Monday 16 September 2019

கற்பனைக் கடவுள் #நாச்சியாள் சுகந்தி

தோழர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய நந்தலாலா சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வாசித்த தொகுப்பு #கற்பனைக்கடவுள். தோழர் நாச்சியாள் சுகந்தி எழுதியது. மொத்தம் 11 கதைகள். கதைக்களம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் கதைகள் யாவிலும் மனிதம்தான். அப்பாவின் காதலி, மற்றும் வயிற்றுப்பிள்ளை கதைகள் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. புரியாது பூசணிக்கா கதை குறித்தும் பாயும் ஒளி நீயெனக்கு கதை குறித்தும் ஏற்கனவே பதிவிட்டேன். கொஞ்சம் ஜுஸும் ஒரு உடலும்... ஒரு பெண்ணை வக்கிரத்திற்கு படிய வைக்க இந்த சமூகம் என்ன செய்கிறது என்பதை வெகு இயல்பாக வலியாக கூறியுள்ளார். அவனதிகாரம் என்ற கதை ஆம்பளையின் அதிகாரம் ஆம்பளை என்ற தினவைக் காட்டுகிறதாக இருக்கிறது எனினும் அதற்காக வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணைக் கூறியிருப்பினும் இறுதியில் புருஷன் தன்னை விட்டுட்டு வேறொருத்தியை கூட்டிட்டுப்போனாலும் அவனைப் பிரிந்து தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து உத்தியோகம் பார்க்க வைத்த பழனியம்மாள் குறித்துக் கூறி கணவன் இல்லாமலும் வாழும் வைராக்கியத்தை கிழவி மூலம் உணர்த்துகிறார் தோழர். அறுத்துக்கட்டினவ கதை தன் தலைமுறைக்கான நிலத்தை பிடுங்க நினைப்பவர்களிடம் புருஷன் என்பவன் அருகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மிரட்டும் கும்பலிடம் நேரடியாகச் சென்று தன் வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ள அருவா இது. வெட்டுறதுன்னா இப்பவே இங்கயே வெட்டுங்க என்று செல்லம்மாள் கூறுவதும் தினம் தினம் பயந்து பயந்து சாவதை விட ஒருநாள் அந்த சாவைச் சந்தித்தே விட்டால் என்ன? என்ற ஆதித்திமிர் அவள் கண்களில் ஜொலித்தது
அந்த ஜோதிக்கு முன்னால் அவனால் உறுதியாக நிற்கக்கூட முடியவில்லை என்று முடிப்பதிலிருந்து பெண் என்பவள் கொண்டிருக்கும் வீரம் அத்தனை சாதாரணமானது அல்ல என்றுரைக்கிறார் தோழர். மயக்கம் கதை வேறு ஒரு கோணம். கற்பனைக்கடவுள் எதிர்பார்ப்பை கடைசிவரை இழுத்துச் செல்லும் கதை. பசியை வெல்லும் வயிறு மலைக்காடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலை பசியோடும் வலியோடும் பகிர்ந்துள்ளது. பதில் இல்லாத கேள்விகள் கதை பல கேள்விகளை மனதில் தோற்றுவித்துவிடுகிறது. நாம் பார்க்கும் பல நிகழ்வுகளை சாதாரணமாக கடந்து விடுகிறோம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி அல்லது பல எதிர்பார்ப்புகளுடன் வாழ்வை நகர்த்திக்கொண்டு போய் விடுகிறோம். ஆனால் ஒவ்வொன்றின் முடிவில் ஒரு முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை நம் கண்முன்னால் அவிழ்த்துக்காட்டுகிறார் தோழர் நாச்சியாள் சுகந்தி. வாழ்வின் சுவாரஸ்யங்களும் அசுவாரஸ்யங்களும் நிறைந்திருக்கும் இந்த கதைகள் சமூகத்தைப் புரட்டிப்போடும் என்று கூறவில்லை. தான் பார்த்த மனிதர்களின் வாழ்வின் மூலம் நாம் வாழும் சமூகத்தை மனிதத்தோடு அணுகும் முறையை எடுத்துக்கூறியுள்ளார் தோழர் நாச்சியாள் சுகந்தி.
வாழ்த்துகள் தோழர்.

பண்பாட்டுச் சொல்லாடல்களில் காட்டுமிராண்டித்தனமும் நாகரிகமும் #இ.முத்தையா



காட்டுமிராண்டித்தனம் நாகரிகம் இரண்டும் எப்படி மனிதர்களின் வழிபாட்டில், பண்பாட்டில் சொல்லாடல்களாக உருவாக்கப்பட்டு திணிக்கப்பட்டன, அவற்றிற்கு வரலாறு எவ்விதத்தில் பயன்படுத்தப்பட்டது, ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்களால் அவை எவ்வாறு கையாளப்பட்டன, தீ மிதித்தல், பறவைக்காவடி, குழி மாற்றுச் சடங்கு, கோவில்களில் உயிர்ப்பலி தடை இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றிப் பேசுகிறது இந்நூல். சைவ சாமி நல்ல சாமி, அசைவ சாமி கெட்ட சாமி என்று பழக்கப்படுத்தப்பட முனையும் இந்துத்துவ அரசியலின் முகத்தையும் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட ஒரு சில சாதிக்கான விளையாட்டு என்பது போலான தகவல் இடம்பெற்றுள்ளது. அதை எப்படி தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் தமிழ்ப் பண்பாட்டின் மரபுத் தொடர்ச்சியாகவும் கருத முடியும் என்று தெரியவில்லை. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, விசிக தலைவர் திருமா, ஆர்.நல்லகண்ணு, சு.வெங்கடேசன், எஸ்வி.ராஜதுரை, தமிழ் தேசியவாதி ராசேந்திர சோழன், கி.வீரமணி ஆகியோரின் கருத்துக்கள் அங்கங்கே இடம்பெற்றுள்ளன. வாசிக்க வேண்டிய நூல்...
வாழ்த்துகள் தோழர்
#இ_முத்தையா

பூக்களின் காயங்கள் #பூர்ணா

#பூக்களின்_காயங்கள் கவிதைத்தொகுப்பு
எப்போது பார்த்தாலும் இளகிய மனதுடன், புன்னகையுடன், எளிதில் உச்சரிக்கவியலாத சில கவிஞர்களின் நூலை வாசிப்பதற்காகப் பரிந்துரைக்கும் தோழர் பூர்ணா ஏசுதாஸ்ன் ஹைக்கூ கவிதைத்தொகுப்பு #பூக்களின்_காயங்கள்
இவரின் உரையில் 'வலி, படைப்பாளியைப் புடம் போடுகிறது, படைப்பாளி வலியைப் புடம் போடுகிறான்" என்கிறார். ஆம் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் வலியினால் பிறந்தவை. அவை மகிழ்வோ... துயரோ...

குழந்தை அழுகிறது
கஞ்சி காய்ச்சுவான் தந்தை
சுவரொட்டிகள் ஒட்ட...
எப்போதோ கேட்ட கவிதை இது. அதை மீண்டும் நினைவுபடுத்தியது
தோழரின்...

சிறுவன்
பசியோடு வேலை செய்கிறான்
உணவகத்தில்...
வாழ்வு எனப்படுவது கைகளின் முன்னால் காணப்படும் வரங்களை கைக்கெட்டாமல் வைக்கும்போது எப்படி மகிழ்வாயிருக்கும்... அதனை வெளிக்கொணரும் வரிகளிவை.
●பிரிந்து போன பறவையை
காற்றில் தேடுகிறது
உதிர்ந்த இறகு...
எளிய சொற்கள். நட்போடு காதலோடு வாழ்வோடு எதனோடும் தொடரும் அல்லது தோன்றும் பிரிதலோடு கூடிய வலியை அற்புதக் கவிதையாக்கியுள்ளார் தோழர்.
கவிதை என்பதோ மகிழ்ச்சி என்பதோ துயர் என்பதோ எதிலிருந்து பிறக்கிறது... அதற்கு ஆதி என்ன... இதற்கான விடையாக இந்தக்கவிதை இருக்கிறது...
●மூங்கிலில் கிழிபட்ட காற்றைத்தான்
இசைகளாக்குகிறது
புல்லாங்குழல்...
இயல்பில் பூத்திருக்கும் வரிகளில் எத்தனை நுணுக்கமான பார்வை...
கிராமம், வயல், இயற்கையோடு பொருந்திய வாழ்வுமுறைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டுத் திரியும் மனித முகங்களில் ஓங்கி அறையும் கவிதை வரிகள்...
● கட்டித் தொங்கவிடப்பட்ட
தொட்டிச் செடிகள்
ஊசலாடுகிறது நிலம்...
●காய்ந்து கிடக்கும் குளம்
எங்கே போயிருக்கும்
தவளைகள்
●மாடத்தில் கூடு
எங்கே
மரம்...
●மின்விசிறி சுழல
அசைந்தன
பிளாஸ்டிக் இலைகள்...
மனித மாண்பினை வெளிக்கொணரும் கவிதைகளும் ஏராளம் இதில்...
முகநூல் தோழர் Kumar Shaw பதிவு ஒன்றை எப்போதும் மனதில் அசைபோட்டிருப்பேன். இவ்வுலகின் கடைசி வெள்ளைக்காண்டாமிருகம் இறந்தபோது இவ்வுலகில் உரையாட மகிழ்ந்துகொள்ள யாருமே இல்லாதபோது தோன்றும் உயிர்வலியை அந்த காண்டாமிருகத்திற்கு வாய்த்ததுபோல் உள்ள சூழலில்தான் நம்மால் உணரமுடியும் என்பார்...
அதே வலியை பூர்ணா தோழரும் தனது கவிதையில் கூறியுள்ளார்
●யாருமற்ற பூமியில்
நீ மட்டும் இருப்பதாய் நினைத்துப்பார்
யாரோ ஒருவரையும் பிடிக்கும்...
ஒவ்வொரு ஹைக்கூவும் ஒவ்வொரு வண்ணத்தில் மின்னுகின்றன
அதன் நிறங்கள் சொல்லும் வலியை வாசிக்கும்போது உணரலாம் இன்னும் இன்னும்...
வாழ்த்துகள் தோழர் #பூர்ணா

96 #சி.சரவண கார்த்திகேயன்



96
தனிப்பெருங்காதல்...
96 திரைப்படம் குறித்து
96 கோணங்களில்
96 கருத்துகள்.
ஒரு காதல் திரைப்படத்தில்
ஒரு காதலை
ஓர் இயக்குனர் அணுகியுள்ள விதம் குறித்து ஓர் ஆய்வாளரின் பார்வையில் அதே சமயம் ஒரு கைதேர்ந்த ரசிகனாக சிலாகித்து எழுதப்பட்டுள்ள நூல்.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளுடன் புதிய வாழ்வைத் தொடங்கி ஆவலுடன் கூடல் நிகழ்த்தி அதன்பின் அவள் கர்ப்பமான தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நாள் முதல் அவள் குழந்தையை பெறும் நாள் வரை உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு கணவனாலும்கூட எந்த நாள் எந்த நேரம் என்ன காரணம் எங்கே சென்றோம் எதற்காக சென்றோம் என்ன பிரச்சனை என கேட்கும்போது சில தகவல்களை மறந்திருக்கக்கூடும்.
96 வேறொருவரின் குழந்தை.
அதன் மேலான காதல்.
திரைப்பட நேரம்
இடைவேளை
இசை
ஒளிப்பதிவு
பாத்திரங்கள்
வசனங்கள்
எதற்காக இந்த காட்சி முக்கியத்துவம் பெறுகிறது
உமா கார்த்திக் எழுதிய பாடல்கள் என்ன
அதில் ரசனைக்குரிய வரி என்ன
இந்த படம் எதற்காக மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது
இளையராஜா பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ள விதம்
எதற்காக யமுனையாற்றிலே பாடலை ஜானு பாடவில்லை
விளக்கற்ற இருளில் அவள் அப்பாடலை பாட பா. ரா சொல்லும் காரணம் அதன் சிறப்பு
Blue jay படத்துக்கும் 96க்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை
96 கதைத்திருட்டா
அந்த ஜானு ராம் தனித்திருக்கும் இரவில் ஏன் கலவி நடந்திருக்கக்கூடாது
அப்படி நடந்திருந்தால் இப்படி இப்படம் கொண்டாடப்பட்டிருக்குமா
96 ஒரு thriller படம். ஏன்...
இப்படி 96 தகவல்கள்.
ஒவ்வொன்றையும் நூலாசிரியர் பார்த்திருக்கும் கோணம் அலாதியானது.
அத்தனையிலும் படர்ந்திருக்கும் ஜானு ராம் 96க்குள் நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறார்கள்...
96திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டாடிய அனைவரும் மீண்டும் அந்த குதூகலம் அனுபவிக்க வாசிக்க வேண்டிய நூல்.
ஒரு திரைப்படம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் எப்படியெல்லாம் பார்க்கப்படும் என்பதற்காகவும் இந்நூலை வாசிக்கலாம் திரைப்பட ஆர்வம் உடையோர்.
192 பக்கம் நூல்
முன், பின் அட்டை சேர்த்து 196 பக்கம்.
அதிலும் ஒரு 96...
தேன் சுவை மிக்கது.
துளி தேனும் சுவை மிக்கது.
இந்நூலின் 96துளியும் சுவை மிக்கது.
வாழ்த்துகள் தோழர்
Saravanakarthikeyan Chinnadurai

