Sunday 18 June 2023

இருட்டு எனக்குப் பிடிக்கும் - ரமேஷ் வைத்யா


இருட்டு எனக்குப் பிடிக்கும்


சிறார் நாவல்


ரமேஷ் வைத்யா


நீலவால்குருவி வெளியீடு


அருகே அமர்ந்து தோளில் கைபோட்டு பேசும் ஒரு மனிதன் போல மேடைப் பேச்சே இருக்கும் தோழர் ரமேஷ் வைத்யாவிற்கு. தேனியில் Visagan Theni தோழர் நடத்திய பல மேடை நிகழ்வுகளில் அவரின் பேச்சினைக் கேட்டிருக்கிறேன். உலக தகவல்களை, கவிதைகளை, சினிமாவை அவர் கையாளும் லாவகம் அவ்வளவு அழகாக இருக்கும். எதையும் ஏனோ தானோவென்று அணுகாமல் உயிர்ப்புத் தன்மையுடன் பேசும் வல்லவன். அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல் இது.


தினமலர் பட்டம் இணைப்பில் வெளிவந்த தொடர் நூலாகி இருக்கிறது. கதை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது நம் வாழ்க்கையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவுக் கருவி என்கிற புரிதலோடு எழுதிய கதை என்கிறார் தோழர். ஊர் சுற்றல் என்றாலே குழந்தைகளுக்குக் குதூகலம் பிறந்துவிடும். அப்படி ஊர் சுற்ற மேகமலைக்குக் கிளம்பும் சுட்டீஸ் கண்ணன், ரவி, ராகினி, குமார், ஷீலு, ஜோ, மற்றும் வாகன ஓட்டுநர். சென்று நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் மாலை நேரத்தில் மழை பொழியத் தொடங்குகிறது. ஜோ ஒரு பக்கம் சென்று விடுகிறான். மற்ற அனைவரும் காரில் ஏறுகின்றனர். கார் வேகமாகச் செல்கிறது. திடீரென மரம் குறுக்கே விழுந்து கிடக்கும் மரம் கண்டு வாகனத்தை நிறுத்துகிறார் ஓட்டுநர். பின்னால் பாறைகளும் மண்ணும் சரிந்து பின்னால் போகவும் வழியற்ற சூழல். அப்போதுதான் ஷீலுவும் வாகனத்தில் இல்லாததைப் பார்க்கின்றனர். இரவு நேரம். ஜோ, ஷீலு என்ன ஆனார்கள்? வாகனத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? இதுதான் நாவலின் சாராம்சம். 


காடு பற்றி தோழர் நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார், எவ்வளவுதான் சொன்னாலும் காட்டின் அழகு வார்த்தையில் வராது. நேரில் பார்க்கையில் காட்டின் அழகில் வார்த்தை வராது. எவ்வளவு அருமையான வரிகள்...! நாவலில் காடு, கரடி, பறவைகள், மேகங்கள், மலைகள், குரங்குகள், வனவாசி, வன அலுவலர்கள் எல்லாம். 


இக்காலக் குழந்தைகளின் பொழுதுபோக்கு என்பது தொலைக்காட்கி, அலைபேசி என்று முடிந்து விடுகிறது. ஆனால் அவர்கள் அறியவேண்டிய அனைத்தும் அதிலேயே இருப்பதாகக் கருதினால் அவர்களின் வாழ்வு ஒரு கருவியின் வாழ்வாகவே அமைந்துவிடும். அதை மாற்ற கதை முயல்கிறது. காட்டின் தேவை பற்றி சொல்லாமல் சொல்கிறது. மலைவளம் பற்றிக் கூறுகிறது. அங்குள்ள சூழல் பற்றிச் சொல்கிறது. காட்டில் தனியாக வரும் யானையின் குணம் பற்றி அறிய வைக்கிறது. வன மக்களின் குணாதிசியம் கூறுகிறது. விலங்குகளின் உதவும் குணம், விலங்குகளின் குழந்தைப்பாசம், ஆபத்தான நேரத்தில் வன அலுவர்களை தொடர்பு கொள்ளவேண்டிய அவசியம் பற்றிச் சொல்கிறது. எல்லாம் குழந்தைகளின் மொழியில், குழந்தைகள் உணரும் வகையில். 


என்னுரையில் வைத்யா தோழர் கேட்டுக்கொண்டதைப்போல, “படித்துவிட்டு, படிக்கச் செய்துவிட்டு, இது உங்கள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்” நானும் இதை என் குழந்தைகளுக்கும் (வீட்டில்/பள்ளி திறந்த பின் பள்ளியில்)  கொடுத்து வாசிக்க வைத்து அவர்கள் அனுபவம் கேட்கவேண்டும். காரணம் காடு. அதை அழித்து வருகிறது மனித சமூகம். காட்டைப் பேணுவதை குழந்தைகளில் இருந்து தொடங்கவேண்டும். அதற்கு இந்த நாவல் தொடக்கமாக இருக்கவேண்டும். இருக்கும். 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா