Sunday, 22 February 2026

அலைவரிசை #ம. காமுத்துரை

 

#அலைவரிசை நாவல்

அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.


Kamuthurai MA


MA Kamuthurai


இரு தலைமுறைகளின் வாழ்க்கையை கிராமத்துப் பின்னணியில், தான் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பகுதிகளின் இயல்பு மாறாத வண்ணம், அம்மக்களின் மொழி, கலாச்சாரம் இதனை கிஞ்சித்தும் மாறுபட்ட வண்ணம் கூறிடாது, வழக்கமான தன்னுடைய பாணியில் அலைவரிசை நாவலை வழங்கியுள்ளார் காமுத்துரை தோழர் அவர்கள். 


மொத்தம் 8 பகுதிகளாக நாவல். ஒவ்வொன்றுக்கும் இடையில் வருடங்களின் நீளம் கால இடைவெளியாக இருக்கிறது. 


ஒரு பெண் குழந்தை பிறப்பில் நாவலின் தொடக்கம். சிறுவயதில் அந்த குழந்தையை கொஞ்சி மகிழும் அந்த சந்தோசம் குழந்தையை பள்ளியில் சேர்த்த சில நாட்களில் எவ்வாறு மாறிப்போகிறது... பெண் குழந்தைகளின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதை போல பாவிக்கும் அந்த கிராமத்து மனநிலையானது அவர்கள் அறிந்தும் அறியாமலும் அடிமைத்தனத்தை பெண்களின் மேல் திணிப்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பு என்பதை வண்ணாங்கணக்கு எழுதும் அளவிற்கு தெரிந்தால் போதும் என்று சொல்லும் அம்மாச்சி மூலமாக காலம் காலமாக இருந்து வரும் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதைக் காண ஓர் இடம். அதே பெண் குழந்தை தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாட ஆசைப்படுகிறாள். ஆனால் அந்த ஆசையையும் ஆண் பெண் பாகுபாட்டை காண்பித்து ஒரு பெண் எப்படி ஆண்களுடன் சேர்ந்து விளையாடலாம் என அவளை அடித்து வீட்டிற்குள் இழுத்துச்செல்லும் பெற்ற தகப்பனின் எண்ணத்தின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார். ஆக ஆணும் பெண்ணும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை வரையறுத்து அதற்குள்தான் அவர்களின் வாழ்க்கை என விரும்புவதை கிராமத்துச் சூழலில் இருந்து காட்டுகிறது நாவல். 


14 வயதில் கதை நாயகிக்கு திருமணம் முடிகிறது. மிகக்குறுகிய காலத்திலேயே ராணுவத்திற்கு சென்ற அவன் இறக்கிறான். அப்பொழுது அவள் கர்ப்பமாக இருக்கிறாள் அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. 16வது வயதில் மறுமணம் நடக்கிறது. மறுமணம் என்பது அவளுடைய வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு பதிலாக வலியை கொடுக்கிறது. முதல் கணவனுக்கு குழந்தை பெற்று தந்தாலும் இரண்டாவது கணவனால் இவளுக்கு குழந்தை உண்டாகவில்லை. ஆனால் அவன் இவள் மேல் குறை இருப்பதாக கூறி இவளுடைய தங்கையையும் மணமுடித்துக் கொடுக்க மீண்டும் மீண்டும் தூண்டுகிறான். ஆனால் அவள் மறுக்கிறாள். 


அந்த வலியிலிருந்து மீள அவ்வப்போது தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகிறாள். அவள் மறு மணம் முடித்ததால் மற்ற மூன்று தங்கைகளுக்கும் திருமணம் நடக்காமல் தள்ளிப் போவதாக கூறுகிறாள் தாய். ஒருபுறம் கணவனின் கொடுமை. மறுபுறம் தாய் இப்படி கூறியதால் உண்டான வலி. இரண்டிலிருந்தும் அவள் எப்படி மீள்கிறாள்... முடிவு திரைப்படத்தில் ஒரு பாடலில் பெரு மாற்றம் உண்டாவது போல, கதையிலிருந்து ஒரு பெருத்த இடைவெளியை உண்டாக்குவது போல வலியத் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சி இப்படியாகவும் இருக்கலாம், அவள் அடிமைப்படுத்தும் ஆண்களின் சிந்தனையை பொடிப்பொடியாக சிதைக்க வல்லவள் என்பதாக நாவலின் அணிந்துரையில் இப்போக்கை எழுத்தாளர் போப்பு அவர்கள் பாராட்டி இருக்கிறார். 


தோழர் காமுத்துரை அவர்கள் ஒரு வயதான பாட்டியை முதன்மைப்படுத்தி எழுதிய கோட்டை வீடு நாவலின் இயல்புப்போக்கு இந்நாவலில் இல்லையோ என நினைக்க வைக்கிறது. ஆனாலும் நான் பார்த்த இடங்கள், அவற்றில் நான் பார்க்காத மனிதர்களின் வாழ்வை, எளிய மக்களின் வாழ்வியலை தனக்கேயுரிய எள்ளல், வலி, அன்பு, ஆணாதிக்க சிந்தனை இவற்றை உறவுகளோடு தொடர்புபடுத்தி மண்ணின் மணம் மாறாமல் காட்சிப்படுத்திய விதத்தில் நாவலில் எப்போதும் தான் கைதேர்ந்தவர் என நிரூபித்துள்ளார் தோழர் காமுத்துரை. 


பேரன்பும் வாழ்த்துகளும் தோழர்...


யாழ் தண்விகா

Saturday, 21 February 2026

நேச அலைகள் #மொசைக் குமார்


 நேச அலைகள் 

சிறுகதைத்தொகுப்பு 

ஆசிரியர் மொசைக்குமார்

பாரதி புத்தகாலயம் வெளியீடு 

விலை ரூபாய் 150


தொகுப்பில் மொத்தம் 25 சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நிகழ்வை பேசுகிறது.


சிறு கதைக்காக மெனக்கெடல் என்பது அவசியமில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை வாசித்தவுடன் ஒவ்வொரு கதையும் ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கதையை கொண்டிருக்கிறது. ஆனால் அதனை நாம் பதிவாக மாற்றாமல் அல்லது அதனை ஒரு விஷயமாக கருதாமல் கடந்து வந்துவிடுவதால் அந்த நிகழ்வு குறித்து பிறருக்கு நம் பகிர்தல் சென்று சேராமல் போய்விடுகிறது. தொகுப்பில் ஒவ்வொரு கதையும் இட்டுக்கட்டி கூறாமல் தான் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வையும் கதை ஆக்கியிருக்கிறார் மொசைக்குமார். 


பிறநாட்டு கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், புனைவுக் கதைகள் என நம்முடைய அறிவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்லக்கூடிய சூழலில் நேச அலைகள் நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் கதையை, நாம் வாழவேண்டிய கதையை அறிய ஒரு வாய்ப்பு அளித்து இருக்கிறது என்றே கூறலாம்.


கட்டுமான தொழில் செய்து வரும் மொசைக்குமார் அவர்கள் தன் பணி சார்ந்த பல கதைகளை இத்தொகுப்பில் கூறியுள்ளார். இவர் கதை கூறும் பாணி கொஞ்சம் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையும் ஒரு நிகழ்வை பேசத் தொடங்குகிறது. பின்னர் அந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அரசியலைப் பேசி வளர்கிறது. தொடர்ந்து முடிவாக கதையின் ஆரம்பத்தில் கூறிய நிகழ்வின் தொடர்ச்சியைக்கூறி கதை முற்றுப்பெறுகிறது.


உதாரணமாக மணியாசுக்கட்டை என்ற கதை. இக்கதையில் சிறுவன் பள்ளிக்குச் செல்லும் சிறுவன் அடிக்கடி பென்சில் ரப்பர் இவற்றை தொலைத்து விடுகிறான். இவன் இப்படி செய்வான் என்பதை அறிந்த தந்தை மொத்தமாக பென்சில்களை, ரப்பர்களையும் வாங்கி வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை மகன் தொலைத்த பொழுதும் அவனைத் திட்டிக் கொண்டே தான் வாங்கி வைத்திருக்கும் பென்சிலை, ரப்பரை அவனுக்கு கொடுக்கிறார். வீட்டில் உள்ள அம்மா தன் பங்குக்கு அவனை திட்டுகிறார். இருந்தாலும் இந்தப் பழக்கம் நீடிக்க கூடாது என்பதற்காக தந்தை இனிமேல் நீ பென்சிலை தொலைத்தால் திரும்ப நான் வாங்கித் தர மாட்டேன். இதுதான் கடைசி எனக்கு ஒரு பென்சிலை தருகிறார். இதனைத்தொடர்ந்து வேலைக்குச் செல்லும் பகுதிக்கு தந்தை கிளம்பிவிடுகிறார். அங்கு சென்று கட்டிடம் கட்டும் பணிக்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துவிட்டு பணிகளை தொடங்குகிறார். அந்த சமயம்தான் பணிக்குத் தேவையான மணியாசுக்கட்டை இல்லை என்பது தெரிய வருகிறது. வீட்டிலிருந்து வரும் பொழுது அதனை எடுத்து வந்தோமா அல்லது கடந்த முறை பணியாற்றிய இடத்திலேயே மணியாசு கட்டையை வைத்துவிட்டு வந்து விட்டோமா அல்லது வரும் வழியில் எங்கேயாவது விழுந்து இருக்குமா என்ற குழப்பம். இந்தக் குழப்பத்தின் வாயிலாக ஒரு ஞானம் பிறக்கிறது தந்தைக்கு. அது என்னவென்றால் இவ்வளவு வயதான தனக்கு பணிக்குத் தேவையான பொருளை எங்கே வைத்தோம் எங்கே தொலைத்தோம் என்பது குறித்த ஞாபகம் இல்லாத பொழுது பள்ளிக்குச் செல்லும் சிறுவன் பென்சில், ரப்பரை எப்படி தொலைத்தோம் என்பதை எப்படி நினைவில் வைத்திருப்பான் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதன்பின் மகனிடம் பென்சிலை தொலைத்ததற்காக திட்டியது குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார் தந்தை என்பதாக கதை முடிகிறது.


சின்னச் சின்ன சில்லறை வேலைகளுக்கு மட்டும் தம்மைப் பயன்படுத்திக்கொண்டு பெரிய வேலைகளுக்கு வெளியூர் ஆட்களைப்போட்டு கட்டிட வேலைகள் பார்க்கும் முதலாளிகளைத் தோலுரிக்கிறது ஒரு கதை.


தன்னிடம் வேலை பார்த்த ஒருவன் பெரிய கொத்தனார் ஆன பின் அவனிடம் வேலைக்குச் செல்லுதல் பற்றிய ஒரு கதை.


மனைவியுடன் பயணித்துச் செல்கையில் பேருந்தில் நிகழும் சம்பவம், மனைவி தேர்வெழுத உடன் சென்றிருந்த பொழுது அங்கு மல்லிக்கட்டி வாங்கிய தயிர்சாதம் பற்றிப் பேசும் கதை, பழையன கழிதலும் எனபது எப்படிப்பட்ட வலி என்பதை உணர ஒரு கதை இப்படி எல்லாம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி நம்மை கடந்து போன வாழ்வை மீண்டும் வாழவைக்கும் பணியைச் செய்கிறது.


வாசித்து தோழர் மொசைக் குமார் வாழ்வை அறியலாம். அப்படியே அதன் வாயிலாக நமது வாழ்வையும்...


வாழ்த்துகள் தோழர்...

எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை #முகில்

 எம் ஆர் ராதா

கலகக்காரனின் கதை


முகில்


சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்


ராதா குறித்து பல தகவல்கள் நூல் முழுதும். சிறு சிறு தகவல்கள் ஆயினும் வரலாற்றின் போக்கிலும் அது பதியும் வகையிலும் ஆசிரியரின் மொழி நடை.

நாடகத்தை, கலையை உயிராகக் கருதி கடைசி வரை வாழ்ந்த ஓர் அசாத்திய கலைஞனின் வரலாறு.


முற்போக்கு நாடகங்கள், புராணக் குப்பைகளைக் கிண்டலடிக்கும் நாடகம் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு எதிர்ப்புகள் அதை ராதா கையாண்ட விதம் இன்றைய ஹீரோக்கள் அறியவேண்டிய பாடம். Time to lead என்று துணைத் தலைப்பு கொடுத்துவிட்டு படம் ஓட அரசிடம் மண்டியிட்டு வாழ்ந்த நடிகர்கள் போலில்லை ராதா.


பெரியார், அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் என பலர் வந்து போகின்றனர். ரத்தக்கண்ணீர் இவர் தனது ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடித்த படம் என்பது ஆச்சர்யம். எம் ஜி ஆரைச் சுட்டதற்கான காரணம், அதற்காக அலட்டிக் கொள்ளாமல் அதை சரியென்று சொல்லும் துணிச்சல் ராதாவுக்கு மட்டும் தான் இருந்திருக்கும். காமராஜர், பெரியார், அண்ணா இவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறித்த பல தகவல்கள். சிவாஜியிடம் ஒருமுறை வீட்டில் சென்று சாப்பாடு எடுத்துவர காரைக் கேட்கிறார் ராதா. சிவாஜி, அண்ணே அது இம்பாலாண்ணே என்று சொல்கிறார் விலை உயர்ந்த கார் என்று சொல்லாமல். சில காலத்திலேயே அதே இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி வந்து சிவாஜி முன் நிறுத்த அவர் திகைக்கிறார். அப்போது ராதா அது வெறும் தகரம் தான். வைக்கோல் ஏற்ற வண்டி கிடைக்காததால் இதில் ஏற்றச் சொல்லிவிட்டேன் என்று மனிதம் போதிக்கிறார். நடிகர் அசோகனிடம் பேசும் போது ஹீரோ நடிகர்களின் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்கிறார்.


ராதாவின் பேட்டி, மலேசியாவில் பேசிய பேச்சு, நடித்த படங்களின் பட்டியலும் பின் இணைப்பாக தந்திருக்கிறார்.


வாசிக்க வாசிக்க மனதில் இருந்த ராதாவின் பிம்பம் உச்சத்திற்குச் சென்று நிற்பதை மாற்றவே இயலாது.


வாழ்த்துகள் Mugil Siva தோழர்.


யாழ் தண்விகா

வருச நாட்டு ஜமீன் கதை #வட வீர பொன்னையா

 

புத்தகம்:     வருச நாட்டு ஜமீன் கதை

ஆசிரியர்:   வடவீர பொன்னையா

பதிப்பகம்:  விகடன் பிரசுரம்


மூன்று தலைமுறைகளை இந்த நூல் பேசுகிறது. ஆண்டி வேலப்ப நாயக்கர், அவருடைய தம்பி இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் இருவரின் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் மூன்று திருமணம் முடித்த பின்பு நான்காவதாக ஆண் வாரிசுக்காக வெள்ளையம்மா என்பவரை திருமணம் முடிக்கிறார். அவருக்கு பிறந்த மகன்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். மக்களிடம் இருந்து வரக்கூடிய வரிப்பணம், தானியங்கள், விலங்குகள் இப்படி பல வரும்படிகளை வைத்துக்கொண்டு ஜமீனுக்கு உரிய பலான வேலைகளையெல்லாம் செய்துவருகிறார்.  இடையில் பளியன் சித்தன் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் மூலமாக பல்வேறு சித்துவேலைகளை கற்றுக் கொள்கிறார்  ஆண்டி வேலப்ப நாயக்கர். ஒரு கட்டத்தில் பளியன் சித்தன் வேலப்ப  நாயக்கரிடம் பள்ளிகளுக்கும் ஜமீனில் பளியர் இனத்திற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்களையும் ஜமீனுக்கு இணையான பணிகளில் அமர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். இதைக் கேட்ட வேலப்ப நாயக்கர் சித்தனை வேல் கொண்டு  எய்தி கொன்றுவிடுகிறார். இறப்பதற்கு முன் சித்தன், உன் ஜமீனுக்கான ஆண் வாரிசு பிறப்பதற்கு முன்பு நீ இறந்து விடுவாய். அதுபோலவே அது காலம் முழுவதும் தொடரும். ஆண் வாரிசுகள் பார்ப்பதற்கு முன்பே தகப்பன் உயிர் இருக்காது என்று சாபம் விடுகிறான். அதுபோலவே சாமியப்ப நாயக்கரைப் பார்க்காமலேயே வேலப்ப நாயக்கரின் உயிர் பிரிகிறது.  சிறு வயதில் அரியணை ஜமீனாக வரமுடியாது என்பதால் வெள்ளைத்தாயம்மா பொறுப்பில் ஜமீன் வருகிறது. சாமியப்ப நாயக்கர் சென்னையில் படிக்க செல்கிறார். சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது ஜனகம் என்ற நாட்டியக்காரி உடன் திரும்பி வருகிறார். அவள் வெள்ளைக்கார துரையுடன் செல்ல வேண்டியவள். அவளின் அழகில் மயங்கி இழுத்து வருகிறார் சாமியப்ப நாயக்கர்.  நீண்ட காலம் ஜனகத்துடன் காதல், காம வாசம் தொடர்கிறது. அவளுக்காக அனைத்து வசதிகளுடன் மாளிகை ஒன்றும் கட்டித் தருகிறார். பொன்னும் பொருளும் அள்ளி இறைக்கிறார். அத்தனையும் மக்கள் பணம். இச்சூழலில் சாதியிலிருந்து வேலுத்தாயம்மாள் என்ற பெண்ணை கட்டி வைக்கிறார்கள். வேலுத்தாயம்மாளை கட்டிய பின்னரும் சாமியப்ப நாயக்கரின் பெண் வாசம் நிற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண் பித்து பிடித்துத் திரிகிறார். இது தெரிந்த  வேலுத்தாயம்மாள் ஜனகத்தை ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். எவ்வளவு சொல்லியும் சாமியப்ப நாயக்கர் கேட்காததால் தெப்பம்பட்டி சென்றுவிடுகிறார் வேலுத்தாயம்மாள். ராஜமாணிக்கம் முதல் பெண்ணாக பிறக்கிறார், பிரச்சினை இல்லை. மனம் திருந்தி வந்த சாமியப்ப நாயக்கருடன் கூடல் நடக்க, இரண்டாவதாக ஒரு ஆண் பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையைப் பார்க்கும் முன்னரே சாமியப்ப நாயக்கர் மறைந்துவிடுகிறார். சாமியப்ப நாயக்கர் மக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணம் முறையாக வெள்ளையர்களுக்கு கப்பமாக செல்லாததால் கண்டமனூர் ஜமீன் ஏலம் போகிறது, கொஞ்ச பகுதிகளைத் தவிர்த்து அனைத்தையும் எட்டயபுரம் ஜமீன் ஏலத்திற்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாம் பறிபோன நிலையிலும் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை சாமியப்ப நாயக்கருக்கு. ஜமீனை மீட்க உதவி செய்வதாக திருவாங்கூர் ராஜா சொல்ல அவரைப் பார்க்க குமுளி வழியாகச் செல்லும்போது நெஞ்சு வலி வந்து பாளையம் ராவுத்தர் வீடு வர அங்குதான் உயிர் பிரிகிறது சாமியப்ப நாயக்கருக்கு. அவர் இறந்த இந்தச் சூழலில் பிறந்த கதிர்வேல் சாமி பாண்டியன் என்ற மைனர் பாண்டியன் சென்னைக்கு சென்று படிக்கும் சூழல் வந்தபோதிலும் அங்கு வேண்டாமென்று வேலு தாயம்மாள் மறுத்துவிடுகிறார்.  மைனர் பாண்டியன் தன்னுடைய தந்தையைப் போலவே பெண் பித்து பிடித்து திரிகிறார். முறையான படிப்பும் இல்லை சேவகர்கள் பலரை வைத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுகிறார். பித்தனின் வாக்கு பலித்துக் கொண்டு வருவதை நம்ப மறுக்கிறார். எத்தனையோ பெண்களிடம் சல்லாபம் செய்த மைனர் பாண்டியன் ஒரு கட்டத்தில் 13 வயதான வேலம்மா என்பவரை தூக்கி சென்று திருமணம் முடிக்கிறார். முடித்த போதிலும் வழக்கம்போல் அடாவடி தொடர்கிறது. பெண் சகவாசம் தொடருகிறது. ஜமீன் ஒருபக்கம் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் சுதந்திரப்போராட்டம் நடந்து கொண்டிருக்க மக்கள் ஜமீனில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சித்தன் வாழ்ந்த அதே குகையில் வாழத் தொடங்கிய மைனர் பாண்டியன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கூழைக் குடித்து நாட்களைக் கடத்துகிறார். அப்படியே அவருடைய வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. அடக்கம் செய்வதற்கு கூட சொந்த நிலம் இல்லாத ஒரு ஜமீனாக மைனர் பாண்டியன் கடைசியில் இறக்கிறார். 

        ஜம்புலிபுத்தூர் கோவிலில் பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டி விட, அந்தப் பெண்களை ஜமீன் ஏகபோகமாக அனுபவித்தல், வயசுக்கு வந்த பெண்களை காத்துக் கருப்பு அண்டக்கூடாது என்று அரண்மனைக்கு கொண்டு வந்து விட அவர்களை அனுபவித்தல், விரும்பும் பெண்களை சேவகக்காரர்கள் துணையோடு தூக்கி வந்து அனுபவித்தல், பிறரின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குதல், தாம் தூம் செலவு, சாதகம் செய்யும் பிறருக்கு ஊரைத் தானமாக வழங்குதல், வெள்ளைக்காரன் கண்களை மறைத்து பல திருட்டுத் தனங்களைச் செய்தல், பெண்களை போகப் பொருளாகப் பார்த்தல், சொத்துக்களை பாதுகாக்க பெண்களை ஜமீன் பொறுப்பில் அமர வைத்தல் வரலாறெங்கும் உள்ள அவலங்களை மண்ணின் மொழியோடு வட வீர பொன்னையா கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க அந்தக் காலத்திற்குள் பயணிக்கும் எண்ணம் பீறிடுகிறது. இன்னொன்றையும் சொல்லவேண்டும்.


         இப்படிப் பட்டவர்களின் செயல்களைத்தான் அப்படியே தொடர ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொண்டாடி வருகிறதோ பல கூட்டம், அக்காலம் போல இப்பவும் சொத்துக்களை களவாடுதல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற செயல்களைச் செய்ய நினைக்கிறதோ என்ற எண்ணமும் மேலிடாமல் இல்லை.


வாழ்த்துகள் வட வீர பொன்னையா தோழர்.


யாழ் தண்விகா

Friday, 20 February 2026

பாவக் கதைகள்

 

பாவக் கதைகள்


கௌதம் வாசுதேவ் இயக்கம்.


கௌதம், சிம்ரன், இரு பெண் குழந்தைகள், ஒரு பையன். அமைதியான வாழ்க்கை. வயதுக்கு வராத இளைய மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். போலீசுக்கு செல்வதா வேண்டாமா என குழப்பம். பின் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். மகன், இப்படிச் செய்தவன் யாராக இருக்கும் என நண்பனுடன் சேர்ந்து தேடுகிறான். ஒரு கட்டத்தில் மகளைக் கொன்றுவிட தாய் நினைத்து சில பல யோசனைக்குப் பிறகு கற்பு என்பது மயிருக்குச் சமம். அவள் படித்து பெரியாளா வருவா. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று நல்ல முடிவை எடுக்கிறாள். மகன் பாலியல் வல்லுறவு செய்தவனைக் கண்டுபிடித்தானா அவனுக்கு தண்டனை கொடுத்தானா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


வான்மகள்

நம்பிக்கை...!


விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா இயக்கிய பாவக்கதைகள் பார்த்தேன்.


சாதி ஆணவப் படுகொலை, லெஸ்பியன் குறித்த காட்சிகளோடு விக்னேஷ் சிவன் படம் அருமை. கொலை செய்யத் துணிந்தபின் வருகின்ற காட்சிகள் பெரும் பதட்டத்தை மனதிற்குள் உண்டுபண்ணின. லெஸ்பியன் என்பதை நிரூபிக்க முத்தக் காட்சி! கடைசியில் குறிப்பாக அந்த குட்டி மனிதனை அவன் கூறிய சொல்லால் அவனையே திட்டும் இடம் செம. விச தே... பையா. அதை வில்லன் சொல்லிச் சிரிக்கிறான். அவனுக்கும் இது பொருத்தம் தான்.


திருநங்கைகளின் ஆசைகள், அவர்களின் மேலான சமூகப் பார்வை குறித்த சுதா கொங்காரா படம். திருநங்கையாக நடித்தவர் சிறப்பாகச் செய்திருந்தார். வெற்றிலை மெல்லல் அவ்ளோ அழகு. மதம் கடந்த திருமணம், அவர்கள் அடையும் இன்னல்கள், பெற்றவர்கள் மனம் திருந்தியதாக நினைத்து ஊர் வந்து ஏமாந்து திரும்புதல் என காட்சிகள். பாடல் சுகம். அருமை...


பாவக் கதைகள்


வெற்றிமாறன் இயக்கிய பகுதியைப் பார்த்தேன். சாதி மறுப்பு திருமணம் செய்த தனது மகளுக்கு வளைகாப்பு நிகழ்த்த ஊருக்கு அழைத்து வருகிறார் பிரகாஷ்ராஜ். மகளும் மருமகனும் அருமையான வாழ்வை வாழ்கிறார்கள். அதை கண்ணெதிரே காண்கிறார் தந்தை அதுவும் அவ்வாழ்வை பிரகாஷ்ராஜ் குடும்பம் இதுவரை அனுபவித்திராத நிலையில். அழைத்து வரப்பட்ட மகள் படிப்பு சுதந்திரம் தரும், நல்வாழ்க்கை தரும் என்று தங்கைகளிடம் கூறுகிறார். குடும்பத்தினர் அனைவருடனும் இரவில் உணவு உண்கிறார். இடையில் மகளுக்கு விக்கும்போது தண்ணீர் கொண்டுவரச் செல்லும் தந்தை அதில் விசம் கலந்து மகளுக்கு கொடுக்கிறார். இரவில் குடும்பத்தினர் அனைவரையும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு மகள் வாந்தி எடுப்பதையும், இரத்தம் கக்குவதையும் பார்த்து சாகும் வரை வேடிக்கை பார்க்கிறார். எதிர்த்துப் பேசும் மனைவியை அடித்து வேறொரு அறையில் பூட்டி விடுகிறார். மறுநாள் மருமகன் வந்து வில்லங்கம் நடப்பது, ஊர் கூடுவது, வழக்கு என்பதெல்லாம் ஓவியமாக எழுத்தாக திரையில் தெரிகிறது.


எதைச் சொல்ல விழைகிறார் வெற்றிமாறன் என்பது புரியவில்லை. இப்படி செய்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்த இந்த கால கட்டத்தில் அவசியம் என்ன வந்தது. அதற்கு தீர்வு என்ன என்பதை எழுத்துகள் போட்டு நீதி சொல்வதை எத்தனை பேர் பார்ப்பார்கள்... அசுரனில் கல்வி எனும் தீர்வு சொன்ன வெற்றிமாறன் இப்படி சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஏமாற்றி அழைத்து வந்து இப்படிப் பிரிக்கலாம் என்கிறாரா... பாவக் கதைகள் என்னும் தலைப்புக்கு நியாயம் செய்ய இதை மட்டும் காட்சிப் படுத்தினால் போதும் என நினைத்து விட்டாரா...


பெருத்த ஏமாற்றம்.

மாவீரர் ஒண்டிவீரன் பகடை #எழில்.இளங்கோவன்

 

மாவீரர் ஒண்டிவீரன் பகடை

எழில். இளங்கோவன்


கருஞ்சட்டைப் பதிப்பகம்


நெற்கட்டும் செவ்வயல் பாளையத் தலைவர் பூலித்தேவன். அப்பாளையத்தின் படைத்தலைவன் ஒண்டிவீரன். இருவரும் சாதியால் வேறுபட்டு நிற்பினும் நட்பால் இணைந்து பாளையத்தைக் காத்துவந்துள்ளனர். பிரெஞ்சு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் பல போர்க்களங்களில் இணைந்தே போரிட்டுள்ளனர். நெற்கட்டும் செவ்வயல் பாளையம் பல காலமாக அருந்ததியர்கள் ஆண்டுவந்த பாளையம். அங்கு பஞ்ச காலத்தில் பூலித்தேவன் பாட்டனார்கள் வருகை தர, காலப்போக்கில் பூலித்தேவன் தலைவனாகவும் வர வாய்ப்பு அளிக்கிறது. அது குறித்த தகவல்கள் இல்லை. மேலும் எப்படி அருந்ததிய மக்களிடம் இருந்த ஜமீன் எப்படி பூலித்தேவன் வசம் சென்றது என்பது குறித்த தகவல் இல்லை. ஒண்டிவீரன் களம் கண்ட போர்கள் நாட்கள், வருடத்தோடு இருக்கின்றன. ஆனால் அவரின் பிறந்த வரலாறு இல்லை. இன்னும் பல தகவல்கள் தேடி அளித்திருக்கலாம். ஒண்டிவீரன் குறித்த கதைப்பாடல்கள் நம்பும்படியாக இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார். ஒரு வீரன் வரலாறு இப்படி இருந்திருக்காது என்றே நமக்கும் தோன்றுகிறது. பூலித்தேவன் கடைசிப் போருக்குப் பின்னால் காலாடி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், பின் தன்னுடைய குலதெய்வ கோவில் என்று தப்பித்துச் செல்கிறார். அதன்பின் என்ன ஆனார் என்று வரலாற்றில் தகவல் இல்லை. பூலித்தேவன் தலைமறைவுக்குப் பின் பாளையத் தலைவராக வந்த ஒண்டிவீரன், பூலித்தேவனின் 3 குழந்தைகளையும் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்கிறார். அதே நேரம் ஒண்டிவீரன் மறைவு குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்கிறார் ஆசிரியர். இன்னும் தேடலை அதிகப்படுத்தி வரலாற்றை முழுமைப் படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு தொடக்கமாக நாம் எடுத்துக்கொண்டு நாமும் வாசிப்பின் மூலம் இன்னும் ஒண்டிவீரன் குறித்தும் பூலித்தேவன் குறித்தும் அறியவேண்டும்.


வாழ்த்துகள் தோழர்.

தமிழ்ப் பொங்கல்


 #தமிழ்ப்பொங்கல்


பனியில் 

மழையில் 

மெல்லிய சூரிய ஒளியில் தைத்திங்கள் பூக்க 

தமிழ்ப் பொங்கல் பொங்கிற்று


ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே வந்தாலும் 

நம்பிக்கையைக் கிஞ்சித்தும் கைவிடாமல் 

தொடர்கிறது பொங்கல்


திசையெங்கும் பசுமை பூக்க

உழைப்பவன் வாழ்வில் 

புதுவழி கிடைக்க 

மறக்காமல் சொல்லி விடுகிறோம்

"தை பிறந்தால் வழி பிறக்கும்"


போர் வரட்டும் என 

காத்திருப்பவன் அல்ல 

உலகத்தின் உணவுக்கென 

வயல் தோறும் 

வாழ் நாள் தோறும் 

பசுமைப் புரட்சி செய்பவன் உழவன் 


உலகம் சுருங்கி விட்டது 

கைக்குள் உலகம் 

போன்ற சொல்லாடல்களால் சொக்கிப் போகிறோம்

விவசாயிகளின் தற்கொலையை குறுந்தகவல்களால் ஏனோ

கடந்து போகிறோம்


மீத்தேன் 

ஹைட்ரோ கார்பன் 

நியூட்ரினோ 

எட்டுவழிச்சாலை 

திட்டங்கள் எல்லாம் 

வயலுக்குள் குழி தோண்டுகிறது

நவீனம் 

அவசியம் 

தேவை என்ற பெயரில்  

உலக வாழ்வின் நலனுக்குக்   கொள்ளி வைக்கிறது


உரக் கடை வைத்திருப்பவன்

ஒவ்வொரு நாளும் 

உயர்கிறான் 

விவசாயம் செய்பவன் 

விரக்தியில் ஏதோ ஒருநாள் 

பூச்சி மருந்து குடித்துச் சாகிறான் 


50 நாட்களுக்கும் மேலாக 

வேளாண் சட்டங்களை 

பசி என்றும்

பனி என்றும் பாராமல் 

எதிர்த்துக் களம் காணுகிறார்கள் 

50 உயிர்களுக்கும் மேலாக

உயிர் ஈந்தும் தீரமாக நிற்கிறார்கள்

விவசாய மக்கள் 


அதிகாரத்தின் அடிமையாக

இவர்களை நினைக்கிறது சர்வாதிகாரக் கூட்டம் 

அதிகாரம் உழைப்பவனுக்கு 

என்னும் வரை பரவட்டும் 

பசுமைப் போராட்டம்...


இத்தனைக்கு மத்தியிலும் தான்

தமிழர்களுக்கான பெருவிழா

இழிவும் கேடும் இல்லாத ஒரு விழா

பிறப்பு இறப்புத் தீட்டு களால் பாதிக்கப்படாத திருவிழா 

பச்சரிசியை உடலாகவும் குங்குமத்தைக் குருதியாகவும் வடித்து 

தமிழ் நில மக்கள் 

பொங்கல் சமைத்துப் 

பண்பாட்டுக் களமாடும் 

தனித்துவ விழா


தும்பைப்பூ 

பூலாம்பூ 

பிரண்டை 

ஆவாரம் பூ 

வேப்பம்பூ 

மாவிலை 

இணைத்துக் கட்டும் 

காப்புக்கட்டில் 

முகூர்த்தக்கால் 

ஊன்றிக்கொள்கிறது 

பொங்கல்.


சேனைக் கிழங்கு 

சேப்பங்கிழங்கு 

கருணைக்கிழங்கு 

சிறுகிழங்கு 

பனங்கிழங்கு 

பார்ப்பனர்களால் விலக்கப்பட்டவை.

உழவு குடியால் 

உலகம் உயர்த்தும் குடியால்

விரும்பப்பட்டவை. 

பொங்கல் வழிபாட்டில் வைத்து

வணங்கப்பட்டவை.


யானை கட்டிப் போரடித்த 

உழவு வாழ்வில் 

நடைமுறை வாழ்வில் 

இணைந்து வருவது மாடு. 

மேய்ச்சல் சமூகத்தின் 

உச்ச மிச்சம் மாடு. 

வேளாண் சமூகத்தின் 

முதன்மை மாடு. 

பசுவைக் கொண்டாடுதலும்

சல்லிக்கட்டும்

ஆதி விழாவின் நீட்சி.

தமிழன் தேசிய இனத்தான் எனப்

பெருமைபடத் தக்கதான சாட்சி.


இயற்கைக்கும் 

உழைப்பவர்களுக்கும்

கால்நடைகளுக்கும் 

நன்றி நவிலல் 

கடமையாக இல்லாமல் 

களிப்பாக அமையட்டும் 

வரும் பொங்கல்.


வயல் செழிப்பில் 

உழவர் மிளிரட்டும்.

பசுமைத் திறப்பில் 

பசி மறையட்டும்.


விவசாயம் மதிக்கும் 

ஆட்சி தோன்றட்டும். 

வேளாண் குடி வாழ்வில் 

வெளிச்சம் பூக்கட்டும்.


அனைவருக்கும் 

தமிழ்ப் பொங்கல் வாழ்த்துக்கள்.


வாய்ப்பிற்குப் பேரன்பும் மகிழ்வும்.

மும்பை இலக்கியக் கூடம்

வ.இரா. தமிழ் நேசன்தோழர்.


நன்றியோடு யாழ் தண்விகா

மழை முத்தம் #தனலட்சுமி பாஸ்கரன்

 


மழை முத்தம்' 

கவிதை நூல் 

- கவிஞர் யாழ் தண்விகா  


(விமர்சனம் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், திருச்சி)


தலைப்புக்குப் பொருத்தமாய் கவிஞரின் மழை நாளில் முகிழ்க்கும் காதல் உணர்வுகள் கவிதைக் களத்தை ஈரப் பதமாகவே வைத்திருக்கின்றன . எல்லோர் வாழ்விலும் வந்து போகும் யவனப் பருவம் . யவனத்தைக் காதலோடு கடக்காத மனிதரே இல்லை. சிலரது காதல் வெல்லும், சில தோற்கும், சில ஒருதலைக் காதலாகவே,. 

 காதல் திருமணத்தில் முடியலாம், முடியாமலும் போகலாம் . எந்த நொடியில் எப்போது, எப்படி வரும் என்றே சொல்லமுடியாதது காதல். காதல் உணர்வு தோன்றிவிட்டால் உலகமே சொர்க்கமாகி விடுகிறது! காதல் இள மனங்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது, ஆட்டிவைக்கிறது என்பதை யாழ் தண்விகாவின் ஒவ்வொரு கவிதை வரிகளும் உயிர்ப்போடு சொல்கிறது . இளம்பருவத்தினர் கையில் இந்த புத்தகம் கிடைத்தால் போதும். காதல் உணர்வுகள் இல்லாதவர் மனத்திலும் காதல் உணர்வுகள் கொப்பளித்து ,பட்டாம்பூச்சியை சிறகடிக்கத் தொடங்கி விடும் என்பது தான் இத்தொகுப்பின் சிறப்பம்சம் என்பேன் .


        "யார் தூண்டில் ? /யார் மீன் ?/ யார் யாரை/உண்ணுகிறோம் ?" கேள்வியில் போட்டிபோடுகிறது, காதலும், காமமும் .


"நிறம் தந்து கரையும்/பஞ்சு மிட்டாய்போல /காதல் நிறுத்திப் பசியாற்றுகிறது / நீயூட்டும் உணவு! ..."/ 

ஒன்று வயிற்றுப் பசி, இன்னொன்று உடற்பசி என்பதை பூடகமாய்ச் சொல்லும் வரிகள் ரசமானவை !


‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பதிவு! தோற்ற மயக்கங்களைப் பாடியவனின் தோற்றமும்கூட மயக்கம்தான். அகநானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் - காதல். காதலைக் கொண்டாடுவதில் பாரதியொன்றும் விதிவிலக்கல்ல. 


“காமத்தின் திரி/ எங்கெங்கு என்று தெரிந்திருக்கிறது/ உன் மோகத்திற்கு"

“வியர்வைக் காம்புகள்/ அனைத்துமே/ வாகைப் பூக்கள் ..மிகச் சிறப்பு . துளிர்க்கும் வியர்வைத் துளிகள் ஒவ்வொன்றும் வெற்றி வாகை சூடிய வாகைப்பூக்கள் என்ற வரிகள் காதலின் உச்சம்.


“அந்த நேரத்து / உன் மூர்க்கத்தனங்களுக்கு /கொஞ்சமும் எதிர்பேச்சு பேசுவதில்லை நான்"/

      இந்த வரிகளில் ஒரு பெண்ணை தன்னிலை மாறாது தன்னிலையில் தக்க வைத்துக்கொள்வதில் இருக்கிறது ஒரு ஆணுடைய காதல் என்பதைக் காட்டுகிறது. ஒவ்வோர் ஆண் மனதுக்குள்ளும் ஒரு பெண்பிம்பம் அவரவர் ரசனைக்கேற்ப செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு பெயர் இருக்காது உருவம் இருக்காது. ஆனால், அதற்கான இருப்பு ஒரு பெண் கை கோத்திரும் நிலையைக் கொண்டிருக்கும் 

காதலுக்கு அளவீடென்று எதுவுமில்லை; ஒருவர் மீதான விருப்பத்துக்கு அளவென்று அனுமானித்து "என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்" என்று கேட்பது பேரபத்தம். கவி.யாழ் தண்விகாவின் காதலும் அப்படிப்பட்ட அளவீடுகளைக் கடந்தது.


"பாரதிக்குக் கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா" என்று ஒரு பெண்ணுக்குக்கான காதல் உயிருக்கு நிகரென்று பாரதி - கண்ணம்மாவுக்கு ஒப்பிடுகிறார் கவிஞர் அறிவுமதி. கண்ணம்மாவை பாடிய அந்த பாரதியைப்போல சமீபத்தில் கண்ணம்மாவை அழகு பூஞ்சிலையாக்கி பாடியிருந்தார் நம் யுகபாரதி. அதில் ஒரு பெண்ணின் அழகை எழுதுவதற்கு "பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்" என்று எழுதியிருப்பார். அது அத்தனை உண்மை என்பதை காதல் சொட்டச் சொட்ட தன் கவிதைகள் முழுவதிலும் அள்ளித் தெளித்திருக்கிறார் கவிஞர். காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்புத் பரிசாக பரிமாறிக்கொள்ள ஏற்றதொரு புத்தகமாகஅதுவும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று படைத்திருப்பதில் , வெளியிட்டதில் கவிஞர் நூறு சதம் தன் எண்ணத்தில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும் . 

காதலுக்கு வயதில்லை. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் பரிசளிக்க உகந்த படைப்பு இது.  

நன்றி: 

கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி

தோழர் திரு, வடுகபட்டி

ஐரோப்பிய நாடோடிக் கதைகள்


 ஐரோப்பிய நாடோடிக் கதைகள்

லெஸ்லி ப்ரூக்


தமிழில்: சரவணன் பார்த்தசாரதி


பாரதி புத்தகாலயம் வெளியீடு


4கதைகள்


நன்னெறிக் கதைகள், துணைப்பாடம் இப்படியெல்லாம் பள்ளிக் குழந்தைகள் கதைகள் மூலம் வாழ்வியலை அறிந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. நல்லன தீயன குறித்தோ வாழ்வு குறித்தோ மனிதர்கள் குறித்தோ எவ்வித கருத்தும் இல்லாத தலைமுறை உருவாகிவருவது பெரும் சிக்கலை விளைவிக்கவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


எளிமையான பேச்சு மொழியில் உள்ள கதைகள். நகைச்சுவையாக குட்டிப் பிள்ளைகளை பாடம் நோக்கி கவனத்தைத் திருப்ப இக்கதைகள் உதவும். தங்க வாத்து, மூன்று கரடிகள், குட்டிக் கட்டையன், ஓநாயும் மூன்று பன்றிக் குட்டிகளும். எந்தக் கதையும் எந்த கதாபாத்திரத்தையும் பகடி செய்யவில்லை. தங்க வாத்து கதை, உதவும் குணம் நமக்கு நன்மையைச் செய்யும் என்ற கருத்தை உணர்த்துகிறது. மூன்று கரடிகள் கதை, எக்கருத்தையும் சொல்லவில்லை. ஆனாலும் நன்று. குட்டிக் கட்டையன் கதை நகைச்சுவை. உருவக் கேலி இல்லை. ஓநாயும் மூன்று பன்றிக் குட்டிகளும் கதை, ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து எப்படி இந்த வாழ்வைத் தக்க வைப்பது என்பதைக் கூறுகிறது. 


வாசிக்கலாம் குழந்தையாக.

குழந்தைகளுக்காக.

குழந்தைகளோடு.


வாழ்த்துகள் தோழர்.

மூன்னா வான்னா சொன்ன இழவு வீட்டுக் கதைகள் #தோழர் புலியூர்


 மூன்னா வான்னா சாமி சொன்ன

இழவு வீட்டுக் கதைகள்

#சிறுகதைகள்


தோழர் புலியூர் முருசேசன்


குறி வெளியீடு

74 பக்கங்கள்

80/- ரூபாய்


7கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு களம். சக்லனா எனும் பனி உருண்டைக் கதை பணி நிமித்தம் குழந்தையை தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வேறிடத்தில் வசிக்கும் பெற்றோர், அவர்கள் வாழ்வு குறித்து, சிறுமியின் ஆசை, வயதானோர் ஒரு குழந்தையின் ஆசையை எவ்வளவு நிறைவேற்றிட இயலும் என்பதைப் பேசுகிறது. ஒரு புது வாழ்வை அறிந்து கொள்ளக் கிட்டியது இக்கதை.


செம்போத்துவின் மாணிக்கப்பரல் நவீனம் நோக்கி நகரும் வாழ்வின் அவலங்களை குறியீடுகளாகக் காட்டுகிறது.


கழற்றி வைக்கப்பட்ட மகளின் தலை கதையானது அதிகாரம், அதற்கு கீழ்ப்படியும் ஒருவன் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்து பேசுகிறது. தலையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு முண்டமாக செய்ய வேண்டிய வேலையைத் தவிர வேறெதையும் யோசிக்க விடாத கார்ப்பரேட்தனம் குறித்தும் அதற்கு கையாளாக விளங்கும் ஒருவனுக்கு பணம் ஒன்றே பிரதானம், அதற்காக என்ன மாதிரி அவன் மாறுகிறான் என்பதை அருமையாக உணர்த்துகிறது.


பூர்வீகம் பிடுங்கப்பட்ட, அடையாளம் அழிக்கப்பட்ட குடிகளின் துயர் வாழ்வை வாழ்பவர்களால் மட்டுமே உணரமுடியும். அதனை கை விலங்கிடப்பட்ட நீல நிற ஏரி கதை உணர்த்துகிறது.


தாழம்பூ டீச்சர் கதை பணத்திற்காக மனிதர்கள் எதையும் செய்வார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அன்பிற்காக ஏங்கும் மனிதர்களை ஏமாற்ற அதற்காக காத்திருக்கும் மனிதர்கள் வந்து சேர்கிறார்கள். அன்பை வதம் செய்கிறார்கள். காலம் சில பல இடங்களில் வாழ்வைக் கலைத்துப் போடும் வேலையை அனாயசமாகச் செய்து முடிக்கிறது. எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்தோம் என்றால் வாழ்வு வாழும் அதன் விருப்பத்திற்கு. நம் வாழ்வையே நாம் வேடிக்கை பார்க்கும் அவலத்திற்கு ஆளாவோம் என்பதை அருமையாக காட்சிப் படுத்தியுள்ளது. காரைக்கால் அம்மையாராக தாழம்பூ டீச்சர் நிறைவாக இருக்கிறது. தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதை.


தொகுப்பின் தலைப்புக் கதை, தொகுப்பெங்கும் இழவு வீட்டுக் கதைகளாக இருக்குமோ என்ற எண்ணம் தந்தது. ஆனால் அப்படி இல்லை. இறந்த கிராமத்து மனிதர்களின் வீட்டில் வைக்கப்படும் ஒப்பாரியில் அவர்களின் வாழ்ந்த வாழ்வை உயர்த்திச் சொல்லும் பாங்கு, அதனை சில ஒப்பாரிப் பாடல்கள் மூலம் கடந்து கதைக்குள் பயணித்தல், கிராமத்தில் நடக்கும் இழவுக்குச் சென்று வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வை உண்டுபண்ணியது.


வாழ்வுணர வாசிக்க வேண்டிய நூல்.

வாழ்த்துகள் தோழர் புலியூர் முருகேசன்.

புத்தக அச்சாக்கம் கட்டமைப்பு பிடித்திருந்தது.

வாழ்த்துகள் தோழர் குறி மணிகண்டன்.

பூனைகள் இல்லாத வீடு #சந்திரா


 பூனைகள் இல்லாத வீடு


சிறுகதைத் தொகுப்பு


#சந்திரா


உயிர்மை பதிப்பகம்

110பக்கங்கள்


11கதைகள். பால்யத்தை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள். கதை சொல்லும் ஒரு இயக்குனரின் பார்வையில் தான்  கதைகள் பெரும்பாலும். எக்கதையும் இயல்பிலிருந்து அன்னியமாகப் படவில்லை என்பதை கதைகளின் ஆகச்சிறந்த சிறப்பெனக் கொள்ளலாம்.


புளியம்பூ, அடித்தட்டில் வசிக்கும் ஒருவனின் வாழ்க்கை, ஆசை, கடைசியில் அது எப்படி கடனால் மூழ்கிப் போகிறது என்பதைச் சொல்கிறது. இதே போல் ஒரு கதை படித்தது போலிருக்கிறது. ஆனால் எதுவெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.


திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்... பள்ளிக்குப் போன நாட்களை, வகுப்பை, ஆசிரியர்களை, நண்பர்களை, தோழிகளை நினைவுபடுத்தியது. அருமை 


பூனைகள் இல்லாத வீடு, காலத்தின் முன்னால் நினைவுகள் எதுவுமற்றுப் போய்விடும் அளவிற்கு வேகமெடுக்கும் சூழலை காட்சிப்படுத்தியது.


கிழவிநாச்சி, நல்ல பேய்க் கதை. பிசாசு படம் போல. நிகிலா கதை காதலித்துத் திருமணம் செய்தவளை விட்டுப் போய் விடுகிறான் ஒருவன். அவள் படும் பாடுகள் தான் கதை. போனவன் திரும்பி வரவில்லை. அவன் காதல் செய்ததை தவறு என கதாசிரியர் சொல்கிறாரா, காதல் தவறு என்கிறாரா புரியவில்லை. காதல் தவறு என்ற எதிர்ப் போக்கை வலியுறுத்தி எழுதியது போலுள்ளது. ஏழு கன்னிமார் குழந்தைகளின் வாழ்வில் பெரியவர்கள் யார் என்பதை கோவில், சாமி கும்பிடு என்பதன் மூலமாக காட்டியுள்ளது. 


கள்வன் கதை திருடும் முத்துமாயன் கதை. திருட காரணம், பஞ்சம், பசி எனப் பல காரணங்களோடு. திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண்ணின் நகைகளை கொள்ளையடித்ததால் இறக்கிறாள் அவள். அதன் காரணமாக திருடும் தொழிலை விடுத்து வாழத் தொடங்கினாலும் அந்நிகழ்வு மீண்டும் மீண்டும் முததுமாயன் மனதில் தோன்றி சித்திரவதை செய்வதாக முடித்திருக்கிறார். பாவத்திற்கு இந்த உயிர்ச் சித்திரவதை மட்டும் தான் தண்டனையா என்ற எண்ணம் ஒருபுறம் தோன்றுவதை மறுக்க முடியவில்லை.


அசிஸ்டன்ட் டைரக்டர் ஆவதை ஒரு கதையாக்கியிருக்கிறார். குடிகார புருஷனை திருத்த பாடுபடும் கிராமத்து மனுசி பற்றி ராஜா ராணி ஜோக்கர் கதை பேசுகிறது. 


தோழர்கள் கடத்தல்காரர்களான கதை இத்தொகுப்பின் மேலுள்ள இயல்பாகக் காட்சிப்படுத்தும் பார்வையை ஒட்டுமொத்தமாகக் கந்தல் கந்தலாக்கிவிடுகிறது. கம்யூனிஸ்ட் தோழர்கள் இருவர், அவர்கள் கட்சியில் சேர்ந்து படும் பாடு, அவர்கள் திருமண வாழ்வு, அவர்களின் தலைவர் குறித்தெல்லாம் எதிர்மறையான பிம்பத்தை வைக்கும் அதே சூழலில் அந்த அமைப்பு, அதன் தலைவர்கள், மக்களுக்காகப் போராடும் காம்ரேடுகள் எதுவுமில்லாமல் குறை சொல்ல மட்டுமே எழுதப்பட்டது போலிருக்கிறது. இந்தக் கட்சியில் தான் பணத்தால் வெற்றி பெறும் பலரிடையே தற்போது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிசை வீட்டு மாரிமுத்து போன்ற தோழர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது.


எங்கள் தேனி மாவட்ட எழுத்தாளர் ஒருவரின் நூலை வாசித்துணர்ந்தது உள்ளபடியே பெரும் மகிழ்வு.


வாழ்த்துகள் தோழர்.

எறும்பு முட்டுது யானை சாயுது #கவிஜி


 எறும்பு முட்டுது யானை சாயுது.


கவிஜி

Vijayakumar Gurusamy


படைப்பு வெளியீடு


கவிதைத்தொகுப்பு


சற்று இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசிக்கும் கவிதை நூல். ஓய்விலிருந்த கணினியை இயக்கத் தொடங்கும்பொழுது ரெஃப்ரெஷ் செய்வோம் அல்லவா... இப்பேரிடர் காலம் முடியும் தருவாயில் மனதில் மேலும் பாரங்களைக் குவித்து விடாமலிருப்பது போல, அதே சமயம் மனதை நேர்மறையாக ஆற்றுப்படுத்துவதுபோல கவிதையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாசிக்கத் தேடிக் கிடைத்த நூல். மனம் பூரித்துக் கிடக்கிறது. கட்டிய மாலை அழகு தான். மணமகளின் கூந்தலை அலங்கரிக்கும் பூக்கள் அழகுதான். கொஞ்சம் வளர்ந்திருந்தாலும் குட்டிக் குழந்தைகள் வைத்திருக்கும் பூக்கள் தான் பேரழகு. இக்கவிதைகள் குட்டிக் குழந்தைகள் சூடியுள்ள குட்டிக் குட்டிப் பூக்கள். 


வசீகரத் தலைப்பு. குழந்தைகளுக்கான தொகுப்பாக இருக்கும் என நினைத்தால் அது இல்லை. இல்லையில்லை. நாம் குழந்தையாக இல்லை. 3 பால்கள் வகுத்துக்கொண்ட வள்ளுவனைப் போல 3 தலைப்புகளில் கவிதைகள். 

காதலை, காதல் கவிதைகளைக் கண்டாலே பலருக்கு ஒவ்வாமை வந்து விடுகிறது. அவர்களுக்கும் கவிஜியின் காதல் பிடிக்கும். காதல் எப்போதும் சிறப்பு பொருந்திய ஒன்று. இறையில் வைத்து ரசிக்கத் தக்கது. பூஜிக்கவல்லது. காதல் கவிதைகள் பல கோவிலை மையமாக வைத்துப் பூத்திருக்கின்றன. பார்வையால் வணங்கலாம் அவற்றை. காதல், கடவுளாக நாம் கண்ணுக்கு காட்சி அளிக்கும்.


“எப்போது வாசலிலிருந்து எழுவாய்

சிற்பம் அசையுமென்று

பந்தயம் கட்டியிருக்கிறேன்”


“நடை சாத்திய பிறகு

நீ நின்ற இடத்தில்

நின்று பார்க்கிறார் கடவுள்”


“என்ன வாரம் தருவதாகச் சொன்னாய்

விடிந்ததும் கோயில் திறந்து

அமர்ந்து விடுகிறார் கடவுள்”


இப்படியாக கோயில் போல பல களங்கள். பல கவிதைகள். காதல் தேன் நிரம்பிக் கிடக்கிறது “தீ மிதிர்க்காதல்’’ என்னும் தலைப்பின் கீழ்.


“நையப்புடை” என்ற தலைப்பின் கீழ் சமூகம் சார்ந்த கவிதைகள். நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்விகள், சமூகத்தை நோக்கி கேட்கவேண்டிய கேள்விகள், எங்கு இந்த சமூகம் வெட்கித் தலை குனியவேண்டும், எங்கு நையப்புடைத்தல் நிகழவேண்டும் என்பதை வாசிப்பின் வாயிலாக கண்டடைய கவிதைகள் என்ற பெயரில் பூகம்பமாக, புரட்சியாக காட்சிப் படுத்துகிறார் கவிஜி.


“காசு போட்டவனின் சாயலில்

சாலையில் வரைந்திருந்த

சாமி ஓவியம்” 


ஒரு கதையை மூன்று வரிகளில், அளவான சொற்களில் அற்புதமாக வார்த்திருக்கிறார் கவிஞர். வரைந்தவனின் வறுமை, சமூக அவலம், காசு போட்டவனை கடவுளாகப் பார்க்கும் ஓவியன் என வரிகள் ஒவ்வொன்றிலும் நாம் உற்று நோக்க நிறைய உண்டு.


“ஐந்தாவது ஆளாகச் செல்கையில்

கொஞ்சம் சுலபமாக இருக்கிறது

வன்புணர்வு”


எளிய வார்த்தைகளில் வலி தரும் வரிகள். கண்முன் இந்தக் காட்சி படர்கிறது. வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் எரிச்சலில், கோபத்தில் திசையில் நின்று இந்த வரிகளை மடைமாற்றிக் காண்கிறேன். அவ்வளவும் துயர். அந்தக் கண நேர இயலாமையை சுவீகரிக்கும் அற்ப மனிதனின் பார்வைக்கு சுலபமாகத் தான் இருக்கும் இது போன்ற வன்புணர்வும், வரிகளும்.


“எப்போதும் பிரியாத

தண்டவாளத்தில் தான்

செத்துக் கிடந்தார்கள் பிரிந்தவர்கள்”


சட்டென ஒரு ரயில் தண்டவாளம். வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பாண்ட் சகிதமாக இறந்துகிடக்கும் இளவரசன். சுற்றிலும் கண்ணீரோடு சில மக்கள். மையமாக யார் பார்வைக்கும் தெரியாமல் அழுது அரற்றிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது பிரிந்த காதல். காதல் கடந்த சமூகம் சாத்தியம் என்பது காலத்தை ஏமாற்றும் நாடகம் என்பதை சாதி எப்போது உணரப்போகிறதோ... 


தத்துவம் சார்ந்த ஹைக்கூக்கள் கனவை நிறுத்துகிறேன் என்ற தலைப்பில். வாழ்வின் நிலையாமை உணர்ந்தவன் உயிர்களின்மேல் அன்பு செலுத்துவான். ஆனால் இங்கு அன்பு என்பதை உறவுகளிடம் மட்டுமே காட்டவேண்டும் என்றே கொள்கைப் பித்தர்கள் புரிந்துகொண்டார்கள் போல. பல கவிதைகள் புன்னகையை வரவழைத்து புத்தி புகட்டுகிறது. எதற்காக இந்தக் கவிதை இப்படி புன்னகையை வரவழைக்கவேண்டும் என்று யோசிக்க யோசிக்க கவிதையின் உள்மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்ந்துவிடலாம் என நினைக்கும்பொழுது வரிசை கட்டி வந்து நிற்கும் துயர்கள் கடப்பதும் பெரிய சவால்தானே. 


“ரயிலைத் தவறவிட்டவன்

பச்சைச் சட்டை

அணிந்திருக்கிறான்”


“கடலை வரைந்து முடித்தவன் 

காலை

இழுத்துக் கொள்கிறான்”


“சட்டென வாய்ப்பாட்டை

நிறுத்திக்கொண்ட மழைக்கு

அதன்பிறகு தவளை வாய்”


சொல்லிக்கொண்டே இருக்கலாம் இன்னும் பல கவிதைகளை. கவிஜி கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பை முதலாக வாசித்து அவரறிகிறேன். கவிதையாக வாழ்ந்திருக்கிறார். கவிதைகளோடு வாழ்ந்திருக்கிறார். மொத்தத்தில் இவை வாழ்வுணர்த்தும் கவிதைகள் என்பதில் மாற்றமில்லை. வாழ்த்துக்கள் தோழர் கவிஜி.

என்னைச் சந்திக்க கனவில் வராதே #நா.முத்துக்குமார்


 என்னைச் சந்திக்க கனவில் வராதே…


தமிழில்: நா. முத்துக்குமார்


ஜப்பானியக் கவிதைகள்


பட்டாம்பூச்சி பதிப்பகம்


முழுக்க முழுக்க காதலால் நிரம்பிக் கிடக்கிறது தொகுப்பு. உலகப் பொதுமறை திருக்குறள் என்பதுபோல் உலகப் பொதுச்செயல் காதல் என தவறாமல் சொல்லிவிடலாம் தான். 


காதல் ஒரு தனித்துவம். ஒவ்வொருவரின் காதலும் ஒவ்வொரு உணர்வால் அவரவர் உணரும் விதத்தால் அவரவர்க்குள் ஊடுருவும் விதத்தால் வித்தியாசப்படுகிறது. 


இவை எல்லாம் ஜப்பானியக் கவிஞர்கள் எழுதியது, ஜப்பானியக் கவிதைகள் என்றெல்லாம் இல்லை. உலகினரின் காதலின் இயல்புக் கூறுகள் அத்தனையும் இதில் உள்ளன. நம் மொழியில், நம் மனிதர்களிடம் உள்ள அதே காதல். அதே விரகம். அதே தேடல். அதே வலி. அதே சுகம். பல கவிதைகள் ஜப்பானியப் பெண் கவிஞர்கள் எழுதியவை. கவிதைகளைக்   கொண்டாடித் தீர்க்க உணர்ச்சிப் பூர்வமாக அவற்றை வாசிக்கும் ஒவ்வொரு நொடியும் காதலை உணரவைக்கும் ரசனையான எழுத்திருந்தால் போதும். வலியை நமக்குள் கடத்தும் உத்தி இருந்தால் இன்னும் உசிதம். வாசித்தபின் ஆர்ப்பரிக்கச் செய்தால், இது போல நமக்கும் நடந்திருக்கிறதே என யோசிக்க வைத்தால், வலி கொண்டு கடந்த காதலை மீண்டும் மீட்டுணரச் செய்தால் அதுதான் காதல். அப்படிப்பட்ட கவிதைகள் தான் இதில். 


கவிக்கோ அப்துல் ரஹ்மான் மொழிபெயர்த்த கவிதை ஒன்று

“நீயும் நானும் சேரக்கூடாது 

என்றுதான் ஒவ்வொரு முறையும் 

நான் கடவுளிடம் வேண்டுகிறேன்

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை” என்றிருக்கும். நிறைவேற்றித் தராத கடவுளை அவன்போக்கில் விட்டு காதலை அடைந்துவிட காதலியோ காதலனோ செய்யும் உத்தி அற்புதமாக கவிதையில். 

அதேபோல  இருவரில் ஒருவர் செய்யும் பிடிவாதத்தில் எதிர்மறையான செயல்களில் அதைத் தனக்குச் சாதகமாக மாற்றி காதலை அடைந்துவிட முயற்சிக்கும் ஜப்பானியக் கவிதை.

நீ சொன்னாய்

“நான் வருவேன்”

ஆனால் வரவில்லை

இப்போது சொல்கிறாய்

“நான் வரமாட்டேன்” என்று.

ஆகையால் உன்னை எதிர்பார்க்கிறேன்.

உன்னைப் புரிந்துகொள்ள

கற்றுக்கொண்டேனா...?


ஒரு சிறு ஓரப் பார்வையும் காதலில் கொடுக்கும் சுகம் அதிகம். மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவிடும். ஆகாயத்தில் மிதக்க வைக்கும். உலகத்தை கைக்குள் கொண்டுவந்தது போல் சந்தோசிக்க வைக்கும். காதல் ஒரு மாய சக்தி. நிரந்தரமாக தொடரும். அல்லது சட்டென கைகளை விட்டுப் பறந்தோடிவிடும். 

“கொஞ்ச காலம் தான்

ஒன்றாகயிருந்தோம்

என்றாலும் 

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்

எங்கள் காதல் வாழும்.”


“உன்னைக் காதலிக்காதவளை

நீ விரும்புவது என்பது

கோயிலுக்குச் சென்று 

சைத்தானை 

வணங்குவது போன்றது.”


இதற்கு மேலும் எப்படி நெருக்கம் காட்டுவது, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தல் என்பது எப்படி சாத்தியம் ஆகும்... இங்கு அதனை இப்படிச் சாத்தியப் படுத்துகிறது கவிதை

“உன் வியர்வை உறிஞ்சுகிற

உள்ளாடை போல

உனக்கு நெருக்கமாக இருக்க

விரும்புகிறேன்.

எப்போதும் உன்னையே

நினைக்கிறேன்...”


பிரிவில் வாழும் காதலர்கள் வெளிப்படுத்தும் அன்பு அதீதமானது. அது அருகிலிருப்பதை விட பல மடங்கு வெளிப்படும். அது ஏக்கமாக, வலியாக, வெறுமையை உணர்த்த, இன்னும் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், நீதான் என் உலகமாக இருக்கிறாய் இருப்பாய், என் காதல் வலிமையானது, நாம் ஒன்று சேர்வோம் எனப் பலப்பல வழிகளில் நம்பிக்கையைக் கூட்டும் வரிகளில் பூக்கும். காதல் என்பதை நம்பிக்கைதானே...

“வருடங்கள் என்னைத் தொடுகிறது

வயது என்னைப் பலவீனமாக்கி

கவலையில் தள்ளுகிறது.

என் கவலையும் கனமும்

விலகவேண்டும்

மலரைப் போன்ற 

உன் அழகிய முகத்தைப்

பார்க்க விரும்புகிறேன்...”


“இந்த நிலவில்லா இரவில்

நீ வரவில்லை

உனக்காக விழித்திருந்தேன்

என் மார்பகங்கள்

விம்மித் தளர்கிறது

என் இதயம் எரிகிறது”


இப்படிப் பல கவிதைகள். அத்தனை கவிதையிலும் காதல் இருக்கிறது. காதலர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சி இருக்கிறது. கவலை இருக்கிறது. முக்கியமாக அவற்றில் நாம் இருக்கிறோம். வேறென்ன கவலை... நம்மை நாம் திருப்பிப் பார்க்க காதலை விட பெரும்பாக்கியம் இருக்கிறதா என்ன...

வாசிப்போம். காதலில் வசிப்போம்.


யாழ் தண்விகா

ஓவியங்கள் வழியும் தூரிகை #ச.ப்ரியா


 ஓவியங்கள் வழியும் தூரிகை


கவிதைகள்


ச.ப்ரியா

Sa Priya


பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு


தெரிந்தோ தெரியாமலோ கவிதை எழுதுபவர்கள் கவிதைக்கு ஒரு விளக்கத்தைச் சொல்லி விடுகிறார்கள். இது கவிஞர் ச.ப்ரியா அவர்களின் விளக்கம். “ஒரு சம்பவத்தையோ, ஒரு காட்சியையோ அல்லது ஒரு உணர்வையோ கடந்து செல்கையில் எனது உடல் அதன் போக்கில் நகர்ந்தாலும், மனம், ஒரு புள்ளியில் ஸ்தம்பித்து நிற்க நேர்கையிலெல்லாம், எனக்கான கவிதைகள் பிரவாகமெடுக்கின்றன”. கவிஞனின் மனம் என்பதே கவிதை மனம் தானே. 


வாசிப்புச் சுவை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியானது. அது புரிதல், உள்வாங்குதல், உணர்வுகள், அனுபவம் எனப் பல கூறுகளைக் கொண்டிருக்கும். நூலில் நூலகப் புத்தகங்கள் என்றொரு கவிதை. புத்தகத்தில் உள்ள யாரோ ஒருத்தியின் தலைமுடி, யாரோ ஒருவரின் நகத்துண்டு, குழந்தையின் நகக் கிறுக்கல்... என்பதைக் காட்சிப்படுத்திய கவிஞர் 

“எனக்குப் பிறகு 

இந்தப் புத்தகத்தைப் புழங்குபவர்களால்

என் அடையாளங்கள் காணப்படும்

என்பது சாத்தியமற்றது

புத்தகப் பக்கங்களில் விழுந்த

கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிடும்

இன்னும் சற்று நேரத்தில்” என்பதாக முடிக்கிறார். நூலின் சாதனை என்பது அதுதானே. நினைவுகளைக் கிளற வேண்டும். மகிழ்வைத் தரவேண்டும், வலியைக் கொடுக்கவேண்டும். அதுதான் எழுத்தின் வலிமையாக இருக்க முடியும் என்கிறார். 


சொல்லொன்று செயலொன்று, இதுதான் பெரும்பாலான மனிதர்கள். நெகிழியைப் பயன்படுத்தக்கூடாது. அது இந்த மண்ணை, மக்களை, விலங்குகளை, நீர் ஆதாரங்களை, நீர் வாழ் உயிர்களை, காற்றை மாசுபடுத்தி கேடு விளைவிக்கும் என்கிறோம். அதை உணரும் பக்குவமும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் நெகிழியை நாம் முற்றாக ஒழித்து விட்டோமா... அல்லது கட்டாயம் என்ற இடத்தில் மட்டும் தான் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதானே கூறவேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதை ஒரு கவிதையில் இவ்வாறு சாடுகிறார்.

“கூண்டுப் பறவைகள்

குடுவை மீன்கள்

போன்சாய் மரங்கள்

இவைகள் எதுவுமற்றதாக உங்கள் வீடு

இருக்கும் பட்சத்தில் மட்டுமே

கூரைக்கு மேல் அமர்ந்துகொண்டு

நீங்கள் பறத்தல் குறித்து

சிந்திக்க முடியும்”

தொட்டிச் செடிகள் என்ற தலைப்பு ஆகப் பொருத்தம்.


தலைப்புக் கவிதை , 

கடவுள் என்ற கற்பிதம் 

ஓர் ஓவியனாக 

இருந்திருக்கக் கூடும்...

எனத்தொடங்கி

ஜாக்கிரதை என முடிகிறது.

இடைப்பட்ட வரிகளை யோசித்தறியலாம். அல்லது வாசித்தறியலாம். இப்பேரிடர் காலம் என்பது பூமியை மீண்டும் அழித்து வரையும் கடவுள் என்னும் ஓவியனின் நிலையிலிருந்து நாம் பார்க்கலாம். பிளாஸ்டோ பாரிசில் உருவாக்கிய புத்தர், கிருஷ்ணர், ஏசு சிலைகள் விற்கும் ஒரு குடும்பத்தின் சூழல், அங்கு கடவுள் என்ன செய்கிறார் என்ற குறியீடு அருமை. எல்லா காட்சிகளையும் பார்த்துக்கொண்டு கடவுள் சும்மா இருக்கிறார் என்று நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம். ஒரு போதும் அவர் தான் பார்க்கவில்லை, நீதான் பார்ப்பதாக நினைத்துக்கொள்கிறாய் என்று கூறப் போவதில்லை. அதுவரை கடவுளைத் தூக்கிச் சுமந்துகொண்டிருப்போம்.


கண்முன்னே நாம் வாழும் காலத்தில் நடந்த ஈழப் போர் அறிவோம். போரின் துயர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஈவு இரக்கமற்ற கொலைகள், கற்பழிப்புகள், குண்டு வெடிப்புகள், காயங்கள் இவற்றை ஊடகங்கள் வெளிச்சமிட்டன. உலக நாடுகள், பெரிய பெரிய அமைப்புகள் கூட வேடிக்கை பார்த்தன. அது வலி. அங்கு அன்பு என்பதற்கு வேலையில்லை. செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் எதுவுமங்கு மாறிடவில்லை. சாவுகள் மூலம் அமைதி நடந்தது. 

“போர்நிறுத்தம் செய்யப்பட்ட பகுதியில்

தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி

தன்னுடன் பாதுகாப்பாக

வைத்துக்கொண்டிருந்தாள்

அவளது பொம்மை ஒன்றையும்.

சற்று நேரத்தில் சூழ்ச்சி என்னும்

ஆயுதத்திலிருந்து

தெறித்துத் துளைத்தது மரணம்.

தன்னைப் போலவே மாறிவிட்ட அவளை

வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது

அவளது அன்பிற்குரிய பொம்மை”.

எனக்கென்னவோ அச்சிறுமி வைத்திருந்த பொம்மை அவளது அம்மா அல்லது அப்பா அல்லது அவளின் உடன் பிறந்த சகோதரனோ சகோதரியின் பிணமான பொம்மையாக மனதில் வந்து போனது. போரின் வலி கொடூரமானது. அது பாவம் புண்ணியம் பார்க்காது. வெற்றி ஒன்றிற்கென எதையும் செய்யும். அதை உணர்த்தும் கவிதை. 


இன்னொரு கவிதையில் காட்டை அழித்து மனை விற்பனை செய்வது குறித்துக் கூறும்போது

“இறுதியாக மனை வாங்குபவர்களுக்குக்

காட்டைக் கொன்று புதைத்த 

இடத்தின் தலைமாட்டில் நட்டுவைக்க

மரக்கன்று ஒன்றை

இலவசமாகத் தருகிறான்” என்கிறார் கவிஞர். வனம் அழித்து வீடு என்பதே இங்கு சுடுகாடு போலத்தான். அங்கு மரக்கன்று என்பது இழந்து போன வாழ்வின் அஸ்தி தான். கருத்து சொல்கிறேன் என்றில்லாமல் அதை கவிதையாக்கும் உத்தி வாயிலாக உரைக்கும் தன்மை கவிஞருக்கு நன்றாகவே வருகிறது.

அம்மாவிற்கு, அப்பாவிற்கு, திருநங்கைக்கு, ரோஹித் வெமூலாவிற்கு, முறிந்து போன காதலுக்கு, பார்வையிழந்தவன் விற்கும் பத்திக்கு, சமூகத்திற்கு, அழிந்து வரும் இயற்கைக்கு எனத் தன் கவிதைக் கரங்களை எல்லாத் தளங்களிலும் பரப்பியுள்ளார். 


ஓவியங்கள் வழியும் தூரிகை

கவிதைகளில் ஒளிர்கிறார் கவிஞர்.

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

மழைக்கு இதமாய் ஒரு மழை #துஷ்யந்த் சரவணராஜ்

 

மழைக்கு இதமாய் ஒரு மழை


கவிதைத் தொகுப்பு


துஷ்யந்த் சரவணராஜ்

Dushyanthsaravanaraj


வெற்றிமொழி வெளியீட்டகம்

Vetrimozhi Veliyeetagam


பக்கங்கள் 64, விலை ரூ.60


கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.

“புத்தகங்களே புத்தகங்களே

தயவுசெய்து குழந்தைகளைக்

கிழித்துவிடாதீர்கள்”


மழையை குடை வைத்து ரசிப்பவர்கள் தானே நாம். அப்படியானால் நாம் குழந்தைகளை குழந்தையாக வளர விடுவதற்கு தயாராக இல்லாதவர்கள்தானே. 


மழைக்கு இதமாய் ஒரு மழை. மழை நேரம் எதை விரும்பும் உடலும் உயிரும்? ஒரு தேநீர்? ஒரு கவிதை? ஒரு முத்தம்? கொஞ்சம் நெருப்பு வாசம்? கொஞ்சம் கட்டியணைப்பு? காதல் ஜீவனின் ஸ்பரிசம்? கைகள் இரண்டையும் உரசி கன்னங்களில் தனக்குத் தானே வைத்து மென் சூடினை ரசிக்கும் தருணம்? எது வேண்டும் மழைக்கு இதமாக...? எதுவும் வேண்டாம் மழைக்கு இதமாய் இன்னுமொரு மழை. கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதையாக. மழைக்கு இதமாக அந்த இன்னொரு மழை இத்தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது குழந்தைமை கொண்டாடும் கவிதைகளாக.


ஒரு குடும்பத்தின் பேரன்பு மிளிரக் காண்கிறேன் இத்தொகுப்பில். மகன் துஷ்யந்த், மகள் சம்யுக்தா, மனைவி ராஜலட்சுமி மற்றும் கவிஞர், இன்னும் சில குழந்தைகள் உலாவும் அன்புத் தோட்டம் இத்தொகுப்பு. 

“நின்னைப் பிரிந்திருக்கும் 

நீளமான இரவை 

என்ன செய்வது மகளே?

உருட்டித் தருகிறேன் 

உதைத்து விளையாடு”


“வார விடுமுறையில் 

வந்து போகிற

அப்பனுக்கு மட்டுமே தெரியும்

ஒரு முத்தத்தின் எடை”

தந்தையோ தாயோ குழந்தைகளை விட்டு பணி நிமித்தம் வெளியூரில் தங்கி, வார விடுமுறைக்கு வீடு வரும் சூழலில் பூத்த கவிதைகள் இவை. ஒரு குழந்தையாக என் தந்தை இந்த வலிகளை, பூரிப்பை அனுபவித்திருக்கிறார். ஒரு தந்தையாக நானும் இதே உணர்வுகளை அனுபவித்திருக்கிறேன். நீளமான இரவு என்னும் சொல்லும் முத்தத்தின் எடை என்னும் சொல்லும் காதலுக்கு மட்டுமா சொந்தம்... குழந்தைகள் இருக்கிறார்கள் கவிதையில். ஆனால் உணர்வைச் சுமந்து கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது பெற்ற பாசம். அருமை கவிஞரே.


“பணத்தைக் கட்டிப் 

பள்ளியில் சேர்த்துவிட்டு

அடைக்கப்பட்ட

கதவுகளுக்குப் பின்னே

காத்துக்கிடக்கிறோம்

பிணை எடுக்க வந்தவர் போல...” 


“கம்பி ஜன்னலிட்ட

பேருந்தின் உள்ளிருந்து

கைகாட்டும் 

குழந்தையின் முகத்தில்

சிறைவாசியின் சோகம்”

முழு நேரமும் எந்தத் தகப்பனும் தன்னுடைய குழந்தையை அருகிலிருந்தே பராமரித்திருக்கப் போவதில்லை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால். ஆனால் தன்னுடைய குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு முதன்முதலாக வீடு திரும்பும் / பணிக்குச் செல்லும் தந்தை முகங்களைப் பார்த்தால் தெரியும் தாய்மையின் முழுச் சாயலை. எதையோ பறிகொடுத்ததைப் போல முகம், கண்ணோரமாகச் சிறிது கண்ணீருடன். இங்கு இந்தக் கவிதை வேறொரு ஏக்கத்தைச் சொல்லி மனம் கனக்க வைக்கிறது.


குழந்தைகள் உள்ள வீடு கிறுக்கல்கள் நிறைந்திருக்க வேண்டும். வைத்தது வைத்த இடத்தில், கிறுக்கல்கள் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருப்பது குழந்தைமையைத் தொலைத்ததன் அடையாளம் அன்றி வேறில்லை. இப்படிப்பட்ட அடையாள அழிப்பை வகுப்பறைகள் கச்சிதமாக நிறைவேற்றி வைக்கின்றன. அதனைக் கவிஞர் பின்வருமாறு சாடுகிறார்.

பார்க்காதே 

என்கிறீர்!

பேசாதே

என்கிறீர்! 

திரும்பாதே 

என்கிறீர்!

தூங்காதே 

என்கிறீர்! 

நிற்காதே

என்கிறீர்! 

நிமிராதே

என்கிறீர்!


அய்யோ அய்யோ


வைத்தது 

வைத்தபடி இருக்கக்

கொலுமண்டபமா

வகுப்பறை?

கவிதையின் இடையில் வரும் அய்யோ அய்யோ என்ற சொல்லானது குழந்தையின் மேலுள்ள நேசம் என்றும் கொள்ளலாம். குழந்தைகளை எதற்காக இப்படி வதைக்கிறீர் என்றும் கொள்ளலாம். குழந்தைகளே நடப்பதைப் பார்த்துக் கொந்தளித்துச் சொல்லும் சொல் எனவும் கொள்ளலாம். 


விடுமுறை என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு சனி, ஞாயிறு தான். அவை அவர்களுக்குத் திருவிழா நாட்கள் தான். இதை சம்பளம் பெரும் மனிதனோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் கவிஞர் இப்படி.

“சனிக்கிழமையைச்

சம்பள நாளாகவும்

ஞாயிற்றுக் கிழமையை

மாதக் கடைசியாகவும்

செலவழிக்கிறார்கள் 

குழந்தைகள்”


“வெள்ளிக்கிழமை

பள்ளி சென்று திரும்பும்

பிள்ளைகளின் முகத்தில்

பளபளக்கிறது

சனி ஞாயிறு வாங்கி வரும் 

சந்தோசம்”

முதல் நாள் கொண்டாட்டம். இரண்டாம் நாள் வேதனை. காரணம் மறுநாள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படியெல்லாம் குழந்தைகளைப் பாடுபடுத்துகிறது. அந்த நாட்களில் தான் ஓய்வில்லாத அளவிற்கு பள்ளிக்கூடம் வீட்டுப்பாடங்களை மிகக் கூடுதலாக வழங்கி குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காவு வாங்குகிறது. 


குழந்தைப் பேறு இல்லாததன் வலியைச் சில கவிதைகள் சுட்டுகின்றன. சில கவிதைகள். குழந்தைகளைக் கொஞ்சும் கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவியின் காதலைச் சில கவிதைகள் சொல்கின்றன. சில குழந்தைகளின் பேரன்பில் மகிழும் தந்தையின் பெருமிதத்தைக் காட்டுகின்றன. சில கவிதைகள் இள வயது வறுமையைப் பேசுகின்றன. சில அவர்களின் செல்லச் சேட்டைகளைக் கண்டு ரசிக்கின்றன. 


“மாற்றி யோசிப்போம்...


திருவிளையாடல் என்பது

தெய்வங்களின் குறும்பு!


குறும்பென்பது

குழந்தைகளின் திருவிளையாடல்!”


மழைக்கு இதமாய் ஒரு மழை

ஒரு தந்தை கவிஞனாகி வடித்த

கவிதை விளையாடல்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

Thursday, 19 February 2026

ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதை #ஜெ.நிஷாந்தினி

 ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதை

ஜெ.நிஷாந்தினி 


வாதைகள் சுமந்திருக்கும் மரக் கனிகள்


வினோதப் பறவையின் கடற்கரை என்ற முதலாம் தொகுப்பிற்குப் பின்னர் கவிஞர் எழுதிய இரண்டாவது தொகுப்பு இது. கவிதைக்கான தலைப்பு ஒவ்வொன்றும் கவிதையாக இருக்கின்றன. கவிதைத் தொகுப்பிற்கான தலைப்பாக இருக்கின்றன.


வெளியிலிருந்து பார்க்கும் வரை வீடு என்பது ஒரு சொல். கதவு திறந்து உள் சென்று புழங்கு தன்மை அடையும்போதுதான் வீடு என்ற சொல்லை உணரமுடியும். போலவே கவிதைத் தொகுப்பின் உள்சென்று வாசிக்கும்போது ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதையின் சாலையில் பூத்திருக்கும் கனிகளையும், மலர்களையும், உதிரும் இலைகளையும் வாடிய மரங்களையும் பச்சையத்தின் மிதப்பில் அசையும் இயற்கையையும் இன்னும் பலவற்றையும் காண முடிகிறது.


அன்பைச் சுக்குநூறாக்கும் வழிகளை அனாயசமாக பலர் கைக்கொண்டிருக்கிறார்கள். அதனை வசந்தங்களை உண்டாக்கும் இசை என்னும் தலைப்பிலான கவிதையில்,

“பெரும் கலவரங்கள் வேண்டாம்

சில நொடி அச்சுறுத்தல் போதும் 

பதட்டங்களை உண்டு பண்ண


மரணத்தை அரங்கேற்ற வேண்டாம்

சிறு துரோகம் போதும்

உயிர் பிரியும் அவஸ்தையைத் தந்துவிட்டுப் போக”

என்று கூறிச் செல்பவர் கவிதையின் நிறைவில் 

“ஆனாலும்

பிரியத்தின் இசையை மீட்டி 

நுரைத்துத் ததும்பும்

அன்பின் வாசனையை உணர்த்தினாலே போதும்

இறுகத் தழுவிக் கொள்ளலாம்

வறண்டு கிடக்கும் வாழ்வை”

என்று கூறுகிறார். நிறை அன்போடு வாழ்வைக் கடத்துதல் எவ்வளவு அலாதியானது என்னும் பேருண்மையை மிக எளிமையாகக் கூறியுள்ளார்.


நான்கு வழிச்சாலை என்னும் பேரச்சத்தை பச்சையமற்றுப் போன பாழ்நிலம் என்ற தலைப்பிலான கவிதையில் கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க இந்தச் சாலையில் பயணிப்பது என்பது எத்தைகைய குற்ற உணர்வைக் கொடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

“பயணத்தின்போதெல்லாம்

திசைகளோடு பின் தொடர்ந்தபடியிருந்த

பருத்த மரங்கள் பெயர்ந்து கிடக்கின்றன


அகலப்படுத்தப்பட்ட சாலைகள்

யார் யாருக்காகவோ

வழி புரண்டு நகர்கின்றன


தீர்ந்து போன கனிகளையெண்ணி

நம்பிக்கையோடு 

தூரங்களைக் கடக்கின்றன பறவைகள்


நீரற்ற ஓடைகள் யாரும் அறிய முடியாதபடிக்கு

தடயமற்று விளையாட்டு மைதானமாய்க் 

காட்சியளிக்கின்றன


மரங்களற்ற வெளியெங்கும்

புழுதி பறக்கக் கலைத்து 

வெக்கையில் மூழ்குகிறார்கள் மனிதர்கள்


தூரத்தில்

நீர்த் திவலைகளுக்காய்

துக்கித்துக் கிடக்கிறது

பச்சையமற்ற பாழ்நிலம்”

என்ற வரிகள் மரங்களை அழித்து நான்கு வழிச் சாலைகள் போடுவதன் அவலத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. நான்கு வழிச் சாலைக்கு முன்னால், பின்னால் என்ற பிம்பத்தைக் கவிதை வரிகளில் காணலாம். அரசியலை நேரடியாகக் கூறாமல் பூடகமாக முன்வைக்கிறது வரிகள்.


