Sunday 20 March 2022

மீயழகி சி. சரவணகார்த்திகேயன்

 மீயழகி

சி. சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

98 பக்கங்கள் 120 ரூபாய்

எழுத்து பிரசுரம்



 காதலைப்  பற்றி, காமத்தைப் பற்றி கவிதைகள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் பல வந்திருக்கலாம். மீயழகி பெண்கள் மேல் அதீத அன்பை, காதலை, ரசித்தலைத் தூண்டும் ஒரு தொகுப்பு. கட்டுரைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு தலைப்பும் அலுக்கவில்லை. பொதுவாகவே பெண்களைப் பற்றி எழுதுவதென்றால் போதை மை ஊற்றி எழுதுவார் சிஎஸ்கே.  இதில் கூறப்பட்டுள்ள பெண்கள் பற்றிக் கூறவே  வேண்டாம்.  இதில் அழகில் உச்சம் பெற்றுள்ள கேரளப் பெண்கள், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, கொஞ்ச காலத்துக்கு முன்னர் விடாது கொஞ்சல் மழையில் திளைக்க வைக்கப்பட்டிருந்த அனு ஸிதாரா, தற்போது கொஞ்சப்படும் பிரியங்கா மோகன் இப்படி பல அழகு ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள். வெளுத்து வாங்கியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.


 எழுத்தாளனுக்கு என்று நிறைய வேலைகள், பொறுப்பு இருக்கிறது.  சரி அதையெல்லாம் செய்வதோடு நின்றுவிட்டாரா? இல்லை.  பெண்களைப் பற்றி எழுதி அதையும் ஒரு புத்தகமாகப் போட்டு வச்சு எழுத்தாளருக்கு உள்ள பெருமையை இன்னும் அதிகப்படுத்தவே செஞ்சிருக்கார். பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா என்ற பாட்டைக் கேட்கும்போது கொண்டாடுவோம். நாமும் பாடுவோம். ஆனால் எழுதினால் மட்டும் தப்பாப் போகுமாம். போகட்டுமே. இதை எழுத்தாளன் எழுதாமல் யார் எழுதுவது.... எழுதுங்க எழுத்தாளரே இன்னும் பல்லாயிரம் பக்கம்...


 பெண்ணின் வசீகரம் என்பதை உணரத் தலைப்படா சமூகம் சீரழிந்து போகும்.  அழகு என்பது எது ? புறம் அகம் என்று எதைக் கூறுகிறோம்... எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.  ஸ்ருதி ஹாசன் குறித்த கட்டுரை அவர் செல்லவேண்டிய தூரத்தைக் கூறிக் கவலைப் படுகிறது.  நிசப்தத்தின் பேரோசை தற்கொலை செய்துகொண்ட நடிகைகளின் பட்டியலைப் பதட்டத்துடன் எடுத்துவைக்கிறது. ஆண் சமூகம் பெண்ணை அணுகும் விதம்,  பெண்ணின் உச்ச பட்ச எதிர்பார்ப்பு என்பதையும் தாண்டி அரங்கேறும் தற்கொலைகள் பெண்ணின் உச்ச பட்ச கோழைத் தனத்தைக் காட்டுவதாகவே அமைந்திருப்பதைக் கட்டுரையை வாசிக்கும்போது உணரலாம்.  இப்படி நீளும் கட்டுரைகள் மத்தியில் மின்மினிகள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையும் ஒன்று. அதில் கடைசி மின்மினியாக ஜீவஜோதி. பல ஆண்டுகள் பார்த்த முகம். அண்ணாச்சியை எத்தனை பேர் நினைத்தோம்... ஆனால் ஜீவஜோதி நினைவில் நிற்கிறார்... என்ன காரணம்...? போகும் போக்கில் அல்ல. காரணத்துடன் கட்டுரைகளில் வாழ்கிறார்கள் பலர். 


 பல காலங்களில் பலர் நமக்குள் உண்டாக்கிய அழகுக் கிளர்ச்சியை நாம் வெளிக்காட்டாமல் கடந்ததைப் போல் ஒரு பாவச் செயலைச் செய்யாமல் அதை எழுத்துப் படையலாக்கி நமக்கு முன் வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார் தோழர் சிஎஸ்கே. தங்களால் அழகிகளை, மீயழகிகளை மீண்டும் எழுத்துகள் மூலம் பார்க்கும் வாய்ப்பு நல்கியமைக்குப் பேரழகு நன்றியும் பேரன்பும். தொடரட்டும் தங்கள் வனப்பு காட்டும் எழுத்து...!


வாழ்த்துகள் தோழர்...


யாழ் தண்விகா



No comments:

Post a Comment