Monday 16 September 2019

கற்பனைக் கடவுள் #நாச்சியாள் சுகந்தி

தோழர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய நந்தலாலா சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வாசித்த தொகுப்பு #கற்பனைக்கடவுள். தோழர் நாச்சியாள் சுகந்தி எழுதியது. மொத்தம் 11 கதைகள். கதைக்களம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் கதைகள் யாவிலும் மனிதம்தான். அப்பாவின் காதலி, மற்றும் வயிற்றுப்பிள்ளை கதைகள் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. புரியாது பூசணிக்கா கதை குறித்தும் பாயும் ஒளி நீயெனக்கு கதை குறித்தும் ஏற்கனவே பதிவிட்டேன். கொஞ்சம் ஜுஸும் ஒரு உடலும்... ஒரு பெண்ணை வக்கிரத்திற்கு படிய வைக்க இந்த சமூகம் என்ன செய்கிறது என்பதை வெகு இயல்பாக வலியாக கூறியுள்ளார். அவனதிகாரம் என்ற கதை ஆம்பளையின் அதிகாரம் ஆம்பளை என்ற தினவைக் காட்டுகிறதாக இருக்கிறது எனினும் அதற்காக வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணைக் கூறியிருப்பினும் இறுதியில் புருஷன் தன்னை விட்டுட்டு வேறொருத்தியை கூட்டிட்டுப்போனாலும் அவனைப் பிரிந்து தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து உத்தியோகம் பார்க்க வைத்த பழனியம்மாள் குறித்துக் கூறி கணவன் இல்லாமலும் வாழும் வைராக்கியத்தை கிழவி மூலம் உணர்த்துகிறார் தோழர். அறுத்துக்கட்டினவ கதை தன் தலைமுறைக்கான நிலத்தை பிடுங்க நினைப்பவர்களிடம் புருஷன் என்பவன் அருகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மிரட்டும் கும்பலிடம் நேரடியாகச் சென்று தன் வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ள அருவா இது. வெட்டுறதுன்னா இப்பவே இங்கயே வெட்டுங்க என்று செல்லம்மாள் கூறுவதும் தினம் தினம் பயந்து பயந்து சாவதை விட ஒருநாள் அந்த சாவைச் சந்தித்தே விட்டால் என்ன? என்ற ஆதித்திமிர் அவள் கண்களில் ஜொலித்தது
அந்த ஜோதிக்கு முன்னால் அவனால் உறுதியாக நிற்கக்கூட முடியவில்லை என்று முடிப்பதிலிருந்து பெண் என்பவள் கொண்டிருக்கும் வீரம் அத்தனை சாதாரணமானது அல்ல என்றுரைக்கிறார் தோழர். மயக்கம் கதை வேறு ஒரு கோணம். கற்பனைக்கடவுள் எதிர்பார்ப்பை கடைசிவரை இழுத்துச் செல்லும் கதை. பசியை வெல்லும் வயிறு மலைக்காடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலை பசியோடும் வலியோடும் பகிர்ந்துள்ளது. பதில் இல்லாத கேள்விகள் கதை பல கேள்விகளை மனதில் தோற்றுவித்துவிடுகிறது. நாம் பார்க்கும் பல நிகழ்வுகளை சாதாரணமாக கடந்து விடுகிறோம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி அல்லது பல எதிர்பார்ப்புகளுடன் வாழ்வை நகர்த்திக்கொண்டு போய் விடுகிறோம். ஆனால் ஒவ்வொன்றின் முடிவில் ஒரு முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை நம் கண்முன்னால் அவிழ்த்துக்காட்டுகிறார் தோழர் நாச்சியாள் சுகந்தி. வாழ்வின் சுவாரஸ்யங்களும் அசுவாரஸ்யங்களும் நிறைந்திருக்கும் இந்த கதைகள் சமூகத்தைப் புரட்டிப்போடும் என்று கூறவில்லை. தான் பார்த்த மனிதர்களின் வாழ்வின் மூலம் நாம் வாழும் சமூகத்தை மனிதத்தோடு அணுகும் முறையை எடுத்துக்கூறியுள்ளார் தோழர் நாச்சியாள் சுகந்தி.
வாழ்த்துகள் தோழர்.

No comments:

Post a Comment