துயரத்தைத் தின்ற முகங்கள் என்னும் கவிதை கார்பரேட் வணிகத்திற்கு எதிரான கலகக்குரல். புரட்சி வேண்டும் எனப் பேசிக்கொண்டே கார்ப்பரேட் வணிகத்தை ஆதரித்து சிறு விவசாயிகளைப் புறக்கணிக்கும் மனிதர்களைச் சாடியுள்ளது கவிதை. அழியும் விவசாயத்திற்கு சாமரம் வீசுபவர்களுக்கு சவுக்கடி இந்தக் கவிதை. 

“வெள்ளமாய் வியர்த்துக் கொட்ட

நடுங்கும் கைகளால்

நுங்கினைப் பைகளில் நிரப்புகிறாள்.


நைந்த மலரென சுருங்கி

கறுத்திருக்கும் முகத்தில்

நட்சத்திரப் பிரகாசத்தோடுபூக்களைக் கோர்த்து முழம் போடுகிறாள்


மண்ணின் வாசனையோடு

கொந்தளிக்கும் பசியைக் கரைக்க

கட்டுக்கீரை விற்க அல்லாடுகிறாள்


பறிபோன சந்தோசங்களையெண்ணி

தீராத தனிமையோடு

உணவிற்காய்க் கையேந்தி நிற்கிறாள்


நீட்டியபடியிருக்கும் கைகளை

அநாயசமாக நிராகரித்து

உள் நுழைகிறோம்

குளிரூட்டப்பட்ட நவீன அங்காடிக்குள்...”

இப்போது மீண்டும் தலைப்பைப் பார்த்தால் துயரத்தைத் தின்ற முகங்கள் யாருடையவை என்றறியமுடியும். 

பல நேரங்களில் அம்முகத்திற்குள் நம்மையும் காண இயலும் என்பது எவ்வளவு பெரிய துயரம்...!


வாழ்க்கை என்பது நாம் நினைப்பது மாதிரியான வரம்போலதான ஒன்றாக இருக்கிறதா என்ன... எவ்வளவு வலிகள், ஆற்றாமைகள்....

“எத்தனை சாகசங்களை 

நிகழ்த்த வேண்டியதாயிருக்கிறது

வாழ்க்கையை வாழ்ந்தாக


இறைத்து இறைத்து ஊற்றினாலும்

ஊறிக் கொண்டேயிருக்கின்றன

அரவமற்று துக்கங்களும் வலிகளும்...

...

...

...

இருந்தும்

அரும்பென முகிழ்த்தபடியிருக்கும்

கனவுகள் அலங்கரித்தபடியிருக்கின்றன 

பிரபஞ்சத்தை”

கனவு என்பது வேறென்ன? என்றோ ஒருநாள் நிறைவேறிவிடாதா என்றெண்ணும் ஏக்கம் தானே... அதனைத் தன்னுடைய வரிகளில் எளிமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


சமீபகாலமாக பேசாததைப் பேசத் துணியும் எழுத்துகள் கூடி வருகின்றன. பெண் எழுத்துகள் என்னும் பார்வை பெரும் ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. கற்பு, மாத விடாய் சுழற்சி, பெண்ணடிமைத்தனம், என பெண் கவிஞர்கள் தங்கள் பங்களிப்பை தொகுப்புகளில் வளர்க்கவே செய்துள்ளனர். உதிரத்தில் வழியும் பரிசுத்தம் என்னும் தலைப்பிலான கவிதையில்....

“மூன்று நாட்களாகப் படர்ந்து கசிந்த 

உதிரத்தில் நனைந்து நிமிர்கையில்

என்னுடல் தீண்டிய இடமெல்லாம்

துடைத்தும் துவைத்தும் பரிசுத்தமாக்க வற்புறுத்துகிறாய்.


ஆனால் நான் வெகு பிரமாதமாய்ச் 

சமைத்ததைத் தின்று தீர்த்த

உன் வயிற்றை என்ன செய்வதாய் உத்தேசம்


பிள்ளைப் பேற்றைக் கொண்டாடி சிலாகித்து

உணக்களித்த பேரின்ப விருந்தினைத் தீட்டென

உண்ண மறுக்கின்றாய்

நீயும் தாயென்பதை மறந்ததில்...


கொப்பளித்த குருதியில்

சிசுவை முத்தமிட்ட 

உன் உதட்டை எந்தத் தீயில் வாட்டப்போகிறாய்


அந்த நொடிப்பொழுதில் உயிர் கிழித்த வலியுணர

உனக்கொரு வேண்டுதலை

முன் வைக்கிறேன்

இது மாதிரியான சந்தர்ப்பங்களில்

முதுகுகாட்டித் தூரமாய்ப் போய்விடு”

வருடத்திற்கு ஒருமுறை வரும் மகளிர்தினம், அன்னையர் தினம் இதுபோன்ற நாட்களில் ஆண்கள், குறுந்தகவலாக வாழ்த்துகளை மட்டும் பதிவிட்ட பின் அதே சமையல்கட்டு, அதே வீட்டு வேலை, குடும்பத்திற்காக உழைத்தல் என்பதில் தான் பெண்களைத் தள்ளி விடப் பார்க்கின்றனர். அவர்களுக்கு மாதவிடாய் என்பது தீட்டு. அக்காலங்களில் பெண்களை வீடுகளுக்குள்ளேயே ஓரம்கட்டி வைக்கின்றனர். விஞ்ஞானம், தொழில் நுட்பம் என வளர்ந்த கால கட்டத்திலும் இது போன்ற அபத்தங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதனைத்தான் இக்கவிதையில் பதியனிட்டுள்ளார் கவிஞர்.


இன்னும் பல கவிதைகள் தன்னுடைய சொற்களால் மிளிர்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக. ஒரு கவிதையில் பெரும் புரட்சி ஒன்றையும் பிறிதொன்றில் சாந்தம் பூசிய கவிதை ஒன்றையும் எழுதியிருக்கிறார் என்று சொல்லிவிடாத வண்ணம் நதியின் நீரோட்டம் போல தன் கவிதை வரிகளைப் படைத்துள்ளார் கவிஞர். ஆற்றாமையின் வலிகள் கொடூரமானது. அதனை இவர் கவிதைகள் சிறப்பாகவே வெளிக்கொணர்ந்துள்ளது.


வாழ்த்துகள் கவிஞர் ஜெ.நிஷாந்தினி


பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு. பக்கங்கள் 96. விலை ரூ.70/-

வெட்கச் சலனம் #அகராதி


 வெட்கச் சலனம்


கவிதைகள்


கவிஞர் அகராதி


படைப்பு குழுமம் வெளியீடு


பக்கங்கள் 96, விலை ரூ 90/=


காட்டு ராணியின் ஒற்றைக் குரல்


துளிர்க்கும் வளர்பிறை விழியாடினாலோ, வருடும் மென்காற்றில் சருகொன்று கால் விரலின் நுனி தீண்டிச் சென்றாலோ போதும், கவிதை என்பது தனக்குத் துளிர்க்க என்கிறார் கவிஞர். கவிதைகளும் அப்படித்தான்... பார்வைத் துளியில் படும் அத்தனையிலும் கவிதைக்கான பாடுபொருள் கிடைத்திருக்கிறது இவருக்கு. கவிதை பாடும் தான் யார் என்பதற்கான விளக்கத்தையும் இவரே தந்துவிடுகிறார்.

“தனிமைப் பேயும்

நினைவுச் சாத்தானும் 

கொன்று கொண்டிருக்க,

நேசமடர் கானகத்தின் 

ஒற்றைக்குரலாய் அகவும்

காட்டுராணி நான்”... 

அன்பொன்றே பிரதானமாக, பிரமாதமாக தொகுப்பெங்கும். சில கவிதைகள் அன்பிற்காக கை நீட்டுகின்றன. சில தொட்டுக் கொள்கின்றன. சில கட்டியணைக்கின்றன. சில மயக்கம் தோற்றுவிக்கின்றன. சில அதையும் தாண்டிய மாயம் செய்கின்றன. சில வலிகளைக் கொடுக்கின்றன. எப்படியோ ஏதோவொரு சலனத்தை உண்டுபண்ணிவிடுகின்றன ஒவ்வொன்றும்.


பெரும்பாலானவை சிரமத்தைக் கொடுக்காத குட்டிக் கவிதைகளே. உணர்வுகள் காதலாக மிளிர்கிறது. பிரசவிக்காதே என்னும் கவிதையில் காதல் என்ன விதமான பதட்டம் அடைகிறது...!

“எப்பொழுதென்று தெரியவில்லை

நடந்துவிட்டது.

வளர்ந்தும்விட்டது

பிரசவித்து மட்டும் விடாதே

உனக்குள் தரித்த என்னை...”. 


உணவு என்னும் தலைப்பில் சிறு வயதில் அறிவியல் பாடம் படித்திருப்போம். உணவு கெட்டுப்போதல் என்பதற்குக் காரணமாக இயல்பு நிலையில் மாற்றம் அடைதல் என்ற வார்த்தை வந்திருக்கும். காதலில் இங்கு வேறொரு நிலையை அடைந்துவிடுகிறது அதே காரணம்.

“இயல்பு கெட்டுத்

திரிந்து போகிறேன்

உன் நினைவில்...” என்கிறார் கவிஞர்.


மார்கழிக் குளிர் காலை அறிவோம். குளிர் ரசிக்க எழும் மனது பாக்கியம் பெற்றவை. இங்கு காதலன் உறங்கிக் கிடக்க காதலி அதிகாலையில் எழுந்து புத்துணர்வுடன் வேலைகளைத் தொடங்கி முடித்துவிட்டு அக்கடா என்று வந்து அமரும்போது புரண்டு படுக்கிறான் காதலன். புன்னகையை ஒளித்து முகம் மறைத்து குளிர்வது போல நடிக்கிறான் நடுங்குகிறான். பதறுகிறாள் காதலி.  நீளும் கவிதை எல்லையைத் தொடுகிறது இப்படியாக.

“உன் குளிரும்

என் பதட்டமும்

பொய் என்றே 

மார்கழி அறியும்”... கவிதை முடிந்துவிட்டது என்று கூறிவிட முடியுமா... குளிர் போக்க வெப்பம் வளர்க்க காதலுக்குக் கற்றுத்தரவா வேண்டும்... கணவன் மனைவிக்குள் தானே இப்படி நடக்கும். இதென்ன காதலன் காதலி? என்றால் கணவன் மனைவி என்போர் காதலன் காதலியாக இருப்பது தான் சரி என்று சொல்லாமல் சொல்லுகிறது கவிதை.


“நீயாகிப் போன தினசரி

தினம் சரியாக

தினமும் சரி ஆக

இனியும் தவறவிடக்கூடாதென்று

குறிப்பெடுத்து வைக்கிறேன்

நாளையிலிருந்து 

உண்ணவேண்டும் குளிக்கவேண்டும்

இரவுகளில் உறங்கவேண்டும் என...” 

காதல் என்பது வந்துவிட்டால் எதுவும் புரியாது. எந்த வேலையும் நடக்காது என்பதும் பொது நியதி தான் போல. தினமும் சரி ஆக இனியாவது சரியாக இருக்கவேண்டும் என்று மனம் எத்தனிக்கும். ஆனால் என்ன செய்வது எத்தனை பேருக்கு காதலை ஒதுக்கி வைக்கச் சாத்தியம் கிடைத்துவிடுகிறது...


காமம் இல்லாத காதல் காதலே இல்லை. இங்கு காமம் இருக்கிறது. காமமும் பூடகமாக இல்லாமல் நேரடியாக காதல் பூசிய கவித்துவத்துடன். 

“பத்து விரல்களைப் பாந்தமாய்ப்

பின் கழுத்துச் செலுத்தி 

கோல மயிர்க்கோதி

புள்ளிகளற்ற பூக்கோலமிடு

உன் இதழ் வரிகளில்

உன்னிதழ் விரிகையில்

தாமதியாது பதியனிட்டு 

ஏன் தோளில் முயங்கு


வரிகள் 

கவனிக்கப்படவேண்டியவை

காதலானாலும்

கவர்ன்மென்ட்டானாலும்...

இடை கோர்த்து இடைவெளியறு...”


“தீர விழுங்கப் போகிறதா

அந்தக் கண்கள்!

சுவாசம் மாற்றப் போகிறதா

அந்த நாசி!

பூக்களைச் செய்யப் போகிறதா

அந்தக் கன்னம்!

உயிர்க்கூடை மாற்றப் போகிறதா 

அந்த இதழ்கள்!

தடமாக்கித் தொடரப் போகிறதா

அந்தப் பற்கள்!

தடையில்லாச் சான்று பெற்று வரப் போகிறதா 

அவ்விரல்கள்!

சயனம் கொள்ளுமிடமெனவே

சட்டமியற்றுமா அந் நெஞ்சம்!”

காதலையும் காமத்தையும் கொண்டாட்டக் களமாக்கிய கவிதை வரிகள் தொகுப்பெங்கும். கொஞ்சமாக சோகம் இருக்கிறது. தாய் மகன் அன்பு பூக்கும் கவிதை, காலக் கவிதை இருக்கிறது. வேட்டுவ எண்ணங்கள், நீ வராது போன நேரம், தடாகம் தடதடத்தது, பெருவெளி, சிறு வாழ்வு, அரனே, ஏன்எனக்கு உன்னைப் பிடிக்கும் போன்ற கவிதைகள் நவீனத்தின் முகத்தைக் கொண்டுள்ளன. நிறப்பிரிகை என்ற தலைப்பிலான கவிதை...

“குரல்களின் வண்ணங்களை

வாரி இறைத்தபடிச்

செல்கிறது

பள்ளி வாகனமொன்று.

வீதியெங்கும் நிறப்பிரிகை!


கவிதைகளின் வண்ணங்கள் மனதில் உண்டாக்கும் நிறப்பிரிகையும் வெட்கச் சலனத்தின் மீது தனி ஈர்ப்பை உண்டுபண்ணுகிறது.


வாழ்த்துகள் தோழர்.


அம்பேத்கரைப் புரிந்து கொள்வோம்


 அம்பேத்கரைப் புரிந்துகொள்வோம்

தொல்.திருமாவளவன் 


தொகுப்பு: ராமதாஸ் சென்றாயன்


வெளியீடு: விடுதலை கலை இலக்கியப் பேரவை

மதுரை தெற்கு


விலை ரூ 20/=

பக்கங்கள் 28


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் நெடுந்தொடருக்கான பாடல் வெளியீட்டுக்கு வந்திருந்தபோது புரட்சியாளர் அம்பேத்கரைக் கொண்டாடும் தமிழா தமிழா என்னும் நிகழ்விலும் பங்குபெறவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர். தொல்.திருமாவளவன் அவர்கள் அழைக்கப்படுகிறார். அந்த நிகழ்வில் அவர் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மற்ற அனைவரும் பேசியதைக் கேட்டு முடித்தபின்னர் எவ்வித முன் தயாரிப்பும் இன்றிப் பேசிய உரை இது என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நெறியாளரும் இயக்குனருமான கரு.பழனியப்பன் கூறுகிறார்.


அம்பேத்கரைக் கொண்டாடுவோம் என்று சொன்னால் அம்பேத்கரைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இங்கு இந்த சனாதன சமூகம் எந்த அளவில் அவரைப் புரிந்துகொண்டிருக்கிறது? அவர்களின் புரிதலை மாற்றும் உத்தி எது? அவர்கள் ஏன் மாறாமல் இருக்கிறார்கள்? எது அவர்களைத் தடுக்கிறது? என்பதை தன்னுடைய உரையின் வழியே விளக்கிக்கூறுகிறார் திருமா. அண்ணாவிற்குப் பெரியார் ஆசான். விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆசான். காந்திக்கு லியோ டால்ஸ்டாய் ஆசான். ஆனால் அம்பேத்கருக்கு புத்தர், கபீர்தாசர், மகாத்மா பூலே ஆசான்கள். புத்தர்  பல அம்பேத்கர் காலத்தவர் அல்ல. நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர். அவரை அம்பேத்கர் ஏற்க என்ன காரணம். அவரின் சனாதன எதிர்ப்புதான். தந்தை பெரியாருக்கு முன்பே நாங்கள் இந்துக்கள் இல்லை என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்கள் அயோத்திதாசரும் இரட்டைமலை சீனிவாசரும். 


இன்னும் இங்கு இப்போதெல்லாம் யார் சார் சாதி பார்க்குறா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கூட நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் எச்சில் உமிழ கீழே தள்ளிவிட இங்குள்ள சாதி இந்துவின் மனநிலை இருக்கிறது. இவர்கள் யார் இவர்கள் தன்னை சாதி இந்துவாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். இந்துக் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டவர்கள். இந்த வர்ணாசிரமக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாததால் தான் ஒடுக்கப்பட்டோருக்கு அவர்ணாஸ் என்று பெயர். 


