Monday 20 April 2020

ஆரண்யம் #கயல்

#ஆரண்யம்
கவிதைத் தொகுப்பு

Kayal S

கயல் தோழரின் ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கவிதைத் தொகுப்பிற்குப் பின் நான் வாசிக்கும் அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கயல் தோழருக்கு  மூன்றாம் கவிதை தொகுப்பு.   கவிதைத் தொகுப்பின் தலைப்பிற்கு ஏற்ப காடும் காடு சார்ந்த சொற்களும் விரவிக் கிடக்கின்றன. மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள், காடுகள், மழை, வானம், நிலம் என நாட்டைவிட்டு நாம் பார்க்க மறந்த அல்லது அழித்துத் தொலைத்த பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறது கவிதை.

கல்யாண்ஜி, என் லிங்குசாமி, இளையபாரதி ஆகிய ஆளுமைகள் நூல் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

கைகளில் ஏந்தி ரசிப்பதற்கு மலர் எவ்வளவு சுகந்தமாக இருக்குமோ அதேபோன்ற மலராக ஒவ்வொரு கவிதையும் நீளமாக இல்லாமல் கைகளில் எடுத்தது கண்களில் ஒற்றிக்கொண்டு இதயத்தில் பரவவிடும் சுகம் ஒவ்வொன்றிலும்...

முயலுக்கு உவமை சொல்லும் கவிதை ஒன்று. ஒரு வரி போதும் ஆனால் ஒவ்வொரு வரியையும் விடுகதையை கூறுவதுபோல கவித்துவம் படர அமைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒவ்வொரு வரியை வாசிக்கும் பொழுதும் முயலினை கைவிரல்களால் தடவிக் கொடுக்கும் சுகம்
"மல்லிகைப் பூப் பந்து
தரை நடக்கும் மேகக்கூட்டம்
கரைக்கு வந்த கடல் நுரை
குறுகுறுவென பார்க்கும் பஞ்சுப்பொதி
துள்ளும் பனிக்கட்டி
சீனத்து வெண்பட்டு
பெயர் சொன்னாலே மனம் பூரிக்கும்
செல்ல முயல்..."

புத்தன் மட்டும்தான் புத்தனாக முடியுமா... போதிமரம் மட்டும்தான் புத்தனுக்கான மரமா... இல்லை இல்லை...
"கொப்பும் குலையுமாகப்
பூக்கள் காய்கனிகளோடு
தாய்மை தழும்ப நிற்கும்
ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
எம் மனிதனும்
புத்தன்
எந்த மரமும்
போதி"
என்கிறார் கவிஞர்.

யானை ஒரு பெரிய விலங்கு. ஆனால் அதனை மனிதன் படுத்தும்பாடு என்பது சொல்லில் அடங்காதது. பெரிய விலங்கு எனினும் அதன் குழந்தைத் தன்மை போன்ற செயல்கள் காண்போரை பரவசப்படுத்தும். காடுகளின் வழியாக மனிதன் வசதியாக வாழ்தலின் பொருட்டு சாலைகள் அமைத்து காட்டு விலங்குகளின் வாழ்வை சுக்கு நூறாக்கிப் போட்டிருக்கிறான். சமீபத்தில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டதனால் ஏற்பட்ட காயத்தால் மெல்லமெல்ல அவ்விடத்தை காயங்களுடன் கடந்துசென்ற யானையின் முகம் ஒவ்வொரு யானை கவிதையை படிக்கும் பொழுது மனதிற்குள் வந்து செல்கிறது. இதோ யானை பற்றிய வலிமிகுந்த கவிதை ஒன்று...
"தன்னை
அண்ணாந்து பார்க்கும் சிறுமி
தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட, சுரக்கும் பால்மடி கனக்கத்
தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்
கோயில் யானை"
குட்டியைப் பிரித்து அழைத்து வரப்பட்ட யானையின் கனவு வேறு என்னவாக இருக்கும்...?

இன்னொரு யானை(வலி)க் கவிதையில்...
கோடி சுடர் என நீர் தெறிக்க
புனலாடி குளித்திருந்த யானை
புரியாமல் பார்க்கிறது,
நகர் வந்த நாளாய்ப்
பாகன் தன்னை நீராட்டும்
ஓரங்கள் நசுங்கிய வாளியை..."
கோயில் கடவுள் யானை பாகன் வாளி அத்தனையையும் பொருத்திப் பார்க்கையில் கவிதையில் ஒளிந்திருக்கும் வலியைக் கண்டடையலாம்...

