Monday 16 September 2019

அசோகவனம் செல்லும் கடைசி ரயில் #அகதா

அசோகவனம் செல்லும் கடைசி ரயில்...
எப்போதோ கேட்ட குரல். கவிதை குறித்து பேசிக்கொண்டோம். அதிலும் அதிகம் பேசியது நீங்கள்தான் தோழர். அப்போது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். படைப்பு குழுமம்மூலமாக உங்கள் கவிதைத் தொகுப்பு வெளிவருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். Vetrimozhi Veliyeetagamஇலக்கியக்கூடலுக்கு கடந்தமுறை சென்றபொழுது தேடிப்பிடித்து உங்கள் நூலை வாங்கினேன். ஒரு பரவசம் நாமறிந்த ஒரு தோழியின் நூல் படிக்கப்போகிறோம் என...
தந்தையின் இழப்பு குறித்த கவிதை மனதில் வலி ஏற்படுத்தியது. "நீ யாரிடமும் தராத உந்தன் சொகுசுத் தலையணை உன் இறுதி சாய்வுக்குப் பின் என்னிடம்தான் உள்ளது. உன் ஒட்டுமொத்த வாசங்களையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு"...
கவிதைகள் பெரும்பாலானவற்றின் ஊடாக வாழும் மிஸஸ் குமார் அருமை....
"நீ நானாக இருந்திருந்தால்
அந்தப் பிங்க் கலர் புடவையில்
ஏஞ்சல் போல் இருந்தாய் என்றும்
தேடிக்கொண்டிருந்த
அலுவலக அடையாள அட்டையை
ஓடிவந்து கொடுத்தபோது
இதழ் குவித்த முத்தம் ஒன்றும்
அவசரத்தில் நீ செய்த
கோபி மஞ்சூரியனை அட்டகாசம் என்றும் கட்டாயம் சொல்லியிருப்பேன்
காதல் நீர்த்துப்போன என் கணவா...
மிஸஸ் குமாரின் டைரிக்குறிப்பிலிருந்து"...
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான முரண்களை கவிதையாக வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன செயல்கள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் தோழர். இது போன்ற மிஸஸ் குமார்கள் ஆங்காங்கே தொகுப்பில் காணக்கிடைக்கிறார்கள். அவர்களின் ஆணாதிக்கம், பெண்கள் எப்படி இருக்கவேண்டும் அவர்களுக்கான கட்டுப்பாடு, மாதவிடாய் (ஜெயிக்கவேயில்லை கவிதை) இவையெல்லாம் பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் சில இடங்களில் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது பரவலாக கவிதையாக படரவிட்டுள்ளது ஆண்களின் மனதில் புதைந்துள்ள பொதுப்புத்தியை நோக்கி வீசும் வாளாக இருக்கிறது.
எப்போது நாமாவோம் கவிதை இரு துருவங்களின் சந்திப்பை சாத்தியப்படுத்துதல் எத்தனை அசாத்தியமானது என்பதைச் சொல்லுகிறது.
பெண் பேசும் பெண்களுக்கான அரசியல், அவர்களுக்கான சுதந்திரம், அவர்களின் ஆசைகள், காதல் இப்படியாக பல கவிதைகள். புனைவற்ற அவை யாவும் பெண்களின் வாழ்வில் படிந்துள்ள வேதனைப் பக்கங்களைக் காட்டுகின்றன.
காதல் பூக்கும் தருணத்தை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது பூக்கிறது மனசு கவிதை.
யவனிகா என்ற தலைப்பிலான கவிதை காமமில்லா இடம் தேட வைக்க ஒரு பெண்ணைத் தூண்டும் காரணிகளை வரிசைப்படுத்தியுள்ளது.
செல்வி அக்கா, சரவணன் இணையர் குறித்தான கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு இழப்பின் ஓலத்தைக் காட்டுகிறது.
கவிதைகளில் வாழ்ந்திருக்கிறார் தோழர் எனக் கூறத்தக்க வரிகள் நிறைய. ஒரு பெண் விரும்பும் தேடல் எதுவாக இருக்கவேண்டும், இருக்கிறது என்று தொகுப்பு உணர்த்துகிறது.
இன்னும் பல தளங்கள் தொட்டு அடுத்த கவிதைத் தொகுப்பு தாங்கள் கொண்டுவர விரும்புகிறேன்.
வாழ்த்துகள் தோழர்...

1 comment: