Saturday 28 May 2022

அழகென்ற சொல்லுக்கு...


 #அழகென்ற_சொல்லுக்கு...


❣️

ஒரு பூவைப்போல

நீ நடந்து செல்கிறாய்

ஒரு வண்டைப்போல

நான் தொடர்ந்து வருகிறேன்


❣️

நீ பேசுவதையெல்லாம்

கவிதை என்கிறேன்


அப்படியானால்

நீ யார்?


❣️

சிலை கல்லாலானது என

யார் சொன்னது?


❣️

பருவம் தொடங்கியது என்பது ஊருக்கு.

பருவம் பூத்தது என்பது உனக்கு.


❣️

நீ சிரிக்கும் சிரிப்பனைத்திற்கும்

வெல்லச் சிரிப்பென்று பெயர்


❣️

எக்குளத்தின் மீன்கள்

உன் கண்கள் எனக் கண்டு

பாதுகாக்கவேண்டும்

அக்குளத்தை!


❣️

உன் அழகுதான்

உனக்கே தெரியாமல்

தெனாவெட்டாகப் பார்க்கிறது என்னை.

பவ்யம் காட்டுதலை விட

வேறென்ன செய்ய இயலும் நான்...


❣️

எதிரெதிரே அமர்ந்து

பழச்சாறு பருகுகிறோம்.

இதழ்கள் வழியாக

நீதான் உயிருக்குள்

சென்று கொண்டிருக்கிறாய்...


❣️

ஒரு கல்யாணம்

இரு குழந்தைகள் என

வாழ்ந்துவிடத்தான் ஆசை.

பேராசை

நாம் காதலர்களாகவே

வாழ்ந்து மடிவதில்தானிருக்கிறது.


எது வேண்டுமானாலும்

வெல்லட்டும்.


❣️

என் கவிதைகள் அனைத்தையும்

வாசித்து விடுகிறாய்.

அதென்னமோ

நாம் வாழ்ந்த நாட்களைச் சொல்லும்

கவிதை வாசிப்பின் போதுதான்

வரிகளுக்கு முத்தம் கிடைத்துவிடுகிறது...


❣️

அருகருகேயமர்ந்து

புகைப்படம் எடுக்க ஆசை நிறைய.

பயம் காரணமாக

ஒத்திப் போடுகிறாய் ஆசையை.

ஆனாலும்

உயிரால் நாம் வாழாமல் இருக்கிறோமா என்ன...?


❣️

ஒவ்வொரு கவிதையைப் படித்தபின்பும்

யாருக்கு இந்தக் கவிதை என்ற கேள்வியோடு நிமிர்வாய்.

உன்னைப் பார்த்தபடியே நிற்பேன் நான்.


புரியாதா பேரன்பே...!


❣️

எப்போப்பாரு

காதல் காதல்...

வேறொன்னும் தெரியாதா?


காமம் தெரியும்...


காதலிச்சே தொலை எருமை...


❣️

கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள

கோப்பையிரண்டிலும்

போதை வஸ்து.


நீ கற்சிலையல்ல

கள் சிலை...


❣️

இமைகளுக்கு மையிடும் லாவகத்தில்

தெரிவதெல்லாம்

வாளினைக் கூர் தீட்டும் உத்தி...


❣️

ஒருமுறை முத்தமிட்டு

அமைதிப்படுத்தேன்

என் இதழ்களை...


நீ பேசும்போது

அசையும் உன் இதழ் கண்டு கண்டு

துடித்துக் கொண்டேயிருக்கின்றன

அவை...


❣️

இடுப்பில் என்னவோ

ஊர்வது போலருக்கு

பார்த்துவிட்டு வருகிறேன் எனப் பேசும்போது சொல்லிவிட்டு எழுந்து சென்றாய்...


ம்மென்றேன்


பார்த்துவிட்டு வந்து 

ஒன்றுமில்லை

அப்புறம் ஏன் அப்படித் தோணுச்சு என

ஒன்றும் புரியாமல் கேட்டாய்


நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னால்

தரை பார்த்துப் பேசும்போது

என் கண்கள் உன் இடையை

மேய்ந்து கொண்டிருந்தது.

இப்போது வரை என் கண்கள்

என்னிடம் வந்து சேரவில்லை

அது தான் இடையுள்புறம் சென்று

ஊருகிறதோ என்னவோ என்றேன்


என்னவோ ஊர்வதாகச் சொன்ன

இடையில் ஒரு கை

கண்களில் ஒரு கை வைத்து மறைத்து

ப்ளீஸ் கூச்சமாயிருக்கு

பார்வையால் மேயாதே என்னை

என்றாய்


எப்போது கூச்சம் போகும்

என்றேன்


உயிரால் என்னுயிர் மேல்

ஊர்ந்து கொள்.

இப்போது வேண்டாம் என்றாய்.


என் கண்களைப் பிடித்து

என்னிடம் தந்தபின்னர்தான்

உன் கண்கள் திறந்தாய்.

வெட்கத்தின் ரேகைகள் ஒவ்வொன்றாய் உதிரத் தொடங்குகிறது உன்னிலிருந்து.

கைகளில் பிடித்து

தன்னை நிரப்பிக்கொள்ளும் காதலுக்கு இப்போது

வெட்கத்தின் சாயல்...


❣️

கவிதை கவிதைன்னுக்கிட்டே

வாழ்க்கையில உருப்படாமப் போயிடப் போறடா


உன்னைப் பற்றி எழுதிட்டுத் திரிவதைத் தவிர

உருப்பட வேறு வழியில்லை அன்பே...


❣️

நீயழுதால் அழுது

சிரித்தால் சிரித்து

மௌனமாயிருந்தால் மௌனமாயிருந்து...


நீ ட்ராமா தான் பண்ற என்பது

உனக்குத்தான்.

எனக்கில்லை.


❣️

கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு

ஸ்தோத்திரம்...

போலவே

உன்னோட பரிசுத்த நாமத்திற்கு

என்னோட ஸ்தோத்திரம்...


❣️

நினைவால்

நீ உறங்குதலை என்முன் வரவழைத்து

வழக்கம்போல் 

உன் அழகின்மேல்

என் கண்களால் முத்தமிட்டபின்

உறங்கத் தொடங்குகிறேன்


தூரமே... தொலைந்து போ...


29.05.2022

02.19 அதிகாலை


யாழ் தண்விகா

No comments:

Post a Comment