Saturday 18 April 2020

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் #பா.ஜெய்கணேஷ்

மஞ்சள் வெயிலும்
மாயச் சிறுமியும்
#கவிதைத்தொகுப்பு

 Jai Ganesh தோழர்

96பக்கங்கள்

பரிசல் வெளியீடு
சென்னை

கவிதை என்பது எழுத்து வடிவிலான குறும்படம். கவிதையை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறையை இப்போதெல்லாம் நேரடியாகக் கூறிவிட முடிவதில்லை. புதுப்புது முயற்சிகள், புதுப்புது வடிவங்கள், புதுப்புது கோணங்கள், புதுப்புது சொல்லாடல்கள் என தனது பயணத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது கவிதை இத்தொகுப்பு SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றிவரும் ஜெய்கணேஷ் தோழரின் முதல் கவிதைத் தொகுப்பு.

தான் காணும் ஒவ்வொரு உலகம் குறித்தும் பல பக்கத்தில் தன் பார்வைக் கோணத்தைச் செலுத்தும் வல்லமை இவர் தன் கவிதைகளில் காணக் கிடைக்கிறது. வெயில் என்றால் வெயிலால் காய்ந்துவிடும் கடைசி மண் துகள் வரை இவரின் சொற்களில் வந்து விடுகிறது. மழை என்றால் நனைந்து தன்னைக் குழைத்துக்கொள்ளும் ஈரம் இறங்கும் ஆழம் வரை இவரின் எழுத்து இறங்குகிறது. தொல் விளையாட்டுகள், பாரம்பரியம் குறித்துப் பேசினால் அது புழக்கத்தில் விட்டு மறைந்து போனதன் உள்ளார்ந்த வலியை இவரின் எழுத்துகள் பதியம் போடுகிறது. அதுபோல் தான் ஒவ்வொரு கூறையும் காட்சிக் கவிதையாக்கியுள்ளார். 

தனிமையின் நினைவுகள் கவிதையில்
தனிமையைக் கூறும் வித வலி இப்படியாக...
"நெடுந்தூரப் பயணத்தில்
நிராதரவற்று நிற்கும்
பயணியைப் போல

சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருந்தும்
பார்வையற்ற ஒரு பறவையைப் போல

இருண்ட வானத்தின் எல்லையற்ற ஓசையில்
கரைந்துபோன
ஒரு குருவியின் குரலைப் போலத்தான்
என் தனிமையும்..."
தனிமையையும் கவியால் வாழ வைத்துள்ளார்.

நீரற்ற நதித் தடங்கள் கவிதையில் இல்லாமல் போய்விட்ட நதிகளைக் குறித்து கூறுகையில்
"நீரற்ற நதிக்கு மேலாக
கட்டப்பட்ட பாலத்திலிருந்து
சிறுவர்கள் எச்சில் துப்பு
விளையாட்டின் வழி
நதியொன்றை ஓட விடுகின்றனர்

மழையற்ற வானம்
தன் இயலாமையினால்
வெயிலை உமிழ்ந்து தள்ளுகிறது

ஈரமற்ற நதி
மௌனத்தில் உறைந்து கிடக்கிறது"
என்பதாக முடிக்கிறார். காணாமல் போன வாழ்வை கண்ணீரோடு வாசிக்க வைக்கும் வரிகள்.

மாயச் சிறுமியும் மஞ்சள் மலர்களும்,
மஞ்சள் நிற யானை உள்ளிட்ட கவிதைகள் புனைவின் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. யாழின் இசையில் கவிதைக்குள் இலக்கணத்தின் கருப்பொருட்கள் யாவும் தஞ்சம் அடைந்துள்ளன.

நகர்தலில் உடைகிறது பொழுது கவிதை அறிவியலை பகடி செய்கிறது புதிய கோணத்தில்...
"நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.

இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.

மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.

செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.

உங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று..."
இயல்பான வரிகளில் செயற்கை உண்டாக்கிய அதிர்ச்சியை இப்படியெல்லாம் கூறலாமோ என வியக்க வைக்கிறார்.

பெரும்பாலான கவிதைகள் இயற்கையைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது. பல கவிதைகள் சுயத்தைக் குறி வைக்கின்றன. நீட்டி முழக்கும் வித்தையைத் தவிர்த்து கருவின் திசையெங்கும் தான் அறிந்த சொற்களின் நளினத்தைப் படரவிட்டிருக்கிறார் என்று தான் கூறவேண்டும். இன்னும் பல உயரங்களை கவிதை உலகம் தங்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை பெருக்கெடுக்கிறது. தொடருங்கள் தோழர். வாழ்த்துகள்.

யாழ் தண்விகா

No comments:

Post a Comment