Sunday, 17 August 2025

அத்தினி - Chitra Sivan

 


அத்தினி

நாவல் 

சித்ரா சிவன்

Chitra Sivan 

பிறகு பிரசுரம் 

230 பக்கங்கள் 

280 ரூபாய்


பெண்களின் பிரச்சனைகளை பேசும் ஒரு நாவல். பெண்களின் அக உணர்வுகளை பேசும் இந்த நாவலில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள் தான். அதில் சில ஆண் கதாபாத்திரங்கள் வருகிறது என்றாலும் அது அனைத்தும் துணை கதாபாத்திரங்களாகவே இருக்கிறது. 


பவித்ரா தேவி மற்றும் உமையாள் என்ற இரு கதாபாத்திரங்கள் முதன்மையாக இருக்கிறது. இவர்கள் சேதுராமன், அன்னக்கொடி இருவரின் மகள்கள். அன்னக்கொடி கதாபாத்திரம் கிராமங்களில் நிறைய பார்க்கலாம். திருமணத்திற்கு முன் சீட்டு பிடித்தல் தொழிலை எவ்வளவு சாமர்த்தியமாக நடத்துகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது. ஆண்கள் நடத்தும் சீட்டுகள் பாதையில் நின்று விடுகிறது அல்லது ஓடிவிடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்னக்கொடி நடத்தும் சீட்டு சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்து 50 ஆயிரம் ரூபாய் சீட்டை முன்னெடுக்கிறாள். முதல் சீட்டை பாலன் என்பவனுடன் சேதுராமன் ஏலம் கேட்டு, பின் பாலனையே எடுக்க வைக்கிறான். அதில் பாலன் செய்யும் செயலால் அதுல பாதாளத்தில் விழுகிறாள் அன்னக்கொடி. சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் திருமணம் நடக்கிறது. அன்னக்கொடிக்கு மாமன் முறை வேண்டும் கணேசனுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம்.  கணேசனுக்கு உதவுகிறாள். சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணம் திரும்ப தேவைப்படுகிறது அன்னக்கொடிக்கு. வீட்டில் சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் பணத்தை வைத்து பிரச்சனை வருகிறது. கணேசனிடம் கொடுத்த பணத்தை கேட்டு நடையாய் நடக்கிறாள். அன்னக்கொடி வீட்டில் பெரிய அளவில் பிரச்சனை வரும் பொழுது கணேசன் வீட்டின் முன் சென்று மண்ணெண்ணெயால் உடம்பில் தீ வைத்து எரித்துக் கொள்கிறாள் அன்னக்கொடி. அதன்பின் கணேசன் தன்னுடைய குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்கிறான். சேதுராமன் தன்னுடைய குழந்தைகளான பவித்ரா தேவி மற்றும் உமையாளுடன் சென்று வாழ்க்கையை தொடர்கிறார். சேதுராமன் இறந்த பின்பு பவித்ரா தேவி மற்றும் உமையாள் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதே கதை.


இந்த நாவலில் வரும் பெயர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாராரை சொல்ல வருகிறது. எந்த இடத்திலும் ஜாதி காட்டும் குறியீடு இல்லை. ஜாதிப் பெயர்கள் இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே. 


ஏ ஜே பி மருத்துவமனை கேண்டீன் இதுதான் கதையின் மையம்.


அன்னக்கொடி இறந்ததற்குப் பின் பவித்ரா தேவிக்கு 34 வயது உமையாளுக்கு 29 வயது சமயத்தில் கூத்தும் கும்மாளமுமாக வாழும் சேதுராமன் இறந்து விடுகிறார். அந்த இறப்பிற்கு வரும் மாறன், உமையாளை பெண் பார்க்க வருகிறார். உமையாள் மாறனை விட ஒரு வயது மூத்தவள். இந்த கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே வந்தாலும் கடைசியில் தான் திருமணம் முடித்து துபாய் செல்லும் காட்சி வருகிறது. மாறன் யார் என்று டிவிஸ்ட் வைத்திருக்கிறார் நாவல் ஆசிரியர். 


நாவலில் வசந்தமுல்லை, பூங்கொடி, கமலா, பாண்டியம்மாள், மல்லிகா, சரிதா இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எந்த ஒரு கதாபாத்திரமும் துருத்திக் கொண்டு தெரியவில்லை. சரிதாவுக்கு, கமலாவுக்கு, வாசவதத்தைக்கு, மல்லிகாவுக்கு ஒரு பிளாஷ்பேக்...  மல்லிகாவின் ஃபிளாஷ்பேக் என்பது காதல் திருமணத்தில் முடிந்த கதையைச் சொல்கிறாள். வாசவதத்தை திருமணம் முடித்த பின்பு எவ்வாறு ஏமாற்றப்படுகிறாள் என்பதை சொல்லுகிறது. கமலா கணவனால் எவ்வாறு அடிபட்டு மிதிபட்டு வந்து அந்த நரக வாழ்க்கையில் எப்படி ஜெயிலுக்கு போய் வந்தாள் என்பதை கூறுகிறது. சரிதா தன்னுடைய காதலனுடன் கொடைக்கானலுக்கு வருகிறாள். பணி நிமித்தமாக ஆப்பிரிக்கா சென்ற தன்னுடைய கணவனுக்கு தெரிந்து விட்டது. இந்நிலையில் சரிதாவின் காதலன் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறான். அவள் வேண்டாம் என்று கூறியும் அதில் அவன் இறந்து விட உயிருக்கு போராடும் நிலையில் சரிதா மட்டும் தப்பிக்கிறாள். இதற்கு இடையே அன்னக்கொடியின் பிளாஷ்பேக். அன்னக்கொடிக்கு இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தையாக பிறந்ததால் சேதுராமனின் அம்மா கள்ளிப்பால் கொடுக்க முடிவெடுக்கிறாள். இந்த செயலைச் செய்வதற்கு முன் படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழக்கிறாள். இது ஆச்சரியமான ஒன்றாக தோன்றினாலும் கள்ளிப்பால் கொடுக்க முயற்சி செய்யும் பெண்களுக்கு இப்படி நடந்தால் என்ன என்று மனதிற்குள் வந்து போகிறது எண்ணம். இந்த பிரச்சனைகள் யாவும் சுவாரசியமாக இருக்கிறது. சிலஅதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்குள் பெண் என்பவள் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறாள் என்பதை நாவலின் ஓட்டத்தோடு நாம் காண முடிகிறது.


உமையாள் மாறன் இவர்களுடைய திருமணத்தை நடத்திப் பார்க்க  ஆசைப்படும் பவித்ரா தேவி அந்த விஷயத்தில் வெற்றியும் விட்டு விடுகிறாள். பவித்ரா தேவி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்படுபவள் அல்ல. வாழ்க்கை என்பது போகும் போக்கில் நாமும் போவோம் என்ற எண்ணம் கொண்டவள். அந்த வாழ்க்கையில் இளங்கோ வருகிறான் டாக்டர் வேலை பார்ப்பவனாக. மதுரை கொடைக்கானல் குமுளி என்றெல்லாம் இவளுடன் பிரயாணப்படுகிறான். ஆனால் பவித்ராதேவியுடன் அவனுக்கு என்ன முரண் என்பது புரியவில்லை. தனக்கு உள்ள வேலைகளை கூறுகிறாள் கேண்டீனில் கமலா, அவள் மகன் சேதுராமன், பாண்டியம்மாள், அந்தோணி முத்து, சென்னையில் சரிதாவின் இறந்த காதலனோட அம்மா, ஹோம்ல மூணு பசங்க, ரெபேக்கா இவர்களை எல்லாம் தனக்கு பார்த்துக் கொள்ளும் கடமை இருப்பதாக பவித்ரா கூறுகிறாள். இவ்வளவுக்கு அப்புறமும் "நீங்க என் கூடவே இருங்க. என்னை விட்டு எங்கேயும் போயிராதீங்க" என்று கூறும் ஒரு எளிய மனம் பவித்ராவுக்கு. இளங்கோ என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் கதை. இந்த இடத்திலும் ஒரு பெண்ணின் முடிவு என்பது இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப்படுவது போல் அமைந்து விடுவது துரதிஷ்டம்.


தாய்ப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ, தங்கைப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ பொத்தாம் பொதுவாகக் கூறி கடக்கும் நாவல் இல்லை. ஜனரஞ்சகமான ஒரு நாவல் என்றே கூறலாம். ஆண்களைப் போல பெண்களுக்கும் ஆசைகள் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை தோட்டத்தில் சிக்கன், மட்டன், பிரியாணி சமைத்து அவற்றை ஓட்கா உடன் இணைந்து கொண்டாடுவது என்பது கதையில் வரக்கூடிய பெண்களின் கொண்டாட்டத்தில் ஒன்று. பெண்கள் தங்களைத் தாங்களே ரசித்துக்கொள்ளும் இடங்களாக இருக்கட்டும் (ஆங்காங்கே இது போன்ற பகுதிகள் இடம்பெறுவது ஒரு கவிஞராக அடையாளம் கண்டு கொள்ளும் இடமாக இருக்கிறது), தத்துவார்த்தமான வசனங்களை எளிய முறையில் கூறி கடப்பதாக இருக்கட்டும், இயல்பான நகைச்சுவையாக இருக்கட்டும் கொஞ்சமும் அலுப்புத் தட்டாதவாறு சுவாரசியமாக நாவலை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெறுகிறார் நாவல் ஆசிரியர். கூறுவதற்கு நிறைய இருக்கிறது நீங்கள் வாங்கிப் பார்த்து வாசித்து மகிழுங்கள். நன்றி.


வாழ்த்துகள் தோழர் சித்ரா சிவன்.

Wednesday, 13 August 2025

ஊசிகள் - மீரா


ஊசிகள்வி

கவிஞர் மீரா

சீதை பதிப்பகம்

விலை ரூபாய் 50

1974ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. முழுவதும் சமூகச் சீர்கேடு, அரசியல் அவலங்களைத் தோலுரிக்கும் கவிதைகள். பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இப்போதைய அரசியலுக்கும் பல கவிதைகள் பொருந்துகின்றன. அரசியல்வாதி, ஊழல், போலித் தமிழன் எனப் பல விசயங்களைப் பேசுகிறது தொகுப்பு. ஊரே கொண்டாடும்,


உனக்கும் எனக்கும் 

ஒரே ஊர் 

வாசுதேவநல்லூர் 


நீயும் நானும் 

ஒரே மதம்... 

திருநெல்வேலிச் 

சைவப் பிள்ளைமார் 

வகுப்புங் கூட 


உன்றன் தந்தையும் 

என்றன் தந்தையும் 

சொந்தக்காரர்கள்- 

மைத்துனன் மார்கள் 


எனவே 

செம்புலப்பெயல் நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே


என்ற கவிதை இத்தொகுப்பில் தான் உள்ளது. 


சிக்கனமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆடம்பர செலவு செய்யும் பிரதமர் குறித்த கவிதையும் உண்டு. சினிமாவில் அரசியல் தேடும் தமிழ் மக்கள் அன்றும் இருந்துள்ளார்கள். கல்விக்கு லஞ்சப் பட்டியல் அப்போதும் இருந்துள்ளது... இப்படி இவை யாவும் கவிதைகளில்.


வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்

மீராவின் அரசியல் கவிதைகளை.


வாழ்த்துகள்... 

Wednesday, 30 July 2025

கமலி

 


கமலி
நாவல்
சி.மோகன்
புலம் பதிப்பகம்
பக்கம் 144
விலை ரூ.150/=

ரகு கமலி இருவரும் கணவன் மனைவி. கமலியின் அப்பா, கமலியின் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து கண்டறிந்த மாப்பிள்ளை ரகு. இவர்களுக்கு நந்திதா என்ற பெண். இவர்களின் வாழ்வில் புதிதாக நுழைகிறார் கண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக கமலியின் மனதில் பதியத் தொடங்குகிறார் நல்ல மனிதராக, ரசனைக்குரியவராக, படிப்பாளியாக, வார்த்தைகளில் வசியம் செய்பவராக, கமலியின் மனம் கவர்ந்தவராக... கமலியின் எண்ணத்தில் உண்டான மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறான் ரகு. ஒரு சில கட்டத்திற்குப் பின்னர் கண்ணனுடன் உள்ள தொடர்பு முற்றிலுமாக தடைபடுகிறது ரகுவின் கட்டளையின் பேரில். ஆனாலும் கமலி கண்ணன் இடையே உள்ள காதலுக்கும் காமத்திற்கும் முற்றுப்புள்ளி இல்லாமல் தங்கு தடையின்றி அது தொடர்கிறது அது எப்படி என்று வாசித்தறிக. இடையில் கமலியின் அப்பா இறந்துபோகிறார். அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. அம்மாவைக் கவனிக்க சென்னைக்கு கமலி புறப்படுகிறாள். செல்லும் வழியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கண்ணனும் கமலியும் ஒரே பேருந்தில், படுக்கும் வசதியுள்ள இருக்கையில். கமலி எப்படி கண்ணனுடன் இந்த வாழ்வை வாழ்கிறாள்? ரகு கண்ணனுடன் பேசினானா, நந்திதாவுக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கச்சிப் பாப்பாவோ கிடைத்ததா என்பதை அறிய வாசிக்கவேண்டும் இந்த நாவலை. சரியோ தவறோ என்ற ஊசலாட்டம் கமலியின் எண்ணத்தில் புகவில்லை. அவள் மெல்ல கண்ணனின் வசியத்திற்குள் சிக்குகிறாள். கண்ணனும் நல்ல மனிதர். ஒரு இடத்திலும் கமலியின் பாத்திரமோ கண்ணனின் பாத்திரமோ குற்ற உணர்ச்சி என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தில் சிக்குவதாகக் கதையில் சொல்லாமல், ரகுவிடம் தோன்றும் மனக் கிலேசத்தை எப்படி கச்சிதமாக கமலி தீர்க்கிறாள், கமலியும் கண்ணனும் இந்த வாழ்க்கையை எவ்வளவு கவனமாகக் கடத்துகிறார்கள் என்பதை கிளர்ச்சியைத் தூண்டும் மொழிநடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். முக்கியமாக கதையின் இறுதி.

கதையிலிருந்து...
கண்ணன், காதலை மிகச் சாதாராமாக எவ்விதத் தயக்கமுமின்றிச் சொன்னபோது, கமலி விதிர்விதிர்த்துத்தான் போனால். அவள் உடலும் மனமும் படபடத்து நடுங்கியது. ஆனால் அந்தப் படபடப்பில் பயமில்லை. மாறாக, பரவசமிருந்தது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் மனம் ஏதோ ஒரு கிறக்கத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.

வாழ்த்துகள் தோழர்




Friday, 25 July 2025

பாக்கெட்டில் உறங்கும் நதி

 




பாக்கெட்டில் உறங்கும் நதி

சிறுவை அமலன்


Amalan Bernatsha


ஹைக்கூ கவிதைகள்


அகநி வெளியீடு


ரூ 25/= பக்கங்கள் 48


சொற்களில் கூர்மை, நறுக்குத் தெரித்தாற்போல சொல்வது ஹைக்கூவிற்கு பெரும் அவசியம். இயற்கையோ, சமூகமோ, தத்துவமோ எதைக் கூறுவது என்பதில் சிறுவை அமலன் தனக்கு சமூகத்திற்கான பார்வை போதும் என்று நினைத்து அதனை தன்னுடைய கவிதைகளுக்கான பாடுபொருளாக எடுத்தாண்டு வென்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அனல் தெரிக்கிறது பல கவிதைகளில்.


முதல் கவிதை...

வேப்பங்குச்சி

மின்னியது

அக்காவின் மூக்குத்தி...

ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாத வறுமை என்ன செய்யும்

வேப்பங்குச்சியை மூக்குத்தியாக கம்மலாக அணிந்துகொள்ளும். அதுவும் மூக்குத் துளை. காதுகளின் துளை மூடிவிடக்கூடாது, மீண்டும் அதற்காக செலவு செய்யும் சூழல் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குச்சியைச் செருகிக் கொள்ளுதல் இங்கு கவிதையாகி உள்ளது.


வெந்தது 

மனிதத்தோல்

தோல் பதனிடும் தொழிற்சாலை

வயிறு என்ற ஒன்றில்லாவிட்டால் எதற்காக இந்த பாடு? தன்னை வருத்தி தனது உடலை உயிரை வருத்தி சம்பளம் ஒன்றைப் பெற்று தனக்காக தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவன் இந்த வேலையும் இல்லாவிட்டால் என்ன செய்வான்... பசியால் மாண்டுபோவான். இங்கு வாழ்வதற்காக இறந்தபடியே வாழ்கிறான். அந்தச் சூழல் கவிதையாகியுள்ளது.


வேரோடு அழி

சாமின்னு குனிய வைத்தது 

சாமியானாலும்...

சாதியால், மதத்தால், வர்க்கத்தால் பிளவுபட்டுக்கிடக்கும் இந்த சமூகத்தில் இன்னும் ஆண்டான் அடிமை என்ற வறட்டுப் பித்தலாட்டத்தனம் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நேரடியாகச் சாடுகிறது இக்கவிதை. மனிதர்களுக்கு மட்டுமல்ல அந்தக் கடவுளேயானாலும் வேரோடு அழி என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது கவிதை.


பறையடித்த தாத்தா

பறையடித்த அப்பா

திருப்பி அடிக்க நான்...

குலத்தொழிலில் திணிக்கும் காலம் மலையேறிப் போய்விட்டது. என் கல்வி, என் உணவு, என் வேலை எதைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் என் உரிமை. மீண்டும் பறை அடிக்க அல்ல, திருப்பி அடிக்க நான் என்பது சமூகத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை. 


கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்

விந்து படிந்த நாப்கின்...

இந்த வரிகளைப் படித்தபோது பெரும் வலி சூழ்ந்தது. ஒரு பெண்ணின் வாழ்வில் வலிகளாகக் கடந்துபோகும் நாட்கள் மாதவிடாய்க்காலம். இயல்பாகவோ, சட்டென வந்ததும் செல்வதும் தெரியாமல் கடக்க அந்த நாட்கள் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அந்த நாட்களிலும் வழமையான வேலைகள் பெண்களுக்கு இருக்கவே செய்யும். அப்போதும் அங்கு ஆண் என்பவன் ஆணாகவேதான் இருக்கிறான். அவனுக்கு மனைவி என்பவள் தனக்கு நேர்ந்துவிட்ட ஒரு அடிமையாகவே தெரிகிறாள். அதுபோன்ற திமிர்த்தனம் மனிதத்தன்மைக்கு எதிர்நிலையில் வைத்துப் பார்க்கப்படும் என்ற சராசரி அறிவற்றவனின் செயலேயாகும் என்பதை இக்கவிதையில் உணரலாம்.


இது போல தொகுப்பெங்கும் பல கவிதைகள். வாசியுங்கள். 

எல்லாம் புரட்சித்தீப்பந்தம் ஏந்திய கவிதைகள்


வாழ்த்துகள் தோழர்...

Tuesday, 22 July 2025

நசீபு


 

#நூல்_விமர்சனம்


தன்னைச் சுத்திகரிக்கும் சமூகக் கதைகள்


 சிறுகதைகள் என்பவை சிற்சில சம்பவங்களின் தொகுப்பு. அது வாசிப்பவனை கதைக்குள் ஒன்றச் செய்யவேண்டும். கதைக்குள் நிகழும் சம்பவங்கள் வாயிலாக ஏதேனும் ஒரு பாடத்தை உணர்த்தவேண்டும். அப்படிச் செய்யும் எந்தவொரு தொகுப்பும் வெற்றிக்கான முத்திரையைப் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நசீபு சிறுகதைத் தொகுப்பு அப்படிபட்ட தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள். அனைத்தையும் தான் சார்ந்திருக்கும் இஸ்லாமியப் பின்புலத்திலிருந்து எழுதியிருக்கிறார். பழைமைவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கவும், பெண்களின் இருப்பு இஸ்லாமிய சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தவும், அங்கிருக்கும் ஆணாதிக்க சூழலை வெளிக்கொணரவும், அங்கும் வறுமையில் இருக்கும் குடும்பம் பசி போக்கத் திண்டாடும் சூழலையையும் தன்னுடைய தொகுப்பின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர் மு.அராபத் உமர். 


ஷஜ்தா

பானுவின் அப்பா ஒப்புக்கொண்டபடி வரதட்சணைப் பணத்தைக் கொடுக்காததால் அவள் அனுபவிக்கும் இன்னல் எங்குவரைக்கும் போகிறது என்பதை கதை சொல்கிறது. இப்படிக் கதைகள் அனைத்துச் சமூகத்திலும் இருக்கிறது. நஜீம் கணவனாக இருந்தாலும் வீட்டில் தன்னுடைய அம்மா, மற்றும் அக்காவின் சொல் கேட்டு நடப்பவனாக இருக்கிறான். தனக்கு நல்லது நடந்தால் அக்காவால் நடப்பதாகவும் கெட்டது நடந்தால் மாமனார் வீட்டால் நடப்பதாகவும் எண்ணுகிறான். அதனாலேயே மனைவி என்றும் பாராமல் மிகவும் கீழாக நடத்துகிறான். வீட்டில் பானுவின் கொழுந்தன் பானுவிற்காகப் பேசினாலும் அவனுடைய பேச்சு எடுபடவில்லை. தன்னுடைய இரு பெண் குழந்தைகளை வளர்க்க நஜீமின் துணை அவசியம் என்பதால் மாமனார் வீட்டை எதிர்த்து தன்னுடைய தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்லாமல் மனதால் புழுங்கும் பாத்திரம் பானுவிற்கு. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பானுவின் வலிகள் கடத்தப்படுவது அவளின் பாத்திரப் படைப்பை சிறப்பாக்குகிறது. பானுவின் அம்மா, பானு திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில் உனக்கு எதுவும் மனக்குறைகள் இருந்தால் அதனை அல்லாவிடம் தொழு செய்துகொள். அவர் தீர்த்து வைப்பார் என்கிறார். அதையே கடைசி வரை தொடர்கிறார் பானு. இதன் மூலம் ஒரு பெண் என்பவள் தனக்குத் தீங்கு செய்பவர்களை எதிர்த்து நிற்க, கேள்விக்கு உள்ளாக்க வைக்கப்படாமல் இருப்பதற்கு கடவுள் என்பதையும், அவள் ஒரு பெண் என்பதையும் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் தொடர்ந்து பெண்களுக்கு மட்டும் கற்பித்துக்கொண்டே வரப்படுவதைச் சுட்டுகிறது. வரதட்சணை என்பதை தன்னுடைய அண்ணனின் மகள் என்றாலும் கேட்கும் காலம் என்பதை மாமியார் கதாபாத்திரத்தின் மூலமாகக் காட்டுகிறார். இக்கொடுமை இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமல்ல பல சமூகத்திலும் இருக்கிறது. இதனை உணரச் செய்யும் வேலையைக் கதை செய்கிறது. 


கியாமத்

பதினைந்து வயதே ஆன ஆயிஷா என்ற பெண்ணிற்கும் முப்பத்து இரண்டு வயது ஆணுக்கும் திருமணம் முடிகிறது. இவர்களுக்கு ரேஷ்மா என்ற பன்னிரண்டு வயது பெண் குழந்தை. திருமணம் முடிந்த காலத்திலிருந்தே ஆயிஷா மேல் சந்தேகம் கணவனுக்கு. குடும்பம் அவளை எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அவளின் அழகும், தன்னை விட மிக இளையவள் என்பதும் கணவனுக்கு அவள் மீது சந்தேகத்தை வரவழைக்கிறது. அது தன் மேல் உள்ள நம்பிக்கையின்மை. தன் அன்பின் மேல் வரவேண்டிய நம்பிக்கையின்மை. பழமையில் ஊறிப்போன குடும்பம் என்பதால் வயல் வேலைக்கு வரும் நபர்களுக்கு உணவளித்தல் கூட சந்தேகத்தைக் கிளறுகிறது. இந்த சமயத்தில் வீட்டின் பக்கமாக வரும் பாத்திமா என்ற பெண்ணோடு நட்பு. அந்த நட்பில் அவ்வளவு ஆத்மார்த்தம். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் பற்றி, தன்னுடைய வலியைப் பற்றி ஆயிஷா பாத்திமாவிடம் பகிர்கிறாள். வீட்டில் படுத்தும்பாட்டினால் தான் இறந்துகூட போய்விடுவேன் என்று ஆயிஷா கூறுகிறாள். ஆனால் பாத்திமாவின் பேச்சைக் கேட்டபின் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன். என் பிள்ளையை காலேஜ் வரைக்குமாவது படிக்க வச்சுட்டு ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுக்கும் வரை சாகமாட்டேங்க்கா என்று நம்பிக்கையுடன் செல்பவள் இறந்துவிட்டாள் என்பது எவ்வளவு துயரம். இறப்பின் பின்னர் மாமியார், கணவன், நாத்தனார், உறவுகள் என ஒவ்வொருவர் நடவடிக்கையும் சந்தேகம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இது ஆணாதிக்க சமூகம். இங்கு பெண்களின் பேச்சு எடுபடாது. ஆனால் உண்மையாக இரக்கம், அன்பு, கருணையால் நிரம்பிய ஒரு பெண் எப்படி இறக்கலாம்? அவளிடம் வலி இருந்தது. ஆனால் கோழைத்தனம் இல்லை. அவளை இப்படி யார் செய்திருப்பார்கள்? யார் யார் கொலையாளிகள்? அவள் என்ன தவறிழைத்தாள்? அவளைக் கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நல்லவர்களாகலாம்? என்ற கேள்வியை பாத்திமா, சையதலி மூலமாக எடுத்தாண்டுள்ள விதம் அருமையாக இருக்கிறது. தன்னைப்போல தன்னுடைய மகளும் இருந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் மகளை கல்லூரிப் படிப்பை முடித்து வைத்த பின்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற ஆயிசாவின் எண்ணம் கல்வியின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் இள வயது திருமணத்திற்குள் அவளைத் தள்ளிவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காட்சிப்படுத்துவதாகப் பார்க்கலாம். கதையின் இறுதிப் பத்தியில் சொன்னவாறு யாராச்சும் காப்பாத்துங்க என்ற துயர் நிறைந்த வார்த்தைகளுக்கு முன்னால், முன்கூட்டியே அவளின் வலி அறிந்தும் தூர நின்று கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் குற்றவாளிகளாக கைகட்டியே நிற்கிறோம்.