மொகலாயர்கள் 800 ஆண்டுகள் ஆண்டபோதும், வெள்ளைக்காரன் வந்து ஆண்டபோதும், சுதந்திரம் பெற்றபின்னும் இன்னும் இந்த நிலை மாறாமல் இருப்பதற்கு யார் காரணம் என்ற கேள்வியை முன்வைத்து திருமா அவர்கள் விளக்கம் அளிப்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டியது கட்டாயம். 2000 ஆண்டுகளாக நாங்கள் வீழ்த்தப்பட்டோம் என்பது தவறு. நாங்கள் எதிர்த்து நின்றவர்கள். கலகக்காரர்கள். எதிர்ப்பாளர்கள். கும்பகோணம் பகுதியில் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் பகுதிக்கு வந்தால் சாணியைத் துடைப்பத்தில் முக்கி அடிப்பார்கள் உள்ளே வராதீர்கள் என்று அடித்து விரட்டுவார்கள் என்ற தகவலை அம்பேத்கர் தனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கூறுவதாக திருமா கூறுகிறார். இந்தச் சூழல் மாறி இன்று வெறும் மூன்று சதவீதம் உள்ளவர்கள் எப்படி அதிகாரம் படைத்தவர்களாக மாற முடிந்தது? காரணம் இந்துக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்பவர்களுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு இதை நிகழ்த்துகிறார்கள். இதை எப்படி தடுப்பது? இந்தச் சுரண்டல் எப்போது முடிவுக்கு வரும்? இது முடிவுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? என்பதை எல்லாம் உணரவேண்டுமாயின் அம்பேத்கரைக் கொண்டாடுவதற்கு முன் அவரைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் திருமா அவர்கள்.


வாசிக்க வேண்டிய உரை.

தீட்டு #அழகிய பெரியவன்

 தீட்டு

குறுநாவல் 

அழகிய பெரியவன்


காமாட்சி என்பவளின் வலி மிகுந்த வாழ்க்கை. கோவிந்தனைக் கட்டிக்கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுவிடுகிறாள். வாழ்க்கையின் குரூரத்தில் ரிக்சா ஓட்டும் கோவிந்தன், லாரியில் அடிபட்டுச் செத்துவிடுகிறான். காமாட்சியை அந்த ஏரியா தாதா தாமு அழைப்பதாக அவனின் கையாள் வந்து சொல்ல, குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்கிறாள். ஒரு சம்பவத்தில் வயிற்றுப் பகுதியில் கத்தியால் கிழிக்கப்பட்டதால் உடலுறவுக்கு உடல் ஒத்துழைக்காத நிலையிலும் வேறு வகையில் தன்னுடைய பாலியல் இச்சைக்கு பலவந்தமாக காமாட்சியைப் பணியவைக்கிறான். வீடு வந்தவள் நாளடைவில் அவளை விபச்சாரம் செய்யும் நிலைக்குச் செல்கிறாள். தாமுவின் வலதுகரமாகச் செயல்படும் முனியாண்டியும் மாரியப்பனும் காமாட்சியை பாலியல் தொழிலில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். போலீசு ஸ்டேசனுக்குச் சென்றாலும் போலீசுக்கும் இரையாகிறாள் காமாட்சி. அண்ணீ... அண்ணீ என்று வளைய வரும் பட்டினத்தை அடித்து உதைத்ததால் மாயாண்டி, முனியாண்டி, சூரவேலு ஆகியோரைத் திட்டிவிட்டு மாயாண்டியை மண்டையை உடைத்துவிட்டு பட்டினத்தை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள் காமாட்சி. மறுநாள் மாயாண்டி ஆட்களைச் சேர்த்துக்கொண்டு காமாட்சி வீட்டுக்கு வருகிறான். அங்கு அவளிடம் பணம் கேட்டுத் தகராறு செய்து வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி வெளியில் எறிகிறான். வீட்டை விட்டு காமாட்சி, அவள் குழந்தை, குப்பு, பட்டினம் வெளியேறுகின்றனர். காமாட்சிக்கு நோய் வந்துவிட்டது. குழந்தைக்கு காய்ச்சல். கையில் பணம் இல்லை. பேருந்து நிலைய கழிப்பறை ஓரமாகத் தங்கல். இச்சூழலில் தன்னை விற்று சம்பாதிக்கப் போகிறாள் காமாட்சி. வகையில்லாமல் போலீஸிடம் மாட்டி ஸ்டேசனுக்குச் செல்கிறாள். பின்னர் வெளியில் வரும்போது குப்பு, தாமுவின் காலில் விழுந்து மீட்ட குடிசைக்கே மீண்டும் வருகிறாள். அங்கு வந்த போது குப்பு என்ன செய்துகொண்டிருந்தாள்? குழந்தையின் நிலை என்னவாக இருந்தது? மீண்டும் காமாட்சி பாலியல் தொழிலுக்குப் போனாளா என்பது கதை. கதையில் இன்னும் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. கோவிந்தன் பிறப்பு, பட்டினம் பிறப்பு, தாமு வாழ்க்கை, யசோதாம்மாவின் பாலியல் தொழில் சாம்ராஜ்யம், சுமதி என்ற பெண் யசோதாம்மாவிடம் இருந்து தப்பித்தல்... இப்படி. முழுக்க சேரியின் மொழியில் சேரியின் வாழ்க்கை. வாழ்க்கை என்றால் என்ன ஏது என்று தெரியாத காமாட்சியின் வாழ்க்கை எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் சூறையாடப்படுகிறது என்பதை அருமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர். காமாட்சி என்பவள் தன் “வாழ்க்கையைச் சுமக்க, வருபவனையெல்லாம் சுமக்க வேண்டிய கொடுமை”யை எழுத்தில் படரவைத்துள்ளார். வாசிக்கவேண்டிய கதை. 


யாழ் தண்விகா

இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன் #மேகவண்ணன்

 

#இறந்த_நகரத்தைப்_பார்க்க_வந்தவன்

கவிதைத் தொகுப்பு 

மேகவண்ணன் புதியதடம் 

கருப்புப் பிரதிகள் வெளியீடு

பக்கங்கள் 86

விலை ரூ.90


தோழர் அம்பிகா குமரன் எழுதிய என்னிலிருந்து... கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவப் பகிர்வில் தோழர் மேகவண்ணனைச் சந்தித்து அவரை முகநூலில் தொடர்வதாகவும் அவரின் பதிவுகள் பல சிறப்பாக அதிர்வூட்டும் வண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தேன். அதிர்வூட்டும் வண்ணம் ஒன்றும் நான் எழுதவில்லையே என்றார். உங்களுக்கு அது இயல்பாக இருக்கலாம். எனக்கு அது போல தோன்றியது. வித்தியாசமாகவும் அரசியல் குறித்து நேரடி விமர்சனமாகவும் எனக்குத் தோன்றியது என்று கூறிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பினேன். அவர் வடபுதுப்பட்டியிலிருந்து தேனி நோக்கி பயணமானார். நான், அருண் இருவரும் பெரியகுளம் நோக்கிப் பயணமானோம். தொடர்ந்து வந்த கார் என்னருகில் வர அதில் வந்த மேகவண்ணன் தோழர் தன்னுடைய நூலைக் கொடுத்து படித்துவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள் என்றார். என் கைகளில் ஒப்படைக்க வந்த அந்த உள்ளத்திற்கு எண்ணிக்கையிலடங்கா பேரன்பு. ரொம்ப நன்றி தோழர் கண்டிப்பாக பேசுவோம் தோழர் என்று கூறிவிட்டு வந்தேன். அவர் வாகனம் திரும்ப தேனி நோக்கிச் செல்லத் தொடங்கியது. பேருந்திலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். உடனே எழுத நேரம் கிட்டவில்லை ஒவ்வொரு பக்கமும் கவிதை அம்புகள். மனதை ஊடுருவும் சொற்கள். சிலாகிக்க ஒன்றா இரண்டா... தொகுப்பையே கொண்டாடலாம். 


நான் வாசித்த வரையில் எனக்குப் பிடித்த கவிதைத்தொகுப்புகளாக EMS கலைவாணன் தோழர் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள், செங்கவின் தோழர் எழுதிய களையெடுப்பின் இசைக் குறிப்புகள் ஆகிய இரண்டைக் குறிப்பிடுவேன். இப்போது அந்த வரிசையில் நான் ரசித்த தொகுப்பு இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன். 


பூடகம், படிமம், உவமம், உவமேயம் போன்ற எதற்கும் வேலையில்லை. புரியும் வண்ணம் எல்லாக் கவிதைகளும். ஒரு சராசரி வாசிப்பாளனுக்கும் கவிதை போய்ச் சேரவேண்டும். அதுவே கவிதையின் வெற்றி. அதனை இத்தொகுப்பு அருமையாகச் செய்திருக்கிறது. அதீத மன இறுக்கங்களிலிருந்து தற்காலிகமாவது வெளியேறும் வழியாகவே கவிதையை எழுத முற்படுகிறேன் என்கிறார் தோழர். தன்னரசியல், பொது அரசியல் இரண்டிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன கவிதைகள்.


சமகால அரசியலில் அவ்வப்போது அடிபட்டுக்கொண்டே இருக்கிறது CCTV. அதை மையப்படுத்தியது தான் முதல் கவிதை. 

“பச்சிளம் குழந்தையொன்றை

அதன் தாய் பாலித்தீன் கவரில் சுற்றி

ஆற்றில் எறிந்ததை

ஒரு கேமரா பார்த்துக்கொண்டு

இருந்திருக்கிறது...

(அடுத்த வரியில் மீண்டும் சொல்கிறார் வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்திருக்கிறது... அந்தக் கேமரா ஏதாவது செய்திருக்கவேண்டும் என்ற ஆதங்கம் தோன்ற அந்த வரி. அந்த ஆதங்கம் தாய் குறித்தா, குழந்தை குறித்தா, எறியச் செய்த சூழல் குறித்தா... நாம் தான் யோசிக்கவேண்டும்)

மனிதர்கள் ஈசல் போல 

கேமராக்களின் முன்பாக இறந்து வீழ்கிறார்கள்.

மஞ்சளாடை அணிந்த ரைபிள் மேன்கள் 

வேனின் மீதமர்ந்து குறிபார்த்துச் சுடுவதையும்

இதேபோல் ஒரு கேமரா பார்த்தது

காதல் மனைவியோடு கடைவீதிக்கு வந்தவனை

கண்ணிமைக்கும் நேரத்தில் சாய்த்ததை

ஒரு கேமரா பார்த்துக்கொண்டிருந்தது

வெறுமனே 

தற்கொலையை தற்கேமராவில் பதிவு செய்பவள்

கால்கள் நிராதரவில் துடிக்க

ஒரு கேமரா ஆட்டோ மோடில் பதிவுசெய்துகொள்கிறது...

...

எல்லாம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது

கேமரா சாட்சியாக”

தூத்துக்குடி, சங்கர் கொலை கண்ணுக்கு முன்னே வருகிறது. அப்படியே எதனால் சி‌சி‌டி‌வி வேலை செய்யாமல் போனது சுவாதி கொலை நிகழ்ந்த இடத்தில், ராம்குமார் வயரைக் கடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறும் இடத்தில், அப்போலோவில்... என்ற அரசியல் கேள்விகளையும் தோற்றுவித்துவிடுகிறது வரிகள். 


இவ்வளவு நாளும் யோசித்ததேயில்லை. 

“எல்லா வீடுகளிலும்

கடவுளுடைய அறையைவிட

சிறிய அறை ஏதுமில்லை”

அட ஆமால்ல என நினைக்க வைக்கும் வரிகள், எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது கடவுள் என்பவன் இல்லை. இருந்தாலும் அந்த சிறிய அறை போதும். அவனுக்கு இவ்வளவுதான் இடம் ஒதுக்க முடியும் என்று மனிதர்களின் அகம் காட்டும் வரிகள் இது.


இரண்டு ஆண் கவிகள் என்ற கவிதை, கவிகள் இருவரின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அவர்களின் உலகமே வேறு. அவர்கள் யாராலும் திருத்தப்பட இயலா அரிய ஜீவராசிகள் என்பவர் காதலியில்லாத ஆண் கவிஞன் புரண்டு படுக்கும் எடைக்கு உலகமே அழிந்துவிடும்...” என்கிறார். உலகம் அழிய விடலாமா ஆண் கவிஞர்களே... காதலித்த பின்னர் கவிதை எழுதத் தொடங்குங்கள். உலகத்தை உய்விக்க வேண்டுமல்லவா என்று பகடி செய்கிறார்.


காட்சிகளைக் கவிதைப் பதிவாக்கும் லாவகம் பல கவிதைகளில். 

“கோடை தாளாமல் ஒரு வளர்ந்த செடியில்

கழித்த பொழுதை மறக்க முடியாது.

போலவே

நெடிய பேருந்து நிலையத்தில்

விற்பதற்குத் தண்ணீர்ப் பாட்டில்களும்

அருந்துவதற்கு பானை நீரும் 

குவளையும் வைத்திருந்த 

ஒற்றைக் கடைக்காரனையும்

அவன் சிரித்த முகத்தையும்...”

அரசியலில் உழலும் மனிதனிடம் எஞ்சிக் கிடக்கும் மனிதத்தை மறக்காமல் கவிதையாக்கியிருக்கிறார். அந்த ஒற்றைக் கடைக்காரன் போன்றோரை மட்டுமே உலகம் தக்கவைத்துக்கொண்டால் எவ்வளவு அழகாக இருக்கும்…?


அவலம் என்பது கவிதை முழுக்க அவலம் தான்.

கடனில் தத்தளிக்கும் தகப்பனொருவனின்

டீக்கடை ஓட்டுக் கூரையில்

பனை மரம் சரிவது...

உறவுகளை விலகி வந்த காதலர்கள்

கொலை வெறியுடன் தமக்குள் சண்டையிடுவது...

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றவன்

அகாலத்தில் இறப்பது...

நீள்கிறது இப்படி. எதனாலும் மீட்ட இயலாத கையறு நிலையில் கிடக்கும் சூழல் தான் அவலம். வரிகள் வாசிக்க வாசிக்க அவலம் நம் உடலுக்குள்ளும் உயிருக்குள்ளும் பாய்கிறது. 


ஒரு யானைக்கால் வியாதிக்காரனின் பழைய காலமும் தற்காலமும் அவனுக்கான வாழ்க்கைச் சூழலும் சொல்லும் கவிதையை வாசித்தால் மனம் கனக்கிறது. யானைக்கால்காரனைப் போல மெல்ல பூமி அழுந்த பயணிக்கும் கால்கள் நமக்கும் வாய்த்துவிடுகிறது. “அவன் போகவேண்டும். விடுங்கள். அவனுக்காக பிள்ளைகள் காத்திருக்கிறார்கள்”. அவன் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்க யானைக்கால் தடையில்லை. ஆனால் அவன் குழந்தைகளுக்காக வாழ எத்தனை தடையளிக்கும் அந்த யானைக்கால்...


ஒரு பின் மதியத்தில் என்ற கவிதை பின் மதியத்திற்கான சூழலைக் காட்டுகிறது. அவரவர்க்கு அவரவர் வேலை. அவரவர் அவரவர் வலியை அனுபவிக்கிறார்கள். அவரவர் இன்பத்தோடு கடக்கிறார்கள். அவரவர் மதியம் அவரவர்க்கான மதியமாக இருக்கிறது. 

‘பின் மதியம் இரவின் அமைதிக்காக தன்னை ஒத்திகை செய்து கொள்கிறது”

“யாரோ கலவிக்கான ஆயத்தத்தில் இறங்குகிறார்கள்”

“உணவகங்களில் பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு வேலை அப்போதுதான் தொடங்கியது”

“நடை சாத்தப்பட்ட கோயிலின் பிரகாரத்தில் உண்ட மயக்கத்திலும் தூக்கம் வராத யானை தன் காட்டை நினைத்துக்கொள்கிறது”

ஒரு பின் மதியம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது...


ராம்குமார் சுவாதி வரும் கவிதை, அநியாயமாகக் கொல்லப்பட்ட கதையின் தொடர்ச்சி இனி இப்படியும் வரும் என்பதை எச்சரித்துக் காட்டுகிறது.


சங் பரிவாரங்களின் கொட்டம், 56 இஞ்ச் மார்பளவு மனிதர், குஜராத் குறித்த கவிதைகள் எல்லாம் நேரடித் தாக்குதல் எனலாம்.

“உயிரோடு எரிப்பது

உங்களுக்குத்தான் 

கை வந்த கலை


நந்தனை

ராஜீவ் கோஸ்வாமியை

கோத்ராவில் ஓடிய ரயிலை

பெஸ்ட் பேக்கரியை

ஒரிசா பாதிரி குடும்பத்தையை

...

...

எனவே 

எனவே 

உயிரோடு எரிவதென்று முடிவெடுத்துவிட்டால்

தயைசெய்து

நீங்களே 

பற்றவைத்துக்கொள்ளுங்கள்”

கொளுத்துவது என முடிவெடுத்துவிட்டால் அதென்ன பிறரைக் கொளுத்துவது? நீங்களே கொளுத்திக்கொள்ளுங்கள். எங்களை எதற்காகக் கொளுத்துகிறீர்கள்? எங்களைக் கொளுத்த நீங்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகின்றன இந்த ஆக்ரோச வரிகள்.

இளம் யுவதி கவிதை, பணியிடத்தில் சுதந்திரம் பறிக்கப்படும் ஒரு பெண் மாலை நேரத்தில் தனக்கான சுவாசத்தைப் பெறும்போது அடையும் ஆத்ம திருப்தியைப் படையலிட்டுள்ளது.


