Thursday 23 July 2020

வருச நாட்டு ஜமீன் கதை #வட_வீர_பொன்னையா

புத்தகம்:     வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்:   வடவீர பொன்னையா
பதிப்பகம்:  விகடன் பிரசுரம்

மூன்று தலைமுறைகளை இந்த நூல் பேசுகிறது. ஆண்டி வேலப்ப நாயக்கர், அவருடைய தம்பி இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் இருவரின் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் மூன்று திருமணம் முடித்த பின்பு நான்காவதாக ஆண் வாரிசுக்காக வெள்ளையம்மா என்பவரை திருமணம் முடிக்கிறார். அவருக்கு பிறந்த மகன்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். மக்களிடம் இருந்து வரக்கூடிய வரிப்பணம், தானியங்கள், விலங்குகள் இப்படி பல வரும்படிகளை வைத்துக்கொண்டு ஜமீனுக்கு உரிய பலான வேலைகளையெல்லாம் செய்துவருகிறார்.  இடையில் பளியன் சித்தன் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் மூலமாக பல்வேறு சித்துவேலைகளை கற்றுக் கொள்கிறார்  ஆண்டி வேலப்ப நாயக்கர். ஒரு கட்டத்தில் பளியன் சித்தன் வேலப்ப  நாயக்கரிடம் பள்ளிகளுக்கும் ஜமீனில் பளியர் இனத்திற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்களையும் ஜமீனுக்கு இணையான பணிகளில் அமர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். இதைக் கேட்ட வேலப்ப நாயக்கர் சித்தனை வேல் கொண்டு  எய்தி கொன்றுவிடுகிறார். இறப்பதற்கு முன் சித்தன், உன் ஜமீனுக்கான ஆண் வாரிசு பிறப்பதற்கு முன்பு நீ இறந்து விடுவாய். அதுபோலவே அது காலம் முழுவதும் தொடரும். ஆண் வாரிசுகள் பார்ப்பதற்கு முன்பே தகப்பன் உயிர் இருக்காது என்று சாபம் விடுகிறான். அதுபோலவே சாமியப்ப நாயக்கரைப் பார்க்காமலேயே வேலப்ப நாயக்கரின் உயிர் பிரிகிறது.  சிறு வயதில் அரியணை ஜமீனாக வரமுடியாது என்பதால் வெள்ளைத்தாயம்மா பொறுப்பில் ஜமீன் வருகிறது. சாமியப்ப நாயக்கர் சென்னையில் படிக்க செல்கிறார். சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது ஜனகம் என்ற நாட்டியக்காரி உடன் திரும்பி வருகிறார். அவள் வெள்ளைக்கார துரையுடன் செல்ல வேண்டியவள். அவளின் அழகில் மயங்கி இழுத்து வருகிறார் சாமியப்ப நாயக்கர்.  நீண்ட காலம் ஜனகத்துடன் காதல், காம வாசம் தொடர்கிறது. அவளுக்காக அனைத்து வசதிகளுடன் மாளிகை ஒன்றும் கட்டித் தருகிறார். பொன்னும் பொருளும் அள்ளி இறைக்கிறார். அத்தனையும் மக்கள் பணம். இச்சூழலில் சாதியிலிருந்து வேலுத்தாயம்மாள் என்ற பெண்ணை கட்டி வைக்கிறார்கள். வேலுத்தாயம்மாளை கட்டிய பின்னரும் சாமியப்ப நாயக்கரின் பெண் வாசம் நிற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண் பித்து பிடித்துத் திரிகிறார். இது தெரிந்த  வேலுத்தாயம்மாள் ஜனகத்தை ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். எவ்வளவு சொல்லியும் சாமியப்ப நாயக்கர் கேட்காததால் தெப்பம்பட்டி சென்றுவிடுகிறார் வேலுத்தாயம்மாள். ராஜமாணிக்கம் முதல் பெண்ணாக பிறக்கிறார், பிரச்சினை இல்லை. மனம் திருந்தி வந்த சாமியப்ப நாயக்கருடன் கூடல் நடக்க, இரண்டாவதாக ஒரு ஆண் பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையைப் பார்க்கும் முன்னரே சாமியப்ப நாயக்கர் மறைந்துவிடுகிறார். சாமியப்ப நாயக்கர் மக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணம் முறையாக வெள்ளையர்களுக்கு கப்பமாக செல்லாததால் கண்டமனூர் ஜமீன் ஏலம் போகிறது, கொஞ்ச பகுதிகளைத் தவிர்த்து அனைத்தையும் எட்டயபுரம் ஜமீன் ஏலத்திற்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாம் பறிபோன நிலையிலும் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை சாமியப்ப நாயக்கருக்கு. ஜமீனை மீட்க உதவி செய்வதாக திருவாங்கூர் ராஜா சொல்ல அவரைப் பார்க்க குமுளி வழியாகச் செல்லும்போது நெஞ்சு வலி வந்து பாளையம் ராவுத்தர் வீடு வர அங்குதான் உயிர் பிரிகிறது சாமியப்ப நாயக்கருக்கு. அவர் இறந்த இந்தச் சூழலில் பிறந்த கதிர்வேல் சாமி பாண்டியன் என்ற மைனர் பாண்டியன் சென்னைக்கு சென்று படிக்கும் சூழல் வந்தபோதிலும் அங்கு வேண்டாமென்று வேலு தாயம்மாள் மறுத்துவிடுகிறார்.  மைனர் பாண்டியன் தன்னுடைய தந்தையைப் போலவே பெண் பித்து பிடித்து திரிகிறார். முறையான படிப்பும் இல்லை சேவகர்கள் பலரை வைத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுகிறார். பித்தனின் வாக்கு பலித்துக் கொண்டு வருவதை நம்ப மறுக்கிறார். எத்தனையோ பெண்களிடம் சல்லாபம் செய்த மைனர் பாண்டியன் ஒரு கட்டத்தில் 13 வயதான வேலம்மா என்பவரை தூக்கி சென்று திருமணம் முடிக்கிறார். முடித்த போதிலும் வழக்கம்போல் அடாவடி தொடர்கிறது. பெண் சகவாசம் தொடருகிறது. ஜமீன் ஒருபக்கம் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் சுதந்திரப்போராட்டம் நடந்து கொண்டிருக்க மக்கள் ஜமீனில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சித்தன் வாழ்ந்த அதே குகையில் வாழத் தொடங்கிய மைனர் பாண்டியன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கூழைக் குடித்து நாட்களைக் கடத்துகிறார். அப்படியே அவருடைய வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. அடக்கம் செய்வதற்கு கூட சொந்த நிலம் இல்லாத ஒரு ஜமீனாக மைனர் பாண்டியன் கடைசியில் இறக்கிறார்.
        ஜம்புலிபுத்தூர் கோவிலில் பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டி விட, அந்தப் பெண்களை ஜமீன் ஏகபோகமாக அனுபவித்தல், வயசுக்கு வந்த பெண்களை காத்துக் கருப்பு அண்டக்கூடாது என்று அரண்மனைக்கு கொண்டு வந்து விட அவர்களை அனுபவித்தல், விரும்பும் பெண்களை சேவகக்காரர்கள் துணையோடு தூக்கி வந்து அனுபவித்தல், பிறரின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குதல், தாம் தூம் செலவு, சாதகம் செய்யும் பிறருக்கு ஊரைத் தானமாக வழங்குதல், வெள்ளைக்காரன் கண்களை மறைத்து பல திருட்டுத் தனங்களைச் செய்தல், பெண்களை போகப் பொருளாகப் பார்த்தல், சொத்துக்களை பாதுகாக்க பெண்களை ஜமீன் பொறுப்பில் அமர வைத்தல் வரலாறெங்கும் உள்ள அவலங்களை மண்ணின் மொழியோடு வட வீர பொன்னையா கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க அந்தக் காலத்திற்குள் பயணிக்கும் எண்ணம் பீறிடுகிறது. இன்னொன்றையும் சொல்லவேண்டும்.

