஒரு செய்தி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அது என்ன என்பதாக கதை முடிகிறது. இது போன்ற கதைகள் எல்லாம் மஞ்சள் பத்திரிக்கைகளில் வெறும் ஆபாச சொற்களால் நிரம்பியிருக்கும். ஆனால் இக்கதை எழுத்தின் உணர்ச்சிகளால் அன்பின் உரையாடல்களில் நிரம்பியிருக்கிறது. தோழர் ஒருவரிடம் இந்த கதை பற்றி பகிர்ந்தால் அவர் கார் key யை வாங்கி மொத்தமாகப் போட்டு குலுக்கி எடுத்து இணையாக வரும் நபர்களை தேர்வு செய்வார்களாம். கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். ஆச்சரியமாக இருந்தது.

#நான்காவது_தோட்டா

காந்தி இறப்பின்போது அவரின் மேல் பாய்ந்த நான்காவது புல்லட் என்பது உண்மைதானா என்ற தற்போதைய தேடல், மற்றும் காந்தி இறப்பதற்கு முன் வாழ்ந்த கடைசி நாட்களில் அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவரை நோக்கி நெருங்கி வந்த இறப்பை அவர் உணர்ந்தே இருக்கிறார் என்ற இரண்டையும் வைத்து பின்னப்பட்ட கதை. நேரு, இந்திரா, ராஜிவ், கோட்சே, வல்லபாய் பட்டேல் என பலரும் கதைக்குள் இருக்கிறார்கள். அன்பால் மட்டுமே இந்த உலகை மீட்டெடுக்க முடியும் என உணர்ந்த காந்தி இவ்வாறுதான் பேசியிருப்பார் என்பதை அவர் கூறுவதாக உள்ள உரையாடல்கள் அனைத்திலும் காணலாம்... மரணத்தின் வாசத்தை உணர்ந்து வாழ்ந்த காந்தியின்   அந்திமக் காலத்தை கண்முன்னே நிறுத்துகிறது கதை.

ஒவ்வொரு கதையும் அலுப்புத் தட்டாமல் நவீன கால பிரச்சனைகள், வாழ்க்கைச் சூழல், தொழில்நுட்பம் இவற்றோடு செல்வது மிகப் பிடித்திருக்கிறது...

தொடருங்கள் தோழர்
வாழ்த்துகளும் பேரன்பும்...

யாழ் தண்விகா