கடவுள் மறந்த கடவுச்சொல் #ஜின்னா அஸ்மி

கடவுள் மறந்த கடவுச் சொல்
Mohamed Ali Jinna
ஜின்னா அஸ்மி
கஸல் கவிதைகள் என்று என்னுரையிலும் அணிந்துரையிலும் ஆய்வுரையிலும் அறிந்துணரும்போது அது ஒரு போதனை என்றே தோன்றியது...
கவிதைகளுள் செல்லச்செல்ல அங்கு காதல் மட்டும்தான். வேறொன்றும் இல்லை. ஆமாம் அதைத் தவிர இந்த மனதில், மண்ணில் வேரூன்றி நிலைத்திருக்க வேறொன்றிற்கு தகுதி உண்டா என்ன...
விண்மீன்களில் எது அழகு
சற்றே மங்கலாக பல விண்மீன்கள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன எனச் சொல்லிச் செல்லலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவற்றின் அருகில் நாம் செல்லவில்லை. அதுதான் உண்மை. காதலும் அதுபோல்தான். அது எப்போதும் எவ்விடத்தும் ஒளிவீசும். காதலினைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளும் அப்படித்தான்...
காதல் ஒரு நீர். அது எல்லா பாத்திரங்களிலும் தன்னை நிரப்பிக்கொள்ளும்.
காதல் ஒரு வரம்.
அது இன்பமாகவும் இருக்கலாம்.
துன்பமாகவும் இருக்கலாம்.
காதல் ஒரு பேரிடர்.
அதில் மிதந்தும் செல்லலாம்
மூழ்கியும் செல்லலாம்.
படைப்பு குழுமம்வெளியிட்டுள்ள இத்தொகுப்பு ஜின்னா அஸ்மியின் இரண்டாம் தொகுப்பு. முதல் தொகுப்பின் பின் 19ஆண்டுகள் கழித்து வந்துள்ள தொகுப்பு.
காதல் எப்போதும் சாயம் போகாது. அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும். எத்தனை தலைமுறைகள், யுகங்கள் கடந்தாலும். காதல் என்பதன் தனித்துவமே அதுதான்.
இமைக்கும் நொடிகளுள்ளும் காதலைக் கொண்டாடும் வரம் வாய்க்கப்பெற்றிருக்கிறார் கவிஞர். அங்கிங்கெனாதபடி தன் பார்வையை காதலால் பரவ விட்டிருக்கிறார். எதைச் சொல்ல, எதை ஒதுக்க... பூத்திருப்பது அத்தனையும் காதல் பூக்கள். அத்தனையும் வாசம் வீசும். அத்தனையின் நிறமும் ஈர்க்கும். அத்தனையும் வாடாது என்பது இவரின் காதல் கஸல்களுக்கு அவ்வளவு பொருத்தம்.
💝
நான் வெறும் காகிதம்
உன் பயணம் முழுக்க
உன்னுடனே பயணிக்கிறேன்
ஒரு பயணச்சீட்டைப் போல...
💝
நீ தேடும் பொருள்
நான் தொலையும் பொருள்
உன்னிடம் வந்தால்தான்
என்னைக் கண்டுபிடிக்க முடியும்
💝
காதலென்பது குற்றமென்றால்
கைதியாக இருப்பதே சுகம்.
💝
காதல்
என்னில் மேலே எழுகிறது
உன்னில் கீழே போகிறது
மரமாகவும் வேராகவும்
💝
வா
உன்னை அனுபவித்தே தீரவேண்டும்
நீ எனக்காக வழங்கப்பட்ட தீர்ப்பு...
💝
உன்மேல் ஒரு ஆடையைப்போலச்
சுற்றிக்கொண்டிருக்கிறேன்
நான் பார்க்கவும்
மற்றவர்கள் பார்க்காமல் இருக்கவும்...
💝
என்மேல் ஒரு நத்தையைப் போல
கூடு கட்டிக்கொள்
யாராவது வந்தால்
ஒளிந்துகொள்கிறேன் உனக்குள்...
💝
என்னை விழுங்கிக்கொள்
நான்
உனக்காகப் படைக்கப்பட்ட மாத்திரை...
இப்படியாக முழுக்க முழுக்க
காதலைக் கொண்டாடும் தொகுப்பு...
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசித்தாலே காதலாவோம்.
காதலோடு வாசியுங்கள்
கவிதையாவோம்
கஸலாவோம்...
வாழ்த்துகள் தோழர்
ஜின்னா அஸ்மி...

தலைகீழாகப் பார்க்கிறது வானம் #மு.முருகேஷ்

100ஆண்டுகள் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது ஹைக்கூவின் கால்கள். இது வாழ்வு உள்ளவரை நீடிக்கும். கவிதை வாழ்வில் இருக்கிறது. வாழ்வு கவிதையில் இருக்கிறது. அதை வெளிப்படுத்த இயலாது. உணரமட்டுமே முடியும். கவிதை என்று எதை நினைக்கிறோமோ அது கவிதையல்ல. அது ஒரு வாழ்வே.

நீங்கள் சொற்களைக் கடந்தாலும்
நீங்கள் அர்த்தங்களைக் கடந்தாலும்
அங்கே ஒரு கவிதை
இருந்துகொண்டேதான் இருக்கும்
#யான்_வின்_லீ
இத்தொகுப்பும் அவ்வாறே...
எல்லோரும் பயணிக்கும் ஒரு பாதையில் நாம் பயணிக்கிறோம். எல்லோரும் ஒரே விஷயத்தை பார்க்கிறோமா அப்படியே பார்த்தாலும் அப்போது நம் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்கிறதா... அவரவர் சிந்தனை... அவரவர் கவிதை. அவ்வளவுதான். கொஞ்சம் முன்னோக்கியோ கொஞ்சம் பின்னோக்கியோ கவிதையான வாழ்விருக்கும். அதை உணர்தல் தான் ஆன்மாவின் பாடலாக வெளிப்படுகிறது.
தோழர் மு.முருகேஷ் அவர்களின் இத்தொகுப்பின் ஒவ்வொரு பக்கமும் ஹைக்கூக்கள்... ஒவ்வொரு ஹைக்கூவும் ஒவ்வொரு போத்தல் கள்...
வாழ்வை ரசிக்கும் பார்வை
வாழ்வோடு பயணித்தல்
வாழ்வை வாழ்தல்
என வரிகளுக்குள் நம் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்...
அடுத்தடுத்து
அடுத்தடுத்து
மெய் மயக்கம்
ஆச்சர்யம் பூக்கிறது
கவிதை வரிகளில்.
ஹைக்கூ என்பதை வாழ்வின் சுவாசமாக்கியுள்ள ஒரு கவிஞராக அடையாளப்படுத்த இந்நூல் இவருக்கு மேலும் ஒரு அடையாளம். எண்ணற்ற எண்ணச் சிதறல்களை உள்ளுக்குள் தோற்றுவிக்கும் தொகுப்பிலிருந்து சில...
இயற்கை
💝
பூட்டிய கதவுகளைத் திறப்பதற்குள்
நலம் விசாரித்தன
வாசலோரச் செடிகள்...
அந்தி
💝
அவசரமேதுமில்லை
சிக்னலில் காத்திருக்கிறது
பிண ஊர்தி
காதல்
💝
விலகியே நடக்கின்றோம்
திருவிழாக் கூட்டத்திற்குள்ளும்
நானும் நீயும்...
💝
குடையற்ற நாளில்
திடீர் மழைச் சந்திப்பு
நீராலானது முத்தம்...
💝
நீண்ட நெடுநேரமாய்
பேசிக்கொண்டிருந்தோம்
சொல்வதற்கு ஒன்றுமில்லை...
💝
உள்ளங்கையில் அள்ளிப்போகிறாய்
சிந்திய புள்ளிகளுக்குள்
நீர்க்கோலமாகிறேன் நான்...
💝
காதல் கடிதம்
பிரித்துப்படிக்க மனசில்லை
ஊரிலில்லை அவள்
💝
உன் மூச்சுக் காற்றின் சூட்டில்
எரிந்து தணிந்த கங்கு
நான்...
தொலைந்த வாழ்வு
💝
சருகுகளின் சப்தம்
கூர்ந்து கவனிக்கும்
பட்டமரத்துக் குயில்
அறுபடல்
💝
தலைகீழாகப்
பார்க்கிறது வானம்
தொங்கவிடப்பட்ட ஆடு
ஈழம்
💝
செத்தான் புத்தன்
இன்னமும் கேட்கிறது ஓலம்
ஈழம்...
வறுமை
💝
பசியை அடக்காமல்
குழந்தையின் அழுகையை நிறுத்தியது சூம்பிய முலை...
தோழர்திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களின் ஓவியம் ஹைக்கூவின் வாழ்வை அழகாக காட்சிப்படுத்தியுள்ளது...
வாழ்த்துகள் தோழர் #மு_முருகேஷ்

அசோகவனம் செல்லும் கடைசி ரயில் #அகதா

அசோகவனம் செல்லும் கடைசி ரயில்...
எப்போதோ கேட்ட குரல். கவிதை குறித்து பேசிக்கொண்டோம். அதிலும் அதிகம் பேசியது நீங்கள்தான் தோழர். அப்போது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். படைப்பு குழுமம்மூலமாக உங்கள் கவிதைத் தொகுப்பு வெளிவருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். Vetrimozhi Veliyeetagamஇலக்கியக்கூடலுக்கு கடந்தமுறை சென்றபொழுது தேடிப்பிடித்து உங்கள் நூலை வாங்கினேன். ஒரு பரவசம் நாமறிந்த ஒரு தோழியின் நூல் படிக்கப்போகிறோம் என...
தந்தையின் இழப்பு குறித்த கவிதை மனதில் வலி ஏற்படுத்தியது. "நீ யாரிடமும் தராத உந்தன் சொகுசுத் தலையணை உன் இறுதி சாய்வுக்குப் பின் என்னிடம்தான் உள்ளது. உன் ஒட்டுமொத்த வாசங்களையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு"...
கவிதைகள் பெரும்பாலானவற்றின் ஊடாக வாழும் மிஸஸ் குமார் அருமை....
"நீ நானாக இருந்திருந்தால்
அந்தப் பிங்க் கலர் புடவையில்
ஏஞ்சல் போல் இருந்தாய் என்றும்
தேடிக்கொண்டிருந்த
அலுவலக அடையாள அட்டையை
ஓடிவந்து கொடுத்தபோது
இதழ் குவித்த முத்தம் ஒன்றும்
அவசரத்தில் நீ செய்த
கோபி மஞ்சூரியனை அட்டகாசம் என்றும் கட்டாயம் சொல்லியிருப்பேன்
காதல் நீர்த்துப்போன என் கணவா...
மிஸஸ் குமாரின் டைரிக்குறிப்பிலிருந்து"...
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான முரண்களை கவிதையாக வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன செயல்கள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் தோழர். இது போன்ற மிஸஸ் குமார்கள் ஆங்காங்கே தொகுப்பில் காணக்கிடைக்கிறார்கள். அவர்களின் ஆணாதிக்கம், பெண்கள் எப்படி இருக்கவேண்டும் அவர்களுக்கான கட்டுப்பாடு, மாதவிடாய் (ஜெயிக்கவேயில்லை கவிதை) இவையெல்லாம் பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் சில இடங்களில் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது பரவலாக கவிதையாக படரவிட்டுள்ளது ஆண்களின் மனதில் புதைந்துள்ள பொதுப்புத்தியை நோக்கி வீசும் வாளாக இருக்கிறது.
எப்போது நாமாவோம் கவிதை இரு துருவங்களின் சந்திப்பை சாத்தியப்படுத்துதல் எத்தனை அசாத்தியமானது என்பதைச் சொல்லுகிறது.
பெண் பேசும் பெண்களுக்கான அரசியல், அவர்களுக்கான சுதந்திரம், அவர்களின் ஆசைகள், காதல் இப்படியாக பல கவிதைகள். புனைவற்ற அவை யாவும் பெண்களின் வாழ்வில் படிந்துள்ள வேதனைப் பக்கங்களைக் காட்டுகின்றன.
காதல் பூக்கும் தருணத்தை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது பூக்கிறது மனசு கவிதை.
யவனிகா என்ற தலைப்பிலான கவிதை காமமில்லா இடம் தேட வைக்க ஒரு பெண்ணைத் தூண்டும் காரணிகளை வரிசைப்படுத்தியுள்ளது.
செல்வி அக்கா, சரவணன் இணையர் குறித்தான கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு இழப்பின் ஓலத்தைக் காட்டுகிறது.
கவிதைகளில் வாழ்ந்திருக்கிறார் தோழர் எனக் கூறத்தக்க வரிகள் நிறைய. ஒரு பெண் விரும்பும் தேடல் எதுவாக இருக்கவேண்டும், இருக்கிறது என்று தொகுப்பு உணர்த்துகிறது.
இன்னும் பல தளங்கள் தொட்டு அடுத்த கவிதைத் தொகுப்பு தாங்கள் கொண்டுவர விரும்புகிறேன்.
வாழ்த்துகள் தோழர்...

