Thursday 23 July 2020

வருச நாட்டு ஜமீன் கதை #வட_வீர_பொன்னையா

புத்தகம்:     வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்:   வடவீர பொன்னையா
பதிப்பகம்:  விகடன் பிரசுரம்

மூன்று தலைமுறைகளை இந்த நூல் பேசுகிறது. ஆண்டி வேலப்ப நாயக்கர், அவருடைய தம்பி இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் இருவரின் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் மூன்று திருமணம் முடித்த பின்பு நான்காவதாக ஆண் வாரிசுக்காக வெள்ளையம்மா என்பவரை திருமணம் முடிக்கிறார். அவருக்கு பிறந்த மகன்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். மக்களிடம் இருந்து வரக்கூடிய வரிப்பணம், தானியங்கள், விலங்குகள் இப்படி பல வரும்படிகளை வைத்துக்கொண்டு ஜமீனுக்கு உரிய பலான வேலைகளையெல்லாம் செய்துவருகிறார்.  இடையில் பளியன் சித்தன் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் மூலமாக பல்வேறு சித்துவேலைகளை கற்றுக் கொள்கிறார்  ஆண்டி வேலப்ப நாயக்கர். ஒரு கட்டத்தில் பளியன் சித்தன் வேலப்ப  நாயக்கரிடம் பள்ளிகளுக்கும் ஜமீனில் பளியர் இனத்திற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்களையும் ஜமீனுக்கு இணையான பணிகளில் அமர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். இதைக் கேட்ட வேலப்ப நாயக்கர் சித்தனை வேல் கொண்டு  எய்தி கொன்றுவிடுகிறார். இறப்பதற்கு முன் சித்தன், உன் ஜமீனுக்கான ஆண் வாரிசு பிறப்பதற்கு முன்பு நீ இறந்து விடுவாய். அதுபோலவே அது காலம் முழுவதும் தொடரும். ஆண் வாரிசுகள் பார்ப்பதற்கு முன்பே தகப்பன் உயிர் இருக்காது என்று சாபம் விடுகிறான். அதுபோலவே சாமியப்ப நாயக்கரைப் பார்க்காமலேயே வேலப்ப நாயக்கரின் உயிர் பிரிகிறது.  சிறு வயதில் அரியணை ஜமீனாக வரமுடியாது என்பதால் வெள்ளைத்தாயம்மா பொறுப்பில் ஜமீன் வருகிறது. சாமியப்ப நாயக்கர் சென்னையில் படிக்க செல்கிறார். சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது ஜனகம் என்ற நாட்டியக்காரி உடன் திரும்பி வருகிறார். அவள் வெள்ளைக்கார துரையுடன் செல்ல வேண்டியவள். அவளின் அழகில் மயங்கி இழுத்து வருகிறார் சாமியப்ப நாயக்கர்.  நீண்ட காலம் ஜனகத்துடன் காதல், காம வாசம் தொடர்கிறது. அவளுக்காக அனைத்து வசதிகளுடன் மாளிகை ஒன்றும் கட்டித் தருகிறார். பொன்னும் பொருளும் அள்ளி இறைக்கிறார். அத்தனையும் மக்கள் பணம். இச்சூழலில் சாதியிலிருந்து வேலுத்தாயம்மாள் என்ற பெண்ணை கட்டி வைக்கிறார்கள். வேலுத்தாயம்மாளை கட்டிய பின்னரும் சாமியப்ப நாயக்கரின் பெண் வாசம் நிற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண் பித்து பிடித்துத் திரிகிறார். இது தெரிந்த  வேலுத்தாயம்மாள் ஜனகத்தை ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். எவ்வளவு சொல்லியும் சாமியப்ப நாயக்கர் கேட்காததால் தெப்பம்பட்டி சென்றுவிடுகிறார் வேலுத்தாயம்மாள். ராஜமாணிக்கம் முதல் பெண்ணாக பிறக்கிறார், பிரச்சினை இல்லை. மனம் திருந்தி வந்த சாமியப்ப நாயக்கருடன் கூடல் நடக்க, இரண்டாவதாக ஒரு ஆண் பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையைப் பார்க்கும் முன்னரே சாமியப்ப நாயக்கர் மறைந்துவிடுகிறார். சாமியப்ப நாயக்கர் மக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணம் முறையாக வெள்ளையர்களுக்கு