Friday 29 May 2020

வகுப்பறை வாழ்க்கை #யாழ் தண்விகா

#வகுப்பறை_வாழ்க்கை

அடைக்கப்பட்டிருக்கும் பள்ளியில்
என் வகுப்பறைக் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
பேசிக்கொண்டே சொல்லிக்கொண்டே
எழுதுகிறார்கள் என் குழந்தைகள்

இன்று ரொம்பவும்தான் திட்டிவிட்டேன்
என் பிள்ளைகளை
ரொம்ப செல்லம் கொடுக்கிறேன்
வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் சூழல் கேட்கிறேன்
நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவுரை சொல்லி கல்வியின் பெருமையைச் சொல்கிறேன்
எப்போதும் விளையாட்டுப் புத்தி
கொஞ்சமும் பணிவு இல்லை
பணிவு கிடக்கட்டும்
ஓர் ஒழுக்கம் என்பது இல்லை
ஒரு சின்ன இடைவெளி என்றாலும்
சுற்றிக் குழுமி நின்று ஒரே சத்தம்
பாட தொடர்பான ஒரு வேலையும் அவர்கள் செய்வதில்லை
இன்று ரொம்பவும் தான் திட்டிவிட்டேன்

மௌனம் குடியிருக்கிறது
கரும்பலகையின் பக்கமிருந்து
திரும்பி குழந்தைகளைப் பார்க்கிறேன்
காணவில்லை அவர்கள்
அறைக்குள் எல்லா இடங்களிலும் தேடுகிறேன்
பீரோவில் பக்கவாட்டில் அடியில் மேசையின் அடியில்
புத்தகப் பைகளின் அடியில் அதனுள்
இப்படி எங்கும் தேடுகிறேன் அவர்களை
காணவில்லை
தேடலின் முடிவில்
என்னையும் காணவில்லை

குழந்தைகள் அடிக்கடி கிறுக்கிய சுவற்றில்
வண்ணங்கள் குறைகிறது
சாக்பீஸ்களின் துகள்கள்
கல்லறையின் மேல்விழும் பூக்களாக
உதிர்கிறது
வகுப்பறையின் இருள்
என்னவோ போலிருக்கிறது
உறங்கிக் கொண்டிருக்கும் மாரியப்பனின் தலையில் கொட்டிவிட்டு
அமைதியாக எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருக்கும்
சொக்கலிங்கம் நன்றாக படிப்பவன்
அவனை அழைக்கிறேன் எதிர்க்குரலில்லை
உள்ளே வரலாமா ஐயா குரலை அளிப்பவனான கருப்பசாமிக்கு
ம் ம் வாடா
என்கிறேன் குரல் வந்த திசையில் கருப்பசாமி இல்லை
வாய் மட்டும் அசைகிறது எனக்கும்
காலையில் உண்ணாமல்
வழிபாட்டுக் கூட்டத்தில் மயங்கி விழுந்த
ஹரிணி இப்போது பலத்த அரட்டை அடிக்கிறாள்
குச்சியைக் காட்டி அடி விழும் என்பதுபோல் பாவனை செய்கிறேன்
சிரிப்பவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறாள்
எப்போதும் என்னைப் பார்த்து குமரியைப் போல பேசும் விஷ்ணுப்ரியா சத்தமில்லாமல் அமர்ந்திருக்கிறாள்
ஏனென்று கேட்கிறேன்
சொல்லமுடியாது சார் இன்னிக்கு நீங்க எதுக்கு இவ்ளோ கோவமா இருக்கீங்க என்று கேட்டுவிட்டு ஓடுகிறாள்
ஒவ்வொருத்தனையும் குறை சொல்லும் நித்தீஸ் இப்போதும் பல குறைகளோடு வந்து நிற்கிறான்
எதுவும் கேட்கவில்லை
சார் இனி உங்களைத் திட்டல
நாளை முதல் நல்லா படிப்பீங்க தான
வீட்டுப் பாடம் சரியா எழுதிட்டு படிச்சிட்டு வருவீங்களா என்று கேட்கிறேன்
சரிங்க சார் என்று கட்டிடம் சிலிர்க்கும் அளவு குரலும் மின்னும் என் பிள்ளைகளும்...

உள்ளொலிக்கும் எங்கள் குரல்களையும்
கரும்பலகையையும்
உள்ளே திரியும் எங்கள் கடந்த கால வாழ்க்கையையும்
எப்படியாவது எங்கள் கைகளில் கொண்டு வந்து தாருங்கள்
வகுப்பறையைச் சுற்றிலும் நின்று நானும் என் பிள்ளைகளும்
கதறுகிறோம்
அல்லது
அறைக்குள் எப்போதும் எரியும் விளக்கொன்றை ஏற்றியாவது வையுங்கள்
நாங்கள் உள்ளேயே கற்றலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...

யாழ் தண்விகா

Friday 1 May 2020

வாக்காளனாகிய நான்... #மானசீகன்

#வாக்காளனாகிய_நான்...
கட்டுரைத் தொகுப்பு

Maanaseegan தோழர்

தமிழினி பதிப்பகம்
சென்னை

ஏன் அரசியல் என்பதற்கும் சமகால இந்தியா மற்றும் தமிழகம் இரண்டிற்கும் தேவையான அவசியமான அர்த்த பூர்வமான அரசியலை கண்டு கொள்வதற்கும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் யாரை நாம் ஏற்க வேண்டும் யாரை புறந்தள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வை உண்டு பண்ணக்கூடிய வண்ணம் தலைவர்கள் குறித்த கட்டுரைகளும் நிரம்பிய ஒரு கட்டுரைத் தொகுப்பு.

நீண்ட நாட்களாக தோழர் மானசீகன் அவர்களுக்கு தன்னுடைய வாக்காளர் ஆகிய நான் என்ற நூலினை குறித்த விமர்சனம் பெரும்பாலும் யாரும் செய்யாமல் இருப்பதை அவரே சுட்டிக்காட்டியிருக்கிறார். அது அவருடைய நூல் குறித்த விமர்சனத்தை அறிந்து கொள்ளக்கூடிய எண்ணமா அல்லது இந்த அரசியலை இந்த மண்ணும் மக்களும் எப்பொழுது கண்டுணர போகிறார்கள் என்ற ஏக்கமா என்ற வெளிப்பாட்டினை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என தெரியாமல் இருந்தேன். ஆனால் நூலை வாசிக்க வாசிக்க இந்த மண் பயனுற வேண்டும் என்றால் இந்த நூலினை ஒவ்வொரு தமிழனும் வாசித்த வேண்டும் என்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த எதிர்பார்ப்பு என்பதனை புரிந்து கொண்டேன்.

நூலினைப் பொருத்தவரையில் அது பிரதமராக இருந்தாலும் சரி முதலமைச்சராக இருந்தாலும் சரி மனதில் உள்ளதை தோழர் மானசீகன் அவர்களின் சொற்களில் கூறுவது என்றால் அக உணர்வின் அடிப்படையில் உள்ளது உள்ளபடி தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக அதேசமயம் ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டியிருக்கிறார். 49 கட்டுரைகள். 192 பக்கங்கள்.

ஆ ஊ என்றால் இந்த அவலம் நேரு உண்டாக்கி வைத்தது என்று வாய் கூசாமல் பொய்யை அவிழ்த்து விடும் சவடால் பேர்வழிகளுக்கு நேருவை ஜனநாயகத்தின் காவலன் என்ற கட்டுரை பதில் சொல்கிறது. "இந்தியா என்றென்றும் காந்தியின் தேசமாக மட்டுமே அடையாளம் காணப்படும். அந்த மதிப்பீடுகளின் நாயகனாக நேருவே கொண்டாடப்படுவார்" "காந்தி கொல்லப்பட்டபோது படேல் உள்துறை அமைச்சராக இருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பை தடைசெய்தவர். படேல், நேதாஜியை மட்டுமல்ல; விவேகானந்தரை கூட இவர்களிடம் விட்டுக் கொடுத்துவிட முடியாது. விட்டுக் கொடுத்துவிட கூடாது என்பதுதான் என் நிலை" என்கிறார்  தோழர். செம்மறியாட்டு கூட்டம் போல சாயும் மனிதக் கூட்டத்திற்கு எப்போது இது புரியப் போகிறதோ...

சாதித் தலைவர் என்ற வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுள்ள வ வு சி குறித்த கட்டுரை அவரின் பன்முக ஆளுமையைக் கூறுகிறது. மேலும் அவருக்கும் இசுலாம் மக்களுக்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது. சிதம்பரம் அவர்களின் மகனான வாலேஸ்வரன் பெயருக்குப் பின்னால் உள்ள சிறு கதை உருக்கம்.

அரசியல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இல்லாமல் பேசும் அனைத்து (அனைத்து வயது, அனைத்து சாதி) மனிதர்களும் வாசிக்க வேண்டிய கட்டுரை. "வி பி சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றும் போது உச்சரித்த வார்த்தைகள் ' பெரியார், அம்பேத்கருக்கு நன்றி '. தமிழ்நாட்டில் பெரியார் என்ன கிழித்தார் என்பதற்கு அந்த வார்த்தைகள் போதும் பதிலாக. வரலாற்றின் பதிவாக. அம்பானிக்கு எதிராக அந்தக் காலத்திலேயே வாள் சுழற்றியவர் என்பது போதாதா இவரை வரலாற்றிலிருந்து ஒதுக்கும் போக்கிற்கு. இந்தக் கட்டுரையில் வரும் இரண்டு வாக்கியங்கள் "பன்னீரும் எடப்பாடி மட்டும் திடீர் யோக்கியர்களாக்கப்பட்டு தினகரன் மட்டும்தானே குறி வைக்கப்பட்டார்" "தான் மைய வெளியில் வருவதற்குக் காரணமான வி பி சிங்கிற்கு அத்வானி செய்த துரோகம் தான் மோடியின் வடிவில் நின்று கொல்கிறது" எதனையும் வலிய ஆதரிக்கும் பலர் இந்த  அரசியலை அதன் பின்னணியை அறியவேண்டும்.

தனக்குப் பின்னால் பத்து பேர் இருந்தால் போதும் பலருக்கு முதல்வர் கனவு வந்துவிடுகிறது. முக்கியமாக திரைத்துறை சார்ந்தவர்களுக்கு. அவர்களின் கொள்கை குறித்த கேள்விகளை தேர்தல் கமிஷன் முன்வைக்கலாம். அப்போதுதான் புற்றீசலாகப் புறப்படும் கட்சிகளுக்கு தடை போட முடியும் என்கிறது எந்தக் கட்சி நம்ம கட்சி என்ற கட்டுரை. மே தினம் கட்டுரை உழைக்கும் மக்கள் பயணிக்க வேண்டிய அடுத்த கட்டப் பார்வையை எடுத்துக் கூறுகிறது. ஆதி அரசியல், ஈழ அரசியல், சாதி அரசியல் என்று பயணிக்கும் பாதை திருமாவின் அரசியலில் வந்து நின்றபோது அரசியலில் அவர் அடைந்து நிற்கும் புதிய பரிணாமத்தை கண்கொண்டு பார்க்கும் உணர்வு. மண்ணுக்கேற்ற அம்பேத்கரியம் என்ற கட்டுரையும்.

காடுவெட்டி குரு மறைந்த போது, இளவரசன் இறந்தபோது முறையே திருமாவளவன் அவர்கள் காட்டிய கண்ணிய இரங்கல் மற்றும் பொறுமையான முன்னெடுப்பு குறித்துக் கூறும் கட்டுரையாளர், 2000க்குப் பின்னர் ஒரு தலைவராக பரிணாமம் பெற்று சக தலைவர்களுடன் பழகும் விதம், நிதானம், தொலைநோக்கு, பிடி கொடுக்காத இலாவகம், யாரையும் பகைத்துக் கொள்ளாத தெளிவு என கலைஞரின் பாதையில் பயணிப்பதாக கூறுகிறார். திருமாவின் முரட்டு பிள்ளைகளுக்கு அரசியல் கற்றுத்தர வந்திருக்கும் வாத்தியார், சிறுபான்மையினரின் பாதுகாவலன், பிற சாதியினர் வியந்து நோக்கும் அரசியல்வாதி எனத் திகழ்கிறார். மேலும் அம்பேத்கரியத்தை பெரியாரியத்தோடு இணைத்து மண்ணுக்கேற்ற அம்பேத்கரியத்தை உருவாக்கியுள்ளார் என்ற புகழாரங்கள் எதுவும் பொய்யில்லை. நிதர்சன உண்மை என்பதை திருமாவின் களச் செயல்பாடுகள் மூலம் நாம் அறியலாம்.

வை கோ அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதனை ஒரு கட்டுரை தெளிவாகக் கூறுகிறது. வை கோ அவர்கள் ஸ்டாலினை மனதளவில் அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க முடியும் என்று கட்டுரையாளர் விரும்பியது இன்றைய அரசியலில் சாத்தியமாகி உள்ளது மகிழ்ச்சி.

அரை நூற்றாண்டு அடையாளம், வெற்றிடத்தை நிரப்பும் திராவிடம், காமராசரை கொண்டாடும் அரசியல் ஆகிய கட்டுரைகள் தி மு க வை மையப்படுத்தியவை. இதில் கலைஞர் இந்திய அளவில், தமிழகத்தில் ஆளுமை செலுத்திய விதம், அவரின் அரசியல், பன்முகத் திறன், கட்சியினரை எதிர் கட்சியாக இருந்த காலத்திலும் கட்டுக்கோப்பாக கொண்டுவந்த விதம், அவரைச் சுற்றியே 50ஆண்டுகால அரசியல் நடந்த விதத்தைக் கூறுகிறது. வெற்றிடம் என்பது எதுவுமல்ல, அதனை ஸ்டாலின் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு, அதற்கான காரணம் எப்படி சாத்தியமாக இருக்கும், பிறரை விட ஸ்டாலின் எவ்விதத்தில் முந்துகிறார் என்பதைப் பட்டிலிடுகிறது ஒரு கட்டுரை. காமராஜர் ஆட்சி என்பதை எவர் தூக்கிப் பிடிப்பார், அதற்கான போலிக் காரணங்கள் என்ன என்பதைக் கூறி இந்த 50ஆண்டுகளில் திராவிடம் செய்த சாதனைகள் காமராசர் ஆட்சிக் காலத்தை விட சிறந்தவையாக, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவையாக இருந்திருக்கும் விதத்தையும் கூறுகிறார். உடன்பிறப்பே என்ற கட்டுரை கலைஞரின் இடத்தில் ஸ்டாலின் எவ்வாறு பணி செய்தல் வேண்டும், அதன் சம காலத் தேவை என்ன என்பதை உணர்த்துகிறது.

ஜெயலலிதா அவர்கள் சர்வாதிகாரப் போக்குடையவர், அரசியல் பழி வாங்கல், அதிகார ஆணவம், கிரிமினல் குற்றவாளி, இப்படியெல்லாம் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே சொல்லும்போது அது தடம் மாறி நல்லவர் என்ற பிம்பம் அளிக்குமோ எனப் பயந்தேன். நல்லபடியாக அது நடக்கவில்லை. எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொன்னவர் நடத்திய அரசியல் எவ்வித பாதிப்புகளை தமிழகத்திற்கு கொடுத்தன என விவரிக்கிறது ஒரு கட்டுரை. அவர் வாழ்ந்த வாழ்க்கை இளவரசிகள் கூட வாழாத வாழ்க்கை. ஆனால் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அதனை தவ வாழ்க்கை என அழைத்துக்கொண்டார் என்கிறார் கட்டுரையாளர். உண்மைதானே... சசிகலா குறித்த கட்டுரை, திடீர் சின்னம்மா சட்டமன்றத் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறை பேசுகிறது. அந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் வரி, ஜெ சசி இருவரின் வாழ்வில் நடந்த சதுரங்கத்தில் யார் ராணி என்ற கேள்விக்கு இப்போதும் விடையில்லை என முடியும். அதே கேள்வி எனக்கு இன்று வரை நீடிக்கிறது. யார் அதற்கு ஆதாரத்தோடு விடையளிக்க முடியும்...?

பிம்ப அரசியல் கட்டுரையில் ஜெயலலிதாவின் வருகையும், அவரது வளர்ச்சியும் தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் கறை, என்பதும் தேசியம், திராவிடம் குறித்த குறைந்த பட்ச அறிவில்லாத விசிலடிச்சான் குஞ்சுகளால் தான் ஜெயலலிதா போன்ற ஒருவர் மிக எளிதாக கலைஞருக்குச் சமமான தலைவராகிறார் என்பது ஆய்ந்து உணர்ந்த கருத்தே.

வச்சு செஞ்சிருக்காங்க என்ற வார்த்தைப் பிரயோகம் கேட்டிருப்போம். சேக்கிழார் உலா, பாவம் விடலைப் பசங்க (தமிழக பா ஜ க தலைவர்கள், இரத்தத்தின் ரத்தங்கள் அளிக்கும் பேட்டிகள்), அந்தச் செம்பு ரொம்பப் பழசு கட்டுரை(எம் ஜி ஆர், ரஜினி, கமல்,  அர்ஜூன், ஆர் வி உதயக்குமார், கே எஸ் ரவிக்குமார் படங்களை கிழித்துத் தொங்க விட்டிருக்கிறது), இது கோடம்பாக்க ஏரியா கட்டுரை (ரஜினி கமல் உரையாடல் - தூத்துக்குடி சென்று திரும்பிய ரஜினி அளித்த பேட்டியை கமல் எப்படி டீல் செய்வார் என்பதை பேசுகிறது), மய்யத்தின் அரசியல், தேவர் மகனும் தமிழ் தேசியமும் கட்டுரை (நாம் தமிழர் தம்பிகளின் அரசியல்), அண்ணன் காட்டிய வழியம்மா (சீமான் அரசியல்), த்ரீ இடியட்ஸ் (மோடி அமித்ஷா சீமான்), இம்சை அரசர்கள் (தமிழக பா ஜ க தலைவர்கள் பேட்டி), மோடி எடப்பாடி பின்னே போப்பாண்டவர், பக்தாள் நேர்காணல் (பா ஜ க பக்தாள் எல்லாவற்றிற்கும் முட்டுக்கொடுத்தல்), அதான்டா இதான்டா (ரஜினி), தேனிக்காரன்டா (ஊர் கெத்து) இன்னும் சில கட்டுரைகள் சம கால அரசியல் கோமாளிகளை வச்சுச் செய்யும் பகடி என்றால் மிகையில்லை.

காங்கிரஸ் குறித்த கட்டுரை, பெண்களைப் புனிதப்படுத்தி நடத்தும் கொடுமைகள் குறித்த கட்டுரை, ஆளுநர் பதவி குறித்த கட்டுரை, ஒட்டக அரசியல், பண மதிப்பிழப்பு  நாளை முட்டாளாக்கிய தினம் என்று கூறும் கட்டுரை, பிடல் குறித்த கட்டுரை, சகலமுமாகி விட்ட பூதம் பேசும் கார்ப்பொரேட்டு அரசியல் என நூலெங்கும் அரசியல்.

இந்த நூல் ஆமைக் கறிக்கு கை தட்டும் கூட்டத்திற்கு, ஊடக வெளிச்சத்தில் மின்னும் நடிகர்களுக்கு கொடி பிடிக்கும் கூட்டத்திற்கு, அடிமை அரசியலையும், மத்திய ஆதிக்க அரசியலையும் புரியாத திருட்டு திராவிடம் என்று பேசித் திரியும் கூட்டத்திற்கு உண்மை அரசியலை உணரும் வாய்ப்பு அளிக்கிறது. திராவிடத்தை வளர்த்தெடுக்கும் கடமை உள்ளதாக நினைப்பவர்களுக்கு பல்வேறு வரலாற்றுத் தகவுகளையும், பொது அரங்கில் பேசுவதற்கான காரண காரியங்களையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல்; மற்றும் கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு வாக்களிக்கும் உரிமையை உடைய அனைத்து நபர்களும் வாசிக்கவேண்டிய நூல்.

வாழ்த்துகள் தோழர்.