Wednesday 11 September 2019

ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் #கயல்

ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய்
ஒவ்வொரு பொருளையும் கவிதையாகப் பார்த்தல் ஒருவகை. கவிதைக் கண்களோடு எதனையும் நோக்குதல் ஒருவகை. கயல் தோழர் இரண்டாம் வகை. ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய்... பூர்வ குடிகளை அரிசி திருடும் மதுவாகப் பாவித்து அடித்துக்கொல்லும் சமூகத்தில் தானே வாழ்கிறோம். தலைப்பே வலி.
கொஞ்சமென்ன நிறையவே அச்சம், அழிந்துவரும் இயற்கை பற்றிப் படிக்கவும் கேட்கவும். பூக்கும் மலர்ச்செடி உள்ளவிடத்து அதிர்ந்தும் பேசாத மனம் படைத்தவர் எல்லோரும்தான் பாதிக்கப்படுகிறோம் கார்ப்பரேட்களால், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் வளங்களை நினைத்து. அப்பெருந்துயரை மட்டுமே உள்ளே காணக்கூடுமோ என உள்நுழைந்தால்... ஓர் ஆரவாரத்தின் மடியில் தவழும் மயக்கம்- இயற்கை- காதல்- முத்தம்- பெண்வலி- அனிதா- ஆசிஃபா- விவசாயம்- அப்பா- அற்புதம்மாள் என வனத்தின் மழைத்துளிகள் அமுதமாகவும் அமிலமாகவும் மேல்சொட்டுகிறது.
“தீராக்காதலுடன்
முத்தமிடாத உதடுகளுக்கே விதிக்கப்படுகிறது
இன்னொரு பிறவி”
முத்தம் முடித்துவைக்கும் பிறவி காண முத்தத்தோடு வாழவேண்டும். முத்தமாக வாழவேண்டும். முத்தத்தை வரையறுக்கும் வரிகள். அருமை... இதன் எதிர்நிலையில் நிறுத்திக் காணுமாறு இன்னொரு பக்கத்தில் ஒரு வரி. மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்...
”அன்பின் வன்மம் இசைவற்ற முத்தம்”
ஆம். முத்தங்கள் உப்புக் கரிப்பதற்காகப் பூப்பதில்லை. இசைவற்ற முத்தம் அன்பின் வன்மம். பிடித்தமற்ற அன்பை நோக்கி திணிக்கப்படும் வன்முறை.

ஆண்ட பரம்பரையென்று கூவித்திரிபவர்களின்மேல் காறி உமிழ்கிறது சக்கரவர்த்திகளின் பசி என்ற தலைப்பிலான கவிதை.
“பூவுலகின் ஆகப்பெரிய ஆலயத்தின்
கோபுரங்களில் மின்னுவது
அடிமைகளின் எலும்புகள்”
அரசாட்சி என்பது இதுதான். இதுதான் ஆண்ட பரம்பரை என்பதன் லட்சணம். தெய்வாம்ஸம் என்று போற்றித் திரிதலின் பின்னேயுள்ள அரசியல் காணுதல் தானே அறம்.
காதல்-
“எங்கோ எவரின் காதலோ மரணிக்க நமக்கு வலித்தல்
இணைய வாய்ப்பே இன்றிப் போனாலும்
இறக்கும்வரை நலம் நினைத்தல்”...
இன்னுமின்னும் நீளும் வரிகளினூடே அவரவர் காதலையும் படரவிட்டு ரசிக்கத்தூண்டும் லாவகத்தை உண்டாக்குகிறது வரிகள்...
நேற்றைய காதலென்று எதுவுமில்லை. காதலென்பது ஒரு தவம். அது நீண்டு கொண்டிருப்பதில் புனிதம் காண்கிறது. அது நிலைத்திருப்பதில் திளைத்துக்கொள்ளும். திளைத்திருப்பதில் புதுப்பித்துக்கொள்ளும்.
“மழைத்துளியென என் முகமேந்திய
உள்ளங்கைகளில் படர்ந்த ஈரம்
ஆயுளுக்கும் அழியாதென்றது நீதானே

மருதாணி இலையில் உறையும்
செந்நிறமுன் அன்பென்றது யாவும்
வெறும் படிமம் என்கிறாயா

முதன் முதலிலுன் காதல் விரல்கள்
பிணைத்த பவழமல்லி மரத்தருகே
நின்றே எழுதுகிறேனிதையும்...”
அழகும் வலியும் ஒரு சேரக் காணக்கிடைக்கிறது வரிகளில்... காதலென்பது உயிர் ஏற்றுக்கொள்தல் மட்டுமே. உயிர் விடுவித்துக்கொள்தலல்ல. உணர்வுகளில் உயிர் வாழ்வது. உயிருள்ளவரை உயிராய் வாழ்வது.

பிறிதொரு கவிதையொன்றில் இயல்பற்றதை இயல்பாக்கி வைத்திருக்கும் காலம் குறித்தான கேள்வியொன்றை முன்வைக்கிறார் கவிஞர்.
“மலையெனில் கதிரோடு
மரமெனில் பறவைக்கூடு
வானெனில் நிலவோடு
யானையை மட்டும் சங்கிலியோடே
வரையும் குட்டிம்மாக்களின் கைகளுக்குச்
சங்கிலியைக் கற்பித்தது யார்?”
தலைமுறைகளுக்கு நாம் வைத்துச் செல்வதுதானே அவர்களின் எண்ணங்களிலும் படர்ந்திருக்கும்... அதே சமயம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் குற்றவுணர்வை பதிய வைக்கும் வரிகள்... அற்புதம்.

தேவதைக்கறி என்ற கவிதை... ஹாஷினி, நந்தினி, ஆசிஃபா, ராகவி... இவர்கள் குறித்த நினைவின் வலியை இன்னும்கூடுதலாக்கும் வரிகளுடன்... இன்னுமென்ன கவிதையில் 8வழிச்சாலை, அனிதா, விவசாயம், என அழிக்கப்படும் வளம் பற்றிய கொந்தளிப்பு வரிகளில் தெறிக்கிறது. அக்கவிதையை முடிக்கிறார் இப்படியாக...
“இன்னுமென்ன
உள்நாட்டுக்கான அகதிக்கான அடையாள அட்டை
அதுவும் இருக்காது தமிழில்”...

தலைநகரில் நிர்வாணமாக ஓடியும் துயரடைத்திடாத வலிகளின் உரிமையாளர்களான விவசாயிகள் பற்றியும் விவசாயம் பற்றியும் வலிகளால் நிரம்பிய கவிதையொன்று...
“நீரின்றிக் கருகிய பயிர் பார்த்து நிலத்திலேயே மயங்கிச் செத்த
கடனடைக்க முடியாமல் விடமருந்தி தூக்கில் தொங்கிய
டிராக்டர் பறிமுதலாக அவமானத்தில் உயிர் நீத்த
பெண்டு பிள்ளை பசி காணாது கிணற்றில் பாய்ந்த
தலைநகரில் மலந்தின்போமென்ற தன்னினம் பார்த்து உயிரோடிறந்த
நெல்வயலில் கால்நட்ட துயரத்தால் நள்ளிரவில் நாண்டுகொண்ட
தன்னிலத்தைப் பார்த்துத் திறந்தே கிடந்த விழிகளை அறைந்து மூடி
உழக்குடியின் சடலங்களையெல்லாம்
சீராக அடுக்கிச் சொன்னோம்
நாமொரு விவசாய நாடு”
இங்கு உண்மைகள் மறைக்கப்படுகின்றன. பொய்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றன. நீதி மறுக்கப்படுகிறது. அநீதி எங்கும் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. பாரத் மாதாக்கி ஜே என்ற வாக்கியம் திணிக்கப்படுகிறது. உண்மைகளை உரக்கச் சொல்வோர் ஆண்ட்டி இண்டியன் என்று தூற்றப்படுகிறார். தோழர் அவ்விடயத்தில் எவ்வித சமரசமும் செய்யாமல் உள்ளதை உள்ளபடியே பதிவு செய்துள்ளார். மரணத்தின் வலி, அகதியின் வலி, தைப்புரட்சியின் பின்னான அரசியல் என இன்னும் பல கவிதைகள் குருதியின் ஈரப் பிசுபிசுப்போடு வலியூறச் செய்கின்றன.
தொகுப்பில் இன்னும் பல இருக்கின்றன. மண் உணர்ந்த, மனிதம் உணர்ந்த ஒவ்வொருவருக்கும் போய்ச் சேரவேண்டிய கவிதைகள் ஒவ்வொன்றும். மேடையில் ஒரு கவிதைப் புத்தகத்தை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்ய ஒரு நல்ல கவிதையைத் தேடிக்கொண்டிருக்கும் பலரைப் பார்த்திருப்போம். இத்தொகுப்பில் எப்பக்கத்தைத் திறந்தாலும் கவிதைகளே இருக்கின்றன, கவிதைக்கான சொல்லாட்சி அபாரம். மண்ணின் துயர்மிகு வரிகளையும் மானுடத்தின் காதலை இன்னும் சுடர்மிகு வரிகளுடனும் உங்களிடமிருந்து இன்னும் காண விழைகிறேன்.
வாழ்த்துகள் தோழர் கயல்.