காடுகள்  ஒரு தனி உலகம். அதனை விடுத்து வெகு தூரமாக வீடுகள் இருக்கும். ஆனால் இன்று காடுகளை அழித்து விட்டு வீட்டின் ஓரமாக ஓரிரு மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு அதனைக் காடுகள் என்று கூறிக்கொண்டு வாழ்கிறோம். அப்பேர்ப்பட்ட மனிதர்களைச் சாடும் கவிதை...
"அத்தியூர்
அரசம்பட்டி
ஆலங்குளம்
இலுப்பையூர்
விளாத்திகுளம்
வேப்பங்குளம்
தாண்டிக்குடி
தாழையூத்து
என மரத்தின் பெயரால்
ஊர்களை அழைத்தவர்கள் நாம்
இன்றும் ஊர்ப் பெயர்களில்
மரங்கள் இருக்கிறதுதானே"
ஊரின் பெயரில் மட்டும் வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும், அல்லது ஊரின் பெயரிலிருந்தும் அப்பெயரையும் நீக்கிவிட்டோமா என்ற கோபத்தின் வெளிப்பாடு இது...

என்னதான் சரணாலயங்கள் அமைத்து அழிந்து வரும் விலங்கினங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது தான் வாழ்ந்த ஆதிக் காடாக ஒருபோதும் விலங்குகளுக்கு அமைந்துவிடாது என்பதனை "ஆரத்தழுவி
முகமெங்கும் முத்தமிட்டு
குறுகுறுத்த கண்களில் லயித்து
மென்மையாய் காதுகள் வருடி
எவ்வளவு கொஞ்சியும்
வாழ்ந்திருந்த காட்டையே
வழிநெடுகத் தேடும்
என் முயல்குட்டி..." என்ற கவிதையின் வாயிலாக உணர்த்துகிறார் கவிஞர்.

காடு என்பது என்ன என்பதற்கு கவிஞர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள் "அழகின் உச்சம் மலர்கள்
அன்பின் உச்சம் காதல்
மொழியின் உச்சம் கவிதை
ஞானத்தின் உச்சம் மௌனம் இறைவனின் மிச்சம் காடு"
ஒவ்வொன்றிலும் சலித்தெடுத்துத் தேடிய பின் கிடைக்கும் ஒரு உச்சம் கூறிய பின் இறைவனில் சலித்தெடுத்த உச்சம் காடு என்கிறார் கவிஞர். எவ்வளவு ஆழ்ந்து யோசிக்க வேண்டிய வரி இது...

தொகுப்பிலிருந்து...

வைரப் புனலின் துகள்
விளக்கில்லா பலவண்ணக் கனல்
நிலாத்துண்டின் நகரும் அகல்
மின்னல் கொடியின் மலர்
வனமகள் மூக்குத்திச் சுடர்
இருள் எதிர்க்கும் கலகக்குரல்
கதிரிடம் களவாடிய சிறு பகல்...
மின்மினி!

மலர்
சருகு
ஒன்றே போல்
மடியேந்தும்
பூமி

எதிர்ப்பட்ட பின்
கடப்பது கடினம்
காதல்,
கடவுள்,
காடு

விற்று விட்ட மாந்தோப்புக்கு
அப்பா நள்ளிரவில் தடுமாறியபடி செல்ல
தயங்கித் தொடர்ந்த அம்மா மட்டுமே
அறிவாள்
ஒவ்வொரு மரத்தின் முன்னும்
அவர் விழுந்து மன்னிப்பு கேட்டதும்
பின் சாகும்வரை
மாம்பழத்தை உண்ணாமல்
வாழ்ந்ததும்...

இன்னும் இன்னும் பறவைகளாக, பூக்களாக, இயற்கையாக மின்னும் கவிதைகள் நிறைய நிறைய தொகுப்பில்...

வாசியுங்கள்
நாம் தொலைத்த காட்டிற்குள் பயணம் செய்யலாம்.
நாம் மீட்டெடுக்க வேண்டிய காடுகளை அடையாளம் கண்டுகொள்ளலாம்...

கவிதைப் பயணம் தொடரட்டும் சிறப்பாக...
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா

No comments:

Post a Comment