Wednesday 11 September 2019

ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் #கயல்

ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய்
ஒவ்வொரு பொருளையும் கவிதையாகப் பார்த்தல் ஒருவகை. கவிதைக் கண்களோடு எதனையும் நோக்குதல் ஒருவகை. கயல் தோழர் இரண்டாம் வகை. ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய்... பூர்வ குடிகளை அரிசி திருடும் மதுவாகப் பாவித்து அடித்துக்கொல்லும் சமூகத்தில் தானே வாழ்கிறோம். தலைப்பே வலி.
கொஞ்சமென்ன நிறையவே அச்சம், அழிந்துவரும் இயற்கை பற்றிப் படிக்கவும் கேட்கவும். பூக்கும் மலர்ச்செடி உள்ளவிடத்து அதிர்ந்தும் பேசாத மனம் படைத்தவர் எல்லோரும்தான் பாதிக்கப்படுகிறோம் கார்ப்பரேட்களால், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் வளங்களை நினைத்து. அப்பெருந்துயரை மட்டுமே உள்ளே காணக்கூடுமோ என உள்நுழைந்தால்... ஓர் ஆரவாரத்தின் மடியில் தவழும் மயக்கம்- இயற்கை- காதல்- முத்தம்- பெண்வலி- அனிதா- ஆசிஃபா- விவசாயம்- அப்பா- அற்புதம்மாள் என வனத்தின் மழைத்துளிகள் அமுதமாகவும் அமிலமாகவும் மேல்சொட்டுகிறது.
“தீராக்காதலுடன்
முத்தமிடாத உதடுகளுக்கே விதிக்கப்படுகிறது
இன்னொரு பிறவி”
முத்தம் முடித்துவைக்கும் பிறவி காண முத்தத்தோடு வாழவேண்டும். முத்தமாக வாழவேண்டும். முத்தத்தை வரையறுக்கும் வரிகள். அருமை... இதன் எதிர்நிலையில் நிறுத்திக் காணுமாறு இன்னொரு பக்கத்தில் ஒரு வரி. மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்...
”அன்பின் வன்மம் இசைவற்ற முத்தம்”
ஆம். முத்தங்கள் உப்புக் கரிப்பதற்காகப் பூப்பதில்லை. இசைவற்ற முத்தம் அன்பின் வன்மம். பிடித்தமற்ற அன்பை நோக்கி திணிக்கப்படும் வன்முறை.

ஆண்ட பரம்பரையென்று கூவித்திரிபவர்களின்மேல் காறி உமிழ்கிறது சக்கரவர்த்திகளின் பசி என்ற தலைப்பிலான கவிதை.
“பூவுலகின் ஆகப்பெரிய ஆலயத்தின்
கோபுரங்களில் மின்னுவது
அடிமைகளின் எலும்புகள்”
அரசாட்சி என்பது இதுதான். இதுதான் ஆண்ட பரம்பரை என்பதன் லட்சணம். தெய்வாம்ஸம் என்று போற்றித் திரிதலின் பின்னேயுள்ள அரசியல் காணுதல் தானே அறம்.
காதல்-
“எங்கோ எவரின் காதலோ மரணிக்க நமக்கு வலித்தல்
இணைய வாய்ப்பே இன்றிப் போனாலும்
இறக்கும்வரை நலம் நினைத்தல்”...
இன்னுமின்னும் நீளும் வரிகளினூடே அவரவர் காதலையும் படரவிட்டு ரசிக்கத்தூண்டும் லாவகத்தை உண்டாக்குகிறது வரிகள்...
நேற்றைய காதலென்று எதுவுமில்லை. காதலென்பது ஒரு தவம். அது நீண்டு கொண்டிருப்பதில் புனிதம் காண்கிறது. அது நிலைத்திருப்பதில் திளைத்துக்கொள்ளும். திளைத்திருப்பதில் புதுப்பித்துக்கொள்ளும்.
“மழைத்துளியென என் முகமேந்திய
உள்ளங்கைகளில் படர்ந்த ஈரம்
ஆயுளுக்கும் அழியாதென்றது நீதானே

மருதாணி இலையில் உறையும்
செந்நிறமுன் அன்பென்றது யாவும்
வெறும் படிமம் என்கிறாயா

முதன் முதலிலுன் காதல் விரல்கள்
பிணைத்த பவழமல்லி மரத்தருகே
நின்றே எழுதுகிறேனிதையும்...”
அழகும் வலியும் ஒரு சேரக் காணக்கிடைக்கிறது வரிகளில்... காதலென்பது உயிர் ஏற்றுக்கொள்தல் மட்டுமே. உயிர் விடுவித்துக்கொள்தலல்ல. உணர்வுகளில் உயிர் வாழ்வது. உயிருள்ளவரை உயிராய் வாழ்வது.

பிறிதொரு கவிதையொன்றில் இயல்பற்றதை இயல்பாக்கி வைத்திருக்கும் காலம் குறித்தான கேள்வியொன்றை முன்வைக்கிறார் கவிஞர்.
“மலையெனில் கதிரோடு
மரமெனில் பறவைக்கூடு
வானெனில் நிலவோடு
யானையை மட்டும் சங்கிலியோடே
வரையும் குட்டிம்மாக்களின் கைகளுக்குச்
சங்கிலியைக் கற்பித்தது யார்?”
தலைமுறைகளுக்கு நாம் வைத்துச் செல்வதுதானே அவர்களின் எண்ணங்களிலும் படர்ந்திருக்கும்... அதே சமயம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் குற்றவுணர்வை பதிய வைக்கும் வரிகள்... அற்புதம்.

தேவதைக்கறி என்ற கவிதை... ஹாஷினி, நந்தினி, ஆசிஃபா, ராகவி... இவர்கள் குறித்த நினைவின் வலியை இன்னும்கூடுதலாக்கும் வரிகளுடன்... இன்னுமென்ன கவிதையில் 8வழிச்சாலை, அனிதா, விவசாயம், என அழிக்கப்படும் வளம் பற்றிய கொந்தளிப்பு வரிகளில் தெறிக்கிறது. அக்கவிதையை முடிக்கிறார் இப்படியாக...
“இன்னுமென்ன
உள்நாட்டுக்கான அகதிக்கான அடையாள அட்டை
அதுவும் இருக்காது தமிழில்”...

தலைநகரில் நிர்வாணமாக ஓடியும் துயரடைத்திடாத வலிகளின் உரிமையாளர்களான விவசாயிகள் பற்றியும் விவசாயம் பற்றியும் வலிகளால் நிரம்பிய கவிதையொன்று...
“நீரின்றிக் கருகிய பயிர் பார்த்து நிலத்திலேயே மயங்கிச் செத்த
கடனடைக்க முடியாமல் விடமருந்தி தூக்கில் தொங்கிய
டிராக்டர் பறிமுதலாக அவமானத்தில் உயிர் நீத்த
பெண்டு பிள்ளை பசி காணாது கிணற்றில் பாய்ந்த
தலைநகரில் மலந்தின்போமென்ற தன்னினம் பார்த்து உயிரோடிறந்த
நெல்வயலில் கால்நட்ட துயரத்தால் நள்ளிரவில் நாண்டுகொண்ட
தன்னிலத்தைப் பார்த்துத் திறந்தே கிடந்த விழிகளை அறைந்து மூடி
உழக்குடியின் சடலங்களையெல்லாம்
சீராக அடுக்கிச் சொன்னோம்
நாமொரு விவசாய நாடு”
இங்கு உண்மைகள் மறைக்கப்படுகின்றன. பொய்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றன. நீதி மறுக்கப்படுகிறது. அநீதி எங்கும் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. பாரத் மாதாக்கி ஜே என்ற வாக்கியம் திணிக்கப்படுகிறது. உண்மைகளை உரக்கச் சொல்வோர் ஆண்ட்டி இண்டியன் என்று தூற்றப்படுகிறார். தோழர் அவ்விடயத்தில் எவ்வித சமரசமும் செய்யாமல் உள்ளதை உள்ளபடியே பதிவு செய்துள்ளார். மரணத்தின் வலி, அகதியின் வலி, தைப்புரட்சியின் பின்னான அரசியல் என இன்னும் பல கவிதைகள் குருதியின் ஈரப் பிசுபிசுப்போடு வலியூறச் செய்கின்றன.
தொகுப்பில் இன்னும் பல இருக்கின்றன. மண் உணர்ந்த, மனிதம் உணர்ந்த ஒவ்வொருவருக்கும் போய்ச் சேரவேண்டிய கவிதைகள் ஒவ்வொன்றும். மேடையில் ஒரு கவிதைப் புத்தகத்தை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்ய ஒரு நல்ல கவிதையைத் தேடிக்கொண்டிருக்கும் பலரைப் பார்த்திருப்போம். இத்தொகுப்பில் எப்பக்கத்தைத் திறந்தாலும் கவிதைகளே இருக்கின்றன, கவிதைக்கான சொல்லாட்சி அபாரம். மண்ணின் துயர்மிகு வரிகளையும் மானுடத்தின் காதலை இன்னும் சுடர்மிகு வரிகளுடனும் உங்களிடமிருந்து இன்னும் காண விழைகிறேன்.
வாழ்த்துகள் தோழர் கயல்.

No comments:

Post a Comment