வெம்மை

ஃபஹீமாவின் மாமனார் இறந்துவிடுகிறார். வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவன் திரும்பும் வரை ஃபஹீமாதான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவள் சித்த மருத்துவம் படித்தவள். அவளுக்கு மாமனார் இறக்கும் வேளை வந்துவிட்டது. நடக்கும் ஒருசில சம்பவங்களும் அதை உணர்த்தியது. எனவே, கூட இருங்க என்று கணவனிடம் கூறியும் கட்டாயம் போகவேண்டிய சூழல் என்பதால் சென்றுவிடுகிறான். இறப்பு செய்து கூறியபோதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லுகிறான். ஃபஹீமாவின் வற்புறுத்தல் காரணமாக வருகிறான். வந்தவன் அத்தாவைப் பார்த்தபோதும், அம்மாவைப் பார்த்தபோதும் அழவில்லை. ஃபஹீமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அடக்கம் செய்துவிட்டு வந்த இரவில் அப்பா இறந்ததற்கு உங்களுக்கு கண்ணீர் வரவில்லையா, ஏன்? என்ற கேள்விக்கு பணம் பணம் என்று ஓடி ஓடி அப்பாவைக்கூட கவனிக்கவில்லை. அவர் கூட நான் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியாக அவர் உயிரோடு இருக்கும்போது கூட பார்க்கவில்லை என்று கூறி கண்ணீர் விடுகிறான். வாழ்க்கைக்காக பணம் என்று ஓடி உறவுகளை மறந்துவிடுகிறோம் என்பதை கதையை வாசிக்கும்போது உணரமுடிகிறது. கணவன் இறந்தாலும் அருகே சென்று அமர்ந்து பார்த்து அழுவதற்குக் கூட அருகே ஆண்கள் யாரும் இல்லை, அவர்கள் இனி காலையில்தான் வருவார்கள். இப்போது சென்று பார்க்கலாம் அழலாம் என்ற நிலையில் மாமியார் பாத்திரம் மூலமாக குறிப்பால் உணர்த்துகிறார் கதாசிரியர். எல்லா உணர்வுகளையும் இப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எவ்வளவு வலி? இந்த நேரம் சிரிப்பதற்கு, இந்த நேரம் அழுவதற்கு? என்று பிரித்து வைப்பது எவ்வளவு பெரிய வன்மம் என்பதை மாமியாரின் கதாபாத்திரம் மூலமாக உணர முடிகிறது. ஃபஹீமாவால் குடும்பத்தை, அப்பாவை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இயலும் என்ற கணவனின் எண்ணப்படி அவள் சிறப்புற வழிநடத்துகிறாள். கணவனும் அவளின் வார்த்தைகளை காதுகொடுத்துக் கேட்கிறான். அதற்கு முறையான பதில் சொல்கிறான். ஃபஹீமாவின் பாத்திரப் படைப்பு சிறப்பாக உள்ளது. இயல்பான ஒரு குடும்ப வாழ்வைக் கண்முன்னே நிறுத்தியதும் பணம் மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதால் தன்னுடைய தந்தையைக்கூட இறுதியில் பார்க்க இயலவில்லை என்று தவறை உணரும் மகனின் இயல்புத் தன்மையும் கதையில் சிறப்பாக அமைந்துள்ளது.


இத்தா

அரசுக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் காஜா திடீரென்று இறந்து விடுகிறார். அவருடைய மனைவி ரோஜாவுக்கு அணிவிக்கும் வெள்ளை நிறப் புடவையைக் கண்டு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெனி கதறுகிறாள். ஆனால் அங்கு நிலவும் சூழல் அதனை மாற்றுவதாக இல்லை. பெரிய மாமியார் பழைமையைச் சுமந்து நிற்கும் நபர். அவர் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லி வளர்க்கமாட்டாயா என்று திட்டுகிறார். அடக்கம் எல்லாம் முடிந்த பின்னர் தன்னுடைய அம்மா ரோஜா இருக்கும் அறைக்குச் சென்று அவள் கேட்கும் கேள்வி, கணவன் இறந்தால் மனைவி வெள்ளை உடை உடுத்தினால்தான் கணவனுக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும் என்னும்போது மனைவி இறந்துவிட்டால் கணவன் வாழ்நாள் முழுக்க வெள்ளை உடை அணிந்தால் தானே மனைவிக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும். அதை ஏன் கணவன்மார்கள் பின்பற்றுவதில்லை என்ற கேள்வியை ஜெனி கேட்கிறாள். பழைமைவாதம் பதில் தெரியாமல் விழிக்கும் இடம் இது. ஹெச்.ஜி.ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தோடு ஒப்புமைப்படுத்திப் பார்க்கவேண்டிய வினா இது. கதை வாயிலாக இளைய தலைமுறையின் இதுபோன்ற கேள்விகள் வெளிப்படல் கதாசிரியர் கையாண்டுள்ள நல்ல உத்தியும் கூட.  


நசீபு

பெண்களின்மீது காலம்காலமாக திணிக்கப்படும் வன்முறை என்பது அவர்கள் கேள்வி எதையும் கேட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான். சுபைதா என்பவள் காரணமே இல்லாமல் கணவன் இறப்பிற்கு முன்னர் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறாள். அவளும் சம்மதித்து தான் எதுவும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கோருகிறாள். இறக்கும் தருவாயில் கூட அன்பாக எதையும் பேசாமல் உதாசீனப் படுத்தப்படுகிறாள். இது பேரன் வரை நீள்கிறது. அவளுக்குள் ஆயிரம் வருத்தங்கள். ஆனால் அதைக் கேட்க யாரும் இல்லை. பெண்கள் தமக்குள் கூடி தமக்குள் வருத்தங்கள் பகிர்ந்து, தமக்குள் ஆறுதல் வார்த்தைகள் பெற்று வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும்படியான கடமைக்கான வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து தீர்க்கிறார்கள். அவர்கள் ஆண்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யும் பணியாளர்களாகவே உள்ளனர். அவர்களின் ஆசாபாசங்கள் கேட்க யாருமில்லை. சொன்னால் அதற்கும் ஆயிரம் தடைக்கற்கள். வேளாவேளைக்குச் சோறு, வருசத்துக்கு இரண்டு உடை என்பதுதான் அவர்களின் வாழ்க்கை என்று ஆண்கள் நிர்ணயம் செய்துவிடுகிறார்கள். அந்த உடையும் ஆண்களின் விருப்பப்படிதான். ஒரு நோன்பிற்கு பாவாடை, தாவணி கேட்கும் விருப்பத்தைக்கூட நிறைவேற்றித்தராமல் வேறு உடையை எடுத்துத் தருவதோடு அதனை உடுத்தாதற்காக அம்மாவைக் கோபத்தில் அறைந்து பயமுறுத்தும் அப்பா என்பது மகளுக்கு சாபம்தான். சுபைதாவின் காலம் முதல் பேரனின் கேள்வி வரை பல தலைமுறைகளாக பெண்களின் எதிர்பார்ப்பையும் அதற்கு கிடைத்த எதிர்வினையையும் கடந்து வாழும் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அது மீறப்படும் நாள் பயங்கரகரமானதாக இருக்கும் என்பதை கதையின் இறுதியில் வரும் சுபைதா வெத்தலை இடிக்கும் சத்தம் வழக்கத்தி விட வலிமையானதாக இருந்தது என்ற வார்த்தையால் கதாசிரியர் உணர்த்தியுள்ள விதம் மிகச் சிறப்பு.


பரக்கத்

கணவன் இல்லாத நிலையில் தன்னுடைய மகன் நிஜாமை வளர்க்கிறாள் ஜன்னத். லாரி ஓட்டுனரான அவன் வரும்பொழுதே பரக்கத் பெண்ணை அழைத்து வருகிறான். வேறு மதமாக இருப்பாளோ என்று எண்ணிக் கோபப்பட்ட ஜன்னத் தன்னுடைய மதம் என்பதால் சமாதானமாகி திருமணம் செய்து வைக்கிறாள். அவர்களின் திருமண வாழ்க்கையின் பயனாக ஒரு மகன் பிறக்கிறான். மகனின் பிறந்தநாளுக்கு வருவதாகக் கூறிச் சென்ற நிஜாம் இறந்துவிடுகிறான். ஒரு மாதத்தில் கையில் வைத்திருந்த பணம் யாவும் தீர்ந்துவிட்டது. துக்ககாலம் முடியும் முன்னர் இட்லிக்கடை எப்படிப் போடமுடியும் என்ற பரக்கத்தின் கேள்விக்கு ஜன்னத் அளிக்கும் பதில் அல்லாவிற்கு எல்லாம் தெரியும். நாம் நம் வாழ்க்கைக்காக இந்த வேலையைத் தொடங்குகிறோம். அதனால் அல்லா நம்மைத் தண்டிக்கமாட்டார் என்று பதில் கூறுகிறார். தெருவும் பரக்கத் கடை இட்லி ருசியில் துக்ககாலம் குறித்து எதுவும் பேசவில்லை என்பதாகக் கதை முடிகிறது. கதையில் முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை அவர்களே தீர்மானிக்கின்றனர். அவர்களுக்குள் பிணக்கு இல்லை. ஆதலால் வெற்றி அவர்கள் கைவசம் வருகிறது. பெண்களால் சுயமாக உழைத்து ஆண் துணையில்லாமல் வாழ இயலும் என்னும் உத்வேகத்தைக் கொடுக்கும் கதை இது. 


ஈமான்

வறிய நிலையில் உள்ள இஸ்லாமியக் குடும்பம் கொரோனோ காலத்தில் வேலைக்கு எப்படி அல்லாடுகிறது என்பதையும் பசியையும், நோன்பையும் ஒரே காலத்தில் எப்படிச் சமாளித்தார்கள் என்று கதை பேசுகிறது. தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்றால் பசி உள்ள இடத்தில் குடும்பத்தில் இணக்கம் என்பது இருக்கிறது. அங்கு பழமைவாதம் என்பது இல்லாமல் இருக்கிறது. கதையில் வரும் பக்கத்துவீட்டு அக்கா, கடைக்கார ராணி அக்கா போன்றோர் மதத்திற்கு அப்பாற்பட்டு உதவும் கதாபாத்திரங்கள். சிங்கிள் சோர்ஸ் என்ற பதத்தின்மூலம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின்மீது குற்றம் வாசித்த அரசியல், அவர்களின் வறுமை குறித்து எந்த இடத்திலாவது பேசியிருக்கிறதா என்றால் இல்லை. அதனை இந்தக்கதை உணர்த்துகிறது. 


 ஆம் என்பதை ஆம் என்பதற்கும் இல்லை என்பதை இல்லை என்று சொல்வதற்கும் கூட இங்கு எத்தனையோ தடைகள். மேல்பூச்சுடன் சொல்லி புதியதொன்றைக் கட்டமைக்க விரும்பி சொல்ல வந்ததன் சாயல் எதுவுமற்றுக் கடந்துபோய்விடும் அபத்தம் நிறைந்த உலகம் இது. ஆனால் நசீபு சிறுகதைத் தொகுப்பு இதையெல்லாம் உடைத்து எறிந்து நம்மை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இக்கதைகள் சொல்லும் மனிதர்கள் மேல் நாம் கொள்ளும் வாஞ்சையையும் வெறுப்பையும் வைத்து எவ்வளவு தூரம் அவர்களுள் நாமும் ஒருவராக மாறிப்போகிறோம் என்பதை ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது உணர முடிகிறது. மொத்தம் ஏழு கதைகள். இஸ்லாம் மக்கள் உபயோகிக்கும் சொற்கள் தான் தலைப்பு. வெம்மை ஒன்றைத் தவிர்த்து. இன்னொன்று, கடைசிக் கதை ஒன்றைத் தவிர்த்து பிற கதைகளில் இறப்பும் அதனைச் சுற்றிய களமும் தான் கதையின் மையமாக இருக்கின்றன. பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முதல் சிறுகதைத் தொகுப்பு என்று தோன்றாதவாறு எழுத்து அமைந்திருப்பது சிறப்பு.


நூல் பற்றி:

நசீபு

மு.அராபத் உமர்

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

பக்கம் எண்: 104

விலை: ரூ 120/=


யாழ் தண்விகா 


❣️

Monday, 21 July 2025

அன்பளிப்பு

 


அன்பளிப்பு

கு. அழகிரிசாமி

சீர்வாசகர் வட்டம்

விலை ரூபாய் 10

பக்கம் 32


சாகித்திய அகாடமி பால புஷ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் இனிய எளிய சுருக்கமான அணிந்துரையுடன் நூல் ஆரம்பமாகிறது. குழந்தைகளை யார் என்ன என்ற பேதம் பார்த்தாலே அது இக்கதையில் வருவதைப் போல நாசுக்காக சொல்வதே நச்சென்று அறைவதுபோல் இருக்கும்.


அழகிரிசாமி, சாரங்கன், பிருந்தா, சித்ரா, சுந்தரராஜன், கீதா, தேவகி எல்லோரும் நண்பர்கள் என்று தான் கூற வேண்டி இருக்கிறது. இதில் அழகிரிசாமி ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். மற்ற அனைவரும் குழந்தைகள். பள்ளியில் படிப்பவர்கள். சுந்தரராஜனும் சித்ராவும் வயதில் சற்று மூத்தவர்கள். சனிக்கிழமை இரவில் கொஞ்சம் கூடுதல் நேரம் தூங்க கூடியவர் அழகிரிசாமி. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமையன்று சற்று கூடுதலாக ஓய்வு எடுத்துக் கொள்ளும் மனநிலை அவருக்கு. அப்படித்தான் சனிக்கிழமை இரண்டு மணியைப் போல தூங்குவதற்குச் செல்கிறார். எப்பொழுது படுத்தாலும் ஒரு அரை மணி நேரம் கூடுதலாக தூக்கம் வருவதற்கு ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர் காலையில் ஏழ தாமதமாய் விடுகிறது. அவரை மேலே சொன்ன வாண்டுகள் எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள் என்பதில் தான் கதை ஆரம்பமாகிறது. மேலே சொன்னவர்களில் சாரங்கன் கொஞ்சம் அமைதியான சுபாவம். எங்களுக்கு புத்தகம் வாங்கி வரவில்லையா என்று குழந்தைகள் அவரை தொந்தரவு செய்து எழுப்பி கேட்கின்றனர். இவர் வாங்கவில்லை என்று கூற வீட்டிலிருந்து அவரது புத்தகங்களை எல்லாம் கீழே தள்ளி தேடுகின்றார்கள். பின்னர் இவரே புத்தகங்களை எடுத்து கொடுக்கிறார். சித்ராவுக்கும் சுந்தரராஜனுக்கும் என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு, என் பிரியம் உள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு என்று எழுதி என்று கையெழுத்துட்டு கொடுக்கிறார். பிருந்தாவும் தேவகியும் எனக்கு என்று கேட்க சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கி படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். 


அவ்வப்போது வந்து வீட்டில் விளையாடி பேசி மகிழ்ந்து ஆடிப்பாடி இருந்த இந்த குழந்தைகளில் பிருந்தா மட்டும் வரவில்லை. பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவளுக்கு காய்ச்சல் என்று மட்டும் பதில் வருகிறது. ஒரு நாள் இரவு எட்டு மணி போல வெளியில் அமர்ந்திருக்கிறார் அழகிரிசாமி. பிருந்தா வீட்டு வேலைக்காரனிடம் பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க, அவளுக்கு காய்ச்சல். ஒன்றும் முடியவில்லை. ஒவ்வொரு நாளாக அவள் இளைத்துக் கொண்டே செல்கிறாள் என்று கூற அழகிரிசாமி அச்சிறுமியைப் பார்த்து வர மறுநாள் ஒத்திப் போட்டாலும், மனசு கேட்காமல் உடனே கிளம்புகிறார். போய் பார்க்க அவள் மாமா மாமா என்று அன்பை கொட்டுகிறாள். அவள் அவரை விடாமல் எங்கே இருங்கள் மாமா என்று கூறும்போது மறுநாள் காலை வருகிறேன் என்று கூறிவிட்டு திரும்புகிறார். மறுநாள் காலையும் பிருந்தாவை வந்து பார்க்கிறார். சற்று நேரம் அளவளாவி விட்டுத் திரும்புகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சாரங்கன் வாங்க மாமா வாங்க மாமா என்று வீட்டுக்கு அழைக்கிறான். இவர் வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். பிறகு பிருந்தாவிற்கு ஒரு கட்டத்தில் குணமாகி விடுகிறது. இவர் வந்து சென்றதால் தான் அந்த காய்ச்சல் குணமானது என்று கூறக் கேட்கிறார். அதன் பின் சாரங்கன், பிருந்தா உட்பட அனைத்து வாண்டுகளும் அழகிரிசாமி வீட்டிற்கு வந்து செல்கின்றனர். சாரங்கன், வால்ட் விட்மன் எழுதிய ஒரு நூலை அழகிரிசாமியிடம் கேட்கிறான். நான் உனக்குச் சொல்லி இருக்கிறேன் அல்லவா இது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நீ எடுத்து படித்துக் கொள். அப்பொழுது தான் உனக்கு புரியும் என்று கூற இவன் அழுது கொண்டே தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுகிறான். மறுநாள் சாரங்கன், அழகிரிசாமியை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறான். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று சொன்னீர்களே வாருங்கள் என்று கூறுகிறான். இவருக்கு பிருந்தா அவர்கள் வீட்டிலும், தெரியாத அப்பா தெரியாத அம்மா என்ற சூழ்நிலையிலும் வழியில்லாமல் அந்த குழந்தைக்கு காய்ச்சல் என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தார். இப்பொழுது இவன் வீட்டிற்கு என்ன காரணம் சொல்லி செல்வது என்று எண்ணி மறுக்கிறார். சாரங்கன் வீட்டிலும் அவனுடைய அம்மா அப்பா தெரியாதவர்கள் என்ற நிலையில் எப்படி வீட்டிற்கு செல்வது என்று எண்ணி மறுக்கிறார். அவன் அழுது கொண்டே இருக்கிறான். சரி நான் வருகிறேன் என்று கூறி சாரங்கனின் வீட்டிற்கு செல்கிறார். சாரங்கன் அங்கு இவருக்கு உப்புமாவும் காபியும் கொண்டு வந்து தருகிறான். இவருக்கு இதை என்ன சொல்வது என்று தெரியாமல் மருந்து போல நினைத்து சாப்பிட்டு விடுகிறார். வீட்டில் அவ்வளவாக வசதி இல்லை என்பது புரிகிறது. அவனுடைய அப்பா இவரை வீட்டில் பார்க்கிறார். வாருங்கள் என்று கூறிவிட்டு அவரும் சென்று விடுகிறார். ஒரு பவுண்டன் பேனா ஒன்றை எடுத்து அழகிரிசாமியிடம் கொடுத்து சாரங்கன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.


கதையின் ஆரம்பத்தில் "இரவில் வெகு நேரம் கண்விழித்தால் உடம்புக்கு கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது மாமா" என்று சாரங்கன் கூறுவதை இந்த இடத்தில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதிகம் பேசாத சிறுவன் படிப்பில் சிறப்பாகவும் இருப்பான் என்பதை இவ்விடத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு அன்பளிப்பு கிடைக்காத இடத்தில் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்வார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் என்ன விதமாக யோசிப்பார்கள் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பிருந்தா தன்னுடைய உடல் நலன் தேறியதற்கு காரணம் அழகிரிசாமியின் அன்பு என்பதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.


நூலில் இருந்து,

"உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போல பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டு பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்த சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டு உணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்".


வாசிக்க வேண்டிய கதை.

ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்

 


ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...

ப.நடராஜன் பாரதிதாஸ்

ஆதி பதிப்பகம்

பக்கங்கள் 96

விலை: ரூ 100


பேரக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல என்பது போல் தொகுப்பின் தலைப்பே ஒரு கதாநாயகத் தன்மை அளித்துவிடுகிறது. கவிஞருக்கு வாழ்த்துகள்.

கவிஞர் EMS கலைவாணன் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிற்குப் பின்னர் நாவிதர்களின் வாழ்க்கைப்பாட்டைக் கூறும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு. சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு கவிதையிலும் பூடகமாக சில விஷயங்களை உள்ளே வைத்து இருப்பார்கள் என நினைத்து அதை வாசித்து பொருளைப் புரிந்துகொள்ளும் முன்னர் தாவு தீர்ந்துவிடும் நவீன காலச் சூழலில் இதுதான் கவிதை. இதுதான் அது வெளிப்படுத்தும் கருத்து என்பதை வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


பொதுவாக தொகுப்பை விமர்சனம் செய்யவோ மதிப்புரை செய்யவோ தொகுப்பிலிருந்து ஓரிரு கவிதைகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். இத்தொகுப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மைக் கவிதைகள் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட வேண்டியதாக அமைந்திருப்பது சிறப்பு. ஊரின் வரலாற்றைக் கூறி வளர்த்த பாட்டியிடம் நாவிதர்களுக்கான வரலாறை அறிய நினைக்கும்போது செத்துப் போனதால் அந்தப் பணியை தான் மேற்கொண்டிருப்பதாகக் கூறி தன்னுடைய முதல் கவிதையைத் தொடங்குகிறார். மனிதனை மனிதன் எப்போது மதிக்கவில்லையோ அப்போதே இங்கு பிளவுகளும் உண்டாகிவிட்டது. அதற்கு இனக்குழு, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. இருக்கிற எல்லாச் சாதியிலும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாடகத்தில் துரியோதனன் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர் 

“அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க

கஜபலம் புஜபலம் பொருந்திய 

என்னைப் பார்க்கின்ற தருணத்திலே

என் நாமதேயம் என்னவென்று தெரியுமாடா

அடேய்! காவலா” என்கிறார். 

அதற்கு கட்டியக்காரன் வேடம் தரித்த உள்ளூர் கோபால்,

“ஏன் தெரியாது

ஊடு ஊதா போயி செரச்சி

ஊருசோறு எடுத்துத் திங்கற

எங்க ஊரு அம்பட்டன்னு 

நல்லாவே தெரியுமுங்க” என்றவுடன் 

கூட்டமே கொள்ளென்று சிரித்தது.

“அன்றிலிருந்து வேசம் கட்டுவதே இல்லை அய்யா” என்று கவிதையை முடிக்கிறார் கவிஞர். சாதியின் எகத்தாளத்தை இவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்வது அரிது. ஆனால் அதனைச் செய்திருக்கிறார் கவிஞர்.


சுயசாதிப் பகடி பல கவிதைகளில் நர்த்தனம் ஆடுகிறது. ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் ஊர் பண்டிதர் பழனி சாங்கியம் செய்தால் செத்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என நினைக்கும் ஊரில் 

“அவர் செத்த அன்னிக்கு

நாலு ஊரு நாவிதனும்

கோமணம் போறது தெரியாம குடிச்சிட்டு

நாலு ஊரு சாங்கியம் சடங்குகளையும் செய்து

நாசகோசம் செய்தார்கள்.

அய்யா கடைசில

சொர்க்கம் போனாரா

நரகம் போனாரான்னு தெரியல’’ என முடிகிறது கவிதை. நாங்க ஆண்ட சாதி, அப்படி இப்படி என்று பறைசாற்றும் வேளையில் (மருத்துவர் என்றும் நாவிதர் என்றும் அழைக்கப்படும் சமூகம் அப்படிச் சொல்லுவதற்கும் உண்மைக் காரணங்களை அடுக்கும் கவிதைகளும் உண்டு) ஒரு இறப்பின் வாயிலாக இன்றைய தலைமுறை குடிக்குள் சிக்கிக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


காலமெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒருவனின் தலைமுறை அவனைப்போலவே இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன? அப்படி அடிமைப்படுத்தி வைக்க அவன்மேல் வைக்கப்பட்ட புனித பிம்பங்கள்தான் எத்தனை எத்தனை? தொடர்ச்சியாக பல பாராட்டுகளைச் சொல்லிக்கொண்டு வரும் கவிஞர் இறுதியாக 

“அடிச்சாலும் வாங்கிக்குவான்

புடிச்சாலும் தாங்கிக்குவான்

ஆந்தாந்து பேசிக்கொண்டார்கள்


அய்யாவின் சாவிற்குப் பிறகு

இப்படிப்பட்ட நாவிதனைத்தான்

தேடிக்கொண்டிருக்கிறது

எங்க ஊர்”

எப்படிய்யா கிடப்பான் இக்காலத்தில். கிடைக்கமாட்டான். கிடைக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்றுணர்த்துகிறது வரிகள்.


எல்லா ஊரிலும் சுடுகாட்டில் குழி தோண்டுவது, கொள்ளிச் சட்டி உடைச்சு விடுவது, இறந்தவனின் வாரிசுக்கு மொட்டை எடுப்பது போன்ற பலரை நடத்தும் விதமும் அவர்களுக்கு கேட்கும் பணத்தைக் கொடுக்காமல் மிகச் சொற்பமான தொகையைக் கொடுப்பதும் சுடுகாடு வரை போய்வரும் நபர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை 

“கட்டளைக்காசு ஏத்திக் கொடுங்கன்னா

கட்டளைக்காசுக்கு கள்ளநோட்டுதான்டா அடிக்கணும்

என்றார்கள் ஊர்க்காரர்கள்.


பதினோராம்நாள் 

கல்தொரையில்

அய்யர் கேட்கும்போதெல்லாம்

கேட்டா கேட்ட காசு

அம்பது நூறுயென அவுத்து அவுத்து கொடுத்தார்கள்.

ஊர்ல கள்ளநோட்டு

அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கபோல” என்கிறார். ஆள் பார்த்து பட்டுவாடா செய்யப்படும் பணத்தைப் பற்றியும் அங்கு நாவிதர்களைப் படுத்தும்பாட்டையும் உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் கவிஞர்.


ஊர்க்காரங்களுக்கு முடிவெட்ட ஆள் வேணும் என்பதற்காக சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பக்கூடாது என்பதை மகனுக்குக் கூறுகிறார் ஒரு தந்தை  இப்படியாக.

“நீதான் வெட்டணும்

நீயேதான் மீசை வைக்கணும்

உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னு

பிஞ்சு மனசுல நஞ்ச விதைப்பார்கள்

நம்பிடாதே மகனே


பதினைந்து வயதில்

என்னை படிப்பை இழக்கச் செய்தது

இதே உசுப்புதான்

இதே பசப்புதான்...”


32வது கவிதையில் முதல் பத்தியில் சனாதன நபர்களைப் பற்றிக் கூறுவது போலவும் இரண்டாம் பத்தியில் கம்யூனிஸ்ட் நபர்களைப் பற்றிக் கூறுவது முரணாக இருப்பதாகப் படுகிறது. ஒரு ஆறையே ஆட்டையப் போட்ட அரசியல்வாதியைப் பற்றிய கவிதை அபாரம். இப்படிப் பல கவிதைகள். சமகால அரசியலையும் உள்வாங்கிப் பேசும் கவிதைகள். 


வாழ்த்துகள் தோழர் ப.நடராஜன் பாரதிதாஸ்.

மீண்டும் ஒரு கவிதை...

“நாங்கள் பேசாத 

அரசியல் இல்லை

எங்களைப் பேசும்

அரசியல் தானில்லை


டீக்கடை வச்சா

முதல்வராக முடியுது

பிரதமராக முடியுது

சவரக்கட வச்சவனுக்கு

சாகரவரைக்கும்

ஒரு வார்டு மெம்பருக்குக் கூட

வக்கில்லையோ”

ஜனநாயகத்தின்மேல் கல்லெறியத் தேவையற்ற ஒரு சூழலை எந்தச் சமூகமும் பெறவேண்டும். அதற்கு, எல்லாம் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதுவரை தோன்றட்டும் இது போன்ற புரட்சிக் கவிதைகள்.


யாழ் தண்விகா

Wednesday, 16 July 2025

அடைமழையில் வெப்பம்



அடைமழையில் வெப்பம்

கவிதைத் தொகுப்பு

மகி தமிழ்


பன்முகம் வெளியீடு


      தமிழ்ச் சமூகம் பல காலங்களில் பல காரணங்களுக்காக பல தடைகளைத் தனக்குத்தானே வகுத்துக்கொண்டு அதைக் கடைபிடிக்க ரொம்பவே தடுமாறித்தான் போகிறது.  


     முத்தம் அப்படியான ஒன்றுதான்

ஒரு தாய் தனது குழந்தைக்கு

ஒரு சகோதரி சகோதரனுக்கு

காதலர்கள் தங்களுக்கு இடையே

கணவன் மனைவிக்கு

போருக்குச் செல்லும்போது வாளுக்கு முத்தமிட்டு 

நெற்றியில் முத்தமிட்டு

என கால காலமாகத் தொடர்கிறது முத்தம்.


      தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் போல நாம் முத்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் 


      ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு காதலன் காதலிக்கு முத்தமிடும்போது ஒரு பூ இன்னொரு பூவை உரசுவது போல, இரு பறவைகளின் அலகுகள் உரசிக்கொள்வதைப் போல காண்பித்து முத்தத்தின் மகிமையை அறியாமல் செய்துவிட்டனர். அந்த மகிமைக்கு எந்தப் பங்கமும் வராத அளவுக்கு மகிதமிழ் முத்தத்தைக் கொண்டாடி இருக்கிறார் தன்னுடைய கவிதைகளில்...


       முத்தம் என்பது தொடக்கம். முத்தம் என்பது வாழ்தல். முத்தம் என்பது நிறைவு. அது ஒரு மகோன்னத நிலை. அதற்கு வஞ்சகம் செய்யக்கூடாது. அதைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தால் அதை தப்பித் தவறியும் கவிஞரிடம் சொல்லிவிட்டால் சண்டைக்கு வந்துவிடுவார்போல.

 

பாரதி கூறுகிறார் 

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானம் உண்டாம் சிற்ப முதல் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்

காதலினால் சாகாமலிருத்தல்கூடும்

கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்


       சாகாமலிருக்கக் காதலிக்க வேண்டும் என்கிறார் பாரதி.

அதைத்தான் கவிஞரும் சொல்கிறார்

சகலமும் நான் செய்கிறேன்

காதலை மட்டும் நீ செய் என்று. 


        அணு அணுவாகச் சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் என்பது சரியான வழி தான் என்பார் கவிஞர் அறிவுமதி. ஆனால் கவிஞர் அணு அணுவாக வாழவும் காதல் என்பது சரியான முடிவு என்பதை தன்னுடைய வரிகளால் நிரூபித்திருக்கிறார்.


"நான் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறேன்

நீ எதுவும் சொல்லாமல் 

என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்


நீ பேசும் அத்தனை வார்த்தைகளும்

என் வார்த்தைதான் அன்பே"


      வாழ வேண்டிய வாழ்க்கை இது. வீட்டுக்குள் அமர்ந்து என்னதான் காரண காரியம் இல்லாமல் பேசிப் பொழுதைக் கழித்தாலும் எப்படியாவது சண்டை வந்துவிடுகிறது. காதலைப் பேசிப் பொழுதைக் கழித்தால் மனமும் நிம்மதியாகும். வாழ்வும் மகிழ்வாகும்.


"இரவு பற்றியும் சொல்கிறேன்

கொஞ்சம் இதழ் பற்றியும் 

இரவு கொஞ்சம் இறுக்கமானது..."

வார்த்தைகளில் விளையாடி இருக்கிறார் கவிஞர். சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் லதா பாடும் பாடல். கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் என எம்ஜிஆர் பாட லதா கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் என அந்த வரிகள் வரும். டி ராஜேந்தர் ஒரு பாடலில் முதலில் கதாநாயகன் லைட்ட அணைக்கட்டுமா லைட்டா அணைக்கட்டுமா எனக் கேட்க லைட்ட அணைக்காதீங்க லைட்டா அணைக்காதீங்க என கதாநாயகி பாடுவது போல பாடலை எழுதியிருப்பார். இரவைப் பற்றிக்கொண்டும் இதழைப் பற்றிக்கொண்டும் இருந்தால் தனிமை இறுக்கமாகாதா... 


      ஒரு ஆணின் மூர்க்கம் காதலிலும் காமத்திலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் இருப்பாள் என்ற கற்பிதத்தை உடைக்கும் கவிதை.

இரவுகளில் 

கருணை விரும்பாத

ஆகச்சிறந்த கடவுள் அவள்.

மூர்க்கம் எதிர்பார்க்கும் சாத்தான் அல்ல. கடவுள் என்கிறார். காதல் உள்ள இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள், அவளாகவும் இருப்பாள் என்ற பொருளில். 


"உந்தன் வார்த்தைகளை

மொழிகொண்டு சொல்ல முடியவில்லையென்றால்

முத்தத்தில் சொல்லலாம்

அந்த பாஷை 

எனக்கு நன்றாகவே தெரியும்"


"நல்வார்த்தையில் காதல் செய்யச் சொல்கிறாய்

முத்தங்களைத் தவிர வேறென்ன செய்ய"


"இன்னும் புரியவில்லையென்றால் உறங்கிவிடு

நாளை முத்தங்களுடன் தொடங்கிக்கொள்ளலாம்"

சூரி போட்டிக்குப் பரோட்டா சாப்பிடும் நகைச்சுவை நினைவுக்கு வந்தது. விளையாடுவதை எல்லாம் விளையாடுவராம். புரியவில்லை என்றால் இங்கு விட்டுவிடுவதில்லை

வா நாளை

முத்தங்களுடன் தொடங்கிக்கொள்ளலாம்... அருமையான யோசனை...


வாத்ஸாயனர் தன்னுடைய காமசூத்ராவில் முத்தமிடுதல் பற்றி சும்பண விகல்பம் பகுதியில் ஆறாவது சூத்திரத்தில் குறிப்பிடுகிறார். நெற்றி, நெற்றியின் சுருள்முடி, கண்கள், கன்னங்கள் இப்படிமுத்தமிட ஏற்ற இடங்களாக எட்டு இடங்களைக் கூறுகிறார். ஏழாவது சூத்திரத்தில் நான்கு இடங்களைக் குறிப்பிடுகிறார்.


சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்று சொல்லியே பல கலைகளை அறியாமல் போய்விட்டது இந்த சமூகம். சொல்லித் தெரிந்துகொள்வதுதான் மன்மதக்கலை என்பதை உணர வைக்க ஒரு உதாரணமாக மகி தமிழின் அடைமழையில் வெப்பம் என்ற இந்த கவிதை நூலைக் கூறலாம்.


தமிழறிஞர் வசுப மாணிக்கம் எழுதிய வள்ளுவம் என்ற நூலில் ஆறாம் பொருள் ஆகிய இரண்டு பால்களைக் காட்டிலும் இன்பத்துப்பால்தான் அழுத்தமான நடையாட்சியைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால் அவர் இதற்காக இந்நூலில் பத்துப் பக்கங்கள் கூட ஒதுக்கவில்லை

. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராஜாஜி காமத்துப்பாலைத் தொடவே இல்லை

வீரமாமுனிவர் உரை எழுத காமத்துப்பாலைத் தொடவே இல்லை

குன்றக்குடி அடிகளாரும் அப்படியே.

கலைஞர் காமத்துப்பாலுக்கான உரையில் விளையாடி இருப்பார்.


இங்கு மகிதமிழ் முத்தத்துக்கான இடங்களை, முக்திக்கான நிலைகளை கவிதையாக்கிக் காண்பித்திருக்கிறார்


"கடக்கவியலா நீள்துயரம் நீ"

அவ்வளவுதான் கவிதை. இந்தக் கவிதையை வாசிக்கும்போது

கவிஞர் கருவாச்சி கனகம் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.

"அதிர்வேதுமற்று

உன் பெயரைக் கடக்க முடிகிற நாளில் 

கைவிடக்கூடும் இந்த வாழ்வையும்".

காதல் என்பது வெறும் உடல் சார்ந்ததா... நிச்சயமாக இல்லை என்னும் வரி இது. கடக்கவியலா நீள் துயரம் நீ.

காதலுக்காக எதையும் இழக்கத் துணியும் மனம். 


"நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான் ஒவ்வொரு முறையும் கடவுளிடம் வேண்டுகிறேன். ஏனென்றால்

என் பிரார்த்தனைகள் ஒருபோதும் நிறைவேறுவதில்லை" என்பது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை. கடவுளும் கைவிட்ட நிலையில் கடவுளிடம் என்ன வேண்டுவது... சேர்த்துவை என்றால் சேர்த்துவைக்க மறுக்கிறாய்... சேரக்கூடாது என்று வேண்டினாலாவது கடவுள் சேர்த்து வைப்பார் என்ற எண்ணம். அதுதான் காதல். 


அதைத்தான் கவிஞர் இப்படி வெளிப்படுத்துகிறார்

"எதனைக்கொண்டு பிரித்தெடுக்க

உந்தன் நினைவுகளையும்

அதில் இரண்டறக் கலந்த எந்தன் காதலையும்..."


மேலும்


"கொலை பசியில் இருக்கிறேன்’’

முத்தங்களைச் சமைத்துக்கொடு"


"இரவல் தந்ததாகவே நினைத்துக்கொள்கிறேன்

இம்முத்தங்களை"


"எந்தன் தேகம் கிழித்த அவள் விரல் நகத்தில் எத்தனை காயங்களோ"


இதுபோல் இன்னும் பல கவிதைகள். இது தீவிரமா மிதவாதமா எனத் தெரியாத அளவுக்கு ரசனையாக தன்னை வெளிக்கொணர்ந்துள்ளார் கவிஞர். 


விடை தந்து விலகியபின்

கைகளையசைத்து முத்தமிடுகிறாய்

உள்ளம் குளிர்கிறது

உதடுகள் மட்டும் நெருப்பைச் சுமந்தபடி... என்று வலி சுமந்திருக்கும் கவிதையும் இருக்கிறது.


நீ காதலிக்காவிட்டால் என்ன

ஒரு பக்கம் பற்றினாலும் அது நெருப்பு தான் என்பார்

அப்துல் ரகுமான். இங்கு இருபக்கக் காதல். வலி சுடாதா என்ன...


அடைமழையில் வெப்பம்

முத்தங்களை நிறுத்தாதே...

தொகுப்பின் தலைப்பில் உள்ள கவிதை...

காதல் காலத்து வெப்பம்

இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது

பேரன்பாக காமமாக

கவிதைகளை நிறுத்தாதே...

மகிதமிழ்... கவிதைகளை நிறுத்தாதே...


வாழ்த்துகள்.


யாழ் தண்விகா

ஓசை புதையும் வெளி


ஓசை புதையும் வெளி

#கவிதைத்தொகுப்பு

#தி_பரமேசுவரி


கால நதி சில பெரும் வெள்ளோட்டத்தையும் சில பாலையையும் சிலபல இயல்பான பயணத்தையும் எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு சிறு சருகு காற்றிலோ நீரிலோ நிலத்திலோ அலைவுறும் தருணத்தில் சருகின் உள்ளோடும் வாழ்வின் நிலையற்ற தன்மையானது எத்தகைய துயர்களைக் கொண்டிருக்கும்... அதன் வலிகளை இயல்பின் மொழிகளில் எடுத்தாளும் தீட்சண்யம் கவிஞனின் மொழிகளில் படர்ந்து கிளைத்திருக்கிறது. அத்தகைய கிளைத்தலுக்குரிய மொழி லாவகம் உடைய கவிஞராக #ஓசைபுதையும்வெளி கவிதைத்தொகுப்பின் ஆசிரியர் #தி_பரமேசுவரி அவர்களை கூறலாம்...


இயல்புக்கு அப்பாற்பட்ட எதையும் புனைவென்று கூறி பக்கங்களைக் கடத்தும் உத்திகளற்று நம் வாழ்வின் யதார்த்தங்களை கவிதைகளில் பதிவிட்டுள்ளார் கவிஞர்...


சிறகுகள் கோதும் சாளரம் என்று தலைப்பிட்ட கவிதை.

"மேலும் தீட்டிக் கூராக்குகிறது

சிறிய மூக்கை

தொட்டி நீரில் அமிழ்த்திக்

கோதுகிறது சிறகுகளை

தானியங்களைக் கொத்தியும்

நீர் குடித்தும் பறந்தும்

விழுந்தும் அணைத்தும்

செய்யும் சில்மிஷங்கள்

குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்

செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை


சன்னலில் பதித்த முகத்தில்

பதியும் கோடுகள்


வலிக்க வலிக்க

ரசித்துக்கொண்டிருக்கிறாள்..."


ஒரு பறவையின் வாழ்வு, அதன் பறத்தலும் பறத்தல் நிமித்தமுமான வாழ்வின் கணங்களின் கூறொன்றை பார்க்கும் ஒரு பெண்ணின் ஏக்கங்கள் கவிதை வரிகளில் முகத்தில் பதியும் கோடுகளாக்கப்பட்டிருன்றன விடுதலைக்கான வலியின் வார்த்தைகள் இவை.


துரோகத்தின் பாஷை நேரடியாக நம்மை அணுகும்போது சிலிர்த்ததிரும் உடலின் வலிகளை உதிர ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர்.

"ஆதரவு தேடித்

தோள் சாய்கிறேன்

அடி வயிற்றில்

கத்தி செருகுகிறாய்

சிதறும் துளிகள் கொண்டு

தீட்டுகிறேன் உன் ஓவியம்..."


எத்தனை வரையறைகள் கொடுத்தாலும் காதலுக்கான வரையறை அவரவர் பார்வையில் ஆகச் சிறந்த பொறுத்தமாகவே அமைந்து விடுகிறது. இது கவிஞரின் விளக்கம்...

"காயமுற்று விழுந்த புறாவின்

சிறகு தடவி

பயம் தணித்து

வலிக்காமல் தலை திருகும்

உன் மென்மைக்கும்

காதல் என்றுதான் பெயர்"


இயல்பாக கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக நாம் நினைப்பவற்றையும் கவிஞரின் பார்வையில் கண்ணாடி மதிலில் பதிவிடுகிறார் இப்படியாக...

"கண்ணாடிச் சில்லுகள்

பதிக்கப்பட்ட மதில்களில்

சிறிதும் சேதாரமின்றி

நகர்கிறது நத்தை

மௌனத்தின் இடைவெளிகளை

இட்டு நிரப்பியபடி"

இந்த மௌனத்தின் இடைவெளிகள் என்பதில் இட்டு நிரப்பவேண்டிவைகள் என என்னென்ன நாம் வைத்திருக்கிறோம் என்பதை நம் மனம் ஒன்றே அறியும்.


ஓசை புதையும் வெளி என்ற தலைப்பிலான கவிதை.

"உரக்கப் பேசுவதாய்க்

கோபப்பட்டாய்

மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்

குற்றம் சாட்டினாய்

புணர்ச்சியில் கூட முனகல்கள்

தெருவெங்கும் இறைவதாய்

எரிச்சல்பட்டாய்

வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்

உனக்குள்

வெந்நீர்க் கொப்புளங்களையே

உருவாக்கின எப்போதும்

மெல்ல அடங்கிய என் சப்தங்கள்

புதைக்கப்பட்டன உன் வெளியில்"

ஒரு காதலாலோ நட்பாலோ தன்னை தொலைக்கும் உறவின் வலியோ இன்பமோ என்பது சொல்லி மாளாதது. தன்னைத் தொலைத்தல் என்பதைத் தொடர்ந்து நிகழும் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள், அதனாலான வேதனைகள் ஆகியனவற்றை அனுபவித்தும் அதனை இயல்பாக்கிக்கொள்ளும்

ஜீவனின் வெளி இது.


நகர மயமாதல், சந்தேகம், வாழ்வு, சுயம், கலவி, இன்னும் பல தலைப்புகள் மற்றும் சில ஹைக்கூ கவிதைகள் என நிரம்பிக்கிடக்கிறது தொகுப்பு. வாசித்தறிவோம் கவிஞரின் ஓசை புதைந்திருக்கும் கவிதை வெளியை...


வாழ்த்துகள் #கவிஞர்தி_பரமேசுவரி


#யாழ்தண்விகா

Wednesday, 2 July 2025

Super Star பாரதிதாசன்

 


சூப்பர் ஸ்டார் பாரதிதாசன்


பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்பதில் புரட்சிக்கவிஞர் என்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தேன். அவரோட முழுப்பெயர் சார் அது என்றனர். எது முழுப் பேரா? அடேய் சூப்பர் ஸ்டார் என்று சொல்லுவாங்கல்ல. அது யாரு என்று கேட்டேன். சார் ரஜினிகாந்த் பெயர் சார் அது என்று கூறினர். அடுத்து தளபதி என்று யாரடா சொல்லுவீங்க என்று கேட்டவுடன் உடனே விஜய் என்று பதில் வந்தது. அடுத்து அவர்கள் சார், தல நம்ம அஜித் சார் என்றனர். என்னடா பாடத்துல வர்றவங்க பேரு தெரிய மாட்டேங்குது. நடிகர்கள் என்றவுடன் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். சார் இவங்க எல்லாம் பெரிய ஆளுங்க சார் என்று கூற திகைத்துப் போய், இது வில்லங்கமாவுல்ல இருக்கு. நடிகர்கள பத்தி சொன்னா இவ்வளவு தீவிரமா இருக்காங்க. பாடத்தில் உள்ள தலைவர்களைப் பற்றிக் கேட்டால் இப்படி சொல்றாங்களே.... சரி. நேருவுக்கு  மனிதருள் மாணிக்கம் என்ற பட்டம் இருக்கு. காமராஜருக்கு கர்மவீரர் என்ற பட்டம் இருக்கு. பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டம் இருக்கு. பாரதிதாசனுக்கு புரட்சி கவிஞர் என்ற பட்டம் உண்டு. இதுபோல தலைவர்களுக்கு என்று சில பட்டங்கள் இருக்கு. நாம் பட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  சார் இதை நீங்க முன்னாடியே சொல்லக் கூடாதா, போங்க சார் என்றனர் மாணவர்கள். 


அதுக்கடுத்து ஒரு இடி. பாரதிதாசன் அப்படின்னா யாருன்னு கேட்டேன். கேட்டவுடன், அவரு தான் பாரதியார்ன்னு சொன்னாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. டேய் பாரதிதாசன் அப்படின்றவர் வேற. பாரதியார் அப்படின்றவர் வேற. பாரதியார் மேல அளவுகடந்த பாசம் வச்சிருந்ததனால் கனகசுப்புரத்தினம் அப்படின்ற இவரு பேர பாரதிதாசன் என்று வச்சிக்கிட்டாரு. பாரதியார் மீசையை முறுக்கி வைத்திருப்பார் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார். ஆனால் பாரதிதாசன் அப்படி அல்ல. இப்பொழுது பாரதிதாசனை பாருங்கள் என்று படத்தைக் காட்டினேன்.


மாணவர்கள் மத்தியில், ஒரு சூப்பர் ஸ்டாராக பாரதிதாசன் என்ற நிலை வரவேண்டும்.


பெ.விஜயராஜ் காந்தி

காற்றால் நடந்தேன் - சீனு ராமசாமி


 

காற்றால் நடந்தேன்

சீனு ராமசாமி 

என் சி பி எச் வெளியீடு 

100 ரூபாய் 

96 பக்கங்கள்


தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் கவிஞர். தோழர் சீனு ராமசாமியை கவிஞராக நான் வாசிக்கும் முதல் நூல் காற்றாய் நடந்தேன். கவிஞராக தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் எனலாம். வாடகை வீடு குறித்து பேசுவது என்றால் மேலாக சந்தோசம் தென்பட்டாலும் உள்ளூர வருத்தம் இழையோடும். வீட்டில் உரிமையாளர் அருகில் இல்லாவிட்டால் அந்த சுகமே சொர்க்கம். இந்த கவிதையை பாருங்கள் இரண்டு பேருக்கு மேல் தங்க அனுமதி மறுக்கப்பட்ட ஒரு வாடகை வீடு என்ன செய்ய இயலும்?

"நகர வீட்டு உரிமையாளரின் 

நீர் செலவீடு பற்றிய நிபந்தனையாலும் 

இரண்டு பேருக்கு மேல் 

தங்க அனுமதி மறுக்கப்பட்ட 

இரவில் 

பையுடன் வந்து நிற்கிறான் 

என்ன சொல்லி 

திருப்பி அனுப்புவது 


கனவுகளும் 

கற்பனைகளும் 

நம்பிக்கைகளும் 

கண்களில் ஒளிரும்

வளரிளம் பருவத்து 

என் சிற்றூர் தம்பியை..."


கட்டிடங்கள் கட்டி முடித்தபின் அழகாக இருக்கும். அதுவரை இப்படித்தான் என்று கூறுவார்கள் என்று பொதுவாக கூறுவது உண்டு. ஆனால் எதற்காக அப்படி சொல்லுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. தோழரின் கவிதை ஒன்று. பால் சுண்ணாம்பு என்னும் தலைப்பில்... "சுவர் பூசாத கட்டிடத்தில் 

கிடந்த உள்ளாடையின் 

பின்புறத்தை இணைக்கும் கொக்கிகளுக்குப் பதிலாக ஊக்குகள்

கொக்கிகளுக்குப் பதில் எப்படி

ஊக்குகள் வந்தன 


அது தனிக்கதை 

தனிக்கவிதை" 

சொல்ல வந்ததை பூடகமாக கவிதையில் வைக்கும் லாவகம் தோழருக்கு இயல்பாக கைகூடி வந்துள்ளதை காணலாம்.


குழந்தைகள் பெற்ற இல்லத்தில், குழந்தை முழித்திருக்கும் சமயம் சந்தோஷத்திலும் தூக்க நேரத்தில் சந்தோஷ அமைதியாகவும் இருப்பதை காணலாம். அந்தச் சமயத்தில் நடக்கும் செயல்களை உருவ ஒற்றுமை என்ற தலைப்பில் தோழர் காட்சிப்படுத்தியுள்ளதை காண்போம்.

"குருவி நடப்பது 

குருவி பறப்பது 

குருவி சிறிய அலகுகளால்

தானியத்தை உண்பது 

குளிரில் நடுங்குவது 

பதற்றமாக இங்குமங்கும் 

பார்ப்பது 

அறைக்குள் நுழைவது 

இவை யாவும் 

மகள் பிறந்த வீட்டில் நடக்கிறது...

உயர்திணை மட்டுமல்ல அஃறிணையாக வீட்டுக்குள் இருந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி "அடடா" என்று வியக்க வைக்கிறார்.


இன்னொரு கவிதையில் நிழல் கொலை பற்றி கூறும்பொழுது 

"தெருவில் தன் நிழல் அழிக்க தரையைத் தடவுகிறான் 


நிழல் 

தன் அழிவைக் காண முடியாது கெஞ்சுகிறது 


விளக்கனைத்த நொடியில்

அழியா நிழலோ 

இருளில் பதுங்கி 

உயிர் பிழைத்தது" 

என்று நிழலுக்கு ஆதரவாக நிற்கிறார்.


எனது ஆட்டம் என்பது கவிதையில்

"உனது துரோகத்தை ரகசியமாக

நான் அறிந்த பிறகு 

பழிவாங்கும் நடவடிக்கையாக மனதால் விலகியும் 

உடலால் இரக்கமின்றி இணைவதுமாகத் தொடங்கியது

எனது துரோகத்தின் ஆட்டம்" என்கிறார். இதில் துரோகம் எதுவென்பதைப் பொறுத்து உடலால் இரக்கமின்றி இணையும் படலம் தொடரும். 


"பூவும் 

காயும் 

கனியும் 

காடென 

பூத்துக் குலுங்கும் 

சிறு தெய்வக் கோவிலின் 

வெண்கல மணி நாவுகளை இசைக்கிறாள் 


பிள்ளை வரம் வேண்டிப் பெண் தெய்வங்கள்

அலைந்திருக்குமாயென அறிந்ததில்லை... 

இது தெய்வ அலைச்சல்"

பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்களை வேண்டும் பெண்கள், பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்கள் அலைந்திருக்குமா என்று என்றாவது யோசித்து இருப்பார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். 


இன்னும் இது போன்ற கவிதைகள் தொகுப்பு எங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. தாராளமாக வாசிக்கலாம் தோழரின் கவிதை எழுத்துக்களை. 


பெ.விஜயராஜ் காந்தி

பெரியோன் - ராஜிலா ரிஜ்வான்



பெரியோன் 

ராஜிலா ரிஜ்வான் 

நாற்கரம் வெளியீடு 

நூற்று எழுபது ரூபாய்

136 பக்கங்கள்

 

புதினா போட்டி 2024 குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல்.


சாரா, ஆமினா, தேவி, மேனகா, சுமையா, தேவ், சதீஷ் மற்றும் அபூபக்கர் மதுரையில் சேர்ந்து பி.எட். காலேஜ் படித்து வருகிறார்கள். பி.எட். பயிற்சி காலம் முடிந்தவுடன் ஒவ்வொருவர் வீடாக இரண்டு இரண்டு நாள் தங்கி மகிழ்வை வெளிப்படுத்துகிரார்கள். கடைசியாக சாராவின் வீட்டில் பயணம் முடிகிறது. இவ்வாறு பயணம் முடிந்த பின் இனி அடுத்து அவரவர் திருமணத்தில் நாம் சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சாராவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயதார்த்தத்தை வைத்துத்தான் வில்லங்கம் தொடங்குகிறது. 


சாரா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண். சதீஷ் இந்து மதத்தைச் சார்ந்தவன். இருவருக்கும் காதல் உள்ளது தெரியவருகிறது சாராவிற்கு திருமணம் நிச்சயம் என்னும் பொழுது தான் சதீஷிற்கு அவள் மேல் காதல் வருகிறது. சாராவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யும்பொழுது தான் சதீஷ் மேல் காதல் வருகிறது. இந்த காதல் கைகூடியதா என்பதுதான் மீதிக்கதை. சமகாலத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனையை வைத்து எவ்வளவோ பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த காலகட்டத்தில் காதல் திருமணம், அதுவும் இந்து முஸ்லிம் திருமணம் என்பதை நாவலில் கொண்டு வந்தமைக்காக தோழர் ராஜிலா ரிவ்வான் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அபூபக்கர் சதீஷ் நம்பர்களில் வரக்கூடிய ஒரு முஸ்லிம் இளைஞன். ஆமினா, சுமையா சாராவின் நண்பர்களாக வரக்கூடியவர்கள். இவர்கள் இந்த காதலை வேண்டாம் என்று கூறினாலும் சாராவின் பெற்றோரிடம் கூறுவதைப் போல ஒரு காட்சிகூட இல்லை. இது முரணாக உள்ளது. அப்துல்லா, சாஜிதா இருவரும் சாராவின் பெற்றோர். இவர்கள் இருவரும் மகளின் மேல் பிரியமாக இருக்கிறார்கள். இந்த பிரியத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்துமாறு ஏதாவது காட்சி அமைப்புகள் வைத்திருக்கலாம். முத்துகிருஷ்ணன் லட்சுமி இவர்கள் சதீஷின் பெற்றோர்கள். இவர்கள் வீட்டில் ஒரு கலப்பு திருமணம் நடக்கிறது. சதீஷ் அக்காள் கலப்பு திருமணம் செய்வதால் வீட்டை விட்டு விரட்டப்படுகிறாள். இச்சூழலில் சதீஷும் காதல் திருமணம் செய்ய முயற்சி செய்கிறான். இரண்டு குடும்பங்களும் கடைசியாக காவல் நிலையத்தில் சந்திக்கிறது. அங்கு காதல் கைகூடியதா என்பதை ஒரு நீள் வசனம் போல் கொண்டு செல்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமா என்ற பதட்டத்தை கொண்டு வரும் காட்சிகள் இல்லை. பெரியோன் நாவலில் வரும் சமூகம் இங்கு உருவாக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரு மதத்திற்கு உள்ளே ஜாதியை வைத்து மோதல், வேறு மதம் என்றால் மதங்களுக்கு இடையே மோதல் என்பன போன்ற சிக்கல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் வருகிறது. சதீஷின் சித்தப்பா, பயாஸ் கேரக்டர்கள் இன்னும் பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியான சமூகம் உருவாக என்றைக்கும் எதிராக இருப்பார்கள். இவர்களை எல்லாம் மீறி நல்லபடியாக வாழ வேண்டி இருக்கிறது. 


முதல் நாவல். நல்ல துவக்கம். வாழ்த்துக்கள் தோழர். 


