Monday 16 September 2019

கடவுள் மறந்த கடவுச்சொல் #ஜின்னா அஸ்மி

கடவுள் மறந்த கடவுச் சொல்
Mohamed Ali Jinna
ஜின்னா அஸ்மி
கஸல் கவிதைகள் என்று என்னுரையிலும் அணிந்துரையிலும் ஆய்வுரையிலும் அறிந்துணரும்போது அது ஒரு போதனை என்றே தோன்றியது...
கவிதைகளுள் செல்லச்செல்ல அங்கு காதல் மட்டும்தான். வேறொன்றும் இல்லை. ஆமாம் அதைத் தவிர இந்த மனதில், மண்ணில் வேரூன்றி நிலைத்திருக்க வேறொன்றிற்கு தகுதி உண்டா என்ன...
விண்மீன்களில் எது அழகு
சற்றே மங்கலாக பல விண்மீன்கள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன எனச் சொல்லிச் செல்லலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவற்றின் அருகில் நாம் செல்லவில்லை. அதுதான் உண்மை. காதலும் அதுபோல்தான். அது எப்போதும் எவ்விடத்தும் ஒளிவீசும். காதலினைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளும் அப்படித்தான்...
காதல் ஒரு நீர். அது எல்லா பாத்திரங்களிலும் தன்னை நிரப்பிக்கொள்ளும்.
காதல் ஒரு வரம்.
அது இன்பமாகவும் இருக்கலாம்.
துன்பமாகவும் இருக்கலாம்.
காதல் ஒரு பேரிடர்.
அதில் மிதந்தும் செல்லலாம்
மூழ்கியும் செல்லலாம்.
படைப்பு குழுமம்வெளியிட்டுள்ள இத்தொகுப்பு ஜின்னா அஸ்மியின் இரண்டாம் தொகுப்பு. முதல் தொகுப்பின் பின் 19ஆண்டுகள் கழித்து வந்துள்ள தொகுப்பு.
காதல் எப்போதும் சாயம் போகாது. அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும். எத்தனை தலைமுறைகள், யுகங்கள் கடந்தாலும். காதல் என்பதன் தனித்துவமே அதுதான்.
இமைக்கும் நொடிகளுள்ளும் காதலைக் கொண்டாடும் வரம் வாய்க்கப்பெற்றிருக்கிறார் கவிஞர். அங்கிங்கெனாதபடி தன் பார்வையை காதலால் பரவ விட்டிருக்கிறார். எதைச் சொல்ல, எதை ஒதுக்க... பூத்திருப்பது அத்தனையும் காதல் பூக்கள். அத்தனையும் வாசம் வீசும். அத்தனையின் நிறமும் ஈர்க்கும். அத்தனையும் வாடாது என்பது இவரின் காதல் கஸல்களுக்கு அவ்வளவு பொருத்தம்.
💝
நான் வெறும் காகிதம்
உன் பயணம் முழுக்க
உன்னுடனே பயணிக்கிறேன்
ஒரு பயணச்சீட்டைப் போல...
💝
நீ தேடும் பொருள்
நான் தொலையும் பொருள்
உன்னிடம் வந்தால்தான்
என்னைக் கண்டுபிடிக்க முடியும்
💝
காதலென்பது குற்றமென்றால்
கைதியாக இருப்பதே சுகம்.
💝
காதல்
என்னில் மேலே எழுகிறது
உன்னில் கீழே போகிறது
மரமாகவும் வேராகவும்
💝
வா
உன்னை அனுபவித்தே தீரவேண்டும்
நீ எனக்காக வழங்கப்பட்ட தீர்ப்பு...
💝
உன்மேல் ஒரு ஆடையைப்போலச்
சுற்றிக்கொண்டிருக்கிறேன்
நான் பார்க்கவும்
மற்றவர்கள் பார்க்காமல் இருக்கவும்...
💝
என்மேல் ஒரு நத்தையைப் போல
கூடு கட்டிக்கொள்
யாராவது வந்தால்
ஒளிந்துகொள்கிறேன் உனக்குள்...
💝
என்னை விழுங்கிக்கொள்
நான்
உனக்காகப் படைக்கப்பட்ட மாத்திரை...
இப்படியாக முழுக்க முழுக்க
காதலைக் கொண்டாடும் தொகுப்பு...
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசித்தாலே காதலாவோம்.
காதலோடு வாசியுங்கள்
கவிதையாவோம்
கஸலாவோம்...
வாழ்த்துகள் தோழர்
ஜின்னா அஸ்மி...

No comments:

Post a Comment