Friday 22 October 2021

வீட்டின் வேர்கள்



வீட்டின் வேர்கள்

 

   வீட்டிற்குச் செல்வதற்கான மணிச் சத்தம் “டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்” என்று அடிக்கத் தொடங்கியதும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் பைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சந்தோசமாகக் கிளம்பத் தொடங்கினர்.  கவின் ஐந்தாம் வகுப்பும், தனு இரண்டாம் வகுப்பும் அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். இருவரும் வகுப்பறையிலிருந்து வெளியேறி ஒன்றாகச் சேர்ந்த பின்னர் வீடு நோக்கிக் கிளம்பினர். தெருவின் ஒரு ஓரமாக, இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தனர்.


 வீட்டிற்குச் சென்று புத்தகப் பைகளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு கைகளைக், கால்களைக் கழுவிவிட்டு வந்தனர் கவினும் தனுவும். சற்று நேரத்தில் அவர்களுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாக பால் கொழுக்கட்டையைச் செய்து பாட்டி எடுத்து வந்து தந்தார். வாரத்தில் இப்படி இரண்டு மூன்று நாட்கள் அதிரசம், முறுக்கு, புட்டு, கொழுக்கட்டை இப்படி ஏதாவது ஒன்றை பாட்டி செய்து தருவார். அதை மகிழ்வோடு உண்டபின்னால் வீட்டின் முன்புறம் சென்று விளையாடத் தொடங்கினர். அப்போது தான் எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணன், அமுதாவின் பிள்ளைகளான வாசனும் ஜோதியும் பள்ளியிலிருந்து வந்தனர். இருவரும் கவினும் தனுவும் படிக்கும் அதே வகுப்பு தான் படிக்கின்றனர். அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆனாலும் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் என்ன?


 கண்ணனும் அமுதாவும் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப மாலை 7 மணி ஆகிவிடும். அது வரை வீட்டில் வாசனும் ஜோதியும் தான். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் காயம் ஆகும் அளவுக்குக் கூட சண்டை போடுவார்கள். பெரிய காயம் என்றால்  வேலை முடித்து வந்தவுடன் அம்மாவோ அப்பாவோ அவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். சண்டை போட்டுக்கொண்டாலும் அம்மா அப்பா வந்தவுடன் அவர்கள் முன்னால் எதுவுமே தெரியாதது போல இருப்பார்கள். அம்மா காலையில் சமைத்த பாத்திரங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் கழுவி எடுத்துவைப்பாள். இரவுச் சமையலை செய்யத் தொடங்குவாள். அப்பா கடைக்குச் சென்று வருவார். அம்மாவிற்கு சமைக்கும்போது உதவிடுவார். இருவரும்  கொஞ்ச நேரம் பிள்ளைகளிடம் பள்ளியில் என்ன நடத்தினார்கள் என்பதைக் கேட்டுவிட்டு உறங்கிவிட்டு மீண்டும் அதிகாலையில் எழுந்து சமையலை முடித்து, பிள்ளைகளைச் சாப்பிட வைத்துவிட்டுக் கிளம்புவார்கள். சில நேரங்களில் கொஞ்சம் தாமதமானால் வாசனையும் ஜோதியையும் சாப்பிட்டுப் பள்ளிக்குச் செல்லச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். பரபரப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.  இது ஒரு தொடர்வேலை போல தினந்தோறும் நடந்துகொண்டே இருக்கும்.  இந்த வேலைகளில் எதுவாவது ஒன்று தடைபட்டாலும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே சண்டை வந்துவிடும். 


 ஆனால் கவின், தனு வீட்டில் இது போன்ற பிரச்சனையில்லை. மாலை நேரங்களில் தன்னால் இயன்றவரை பாட்டி, வீடு வாசலைச் சுத்தம் செய்து வைப்பார். தாத்தா, தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத் தருவார். ஒயில், தேவராட்டம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தருவார். காலாற இருவரையும் அழைத்துக்கொண்டு வயல்பக்கம் அழைத்துச் சென்று வருவார். அவர்களை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி அருகில் இருந்து கவனித்துக்கொள்வார். மில்லில் இருந்து பணி முடித்து பெரும்பாலும் எட்டு மணிக்கு மேல் தான் கவின், தனுவின் பெற்றோர் வீட்டுக்கு வருவார்கள். வந்தவுடன் விரைவாக சமையலை முடிப்பாள் அம்மா. பிள்ளைகளின் படிப்பைக் கவனிப்பார் அப்பா. ஒருவேளை அவர்கள் வரத் தாமதமானாலும் பாட்டி சமையலை முடித்து வைத்துவிடுவாள். ஆனால் ஒரு சில நாட்களில் வாசன், ஜோதியின் அம்மாவும் அப்பாவும் தாமதமாக வீட்டுக்கு வரும்போது சாப்பிடாமல் கூட அவர்கள் உறங்கியிருப்பார்கள். கவினுக்கும் தனுவுக்கும் அதுபோல பட்டினியால் உறங்கும் சூழல் இதுவரை வாய்த்ததில்லை.


 கவினும் தனுவும் இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் பாட்டி அருகில்தான் பெரும்பாலும் படுப்பது வழக்கம். இருவரின் படிக்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்குமாறு தூங்கும்வரை பாட்டி அவர்களுக்குக் கதைகள் கூறுவாள். பழமொழிகள் கூறுவாள். திருவிழாக்கள், கோவில், குளம் போன்ற தகவல்களைக் கூறுவாள். மூலிகைச் செடிகள் பற்றிக் கூறுவாள்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் கவினும் தனுவும் தினந்தோறும் உறங்குவார்கள்.  


 வாசன், ஜோடியின் குடும்பத்தை விட ஏழ்மைக் குடும்பம்தான் கவின், தனுவின் குடும்பம். அவர்களின் பெற்றோரை விட கவின், தனுவின் பெற்றோர்களின் படிப்பும் கம்மி தான். ஆனால் முறையான வளர்த்தலால், கண்காணிப்பால், திட்டமிடலால் கவினும், தனுவும் படிப்பில் முதலாக வந்தனர். படிப்பு என்பது வாசனுக்கும் ஜோதிக்கும் பெரிய ஒரு விசயமாகத் தெரியவில்லை. இதை மாற்றக்கூட வாசன், ஜோதியின் அம்மா, அப்பாவிற்கு நேரமில்லை. ஒருநாள் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டு கவினும் தனுவும் முதல் இடத்தைப் பிடித்தபோது பள்ளியே அவர்களை வாழ்த்தியது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அவர்களைக் கொண்டாடினர். அதை தற்செயலாகத் தெரிந்துகொண்ட வாசனின் அப்பா, வாசனையும், ஜோதியையும் திட்டினார். “அவர்களைப் பாருங்கள். எப்படி படிக்கிறார்கள்? எவ்வளவு திறமையாக விளையாடுகிறார்கள்? அவர்களின் வகுப்பு தானே நீங்களும். உங்களால் ஏன் முடியவில்லை” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திட்டினார். பதில் சொல்லத் தெரியாமல் இருவரும் திருதிருவென்று அமர்ந்திருந்தனர். 


 மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை உணவை முடித்துவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள் வாசன், ஜோதி, கவின் மற்றும் தனு. அப்போது எதிர்பாராமல் தனு கீழே விழுந்துவிட்டாள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி சட்டென வீட்டிற்குள் சென்று மஞ்சளை எடுத்துவந்து காயம் பட்ட இடத்தைத் துடைத்துவிட்டு அவ்விடத்தில் வைத்துவிட்டாள். இரண்டு நாட்களில் காயம் ஆறிவிட்டது. வாசனுக்கும் ஜோதிக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இதெல்லாம் பாட்டிக்குத் தெரிந்தது? பாட்டி மருத்துவரா? நமது வீட்டைப் போலவேதான்  இங்கும் இருக்கிறார்கள். ஆனால் எப்படி கவினும் தனுவும் சிறப்பாகப் படிக்கிறார்கள். புத்திக் கூர்மையுடன் இருக்கிறார்கள், எப்படி சிறப்பாக விளையாடுகிறார்கள் அவர்கள் தாத்தாவுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கலைகள் தெரிகிறது? என்றெல்லாம் சந்தேகம் வந்துவிட்டது. அந்தக் கேள்வியை நேரடியாக கவினிடமே கேட்டுவிட்டான் வாசன்.

 அதற்கு கவின், “என்னுடைய அம்மா, அப்பாவின் பல வேலைகளில் எங்கள் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் இருக்கும்போதும் இல்லாதபோதும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் பெற்றோருக்கும் வழிகாட்டுகிறார்கள். அம்மா அப்பா வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதாவது ஏதாவது சண்டை வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்த்துவைக்கிறார்கள்.  எங்களுக்கு நன்னெறிக் கதைகள் சொல்கிறார்கள். படிப்பதன் அவசியம் சொல்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் வாழ்வில் தாங்கள் கற்ற அனுபவங்களை எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் எங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருபவர்கள். ஒரு வார்த்தையில் சொல்வதானால் எங்களுடைய தாத்தாவும் பாட்டியும் எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா. அவர்கள் இல்லாமல் எங்கள் படிப்போ விளையாட்டோ இவ்வளவு சிறக்க வாய்ப்பில்லை” என்று சொல்கிறான். எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தான் வாசன்.


 அன்று இரவு வாசனும் ஜோதியும் அவர்களின் அம்மா, அப்பாவிடம் சரியாகப் பேசவில்லை. சாப்பிடவும் இல்லை. “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா வேண்டும் எனச் சொல்கிறார்கள். “என்ன இது முட்டாள் தனமான விருப்பம்?” அது எப்படி முடியும்? என வாசனின் அப்பா கோபப்படுகிறார். அப்போது “அந்த இன்னொரு அப்பா அம்மா வேறு யாருமில்லை. ஏன் எங்க தாத்தா பாட்டியாக இருக்கக்கூடாது... கவின், தனுவின் தாத்தா பாட்டியைப் போல” என ஒரே குரலில் சொல்கிறார்கள். இதைக் கேட்டவுடன் இவ்வளவு நாள் தாத்தா பாட்டியை, பேரக் குழந்தைகளோடு இருக்கவிடாமல் ஊரில் தனியாக விட்டு வந்துவிட்டோமே என்ற உண்மையைப் புரிந்துகொண்டும், குற்ற உணர்வோடும் “சரி, கவலைப் படாதீர்கள், நாளை எல்லோரும் தாத்தா பாட்டியைக் கூப்பிட ஊருக்குப் போகலாம், இப்போ சாப்பிடுங்க” என்று கூறுகிறார் வாசனின் அப்பா மகிழ்வோடு. 


No comments:

Post a Comment