Wednesday 13 July 2022

தீ நுண்மிகளின் காலம்...


தீ நுண்மிகளின் காலம்

இரா. பூபாலன் 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

பக்கங்கள் 64

ரூபாய் 70


உலகமே கொரோனா பெருந்தொற்றால் ஒடுங்கிக் கிடந்த கால கட்டத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. திரும்பிப் பார்க்கவேண்டிய வரலாறு கவிதைகளாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடும் அதனதன் அரசியல் சக்திக்கேற்ப ஜனநாயக ரீதியாகவோ, சர்வாதிகார ரீதியாகவோ தனது மக்களுக்கு எதனைக் கொடுக்க வேண்டுமோ அதனைப் பரிசளித்தது. இந்திய நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு கொண்டைக் கடலை வழங்குவதாகச் சொன்னது. வந்ததா எனத் தெரியவில்லை. வரவில்லையா எனத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்களை சொந்த ஊருக்கு அகதிகளைப் போல நடக்க வைத்தது. ஆயிரம் ரூபாய் கொடுத்தது மாநில அரசு. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் தரும் செய்திகள் பதட்டத்தைக் கூட்டுவதாகவே இருந்தன. நம்பிக்கையை விதைக்குமாறு இங்கு எதுவும் நடக்கவில்லை. அதைத்தான் தன்னுடைய கவிதைகளில் விதைத்துள்ளார் தோழர் இரா.பூபாலன்.


எழுதும்போது சின்னச் சத்தம் வந்தாலும் காகிதத்திற்கு வலிக்கும் என்பதுபோன்றதான மெல்லினச் சொற்களை தன்னுடைய கவிதைகளில் படர வைக்கும் தோழர், தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் அரசியலை அனாயசமாகப் பதியமிட்டுள்ளார். அதிகாரத்தை நோக்கிக் குரல் எழுப்பியுள்ளார். ஆதங்கம் இல்லாமல் வெறுமனே பெறுந்தொற்றுக் காலத்தைக் கடக்குமளவா இங்கு ஆட்சி நடந்தது? கடனுக்கு வட்டி இல்லை, வாங்கக் கூடாது என்று அரசு சொன்னது. ஆனால் நடந்தது என்ன என்பது சமூகம் உணரும். இப்படிச் சொல்லிக்கொண்டே போக கணக்கு வழக்கில்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட காலத்தின் மீதான அவநம்பிக்கையிலிருந்து கவிதைகள் தோன்றியுள்ளன.


பெருந்தொற்றுக் காலத்தின் காட்சிகள் கண் முன் விரிய ஒரு கவிதை இப்படி முடிகிறது

“விலங்குகளும் பறவைகளும்

புதிய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கின்றன,

இயற்கை ஆதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

மனிதன் இயல்புக்குத் திரும்பிவிடும் 

நாளை எண்ணி 

பயந்துகொண்டிருக்கிறார் கடவுள்”

இந்த பூமி இயற்கைக்குச் சொந்தமானது. மனிதன் ஒரு விருந்தாளி. அவ்வளவுதான். ஆனால் அவன் செய்யும் இயற்கை விரோதச் செயல்கள் கணக்கில் அடங்காதவை. இந்த ஊரடங்கு இப்படியே போனால் இயற்கை மகிழும். ஆனால் மனிதன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டான் எனில் மீண்டும் பூமியைக் கந்தலாக்குவான் என்று கடவுள் பயந்து கொண்டிருக்கிறார் என்று காட்சிப்படுத்துவதிலிருந்து மனிதன் எப்பேர்ப்பட்டவன் என்றுணர முடியும்.


வாகனங்கள் ஏதுமற்ற ஊரடங்குக் காலத்தில் சொந்த ஊருக்கு அகதிகளைப் போல நடந்து சென்ற காட்சிக்குள் ஆயிரமாயிரம் கிளைத் துயர்கள். சிறு குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை, வயதான முதியோர்களை நடக்க வைத்து இன்புற்றுக் கிடந்தது அரசுகள். தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு கட்டி வைத்து அடித்த சம்பவங்கள் அரங்கேறின. அதனை தீ நுண்மிக் காலம்-3 என்ற கவிதையில் வெளிக்கொணரும் கவிஞர் இப்படியே நடந்து நடந்து வலிகளில் உணர்வு மரத்துப் போய் தண்டவாளத்தில் உறங்கி ரயிலுக்கு தம்மை இரையாக்கிக் கொண்டதை தனியே தண்டவாளங்களின் குருதி என்ற கவிதையில் கூறியுள்ளார். அந்தக் கவிதை இப்படியாக தொடங்குகிறது...

“தண்டவாளங்களில் 

குருதியைப் பூசிப்பார்ப்பது

புதிதில்லை நமக்கு.


