Friday 29 May 2020

வகுப்பறை வாழ்க்கை #யாழ் தண்விகா

#வகுப்பறை_வாழ்க்கை

அடைக்கப்பட்டிருக்கும் பள்ளியில்
என் வகுப்பறைக் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
பேசிக்கொண்டே சொல்லிக்கொண்டே
எழுதுகிறார்கள் என் குழந்தைகள்

இன்று ரொம்பவும்தான் திட்டிவிட்டேன்
என் பிள்ளைகளை
ரொம்ப செல்லம் கொடுக்கிறேன்
வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் சூழல் கேட்கிறேன்
நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவுரை சொல்லி கல்வியின் பெருமையைச் சொல்கிறேன்
எப்போதும் விளையாட்டுப் புத்தி
கொஞ்சமும் பணிவு இல்லை
பணிவு கிடக்கட்டும்
ஓர் ஒழுக்கம் என்பது இல்லை
ஒரு சின்ன இடைவெளி என்றாலும்
சுற்றிக் குழுமி நின்று ஒரே சத்தம்
பாட தொடர்பான ஒரு வேலையும் அவர்கள் செய்வதில்லை
இன்று ரொம்பவும் தான் திட்டிவிட்டேன்

மௌனம் குடியிருக்கிறது
கரும்பலகையின் பக்கமிருந்து
திரும்பி குழந்தைகளைப் பார்க்கிறேன்
காணவில்லை அவர்கள்
அறைக்குள் எல்லா இடங்களிலும் தேடுகிறேன்
பீரோவில் பக்கவாட்டில் அடியில் மேசையின் அடியில்
புத்தகப் பைகளின் அடியில் அதனுள்
இப்படி எங்கும் தேடுகிறேன் அவர்களை
காணவில்லை
தேடலின் முடிவில்
என்னையும் காணவில்லை

குழந்தைகள் அடிக்கடி கிறுக்கிய சுவற்றில்
வண்ணங்கள் குறைகிறது
சாக்பீஸ்களின் துகள்கள்
கல்லறையின் மேல்விழும் பூக்களாக
உதிர்கிறது
வகுப்பறையின் இருள்
என்னவோ போலிருக்கிறது
உறங்கிக் கொண்டிருக்கும் மாரியப்பனின் தலையில் கொட்டிவிட்டு
அமைதியாக எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருக்கும்
சொக்கலிங்கம் நன்றாக படிப்பவன்
அவனை அழைக்கிறேன் எதிர்க்குரலில்லை
உள்ளே வரலாமா ஐயா குரலை அளிப்பவனான கருப்பசாமிக்கு
ம் ம் வாடா
என்கிறேன் குரல் வந்த திசையில் கருப்பசாமி இல்லை
வாய் மட்டும் அசைகிறது எனக்கும்
காலையில் உண்ணாமல்
வழிபாட்டுக் கூட்டத்தில் மயங்கி விழுந்த
ஹரிணி இப்போது பலத்த அரட்டை அடிக்கிறாள்
குச்சியைக் காட்டி அடி விழும் என்பதுபோல் பாவனை செய்கிறேன்
சிரிப்பவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறாள்
எப்போதும் என்னைப் பார்த்து குமரியைப் போல பேசும் விஷ்ணுப்ரியா சத்தமில்லாமல் அமர்ந்திருக்கிறாள்
ஏனென்று கேட்கிறேன்
சொல்லமுடியாது சார் இன்னிக்கு நீங்க எதுக்கு இவ்ளோ கோவமா இருக்கீங்க என்று கேட்டுவிட்டு ஓடுகிறாள்
ஒவ்வொருத்தனையும் குறை சொல்லும் நித்தீஸ் இப்போதும் பல குறைகளோடு வந்து நிற்கிறான்
எதுவும் கேட்கவில்லை
சார் இனி உங்களைத் திட்டல
நாளை முதல் நல்லா படிப்பீங்க தான
வீட்டுப் பாடம் சரியா எழுதிட்டு படிச்சிட்டு வருவீங்களா என்று கேட்கிறேன்
சரிங்க சார் என்று கட்டிடம் சிலிர்க்கும் அளவு குரலும் மின்னும் என் பிள்ளைகளும்...

உள்ளொலிக்கும் எங்கள் குரல்களையும்
கரும்பலகையையும்
உள்ளே திரியும் எங்கள் கடந்த கால வாழ்க்கையையும்
எப்படியாவது எங்கள் கைகளில் கொண்டு வந்து தாருங்கள்
வகுப்பறையைச் சுற்றிலும் நின்று நானும் என் பிள்ளைகளும்
கதறுகிறோம்
அல்லது
அறைக்குள் எப்போதும் எரியும் விளக்கொன்றை ஏற்றியாவது வையுங்கள்
நாங்கள் உள்ளேயே கற்றலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...

யாழ் தண்விகா

No comments:

Post a Comment