கொஞ்சம் காதல், கொஞ்சம் குரூரம் எனவும் கவிதைகள். 

உயிரழுத்தும் கவிதை...

1

“ஒரு மூங்கில் கழியில் 

எட்டுமுழ வேட்டியில்

இருபுறமும் சுருக்கிட்டு

ஊஞ்சல் போலாக்கி கிடத்தப்பட்ட

சிறுவனின் சடலம் 

பெரியவர்களின் உடலை விட

பாரமாக இருக்கிறது”

2

முன் பின்

தற்கொலை செய்திராதவர்கள

எப்படி 

உடல் தாங்குக் கயிற்றளவை

சரியாகத் தேர்கிறார்கள்?


சமந்தா, லதா, சிவாஜி குறித்த கவிதைகளில் அவர்கள் தொகுப்பாசிரியருக்குக் கட்டுப்பட்டு நடிப்பவர்களாக இருக்கிறார்கள். அழகு பூக்கிறது அங்கும்.


கவிதை ஒவ்வொன்றும் ஒரு சுகம் அளிக்கிறது. தேர்ந்த சொற்கள். வலிய திணிக்கப்படாத காட்சிகள். எளிமை. நேரடியாக சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுதல் என சிறப்பாக இருக்கிறது. இரவு என்ற தலைப்பிலான கவிதையில் மூன்றாம் பத்தி வேற லெவல்.


நிறைவாக ஒரு கவிதை.

#முத்த_சாபம்

சின்ன ஊர். அங்கு காதலர்கள். அவர்களுக்கு காதலின் சூட்சுமங்கள் தெரியும். அவர்களுக்கும் ஆசை இருக்கும். அருகருகே அமர, தோளில் சாய, மடிமீது படுக்க, சில்மிஷம் செய்ய… ஆனால் பார்க்கும் விழிகள் மீறி எதுவும் செய்ய இயலாத நிலை. இந்த நிலையைக் கண்டு வெட்கித்துப் போனவன் சபிக்கிறான் இந்த சமூகத்தை. 

“சிறுநகரத்தில் ஒவ்வொருவனுக்கும்

இடாத முத்தங்களின் வலியுண்டு”

அப்படி என்றால் இந்த மக்கள் என்ன செய்ய வேண்டும்? கண்டும் காணாமல் போய்விட வேண்டுமா... அதனை ஆசீர்வதிக்க வேண்டுமா... அவர்களின் காதலை எப்படிக் கொண்டாட வாய்ப்பளிக்கவேண்டும்... கண்களைத் தாழ்த்து. அது இந்த சமூகம் இப்படியான சங்கடங்களை காதலர்க்கு அளித்துவிட்டதே என்பதற்கான மன்னிப்பாக இருக்கலாம். வருத்தத்தைப் பதிவு செய்வதாக இருக்கலாம். அது அவர்களை ஆராதிப்பதாக இருக்கலாம். அது அக்காதலர்களின் முத்தத்திற்கு இசைக்கும் ஆத்ம இசையாக இருக்கலாம். கவிஞர் சொல்கிறார் இவை அத்தனையையும் ஒரு வார்த்தையில். 

“நண்பகலில் மர நிழலில்

ஒரு அவசர முத்தத்தைக் கடக்கும்

நீங்கள் கண்களைத் தாழ்த்துவதே

காதலுக்கு மரியாதை”


கொண்டாடப்படவேண்டிய கவிதைகள்.

கொண்டாடப்படவேண்டிய கவிஞர்.


பெரு மகிழ்வும் வாழ்த்துகளும் தோழர்.


யாழ் தண்விகா

அக்னித் திருப்பங்கள் #தமிழ்தாசன்


 அக்னித் திருப்பங்கள்


தமிழ்தாசன் வெற்றிமொழி 

Vetrimozhi Veliyeetagam 


பக்கம் 88


நாடகம்


எப்போதோ வாங்கிய நூல். வழக்கம்போல சோம்பேறித்தனம். இன்று தான் வாசித்தேன். அருமையான நாடக நூல். மேடையேற்றுவதற்குப் பொருத்தம். முற்போக்குக் கருத்துகள் நிரம்பி வழிகிறது.


              சுப்பிரமணி ஐயர் ஆச்சாரம் பார்ப்பவர். அவர் மகன் உமா சுதன் முற்போக்கான மனிதன். மகளுக்கு திருமணம் முடிக்க தங்க நகைக்காக ஒருவனிடம் பணம் கொடுத்து ஏமாறுகிறார். ஆனாலும் மகள் திருமணம் முடிகிறது. செல்லுமிடத்தில் வரதட்சணை வாங்கி வராததால், மாமியாரிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கிறாள். கணவன் குடிகாரன். இச்சூழலில் உமாசுதன் பிழைப்பிற்காக வெட்டியானாக மாறுகிறான். ஒரு கட்டத்தில் மகள் பிறந்த வீட்டிற்கே வந்து சேர்கிறாள். உமா சுதனின் நண்பன் அண்ணாமலை பட்டியல் இனத்தில் பிறந்து அர்ச்சகராக மாறுகிறான். சுப்பிரமணி ஐயர் மகள் வாழ்க்கை என்னானது? அவரின் மகள் சுமித்ரா மீண்டும் கணவன் வீடு சென்றாளா? உமா சுதனை அவனின் தாய் சந்தித்த இடம் எங்கே? இவர்களுக்கும் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை சாதி, மதம் தொடர்பான கருத்துகளோடு நாடகமாக்கி உள்ளார் தோழர். 


தொடர்ந்து படைப்புகள் வெளியிட வாழ்த்துகள்.


❣️

மிட்டாய் பசி #ஆத்மார்த்தி

 

மிட்டாய் பசி


நாவல்


ஆத்மார்த்தி

Aathmaarthi RS தோழர்


பக்கம் : 184

விலை: 180

வெளிவந்த ஆண்டு: டிசம்பர் 2020


மன்னிப்பை வழங்கிய கடவுளின் வாதைகள்


 “பல சமயங்களில் காலம் கேள்வி கேட்கிறது. ஆனால் பதில்கள் இருப்பதில்லை. இது கால வினோதம். யாருமே எழுதாத மாபெரும் கதை. அடுத்தடுத்த அத்தியாயங்களில் மட்டும் யாராவது வருவதும் கதையைக் கலைத்துச் செல்வதுமான கோமாளித்தனம்”


 

 வாழ்க்கை என்பது இன்னதுதான் என்று யாராலும் அனுமானமாகச் சொல்லப்படாத புதிரான ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. நாவலில் வரும் பாத்திரங்கள் இயல்பு நிரம்பியவையாக இருக்கின்றன. களங்கள் அன்னியப்படாமல் இருப்பதால் நாவலோடு ஒன்றிப் பயணிக்க முடிகிறது. மதுரை, சென்னை, மும்பை, டெல்லி எனக் கதை பயணிக்கும் இடங்களிலெல்லாம் கதை நாயகனான ஆனந்த் சாதாரணமான ஒருவனாக, தனக்கென பிம்பம் ஒன்றைத் தூக்கிச் சுமந்து செல்லாதவனாக இருக்கிறான் என்பதுதான் கதையின் தனித்துவம்.


 அழகியல் நுட்பத்தோடும், காட்சிப்படுத்தலின் உச்சத்திலும் கதை நகர்கிறது என்று ஓரிடத்திலும் சொல்ல இயலாமல் வாழ்வின் கூறுகளை, வாழ்வின் வலிகளை எவ்விடத்தும் குறைத்துவிடாது செல்லும் ஒரு யாத்திரை. முடிந்துவிட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும் வாழ்வின் ஆழத்திலிருந்தே நாம் யோசிக்க வேண்டியதிருக்கிறது.


 செல்லம்மா, தாய் மற்றும் தந்தை இல்லாமல் பாட்டியோடு வசித்து வருபவள். மில் வேலைக்குச் சென்று வருகிறாள். மாரீஸ்வரன் என்ற மார்ஸ் கந்து, சீட்டுப் பணம் வசூலிப்பவன். மார்ஸ், செல்லம்மா இருவருக்கும் உள்ள ஈர்ப்பு திருமணத்தில் முடிகிறது. திருமணத்தின் பின்னே மார்ஸ்க்கு ஜெகதாம்பா என்ற ஜெகாவோடு உள்ள உறவு தெரிய வருகிறது. அதிலிருந்தே கணவன் மேல் பிடித்தம் இல்லா ஒரு வாழ்வை வாழ்கிறாள் செல்லம்மா. ஒரு வருடத்தில் ஆனந்த் பிறக்கிறான். கணவன் மேலிருந்த ஒரு வெறுப்பால் ஆனந்தை கொஞ்சவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் அல்லாடுகிறாள் செல்லம்மா. ஆனந்திற்கு 6 வயது ஆனபொழுது மார்ஸ் கட்டிடச்சுவர் மேலே விழுந்து இறந்துவிடுகிறான். இந்த பொல்லாத வாழ்க்கைக்கா இந்தப் பாடு என்று நொந்து போகிறாள் செல்லம்மா.


 மார்ஸ் உடன் பிறந்த திலகா கணவன் குடியாகக் குடித்து இறந்து விடுகிறான். அவளும் செல்லம்மா வீட்டில் ஆனந்தைப் பார்த்துக்கொண்டே அங்கேயே தங்கி விடுகிறாள். பள்ளிப் படிப்புக் காலத்திலேயே சின்னச் சின்ன சச்சரவுகள் ஆனந்த்தால் பள்ளியில் நடக்கிறது. ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றம். அங்கு ராஜூ என்னும் மாணவனுக்கும் ஆனந்திற்கும் சண்டை. இந்தக் கால கட்டத்தில்தான் செல்லம்மா தணிகாசலம் என்பவரைக் கட்டிக்கொண்டு மும்பைக்குச் செல்கிறாள். படிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டாலும் சில இடங்களில் அருள் ஜெபத்துரை வாத்தியாருக்கும் ஆனந்திற்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடக்கின்றன. ஒருமுறை அருள் ஜெபத்துரை வாத்தியாரும் ராஜூவும் நடந்து செல்லும்போது ராம்பிரபு என்ற மாணவன் கல்லைக் கொண்டு எறிகிறான். அந்தக் கல்லின் குறி வாத்தியாருக்கு. தன்னை அடித்தார், திட்டினார் என்பதற்காக. ஆனால் அந்தக் கல் ராஜூவின் மேலே பட்டு அவன் உயிரிழக்கிறான். அந்தப் பொழுது அங்கு முகம் காட்டும் ஆனந்த் குற்றவாளியாக்கப்படுகிறான். எந்த சூழலிலும் அவன் தன்னை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவன் தான் கொலை செய்யவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறுகிறான். ஆனால் அவன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பப்படுகிறான். 


 கூர் நோக்கு மையத்தில் தயாளன் என்ற கொலைக் குற்றம் செய்தவன் ஆனந்திற்கு அறிமுகம் ஆகிறான். அவன் தன் தாய் இறப்பிற்குக் காரணமானவனை கொலை செய்து அவ்விடம் வந்தவன். வெளியில் வந்தவுடன் ஆனந்த், ராம்பிரபுவைக் கொல்ல உதவுவதாக தயாளன் கூறுகிறான். வெளியில் வந்தவுடன் தயாளன், ஆனந்த் சந்தித்துக்கொள்கின்றனர். திட்டம் தீட்டுகின்றனர். ஆனால் தயாளன் நாய் கடித்து உயிர் விட வேண்டிவருகிறது. விரக்தியின் உச்சத்திற்குப்போகிறான் ஆனந்த்.


 ராம்பிரபுவைக் கொல்லலாமா வேண்டாமா என்ற மன ஊசலாட்டம் ஒருபுறம் இருக்க, கேரளா செல்கிறான். அங்கு அனு என்பவளோடு உறவு கிடைக்கிறது. ஆனால் அவள் தலைமையில் இயங்கும் பாலியல் நிலையத்தில் நடக்கும் விஷயங்கள் உடன்படாமல் வெளியே வந்து விடுகிறான். மும்பை வேலைக்குச் செல்கிறான். அங்கு ஒரு பெண்ணோடு காதல் வருகிறது. அவளுக்கு வேறொருவன் திருமணம் முடிக்க காத்திருப்பதாகச் சொல்ல இன்னும் ரணமாக வாழ்க்கை மாறுகிறது. இடையில் அவனுக்கு இழுப்பு நோய் இருப்பதும் அவன் வேலை செய்த இடத்திற்குத் தெரிய வர மன வேதனை அடைகிறான். அங்கு தன்னுடைய தாய் செல்லம்மாவைப் பார்க்கிறான். வேறு சில பெண்களோடு, முகம் தெரியாத ஆணோடு. என்னடா வாழ்க்கை இது என்று அங்கலாய்க்கிறான். அங்கிருந்து வெளியேறி டெல்லி செல்கிறான். இக்கால கட்டத்திலும் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஆனந்திற்கு.


 டெல்லியில் ஒரு ஹோட்டலில் தன்னுடைய பணியைத் தொடங்குகிறான். அங்குதான் ராஜூவைக் கல்லைக் கொண்டு எறிந்த ராம்பிரபுவைப் பார்க்கிறான். ஆனால் அவ்விடத்தை விட்டுக் கடந்து அவனை எப்படி கொல்லலாம் என்று யோசிக்கிறான். ராம்பிரபுவும் ஆனந்தைக் கண்டுவிடுகிறான். அவ்விடத்தில் என்ன நடந்தது என்பதை நாவலின் இறுதியில் வாசித்தறியலாம்.


நாவல் இயங்குக் காலமும் மனிதர்களும்

 

 பாசாங்கு இல்லாத மனிதர்கள் என்பது நாவலில் எங்கும் உணரலாம். கதையின் சுவாரசியம் கூட்ட எவ்வித சமரசமும் நாவலாசிரியர் செய்துகொள்ளவில்லை. பள்ளிக்கூடம், சினிமா தியேட்டர், வானொலி என எண்பதுகளைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் விவரணைகள் நாவலெங்கும். ஒவ்வொரு இடத்திலும் வாழ்க்கை, ஆனந்தை வைத்துச் சூதாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் தோற்கிறான். பல்வேறு குழப்பங்கள். காலத்தின் முன்னால் தான் யாருக்காக வாழ்கிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை. வாழ்தலின் முழுமையை அறியாமலேயே வாழ்ந்துகொண்டே செல்கிறான். கண்ணீரும் புலம்பலும் அவன் உடன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தயாளன் இருந்தால் அவன் வாழ்க்கை வேறு மாதிரி மாறியிருக்கும். செல்லம்மா இருந்திருந்தால் மாறியிருக்கும். அனு இருந்தால் மாறியிருக்கும். கல்யாண் பேக்கரியில் உள்ளவளோடு காதல் நிறைவேறியிருந்தால் மாறியிருக்கும். ராம்பிரபுவைக் காணாமல் இருந்திருந்தால் அவன் வாழ்வு மாறியிருக்கும் என்றெல்லாம் யோசிக்க வைத்துவிடுகிறது நாவல். நிறைவுப் பகுதியில் தன்னை, தன் மனதை வெளிக்காட்ட ஆனந்த் பேசும்போதும் அவனுள் உள்ள மனிதன் யார் என்பதை உணர்த்துகிறானா? அல்லது அவனின் இயல்பு அவ்வ்ளவுதானா? அவன் வாழ்ந்த வாழ்வின் வெறுமை அவனுக்குள் அள்ளிப் போட்ட போராட்ட மனநிலையைக் காவு வாங்கிவிட்டதா? என்று வாசகர்களைத் திகைக்க வைத்தாலும் மிட்டாய் பசி வாழ்வின் அபத்தத்தைக் கூறும் ஒரு முழுமையான நாவல் என்பதை உறுதியாகக் கூறலாம்.


யாழ் தண்விகா

ஆயிஷா #இரா.நடராசன்

 ஆயிஷா


இரா.நடராசன் 


மீண்டும் இன்று வாசித்தேன். ஆயிஷா ஒரு ஆசிரியையால் மட்டுமாவது புரிந்துகொள்ளப் படாமல் போயிருந்தால் அவள் அடையாளம் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பரிதாபமாக இருக்கிறது. எல்லா ஆசிரியர்களுமே ஏதாவது ஒருவகையில் மாணவனின் அறிவை அவமானப் படுத்துகிறார்கள் என்றொரு வாக்கியம் இந்தக் கதையில் வருகிறது. அதற்காக அந்த மாணவன் அடையும் இன்னல்கள் எவ்வளவு? அறிவை மட்டுப்படுத்தி வைப்பதோ தன்னை விட மாணவன் அறிவாய்ப் பேசுவது என்பதை தன்னைத் தாழ்த்திக்காட்டும் ஒரு செயல் என்று ஆசிரியர் கருதுவதோ அபத்தமான ஒன்று என்பதை எப்போது உணரப்போகிறார்கள் கற்றுத் தருவோர். மாணவனைப் புரிந்துகொள்ள, மாணவனை வழிநடத்த நூல் பல கல் என்பதை ஆசிரிய சமூகமும் உணரவேண்டும். ஆயிஷா கதையல்ல. பாடம்.


வாசிப்போம் உறவுகளே.