         இப்படிப் பட்டவர்களின் செயல்களைத்தான் அப்படியே தொடர ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொண்டாடி வருகிறதோ பல கூட்டம், அக்காலம் போல இப்பவும் சொத்துக்களை களவாடுதல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற செயல்களைச் செய்ய நினைக்கிறதோ என்ற எண்ணமும் மேலிடாமல் இல்லை.

வாழ்த்துகள் வட வீர பொன்னையா தோழர்.

யாழ் தண்விகா

Saturday 18 July 2020

குறி அறுத்தேன் #திருநங்கை_கல்கி

குறி அறுத்தேன் -திருநங்கை கல்கி
----------------------------------------------------
தாமரைக்குளம் எனது ஊர். பத்தாண்டுகளுக்கு முன்பு இருக்கும். வ.உ.சிதம்பரனார் சிலை அருகிருக்கும் பகுதியில் பலமுறை அந்த திருநங்கையைப் பார்த்திருக்கிறேன். நல்ல ஒப்பனையுடன் வேலைக்குச் செல்லும் அலுவலக பெண் போல பல காலைகளில். அவளும் மனுசிதான் என்பதைத் தாண்டி அவள்மேல் விழும் சக மனிதர்களின் கிண்டலையும் கேட்டுத்தான் வளர்ந்தேன். நாட்களின் திசைகளில் பயணித்த வாழ்வில் ஓர் காலை தினசரி நாளிதழில் படித்து அறிகிறேன். பல வருடங்களாக அந்த திருநங்கையுடன் பழகிய ஒருவன், விரைவில்,அவனுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும் அதனால் அத்திருநங்கையுடன் தனக்கு இதுவரையிலும் உள்ள உறவை இனி தொடரப்போவதில்லை எனவும் அவன் முடிவெடுக்கிறான். அத்திருநங்கை அவனிடம் கெஞ்சுகிறாள், தன்னால் இயன்றவரை அவனோடு வாழத் துடிப்பதையும் அந்த்த துடிப்பு இறப்பு வரையும் தொடரும் என்று உத்திரவாதமும் தருகிறாள். ஆனால் திருநங்கையுடன் வாழ்ந்தால் சமூகம் தன்னைக் கேவலமாக நினைக்கும் , வீட்டில் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்கள், "ஒரு பெண்ணோடு" தனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர் என்று கூறி மறுதலிக்கிறான் அவளை..திருநங்கையாக மாறியவர்களுக்கும் கற்பு இருக்கும் என்பதை அறியாத அவனின் வார்த்தைகள் ரணமாகக் குத்துகிறது அவளை. வாழ்ந்த வாழ்வின் அம்மணப் பக்கங்கள் அத்திருநங்கையை உடல் கூசச் செய்கிறது. ஆத்திரம் மேலேற அத்திருநங்கை அவனின் ஆண்மைத் திமிரினை திருகிப்போடுகிறாள் கொலையென. அதுவும் அத்திருநங்கையும் அவனும் தனித்திருந்த ஒரு விடுதியில் நிகழ்கிறது.

மேற்சொன்ன நிகழ்வின் உக்கிரம் வழியாகவே "குறி அறுத்தேன்"நூலினைப் பார்த்தேன். படித்தேன்.

பெண் என்பவள்
இதுவே இதுதான்
என்றால்
பெண்ணில்லை நான்.
ஏதோ ஒன்று
-அந்த ஏதோ ஒன்றிற்குள் என்னன்னென்னவெல்லாம் இருக்கின்றன... அது அதீத அன்பாக காமமாக சீறும் காளியாக... சுயம் குறித்த ஒற்றை அழகான அபார அபாயச் சொல் ஏதோ ஒன்று.

முத்தம் என்றொரு
புதுக்கவிதையை
என் இதழ்களில் எழுதவும்
கவ்விய இதழ்களில்
கலந்துவிட்ட மூச்சோடு
காவியம் பாடவும்
கவிதைக்காதலன்
வேண்டும் எனக்கு...
-மானுடம் நோக்கி கல்கியால் வரையப்பட்டுள்ள காதல் மடல்தான் இது. இது தனித்தலைய பணிக்கப்பட்டுள்ள திருநங்கைச் சமூகத்தின் ஒருமித்த அன்பு குறித்த எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்....

அது எப்படி
சாதி வெறிக்கு
காமம் மட்டும்
விதிவிலக்காகிறது...
-என்ற வரிகள் இயலாமையில் பூக்கும்
வார்த்தையாக தோன்றும் அதே கணம்...

மதம் துறந்து
சாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள்
ஒன்றுகூடி
வாழும் வாழ்க்கையை
வாழ முடியுமா உங்களால்...?
-எனும்போது மனிதத்தை நிமிரச் செய்யாமல்
சாதி என்னும் "ஆண்மையை தொங்கவிட்டுத் திரியும்" கூட்டத்தின்மேல் துப்பிய தீக்கனலாக மாறி நிற்கின்றன
கல்கியின் வரிகள்...

சமூகத்தால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டவர்களாக
வாழும் திருநங்கைகளின் வாழ்வு, காதல், காமம் அவர்களுள் ஓடும் சமூகம் என எளிமையான மொழியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வலுவான பதிவாக இக்கவிதைகள்... 

தொடரட்டும் கல்கியின் களப்பணி
கலைப்பணி...

அன்பு மற்றும் தோழமையுடன்...

-யாழ் தண்விகா.

Friday 17 July 2020

ஓசை புதையும் வெளி #தி_பரமேசுவரி

ஓசை புதையும் வெளி
#கவிதைத்தொகுப்பு
#தி_பரமேசுவரி

கால நதி சில பெரும் வெள்ளோட்டத்தையும் சில பாலையையும் சிலபல இயல்பான பயணத்தையும் எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு சிறு சருகு காற்றிலோ நீரிலோ நிலத்திலோ அலைவுறும் தருணத்தில் சருகின் உள்ளோடும் வாழ்வின் நிலையற்ற தன்மையானது எத்தகைய துயர்களைக் கொண்டிருக்கும்... அதன் வலிகளை இயல்பின் மொழிகளில் எடுத்தாளும் தீட்சண்யம் கவிஞனின் மொழிகளில் படர்ந்து கிளைத்திருக்கிறது. அத்தகைய கிளைத்தலுக்குரிய மொழி லாவகம் உடைய கவிஞராக #ஓசைபுதையும்வெளி கவிதைத்தொகுப்பின் ஆசிரியர் #தி_பரமேசுவரி அவர்களை கூறலாம்...

இயல்புக்கு அப்பாற்பட்ட எதையும் புனைவென்று கூறி பக்கங்களைக் கடத்தும் உத்திகளற்று நம் வாழ்வின் யதார்த்தங்களை கவிதைகளில் பதிவிட்டுள்ளார் கவிஞர்...

சிறகுகள் கோதும் சாளரம் என்று தலைப்பிட்ட கவிதை.
"மேலும் தீட்டிக் கூராக்குகிறது
சிறிய மூக்கை
தொட்டி நீரில் அமிழ்த்திக்
கோதுகிறது சிறகுகளை
தானியங்களைக் கொத்தியும்
நீர் குடித்தும் பறந்தும்
விழுந்தும் அணைத்தும்
செய்யும் சில்மிஷங்கள்
குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்
செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை

சன்னலில் பதித்த முகத்தில்
பதியும் கோடுகள்

வலிக்க வலிக்க
ரசித்துக்கொண்டிருக்கிறாள்..."

ஒரு பறவையின் வாழ்வு, அதன் பறத்தலும் பறத்தல் நிமித்தமுமான வாழ்வின் கணங்களின் கூறொன்றை பார்க்கும் ஒரு பெண்ணின் ஏக்கங்கள் கவிதை வரிகளில் முகத்தில் பதியும் கோடுகளாக்கப்பட்டிருன்றன விடுதலைக்கான வலியின் வார்த்தைகள் இவை.

துரோகத்தின் பாஷை நேரடியாக நம்மை அணுகும்போது சிலிர்த்ததிரும் உடலின் வலிகளை உதிர ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர்.
"ஆதரவு தேடித்
தோள் சாய்கிறேன்
அடி வயிற்றில்
கத்தி செருகுகிறாய்
சிதறும் துளிகள் கொண்டு
தீட்டுகிறேன் உன் ஓவியம்..."

எத்தனை வரையறைகள் கொடுத்தாலும்  காதலுக்கான வரையறை அவரவர் பார்வையில் ஆகச் சிறந்த பொறுத்தமாகவே அமைந்து விடுகிறது. இது கவிஞரின் விளக்கம்...
"காயமுற்று விழுந்த புறாவின்
சிறகு தடவி
பயம் தணித்து
வலிக்காமல் தலை திருகும்
உன் மென்மைக்கும்
காதல் என்றுதான் பெயர்"

இயல்பாக கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக நாம் நினைப்பவற்றையும் கவிஞரின் பார்வையில் கண்ணாடி மதிலில் பதிவிடுகிறார் இப்படியாக...
"கண்ணாடிச் சில்லுகள்
பதிக்கப்பட்ட மதில்களில்
சிறிதும் சேதாரமின்றி
நகர்கிறது நத்தை
மௌனத்தின் இடைவெளிகளை
இட்டு நிரப்பியபடி"
இந்த மௌனத்தின் இடைவெளிகள் என்பதில் இட்டு நிரப்பவேண்டிவைகள் என என்னென்ன நாம் வைத்திருக்கிறோம் என்பதை நம் மனம் ஒன்றே அறியும்.

ஓசை புதையும் வெளி என்ற தலைப்பிலான கவிதை.
"உரக்கப் பேசுவதாய்க்
கோபப்பட்டாய்
மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்
குற்றம் சாட்டினாய்
புணர்ச்சியில் கூட முனகல்கள்
தெருவெங்கும் இறைவதாய்
எரிச்சல்பட்டாய்
வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்
உனக்குள்
வெந்நீர்க் கொப்புளங்களையே
உருவாக்கின எப்போதும்
மெல்ல அடங்கிய என் சப்தங்கள்
புதைக்கப்பட்டன உன் வெளியில்"
ஒரு காதலாலோ நட்பாலோ தன்னை தொலைக்கும் உறவின் வலியோ இன்பமோ என்பது சொல்லி மாளாதது. தன்னைத் தொலைத்தல் என்பதைத் தொடர்ந்து நிகழும் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள், அதனாலான வேதனைகள் ஆகியனவற்றை அனுபவித்தும் அதனை இயல்பாக்கிக்கொள்ளும்
ஜீவனின் வெளி இது.

நகர மயமாதல், சந்தேகம், வாழ்வு, சுயம், கலவி, இன்னும் பல தலைப்புகள் மற்றும்  சில ஹைக்கூ கவிதைகள் என நிரம்பிக்கிடக்கிறது தொகுப்பு. வாசித்தறிவோம் கவிஞரின் ஓசை புதைந்திருக்கும் கவிதை வெளியை...

வாழ்த்துகள் #கவிஞர்தி_பரமேசுவரி

#யாழ்தண்விகா