கப்பமாக செல்லாததால் கண்டமனூர் ஜமீன் ஏலம் போகிறது, கொஞ்ச பகுதிகளைத் தவிர்த்து அனைத்தையும் எட்டயபுரம் ஜமீன் ஏலத்திற்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாம் பறிபோன நிலையிலும் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை சாமியப்ப நாயக்கருக்கு. ஜமீனை மீட்க உதவி செய்வதாக திருவாங்கூர் ராஜா சொல்ல அவரைப் பார்க்க குமுளி வழியாகச் செல்லும்போது நெஞ்சு வலி வந்து பாளையம் ராவுத்தர் வீடு வர அங்குதான் உயிர் பிரிகிறது சாமியப்ப நாயக்கருக்கு. அவர் இறந்த இந்தச் சூழலில் பிறந்த கதிர்வேல் சாமி பாண்டியன் என்ற மைனர் பாண்டியன் சென்னைக்கு சென்று படிக்கும் சூழல் வந்தபோதிலும் அங்கு வேண்டாமென்று வேலு தாயம்மாள் மறுத்துவிடுகிறார்.  மைனர் பாண்டியன் தன்னுடைய தந்தையைப் போலவே பெண் பித்து பிடித்து திரிகிறார். முறையான படிப்பும் இல்லை சேவகர்கள் பலரை வைத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுகிறார். பித்தனின் வாக்கு பலித்துக் கொண்டு வருவதை நம்ப மறுக்கிறார். எத்தனையோ பெண்களிடம் சல்லாபம் செய்த மைனர் பாண்டியன் ஒரு கட்டத்தில் 13 வயதான வேலம்மா என்பவரை தூக்கி சென்று திருமணம் முடிக்கிறார். முடித்த போதிலும் வழக்கம்போல் அடாவடி தொடர்கிறது. பெண் சகவாசம் தொடருகிறது. ஜமீன் ஒருபக்கம் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் சுதந்திரப்போராட்டம் நடந்து கொண்டிருக்க மக்கள் ஜமீனில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சித்தன் வாழ்ந்த அதே குகையில் வாழத் தொடங்கிய மைனர் பாண்டியன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கூழைக் குடித்து நாட்களைக் கடத்துகிறார். அப்படியே அவருடைய வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. அடக்கம் செய்வதற்கு கூட சொந்த நிலம் இல்லாத ஒரு ஜமீனாக மைனர் பாண்டியன் கடைசியில் இறக்கிறார்.
        ஜம்புலிபுத்தூர் கோவிலில் பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டி விட, அந்தப் பெண்களை ஜமீன் ஏகபோகமாக அனுபவித்தல், வயசுக்கு வந்த பெண்களை காத்துக் கருப்பு அண்டக்கூடாது என்று அரண்மனைக்கு கொண்டு வந்து விட அவர்களை அனுபவித்தல், விரும்பும் பெண்களை சேவகக்காரர்கள் துணையோடு தூக்கி வந்து அனுபவித்தல், பிறரின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குதல், தாம் தூம் செலவு, சாதகம் செய்யும் பிறருக்கு ஊரைத் தானமாக வழங்குதல், வெள்ளைக்காரன் கண்களை மறைத்து பல திருட்டுத் தனங்களைச் செய்தல், பெண்களை போகப் பொருளாகப் பார்த்தல், சொத்துக்களை பாதுகாக்க பெண்களை ஜமீன் பொறுப்பில் அமர வைத்தல் வரலாறெங்கும் உள்ள அவலங்களை மண்ணின் மொழியோடு வட வீர பொன்னையா கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க அந்தக் காலத்திற்குள் பயணிக்கும் எண்ணம் பீறிடுகிறது. இன்னொன்றையும் சொல்லவேண்டும்.

         இப்படிப் பட்டவர்களின் செயல்களைத்தான் அப்படியே தொடர ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொண்டாடி வருகிறதோ பல கூட்டம், அக்காலம் போல இப்பவும் சொத்துக்களை களவாடுதல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற செயல்களைச் செய்ய நினைக்கிறதோ என்ற எண்ணமும் மேலிடாமல் இல்லை.

வாழ்த்துகள் வட வீர பொன்னையா தோழர்.

யாழ் தண்விகா

No comments:

Post a Comment