Thursday 30 June 2022

புடவை கட்டும் பூ...


❣️

பேசிக் கொள்வதில்லை

பார்த்துக் கொள்வதில்லை

ஆனாலும் பேசும்

பார்க்கும்

நினைவில் நின்று கொல்லும்

உன் அழகு...


❣️

விழாவுக்குச் சென்று வந்த புடவையில்

போட்டோ அனுப்பிருக்கேன்

பாருங்க நல்லாருக்கான்னு...


விழாவே நல்லாருக்கு

நீ கலந்திட்டதால...


❣️

புதுப் புடவை கட்டி வந்து

என் முன்னும் பின்னும்

நீ நடந்த சமயம்...


எப்படிப் பேசுவது

நாம்தான் சண்டை போட்டுவிட்டோமே

என மனசு யோசிக்குது

உனக்கு யோசனை வரலையா


யோசிச்சா நீ எதுக்கு என்முன்னால்

நடக்கப்போற...

ஆக...

நானும் யோசிக்கக்கூடாது...


பேசிட்டேன்...

"ரொம்ப அழகாருக்க

இந்தப் புடவை

உன் அழகை இன்னும் மெருகேத்துது

பேசாம நான் போனேன்னா

அது உன்னோட அழகுக்குச் செய்யும் பாவம்

புதுப் புடவை கட்டி

என் முன்னால் பின்னால் நடந்தா மட்டும் போதாது

முத்தமும் கொடுக்கணும்

கொடுத்திருக்கணும்

நாளை மற்றுமொரு நாளே இல்லை.

முத்தம் பெறும் நாளாகவும் இருக்கலாம்.

சம்மதம் தானே..."


❣️

அன்றன்றைக்கு

நீ கட்டும் புடவையின் நிறத்தில் தான்

என் அன்றன்றைய

பொழுதின் நிறங்கள்...


❣️

எப்படியும் என்னை உன்னோடு 

பேச வைக்கும் அழகை

வைத்துக்கொண்டிருக்கிறாய்


எனக்கென்ன வீராப்பு வேண்டிக்கிடக்கிறது...


❣️

பேரழகி என்னும் சொல்லுக்குப்

பொருள் சேர்த்தது

நீ தான்...


❣️

மதுவுக்கு தன்னை போதை என்றுணரும் தருணம் எப்படி வாய்க்காதோ

போலவே

நீ பேசும் சொற்கள்

எனக்குப் போதை தரும் என்றுணரும் தருணம்

உனக்கு வாய்க்கவில்லை போல...


கிறங்குகிறேன் 

மயங்குகிறேன்

உன்னாலே...


❣️

நீயும் நானும் கட்டிப்பிடித்து

கசங்கிய உடைகளின் மடிப்புகள்தான்

காமத்தின் ரேகை...


❣️

ஆடை சூடிய கவிதை நீ...


❣️

எனது ஆடை சூடி

நானாக நடித்த நீ...


ஆடையையே பொக்கிஷம் எனப் பாதுகாத்தால்

எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் உன்னை...!


❣️

அடுக்கி வைக்கப்பட்ட இதழ்கள் 

மலராகிறது...

அடுக்கிக் கட்டி

புடவையை

தேவதை சூடும்

மலராக்குகிறாய்...


யாழ் தண்விகா

 

Wednesday 29 June 2022

காதல் கேள்வி...

 


❣️

ஏன் கவிதைகள் எழுதுகிறாய்

என்ற உன் கேள்விக்குள் தான்

நீ ஏன் என் கண்ணில் பதிந்தாய்

என்ற கேள்வியும்

இருக்கிறது...


யாழ் தண்விகா

Tuesday 28 June 2022

நிலாவின் மாற்று வடிவங்கள்


💝

உடனடியாக ஒரு கவிதை சொல்

என யாரோ கேட்டால் 

பரவாயில்லை

நீ கேட்டால்

என்ன செய்வேன்...


உடனடியாகச் சொல்லி

உன் இதயம் கவர

ஒரு முத்தம் மட்டுமே 

தர முடியும்.


தந்துவிட்டேன்...


கவிதை குறித்து

நீ இன்னும்

வாய் திறக்கவில்லை.


அது

இதழுள் புகுந்து

உயிரைச் சேரும்

உயர் கவிதை தான் போல...


💝

தேன் சேகரிக்கும் கிண்ணம்

உன்னில்

இதழ்கள் வடிவத்தில்

இருக்கின்றன...


💝

காதலிக்கப்படுதல் என்பது

காதலித்தலைவிட

புனிதமானது...


💝

உன் பாதங்கள்

உள்ளங்கைகள்

நிலாவின்

மாற்று வடிவங்கள்...


💝

யார் நீ

என்னை கொல்லவும் செய்கிறாய்

என்னை மீட்கவும் செய்கிறாய்


💝

புனிதம் என்பது

அடிமைப்படுத்த அல்ல...

என்னை ஆண்டுகொள்ள

நான் அளிக்கும்

ஒப்புதல் சாசனத்தின்

முதல் வரி...


என் புனிதம் நீ...


💝

என் கண்ணே

உன்னைக் கண் வைத்து

திருஷ்டி உண்டாக்கி விடக்கூடாது

என்பதற்காக

காமம் தோற்றுவித்த ரகசிய சுழிகள்

மச்சங்கள்...


💝

ரொம்பக் கிறக்கமா இருக்கிறது

என்பாய்


அது முத்தம் கேட்டலின்

மாற்று மொழி

என அறியும்

காதல்...


💝

பூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது

உன் பாதங்கள்...


நீ நடமாடும் பூவாக இருக்கிறாய்...


💝

நாட்பட்ட பழச்சாறு

நொதிக்கப்பட்ட மதுவாக

மாற்றம் பெறுகிறது...


நாட்பட்ட இதழ்த்தேன்

மதிப்புக்கூட்டப்பட்ட சுவையாக

ஏற்றம் பெறுகிறது...


யாழ் தண்விகா

 

I ❣️ U டா எரும...!


என்னவோ போலிருக்கு

ஒரு பாட்டு பாடுடா

கேட்டா கொஞ்சம் மனசு சரியாகும்னு தோணுது


உண்மை சொல்லு பெண்ணே என்ன

என்ன செய்ய உத்தேசம்...


நிஜமாத்தான். பாடுடா.


தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்...!

உண்மை சொல்லு பெண்ணே என்ன

என்ன செய்ய உத்தேசம்...!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்

வந்து வந்து போவதென்ன..!

கட்டுமரம் பூப்பூக்க

ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காள நானே

கன்னுக்குட்டி ஆனேனே..!

தொட்டுத் தொட்டு தென்றல் பேச

தூக்கம் கெட்டுப் போனேனே..!

சொல் பொன்மானே...!

போதுமா...


இல்ல பத்தாது

இன்னும் நீ பாடி முடிக்கல.

கம்ப்ளீட் பண்ணு...


அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது 

சரிதானா..! 

அடி அம்மாடி...

ஒரு அலை வந்து மனசுல அடிக்குது 

அது தானா..!

உயிரோடு உறவாடும்

ஒருகோடி ஆனந்தம்..!

இவன் மேகம் ஆக யாரோ காரணம்...

இப்போ மனசு சரியாச்சா...


இப்படி நீ பாடிட்டே இருந்தா

மனசு சந்தோசமா இருக்கும்.

எப்பவும் மனசுக்கு ஒன்னும் ஆகாது.

இப்போ நான் நார்மல்.

சிரமப்படுத்திட்டேனா...

இல்லல்ல...


என் குரல மதிச்சு

நீயே கேட்கும்போது

நான் பாட மாட்டேனா...

உனக்காகப் பாடாம...

நல்லாப் பாடுனேனோ இல்லையோ

இப்போ நீ நார்மல்.

அது போதும்.


எனக்கு இந்த குரல் போதும்

என்று சொல்லி உன்னோட குரலை தாழ்வாக்க நினைக்கல.

இந்தக் குரல் தான்

உன்னை நோக்கி என்னைத் தேட வச்சது.

எனக்கு ஆறுதலா இருந்தது.

மடியில் கண்ணயரும் சுகம் தந்தது.

எனக்கான பேரின்பங்களை அடையாளம் காட்டியது.

வாழ்வைத் தந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்காகப் பேசிக்கொண்டே இருந்தது.

நான் பேசும் எல்லாவற்றிற்கும் ம் சொன்னது.

இந்தக் குரலில் என்னைக் காண வைத்தது.

சாகும் வரை என்னோடு வேண்டும் உன் குரல்.


என்னடி ஆச்சு என்னென்னமோ பேசுற...


கொஞ்ச நாளா உன்ன நிறைய மிஸ் பண்றேனோ எனத் தோணுச்சு. மனசு பாரமாச்சு. அதான்.


I ❣️ U பொம்பள.


I ❣️ U டா எரும.


யாழ் தண்விகா 


❣️

 

Thursday 9 June 2022

சொல்லாமல் கொள்ளாமல் கொல்லுதல்


தாய் தன் இடையில் 

அமர்த்தி

வைக்கப்பட்டிருந்த குழந்தையை காரணங்களேதுமற்று 

கீழே இறக்கி விட்டுச் செல்லும் 

நண்பகல் போல்

வாய்த்திருக்கிறது

எனக்கான வாழ்க்கை.


நீயில்லாமல்

எது நிம்மதி

நீதான் என்றும்

என் சன்னதி

என்ற வரிகளை

முந்திக்கொண்டு

வந்து விழுகிறது

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே 

என்ற வரிகள்-

என் மேல் இரக்கம் காட்டாத

உன் காதல்

காணும்போதெல்லாம்...


என்னை அவ்வப்போது

வெறுக்கும் முன்

கொஞ்சம் நீயும் பரிசீலனை

செய்யலாம்தான்

எனக்குள் நம் காதல்

வாழ்ந்து வருகிறது என்பதையும்...


யாழ் தண்விகா 


❣️


 

Friday 3 June 2022

கண்ணும் கருத்தும்...


 

❣️

நெடுந்தூர பயணம்

உடலெங்கும் வலி

களைப்பாயிருக்கு


ஒரு காஃபி குடிங்க

சரியாகிடும்


அதிலெல்லாம் சரியாகும்

எனத் தோணல


அப்போ ஒரு டேப்லெட் வாங்கிப் போடுங்க


அதிலும் சரியாகாத அளவுக்கு உடம்பிருக்கு


ரெண்டு நாள் லீவு போட்டு

அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தாம

வீட்டுல இருங்க

சரியாகும்


ஒரு முத்தம் தந்தா எல்லாம் சரியாகும்

ஏன்டி இப்படி கெஞ்ச வைக்குற


ஒரு முத்தம் கொடுடின்னு கேட்காம

ஏன்டா இப்படி சுத்தி வளைக்குற...


❣️

கண் மலர்களின் அழைப்பிதழ்


எப்படியிருக்கும் எனக்கூட தெரியவில்லை


பார்த்து வருடங்களாச்சு


ராஜா சார்...

இதே பாடலை

அவள் காதோரமாகவும்

கொண்டு சேர்க்கவும்...


❣️

போத்தலில் நிரம்பியிருக்கும்

மதுவின் அசைவலையில்

பூக்கும் போதை

உன் இதழசைவில்...


பேசு அன்பே பேசு...


❣️

எப்போப்பாரு

கல்யாணம் குழந்தைங்க

எதிர்காலம்ன்னுக்கிட்டு...

வேற நெனப்பே வராதா...


அதிகமாகக் காதலிக்கக் காதலிக்க

கல்யாணம் குழந்தைங்க எல்லாம்

தன்னாலே அமைஞ்சிடுமாம்


யார் சொன்னா அப்படி...


காதலே சொல்லுச்சு


குழந்தைகளைப் பெத்துக்கிட்டு

அதுக்கப்புறமா கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆகாதாமா?


ம்ம்ம் அதானே...


என்ன அதானே...

வாடா கட்டிக்க...


❣️

விலங்குகள் பறவைகள்

பூக்கள் பூச்சிகள்

காடு மலை எல்லாம் வரைந்து

சின்னச் சின்ன மாதிரி உருவங்களைப் பணி நிமித்தம் செய்து

நம்மையும் ஓவியமாகச் செதுக்கி...


கண்ணும் கருத்தும் காதலெனத் தகும்...


இல்லடி இல்லடி

எண்ணும் எழுத்தும்

கண்ணெனத் தகும்...


❣️

உன்னைப் பற்றி எழுதுபவை

துதிப்பாடல்கள்


உன்னைப் பற்றி பேசுபவை

பிரசங்கம்


உன்னைப் பற்றிய கற்பனைகள்

நிஜமாக வேண்டிய கதைகள்


கடவுளைச் சரியாகத்தான்

நான் ஆராதிக்கிறேன்...


யாழ் தண்விகா

Thursday 2 June 2022

நினைக்கும்போது பேச வருவாய்...



 ❣️

மீண்டும்

அழைத்திருக்கலாம்


காத்திருந்தது

என் காதல்


❣️

கடவுள் எல்லாவற்றிற்கும்

ஒரு காரணம் வைத்திருப்பான்

என்றாய்


கடவுளை நம்புபவனில்லை நான்.

ஆனாலும்

நம்மைச் சந்திக்கச் செய்வதற்கு

காதல் என்னும் காரணம்

வைத்திருந்திருக்கிறாய் நீ

என நம்புகிறேன்.


❣️

பொய் சொன்னாலோ

யாரும் ஏமாற்றினாலோ

கண்ணீர் வந்துவிடுகிறது

என்றாய்.


நானோ

என் கவிதையோ

எப்போதும் ஏமாற்றுவதில்லை.

அப்புறம் ஏன் கண்ணீர்...


❣️

ஊரெல்லாம் திருவிழா

நம் ஊர்களில் திருவிழா இல்லை

என்று வருத்தப்படுகிறாய்


நாம் சந்திக்க வேண்டிய நேரம்

வந்துவிட்டது...


❣️

ஆயுசு நூறு என்றெல்லாம்

வரையறை எதற்கு?

அதற்கும் மேல் தான்.

எப்போதெல்லாம் என்னை நீ நினைப்பாயோ

எப்போதெல்லாம் உன்னை நான் நினைப்பேனோ

அப்போதெல்லாம்

உனக்கு நான் அழைப்பு விடுத்திருப்பேன்

எனக்கு நீ அழைப்பு விடுத்திருப்பாய்...


யாழ் தண்விகா 


❣️