Tuesday 22 March 2022

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே... சி.சரவண கார்த்திகேயன்


கற்பதுவே கேட்பதுவே கருதுவதே...

சி.சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

பக்கங்கள் 120 விலை 150

எழுத்து பிரசுரம்


நல்லதா நாலு விஷயம் தெரிஞ்சுக்கிட கட்டுரைகள் எப்போதும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான். ஆனால் பல கட்டுரைத் தொகுப்புகள் படிக்கத் தொடங்கியவுடன் நம்மை கடித்து வைக்கத் தொடங்கிவிடும். அந்த வகைப்பட்ட எழுத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வாசிப்பவனைத் தன்வயப்படுத்தும் எழுத்து மட்டுமின்றி தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாகவும் எடுத்து வைப்பவர் சிஎஸ்கே என்றால் அது அதிகப்படி இல்லை. உள்ளபடிதான்.


மொத்தம் 16 கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளம். பாலு மகேந்திரா,  ஏ ஆர் ரஹ்மான், மிஷ்கின், இளையராஜா, 3, எந்திரன் என சினிமா தொடர்புடைய கட்டுரைகள் தவிர்த்து மேலும் 10 கட்டுரைகள். மையம் இல்லாமல் பார்த்துக்கொண்டு நிறை குறைகளை எப்போதும் கூறுவதுபோல் மேற்சொன்ன கட்டுரைகளிலும் கூறியுள்ளார். ரஹ்மான், சைக்கோ-மிஷ்கின் குறித்த கட்டுரைகளில் இதை வலுவாகவே காணலாம். இளையராஜாவை கவிராஜன் கதையை வைரமுத்து எழுதியது போல எழுத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். நன்றாக வந்திருக்கிறது. தொடர வாய்ப்பிருந்தால் தொடரலாம். 


பா.ராகவன் எழுதிய நூலுக்கு தொகுப்பாளர் தந்த முன்னுரையும் ஒரு கட்டுரையாக இருக்கிறது. அது இலக்கிய ஆர்வலர்களுக்கு புரியும் போலிருக்கிறது. ஜெகனின் ட்விட்டர் மொழி நூலுக்கு எழுதிய முன்னுரையும் இட்லி வடை வலைப்பூ பக்கம் குறித்தும் களிபத்துப்பரணி கட்டுரையில் சௌம்யா குறித்தும் இணைய தொடர்பான கட்டுரைகள் இருக்கின்றன. வலைத்தளம் இன்று வியாபித்திருக்கின்ற சூழலில் அவை தொடர்பான கட்டுரைகளை சுவாரசியத்தைத் தூண்டுவதாக எழுதியிருக்கிறார். நானே என்னுடைய ட்விட்டர் பக்கத்தை தூசி தட்டி சில ட்வீட்ஸ் போட வைத்துவிட்டது. அரட்டை கேள் சௌம்யா குறித்த கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. கூடுதலாக அவரின் 100 ட்வீட்ஸ் போனஸ் போல இருந்தது. காட்சிப்படுத்தியதற்கும் இக்கட்டுரைக்கும் தனியாக வாழ்த்துகள். 


தொலைக்காட்சியில் இன்று பொதுமக்களை வசியம் பண்ணும் பல நிகழ்ச்சிகள் வரத் தொடங்கிவிட்டன. அவ்வகையில் bigboss, மற்றும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் குறித்த கட்டுரைகள். ஒன்று ஓவியாவைத் தொட்டு நீள்கிறது. முகம் என்ற கட்டுரை நீயா நானாவில் கலந்து கொண்டு பேசியதில் பேசாமல் விடுபட்ட விசயங்களைப் பேசுகிறது. முகம் தனித்துவமாக இருக்கிறது. புதிய ஆத்திசூடி நன் முயற்சி. இந்துக்களின் இப்தார் கட்டுரை மாநகர வாழ்க்கையும் நெரிசலும் அவசரமும் நம் கலாச்சாரங்களின் கழுத்தை நெரிப்பதை துயருடன் காட்சிப் படுத்தி உள்ளார். தொகுப்பின் முதல் கட்டுரை பெருமாள் முருகன் எழுதிய கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை நினைவுபடுத்தியது. கற்பதுவே கேட்பதுவே கருதுவதே கட்டுரை பத்தி வடிவிலான எழுத்தை, அவசர கதியில் இயங்கும் சமகாலப் போக்கில் அதன் அவசியத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது.


கட்டுரை ஒவ்வொன்றும் வாசித்தலை ரசித்துச் செய்ய வைக்கிறது. வாசித்தலில் வசிக்கவும் வைக்கிறது. 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

No comments:

Post a Comment