Wednesday 4 September 2019

24.07.2019
மாலை
நேரம் 4:36
UAR பேருந்து
சும்மா நிக்காதீங்க பாடல் ஒலிக்கிறது
பேருந்தில்
நான் அமர்ந்திருக்கிறேன்
பாடலுக்கு எப்படி நான் பதில் சொல்வது
சொன்னாலும் போய்ச் சேருமா...
ம்ம்ம் அடுத்து ஒலிக்கும் இசை சொல்லிவிட்டது
பாடலின் ஆத்மார்த்த உணர்வை
நிலாக்காயுது பாடல்
நேரம் நல்ல நேரம்
நிச்சயமா இல்ல
எனக்கு முன் சீட்டில் இரு வயதான அம்மாக்கள் அல்ல
அவர்கள் பாட்டிகள்
பக்கவாட்டில் ஆண்கள்.
ஒன்னும் பார்க்க முடில
இப்போ படியேறி வருவதும் ஒரு ப்பாட்டி...
Situation song எப்போ அமையும்...
கண்கள் பாவம் செய்ய விருப்பமின்றி மொபைல் உடன் பேசுகிறது...
தண்ணி கேட்டியே புள்ள
வரிகளுக்கு முன் வரும் ஹ்ஹா என்ற பெண் குரலுக்கு யாரும் முகம் சுழிக்கவில்லை
ம்ம்ம் ஆமா நான் பார்த்தேன்.
இடி விழும் சத்தம்
ராஜா இசை
ரொம்ப பிடிக்கும் போல பேருந்து ஓட்டுனருக்கு
வயது 30க்குள்
கிட்டக்க ஒரு லேடி கூட இல்ல
ஒரே ஒரு ஆளுதான்
யாருக்காக இப்படிப் பாடல்
யம்மா யம்மா லேடி டாக்டர்
நல்லாருக்குய்யா உங்க ரசனை
கோவில் திருவிழா போல் கொண்டாட்ட மனநிலைல இருக்கிறார்
நளினமா வளைவுகள் கடக்கிறார்
பதக் பதக் என்கிறது இதயம்
அடேய் சாய்ச்சுப்புடாதடா
பேருந்து இருக்கைகள் நிரம்பிவிட்டது
ஆனாலும் பாடலுக்கு பொருத்தமா எனக்கோ ஓட்டுனருக்கோ ஏதும் அமைந்ததா என்ற உங்க கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லவேண்டும்
இது ஜெயமங்களம்
ஒரு சீரில்லாம இந்த பாட்டில் ஆண் பாடுறார்
கேட்டாச்சு
சாமக்கோழி கூவியாச்சு பாடல் இப்போ
வா ஆத்துப்பக்கம் நான் காத்திருக்கேன் என்கிறார் அந்த ஆண்.
நல்லா வருவீங்கடா
இந்த சமூகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கொண்டுவருவதில் இந்தப் பேருந்திற்குப் பெரும் பங்களிப்பு உண்டு. ஏதாவது விருதிற்குப் பரிந்துரைக்கலாம் பேருந்தின் உரிமையாளருக்கு. ஆமா நல்லா படம் இயக்குனவன விட்டுட்டு தயாரிப்பாளருக்கு விருது கொடுப்பது தானே முறை...
ஆனா ஒன்னு
செம climate
ஜன்னல் பக்கம் திரும்புனாலே பக்கத்தில் உக்காந்து கைகள் கோர்த்து தோள் சாய்க்க தோள் சாய்ந்து பயணிக்க ஒரு பிடிச்ச மனுஷி இருந்தா நல்லாருக்கும் என தோணுது...
என்ன பண்ண... இல்ல...
கைவலிக்குது கைவலிக்குது மாம்மா பாடல்
மாம்மா என்ற குரலுக்கு நான் ம்ம்ம் சொல்லுடி என்னடி என்று பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
அவள் குரல் அப்படித்தான் இருக்கும்
முதியோர்களை எதற்கோ தூண்டிவிடுவதுபோல பாடல்கள். நான் எப்படி இந்த பேருந்தில். எனக்கும் சேர்த்தா இந்த பாடல். இல்ல. நான் மற்ற மக்களைப் பார்வையிடுகிறேன். என்னதான் பண்ணுறாங்க இந்த மக்கள். காமத்தை இப்படி பகிரங்கமா பாடுவதை ஏற்றுக்கொள்கிறார்களா... நல்லதுதான். காமமும் புனிதம் தான். அது காதலை விட கொண்டாடப்பட வேண்டியதுதான். கை வலிக்கல மாம்மா
இப்போ கை வலிக்கல மாம்மா
என முடிகிறது பாட்டு
அதான் சரி
காத்து காத்து ஊத்தக்காத்தும் வீசுதே
ரேகா விஜயகாந்த்
இப்படி படமெல்லாம் நடிச்சுருக்காங்க
ம்ம்ம் காற்று பாட்டிற்கு விசிறி விடுகிறது
கலைந்த முடியோடுதான் நான்
யார் அந்த ரேகா...
உள்ளுக்குள் இருக்கிறாள். அவள்தான் கலைத்திருப்பாள்.
அவளுக்கு தலையில் கொட்டனும்
கிள்ளி வைக்கணும்
கலைந்து கிடக்கும் முடியை இன்னும் கலைத்து விடணும்
விளையாடனும். அவளை நினைத்தால் உள்ளே பரவசக்காற்று பூப்பதில் அர்த்தம் இருக்கு. அவள் பூங்காற்றாக எப்போதும் இருக்கிறாள்.
மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் இருக்கு
கணக்குப் பண்ணுங்க கன்னிப் பொன்னிருக்கு மாம்மா
கடைசியா கட்டிலுக்கு அழைத்துப்போகிறது பாட்டு
பயணத்தின் இலக்கு நோக்கி விரைகிறது பேருந்து
என்ன சண்டையா இருந்தாலும் இந்த பாடல்கள் கேட்டு ஊர் திரும்புபவர்கள் மல்லிகை அல்வா உடன் செல்வார்கள் என்பது நிதர்சனம். எதுவும் வாங்காமல் இப்படியே இதே பேருந்தில் திரும்பும் மனிதர்கள் பாக்கியவான்களாக இருக்க முடியாது
சாத்தான்கள் அவர்கள்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அவர்களிடம்.
நான் இறங்கும் நிறுத்தம் வந்துவிட்டது
விளக்கு ஏத்தத்தான்
பகல் வெளிச்சம் இறங்கட்டும் பாடல்...
இறங்கிட்டேன்
பகல் இறங்கவில்லை
காம இரவு உயிரில் இறங்கிவிட்டது...
நேரம் 5:07
பயணமும் பாடல்களும்...


ஓ ப்ரியா ப்ரியா
பாடலில் தொடங்குகிறது
பயணம்...
காதல் சோகம்
பிழிகிறது
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
அடுத்த பாடல்
அடடா
குடும்ப சோகம்...
என்னாச்சு ஓட்டுனருக்கு...
கண்ணீர் விடுகிறாரா
உம்முன்னு இருக்காரா
என்னாச்சு
இல்ல சிரிச்சிட்டு இருக்கார்
பயணிகள் பாவம்
பாவமா கேட்கிறார்கள்
ஒரு கூட்டுக்கிலியாக...
ஆமா
கிலி தான்
எப்படி அதுக்குள்ள
சோகம் சரியாச்சு
சிவாஜி தான் பெரிய நடிகராச்சே
அவர் சிரிச்சிட்டே அழவும்
அழுதுட்டே சிரிக்கவும் செய்யும்
வித்தகர்
நான் போடும் வேஷம் எனக்கே தெரியாது
என்றொரு பாடலில் பாடியிருப்பதிலிருந்து
அவரின் நடிக்கும் வன்மம்
பிடிபடும் நமக்கு...
நெல்லின் விதை போடாமல்
நெல்லும் வருமா
என்ற வார்த்தையை
நீங்கள் கேட்டுப்பாருங்கள்
இந்த கிலி பாடலில்...
கிலி தான்...
மீண்டும் காதல் சோகம்.
ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்...
ரஜினியின் புதுக்கவிதை...
மாறாதது...
1996 முதல் இப்போ வரை
மாறாத கவிதை
வயசு கூடினாலும்
மாறாத வசனம்...
யார் கேட்கச்சொன்னது
கேக்காம இருந்தாலும்
எவனாவது சத்தமா வச்சு பாட்டை
கேக்க வைக்கிறான்...
நான் குடிப்பேன்
குடிச்சிட்டே இருப்பேன்
கேக்குறதுக்கு பொண்டாட்டியா
இருக்கா...
Its impossible I say...
ஆமா
நீ அரசியலுக்கு வரமாட்ட...
பட்டு வண்ணச் சேலைக்காரி
என்னைத் தொட்டு வந்த சொந்தக்காரி
இந்தக் குரல்
எந்த நடிகருக்கு...
ரஜினி சிவாஜி
இருவரும்
அண்ணன் தம்பியாக
எந்தப் படத்தில்
நடித்திருப்பார்கள்...
இருவருக்கும் பொருந்தும்...
இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் என்று
பின்னணியில் ஒலிக்க
ரஜினி நடந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம் தானே...
சிவாஜி என்றாலும் பொருத்தமே...
ஏ குருவி சிட்டுக்குருவி என
காதலில் லயித்தவர்...
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடி வா...
கலைந்த கேசம்
ஓடியபடி காற்றில் மிதக்கும் ஸ்டில்ஸ்
ராதாவா அம்பிகாவோ
கையருகில் பூமாலை
காதலின் கோபுரம்
என்கிறார்
எப்போதோ பார்த்த பாடல்
எந்த உடை போட்டாலும்
பொருத்தமற்று இருந்தாலும்
பல கோணங்களில் பார்த்தாயிற்று
இருவரையும்...
சலிக்கல சொல்வதா
சகிக்கல சொல்வதா...
இரண்டாம் வகைமையை
சொல்லும்போது
சின்ன மணிக் குயிலே
எனப் பாடத் தொடங்குகிறார் ராதா
இன்னும் கூடுதலாக
என்னை நான் சாட்டையில்
அடித்துக்கொள்ளனும் போல இருக்கு
சகிக்கல தான்...
பேரைச் சொல்லவா
அது நியாயம் அல்லவா
பிக் பாஸ் வந்து விட்டார்
16 வயதினிலே ஸ்ரீதேவியுடன்...
உடல் கூராய்வு செய்தனர்
மதுவின் உடலை
சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருந்தது தெரிந்தது
உடல் கூராய்வு செய்தனர்
ஸ்ரீதேவியின் உடலை
மது இருந்தது...
கவிதை நினைவில் வரும்போதே
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை என்று சொல்லிவிட்டார் கமல்...
பேசக்கூடாது
வெறும் பேச்சில் இன்பம்...
ரஜினியை கொஞ்சம் ஓரமாக நிறுத்திவிட்டுப் பார்ப்போம்
சில்க்...
ஆகச் சிறந்த பேரழகி.
எத்தனை பெண்கள் ஒத்துக்கொள்வார்கள்...
ஆண்களின் ரசனையை
முடக்கி வைத்து
பெரும் ரசனை வாழ்வை
உள்ளுக்குள் வாழ்ந்து தொலைக்க வைக்கும் ராட்சசிகள்
உங்களில் யார் அடுத்த சில்க்
போட்டிக்குத் தயார்...
நாங்கள் நடத்துகிறோம்
பரிசுத்தொகையை
அப்புறம் பார்த்துக்கொள்வோம்
தயாரா
பெண் மக்களே தயாரா
சில்க்கே நமஹ...
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்...
ம்ஹூம்
ஒன்னும் வரவேணாம்
தூக்கம் வருது
என்பதன் பின்னணியில்
கதாநாயகி நல்லால்ல
என்பதை
சொல்லத் துடிக்குது மனசு.
சொல்லிட்டேனா
சரி உண்மையைத்தானே சொன்னேன்...
அந்த ராதாரவி இப்படி
அடக்கம் ஒடுக்கமாப் பாடிட்டு
நயன்தாராவை அப்படிப் பேசிறுக்கக்கூடாது...
சமகாலத்தின் படமான பில்லாவில்
அவர் வரும் ஒரு காட்சி
கண்ணுக்குள் இருக்கிறது.
ராதாரவி ஒழிக
என்பதைத் தவிர என்ன சொல்ல...
அவரும் பென்தானே
ம் முக்கியம் மூணு சுழி பெண்
நாக்கை அடக்கவும்
ராதாரவி அவர்களே...
அடக் கண்றாவியே
ரப்பப்ப ரப்பப்பரி
இளையராஜாவே இந்தப்பாட்டை
ப்போ கேக்கமாட்டார்டா
சிறந்த வில்லன் விருதுக்கு தேர்ந்தெடுக்கலாம்
பாடல் ஒலிப்பதிவாளருக்கு...
நேரம் 11:15
என்னை நெனச்சா
பரிதவிச்சா
துடித்துடிச்சா...
இந்தப்பாட்டுக்கு எப்படி
எல்லோரும் தூங்குறாய்ங்க
அடுத்த மெல்லிசை பாடலுக்கு
முழிப்பாய்ங்க போல
பார்க்கலாம்
கேட்கலாம்...
சந்தனக்காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோசப்பாட்டே வா வா
பாடல்...
ஜன்னலோரக்காற்று...
அடடா...
என்ன அற்புத பாடல்...
Vibration...
எங்க இருக்கீங்க
செம்பட்டி கடந்து...
இன்னுமா செம்பட்டி...
அதிரும் குரலில்
சந்தனக்காற்று
தொலைந்து போனது...
அடேய் டிரைவர்
வேகமா ஓட்டுடா பஸ்ஸ...
உன்ன நெனச்சேன்
பாட்டுப்படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
பாடல் ஒலிக்கிறது...
டிரைவர் அண்ணே
பஸ் மெதுவாவே போகட்டும்...
என்னை நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே
ஞானத் தங்கமே...