பெ.விஜயராஜ் காந்தி 

நாத்திகனின் பிரார்த்தனைகள்



நாத்திகனின் பிரார்த்தனைகள்

அகரன் 

திராவிடியன் ஸ்டாக் வெளியீடு

88 பக்கங்கள் 

99 ரூபாய் 


நூலின் பெயரை கேட்டவுடன் பலருக்கு கைத்தடி ஞாபகம் வந்து போகும். அந்த அளவிற்கு தந்தை பெரியார் பெயர் மூலை முடுக்கெல்லாம் பதிந்து போய் உள்ளது. தோழர் அகரனுக்கு இரண்டாவது நூல். முதல் நூல் பொன்னி, சிறுகதை தொகுப்பு. இரண்டாவது நூல் நாத்திகனின் பிரார்த்தனைகள், கவிதைத் தொகுப்பு. பெயருக்கு ஏற்றவாறு பல கவிதைகள் புத்தகத்தில் உள்ளன.


கடவுள் வாழ்த்தைப்போல பெரியார் வாழ்த்தோடு நூல் தொடங்குகிறது. போதி மரத்தடி, பிணாக் கூற்று, சாலை மனிதனின் பிரதிநிதி ஆகிய மூன்று பிரிவுகளாக கவிதைகளை பிரித்துத் தந்திருக்கிறார் தோழர்.


கடலைப் பற்றி எப்போது பேசுவதோ எழுதுவதோ இருந்தாலும் ஒரு அச்சம் சூழ்ந்து கொள்ளும். சுனாமி வந்த முதலாம் ஆண்டுக்கு ஒரு போஸ்டர் அடித்தோம். "ஏ... கடலே

அலையால் உயிரை வாரிச் சுருட்டினாய்

கண்ணீரால் உப்பின் அளவினை கூட்டினாய்

எச்சரிக்கை 

உனக்கு இதுதான் கடைசி வரை முறை" என்று போஸ்டர் அடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்தக் கவிதை நினைவில் வந்து போனது தோழர் எழுதிய வாழ்க்கை என்ற கவிதையை வாசிக்கும் பொழுது. 

"கால் நனைக்க மட்டுமே 

கடற்கரை செல்பவனுக்கும்

சுனாமியில் குடும்பத்தைத்

தொலைத்தவனுக்கும் 

ஒரே மாதிரியான

தாக்கத்தைக் கொடுப்பதில்லை கடல். 

கடல் அழகானது கடல் கொடூரமானது" 

கவிதை கடலின் கொடூரம் பற்றி கூறும் அதே சமயம் வந்து போன சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையும் கவலையையும் கண் முன் மீண்டும் நிறுத்தும் என்பது உண்மை.


குடை என்னும் நீள் கவிதை ஒன்று. வயது முதுமையில் வாழும் தாத்தா ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் கவிதை. தாத்தாவிடம் உதவி செய்துவிட்டு காசு வாங்குவதாக இருக்கட்டும். தாத்தா, உண்ணும் உணவை பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும் என்று கூறும் பண்பை வளர்ப்பதாக இருக்கட்டும் என்று வாழ்ந்த அந்த தாத்தா இறந்த பின்பு

"சொத்து பத்து சேர்க்காத

மனுஷனுக்கு

சுத்துப் பத்து சொந்தமெல்லாம்

ஒப்பு வச்சு 

சொல்லிச் சொல்லி

அழுகையில... வருத்தத்திலயும் 

கர்வம் எனக்கு...

ஆமா 

தாத்தன் சொத்பேரன் அனுபவிக்கிறேன்"

என்று கூறும் பொழுது தாத்தாவின் குணநலன்கள் கண் முன் வந்து போகிறது. தாத்தாவை பிரிந்து செல்கிறோம் என்ற வருத்தத்தின் மத்தியில் இப்படிப்பட்ட தாத்தாவிற்கு நாம் பேரனாக பிறந்திருக்கிறோம் என்ற கெத்து என்று சொல்வோமே அப்படி இருக்கிறது.


கவிதை நூல் என்றால் ஒரு கவிதையாவது குழந்தை சம்பந்தப்பட்ட கவிதையாக அமைவது சிறப்பை உண்டு பண்ணும். இந்த நூலிலும் அப்படி கவிதைகள் உண்டு. "குழந்தையுடனான சண்டையில்

கோபித்துக் கொண்ட

பொம்மையை 

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?"

இந்த கவிதையில் குழந்தைக்கும் பொம்மைக்கும் சண்டை. பொம்மையிடம் குழந்தை கோபித்துக் கொள்ளும் என்று நாம் அறிவோம். ஆனால் இந்த கவிதையில் கோபித்துக் கொண்டது பொம்மை. இதில் பொம்மையை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கேட்கிறார். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது, எப்படி சமாதானப்படுத்துவது, யார் சமாதானப்படுத்துவது? அந்த குழந்தைதான் அறியும், சமாதானப்படுத்துவதற்கான மொழியை. அருமையாக உள்ளது கவிதை.


பொட்ட பிள்ளைய வளக்கறதுக்கு இடுப்புல நெருப்பக் கட்டி திரிய வேண்டி இருக்கு என்ற வார்த்தையை கூறாத பெற்றோர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒவ்வொரு நேரமும் பெண்களை வளர்ப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது என்று அஞ்சி அஞ்சி வளர்க்க வேண்டி இருக்கிறது. இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே காலகாலத்துல ஒருத்தன பிடிச்சு அவன் கிட்ட உன்ன ஒப்படைச்சுட்டேன்னா நான் நிம்மதியா போய் சேருவேன் என்ற சொல்லையும் வார்த்தையையும் கூறிவிடுகிறார்கள். திருமணம் என்னும் கூட்டுக்குள் தெரியாத இரு நபர்களை ஒன்று சேர்த்து வாழ வைக்கும் ஒரு கண் கட்டி வித்தை காலகாலமாக இங்கு நடந்து வருகிறது. என்ன செய்வது? தோழருக்கு கிராமிய நடை எளிதாக வருகிறது. இப்படி ஒரு நடையானது பொம்ம கல்யாணம் என்ற கவிதையில் சிறப்பாக வெளிப்படுகிறது. "என்னோட விருப்பம் இல்லாம 

இடம் பார்த்து 

நேரம் பார்த்து 

நாள் பார்த்து 

ஆள் பார்த்து... 

படுக்க நிர்பந்திப்பது மட்டும் 

கற்பழிப்புல சேராதா... 

நாளைய அபலைக்குத்தான்

இப்ப பட்டுப் புடவை

சுத்துறாங்க

பொம்மக் கல்யாணம் ஒன்னு 

செஞ்சு வச்ச பொம்மலாட்டம் ஆடுறாங்க"

இந்த கவிதையின் ஆரம்பம் முதல் வாசித்துப் பாருங்கள். ஒரு தாய் படும் பாடு தெரியும். பூட்டிப் பூட்டி வைத்து இன்னும் எத்தனை காலம்தான் பெண்களை வாழ வைக்க போகிறோமோ தெரியவில்லை...


இப்படி ஒரு கவிதையை ஆத்திகர்கள் வாசிக்க நேர்ந்தால் எந்த கோவிலிலும் புறா வளர்க்க தடை செய்யப்படும் என்று தான் நினைக்கிறேன். "கோபுரத்தில் ஜீவிக்கும் 

கோவில் புறா

ருதுவானால்

தீட்டாகிடுமா சாமி...?

நல்லாஅருக்குல்ல என்று சொல்ல தோன்றுகிறது.


நாத்திகனின் பிரார்த்தனைகளில் ஒன்று. 

"தூணிலும் துரும்பிலும்

இருந்திடும் கடவுளே!

என் தட்டு

மாமிசத்திலிருந்து மாத்திரம்

வெளிநடப்பு செய்திடேன்.

இப்பிரபஞ்சம் முழுமையும் விடுத்து என் எச்சில் தட்டினில் அல்லவா 

உன்னைத் தேடி வருகிறது? அரிவாளுடன் ஒரு கும்பல்.."

என் உணவு என்ற சொல்லில் கூட இன்று அரசியல் ஊடுருவி விட்டது. மாட்டுக் கறி வைத்திருந்தால் பிரச்சனை, மாட்டுக்கறி இல்லை என்றாலும் அதனை மாட்டுக்கறி என்று சொல்லி பிரச்சனை என்று பிரச்சனை செய்வதற்கு என்று உள்ள ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. அந்த கூட்டத்தினால் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் இங்கு உண்ண மட்டும் தடை எப்படி என்பதுதான் அரசியல். "என் தட்டு மாமிசத்தில் இருந்து மட்டும் வெளிநடப்பு செய்திடேன்" என்று கூறுவது மாட்டிற்காக அல்ல. மனிதர்களுக்காக என்பது எப்பொழுது புரியப்போகிறது?


தொகுப்பெங்கும் முற்போக்காக பல கவிதைகள். ஒவ்வொன்றும் பெரும் வீச்சாக தெறி"க்கிறது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துக்கள் தோழர் அகரன். 

No சொல்லுங்க



 நோ சொல்லுங்க

(மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்)

சக.முத்துக்கண்ணன் 

ச.முத்துக்குமாரி

மேஜிக் லாம்ப் வெளியீடு ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

72 பக்கங்கள் 

199 ரூபாய்


நோ சொல்வது ஒரு திறன் 

நோ சொல்வது ஒரு கலை 

நோ சொல்வது ன்னம்பிக்கை 

நோ என்பது சிறந்த பதில் 

நோ சொல்பவர் கெட்டவர் இல்லை

நோ சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்

இதுதான் இந்த நூலின் சாராம்சம். இன்று குழந்தைகளிடம் மறுத்து பேசும் திறன் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆசிரியர் சொன்னால் அப்படியே கேட்பது. பெற்றோர்கள் சொன்னால் அப்படியே கேட்பது. அவர்களை ஒரு பொம்மையைப் போல வளர்த்துக் கொண்டு வரும் சூழல் உள்ளது. அல்லது விட்டேத்தியாக வளரும் சூழல் உள்ளது.


அம்மா எடுத்து வந்த சுடிதார் வேண்டாம் என்றால் கூட திட்டி விடுவாரோ என்ற எண்ணத்தில் மகள் இருப்பார். ஆனால் அந்த நோ சொல்ல வேண்டியதை மாற்று மொழியில் கூறலாம். அம்மா, இந்த கலர் சுடிதார் என்னிடம் இருக்கிறது / அடுத்த முறை என்னையும் துணிக்கடைக்கு கூட்டிட்டு போங்க / என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் அம்மா என்பது போன்று எல்லாம் சொன்னால் அம்மா தடுக்க முடியாது. அதை அணுகும் முறை வேறுபடும் என்று ஆலோசனை வழங்குகின்றனர் நூல் ஆசிரியர்கள். 


நோ சொல்லி பழகுவது எப்படி என்பதற்கு கதைகள் மூலம் விளக்குகிறார்கள்.


ஒருவன் ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து சாட் செய்கிறான். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சாட் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பின் திசை மாறிப் போகிறது. இதனை அந்தப் பெண் விரும்பவில்லை. பின் அவள் சாட் செய்வதை தொடர்கிறாள்.  இது சரியா தவறா? புதியதாக நம் வீட்டுக்கு அருகில் ஒரு குடி வருகிறார். கணவன் மனைவி இருக்கிறார்கள். ஒரு நாள் மனைவி ஊருக்கு செல்ல அவர் மட்டும் இருக்கிறார். அங்கு பக்கத்து வீட்டுப் பெண் செல்வது சரியா தவறா? இப்படிப்பட்ட விவாதங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. புதியவர் வந்தால் அந்த வீட்டிற்கு நாம் பெண் பிள்ளைகளை கவனத்துடன் அனுப்ப வேண்டும். புதியவர் வந்தால் என்று இல்லை பழையவர்களாக இருந்தாலும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.


சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து பள்ளிகளில் பாடம் எடுக்கும் சூழல் உள்ளது. அந்த பாடம் குறித்த தகவலும் நூலில் உண்டு.


வீட்டில் அம்மாவோ அப்பாவோ மொபைல் போன் பயன்படுத்தும் பொழுது கண்டித்து வாங்கி விடுகிறார். திரும்பவும் மல்லுக்கட்டி அந்த மொபைல் போனை வாங்கி விடுவோம். அம்மா சொல்லும் நோ நியாயமானதா இல்லையா என்பதை விவாதிக்கச் சொல்லி ஒரு பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்று செல்போன் வாங்கித் தரவில்லை என்றால் மாணவர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள். பைக் வாங்கி தரவில்லை என்றால் தவறான முடிவு எடுக்கிறார்கள். எது சரி எது தவறு இது இந்த வயதிற்கு தேவையா என்பதை புரிந்து கொள்ளும் மனப்பான்மை மாணவர்களுக்கு வருவதில்லை. இந்த வயதிற்கு ஏற்றதுதானா என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வீட்டின் பொருளாதாரம் இதற்கெல்லாம் கட்டுபடியாகுமா? என்று மாணவர்கள் யோசிப்பதில்லை. நோ சொல்லிவிட்டால் தலைகீழாக குதிக்கிறார்கள். இதையெல்லாம் விவாதம் தொடர்பான பக்கங்கள் ஒதுக்கி மாணவர்களை பேச வைக்கிறார்கள்.


நோ சொன்னதால் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்று விளக்குகிறார்கள் நூல் ஆசிரியர்கள். சித்தார்த்தன் நோ சொன்னதால் ஒரு போர் நிறுத்தப்பட்டது. ரோசா பார்க்ஸ் என்பவர் பேருந்தில் எழுந்து நிற்க மறுத்துவிட்டார். வெள்ளைக்காரர் வந்து நின்றால் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை. அதை மீற வேண்டும். தனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் நடத்துனரிடம் பயணம் செய்வதற்கு காசு கொடுத்து இருக்கிறேன். நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு மறுப்பின் வெளிப்பாடு தான் நோ சொல்லுதல். 381 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் ரோசா பார்க்ஸ் சொன்ன ஒரு நோ"வால் நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கும் சட்டத்தையே மாற்ற வைத்தது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய பொழுது வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வரமாட்டோம் என வழக்கறிஞர்கள் நோ சொன்னார்கள். ஆங்கிலேயர்களின் துணியை உடுத்த மாட்டோம் என மக்கள் நோ சொன்னார்கள். கதர் ஆடையை மட்டுமே உடுத்த ஆரம்பித்தார்கள். ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுக்க நோ சொன்னார்கள். ஒத்துழையாமை இயக்கத்திற்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் நோ சொல்லியதுதான். "பொம்பள புள்ளன்னா கல்யாணம் பண்ணனும், சமைக்கணும், குழந்தை பெத்துக்கணும், எதுக்கு படிப்பு?" என சுற்றி இருந்த எல்லாரும் சொன்ன போது சாவித்திரிபாய் பூலே அதை மறுத்து நோ சொன்னார். அவர் இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். முதன்முதலாக தொடங்கிய அந்த பள்ளி 3 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்தது. இதற்கு காரணம் நோ சொன்னது தான்.


ஆனால் நாம் எத்தனை விஷயங்களில் நோ சொல்லி இருப்போம். அதுவும் துணிச்சலாக சொல்லி இருப்போம் என்பது கேள்விக்குறிதான். ஒரு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது குறித்த மேற்பார்வை செய்ய அதிகாரிகள் வருவார்கள். அந்த திட்டம் சரியில்லை என்ற மனப்பான்மையுடன் நாம் இருப்போம். ஆனால் அந்த பதிலை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இது தொடர்பாக பாசிட்டிவான பதிலை எதிர்பார்ப்பார்கள். ஆதலால் நெகட்டிவ் ஆக எதுவும் கூறிவிட வேண்டாம் என்று நாம் அறிவுறுத்தப்படுவோம். அதற்காக ஆமாம் சாமி போடும் கூட்டம் பல இடங்களில் உண்டு. ஆக இந்த நூல் மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல் மட்டுமல்ல. கொஞ்சம் நமக்கும் சேர்த்துத்தான்.


நோ சொல்லுங்க என்று மனம் சொல்லுகிறது காரணம் 199 ரூபாய். வெறும் 72 பக்கங்கள். ஆனாலும் வாங்கியாச்சு. படிச்சாச்சு. 


பள்ளியில் உயர் கல்வி படிக்கக்கூடிய குழந்தைகள் அனைவரும் இந்த நூலை படிக்கலாம். சிறுவர்களும் இந்த நூலை படிக்கலாம். விழிப்புணர்வைத் தரக்கூடிய நூல்.


வாசிக்க வேண்டிய நூல். 


பெ. விஜயராஜ் காந்தி

Tuesday, 1 July 2025

அடுக்கு மல்லிகை


 

அடுக்கு மல்லிகை... பாடல்

திரைப்படம் : தங்கமகன்

இசை: இளையராஜா


காமத்தை கொண்டாட்ட மன நிலையில் ஆராதிக்க கற்றுக் கொடுத்தவர் இளையராஜா என்பதை மெய்ப்பிக்க உள்ள பல பாடல்களில் அடுக்கு மல்லிகை பாடலும் ஒன்று. 


வில்லனின் இடத்தை நோட்டமிட வந்திருக்கும் ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா இருவரும் பாடும் பாடல் காட்சி. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ரஜினி அறையில் படுத்து இருக்கிறார். அந்த அறைக்கு வரும் சில்க் கதவின் அருகில் நின்று ரஜினியைப் பார்த்து, இரு கவனித்துக் கொள்கிறேன் என்பதுபோல் தலையசைத்து கதவைப் பூட்டுகிறார். அந்த நேரம் சில்க்கை திரும்பிப்பார்க்கும் ரஜினி ஒரு கொண்டாட்ட மனநிலையில் கால்களை குதிப்பது போல பாவனை செய்கிறார். சில்க் கதவை அடைத்துக்கொண்டு வரும் அழகு அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த இடைவெளியை பாடல் துவக்கத்திற்கு அளித்திருக்கும் இளையராஜாவின் இசை அவ்வளவு லாவகமாக நிரப்பியிருக்கும். சில்க் வந்தவுடன் ரஜினியை கால்களில் இருந்து தொட்டு முகத்தில் முத்தமிட்டு ரஜினியை திகைக்க வைத்து அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது என்று பாடத் தொடங்குகிறார். அந்த குரல் மயக்குவதற்காக படைக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிச்சயம் எழும். உன்னைத் தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் என்ற அந்த குரல் உண்மையிலேயே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுகம்தரும். சில்க்கிற்குள் புகுந்த ஜானகியின் குரல் இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லலாம். தொடர்ந்து ரஜினிக்கு எஸ்பிபி பாடுகிறார். உச்சஸ்தாயியில் பாடத் தொடங்கி சில்க்கின் பார்வைக்கு மெல்ல இறங்குகிறது எஸ்பிபி குரல்.


இது காமத்தை தூண்டும் பாட்டா அல்லது ஒரு காதல் பாடலா அல்லது ரஜினியின் பாடலா அல்லது சில்க்கின் பாடலா அல்லது இளையராஜாவின் பாடலா என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் அத்தனைக்கும் பொருந்தும் இசையும் குரலும்.


முதல் சரணத்தில் 

நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


என்ற வரிகளும்


இரண்டாவது சரணத்தில்

ராசாத்தி முல்லைமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது

என்ற வரிகளும் எஸ்பிபி பஞ்ச்.


முதல் சரணத்தின் இறுதியில் ஜானகி அடுக்குமல்லிகை என தொடங்க எஸ்பிபி ஹா என ஹம் செய்ய இது ஆள் புடிக்குது என ஜானகி தொடங்க ஹாஹ்ஹா என எஸ்பிபி பாட ரெண்டு தோள் துடிக்குது என ஜானகி பாட எஸ்பிபி ம்ம்ம் எனத் தொடர பின் இருவரும் இணைந்து லாலால்லா என நீட்டித்து காமத்தின் வெள்ளோட்டத்திற்கான ஒரு சூழ்நிலையை இளையராஜா வைத்திருப்பார்.

இதே போன்று இரண்டாவது சரணத்தின் இறுதியில் எஸ்பிபி பாட ஜானகி கிறங்கும் (கிறக்கும்) குரலில் சிரிக்க என நீளும். எந்த இடத்திலும் காமத்தின் உச்சத்தைச் சிதைக்காத இசையும் வரிகளும் பாடலுக்கும் கதையின் சூழலுக்கும் ஆகப் பொருத்தம். விரசம் என்பதை மனதிற்குள் கொண்டு செல்லாமல் ராஜா, எஸ்பிபி, ஜானகி, ரஜினி, சில்க் என்ற ஆளுமைகளின் திறன்களை இப்பாடல் வழியாகவும் கண்டுணரலாம். கேட்டும் உணரலாம்.


பாடல்:


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


கையோடு சேர்த்தணைச்சு கட்டில்வரை கண்ணடிச்சு


ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு


நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


தீராத ஆச வச்சே அங்கே இரு கண்ணிருக்கு


தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு


ராசாத்தி முல்லமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


யாழ் தண்விகா

மீண்டும் ஒரு காதல் கதை



 ஒரு காதல் கதை

#நெடுங்கதை


மீரான் மைதீன்


புலம் பதிப்பகம்


பக்கங்கள் 56. விலை 80/=


 எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்கள் எழுதிய நூலை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். ஒரு கதை சொல்லி, இந்நெடுங்கதையில் சக பயணியின் கதையைக் கேட்கிறார். அதுவே ஒரு காதல் கதை.

  ரயில் சினேகத்தில் கதாசிரியருக்கு ஷீலா என்ற பெண் அறிமுகம் ஆகிறாள். கதைகள் எழுதும் நபர் என்பதாலும், உரையாடலின்போது பிடித்துப்போன மனிதர் என்பதாலும் 1980களில் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் ஷீலா. தன்னுடைய திருமணம் ஒரு காதல் திருமணம். அதுவும் சீர்திருத்தத் திருமணம். தன்னுடைய பெயர் வஷீலா என்றும் தன்னுடைய காதல் கணவரின் பெயர் மணிகண்டன் என்றும் கூறுகிறார் அப்பெண்மணி. காதல் இரு குடும்பத்திற்கிடையே என்னென்ன மனச் சிக்கல்களை உண்டாக்கியுள்ளது என்பதைத் தன்னுடைய உரையாடல் வாயிலான கேள்விகள் மூலம் ஷீலாவிடமிருந்து தெரிந்துகொள்கிறார். ஷீலாவின் அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் தற்போது என்ன ஆனார்கள்? அவர்களிடையே அப்பெண்ணிற்கு உறவு நீடிக்கிறதா? என்பன போன்ற கேள்விகள். ஷீலா தற்போது 60 வயதாகும் பெண்மணி. அவளுக்குக் கணவன் மணிகண்டன். ஒரு மகன். ஒரு மகள். இந்த ரயில் பயணத்தில் கூட அப்பெண்மணி தன்னுடைய பேரனைப் பார்க்கச் செல்கிறாள். கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணி செய்தபின்னர் பணி ஓய்வு பெற்று இன்னும் ஈராண்டு கூட முடிவடையவில்லை. இசுலாம், இந்து இவர்களின் திருமண வாழ்வு இணக்கமாகச் செல்கிறதா இல்லையா என்பது உள்ளிட்ட அனைத்தும் கதாசிரியர் மீரான் மைதீன் மற்றும் ஷீலா ஆகிய இருவரின் உரையாடல் வழியாகவே அறிந்து கொள்ளலாம். தொய்வின்றிச் செல்கிறது கதை ஒரு தெளிந்த நீரோட்டம் போல. ஸ்பரிசத்தைத் தொட்டும் தொடாமல் செல்லும் தென்றல் போல. மனதை மயக்கும் பாடல் போல. 


அருமை. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

Monday, 30 June 2025

மெல்ல எரியும் இரவு


 மெல்ல எரியும் இரவு

--------------------------------


மெல்ல எரியும் இரவினில் யாரோ ஒருவர் உங்கள் கைபிடித்து அழைத்து செல்கிறார். நீங்களும் அவரின் பின்னால் எவ்வித பிரக்ஞையற்று உடன் செல்கிறீர். நேரம் ஆக ஆக அவரோடு உரையாடத் தொடங்குகிறீர். கட்டிப்பிடிக்கிறீர். ஒரே மேசையின் எதிரெதிரே அமர்ந்து நிதானித்து தேநீர் அருந்தத் தொடங்குகிறீர். ஒவ்வொரு மிடறு உள் செல்லும்போதும் இன்னும் நெருக்கமாகிறீர். முடிவில் முதலில் அறியவேண்டிய கேள்வியை கேட்கிறீர்... உங்கள் பெயரை அறிந்து கொள்ளலாமா...?


'''இளையபாரதி''' என்கிறார் அவர்.


இரவின் கண்களுக்குள் சிக்கியுள்ள வாதைகளை

வார்த்தைகளில் நெய்திருக்கிறார் கவிதைகளாக. இரவின் வண்ணங்களாக புது கோலமிடுகின்றன அவை. 

ஆங்காங்கே தேவதை எட்டிபார்க்கிறாள் காதல் வடிவில். அவளும் இரவின் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொள்பவளாகவே இருக்கிறாள். இருப்பினும் இளையபாரதியின் இரவுக்குள் சூரியனின்றிப் பூத்திருக்கும் மலர்கள் ஏராளம். சூரியனாக பிரகாசிக்கின்றன மலர்கள்.


மழையை இன்னும் எத்தனை காலம் எழுதுவது என்ற எண்ணத்தை இப்படியெல்லாம் எழுதலாம் என உடைத்தெறிகிறார் இளையபாரதி...,  

""ஒவ்வொன்றாய் 

  கழன்று விழுந்தன

  துளி பூமிகள்""...

என்று மரங்களில் தூளியாடும் மழைத்துளிகளை கூறும்போது மழைக்கப்பாலான மரங்களை இனி உலுக்குதல் பாவம் என்பதுபோல் அதிரவைக்கிறார்.


ஒரு குடும்பத்தின் வாசனையை உணர்வீர்கள் 

பூனையின் பாதம் கொண்டு பக்கங்களின் வழியே  மெல்ல பயணித்து செல்லும்போது...

அந்த குழந்தை 

அந்த காதல்

அந்த ஊடல்

அந்த தந்தை 

அந்த இரவு 

அந்த தனிமை

அந்த தெருவின் அழகி 

இப்படி அனைத்தையும் உணரலாம் நம் இரவின் வழியாக உணர்பவற்றை இந்த கவிதைகள் வாயிலாகவும்...


""சிலர் தலைக்குமேல் 

  சிலர் பாதங்கள்

  நடமாடும் அடுக்குகளில்


  ஒருவீட்டின்மேல் 

  இன்னொரு வீடு


  எப்படிச் சொல்ல 

  இது எங்கள் வீடு""அபார்ட்மெண்ட் வீட்டின் அவலத்தினை உள்ளூரத் தொனிக்கும் கவிதை... அத்தோடு நடுத்தர மக்களின் வாழ்க்கையின்மீது வீசப்படும் பகடியெனவும் கொள்ளலாம் இதனை...


''எழுத்தல்ல ஆயுதம்''

தன் எழுத்தின் கூர்மை

தன் பயணம் எதை நோக்கியது 

என்றும் குறிபிட்டதொரு கவிதை...

கூர்மையை எரியும் இரவினில் மட்டுமல்லாது

இன்னும் கூடுதலான பொழுதுகள் அனைத்திலும் 

செலுத்தும் வீரியம் இருக்கிறது கவிஞரிடம்...

செலுத்துவார் என்ற நம்பிக்கையிருக்கிறது...


""தம்பி சாப்பிடலாம்..."" 

கவிஞரின் தந்தை கூறுவதுபோல 

ஒரு கவிதையில்...

கவிதை ஆர்வலர்களே...

இரவினை உணர 

""மெல்ல எரியும் இரவு""

சாப்பிட்டாகவேண்டிய உணவு...


வாழ்த்துகள் 

கவிஞர் இளையபாரதி அவர்களே...!


_யாழ் தண்விகா.