ஆணவக் கொலைகளின் 

முகமூடிகளை தண்டவாளங்களுக்கு மாட்டி

அழகு பார்ப்பவர்கள் நாம்.”


அப்பேர்பட்ட தண்டவாளத்தில் சொந்த ஊருக்குச் சென்றோர் ரயிலால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். “அதன் பெயர் பசி, அதிகாரம், அலட்சியம், சர்வாதிகாரம்” என்கிறார் கவிஞர்.


ஊரடங்குக் காலத்தில் தான் பெரும்பான்மைக் குடும்பங்கள் அவசியத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றாக பேசிக்கொண்டும் சிறு விளையாட்டுகள் ஆடிக்கொண்டும் இருந்தன. அவசியமற்று மருத்துவமனைக்குச் செல்லவில்லை. கொரோனா அறிகுறிகளைத் தவிர வேறொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. பிள்ளைகளுக்காக உழைப்பதற்கு ஓடிய தகப்பனின் வாழ்க்கை அவர்களின் மகிழ்வு எது என்பதைக் கண்டறிந்து ஆனந்தக் கூத்தாடியது. இதை

“ஒரு மகிழ்ச்சியின் குடும்பத்திற்குத் 

திரும்பியிருக்கிறோம்

தனிமைக் காலத்தில்

திசைகளெங்கும் திரிந்து பறந்த பறவைகள்

கூட்டுக்குத் திரும்புவதைப் போல” என்ற வரிகளில் பார்க்க முடிகிறது.


இந்தக் கால கட்டத்திலும் நீட் தேர்வு என்னும் கொடுமை அரங்கேறியது. உயிர் பயம் கவ்விக்கொண்டு இருந்தாலும் இணைய வழிக் கல்வி நடக்கத் தொடங்கியது. குடிச்சாலைகள் திறக்கப்பட்டன என்பனவற்றையும் கவிதைகளாக கவிஞர் வடித்துள்ளார். பெருந்தொற்றுக் காலக் கண்ணாடியாக விரியும் கவிதைகள் ஒவ்வொன்றும் மீண்டும் அக்காலத்திற்குள் நம்மைப் பயணிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட கவிதைதான் இது...

“நீண்ட நாட்களுக்குப் பின்னர்

குறுநகரப்பேருந்து ஓட்டுனர்

அதியதிகாலையிலேயே

பணிமனைக்கு வந்துவிட்டார்.

வெகுநாட்களின் பின்னர்

சந்திக்கும் காதலியைப் போல

ஆழமாகப் பார்க்கிறார்.

அந்தப் பேருந்தை

பிரகாரத்தை வலம் வருவது போல

பக்தியுடன் ஒரு சுற்று சுற்றி வருகிறார்

நீண்ட நாட்களின் பின்னர்

தனது இருக்கையில் அமர்ந்தவர் ஒருமுறை

ஸ்‌டீரியங்கைத் தொட்டுக் கும்பிட்டார்

அண்ணாந்து தலைமேல் அமர்ந்திருந்த 

இளையராஜாவுக்கு ஒரு முத்தத்தை நல்கினார்

அவர் அந்த நாளை 

இப்படித் துவங்கி வைத்தார்

“புத்தம் புது காலை”...

விடுபட்ட காலத்திலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கைக்குள் புகுவதை இவ்வளவு எளிதாக உணர்த்தமுடியுமா என்றால் ஆமாம் உணர்த்த முடியும் என்பதை இலகுவான வரிகளாலும் காட்சியினாலும் சிறப்புறச் செய்துள்ளார் கவிஞர். பெருந்தொற்று முடிவானால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படவேண்டும். மருத்துவமனை செல்லும் அத்தருணத்தில் உண்டாகும் குடும்ப உறவுகளின் மீதான பிணைப்பு காண்போரைக் கண்ணீர் வரவழைக்கும். 

“வெள்ளை நிற வாகனம்

வந்து நிற்கிற சமயம்

அவன் தன் வீட்டைத்

திரும்பித் திரும்பி பார்த்தபடிக்

கிளம்புகிறானே

எப்போது அந்த வீடு குலுங்கிய குலுங்கலை

ஒருவரும் கவனித்தாரில்லை.”

வலியை உரைக்கும் கவிதை அருமை தோழர். 108 வாகனத் தொழிலாளர்கள் அவர்களின் பங்களிப்பு குறித்த கவிதைகள் இன்னும் இருந்திருக்கலாம். காலத்தின் கண்ணாடி என்று தொகுப்பை தாராளமாக நாம் கூறலாம்.


வாழ்த்துகள் தோழர் இரா.பூபாலன்


யாழ் தண்விகா



 

No comments:

Post a Comment