Monday 16 September 2019

பூக்களின் காயங்கள் #பூர்ணா

#பூக்களின்_காயங்கள் கவிதைத்தொகுப்பு
எப்போது பார்த்தாலும் இளகிய மனதுடன், புன்னகையுடன், எளிதில் உச்சரிக்கவியலாத சில கவிஞர்களின் நூலை வாசிப்பதற்காகப் பரிந்துரைக்கும் தோழர் பூர்ணா ஏசுதாஸ்ன் ஹைக்கூ கவிதைத்தொகுப்பு #பூக்களின்_காயங்கள்
இவரின் உரையில் 'வலி, படைப்பாளியைப் புடம் போடுகிறது, படைப்பாளி வலியைப் புடம் போடுகிறான்" என்கிறார். ஆம் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் வலியினால் பிறந்தவை. அவை மகிழ்வோ... துயரோ...

குழந்தை அழுகிறது
கஞ்சி காய்ச்சுவான் தந்தை
சுவரொட்டிகள் ஒட்ட...
எப்போதோ கேட்ட கவிதை இது. அதை மீண்டும் நினைவுபடுத்தியது
தோழரின்...

சிறுவன்
பசியோடு வேலை செய்கிறான்
உணவகத்தில்...
வாழ்வு எனப்படுவது கைகளின் முன்னால் காணப்படும் வரங்களை கைக்கெட்டாமல் வைக்கும்போது எப்படி மகிழ்வாயிருக்கும்... அதனை வெளிக்கொணரும் வரிகளிவை.
●பிரிந்து போன பறவையை
காற்றில் தேடுகிறது
உதிர்ந்த இறகு...
எளிய சொற்கள். நட்போடு காதலோடு வாழ்வோடு எதனோடும் தொடரும் அல்லது தோன்றும் பிரிதலோடு கூடிய வலியை அற்புதக் கவிதையாக்கியுள்ளார் தோழர்.
கவிதை என்பதோ மகிழ்ச்சி என்பதோ துயர் என்பதோ எதிலிருந்து பிறக்கிறது... அதற்கு ஆதி என்ன... இதற்கான விடையாக இந்தக்கவிதை இருக்கிறது...
●மூங்கிலில் கிழிபட்ட காற்றைத்தான்
இசைகளாக்குகிறது
புல்லாங்குழல்...
இயல்பில் பூத்திருக்கும் வரிகளில் எத்தனை நுணுக்கமான பார்வை...
கிராமம், வயல், இயற்கையோடு பொருந்திய வாழ்வுமுறைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டுத் திரியும் மனித முகங்களில் ஓங்கி அறையும் கவிதை வரிகள்...
● கட்டித் தொங்கவிடப்பட்ட
தொட்டிச் செடிகள்
ஊசலாடுகிறது நிலம்...
●காய்ந்து கிடக்கும் குளம்
எங்கே போயிருக்கும்
தவளைகள்
●மாடத்தில் கூடு
எங்கே
மரம்...
●மின்விசிறி சுழல
அசைந்தன
பிளாஸ்டிக் இலைகள்...
மனித மாண்பினை வெளிக்கொணரும் கவிதைகளும் ஏராளம் இதில்...
முகநூல் தோழர் Kumar Shaw பதிவு ஒன்றை எப்போதும் மனதில் அசைபோட்டிருப்பேன். இவ்வுலகின் கடைசி வெள்ளைக்காண்டாமிருகம் இறந்தபோது இவ்வுலகில் உரையாட மகிழ்ந்துகொள்ள யாருமே இல்லாதபோது தோன்றும் உயிர்வலியை அந்த காண்டாமிருகத்திற்கு வாய்த்ததுபோல் உள்ள சூழலில்தான் நம்மால் உணரமுடியும் என்பார்...
அதே வலியை பூர்ணா தோழரும் தனது கவிதையில் கூறியுள்ளார்
●யாருமற்ற பூமியில்
நீ மட்டும் இருப்பதாய் நினைத்துப்பார்
யாரோ ஒருவரையும் பிடிக்கும்...
ஒவ்வொரு ஹைக்கூவும் ஒவ்வொரு வண்ணத்தில் மின்னுகின்றன
அதன் நிறங்கள் சொல்லும் வலியை வாசிக்கும்போது உணரலாம் இன்னும் இன்னும்...
வாழ்த்துகள் தோழர் #பூர்ணா

1 comment: